வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–58

பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 3

bl-e1513402911361கலிங்கச் சிற்பிகளால் மூலஸ்தான நகரியிலிருந்த மாபெரும் சூரியதேவன் ஆலயத்தின் அதே வடிவில் செந்நிற மென்கற்களைக் கொண்டு சம்பாபுரியின் மையத்தில் கட்டப்பட்ட நாளவன்கோட்டம் பன்னிரு வாயில்கள் கொண்டு வட்ட வடிவில் அமைந்திருந்தது. தரையிலிருந்து நான்கு ஆள் உயரத்தில் எழுப்பப்பட்ட அரைக்கோள வடிவிலான பீடத்தின் மீது ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கப்பட்ட ஏழு முகடுகளுடன், உச்சியில் கூர்ந்துநின்ற பொன்முலாம் பூசப்பட்ட கலத்துடன், மணிமுடிசூடிய தலைபோல் தொலைவிலிருந்தே அது தெரிந்தது. விருஷாலி சாளரத்தைத் திறந்து வளைவின்றி நேராகச் சென்ற பாதையின் மறுபக்கம் மெல்ல விரிந்து அணுகிவந்த ஆலயத்தை விழிநிலைத்து நோக்கிக்கொண்டிருந்தாள்.

சேய்மையில் முழுப்பும் மெழுக்கும் கொண்டு செந்தெங்கின் இளங்காய் வளைவென மின்னிய கல்வளைவு அணுகுந்தோறும் பருப்பையும் மழை வடுக்களையும் நீர்வழிவையும் காட்டத்தொடங்கியது. கிழக்கு நோக்கிய முதன்மைப் பெருவாயிலின் முன் அமைந்த அரைவட்ட முற்றத்தில் அவள் தேர் சென்று நின்றது. அங்கு அவளுக்காக காத்து நின்றிருந்த ஹரிதரும் சிற்றமைச்சர்கள் இருவரும் கைகூப்பியபடி அவளை நோக்கி வந்தனர். அவள் இறங்கி நின்றதும் தேர் திரும்பிச் சென்றது. தொடர்ந்து வந்த சிறிய தேரிலிருந்து அணுக்கச் சேடியர் இறங்கி அவளுக்குப் பின்னால் நின்றனர்.

ஹரிதர் கைகூப்பி “அரசிக்கு குலமுதல்வோன் ஆலயத்திற்கு நல்வரவு. பூசனைகளுக்கான ஒருக்கங்கள் துவங்கியுள்ளன. தங்கள் மீது ஒளியிறை அருள் பொழிக!” என்றார். சிற்றமைச்சர்கள் தலைவணங்கி முகமனுரைத்தனர். முகமன்களுக்கு புன்னகையுடன் எதிர்முகமன் அளிக்கவும், வரவேற்புகளையும் தலைவணங்கல்களையும் இயல்பாக ஏற்று மாறா புன்னகையுடன் நிமிர்ந்த தலையுடன் சீர்நடையிட்டு செல்லவும் அவள் பழகியிருந்தாள். இருபத்திநான்கு கல்படிகளினூடாக வளைந்து மேலேறி அகன்ற ஒற்றைக்கல் படியில் நின்றாள். அணிச்செதுக்குக் கல்நிலையின் இருபுறமும் கங்கையும் யமுனையும் அமுதகலங்களேந்தி வாயில்தேவதைகளாக நின்றிருந்தனர். தலைக்குமேல் தாமரை மலர்களும் கொடிகளும் பின்னி உருவாக்கிய நுண்செதுக்கு அரைவட்ட வளைவு பெரிய பொன்வளையல் என தெரிந்தது.

நிலைச்சதுரத்துக்கு அப்பால் ஆலயத்திற்குள் பன்னிரு வாயில்களினூடாக உள்ளே புகுந்து நிறைந்த காற்றின் ஒவ்வொரு ஒழுக்கும் பிறிதொன்றுடன் மோதி குலைந்து சுழன்று கொப்பளித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து திசைமாறும் காற்றொழுக்கே சூரியனின் ஆலயத்தின் தனிச்சிறப்பு. சுடர்களைக் காக்க அனைத்து விளக்குகளின் மீதும் சிறிய வெண்கலப் புரிகளில் சுழன்ற இரண்டு இலைத்தடுப்புகள் இருந்தன. அதன்மேலிருந்த சிறிய விசிறிச்சிறகு வீசும் காற்றை கணித்து அதற்கு எதிர்த் திசையில் இலைத்தடுப்பைத் திருப்பி சுடரைக் காத்தது. ஆலயத்திற்குள் நுழைந்ததுமே ஆடையை மும்முறை சுழற்றி செருகிக்கொள்ளும் வழக்கம் அனைவருக்கும் இருந்தது. ஆயினும் எழுந்து உப்பி படபடக்கும் ஆடைகளால் அங்கு செல்லும் ஒவ்வொருவரும் வானில் சிறகுலையப் பறக்கும் பறவைகள் எனத் தோன்றினர். சுடர்கள் எப்போதும் எழுந்தாடிக்கொண்டிருப்பதனால் இரவில் ஆலயமே விண்ணில் அலையடித்துக்கொண்டிருக்கும்.

ஆலயத்தின் வெளிச்சுற்று அறுபத்துநான்கு யோகினியரால் ஆனது. ஆனால் அங்கே பாரதவர்ஷத்தின் பெருநதிகளே யோகினியர் என அமர்ந்திருந்தனர். கருவறைக்கு ஒரு நீர்மகள் அன்னை வடிவில் அருள் காட்டி அமைந்திருந்தாள். ஒவ்வொரு கருவறைக்கு முன்னும் கல்லாலான ஏழு தட்டு நிலைவிளக்கு எழுசுடர் கொண்டு நின்றிருந்தது. முதல் ஆலயத்தில் முதலைமேல் அமுதகலம் ஏந்தி கங்கை அமர்ந்திருந்தாள். அருகே ஆமைமேல் அமர்ந்த யமுனை. தாமரைமேல் சிந்து. மீன்மீது கோமதி. அனைத்து விளக்குகளிலும் நெய்ச்சுடர்கள் அசைந்தன. கருவறைக்குள் சுடர்கள் அசைவிலாது இதழாகியிருந்தன.

விருஷாலி வணங்கி மலர்கொண்டபடி சுற்றுப் பிராகாரத்தை வளைத்து நடந்து மீண்டும் நின்ற இடத்திற்கு வந்தாள். அவளுக்காக வந்ததுபோல் அன்றி வந்து காத்து நின்ற ஆலயப்பூசகர் “வணங்குகிறேன், அரசி” என அழைத்து நடுவிலிருந்த ஆழிவடிவ மையக்கருவறை நோக்கி அழைத்துச் சென்றார். கற்பலகைகள் பரப்பப்பட்ட முற்றத்தின் மீது வானம் இளநீல வளையமெனத் தோன்றியது.

முற்றத்தில் நின்றாலே முழுத் தோற்றமும் தெரியும்படி உயரமாக எழுந்த கருவறைக்குள் மூன்றுவாரை உயரத்தில் சூரியனின் பெருஞ்சிலை அமைந்திருந்தது. ஏழு புரவிகள் விசைகொண்டு கால் தூக்கி நின்றிருக்க பீடத்தில் அருணன் மலர்ச்சொடுக்கு சாட்டையுடன் விழித்த கண்களும் திறந்த வாயுமென அசைவு கொண்டிருந்தான். இரு மேற்கைகளில் தாமரை மலர்கள், அஞ்சலும் அருளலும் காட்டிய கீழிருகைகள். ஏழு முகடுகள் கொண்ட மணிமுடி சூடிய தலைக்குப் பின்னால் நூற்றெட்டு நெய்விளக்குச் சுடர்கள் அவற்றுக்குப் பின்னால் ஏழிலை வட்டமாக அமைந்த முத்துச்சிப்பிகளாலான குவியாடித்தொகைகளால் ஒளிதிருப்பப்பட்டு சுடர்வட்டமென்று ஒளிர்ந்து கொண்டிருந்தன. எழுகதிர்மேல் தோன்றியதெனத் தோன்றியது போலிருந்தது கதிரவன் முகம்.

விருஷாலி கைகூப்பி நின்றபோது அவள் முதல் முறையாக கண்ட கர்ணனின் முகத்தை எண்ணிக்கொண்டாள். அன்று அது முன்பு கண்ட ஏதோ முகமென்று உளம் பதைத்தது. எவர் எவரென்று உசாவி நான்கு நாட்களுக்குப் பின்னரே புலரியின் அரைக்கனவில் வெண்புரவிமேல் கிழக்கிலிருந்து எழுந்து வந்த கதிரோனின் முகம் அது என கண்டுகொண்டாள். முன்பெப்போதோ அன்னையுடன் அருணபுரி எனும் சிற்றூருக்குச் சென்று அங்கு சிறிய குன்றொன்றின்மேல் அமைந்த கணையாழி வடிவக் கதிரவனின் ஆலயத்தின் முன் நின்று வணங்கியபோது நேர்கண்ட கல்முகம்.

எப்போதும் கதிரோன் முன் வணங்கவோ வழிபடவோ வேண்டவோ ஒன்றும் உள்ளத்தில் எழுவதில்லை. வெறும் விழிகளென அங்கு நின்றிருந்தாள். ஒளிரும் கரிய தோள்கள். நீண்ட பெருங்கைகள். சிற்றிடையில் கச்சை. ஊன்றிய நிலைத்தொடைகள். குறையற்ற பேருடல். அவள் விழிகளிலிருந்து நீர் பெருகி கன்னங்களிலும் நெஞ்சிலும் சொட்டத்தொடங்கியது. அணுக்கச் சேடி சாரதை அவளுக்குப் பின்னால் சற்று அருகணைந்து தோளைத்தொட அவள் தலைகுனிந்து தலையாடையை எடுத்து முகத்தை மறைத்துக்கொண்டாள்.

அவள் வலச்சுற்று முடித்து நின்றபோது ஹரிதர் அவளருகே வந்து “இளைய கௌரவர் அணுகிவிட்டார், அரசி” என்றார். “தாங்கள் அவருடன் ஓரிரு சொற்கள் தனிச்சொல்லாட இயலுமென்றால் நன்று. கங்கையன்னையின் ஆலயமுகப்பில் அவர் தங்களுக்காக காத்து நின்றிருக்கிறார்.” அவள் முகத்தைத் துடைத்து தலையாடையை விலக்கி பின்கொண்டை மேல் சுற்றியபின் “ஆம், வருகிறேன்” என்று சொன்னாள். ஹரிதர் தலைவணங்கி விலக அவள் மேலுமிருந்த சிற்றாலயங்களில் வணங்கி மலர்கொண்டு கங்கையின் கருவறை முன் கல்விளக்கருகே நின்றிருந்த சுஜாதனை அணுகினாள்.

அவன் வேறெங்கோ நோக்கி நின்றிருந்தான். சிலம்பொலி கேட்டு திரும்பி அவள் வருவதைக்கண்டு கைகூப்பினான். மெல்ல அருகணைந்த அவள் “சம்பாபுரிக்கு தங்கள் வரவு நலம் கொணர்க, இளைய கௌரவரே” என்றாள். சுஜாதன் “அரசி, மெய்யாகவே நலம் கொணரத்தான் வந்தேன். அஸ்தினபுரிக்கும் சம்பாபுரிக்கும்” என்றான். படபடப்பும் மூச்சுத்திணறலுமாக “தாங்கள் அறிவீர்கள், அங்கு போர்முகம் கொண்டு நின்றிருக்கின்றன படைகள். வெற்றியை எவர் அளிக்க முடியுமோ அவர் இங்கு உடல்சோர்ந்து உளம்கலைந்து அமர்ந்திருக்கிறார். அவரை அழைத்துச் செல்லவே நான் வந்தேன்” என்றான். அவன் பேச்சில் இளைஞர்களுக்குரிய விரைவும் திக்கலும் இருந்தது. அது அந்நிலையிலும் விருஷாலியை புன்னகைக்கச் செய்தது. “ஆம், நான் அறிவேன்” என்று மென்குரலில் சொன்னாள்.

“இன்று அவர் இங்கு வரும்போது மதுவிலா உள்ளத்துடன் இருப்பார் என்று சொன்னார்கள். நாம் சில சொற்களை அவரிடம் சொல்ல முடியும். இன்று நாம் அவரிடம் படைமுகம் கொண்டு செல்வதைக் குறித்தோ அங்கு அவர் பெறப்போகும் இடத்தை குறித்தோ எதுவும் பேசவேண்டியதில்லை. இங்கு வரும்வரை பலவாறு எண்ணி நான் வந்தடைந்த முடிவு இது” என்றான் சுஜாதன். “ஒரு பொய்யுரையைக் கூறலாமென்று நான் இப்போது முடிவெடுத்தேன். அஸ்தினபுரியின் அரசர் தன் தோழரை பார்க்க விரும்புகிறார் என்று அவரிடம் சொல்வோம். அதை அவரால் தட்ட இயலாது. அவர் என்னுடன் வந்தால் மூத்தவரை அவர் சந்திக்க வைப்ப்பேன். அவர்கள் அருகமர்ந்தாலே அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்.”

விருஷாலி “ஆனால் அவர்களுக்குள் பூசல் என்று ஏதுமில்லையே!” என்றாள். “இல்லை அரசி, பூசல் உள்ளது. விராடபுரியின் தோல்விக்குப் பின் திரும்பிவருகையில் அரசர் அங்கரிடம் கடுஞ்சொற்களை சொன்னதை மூத்தவர் சுபாகு என்னிடம் சொன்னார். உளம் உடைந்து தன் வில்லை வீசிவிட்டு புரவியைத்தட்டி அங்கிருந்து விரைந்து அஸ்தினபுரிக்கு வந்தவர் வழியிலேயே தன் படைகளை சம்பாபுரிக்கு திரும்பும்படியான ஆணையை படைத்தலைவரிடம் அளித்துவிட்டு திரும்பி தனியாகவே அங்கிருந்து இங்கு மீண்டுவிட்டார். அவர் வந்து சேர்ந்தபின்னர் ஏழு நாட்கள் கழித்தே சம்பாபுரியின் படைகள் வந்து சேர்ந்தன என நினைவுகூர்வீர்கள்.”

“ஆம்” என்றாள் விருஷாலி. “ஆனால் அவர் அகம் அந்தப் பூசலில் இல்லை. வருகையிலேயே அவர் அதை மறந்தும்விட்டிருப்பார். அவர் உள்ளம் மாறாதிருப்பது பிறிதொரு பெரும் துயரில். அத்துயரை மேலும் பெருக்கும் முன்னிலையாகவே உங்கள் மூத்தவர் இருக்கப்போகிறார். ஆகவே அவர் அதை விரும்பமாட்டார். இங்கிருந்து கிளம்பி வந்து அஸ்தினபுரியின் அரசவையில் அமர்ந்தால் மேலும் அகச்சீற்றம் கொள்ளவும் தன்னை மேலும் மேலும் நஞ்சூட்டிக்கொள்ளவுமே அவர் முயல்வார்.”

சுஜாதன் தலைகுனிந்து “ஆம், அனைவரும் மறக்க எண்ணும் சில அங்கு நிகழ்ந்துவிட்டன” என்றான். “ஆனால் அவர் எண்ணுவதுபோல அல்ல, இருமுறை இளைய யாதவர் வந்து சொன்ன தூதிலும், அதற்குமுன் சஞ்சயனே தந்தையிடம் சொன்ன செய்தியிலும் தெளிவது ஒன்றே. அன்று நிகழ்ந்ததன் வஞ்சத்தை துருபத அரசி முற்றாகவே மறந்துவிட்டார்கள். பாண்டவ மூத்தாரும் உடன்பிறந்தாரும் அக்கசப்பில் இருந்து மிகவும் அகன்றுவிட்டிருக்கிறார்கள். அது இன்று அனைவருக்கும் பொய்யாய் தொல்கதையாய் மாறிவிட்டிருக்கிறது. உண்மையில் அஸ்தினபுரிக்கு கிளம்பிவந்து அவைநின்று அதை சொல்லவேகூட பாஞ்சாலத்து அரசி சித்தமானார். அதையறிந்தால் அங்கநாட்டரசர் உளம் மீளக்கூடும்.”

“அவளோ அன்றி பாண்டவர்களோ, இப்பாரதவர்ஷமோ, முன்னோரோ, விண்ணமைந்த தெய்வங்களோ ஏற்பது குறித்து அல்ல அவரது துயர். அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மட்டும்தான். ஒருபோதும் உளத்தால் உண்டு செரிக்க இயலாத நஞ்சொன்று அப்போது அவருள் புகுந்துவிட்டது. அது அவரை கொன்று கொண்டிருக்கிறது” என்றாள் விருஷாலி.

“அவ்வாறெனில் என்ன செய்வது? இங்கு இவ்வாறு இருந்து மட்கி அழிவதா? அரசி, அவர் போர்முகம் கொள்ள வேண்டுமென்று நான் விழைவது நாங்கள் வெல்ல வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல. படைக்கலங்கள் போரிலேயே பயனுறுகின்றன. கைதொடப்படாதபோது துருவேறுகின்றன. பெருவீரன் படைமுகம் கொள்கையிலேயே தன்னை மீட்டு தொகுத்துக்கொள்ள முடியும். அங்கு முனைகொண்டிருக்கும் போர்ச்சூழல் அவரை முற்றிலும் மீட்டெடுக்கும் விசைகொண்டது. இங்கிருந்து எவ்வகையிலேனும் அவரை கொண்டுசென்று அக்களத்தில் நிறுத்தவே நான் விழைகிறேன். நாணொலி எழுப்பி படைமுகப்பிலெழும் அங்கரே முழுமையானவர்” என்றான் சுஜாதன்.

“அதை நானுமறிவேன்” என்றபின் விருஷாலி “ஒன்று தோன்றுகிறது…” என்றாள். சுஜாதன் அவளை கூர்ந்துநோக்க அவள் தயங்கி “வேண்டாம்… அதை உன்னால் புரிந்துகொள்ள முடியாது” என்றாள். “சொல்க, நான் உளம்முதிர்வற்றவன் என்பது உண்மை. ஆனால் நினைவறிந்த நாள் முதல் என் தலைவர் என மூத்தவர் கர்ணனை நெஞ்சில் நிறுத்தியவன். அத்தகுதியினால் சிலவற்றை என்னாலும் புரிந்துகொள்ள முடியும்” என்று சுஜாதன் சொன்னான். ஆம் என்று தலையசைத்த விருஷாலி உதடுகள் மட்டும் அசைய சொல் எண்ணி பின் தலைதூக்கி அவனை நோக்கி “ஒருவேளை பாஞ்சாலத்தரசி மீது அப்பழைய வஞ்சத்தை அவர் மீட்டுக்கொண்டாரென்றால் உயிர் கொண்டெழக்கூடும்” என்றாள்.

“என்ன சொல்கிறீர்கள்?” என்று சுஜாதன் கேட்டாலும் அவன் விழிமாறுதல் அவள் சொல்வதை அவன் புரிந்துகொண்டான் என்பதை காட்டியது. “அவள் மீது கொண்ட வஞ்சத்தால் அவர் உள்ளம் நஞ்சு நிறைந்திருந்தது. அந்நஞ்சை முறிக்கும் பொருட்டே இப்பழியெனும் நஞ்சை அள்ளி அருந்தினார். இதை ஈடு செய்யும் அளவிற்கு அந்நஞ்சு பெருகும் என்றால் அவர் மீளக்கூடும்” என்றாள் விருஷாலி. சுஜாதன் “உண்மையில் நானும் அதை எண்ணாமல் இல்லை” என்றான். “ஆனால் இத்தனை தெளிவாக அல்ல. நீங்கள் சொன்னதுமே எனக்கு அது புரிகிறது” என்றான். “வஞ்சமனைத்தையும் பாஞ்சாலத்து அரசி விட்டுவிட்டார்கள் என்று கேட்டபோது ஒருகணம் எனக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. அது அங்கரை மேலும் சினம்கொள்ளச் செய்யும் என்றே எண்ணினேன். அது ஏன் என இப்போது புரிகிறது” என்றான்.

விருஷாலி “நமது இந்தக் கணக்குகளுக்கெல்லாம் வாழ்வில் எப்பொருளும் இல்லை. இதற்கப்பால் நாமறியா ஏதோ நிகர்களாலும் நிலையழிவுகளாலும் ஆனது மானுட உள்ளம்” என்றாள். “இல்லை, நீங்கள் இப்போது சொன்னபோது என் உள்ளத்தில் தெளிவுற அதை காண்கிறேன். அவர் வரவில்லை என்றால் பாண்டவர்கள் களம் வெல்வார்கள். அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் அவர்களின் உரிமையென்றாகும். கௌரவர்கள் முழுமையாக மடிந்தழிவார்கள். அரசி, அதன் பின் மும்முடி சூடி இந்திரப்பிரஸ்தத்தில் அமர்ந்திருக்கும் பாஞ்சாலத்து அரசியின் காலடியில் வாள் தாழ்த்தி முடி சரித்து அங்கர் வணங்கி நின்றிருக்க வேண்டும். அதை அவரிடம் சொல்வோம்.”

விருஷாலி அவனை நோக்கி ஒருசில கணங்கள் அசைவற்று உறைந்துவிட்டு தலையசைத்தாள். “ஆம், இப்போது அவரிடம் சொல்வதற்கு உகந்த சொல் இதுவே” என்றாள். “இழிவுகளில் இறுதியானது என அவர் எண்ணுவது அவள் முன் சென்று பணிந்து நின்றிருப்பதே.” சுஜாதன் இயல்பான குரலில் “அதைவிட அவர்கள் கணவர் ஐவருக்கும் முன் நின்றிருப்பது” என்றான். விருஷாலி திடுக்கிட்டு சுஜாதனை நோக்க “ஆண் என அதை என்னால் சொல்லமுடியும், அரசி” என்றான். பின்னர் தத்தளிப்புடன் கைகளை மார்பில் கட்டி மீண்டும் தாழ்த்தி “அதைவிட அவர்களின் அன்னை யாதவப் பேரரசியின் முன் நின்றிருப்பது கடினம்” என்றான். அவள் அவனை நோக்க இருவர் விழிகளும் சந்தித்து அகன்றன.

விருஷாலி பெருமூச்சுடன் “நீ கூறுவதுபோல் அச்சிறுமைகளை எண்ணினால் அவர் சினங்கொண்டு எழக்கூடும். இப்போது அவர் உள்ளத்தில் அவ்வாறு நிகழ்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை போட்டுவைப்போம். அவர் கொள்ளும் குடிவெறி மயக்கில் அக்கற்பனை பெருகும். அது வஞ்சமென்று ஆகுமென்றால் நம் சொல்லுக்கு அவர் செவி சாய்க்கக்கூடும்” என்றாள். சுஜாதன் முகம் மலர்ந்து “அவர் வந்துகொண்டிருக்கிறார். தாங்கள் அவரிடம் பேசி முடிக்கையில் நானும் இருக்கிறேன். தாங்கள் கூறியதையே மேலும் உணர்வுநிறைத்து நான் உரைப்பேன். அவர் உள்ளம் மேலும் அனல் கொள்ளுமெனில் நன்று” என்றான்.

விருஷாலி “நன்று” என்று திரும்பி, பின் ஏதோ எண்ணி “ஆனால்…” என்றாள். அவள் சொல்வதை சுஜாதன் விழிகளால் காத்தான். “மானுட உள்ளத்தை எவரும் வகுத்துரைக்க இயலாது, இளையோனே. ஒருவேளை அவள் முன் அவ்வாறு வாள் தாழ்த்தி முடிஅளித்து நின்றால்தான் இவர் அழல் அடங்குமோ?” என்றாள். சுஜாதன் “ஒருபோதும் அது நிகழாது. உறுதி கொள்க, அரசி” என்றான். “ஏன்?” என்றாள். “அது பெண்டிரால் தேர்வு செய்யப்படும் வழி. ஆண்களுக்குரியது அல்ல” என்றான் சுஜாதன் “ஆணென்ற சொல்லால் முற்றிலும் உரைக்கப்படவேண்டியவர் அங்கர். அவர் சங்கறுத்து விழுந்து மறையக்கூடும், மடிந்து விழமாட்டார்.”

“இருக்கலாம். நான் அறிந்த அங்கர் கங்கைப்பெருக்கிலிருந்து குடத்தால் அள்ளிக்கொண்டு வந்து பூசையறைக்குள் வைத்த நீர்போல. என் கலத்தளவே ஆனவர்” என்றாள் விருஷாலி. சுஜாதன் தலைவணங்கி விலகிச்செல்ல அவள் கங்கையன்னையின் முகப்பில் மண்டபத்தின் கல்படியில் அமர்ந்தாள்.

bl-e1513402911361

ஹரிதர் அருகே வந்து “அரசரின் தேர் தென்மேற்கு வாயிலை அடைந்துள்ளது, அரசி” என்றார். நிமித்தநூலின்படி அந்த மாதத்திற்கு உரிய வாயில் அது என்று அப்போதுதான் விருஷாலி நினைவுகூர்ந்தாள். சேடியரை திரும்பி நோக்கிவிட்டு வளைந்த இடைநாழியினூடாக தென்மேற்கு வாயிலை நோக்கி சென்றாள். ஹரிதர் துணையமைச்சர்களுடன் வெளியே சென்று முற்றத்தில் நின்றார். மங்கல இசைக்கலங்களுடன் சூதர்களும் அணித்தாலங்களுடன் சேடியரும் வெளியே இருநிரைகளாக நின்றனர். வாயிலினூடாக அப்பால் தெரிந்த முற்றம் ஓவியத் திரைச்சீலை போலிருந்தது. அதன் மேல் விளிம்பிலிருந்து நீர்த்துளி முழுத்துச் சொட்டி வழிந்து அணுகுவதுபோல வெண்ணிறப் புரவிகள் பூட்டப்பட்ட வெள்ளித்தேர் அணுகி வந்தது. அதைத் தொடர்ந்து காவலரின் இரட்டைநிரை வெண்புரவிகளில் வந்தது.

தேர் முற்றத்தின் மையத்தில் வந்து வளைந்து நிற்க புரவிகள் தலைதாழ்த்தி மூச்சிரைத்து பிடரி சிலிர்த்தன. சகடம் முன்னும் பின்னும் ஆடி நிற்க அதன் கால் கீழே சக்கைகளை இரு ஏவலர் இட்டனர். இருவர் கொண்டுஅமைத்த படி மீது வெள்ளிக்குறடுகளை வைத்து இறங்கி முற்றத்தில் நின்ற கர்ணன் வெண்பட்டாடையும் வெள்ளிக்கங்கணங்களும் வெள்ளியாலான சரப்பொளி ஆரமும் அணிந்திருந்தான். வெண்கலக் குண்டலங்கள் அவன் அசைவில் ஒளி திரும்பி ஆடின. சிவதரும் இரு ஏவலரும் தொடர்ந்து வந்த பிறிதொரு தேரிலிருந்து இறங்கி அவனுக்குப் பின்னால் நின்றனர்.

ஹரிதர் கைகூப்பி முகமன் உரைத்து அழைத்து வர, வெண்பட்டுப்பாகைமேல் வெண்ணிற அன்னச்சிறகு சூடி வெண்முத்துமாலைகள் சுற்றிய மணிமுடி ஒளிரும் நிமிர்ந்த தலையுடன் கால் நீட்டிவைத்து கர்ணன் நடந்து வந்தான். உடல் தளர்ந்திருந்தாலும் அவள் விழிக்குள் இருந்த இளைய நடை அவனில் இருந்தது. நீண்ட கால்களென்பதனால் விரைந்து நடக்கையிலும் மெல்ல என்றே தோன்றும். அவனைச் சூழ்ந்து பிறர் தங்கள் குற்றுடலுடன் நடக்கையில் தெரியும் விரைவு அவனை மேலும் மெல்ல என காட்டும். அது அவன் எதையும் பொருட்டெனக் கொள்ளவில்லை என்று தோன்றச்செய்யும். அவனால் சினம்கொள்ளவோ வெடித்து நகைக்கவோ பாய்ந்து விசைகொள்ளவோ இயலாதென்றே உள்ளம் மயங்கும்.

ஆலயப் படிகளில் அவன் அணுகியபோது கல் நீர்மைகொள்ள அவன் அதில் மூழ்கி மறைந்ததுபோல் தோன்றியது. பின்னர் அவன் தலை கதிரெழுகை என கல்லுக்குள்ளிருந்து தோன்றியது. எழுந்து முழு உருக்கொண்டு பொருநையும் வையையும் இரு காவல்தேவதைகளாக நின்றிருந்த கல்வாயிலுக்குள் நின்றான், சட்டத்திற்குள் ஓவியம் என. கற்பரப்பில் குறடுகள் ஒலிக்க நடந்து வந்தபோது பெருகிக்கொண்டே இருந்தான். கைகூப்பி விழிதாழ்த்தி அவள் நின்றிருந்தாள். அவன் கால்கள் மிதித்த மண்ணில் தான் நின்றிருப்பதே அவளை மெய்ப்பு கொள்ளச்செய்தது. தோள்கள் இறுகி, கழுத்து இழுபட்டிருக்க இடத்தொடை துடித்துக்கொண்டிருந்தது. நெஞ்சில் ஒரு சொல் எஞ்சவில்லை.

அருகணைந்த கர்ணன் சற்று தயங்க விருஷாலி “அரசருக்கு பாத வணக்கம். இத்தருணத்தில் என் மூதன்னை தேவதைகள் என்னை வாழ்த்துக!” என்று முகமன் உரைத்தாள். “நன்று, நெடுநாளாயிற்று அணுக்கமெனக்கண்டு” என்றபின் கர்ணன் தொடர்ந்து நடக்க அவனுடன் நடக்கும்படி ஹரிதர் விழிகளால் அவளிடம் சொன்னார். அவன் குரல் அதே இளமையுடனிருப்பதை அவள் மீண்டுமொரு மெய்ப்பு தழுவிப்பரவ உணர்ந்தாள். அவனுக்குப் பின்னால் நடந்து சற்று தள்ளி நின்றாள். பொருநை அன்னையின் ஆலயக்கருவறை முகப்பில் அவன் கைகூப்பி வணங்கினான். பூசகர் சுடராட்டு காட்டி கொண்டுவந்த தழலில் கைதொட்டு விழி நிறைத்து பூசகர் அளித்த வெண்மலரை கைகளில் வாங்கி கண்களில் ஒற்றி குழலில் செருகிவிட்டு அடுத்து அமைந்த வையை அன்னையின் ஆலயத்தை நோக்கி சென்றான்.

அவனுக்குப் பின்னால் நடந்தபடி அவள் “இவர்கள் தென்றிசை நதிகள் என எண்ணுகின்றேன்” என்றாள். அச்சொற்களை அவன் கேட்டதுபோல் தெரியவில்லை. பொன்னி அன்னையின் ஆலயத்தில் அவன் வணங்கி நின்றபோது “காவிரி என்றல்லவா இவ்வன்னைக்குப் பெயர்?” என்றாள். அவள் தன் அருகே நடந்து வருவதை அப்போதுதான் உணர்ந்ததுபோல அவன் திரும்பிப்பார்த்தான். அவள் பேசவிழைவதை புரிந்துகொண்டான். எப்போதுமே எளிய ஒன்றில் ஐயம் எழுப்புவதே அவள் பேசத்தொடங்கும் முறை. “ஆம், தென்னிலத்துப் பெருநதி. சோழர்களின் குலக்கொடி. என் ஆசிரியருடன் அதன் கரைவரை சென்றுள்ளேன்” என்றான் கர்ணன்.

அருகமைந்த பெண்ணையின் ஆலயத்திற்குச் சென்று அவன் வணங்கியபோது அவளும் அருகே சென்று நின்றாள். அவன் அவள் அருகமைவை உணர்ந்து இயல்படைந்தான். பாலை அன்னையின் ஆலயத்தில் அவன் வணங்கி நின்றபோது அவள் “நான் தங்களிடம் சில சொற்களை உரைப்பதற்காக இங்கு காத்து நின்றேன்” என்றாள். “ஆம், உன்னை பார்த்தபோதே அதை எண்ணினேன்” என்ற கர்ணன் புன்னகைத்து “அச்சொற்களை நானும் உய்த்துணர்ந்துகொண்டேன்” என்றான். “உங்களுக்குத் தெரியாத ஒன்றை உளம் கொள்வது என்னாலும் இயல்வதல்ல” என்று விருஷாலி சொன்னாள். “அஸ்தினபுரியிலிருந்து குருகுலத்து மூத்தவர் துரியோதனரின் செய்தியுடன் இளையவன் சுஜாதன் இங்கு வந்திருக்கிறான்” என்றாள்.

“ஆம், இன்றுகாலை எவரோ சொன்னார்கள்” என்றபின் “இனியவன். அந்நூற்றுவரில் எனக்கு அவனே அணுக்கமானவன்” என்றான். “அதைவிட நீங்கள் அரசருக்கு அணுக்கமானவர் அல்லவா?” என்றபடி கோதையின் முற்றத்தில் நின்றாள். “என்ன செய்தி?” என்று கர்ணன் கேட்டான். “தங்களை அஸ்தினபுரியில் காண்பதற்கு அரசர் விழைகிறார். உடனழைத்துச் செல்லும்பொருட்டு சுஜாதன் வந்திருக்கிறான்” என்றாள். கர்ணன் நகைத்து “இந்தப் பொய்யை இங்கு நின்று சொல்சூழ்ந்து அமைத்தீர்கள்போலும்” என்றான். அவள் பதறி “இல்லை” என்றபின் தயங்கி “ஆம்” என்றாள். “என்னை அழைக்கும் உளநிலையில் இன்று அஸ்தினபுரியின் அரசர் இருக்க வாய்ப்பில்லை” என்று கர்ணன் சொன்னான். “அவர் எந்நிலையில் இருக்கிறார் என நான் நன்கறிவேன்.”

“அரசே இன்று அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் போர்ச்சூழலை தாங்கள் அறிந்திருப்பீர்கள். தாங்கள் இல்லையேல் அஸ்தினபுரி வெல்லப்போவதில்லை. அவர்கள் வென்றால் ஒருநாள் அவள் மும்முடி சூடி அமர, காலடியில் வாள் தாழ்த்தி அருகே நிற்கும் இழிநிலை தங்களுக்கு அமையக்கூடும். அதை அஞ்சியே சுஜாதன் இங்கு வந்திருக்கிறான்” என்றாள் விருஷாலி. விரிவாக எண்ணிச்சூழ்ந்த அனைத்தையும் ஓரிரு சொற்றொடர்களில் சொன்னதுமே இவ்வளவுதான் அது என்று தோன்றியது. கர்ணன் ஏதும் சொல்லாமல் துங்கையையும் கிருஷ்ணையையும் நர்மதையையும் வழிபட்டபடி முன்னால் சென்றான். அவள் “தங்கள் முடிவை இனி ஒத்திவைக்க இயலாது, அரசே” என்றாள்.

கர்ணன் திரும்பாமல் “போர்சூழ்கை நிகழ்கையில் வில்லுடன் நான் அங்கு செல்வேன். அங்கத்தின் அரசன் என்றோ, ஷத்ரியன் என்றோ என்னை அவர் அழைக்க வேண்டியதில்லை. எளிய படைவீரனாக எண்ணினும் அன்றி தேரோட்டும் சூதனேயாக எனினும் அவர் பொருட்டு படைமுகம் நிற்பது என் கடமை. தேவையெனில் அக்களம்பட்டு கடன் தீர்க்கவும் சித்தமாக உள்ளேன்” என்றான். “ஆனால் வேறு எதன்பொருட்டும் செல்லமாட்டேன். கொடுப்பதற்கன்றி கொள்வதற்காக எவர் முன்னாலும் நிற்கப்போவதில்லை.”

“தாங்கள் ஷத்ரியர் என படைமுகம் நிற்கவில்லையென்றால் தங்களிடம் தனிப்போர் கொள்ள பாண்டவர்கள் மறுக்கலாம். தாங்கள் போருக்குச்சென்றும் பயனிலாதாகும்” என்று விருஷாலி சொன்னாள். “இன்னும் சின்னாளில் அங்கு வேதப்பேரவை நிகழவிருக்கிறது. அதில்தான் இறுதி முடிவு எடுக்கப்படும். அதில் தாங்கள் பங்கேற்கவேண்டும்.” கர்ணன் “விருஷை, அங்கு ஷத்ரியப் பேரவை முடிந்துவிட்டது. படைமுகம் நிற்கவேண்டியவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இனி எவரும் அதில் செய்வதற்கு எதுவும் இல்லை” என்றான்.

அவள் அவன் குரலில் தன் பெயர் எழக்கேட்டு மீண்டும் மெய்ப்பு கொண்டாள். நீள்மூச்சுடன் நெஞ்சை வென்று மேலும் சொல்திரட்டி “மெய்யாக போர் அறிவிக்கப்படுவது அந்தணர் அதை ஏற்றபின்னர்தான், அரசே” என்றாள். “அதன் பின்னரே அஸ்தினபுரியின் அரசப்பேரவை கூடும். தாங்கள் அஸ்தினபுரியின் அரசப்பேரவைக்குச் சென்று அரசரிடம் பேசுங்கள். வேதம் காக்க வேள்விக்களத்தில் அரசத்துணைவரென நீங்கள் நின்றிருந்தால் படைக்களத்தில் பிறன் என்று எவரும் எண்ணமாட்டார்கள்.” அவன் நாவெடுப்பதற்குள் “இது உங்கள் பொருட்டு அல்ல, அவர் பொருட்டுதான். இல்லையேல் இளைய பாண்டவரை வெல்ல கௌரவர் தரப்பால் இயலாது” என்றாள் விருஷாலி.

கர்ணன் நிமிர்ந்து திரும்பி புன்னகைத்து “நீ சொல்வதும் அதற்கப்பால் எண்ணுவதும் எனக்கு புரிகிறது. ஆனால் இப்பிறவியில் எவரிடமும் எதையும் கேட்கப்போவதில்லை” என்றான். “ஆனால்…” என்று விருஷாலி சொல்ல “அது அவர்களின் தேவை என்று சொல்கிறாய். அதை அவர்கள் உணரட்டும், அவர்கள் என்னிடம் முறைப்படி கோரட்டும். அதன் பின் நாம் இதைப்பற்றி பேசுவோம்” என்றான். அவள் மேலும் சொல்ல வாயெடுக்க அவள் தலையை கையால் மெல்ல சுண்டி “உன் சிறிய சித்தம் இத்தனை பெரிய அரசுசூழ்கைகளுக்கு பீடமாவதை எண்ணினால் விந்தையாக உள்ளது. ஒரு காலத்தில் மணிமுடியும் அரியணையும் துன்புறுத்துகிறது என்றவள் நீ” என்றான்.

அவள் அவன் தொடுகையில் விழிநீர் கொண்டாள். தலைகுனிந்து புன்னகைத்து நின்றபோது அதுவரை எண்ணியதும் சொன்னதுமான ஒரு சொல்லும் அவளில் எஞ்சவில்லை. அவன் தொடுகை ஒன்றே அத்தருணத்தின் மெய் என நின்றது. கர்ணன் திரும்ப சிறு கனைப்போசையுடன் அப்பால் வந்து நின்ற சுஜாதன் “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான். கர்ணன் “இங்கு வந்திருக்கிறாய் என உணர்ந்தேன்…” என்றான். சுஜாதன் விருஷாலியின் கண்களை பார்க்க அவள் இல்லை என விழியசைத்துவிட்டு நோக்கை விலக்கிக்கொண்டாள். சுஜாதன் கைகூப்பியபடி கர்ணனை அணுகி “தங்களை இங்கு சந்திக்க வேண்டும் என்று எண்ணினேன், மூத்தவரே” என்றான். கர்ணன் அவன் தோளை கைகளால் வளைத்து உடலுடன் இறுக்கியபடி “மேலும் பெருத்திருக்கிறாய். அதாவது கையால் கதை தொட்டு நெடுநாள் ஆகிறது” என்றான்.

“அவ்வாறல்ல” என்று சுஜாதன் தயங்க “சரி, கதைசுழற்றும் பொழுதை விட உண்ணும் பொழுது சற்றே மிகுதி… வா!” என்றபடி அவன் தோளைத்தட்டி அழைத்துச் சென்றான். “மூத்தவரே, தாங்கள் என்னுடன் வந்தாகவேண்டும். தங்களை அழைத்து வருவதாக சொல்லிவிட்டு வந்தேன்” என்றான் சுஜாதன். “அவையில் நான் சிறுமைசெய்யப்பட்டேன் என்றால் என்ன செய்வாய்?” என்றான் கர்ணன். “என் உடைவாளை எடுத்து…” என்று தொடங்கிய சுஜாதன் தயங்கினான்.

“பிதாமகரோ ஆசிரியர் துரோணரோ சொல்மிஞ்சினால் உன்னால் என்ன செய்யமுடியும்?” என்றான் கர்ணன். “என் கழுத்தில் பாய்ச்சிக்கொள்ளத் தடையில்லை அல்லவா? அங்கேயே…” என்று தொடங்கிய சுஜாதனை மீண்டும் அணைத்து “அந்த இக்கட்டுக்கு உன்னை கொண்டுசெல்ல என்னால் முடியுமா என்ன?” என்றான் கர்ணன். சுஜாதன் மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்க “வேண்டாம். நீ என்ன சொன்னாலும் நான் ஒப்பப்போவதில்லை. நீ வந்தது எனக்கு நிறைவளிக்கிறது. இங்கிருப்பது வரை என்னுடனேயே இரு” என்ற கர்ணன் “வா, உள்ளே செல்வோம்” என்று அழைத்துச்சென்றான்.

வெண்முரசு வாசிப்பு முறை – ராஜகோபாலன்

முந்தைய கட்டுரைகலையில் மடிதல்
அடுத்த கட்டுரைகலை -கடிதம்