வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 7

fire-iconஉபப்பிலாவ்யத்தின் முதல் காவலரணை தொலைவில் பார்த்ததுமே பிரதிவிந்தியன் தன் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். இரு முன்கால்களை தூக்கி அறைந்து தலைதிருப்பிக் கனைத்து அது அரைவட்டமாகச் சுழன்று நிற்க அவனைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த சதானீகனின் புரவி மேலும் நாலைந்தடி வைத்து சுழன்று நின்றது. அவர்களுக்குப் பின்னால் எடை மிகுந்த குளம்புகள் மண்ணில் அறைந்தொலிக்க வந்துகொண்டிருந்த சுதசோமன் விரைவழிந்து நின்று பெருமூச்சு விட்டு உடல் தளர்ந்து “நகர் எல்லை தொடங்கிவிட்டது” என்றான்.

Ezhuthazhal _EPI_29

பிரதிவிந்தியன் சாலையைப்பார்த்தபடி “ஆம், ஒருநாழிகைக்குள் நகர் வந்துவிடும். மிகச்சிறிய நகர் என்று எண்ணுகின்றேன்” என்றான். சதானீகன் “நகர் என்றே இதை சொல்லவியலாது என்றார்கள். ஓர் எல்லைக்காவலரண் காலப்போக்கில் ஊரென்றாகியது. விராடபுரி இதை மச்சர்களுக்கு எதிராக நிலைநிறுத்துகிறது.” சுதசோமன் உடலை நெளித்து “ஆனால் இப்போது அங்கு நம் படைகள் இருப்பதனால் அடுமனை பெரிதாகவே இருக்கும். சென்றதுமே அமர்ந்து வயிறு நிறைய உண்ணவேண்டும். நெடும்பொழுது வந்திருக்கிறோம். வழியில் இரு இடங்களில் மட்டுமே சிற்றுணவு. ஓநாய்போல பசிக்கிறது” என்றான்.

அவனை சற்று சலிப்புடன் பார்த்தபின் திரும்பி அப்பால் வந்துகொண்டிருந்த சுருதகீர்த்தியையும் சுருதசேனனையும் பார்த்து “பேசிக்கொண்டே வருகிறார்களோ?” என்றான் பிரதிவிந்தியன். சதானீகன் “ராகவராமனும் லக்ஷ்மணனும்போல அவர்கள் என அவர்களே எண்ணிக்கொள்கிறார்கள்” என்றான். அவர்களின் புரவிகள் எழுப்பிய பொடித் திரைக்கு அப்பால் யௌதேயனும் சர்வதனும் நிர்மித்ரனும் வந்தனர். அனைவரும் களைத்திருந்தனர். ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறு தரங்களில் களைப்படைகிறதா என பிரதிவிந்தியன் எண்ணிக்கொண்டான். அவர்கள் ஒவ்வொருவரும் புரவியில் ஒவ்வொரு முறையில் சாய்ந்தும் ஒசிந்தும் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் அணுகியதும் “சேர்ந்தேதான் வரவேண்டுமோ?” என்றான் பிரதிவிந்தியன். சுருதகீர்த்தி “நாம் ஒன்றும் பேசாமல் சற்று நேரம் இருந்தாலே மூன்று குழுக்களாக ஆகிவிடுகிறோம்” என்றான். சுதசோமன் “எல்லா குழுக்களிலும் எனக்கு நுழைவொப்புதல் உள்ளது, மூத்தவரே” என்றான். சுருதசேனன் மெல்ல “உணவுண்ணும் பொழுதுகளில்” என்றான். சதானீகன் புன்னகைக்க சுதசோமன் திரும்பி நோக்கி முறைத்தான். சுருதகீர்த்தி “நகர் எல்லை வந்துவிட்டது, மூத்தவரே. காவலரணில் இருவர் மட்டுமே உள்ளனர், அவர்கள் விராடவீரர்கள்” என்றான்.

“அவர்களின் ஒருவன் கன்னத்தில் சிறிய மச்சம் ஒன்று இருந்திருக்குமே?” என்று சதானீகன் கேட்டான். சுருதகீர்த்தி “ஆம், சற்று அகவை முதிர்ந்தவனின் கன்னத்தில்” என்றான். “அவன் மைந்தன் ஒருவன் கீழே நின்றிருக்கிறான்.” சதானீகன் நகைத்து சுதசோமனிடம்  “நோக்குந்தோறும் கூர்தீட்டப்படும் விழிகள்…” என்றான். “ஆசிரியர் சொல்வதுண்டு, கூர்விழிகொண்டவை சிறியவற்றை மட்டுமே நோக்கும் தீயூழ் கொண்டவை என” என்றான் சுதசோமன். சுருதகீர்த்தி “இதற்கெல்லாம் என்னால் மறுமொழி சொல்லமுடியும்” என்றான்.

பிற மூவரும் அருகணைந்து புரவிக்கடிவாளத்தை இழுத்து நின்றனர். அவர்களைச் சூழ்ந்து எழுந்த செம்மண் பொடிப் படலம் மெல்ல அடங்கியது. புரவிகள் பெருமூச்சுவிட்டன. அவற்றின் வாயிலிருந்து நுரை வழிந்தது. ஒரு புரவி தும்மலோசையிட்டு தலையை குலுக்க மணியோசை எழுந்தது. இன்னொரு புரவி காலைத் தட்டியபடி சுழல முயன்றபோது யௌதேயன் அதை கடிவாளத்தை இழுத்து அடக்கினான்.

பிரதிவிந்தியன் “இந்நகரில் அரசகுடியினர் என்று யாரிருக்கிறார்கள்? கோட்டை எவர் காவலில்?” என்றான். சதானீகன் “இளையவன் அபிமன்யூ நேற்று முன்னாளே இங்கு வந்துவிட்டான் என்றார்கள். எந்தையரும் அன்னையும் நாளை மறுநாள்தான் வருகிறார்கள். விராட இளவரசர் நாளை வந்து சேர்கிறார். கோட்டை நமது சிற்றமைச்சர் சுரேசரின் பொறுப்பில் உள்ளது” என்றான். சுருதகீர்த்தி கண்கள் சற்று சுருங்க “அவன் தந்தையருடன் சேர்ந்து வருவதாகத்தானே சொல்லப்பட்டது?” என்றான். சர்வதன் “இல்லை அவர் முன்னரே கிளம்பிவிட்டார்” என்றான்.

சுருதசேனன் புன்னகையுடன் “தன் மணமகளை பார்க்க விழைந்திருக்கலாம்” என்றான். சுதசோமன் “மைந்தர் பிறப்பதற்குள் மனைவியர் முகத்தை தெளிவாக பார்த்துவிடுவது நல்லது” என்றான். சுருதகீர்த்தி ஒருகணம் அவன் விழிகளை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான். பிரதிவிந்தியன் “என்ன பேச்சு இது?” என்றபின் “நம்மில் எவரேனும் முன்னரே சென்று அங்கு நான் வந்துகொண்டிருக்கும் செய்தியை அறிவிக்க வேண்டும். பதினெட்டாண்டு அகவை நிறைந்தபின்னர் இந்திரப்பிரஸ்தத்தின் எல்லை கடந்து நான் செல்லும் முதல் நகர் இது. பட்டத்து இளவரசனுக்குரிய முறைமைப்படி நான் இங்கு வரவேற்கப்படவேண்டும். கோட்டை முகப்பில் என் கொடி எழவேண்டும். கோட்டைக்காவலர் அணிநிரைகொண்டு படைக்கலங்கள் தாழ்த்தி வரவேற்க வேண்டும். அரசகுலத்தார் ஒருவர் வந்து என்னை எதிர்கொண்டு அழைத்துச் செல்லவேண்டும்” என்றான்.

சதானீகன் யௌதேயனிடம் “தாங்களே சென்று சொல்வதே முறை, மூத்தவரே” என்றான். சுதசோமன் “ஆம், அவர் செல்வது மூத்தவர் செல்வதற்கு நிகர்” என்றான். நிர்மித்ரன் புன்னகைத்தான். யௌதேயன் “ஆம், நான் சென்று அபிமன்யூவிடம் சொல்கிறேன்” என்றான். “நூல்களில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றதென்று எடுத்துரைக்கிறேன்.” சுருதசேனன் “சொல்லவேண்டிய முறைப்படி சொல்ல வேண்டும். அவன் எந்நிலையில் இருக்கிறான் என்று எவரும் சொல்ல முடியாது. இளமைந்தனாகவா, இரக்கமற்ற வில்லவனாகவா, எவ்வுருவை அணிந்திருக்கிறான் என்பதை அவனே சொல்லிவிட முடியாது” என்றான்.

யௌதேயன் “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான். பிரதிவிந்தியன் சர்வதனிடம் “நீயும் உடன் செல்!” என்றான். சர்வதன் “ஆம் மூத்தவரே, அவ்வாறே எண்ணுகிறேன்” என்றான். சுதசோமன் “நாம் அனுப்பாவிட்டாலும் அவன் கிளம்பிச்செல்வான். எண்ணியிருங்கள், நாம் நகர் நுழையும்போது நம்மை எதிர்கொள்ள வரும் கூட்டத்தில் அவனிருக்க மாட்டான். நேராக அடுமனைக்குச் சென்றால் மட்டுமே அவன் உண்டு எஞ்சிய உணவை நாம் கைப்பற்ற முடியும்” என்றான்.

பிரதிவிந்தியன் “மந்தா, மீண்டும் உணவைப்பற்றி ஒரு சொல்லும் எடுக்க உனக்கு ஒப்புதலில்லை. சலித்துவிட்டேன்” என்றான். சதானீகன் சிரித்து “உணவைப்பற்றி பேசாதே என்ற ஆணை பிறக்காத ஒருநாள் நம்மிடையே இல்லை. உணவைப்பற்றிய பேச்சொழிந்த பொழுதும் இல்லை” என்றான். சுதசோமன் “ஏன் பேசக்கூடாது? நானே மூத்தவரின் பேச்சில் சலிப்புற்றிருக்கிறேன். ஏடுகளுடன் புலவர்களும் முழவுகளுடன் சூதர்களும் இருபுறமும் கண்ணுக்குத் தெரியாமல் தொடர்ந்து வருகிறார்கள் என்று எண்ணிக்கொண்டு ஒவ்வொரு சொல்லையும் எடுக்கிறார். எனக்கே எளிதாகவும் இயல்பாகவும் எவராவது பேசினால் புரிந்துகொள்ளமுடியாமல் ஆகிவிட்டது” என்றான்.

பிரதிவிந்தியன் “போதும், செல்வோம்” என்று சொல்லி புரவியை இழுத்து முன்னால் சென்றான். சுதசோமன் “உணவுண்பதில் பிழையென ஏதுமில்லை. எந்தை உண்ணாத உணவையா நான் உண்கிறேன்?” என்றான். தந்தையரின் நினைவு அவர்கள் அனைவரின் விழிகளையும் கனிவு கொள்ளச்செய்தது. சீராக குளம்படிகள் ஒலிக்கச் சென்ற புரவிகளின் மீது தலை குனிந்து தோள் தளர்ந்து கடிவாளத்தை மெல்ல பற்றியபடி அவர்கள் சென்றனர்.

சற்று நேரத்திற்குப்பின் சுருதசேனன் “எந்தை எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை. பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் நிகரிலா அழகனாகத் தெரிந்தார்” என்றான். சுருதகீர்த்தி சிரித்து “இப்போது முதுமையின் அழகு கொண்டிருப்பார்” என்றான். சுதசோமன் “எந்தை முதுமை கொண்டிருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். ஐம்புலன்களிலும் இறுதி வரை கூர் மழுங்காதது நாவு மட்டுமே. சுவை தேர்ந்து உண்ணவும் சுவை சமைத்து எடுக்கவும் திறன் கொண்டவர் அவர். உணவு அவரை ஆற்றல் குன்றாது வைத்திருக்கும்” என்றான். “அவர் திரும்பி வந்ததுமே இவர்கள் மூவருக்கிடையே உணவுக்கான போர் தொடங்குமென நினைக்கிறேன்” என்றான் சுருதகீர்த்தி.

சதானீகன் “தந்தையர் ஐவரைப்பற்றி நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. நம் சித்தத்தின் காலமின்மையில் அவர்கள் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். அப்பால் காலத்தின் பேரொழுக்கில் சென்றுகொண்டும் இருக்கிறார்கள். நேரில் காண்கையில் நாம் திகைத்து சொல்லிழப்போம் என்பதில் ஐயமில்லை” என்றான். “ஆனால் இரண்டாவது தந்தை மட்டும் மலைகளைப்போல மாறாஉடல் கொண்டு எப்போதும் இருப்பார் என்று என் உள்ளம் சொல்கிறது.”

சுருதசேனன் இணையாக புரவியில் வந்துகொண்டிருந்த சதானீகனையும் நிர்மித்ரனையும் பார்த்து “காம்பில்யத்தில் ஒரு சுவரோவியம் உள்ளது. பாஞ்சால அரசி மணம்கொண்ட காட்சி. அதில் தந்தை நகுலர் இவர்கள் உருவில் இருந்தார்.” என்றான். திரும்பிப்பார்த்த சுருதகீர்த்தி “ஆடிப்பாவைகள் போல இரண்டாகிவிட்டார்” என்றபின் “ஒருமுறை சதானீகன் ஏரியில் குனிந்து முகம் கழுவிக்கொண்டிருந்தான். சரிவிறங்கி வந்த நான் இவர்கள் இருவரும் அங்கே பேசிக்கொண்டிருப்பதாக எண்ணி மயங்கிவிட்டேன்” என்றான்.

பிரதிவிந்தியன் திரும்பி கடுகடுத்த குரலில் “இருவரும் இணைந்து நிற்கலாகாதென்று ஆணையிட்டிருக்கிறேன் அல்லவா? விழிக்கோள் பட்டுவிடப்போகிறது” என்றான். “பொறுத்தருள்க, மூத்தவரே” என்றபடி சதானீகன் விலகி சுருதசேனனின் அருகே சென்றான். சுதசோமன் “நானும் சர்வதனும் மற்போரிடுகையில்…” என ஏதோ சொல்லத் தொடங்க “இரட்டையுருவர் எவராயினும் சேர்ந்து பிறர் விழிமுன் நிற்கலாகாது. இது என் ஆணை” என்றான் பிரதிவிந்தியன். சுதசோமன் “அவ்வண்ணமே” என்றான். “ஏற்கனவே வேண்டிய விழிக்கோள் உள்ளது… இளவரசர்களாகவா வாழ்கிறோம் இன்று?” என முணுமுணுத்தான்.

இளங்காலை ஒளியில் அவர்களின் நிழல்கள் நீண்டு புரவிக்குளம்படிகள் படிந்த செம்மண் பரப்பில் நெளிந்து சென்றன. குளம்படித்தாளம் அவர்களின் எண்ண ஒட்டங்களை சீரமைத்தது. பிரதிவிந்தியன் பெருமூச்சுடன் கலைந்து “அவர்கள் ஏன் அவனை தெரிவு செய்தார்கள்?” என்றான். அவன் கூறுவதென்ன என்று பிற அனைவருமே அக்கணமே புரிந்துகொண்டனர். எவரும் மறுமொழி சொல்லவில்லை. “இளையவன் நம்மில் உளமுதிர்வும் நிலையமைவும் குறைந்தவன்” என்று பிரதிவிந்தியன் மீண்டும் சொன்னான்.

சுதசோமன் “விராட இளவரசியை வென்றவர் இளைய தந்தை அர்ஜுனர். அவருக்கு எப்போதும் இனியவன் சுபத்திரையன்னையின் மைந்தன்” என்றான். சுருதகீர்த்தி “ஆம், முதன்மை மைந்தனென அவர் அவனையே எண்ணுகிறார் என நான் எப்போதும் அறிந்திருந்தேன்” என்றான். பிரதிவிந்தியன் அவனை திரும்பிப் பார்த்து “தந்தையரை மதிப்பிடும் உரிமை மைந்தருக்கில்லை” என்றான். சுருதகீர்த்தி உதடுகளைச் சுழித்து முகம் திருப்பிக்கொண்டான். “அவர் அவனை வெறுக்கவும் செய்கிறார்” என்றான் சதானீகன். “ஆம், ஆனால் ஒரு துளி வெறுப்பு இருப்பது நன்று. அது விருப்பை மறுஎதிர் என நின்று பலமடங்கென பெருகச்செய்யும்” என்றான் சுருதகீர்த்தி.

பிரதிவிந்தியன் “அவர் தன் முகத்தையும் தன் மெய்த்தோழரின் முகத்தையும் அவனில் காண்கிறார் என்று அன்னை ஒருமுறை சொன்னார். மயிற்பீலியைத் திருப்பி இருவண்ணம் பார்ப்பதுபோல ஒருமுகம் இருவருடையதாக இருக்கிறது. அதிலிருந்து அவருக்கு மீட்பில்லை” என்றான். சுருதசேனன் “ஆம், அத்தனை பேரன்பு கொண்டிருப்பதனாலேயே அவனை நோக்கி புன்னகையுடன் ஒரு சொல்கூட தந்தையால் எடுக்க முடிவதில்லை” என்றான். சுதசோமன் நகைத்து “தெய்வங்களை அஞ்சுவதுபோல மனிதர்கள் அன்பையும் அழகையும் அஞ்சுகிறார்கள்” என்றான்.

பின்னர் அவனே தனக்குள் என மகிழ்ந்து “மூத்தவரே, இம்மண்ணில் மானுடர் அஞ்சாத ஒரே தெய்வம் அன்னம்தான்” என்றான். சுருதகீர்த்தி நகைத்து “மூத்தவரைப்போலவே பேசத்தொடங்கிவிட்டீர்கள்” என்றான். பிரதிவிந்தியன் திரும்பி சுதசோமனை பார்த்தபின் “அவ்வப்போது இவனும் உகந்த சொற்களை சொல்லத்தொடங்கியிருக்கிறான்” என்றான். “இளையவனே, எண்ணிக்கொள்! பேரழகும் பேரன்பும் தெய்வங்களுக்குரியவையே. தெய்வங்களுக்குரியவை மானுடருக்கு உவகையை அளிப்பதில்லை. பெருந்துயரை, பேரச்சத்தை, எல்லையற்ற அலைக்கழிப்பை மட்டுமே அளிக்கின்றன. ஆனால் அவை தெய்வமெழும் கணங்கள் என்பதனால், அவற்றைத் தொட்டதுமே மானுடத்தின் எல்லைகளை கடந்துவிடுவதனால், மானுடர் அவற்றை தேடிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். எரியிலிருந்து விலக விட்டில்களால் இயலாது” என்றான்.

சதானீகன் “அபிமன்யு இந்தத் திருமணத்தை ஒரு பொருட்டென எண்ணவில்லையென்றுதான் நான் அறிந்தேன்” என்றான். சுருதகீர்த்தி “அவனுக்கு எப்போதுமே பெண்கள் ஒரு பொருட்டில்லை. தந்தையின் நேர்க்குருதி அவனே. மாதுலரின் குருதியும்கூட. தந்தைக்கு பெண்கள் பொருட்டல்ல. அவர் தோழருக்கு பெண்களன்றி பிறிதொன்றும் பொருட்டில்லை என்கிறார்கள்” என்றான். “நாம் தந்தையரை களியாடுவது எதற்காக? நம்மை அவர்களிடமிருந்து விடுவித்துக்கொள்ள விழைகிறோமா? அல்லது அவர்களே நாம் என்பதன் எளிமையுணர்வை அதைக்கொண்டு கடக்கிறோமா?” என்றான் சதானீகன். “நாம் அபிமன்யூவைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.”

அபிமன்யூவின் பெயர் மீண்டும் பிரதிவிந்தியனை முகம் சுருங்கச்செய்தது. பிறர் ஒருவருக்கொருவர் விழிகளால் நோக்கியபின் அவனிடம் மீண்டும் சொல்லெடுக்க வேண்டாமென்று முடிவு செய்தனர். குளம்படி ஓசைகள் மட்டும் சாலையில் ஒலித்தன. பிரதிவிந்தியன் நீண்ட நேரத்திற்குப்பின் அந்த அமைதியை உணர்ந்து “இளையோனே, நெடுங்காலத்திற்கு முன் பாண்டுவின் மைந்தர் என்னும் அடையாளம் மட்டுமே கொண்டிருந்த நம் தந்தையருக்கு மீண்டும் அரசிளங்குமரர்கள் என்னும் இடத்தை அளித்தது பாஞ்சாலத்தின் மணஉறவு. படைகொண்டவர்களாக உறவு சூழ்ந்தவர்களாக அவர்களை அது மாற்றியது. பின்னர் அவர்கள் அடைந்த அத்தனை வெற்றிக்குப்பின்னாலும் துருபதர் இருந்தார். இன்று உபபாண்டவர்களில் முதல் மணம் கொள்பவன் அபிமன்யூ. துருபதர் இருந்த இடத்தில் இன்றிருப்பவர் விராடர்” என்றான்.

அவன் சொல்ல வருவதென்ன என்பதை அனைவருமே புரிந்துகொண்டனர். அவர்கள் கண்களில் அத்திகைப்பை பார்த்தபின் பிரதிவிந்தியன் சொன்னான் “விராடபுரியில் மாற்றுருக்கொண்டு நுழைந்ததுமே நம் சிறிய தந்தை சகதேவர் அவள் பிறவி நூலை நோக்கி பேரரசின் முதலரசியாக அமர்வாள் என்றும் அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தனே இந்திரப்பிரஸ்தத்தின் அரசனாகவும் அவன் குருதியினரே நம் கொடிவழியினராகவும் ஆவார்கள் என்றும் கணித்திருக்கிறார்”. சதானீகன் “அவ்வாறென்றால் ஏன் அவளை அவனுக்கு என முடிவெடுத்தார்கள்?” என்றான்.

சுதசோமன் “மூத்த தந்தையின் இடத்தில் நான் இருந்தால் அதையே செய்திருப்பேன். ஒரு மண உறவினூடாக அவர் யாதவர்களையும் விராடர்களையும் ஒருங்கிணைத்திருக்கிறார். மூத்தவரே, இன்று நமக்கிருக்கும் இரு படைபுலங்கள் அவர்கள் மட்டுமே” என்றான். பிரதிவிந்தியன் நீண்ட பெருமூச்சுவிட்டு “ஆம், எம்முடிவாயினும் அது எந்தையால் எடுக்கப்படும் என்றால் மறுசொல் எழமுடியாத தெய்வ ஆணையும் ஊழின் தொடரும்தான்” என்றான்.

fire-iconஉபப்பிலாவ்யத்தின் கோட்டை வாயிலில் சுரேசர் காலைவெயிலில் வழிந்த வியர்வையுடன் மேலாடையால் முகத்தை விசிறியபடி காத்திருந்தார். தொலைவில் பிரதிவிந்தியனின் புரவி தெரிந்ததும் கோட்டைக்கு மேல் இரு முரசுகள் முழங்கத்தொடங்கின. பிரதிவிந்தியனுக்குரிய ஆலிலைக்கொடி மேலேறியது. சுரேசர் “அனைவரும் சித்தமாகுக!” என்றார். யௌதேயன் “இத்தனை வீரர்கள் மட்டும்தானா?” என்றான். சுரேசர் சலிப்புடன் “இக்கோட்டையின் காவலர்கள் அனைவரும் இங்கு வந்துவிட்டார்கள். அரண்மனைக்காவலரை இங்கு கொண்டு வந்தால் அரண்மனை காப்பற்றதாக ஆகும்” என்றார்.

யௌதேயன் நிறைவின்மையுடன் தன்னைச் சூழ்ந்து நின்ற காவலர்களை பார்த்தான். அவர்களில் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து வந்தவர்கள் மட்டுமே முறைமைகள் பயின்றவர்களாகவும் ஆகவே பதற்றமற்றவர்களாகவும் இருந்தனர். விராட வீரர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டும் தங்கள் உடைகளையும் படைக்கலங்களையும் சீரமைத்துக்கொண்டும் காற்றில் கிளைகளென அசைந்தபடியே இருந்தனர். ஒருவன் தேவையில்லாமல் இளித்துக்கொண்டிருந்தான். ஒரு முதியவர் மூக்கை விரலால் நோண்டிக்கொண்டிருந்தார்.

பிரதிவிந்தியன் புரவியின் விரைவைக் குறைத்து சீர் நடையில் காற்றில் பஞ்சென கோட்டை நோக்கி வந்தான். சுரேசர் “பிற எதையும் கற்கவில்லையென்றாலும் இதில் மட்டும் தேர்ந்திருக்கிறார்” என்றார். யௌதேயன் “அவர் இந்திரப்பிரஸ்தத்தின் பட்டத்து இளவரசர். இச்சொற்கள் அவரைப்பற்றியதென்றால் அது அரச குற்றம்” என்றான், சுரேசர் “இந்திரப்பிரஸ்தம் என்னும் அரசு இன்றில்லை” என்றார். யௌதேயன் முகம் சினத்தில் சிவந்தது. பின்னர் “இதை தாங்கள் பாண்டவ அரசர்களிடம் சொல்ல முடியுமா?” என்றான்.

“எங்கும் எண்ணியதை சொல்வதற்குப் பெயர்தான் அமைச்சுப்பணி” என்று சொன்ன சுரேசர் “இந்த முறைமைகள் எவைக்கும் இவர் உரியவரல்ல. இளைய மைந்தர் ஒருவரின் விழைவென்பதால் மட்டுமே இது இங்கு அமைக்கப்படுகிறது. பாண்டவர்கள் எந்த நிலத்தின்மேலும் முற்றுரிமை கொண்டவர்கள் அல்ல. இச்சிறு கோட்டையின் அரியணையில் விராடரின் மணமுறை பொருட்டே யுதிஷ்டிரர் அமர்ந்திருக்கிறார். இது விராட இளவரசி உத்தரையின் உரிமை நகர். அவளை மணம் கொள்பவருக்குரியது. பட்டத்து இளவரசருக்கு இங்கு எந்த முறையுரிமையும் இல்லை” என்றார்.

யௌதேயன் தணிந்து “பொறுத்தருள்க, அந்தணரே! அவரிடம் அதை சொல்ல வேண்டியதில்லை. தங்கள் வாயிலிருந்து இச்சொற்களை அவர் கேட்டால் வருந்துவார்” என்றான். சுரேசர் மெல்ல தணிந்து புன்னகைத்து “அரண்மனையிலிருந்து இந்த எதிர்வெயிலில் இத்தனை விரைவாக இங்கு வந்தது என்னை சற்று நிலையழியச் செய்தது போலும்” என்றார். யௌதேயன் “முறைமைகளினூடாகவே தன் முதன்மையை அவர் நிறுவிக்கொள்ளவேண்டியிருக்கிறது” என்றான்.

பிரதிவிந்தியன் கோட்டை முகப்பை அடைந்ததும் தலைமைக்காவலர் இருவர் முன்னால் சென்று தங்கள் வேல்களை நிலம் தொட தாழ்த்தி தலைவணங்கினர். காவலர்தலைவன் “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசருக்கு வணக்கம். உபபிலாவ்யம் தங்களை பணிந்து எதிர்கொள்கிறது” என்று முகமன் உரைத்தான். சுரேசர் கைகூப்பியபடி அருகணைந்து “வருக, இளவரசே! இங்கு நிகழவிருக்கும் மங்கலத்திற்கு முதலெழுகையாக தங்கள் வருகை அமையட்டும்” என்றார். பிரதிவிந்தியன் புரவியிலிருந்து இறங்கி கைகூப்பியபடி நடந்து வந்து “மகிழ்கிறேன், அமைச்சரே. இக்கோட்டை சிறிதெனினும் என் நினைவில் என்றும் இருக்கும்” என்றான்.

அவனுக்குப்பின்னால் புரவியிலிருந்து இறங்கிய சுதசோமன் சுரேசரிடம் “இங்கு குறைவான இடம்தான் இருக்கும்போல் தோன்றுகிறதே. இங்கா இளையவனின் மண நிகழ்வு நிகழப்போகிறது? பெரிய அடுமனை ஒன்றை அமைப்பதற்குக்கூட இடமில்லை” என்றான். “சிறிய அடுமனையிலேயே வேண்டிய அளவு சமைக்க முடியும்” என்றார் சுரேசர். சதானீகனும் சுருதசேனனும் புரவியிலிருந்து இறங்கி சுரேசரை வணங்கினர். சுருதகீர்த்தி புரவியில் அமர்ந்தபடி கோட்டையை இருமருங்கும் விழியோட்டி நோக்கியபின் “சிறிய திருத்தங்கள் வழியாக இதை அழகும் காவலும் கொண்டதாக ஆக்க முடியும். இருபக்கமும் நான்கு காவல் மேடைகளை மரத்தால் அமைக்க வேண்டும்” என்றான்.

“நெடும்பயணம், இளைப்பாறியபின் பேசுவோம். வருக!” என சுரேசர் அவர்களை நகருக்குள் இட்டுச்சென்றார். அப்போதும் உபப்பிலாவ்யத்தின் தெருக்களில் அலங்காரப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. பாவட்டாக்களுக்கான மூங்கில்களையும் தோரணங்களுக்கான கொடிச் சரடுகளையும் கட்டும் ஏவலர்கள் பணிகளை நிறுத்தி புரவியில் தெருக்களினூடாகச் சென்ற இளவரசர்களை திரும்பிப் பார்த்தனர். குடிமக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களுக்கு வந்து நின்று வெறுமனே நோக்கினர். வணிகர்கள் விற்பனைக்கூச்சல்களை நிறுத்தி எஞ்சிய சொற்கள் நிலைத்த முகத்துடன் அவர்களை பார்த்தனர்.

பிரதிவிந்தியன் “இவர்கள் வாழ்த்து கூவ மாட்டார்களா?” என்றான். சுரேசர் “இது சிறு எல்லை ஊர், இளவரசே. இங்கு அரசகுலத்தார் வருவதும் தங்குவதும் இல்லை. இவர்களுக்கு அத்தகைய முறைமைகள் எதுவும் தெரியாது” என்றார். “இங்கு நாம் வந்து ஒரு மாதம் ஆகிறது. இதற்குள் இம்முறைமைகளை அவர்களுக்கு கற்றுத் தந்திருக்க வேண்டுமல்லவா?” என்றான் பிரதிவிந்தியன். சுரேசர் “அதற்கு முன் தாங்கள் ஓர் அரசின் குடிகள் என்று அவர்களை கற்பிக்க வேண்டியிருந்தது” என்றார். அவர் கூறியதன் பொருள் புரியாமல் திரும்பிப் பார்த்த பிரதிவிந்தியன் “அத்தனை மக்களும் ஏதேனும் அரசனின் குடிகளே” என்றான். சுரேசர் புன்னகையுடன் “ஆம்” என்றார். “அத்தனை விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் புழுக்களும்கூட.” பிரதிவிந்தியன் அவரை திரும்பி நோக்க “நிலமென்பது உயிர்க்குலமே” என்றார். அவன் தலையசைத்தான். சுதசோமன் “தெய்வங்கள்?” என்றான். சதானீகன் “வெறுமனே இருங்கள், மூத்தவரே” என்றான்.

அரண்மனை முகப்பில் அபிமன்யூவும் பிரலம்பனும் முதன்மைக்காவலர் எழுவரும் மங்கலச்சூதரும் அவர்களுக்காக காத்து நின்றனர். புரவிகள் அரண்மனை முற்றத்தை அணுகியதும் முரசுகள் முழங்கத்தொடங்கின. கொம்புகள் உடன் இணைந்தன. “இங்கு மங்கலச் சேடியர் கூடவா இல்லை…?” என்று பிரதிவிந்தியன் கேட்டான். “அனைவரையும் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கொண்டு வர வேண்டியிருக்கிறது. நாளையும் நாளை மறுநாளுமாக அவர்கள் வந்து சேர்வார்கள்” என்று சுரேசர் சொன்னார். “அரசமுறைப்படி நாம் எவரையும் அங்கிருந்து கொண்டுவர முடியாது. விராடபுரியிலிருந்து அவர்களை வரச்சொல்வதும் உகந்ததல்ல. யாதவபுரி இன்னமும் நமது தொடர்பில் இல்லை. இந்திரப்பிரஸ்தத்திலிருந்து ஏவலரையும் சேடியரையும் சூதரையும் பிறர் அறியாமல் கொண்டு வரவேண்டியிருக்கிறது.”

அதை செவி கொடுக்காமல் “மிகச்சிறிய அரண்மனை” என்றான் பிரதிவிந்தியன். சுதசோமன். “அரண்மனை என்ற சொல்லின் எடையை அது தாங்காது. உத்தரங்கள் விரிசலிட்டுவிடக்கூடும்” என்றான். உள்கோட்டை வளைப்புக்குள் புரவிகள் நுழைந்ததும் அங்கு நின்றிருந்த நான்கு மங்கல சூதர்கள் முழவுகளையும் கொம்புகளையும் முழக்கினர். அபிமன்யூ வணங்கியபடி அருகணைந்து தலைபணிந்து “மூத்தவரை உபபிலாவ்யத்திற்கு வரவேற்கிறேன். இவ்வரண்மனை தங்கள் வருகையால் நிறைவு கொள்க!” என்றான். பிரதிவிந்தியன் இறங்கி “தந்தையர் நாளை வருகிறார்கள் என்றார்கள்” என்றான். “ஆம். நாளை மறுநாள் முதல் இங்கு வருகையாளர் பெருகத் தொடங்குவார்கள்” என்று அபிமன்யூ சொன்னான்.

சதானீகன் “நீ களம் கண்டு வென்ற செய்தியை இந்திரப்பிரஸ்தத்தில் சூதர்கள் பாடினார்கள்” என்றான். அபிமன்யூ “கேட்க ஆவல் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் அடைந்த வெற்றிகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளுக்குப்பின் நான் வெல்ல பாரதவர்ஷத்திலேயே மன்னர் எஞ்ச மாட்டார்கள் என்று தோன்றுகிறது” என்றான். திரும்பி பிரலம்பனிடம் “நான் சொன்னேன் அல்லவா? பாரதவர்ஷத்தில் போர்களையே சூதர்கள்தான் நிகழ்த்துகிறார்கள்” என்றான். பிரதிவிந்தியன் “இவர் யார்?” என்றான். “இவர் என் அணுக்கர், ஒற்றரும் கூட” என்றான் அபிமன்யூ.

சதானீகன் “இத்தனை வெளிப்படையாக பகல் வெளிச்சத்தில் வந்து நிற்கும் ஒற்றனை இதற்கு முன் கண்டதில்லை” என்றான். “அதுதான் இவருடைய தனிச்சிறப்பே. அவரை ஒற்றர் என்று அறிமுகம் செய்தால்கூட எவரும் நம்புவதில்லை” என்று அபிமன்யூ சொன்னான். “வருக! அரண்மனைக்குள் செல்வோம்” என்று அழைத்துச் சென்றான். பிரதிவிந்தியன் “நான் சற்று ஓய்வெடுக்க வேண்டும். இங்கு நீராட்டறைகள் உள்ளன அல்லவா?” என்றான். “நீராட்டறைகள் ஏலவர் நறுமணப்பொருட்கள் அனைத்துமே உள்ளன, குறைவாக சிறிதாக” என்று அபிமன்யூ சொன்னான்.

அவர்கள் உள்ளே நடக்கையில் சுருதகீர்த்தி அபிமன்யூவிடம் “நீ தந்தையை கண்டாயா?” என்றான். அபிமன்யு “ஆம், காம்பில்யத்தில் நேருக்கு நேர் கண்டேன்” என்றான். சுருதகீர்த்தி “முதிர்ந்திருக்கிறாரா? உடல் நலம் குன்றியுள்ளாரா?” என்றான். “உண்மையை சொல்லப்போனால் நான் ஒருமுறைதான் பார்த்தேன். உடனே விழிகளை விலக்கிக்கொண்டு தலைகுனிந்தேன் அதன் பிறகு நோக்கவேயில்லை. அவர் குரலை வைத்துப் பார்த்தால் முதுமையோ நலிவோ இல்லாமல் இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது” என்றான் அபிமன்யூ. “மூடன்” என்று சுருதகீர்த்தி தலையை திருப்பிக்கொண்டான்.

சுதசோமன் திரும்பி “எந்தை எப்படி இருக்கிறார்?” என்றான். “காலமில்லா மாமலைகளைப்போல” என்று அபிமன்யூ சொன்னதும் அவன் முகம் மலர்ந்தது. சதானீகனும் சுருதசேனனும் அபிமன்யூவை சூழ்ந்துகொண்டு “எந்தையரை பார்த்தீர்களா? என்ன சொன்னார்கள்? உளம்நைந்துள்ளனரா?” என்றனர். “அனைவரும் நலமாக இருக்கிறார்கள். சொல்லப்போனால் அவர்களின் இளமைத் தோற்றத்தை ஓரிரு கணங்களுக்குப்பின் மறந்துவிடுவோம். என்றுமே இவ்வாறே நம்முன் இருந்தார்கள் என்று எண்ணத்தலைப்படுவோம்” என்றான் அபிமன்யூ. “ஏன்?” என்றான் நிர்மித்ரன்.

“இங்கிருந்து அவர்கள் சென்றபோது இல்லாத ஒன்று இப்போது அவர்களிடம் இருக்கிறது. கூர்கொள்கையில் வாளிலும் சுடர் ஏறுகையில் அகலிலும் அவற்றுக்குரிய தெய்வங்கள் குடியேறுகின்றன” என்றான் அபிமன்யூ. “நீண்ட பயணம்” என்று யௌதேயன் சொன்னான். “பதின்மூன்று ஆண்டுகள் கானுறைவாழ்வென்பது எவரையும் அழிக்கும். அழிக்கப்படாதவர்கள் மறுபிறப்பெடுத்தவர்கள்.” சுதசோமன் “எந்தை நம்மிடம் முழுமையாக மீளமாட்டார் என்று தோன்றுகிறது” என்றான்.

“நான் விந்தையான ஒரு உணர்வை அடைந்தேன்” என்று பிரலம்பன் சொன்னான். அவர்கள் திரும்பி நோக்க “பாண்டவ மூத்தவர்கள் இங்கிருந்து செல்லும்போதிருந்த உருவில் நீங்கள் எஞ்சுகிறீர்கள். பட்டத்து இளவரசர் பிரதிவிந்தியரும் யௌதேயரும் அரசர் யுதிஷ்டிரரைப்போன்று இருக்கிறார்கள். சுதசோமரும் சர்வதரும் இளைய பீமசேனரைப்போல. இளவரசர் அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் அர்ஜுனரைப்போல. நிர்மித்ரரும் சதானீகரும் நகுலரைப்போல. சுருதசேனர் சகதேவரின் உருவம். தங்களை உங்கள் வடிவில் இங்கு விட்டுவிட்டு கிளம்பிச்சென்று பிறிதென்றென உருமாறி மீண்டும் வந்திருக்கிறார்கள்.”

அவன் எண்ணியதற்கு மாறாக அவர்கள் அனைவரும் ஆழ்ந்த அமைதியை அடைந்து ஓசையின்றி நடந்தனர். பிரலம்பன் தான் பிழையாக ஏதேனும் சொல்லிவிட்டோமா என எண்ணினான். ஆனால் அந்த ஒப்புமையின் இனிமை அவன் நெஞ்சிலிருந்தமையால் அதை பொருட்படுத்தவும் தோன்றவில்லை.

முந்தைய கட்டுரைமாபெரும் குப்பைக்கூடை
அடுத்த கட்டுரைஆழமற்ற நதி -கடிதங்கள்