‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95

94. வீழ்நிலம்

flowerதொலைவிலிருந்தே கையைத் தூக்கி மந்தண விரல்குறியைக் காட்டியபடி புஷ்கரனின் படுக்கையறையை நோக்கி சுதீரன் சென்றான். வாயிலில் நின்றிருந்த யவனக்காவலர் இருவர் அவனை அடையாளம் கண்டு தலைவணங்கினர். காப்பிரிக்காவலர் இருவர் தரையில் மடியில் வாளை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். சுருண்ட நுரைமுடியும் சோழிகள் போன்ற விழிகளும் பெரிய உதடுகளும் கொண்டவர்கள். யவனர்களில் செங்கல்நிறம் கொண்டவர்களும் சுண்ணக்கல் நிறம்கொண்டவர்களும் இருந்தனர்.

சுதீரன் மெல்லிய குரலில் மந்தணக்குறிமொழியில் அரசனை அழைத்துச்செல்ல வந்திருப்பதாக சொன்னான். காவலர் வாயிலில் இருந்த சிறிய துளை வழியாக உள்ளே சென்ற நூலை இழுத்து அசைத்தனர். உள்ளிருந்து ஒரு காவலன் துளைப்பொருத்தில் செவிசேர்க்க அவனிடம் மந்தண மொழியில் செய்தி உரைத்தனர். உள்ளே இருப்பவர்கள் பீதரும் சோனகரும் என்பதனால் அவர்களுக்கிடையே ஒற்றைச் சொற்களாலேயே உரையாடமுடியும். அவர்கள் பணிக்குச் சேரும்போது அந்த மொழி கற்பிக்கப்படும். அடுத்த அணிக்கு முற்றிலும் புதிய மந்தணமொழி உருவாக்கப்படும்.

சுதீரன் கைகளைக் கட்டியபடி காத்து நின்றான். உள்ளே எந்த ஓசையும் கேட்கவில்லை. புஷ்கரன் வழக்கமாக துயிலெழ மிகவும் பிந்தும். அவன் இரவு செறிவதற்குள்ளாகவே துயிலறைக்குச் சென்றுவிடுவான். அவன் துயில்வதற்கு இருபதுக்கும் மேற்பட்ட துயிலறைகள் கட்டப்பட்டிருந்தன. எங்கே அன்றைய துயில் என்பதை அவனே துயில்வதற்கு சற்று முன்னர் முடிவெடுப்பான். ஒவ்வொருநாளும் வெவ்வேறு காவலர் அவன் அறைக்கு வெளியேயும் உள்ளேயும் காவல் காத்தனர். பீதர், யவனர், சோனகர், காப்பிரியர் என அயலவர் மட்டுமே காவல்பணிக்கு அமர்த்தப்பட்டனர். அவர்களும் ஆறு மாதங்களுக்கொருமுறை முழுமையாக மாற்றப்பட்டனர்.

சிவமூலி இழுத்து மயங்கித் துயிலும் வழக்கம் முன்பு புஷ்கரனுக்கு இருந்தது. ஒவ்வொருநாளும் கால்தளர்ந்து தள்ளாடியபடியே அவன் படுக்கையறைக்குச் சென்றான். பின்னர் நரம்புகள் தளரத்தொடங்கியதும் எங்கும் எப்போதும் அமர்ந்த சற்றுநேரத்திலேயே ஆழ்ந்து துயிலத்தொடங்கினான். நரம்புத்தளர்வுக்கு மயக்குகள் ஒவ்வா என்று மருத்துவர் விலக்கிவிட்டமையால் மதுவும் சிவமூலியும் அகிஃபீனாவும் அவன் கொள்வதில்லை. அவன் படுக்கையில் படுத்ததும் அருகே நின்றிருக்கும் காவலர் சீரான தாளத்தில் மெல்ல பீடத்தை தட்டுவார்கள். அதைக் கேட்டபடி கண்தளர்வான். வெயிலெழுந்த பின்னரே விழிப்பான். நடுவே மஞ்சத்திலேயே சிறுநீர் கழிப்பான். இருமலிருந்தால் மலமும் செல்வதுண்டு. விழித்திருக்கையிலும் அவனால் சிறுநீரை அடக்கமுடியாதென்பதனால் அவனுடன் சிறுநீர்க்கலம் ஏந்திய ஏவலன் ஒருவன் எப்போதும் இருந்துகொண்டிருப்பான். பீதர்கள் உள்ளிருந்து செய்தி சொன்னதும் “விழித்துக்கொண்டார்” என்று யவனக்காவலன் சொன்னான்.

மீண்டும் நெடுநேரம் கடந்து கதவு திறந்தது. சுதீரன் தலைவணங்கி “பேரரசருக்கு தெய்வங்களின் அருள் நிறைக!” என வாழ்த்தினான். மெல்ல இருமிய புஷ்கரன் “மருத்துவர் எங்கே?” என்றான். புரவியிலிருந்து விழுந்ததன் வலி இருக்கிறதென உய்த்தறிந்த சுதீரன் “சித்தமாக இருக்கிறார். நாம் செல்ல காத்திருக்கிறார்” என்றான். புஷ்கரன் அவனை திரும்பி நோக்காமல் நடந்தான். திறந்த கதவு வழியாக கழிப்பறையின் கெடுமணம் எழுந்தது. ஏவலர் படுக்கையை சீரமைக்க உள்ளே நுழைந்தனர்.

சுதீரன் தொலைவில் அவனை நோக்கியபடி நின்ற சிற்றமைச்சன் சிபிரனிடம் கையசைவால் மருத்துவர் என ஆணையிட அவன் ஓசையின்றி பாய்ந்தோடினான். “நாம் இன்று காலை கலிதேவன் ஆலயத்திற்கு செல்கிறோம். அங்கே தங்கள் திருக்காட்சிக்காக குடிகள் புலரிக்கு முன்னரே பெருகிச் சூழ்ந்திருக்கிறார்கள்” என்றான். புஷ்கரன் பேசாமல் நடந்தான். நின்று இருமுறை இருமிவிட்டு மேலும் சென்றான்.

மருத்துவநிலையின் வாயிலில் மருத்துவர் சுவினீதரும் மாணவர்களும் அவர்களுக்காக காத்து நின்றிருந்தனர். சுவினீதர் தலைவணங்கி முகமன் உரைத்தார். புஷ்கரன் “படைத்தலைவன் எங்கே?” என்றான். “அவர் கலி ஆலயத்தில் இருக்கிறார். அவர் தலைமையில்தான் திரள் ஒழுங்கமைகிறது” என்றான் சுதீரன். “நான் முற்றத்திற்கு வருகிறேன்” என்றான் புஷ்கரன். “பட்டத்துயானை ஒருங்கி நிற்கிறது, அரசே” என்றான் சுதீரன். திரும்பி நோக்காமல் புஷ்கரன் உள்ளே சென்றான்.

சுதீரன் வாயிலுக்கு ஓடிவந்தபோது அங்கே பட்டத்துயானையுடன் முழுக் காவல்படையினரும் அகம்படியினரும் மங்கலநிரையினரும் காத்திருந்தனர். அவன் வந்தது குளத்தில் கல் விழுந்ததுபோல ஓசையற்ற அலையசைவாக இறுதிவரை பரவிச்சென்றது. காத்திருக்கும்படி கையசைத்துவிட்டு அவன் முகப்பில் கைகட்டி நின்றான். அவனை நோக்கியபடி முற்றம் அசைவிழந்து விழிகளாக சூழ்ந்திருந்தது. புரவிகளின் மூச்சொலிகள், குளம்பு மிதிபடும் ஓசைகள், யானை அசைந்துகொண்டே இருக்கும் ஓசை. அவர்களுக்குப் பின்னால் ஓசையே இல்லாமல் குன்றுபோல நின்றிருந்தது அரண்மனை, உள்ளே நுழையமுடியாமல் திணிவுகொண்ட பெரும்குவை அன்றி வேறில்லை என.

விடிந்தபடியே வந்தது. ஒவ்வொன்றும் துலங்க பந்தங்கள் மட்டும் ஒளியிழந்தன. பந்தங்களை அணைத்து அப்பால் கொண்டுசென்றனர். அணைந்த பந்தங்களிலிருந்து எண்ணைக்கருகல் மணம் எழுந்து காற்றில் சுழன்று அப்பால் விலகியது. வண்ணங்களனைத்தும் கூர்கொண்டன. தொலைவில் நின்றிருந்த மரத்தின் ஒவ்வொரு இலையும் தெளிந்தெழுந்தது. அந்நகரில் ஒரு விழா நிகழ்கிறதென்று அயலவர் நம்பமுடியாது. மிக மெல்லிய கார்வைபோல மக்கள்திரளின் முழக்கம் கேட்டுக்கொண்டிருந்தது, செவியருகே ஒரு கலத்தை வைத்ததுபோல.

ஏவலன் அப்பால் வந்து நின்று வணங்கினான். அருகே வர அவன் கைகாட்ட நெருங்கிவந்து காதில் செய்திகளை சுருக்கமாக சொன்னான். கலி ஆலயத்தின்முன் மக்கள் நிரை பெருகி அலையடிக்கிறது. பூசனைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. அரசர் வந்தபின்னரே முடிக்கவேண்டும் என்பதற்காக சிலவற்றை மீண்டும் மீண்டும் செய்து பொழுது நீட்டிக்கிறார்கள். வந்துகொண்டிருக்கிறார் என்று சொல்லும்படி ஆணையிட்டு அனுப்பினான்.

கோட்டைமுகப்புக் காவல்மாடத்தின் நிழல் நீண்டு மாளிகைப்படிகளில் விழுந்தது. செவ்வொளிக் கற்றைகள் கட்டடங்களின் இடையே பீறிட்டு எழுந்து சரிந்தன. மேலே தோன்றிய ஏவலன் கைகாட்டினான். சுதீரன் முன்னால் சென்று படிகளின் அருகே காத்து நின்றான். புஷ்கரன் இறங்கிவரக் கண்டதும் அவன் கையசைக்க மங்கல இசை மட்டும் எழுந்தது. புஷ்கரன் தோன்றியதும் வாழ்த்தொலிகள் எழுந்தன.

புஷ்கரன் எவரையும் நோக்காமல் நேராகச் சென்று மரப்படிகளில் ஏறி யானை மேலிருந்த அம்பாரி மீது அமர்ந்தான். கைகளை கட்டிக்கொண்டு பீடத்தில் சாய்ந்தான். பாகன் யானையை மெல்ல தட்ட பொன்னுரை உருகி வழிந்ததுபோன்ற முகபடாத்துடன் அது ஆடியபடி திரும்பியது. அதன்மேல் போடப்பட்டிருந்த பட்டுக்கம்பளம் உலைந்தாடியது. சங்கிலிகள் ஒலிக்க அது நடக்க கவசமணிந்த கொடிவீரர் எழுவர் காகக்கொடியுடன் முன்னால் சென்றனர். மங்கல இசையுடன் சூதர்நிரை தொடர அவர்களுக்குப்பின் நூற்றெட்டு அணிச்சேடியர் பொலிதாலங்களுடன் சென்றனர்.

யானைக்கு இணையாக புரவியில் சுதீரன் சென்றான். நகர்த்தெருக்கள் தோரணங்களாலும் மலர்வளைவுகளாலும் பட்டுத்துணிகளாலும் அணிசெய்யப்பட்டிருந்தன. தெருக்களின் இருமருங்கிலும் கூடியிருந்த நிஷதகுடியின் பெண்களும் இளையோரும் மலர்தூவி அரசனை வாழ்த்தி குரலெழுப்பினர். அவன் ஒவ்வொரு முகமாக நோக்கிக்கொண்டு சென்றான். அத்தனை முகங்களும் ஒன்றுபோலிருந்தன. அத்தனை செயல்களும் நன்கு பயின்றவைபோல. புன்னகைகள், கைவீசல்கள்.

அரசப்பெருவீதியில் இருந்து பிரிந்தபோது கலியின் குன்று தோன்றியது. அது வெண்சிதல் மூடிய நெற்று என தெரிந்தது. அதன் பரப்பு முழுக்க இடைவெளியில்லாமல் மானுடத் தலைகள். மேலே செல்லும் பாதை மட்டும் அதில் சுற்றப்பட்ட மேலாடைபோல சுழன்று சரிந்திறங்கியது. குன்றின்மேல் ஏறத்தொடங்கியபோது சுதீரன் திரும்பி கீழே விரிந்திருந்த நகரை நோக்கினான். அங்கே அனைத்தும் வழக்கம்போலிருப்பதாகத் தோன்றியது. எறும்புப்புற்றை நோக்குவதுபோல. அனைத்து எறும்புக்கூடுகளும் ஒன்றைப்போல் பிறிதொன்று என உயிரியக்கம் கொண்டு கொப்பளிக்கின்றன.

flowerகுன்றின்மேல் கலியின் ஆலயத்தை அவர்கள் அடைந்தபோது பெருமுரசங்கள் முழங்கத் தொடங்கின. கூட்டம் அரசனை வாழ்த்திக் கூவியது. மங்கல இசையும் குரவையொலியும் இணைந்துகொண்டன. யானை செல்ல வழிவிட்டு இரு பக்கமும் எவரும் ஒதுக்காமலேயே உடல்களின் எல்லை ஒன்று உருவாகியது. பின்னாலிருந்தவர்களின் உந்துவிசையால் அது  அலைவிளிம்பென நெளிந்தது.

கலியின் ஆலயத்தின் முன் யானை வந்து நின்றதும் கைகளால் ஆணைகளைப் பிறப்பித்தபடி நின்ற படைத்தலைவன் ரணசூரன் முழுக்கவச உடையுடன் வந்து வணங்கினான். ஏவலர் இருவர் மெல்லிய மூங்கில் படிக்கட்டை கொண்டுவந்து யானை அருகே வைத்தனர். புஷ்கரன் கைகளைக் கூப்பியபடி அதனூடாக இறங்கி வந்தான். ரணசூரன் வாழ்த்துரைத்து தலைவணங்கி “அனைத்தும் முறையாக நிகழ்கின்றன, அரசே” என்றான். அவனை நோக்கி புன்னகைத்து “நன்று” என்றபின் முன்னால் சென்றான் புஷ்கரன். ரணசூரன் குழப்பத்துடன் சுதீரனை நோக்கினான்.

தலைமைப்பூசகர் மச்சர் கலிக்கு அணிவிக்கப்பட்ட கரிய பட்டாடையை அரசனின் தோளில் அணிவித்தார். காகஇறகு சூடிய குலக்கோலை காளகக் குடித்தலைவர் மூர்த்தர் அளித்தார். புஷ்கரன் அவர்களின் முறைமைகளை ஏற்று முன்னால் சென்றான். யானையை பாகன் மெல்ல தட்ட அது காலெடுத்து வைத்து விலகிச்சென்றது. அதே கணம் அப்பால் எரியம்பு ஒன்று எழ ஓர் யானை பிளிறியது. அதனருகே நின்றவர்கள் பாறைவிழுந்த நீர்ப்பரப்பென அதிர்ந்து அலைவட்டமெனப் பரவினர். அவ்விசையால் கூட்டத்தின் உடல்வேலி உடைந்து அங்கிருந்த சிலர் நிலைதடுமாறி விழுந்தனர். முதுமகள் ஒருத்தி கையிலிருந்த குழந்தையுடன் யானையின் காலடியில் விழ யானை திகைத்து பின்னால் காலடி வைத்தது. பின்னாலிருந்த புரவிமேல் முட்டிக்கொண்டு விதிர்த்து முன்னால் நடந்தது. அதன் இரு கால்களுக்கு நடுவே முதுமகளும் மைந்தனும் நசுங்கி உடல் உடைந்தனர்.

ஓலமும் கலைவும் கேட்டு புஷ்கரன் திரும்பி நோக்கினான். சினத்துடன் “என்ன? என்ன?” என்றான். ரணசூரன் பதற்றத்துடன் ஓடிவந்து “அரசே, நிலைதடுமாறி… ஏதோ குழப்பம்” என்று குழற புஷ்கரன் முகம் சிவக்க, கழுத்துத் தசைகள் இழுபட்டு அசைய அவன் கன்னத்தில் ஓங்கியறைந்தான். மேலாடையைச் சுழற்றியபடி யானைக் காலடியில் கிடந்து துடித்த முதுமகளைத் தூக்கிய ஏவலரை அகற்றி குனிந்து அவள் தலையை தொட்டான். அவள் உடல் ஒரு பக்கமாக இழுபட்டிருந்தது. இடைக்குக் கீழே குருதிக்குழம்பு பரவியிருந்தது. இன்னொரு ஏவலன் குழந்தையை தூக்கினான். அதன் தலை நெஞ்சின்மேல் சரிந்திருந்தது.

புஷ்கரன் திரும்பி ரணசூரனை நோக்கி “மூடன்” என்றான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை சுதீரன் நோக்கினான். யானை முன்னால் சென்று அங்கிருந்த திரளைக் கண்டு பிளிறியதும் அவன் உடல் அதிர்ந்து துள்ளியது. அவன் வலக்கை அடிபட்ட நாகமெனத் துவள்வதை, நாக்கு வாயின் வலப்பக்கம் ஒட்டியிருப்பதை சுதீரன் கண்டான். புஷ்கரனின் வேளக்காரர்கள் அவன் ஆணைக்காகக் காத்திருந்தனர். சூழ்ந்திருந்த குடிகளும் ஓசையடங்கி தருண முனையில் நின்றிருந்தனர்.

ரணசூரன் புஷ்கரன் முன் முழந்தாளிட்டு கைகூப்பி “அரசே” என்று கூவினான். “அரசே, பொறுத்தருள்க! என் பிழையல்ல… என் பிழையல்ல, அரசே” என்றான். சுதீரன் தோள்தளர பெருமூச்சுடன் நோக்கை விலக்கிக்கொண்டான். புஷ்கரனின் முகம் சிவந்து வாய் இறுகியது. காவலர்தலைவனை நோக்கி கைகாட்டியபின் சுதீரனை நோக்கி திரும்பினான்.

காவலர்கள் ரணசூரனை சூழ்ந்துகொண்டனர். ஒருவன் ரணசூரனின் முதுகை ஓங்கி மிதிக்க அவன் உடல் மண்நோக்கி குனிந்த கணம் காவலர்தலைவனின் வாள் ஏறி இறங்கியது. ரணசூரன் தலை வெட்டுண்டு மெல்லிய ஓசையுடன் கீழே விழுந்தது. அதன் மேலேயே அவன் உடலும் விழுந்தது. உடைந்த கலத்திலிருந்தென வெங்குருதி பீறிட்டு மண்ணில் வழிந்தது. சூழ்ந்திருந்தவர்களிடமிருந்து ஓசையே எழவில்லை.

புஷ்கரன் சுதீரனை நோக்கி செல்வோம் என கைகாட்டிவிட்டு ரணசூரனின் உடலை சுற்றிக்கொண்டு ஆலயத்திற்குள் நுழைந்தான். சூழ்ந்து நின்றிருந்தவர்கள் ஓசையே இல்லாமலிருப்பதைக் கண்டு சுதீரன் ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பெருந்திரள் பாறையடுக்குகள் என அசைவும் ஒலியும் அற்று செறிந்திருந்தது. “மூடன், தன் தண்டனையை தானே வரவழைத்துக்கொண்டான்” என்றான் அருகே நின்றிருந்த சிற்றமைச்சன். அவனை திரும்பி நோக்கியபின் சுதீரன் உள்ளே செல்ல முயல அவனுக்குக் குறுக்காக ரணசூரனின் உடல் கிடந்தது.

ரணசூரனின் கால்கள் இழுத்துக்கொண்டிருக்க இருவர் அவனை கைபற்றி இழுத்து அப்பால் கொண்டுசென்றனர். கூட்டத்தில் எவரோ ஏதோ சொல்ல சிரிப்போசை எழுந்தது. சுதீரன் திரும்பி கூட்டத்தை நோக்கியபோது ஒருவன் ஏதோ இழிசெய்கை காட்டினான். அவன் முகம் தெளிவதற்குள் திரளில் புதைந்தான். அவன் திரும்பியபோது பின்னால் கூட்டத்தின் சிரிப்பொலி முழங்கியது. குருதிச்சேற்றை மிதிக்காமல் தாண்டிக்குதித்து சுதீரன் ஆலயத்திற்குள் நுழைந்தான்.

கருவறைக்குள் புஷ்கரன் கலிதேவனின் சிலை முன்னால் நின்றிருந்தான். அவனுடைய மெய்க்காவலர் இருபுறமும் நிற்க அவன் திரும்பி சுதீரனை நோக்கி அருகே வரும்படி கைகாட்டினான். சுதீரன் அருகே சென்று கைகூப்பியபடி நின்றான். வெண்பட்டால் கண்கள் மூடிக் கட்டப்பட்ட கலியின் முகம் அத்தனை கூரிய நோக்கு கொண்டிருப்பதை உணர்ந்து விழிதிருப்பிக்கொண்டான். அவ்வுணர்வு உடலில் நீடித்தது.

பூசெய்கையும் பலிக்கொடையும் படையலும் குலமுறைமைகளுடன் நிகழ்ந்தன. பூசகர்கள் மெல்லிய குரலில் சொன்னவற்றை புஷ்கரன் பாவை என செய்தான். சுதீரன் சூழ்ந்திருந்தவர்களின் முகங்களையே நோக்கிக்கொண்டிருந்தான். அத்தனை முகங்களும் விழவுக்கான கிளர்ச்சியும் திரளென்றானதன் தன்னை மறந்த மிதப்பும் கொண்டு ஒன்றுபோலிருந்தன. தலைமைப்பூசகர் குருதிக்குழம்பு தொட்டு புஷ்கரனின் நெற்றியில் நீள்குறியிட்டு “கலியருள் சூழ்க! வெற்றியும் புகழும் நீள்க! என்றும் சொல் நின்றாள்க!” என வாழ்த்தினார்.

புஷ்கரன் திரும்பி நோக்க அருகே நின்ற ஏவலர் நீட்டிய தட்டிலிருந்து கரிய பட்டையும் பொன்னணியையும் எடுத்து முதுபூசகருக்கு அளித்தான். பிற பூசகர்களும் வந்து பரிசில் பெற்றுக்கொண்டனர். பரிசில் முடிந்ததும் புஷ்கரன் திரும்பி சுதீரனை நோக்கிவிட்டு மறுவாயிலினூடாக வெளியே சென்றான். முதலில் சென்ற மெய்க்காவலர் வேல் விரித்து வழி செய்ய புஷ்கரன் அவ்வாயிலில் தோன்றியதும் வாழ்த்தொலிகளும் குரவையும் மங்கல இசையும் முழங்கின. சூழ்ந்திருந்த காவல்மாடங்களில் இருந்து முரசொலி எழுந்தது.

புஷ்கரன் அப்பால் பலகையாலான பீடத்தில் காரகன் நிற்பதை கண்டான். வலது முன்னங்காலை சற்று தூக்கி தலைநிமிர்ந்து பிடரிமயிர்கள் காற்றில் உலைய ஓசைக்கேற்ப உடல் விதிர்த்தபடி நின்றிருந்தது. அதன் கடிவாளத்தை இரு பக்கமும் இரு பாகன்கள் பற்றியிருந்தனர். ஏவலனொருவன் வந்து பணிந்து “புரவி சித்தமாக உள்ளது, அரசே” என்றான். சுதீரன் தொலைவில் கட்டப்பட்டிருந்த சிறிய களிறை நோக்கினான். அதன்மேல் அமர்ந்திருந்த பாகன் அவன் கையசைவுக்காக காத்திருந்தான். புஷ்கரன் சுதீரனை நோக்கிவிட்டு நடக்கத் தொடங்க சுதீரன் திரும்பி பாகனை நோக்கினான். செய்கை காட்டத் தூக்கிய கையால் தலைப்பாகையை சீரமைத்தபடி மெல்ல பின்னடி எடுத்துவைத்து ஆலய வாயிலிலேயே நின்றான்.

முன்னோக்கி நடந்த புஷ்கரன் திரும்பிப் பார்த்தான். அவன் நோக்கை சந்தித்த சுதீரனின் விழிகள் விலகவில்லை. திடுக்கிட்டவன்போல புஷ்கரன் நின்றுவிட்டான். அவனுடன் சென்ற வேளக்காரப் படையினரும் நிற்பதை உணர்ந்து மேலும் நடந்தான். அவன் காலடிகள் தளர்ந்தன. ஒருமுறை நிற்கப்போகிறவன்போலத் தோன்றினான். காரகனை அவன் அணுகியதும் பரிவலர் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். புஷ்கரன் திரும்பி சுதீரனை விழிதொட்டு நோக்கினான். எவ்வுணர்வும் இல்லாமல் சுதீரன் நோக்கி நின்றான்.

மிக மெல்லிய புன்னகை ஒன்று புஷ்கரன் விழிகளில் தோன்றியது. கடிவாளத்தைத் தரும்படி பரிவலரிடம் சொன்னான். அவர்களில் ஒருவன் குனிந்து கால்வளையத்தை எடுத்துக் காட்ட அதில் கால்வைத்து எழுந்து புரவிமேல் ஏறிக்கொண்டான். செவி பின்கோட்டி விழியுருட்டி அது காற்றுபடும் சுனை என சிலிர்த்தபடி நின்றது. அவன் ஏறி அமர்ந்ததும் அதன் செவிகள் ஒன்றையொன்று தொடுவதுபோல கூர்கொண்டன. கனைத்தபடி நின்ற இடத்திலேயே முன்னங்கால் தூக்கி மேலே பாய்ந்து பின்னங்காலை உதறி மீண்டும் மேடையில் முன்னங்கால் ஊன்றி முன்புபோலவே நின்றது. கணநேரத்தில் நெய்விட்ட அனல் எழுந்து பின் அணைவது போலிருந்தது.

புஷ்கரன் தெறித்து காவலர் நடுவே விழுந்தான். அவர்கள் அறியாமல் விலகிக்கொள்ள மண்ணில் குப்புற உடலறைந்து பதிந்ததுபோல அசையாமல் கிடந்தான். சூழ்ந்திருந்தவர்கள் அனைவரும் அவனை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் கையை ஊன்றி புரண்டு எழுந்து மெல்ல துப்பியபடி அமர்ந்தான். அவன் அணிந்திருந்த பட்டுமணிமுடி அப்பால் கிடந்தது. முகத்தை கையால் துடைத்தபடி அவன் தன்னைச் சூழ்ந்திருந்தவர்களின் பார்வைகளை நோக்கினான். அப்பெருந்திரள் அவனை விழிகளாகச் சூழ்ந்திருந்தது.

புஷ்கரன் சினம் எரிந்தேற எழமுற்பட்டபோது ஆலயமுகப்பில் நின்றிருந்த பட்டத்துயானைமேல் இரு கைகளையும் விரித்து உரக்க “நிஷதகுடி வெல்க!” என்று கூவியபடி நளன் எழுந்தான். அவன் கைகளை விரித்ததும் அங்கிருந்த மொத்தக் கூட்டமும் வெடித்தெழுந்த பெருமுழக்கமாக “பேரரசர் நளன் வாழ்க! நிஷதத் தலைவர் வாழ்க!” என்று கூவியது.

புஷ்கரன் எழுந்து தன் ஆடையை இழுத்தபடி அருகே நின்ற வீரனிடம் மணிமுடியை எடுக்கும்படி சைகை காட்டினான். அவன் அறியாமல் குனிய கூட்டத்தில் நின்ற ஒரு முதுமகள் “தொடாதே அதை… தொட்டால் உன் குலத்தை வேருடன் அறுப்போம்” என்று கூவினாள். நூற்றுக்கணக்கான பெண்குரல்கள் “தொடாதே… கீழ்மகனே, விலகு!” என்று கூவின. புஷ்கரன் பதறித்துடித்த வலக்காலுடன் நிற்கமுடியாமல் தள்ளாடினான். யானைமேல் நின்றிருந்த நளனை நோக்கியபடி காலடி வைக்க அவிழ்ந்து கிடந்த தன் ஆடையில் கால்சிக்க தடுமாறி விழுந்தான்.

அவன் வலக்கை இழுத்துக்கொண்டது. வலது கால் நீண்டு துடித்தது. வாய் கோணலாகி முகம் வலிப்பில் அசைந்தது. அவன் இடக்கையை ஊன்றி எழமுயல அவனை நோக்கி கைநீட்டி வசைபாடிய திரளில் இருந்து பழுத்த கிழவி ஒருத்தி கூன்விழுந்த முதுகுடன் வந்து அவன் முகத்தில் எட்டி உதைத்தாள். அவள் நரைகூந்தல் அவிழ்ந்து விழுந்தது. தடுமாறி நிலைகொண்டு அவன் முகத்தில் காறி உமிழ்ந்து “இழிமகனே… உன்னைப் பெற்ற வயிற்றுக்கும் கீழுலகே… சிறுமதியனே… புழுவே” என்று கூவினாள். அதற்குள் இன்னொரு முதுமகள் வந்து அவன் முகத்தில் உதைத்தாள். அவன் மல்லாந்து விழ வெறிகொண்டவள்போல அவனை உதைத்துக்கொண்டிருந்தாள். சூழ்ந்திருந்த பெண்கள் அனைவரும் வசைகூவ விழித்த கண்களுடன் படைக்கலமேந்திய வீரர்கள் நோக்கி நின்றனர்.

அச்செய்தி பரவ அப்பெருந்திரளிலிருந்த பெண்களனைவரும் வெறிக்கூச்சலிட்டபடி முட்டி அலைததும்பி அவனை நோக்கி வரத்தொடங்கினர். அவர்கள் வேலும் வாளுமேந்திய வீரர்களை அடித்தும் உதைத்தும் தள்ளினர். வீரர்கள் மெல்ல பின்வாங்கி ஒற்றைத்திரளாகி அகன்று செல்ல பெண்களின் பெருக்கு நடுவே சுழிமையமென புஷ்கரன் கிடந்தான். யானைமேலிருந்த நளன் “நிறுத்துங்கள். நிறுத்துங்கள்… இது அரசாணை!” என்றான். “அரசாணை!” என்று படைவீரன் ஒருவன் உரக்கக் கூவினான். அக்குரல் படைவீரர்களுக்கு அவர்கள் செய்யவேண்டுவதென்ன என்ற தெளிவை அளிக்க அவர்கள் “அரசாணை… நிறுத்துக!” என மீண்டும் மீண்டும் கூவினர். முன்னால் நின்றவர்கள் தயங்க பின்னால் நின்றவர்கள் உந்த கூட்டம் ததும்பி பக்கவாட்டில் விரிந்தது.

திரள் ததும்பியபடி வெறியுடன் கூச்சலிட்டுச் சூந்திருக்க வலக்கை நடுங்கித்துள்ள வலக்கால் செயலற்று இழுத்து நீண்டிருக்க மூக்கிலும் கடைவாயிலும் நீர் வழிய புஷ்கரன் அமர்ந்திருந்தான். யானைமேலிருந்து இறங்கிய நளன் அவன் அருகே வந்து “இளையவனே, உன்னிடமிருந்து எதையும் பறிக்க விரும்பவில்லை. நீ வென்றதை அவ்வண்ணமே மீட்க எண்ணுகிறேன். நாம் சூதாடுவோம்… சென்றமுறை ஆடிய அதே முறைப்படி, அதே நெறிகளின்படி” என்றான். புஷ்கரன் பேசமுற்பட்டாலும் அவனால் குரலெழுப்ப முடியவில்லை. அவன் சுதீரனை நோக்கினான்.

சுதீரன் அருகே வந்து வணங்கி “நான் அவரது அமைச்சன், என் பெயர் சுதீரன்” என்றான். “அவர் உங்களுடன் சூதாடுவார்… எங்கே எப்போது என்று சொல்லுங்கள்” என்றான். நளன் வாயெடுப்பதற்குள் முதுமகள் ஒருத்தி தொண்டை புடைத்துத்தெரிய பற்கள் நெரிபட “இப்போதே… இக்களமுற்றத்திலேயே நிகழட்டும்… இவன் நச்சுப்பல் நாகம். அது பதுங்கி எழ வாய்ப்பளிக்க மாட்டோம்” என்று கூவினாள். “ஆம், இங்கேயே… இங்கேயே ஆடவேண்டும்” என்று பெண்கள் கூச்சலிட்டனர். மீண்டும் திரள் எல்லை உடைய “ஆம், இங்கேயே. விலகுக!” என்று நளன் கூவினான். அவன் ஆணையை வீரர்கள் மீண்டும் கூவினர்.

நளன் சுதீரனிடம் “இவன் ஆடைமாற்றி நீர் அருந்தி வரட்டும்… இந்த ஆலயமுற்றத்திலேயே களம் அமையட்டும்” என்றான். சுதீரன் “ஆம், அரசே” என்றபின் புஷ்கரனின் இடக்கையைப்பற்றித் தூக்கினான். புஷ்கரனின் எடையை அவனால் தாங்கமுடியாமல் தள்ளாடினான். சூழ்ந்திருந்த எந்த வீரனும் உதவ முன்வரவில்லை. சுதீரன் வலக்கையை பற்றிக்கொண்டு இழுத்தான். அது பாய்மரக் கயிறென அதிர்ந்தது. இடக்கையை ஊன்றி புஷ்கரன் எழுந்தான். சுதீரன் அவனை தோள்சுற்றிப்பற்றி தாங்கிக்கொண்டான்.

“வருக அரசே… ஆலயச் சிற்றறையில் ஓய்வெடுக்கலாம்” என்றான் சுதீரன். புஷ்கரன் “நீர்… விடாய்நீர்” என்றான். அவன் உதடுகள் வீங்கியிருந்தன. நாக்கு வந்து வளைநாகம்போல் தலைகாட்டி மீண்டது. ஆலயச் சிற்றறையின் வாயிலில் நின்றிருந்த பூசகர் “பூசனைப்பொருள் வைப்பதற்குரிய அறை இது. இதற்குள் செல்லமுடியாது” என்றார். “ஒரு குறுபீடத்தை மட்டும் போடுங்கள்… அரசர் இளைப்பாறட்டும்” என்றான் சுதீரன். பூசகர் “இது இளைப்பாறுதற்குரிய இடமல்ல” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டார்.

“அமர்க, அரசே” என சுதீரன் அவனை படிகளில் அமரச்செய்தான். “நீர்… நீர்க்குடுவை” என்றான். வீரர்கள் வாள்களும் வேல்களுமாக எவரோ என நோக்கி நின்றனர். வீரர்களாலும் பெண்களாலும் சூழப்பட்டு நின்ற நளனை நோக்கி “அரசே, விடாய்நீர் கொடுக்க ஆணையிடுக!” என்றான் சுதீரன். நளன் “நீர் கொடுங்கள்” என்று சினத்துடன் சொல்லி அவனே வரப்போனான். “இருங்கள், அரசே” என ஒரு வீரன் இடையிலிருந்த நீர்க்குடுவையுடன் வந்து அதை சுதீரனிடம் தந்தான்.

வீங்கிய உதடுகளிலிருந்து வழிந்து நீர் மார்பெங்கும் நனைய தொண்டைமுழை ஏறி இறங்க மூச்சுவிட இடைவெளிவிட்டு புஷ்கரன் நீரை அருந்தி குடுவையை வைத்துவிட்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தான். சுதீரன் தன் மேலாடையை எடுத்து அவனிடம் அளித்து “துடைத்துக் கொள்ளுங்கள்” என்றான். அவன் முகத்தைத் துடைத்ததும் அதை வாங்கி அவன் முதுகையும் தோளையும் துடைத்தான். புஷ்கரன் தலைதூக்கி “அவர் வந்தது எப்போது உமக்குத் தெரியும்?” என்றான். “நேற்றுமுன்னாள்…” என்றான் சுதீரன். “இரு நாட்களாக இந்நகரில் சுற்றிக்கொண்டிருந்தார் என்றனர் என் ஒற்றர்.”

புஷ்கரன் வெறுமனே நோக்கினான். “இக்குடிகள்மேல் நம்பிக்கை கொள்ளாமலிருந்தார். திரும்பிச் சென்றுவிடுவதை குறித்துக்கூட எண்ணினார். ஆகவேதான் காரகனிலிருந்து உங்களை விழச்செய்தேன்” என்றான் சுதீரன். “அவர் புரவியை அறிந்தவர். கரிய வைரம் என அதை அழைக்கின்றனர் பரிவலர். அப்புரவி உங்களை ஏற்கவில்லை என்பது போதும் அவர் நம்பிக்கை கொள்ள..” புஷ்கரன் “இன்று குடிகள் நடுவே விழச்செய்து அவர்களுக்கும் அவர்களின் எண்ணத்தை காட்டிவிட்டீர்” என்றவன் புன்னகையுடன் இதழ்வளைய “நன்று, அந்தணரை வெல்லமுடியாதென்பது எந்தை கூற்று. அது பொருள்கொண்டது” என்றான். “என் கடன் இது” என்றான் சுதீரன்.

“நீர் என்ன நினைக்கிறீர்? நான் உயிர்வாழ்வதில் பொருளுண்டா?” சுதீரன் “ஆம், இப்போது இவ்வண்ணமே இறந்தால் ஏழுக்கு ஏழு பிறவி எடுத்துக் கழுவவேண்டியிருக்கும். கழுவினாலும் தீராமலும் ஆகும்” என்றான். புஷ்கரன் பெருமூச்சுவிட்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தான். பின்னர் சிவந்த விழிகளுடன் நிமிர்ந்து “அந்தணரே, இது அடிபணிந்து ஆசிரியனிடம் மாணாக்கன் கேட்பது. நான் செய்வதற்கேது உள்ளது?” என்றான்.

“அரசே, நீங்கள் இதுவரை ஈட்டியதில் நன்று ஒன்று உண்டு” என்றான் சுதீரன். “நீங்கள் ஆடியதில் எல்லை கண்டுவிட்டீர். இங்கினி ஏதுமில்லை. எனவே எச்சுமையும் இல்லாமல் பறந்து முழு விசையாலும் மறு எல்லைக்கு செல்லமுடியும். வான்மீகியும் விஸ்வாமித்திரரும் சென்ற தொலைவுக்கே.” புஷ்கரன் அவனை கூர்ந்து நோக்கினான். இருமுறை உதடுகள் அசைந்தன. “நன்றோ தீதோ எல்லைக்குள் நிற்பவர்கள் எந்த முழுமையையும் அடைவதில்லை. ஆடுகளங்களுக்கு அப்பாலுள்ளதே மெய்மை. மீறிச்செல்வதே தவமெனப்படுவது. முற்றிலும் கடப்பதே வீடுபேறு” என்றான் சுதீரன். “என்னுடன் இரும், அந்தணரே” என்றான் புஷ்கரன். “ஆம், அது நான் அளித்த சொல்” என்றான் சுதீரன்.

முந்தைய கட்டுரைவெ.அலெக்ஸ்
அடுத்த கட்டுரைவாசிப்பு கடிதங்கள்