வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-20

wild-west-clipart-rodeo-31இளைய யாதவர் சொல்லப்போகும் மறுமொழிக்காக விதுரர் முகம்கூர்ந்து காத்திருந்தார். அவர் “விதுரரே, தாங்கள் முன்பு மறைந்த அரசர் பாண்டுவிடமிருந்து பெற்ற அஸ்வதந்தம் என்னும் அருமணி எங்குள்ளது?” என்றார். விதுரர் சற்று திடுக்கிட்டு பின் “ஏன் கேட்கிறீர்கள்?” என்றார். “அது இப்போது தங்களிடம் உள்ளது அல்லவா?” என்றார் இளைய யாதவர். “ஆம், அதில் மறைவென ஏதுமில்லை. என்னிடம் அது இருப்பது அனைவருக்கும் தெரியும்” என்றார் விதுரர் கடுமையான குரலில்.

இளைய யாதவர் புன்னகைத்து “நான் அதை நீங்கள் மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லவில்லையே?” என்றார். விதுரர் புருவம் சுளித்து நோக்க “நீங்கள் சென்று அதை இங்கே கொண்டுவர இயலுமா?” என்றார். “இப்போதா?” என்றார் விதுரர். “ஒரு கணம் போதும், இது இமைக்கணக் காடு” என்றார் இளைய யாதவர். விதுரர் “ஆம்” என்றார். “இங்கே தொடுங்கள்” என்றார் இளைய யாதவர். அவர் சொன்ன இடத்தில் சுட்டுவிரலை ஊன்றியதுமே விதுரர் தன் இல்லத்தில் இருந்தார்.

காலை முதலே அவர் அன்னை சிவை அமர்ந்திருந்த சாளரத்தினூடாக வெளியே நோக்கிக்கொண்டிருந்தவர் அருகே எவரோ வந்ததுபோல் உணர்ந்து திரும்பி நோக்கினார். மீண்டும் சாளரத்தினூடாக மேற்கு அரண்மனைச்சாலையை பார்த்தார். இரு யானைகள் கைகளில் சங்கிலிகளை தூக்கிக்கொண்டு நீராடிய கரிய உடல் மிளிர அசைந்தசைந்து வடக்குக் கோட்டைமுகம் நோக்கி திரும்பின. மிகத் தொலைவில் ஒரு பல்லக்கு சென்றுகொண்டிருந்தது. முன்மதியப் பொழுதின் கூசவைக்கும் வெயில் செம்மண் பரப்புகளில் எரிந்து நின்றிருந்தது.

எவரோ சொல்லி செவிகொண்டதுபோல் அவர் அஸ்வதந்தத்தின் நினைவை அடைந்தார். அந்த நினைவு எழும்போதெல்லாம் யாழ்தந்தியில் கைபட்டதுபோன்ற இனிய அதிர்வொன்றையே அவர் அடைவார். அன்று அரியதொன்றை எங்கோ மறந்துவைத்துவிட்ட நினைவு எழ திடுக்கிட்டு எழுந்தார். விரைந்த காலடிகளுடன் நேராக தன் அறை நோக்கி சென்றார். சுபோத்யனின் துணைவி சாரதை அவர் செல்வதை நோக்கியபடி எழுந்து அவர் ஆணைக்காக காத்து நின்றாள். அவர் அவளை பொருட்படுத்தாமல் தன் அறைக்கு சென்றார்.

அகல்விளக்கைப் பொருத்தி சுடர்நீட்டி கையில் எடுத்துக்கொண்டார். உடலெங்கும் பரவிய பரபரப்புடன் அருகிருந்த வைப்பறையைத் திறந்து உள்ளே சென்று கதவை மூடி தாழிட்டார். அறைக்குள் செறிந்திருந்த இருள் அலையடித்து விலகிய வெளியில் மரப்பெட்டிகளும் ஆமாடப் பேழைகளும் அமர்ந்திருந்தன. வேப்பிலைச்சருகின் நாற்றமும் தாழம்பூம்பொடியின் மணமும் கலந்த காற்று. அதற்கு இருளின் மணமும் இருந்தது. இருளுக்கு ஒட்டடையும் தூசியும் கலந்த பிசுபிசுப்பான மணம். எலிப்புழுக்கைகள். அல்லது வௌவாலா? சிற்றுயிர் ஒன்று காலடியில் கால்கள் பரபரக்க ஓடி பெட்டிகளுக்குள் மறைந்தது.

இருட்டு ஈரமான மென்துகில்போல உடலை தடுத்தது. சுடரசைவில் சுவர்கள் திரைச்சீலையென ஆடின. அவருடைய நிழல் பிறிதொருவர் என உடனிருந்தது. முருக்கமரத்தாலான இடை உயர விளக்குதண்டின்மேல் அகலை வைத்தார். ஆமாடப் பேழையின் செதுக்குகளில் செவ்வொளி ஈரமென பரவியது. அங்கு வந்து சிலகாலமாகியிருந்தது. எழுந்து சென்ற தருணத்தின் அடுத்த கணம் அது என உளம் மயங்கியது.

கால்மடித்து அமர்ந்து ஆமாடப் பேழையைத் திறந்து உள்ளிருந்த தந்தச்சிமிழை எடுத்து அதை கையால் வருடிக்கொண்டிருந்தார். பின்னர் அதை திறந்து உள்ளே நோக்கினார். அங்கு அருமணி இருக்கவில்லை. ஆனால் சில கணங்கள் அவர் சித்தம் அந்தக் காட்சியை உளம்கொள்ளவேயில்லை. சிமிழை திருப்பித் திருப்பி பார்த்தார். எதற்கு உள்ளே வந்தோம் என குழம்பியவர்போல மூடிய கதவை பார்த்தார். மீண்டும் சிமிழுக்குள் ஒழிந்திருந்த செம்பட்டுப்பரப்பை நோக்கினார். அதில் ஒரு வேறுபாடு இருக்கிறது என்னும் அளவிலேயே அவருடைய அகம் புரிந்துகொண்டது.

அதை மூடி உள்ளே மீண்டும் வைத்து பேழையின் மூடியை நோக்கி விழிகளை திருப்பியபோது ஊசியால் குத்தப்பட்டதுபோல் உடல் துடித்தது. அதன் பின்னரே அது ஏன் என உள்ளம் அறிந்தது. பாய்ந்து பேழையை நோக்கி குனிந்தார். பேழைக்குள் கைவிட்டு சிமிழை எடுக்கமுடியாமல் கை நடுங்கியது. இரு கைகளின் பத்து விரல்களாலும் பற்றியபோதும் கைநழுவி விழுந்துவிடுமென அகம் பதறியது. திறப்பதற்கு முந்தைய கணம் இவை எல்லாம் உளநடிப்பு, உள்ளே அஸ்வதந்தம் இருக்கும் என்று எண்ணினார். அந்நினைவை நீடிக்கவிடும்பொருட்டு சற்றுநேரம் திறக்காமலேயே வைத்திருந்தார். பின்னர் மெல்ல திறந்தார்.

நெஞ்சின் ஓசை செவிகளில் முழங்கியது. கண்கள் வெம்மைகொண்டு நோக்கிழந்தவை போலாயின. மூச்சில் நெஞ்சு ஏறியிறங்கியது. உள்ளே இருக்கும், இல்லாமலிருக்க வாய்ப்பே இல்லை. அதை அங்கே கண்டடைவதன் உவகையை அக்கணம் நடித்தறிந்தார். அதில் திளைத்துக்கொண்டிருந்தமையால்தான் அதை திறக்க துணிவு வந்தது. ஒழிந்த உட்பக்கத்தைப் பார்த்ததுமே உடலெங்கும் வெம்மை நிறைந்த காற்று வந்து அலையென அறைந்தது. மறுகணம் வியர்வை பெருகி உடல் குளிர்ந்து சிலிர்த்தது. தொடைகள் அதிர்ந்தமையால் அவர் கால்மடித்தமர்ந்த நிலையிலிருந்து பின்னால் சாய்ந்து விழுந்துவிட்டார்.

கையூன்றி எழுந்து விலங்குபோல் மொழியிலா ஒலியால் கூவியபடி கதவின் தாழை திறந்தார். அந்த ஓசை தலைமேல் அறைய நிலைமீண்டு அறையை திரும்பிப் பார்த்தார். எடுத்தபோது எங்கேனும் விழுந்திருக்கும். அந்தப் பேழைக்குள் விழுந்துகிடக்கவே வாய்ப்பு. அவர் விளக்கை மீண்டும் தண்டின்மேல் வைத்துவிட்டு ஆமாடப் பேழையை திறந்தார். உள்ளிருந்து சிமிழை எடுத்தபோது மீண்டுமொரு முறை திறந்து பார்க்கவேண்டுமென்று தோன்றியது. திறப்பதற்கு முந்தைய கணம் உள்ளே அஸ்வதந்தம் செவ்வொளியுடன் இருப்பதை உளத்தால் கண்டு உவகையில் எழுந்தார். திறந்தபோது அங்கு அது இல்லை என்பது முன்போல் அதிரச் செய்யவில்லை. வெறுமையின் ஏக்கமே உள்ளத்தை நிறைத்தது.

சிமிழை நன்றாக நோக்கிவிட்டு இடக்கை பக்கம் வைத்தார். பேழைக்குள் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து நன்றாக நோக்கி வலப்பக்கம் பரப்பினார். உள்ளே தாழைமடல்கள் வைக்கப்பட்டு மடிக்கப்பட்டு மென்துகிலால் சுற்றப்பட்ட பட்டாடைகள். அவை சுருதைக்குரியவை. அவர் அவளை மணம்கொண்டபோது அவள் தந்தை தேவகரால் அளிக்கப்பட்டவை. பட்டு வாழையிலைக்குருத்துபோலிருந்தது. பட்டை மென்மையாக வருடினார். எடுத்து முகர்ந்துபார்த்தார். தாழைக்குடலையின் பூம்பொடியின் மணம் கொண்டிருந்தன.

இளமையில் சுருதையின் கன்னங்களில் அந்த மணம் இருந்தது. அவள் முகச்சுண்ணத்துடன் தாழைப்பொடி சேர்ப்பதுண்டு. அவள் முகம் நீள்வட்டவடிவானது. அவளுடைய மாநிறம் இளமையில் கன்னங்களிலும் தோள்களிலும் தேய்க்கப்பட்ட செம்புபோல் ஒளிகொண்டிருந்தது. பெரிய இமைகள் கொண்ட விழிகள். நாணத்தால் அவை சரிகையில் அவள் ஊழ்கத்திலமைவதுபோலிருக்கும். ஆனால் உள்ளம் அவள் முகத்தில் நுண்ணிய வண்ண மாறுதல்களாக, அசைவுகளாக ஓடிக்கொண்டிருக்கும். அவளுடைய நடுவகிடு. அது காலம் செல்லச்செல்ல விரிந்துகொண்டே வந்தது. நெற்றியின் இரு சிறுமுழைகள். கூரிய சிறுமூக்கு.

அவர் மிக அண்மையிலென அவளை உணர்ந்தார். நெடுநாட்களுக்குப்பின் அவளுடைய எழுகை. எப்போதேனும் புலரியின் அரைவிழிப்பில் நெஞ்சுகுழையும் ஏக்கமென அவள் நினைவு வருவதுண்டு. அரிதாகவே அவள் கனவுகளில் தோன்றினாள். எப்போதும் மைந்தரின் அன்னையென எங்கேனும் ஏதேனும் செய்துகொண்டிருந்தாள். முதுமகள் என அமர்ந்திருந்தாள். இளமைகொண்ட சுருதை பிறிதொருத்தி என எங்கோ மறைந்துவிட்டவள். அவள் கழுத்தின் மென்மை. கைவிரல்களின் ஈரம். நரம்புகள் புடைத்த மேல்கைகள். முழங்கையின் சிறு வடுக்கள்.

நெடுநேரம் கழித்தே அவர் அவள் நினைவுகளில் அலைந்துவிட்டிருப்பதை உணர்ந்தார். அஸ்தினபுரிக்கு வந்தபின்னர் சுருதை மூன்றுமுறை மட்டுமே உத்தரமதுராபுரிக்கு சென்றிருந்தாள். சுபோத்யனையும் சுசரிதனையும் அங்குதான் ஈன்றாள். அதன்பின் தேவகரின் மறைவுக்கு சென்றாள். “உனக்கு உன் நகரிமேல் பற்றில்லையா?” என்றார். “பெண்களுக்கு நிலம் மீது பற்று இருப்பதில்லை” என்றாள். “ஏன்?” என்றார். “அவள் நிலத்தை அறிவதேயில்லையே” என்றாள். அவர் ஆம் என தலையசைத்தார்.

பேழைக்குள் இருந்த சிறிய சந்தனப்பெட்டிகளில் சுருதையின் அணிகள் இருந்தன. பெரும்பாலான அணிகளை அவர் தன் இரு மருமகள்களுக்கும் அளித்துவிட்டிருந்தார். அவளுடைய பொற்தாலியும் கருகுமணிமாலையும் சிலம்புகளும் கணையாழியும் மட்டுமே இருந்தன. நெடுங்காலம் அணியப்படாதிருக்கையில் நகைகள் பொருளிழந்துவிடுகின்றனவா என்று எண்ணிக்கொண்டார். அவை ஒளி மங்கலடைந்து மஞ்சள்நெற்றுகள்போல தோன்றின.

அவர் அவற்றை மீண்டுமொருமுறை நோக்க தயங்கினார். ஆனால் விழிதிருப்பியதுமே சுருதையின் தாலி கண்ணுக்குள் நிற்பது தெரிய திரும்பி நோக்கி அதை எடுத்தார். அவளுடைய முலைகளுக்கு நடுவே அதன் அணிக்குமிழிகள் கிடந்ததை நினைவுகூர்ந்தார். கூரிய வலி என ஒன்றை உணர்ந்தார். திரும்பிச்செல்ல முடியாத காலம். எதிர்காலம் எத்தனை அப்பாலிருந்தாலும் அணுகிவிடக்கூடியது. என்றோ. ஒருபோதும் திரும்பநிகழாதது இறந்தகாலம். மிகமிக எளிய எண்ணம். ஆனால் அகவைமுதிர்வில் அதைப்போல விந்தையானதும் அச்சுறுத்துவதும் துயர்நிறைப்பதுமான எண்ணம் வேறில்லை.

அவர் உள்ளத்தைக் கலைத்து விலக்கிக்கொண்டு சுவடிக்கட்டுகளை வெளியே எடுத்தார். காவியங்கள், நெறிநூல்கள், அரசவரலாறுகள், தொல்கதைகள். அவருடைய அகத்தின் வளர்ச்சியை அவை காட்டுவனபோல தோன்றியது. ஏழு கட்டுகளாகக் கிடந்த தொல்கதைத் தொகுதியை எடுத்தார். பராசரரின் புராணகதாமாலிகா. அஸ்வகரின் சப்தகதா மஞ்சரி. உக்ரசேனரின் கதாசம்கிரகம். ஒவ்வொன்றாக வருடிநோக்கி அப்பால் வைத்தபின் அரசவரலாறு நூலை எடுத்ததுமே அது தீர்க்கதமஸின் கொடிவழிப் பட்டியலான பஞ்சராஜ்யவைபவம் என தெரிந்தது. விழியற்றவரின் குருதிவழி. அவர் அதை அப்பால் வீசினார்.

நெறிநூல்களில் ஒன்றை கைபோனபோக்கில் எடுத்தார். லகிமாதேவியின் விவாதசந்த்ரம். முதிரா இளமையில் தற்செயலாக அவர் கண்டடைந்த தொல்நெறிநூல் அது. அப்போது அந்நூல் வழிதவறி நகருக்குள் நுழைந்த காட்டுயானை என அவர் கற்ற அனைத்தையும் சிதறடித்து பெரும் கொந்தளிப்பை அளித்தது. அதை அவர் சொல் சொல்லென உளப்பாடம் செய்தார். மீளமீள எண்ணி நோக்கினார். அத்தனை ஆண்டுகளில் பலநூறுமுறை அதை படித்திருக்கிறார். பல்லாயிரம் முறை எண்ணியிருக்கிறார். வேறெந்த நெறிநூலும் அவரை அந்த அளவுக்குக் கவர்ந்து ஆட்கொண்டதில்லை.

அதில் அப்படி என்ன இருக்கிறது என பலரும் அவரிடம் கேட்பதுண்டு. முன்பெல்லாம் அவ்வினாவால் ஊக்கமடைந்து சொல்பெருக்கத் தொடங்குவார். பின்னர் அவர் அந்நூலையே மிகுதியாக உசாத்துணை கொள்வார் என அனைவரும் அறிந்துவிட்டிருந்தனர். பீஷ்மர் வேடிக்கையாக “இதைப்பற்றி லகிமாதேவி கூறுவதென்ன?” என்று கேட்பதுண்டு. அவரைப்போலவே சௌனகருக்கும் உகந்த நூல் அது. இருபுறமும் லகிமாதேவி பிரிந்து நின்று களம்காணப்போகிறாள். அவ்வாறு பாரதவர்ஷத்தில் எத்தனை களங்களில் அவள் குருதி பெருக்கி பலிகொண்டிருப்பாள்!

அவர் சுவடிகளை கைகளால் வருடிக்கொண்டிருந்தார். நெறிநூல்களில் அனைத்துவகையான போர்களையும் கவர்தல்களையும் கொலைகளையும் நெறியென வகுப்பது அது ஒன்றே. பெண்களை வன்புணர்வதும், அந்தணரையும் ஆக்களையும் கொல்வதும், அன்னையை தலைகொய்வதும்கூட அந்தந்தத் தருணங்களில் அரசனுக்கு அழகே என லகிமாதேவி வகுத்திருந்தாள். அவள் நோக்கில் குடிகளின் விழைவுகள், வஞ்சங்கள், பித்துகள், தீங்குகள் அனைத்தும் அரசனால் கவரப்பட்டு தன்னுடையதென ஆக்கப்படவேண்டும். வேட்டைக்குச் செல்பவனின் கையின் வேல் என, அவன் தன் குடிகளின் கூர் என அமையவேண்டும். ஊர்ப்பேய்களை ஒழித்து கொண்டுசென்று ஆணியறைந்து நிறுத்தும் தென்புலத்து ஆலமரம்.

காட்டுவிலங்குகளின் நெறி என அதை சொல்வதுண்டு. அவருக்கு நெறிநூல் கற்பித்த ஆசிரியரான காஸ்யப விவஸ்தர் “இந்நிலத்தில் தொல்காலத்தில் பெண்டிரே அரசியர். ஆண்கள் தொண்டரும் வீரரும் மட்டுமே. அன்றிருந்த நெறிகளை சொல்வது விவாதசந்த்ரம். லகிமாதேவி தொல்நிலமான காசியில் அரசகுடியில் பிறந்தவர். பிறவியிலேயே நெற்றிநடுவே ஒற்றைவிழி மட்டும் கொண்டிருந்தார். ஆகவே காசித்தலைவனின் மண்துளி என வணங்கப்பட்டார். மணமாகாமல் கன்னியென்றே முதுமை எய்தினார். கங்கைக்கரையில் கன்னிமாடம் அமைத்து அங்கே வாழ்ந்தார். நூலாய்தலையே நாளெனக் கொண்டிருந்த அவர் உடலில் தொல் அன்னையர் கூடி எழுதிய ஸ்மிருதி இது என்பார்கள்” என்றார்.

அவர் புன்னகையுடன் அதை அப்பால் வைத்தார். “எந்தப் பெண்ணும் இத்தகைய ஒன்றையே எழுதுவாள், ஆசிரியரே” என்று அவர் சொன்னபோது காஸ்யப விவஸ்தர் “என்ன சொல்கிறாய்?” என்று சினத்துடன் கேட்டார். “நிஷாதர்களின் கொடும்மற்போர்களில் இதை கண்டிருக்கிறேன். மல்லன் எதிர் மல்லனின் நெஞ்செலும்பை உடைத்து வெறும்கையால் குருதிக்குலையை பிழுதெடுக்கையில் பெண்களின் கண்கள் அனல்கொண்டு மின்னும். அவர்கள் காமத்தில் வெம்மைகொண்டு புளைவதைப்போல் தோன்றுவர்” என்றார். “உளறாதே” என ஆசிரியர் கைவீசினார். “நாம் மானுடரைப்பற்றி பேசுகிறோம். அவர்களில் எழும் தெய்வங்களைப்பற்றி அல்ல.”

அவர் சுவடிக்கட்டிலிருந்து காவியங்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார். பராசரரின் தேவிஸ்தவம். சூதரான லோகாக்‌ஷன் அவருடைய முதிரா இளமையில் அளித்த பூர்ஜப்பட்டைச் சுவடி. அதை தொட்டதுமே உள்ளம் புரண்டு மறுபக்கம் எழ அவர் முற்றிலும் பிறிதொருவர் என்றானார். தொட்டுத்தொட்டு எடுத்த சுவடியை படித்தார். “தேவி, உன் விழிகள் ஒளியாலானவை. உன் உதடுகள் இசையாலானவை. உன் மார்புகளோ அமுதத்தாலானவை. ஆனால் அடியவன் உன் பாதங்களையே பேரழகாக எண்ணுகிறேன். என் புன்தலையை தன் வாசல்படியாகக் கொண்டு மிதித்து உள்நுழைபவை அல்லவா அவை?”

பலநூறுமுறை படித்த வரிகள். ஒவ்வொருமுறையும் இந்தப் பக்கத்தைதான் கைகள் திறந்துகொள்கின்றனவா? அடிக்கடி திறப்பதனால் இந்த ஏடு அதற்கென விரிந்திருக்கிறதா? ‘சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்!’ எவரோ மென்குரலில் பின்னாலிருந்து அதை சொன்னதுபோலிருந்து. அவர் உடல் விதிர்ப்பு கொண்டது. ‘சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்!’ செவி வெடித்து உடைய திசைகள் அச்சொல்லை முழங்கின. எவர்? எவர்? தேவி, உன் காலடிகள் பதிந்த இப்பீடம் அடுகலமென கொதிக்கிறது. உன் விழிதொட்ட இச்சுனை எரிகுளமென்றாகிறது. உன் ஒளிநிறைந்த இவ்வெளி சுடர்விளக்காகிறது. ‘சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்!’ ஒவ்வொரு பருப்பொருளும் எழுந்து சூழ்ந்துகொண்டன. ‘இவையனைத்தும் நானே. நானன்றி முழுமுதன்மையானதென ஏதுமில்லை.’

wild-west-clipart-rodeo-31நினைவு மீண்டபோது அவர் மஞ்சத்தில் கிடந்தார். அருகே சுசரிதன் குனிந்து நோக்கி நின்றிருந்தான். “தந்தையே…” என்றான். அவர் விழிகள் அலைபாய அவனை நோக்கினார். உதடுகள் ஓசையின்றி அசைய தொண்டைமுழை ஏறியிறங்கியது. விந்தையானதோர் உணர்வெழுந்து உடல் உலுக்கியது. நரையோடிய கரிய முடிச்சுருள்கள் தோள்களில் விரிந்திருக்க அவர் குனிந்து நரைத்த முடிச்சுருள்களும் மூக்குபுடைத்த வற்றிய முகமும் கூடுகட்டிய நெஞ்சும் கொண்ட ஒரு பிணத்தை நோக்கிக்கொண்டிருந்தார். பலநாட்களான மட்கிய பிணத்தில் விழிகள் மட்டும் அசைந்தன.

அவரிடமிருந்து எழுந்த முனகல் அவனை மேலும் அணுகிநோக்கச் செய்தது. “நீர் அருந்துகிறீர்களா, தந்தையே?” என்றான். ஆம் என தலையசைத்தார். அவன் திரும்பி தன் மனைவியை நோக்க அவள் எடையற்ற நெற்றுக்குடுவையில் குளிர்நீரை அவனிடம் அளித்தாள். அவன் அதை மெல்ல அவர் வாயில் ஊற்றினான். முதல் மிடறை அருந்தும்போதுதான் நெஞ்சுக்குள் எவ்வளவு அனல் இருக்கிறதென்று அவர் உணர்ந்தார். குடிக்கக் குடிக்க உடல் குளிர்ந்து நிறைந்தது. போதும் என கைகாட்டிவிட்டு கண்களை மூடினார். விழிநீர் காதுகளை நோக்கி வழிந்தது.

“அறைக்குள் நீங்கள் சென்றதை மூத்தவரின் துணைவியார் பார்த்தமையால் நன்று நிகழ்ந்தது, தந்தையே. நீங்கள் நெடும்பொழுது வெளிவராதிருக்கக் கண்டு கதவிடுக்கு வழியாக நோக்கினோம். விழுந்து கிடந்தீர்கள். வாளால் தாழை நெம்பித் திறந்தோம்” என்றான் சுசரிதன். அவர் “ஆம்” என்றார். “என்ன ஆயிற்று?” என்று அவன் கேட்டான். “மறைந்த அரசர் பாண்டு எனக்களித்த அருமணி ஒன்றுண்டு.” அவன் “ஆம், அஸ்வதந்தம் என்று அதற்கு பெயர். அதை நான் இருமுறை கண்டிருக்கிறேன். அன்னை எடுத்துக்காட்டினார்கள்” என்றான்.

வியப்புடன் விதுரர் “அன்னையா?” என்றார். “ஆம், அன்னை அடிக்கடி அதை எடுத்துப் பார்ப்பதுண்டு” என்றான் சுசரிதன். அவர் வியப்புடன் இமைக்காமல் நோக்கியபடி “என் பேழையைத் திறந்தா?” என்றார். “ஆம், அவரிடம் ஒரு திறவுகோல் இருந்தது.” விதுரர் பெருமூச்சுடன் “இருந்திருக்கலாம்” என்றார். சுசரிதன் பிழையாக எதையோ சொல்லிவிட்டோம் என உணர்ந்தான். அதை நிகர்செய்யும்பொருட்டு இயல்பாக பேசலானான். “அன்னை அதை நோக்கி நெடுநேரம் அமர்ந்திருப்பதுண்டு… சில தருணங்களில் அதை நோக்கி அழுவதையும் கண்டிருக்கிறேன்.”

ஒருமுறை நானும் மூத்தவரும் அதை வாங்கி பார்த்தோம். மூத்தவர் அதை தன் நெற்றியில் வைத்து “என்னைப் பார்த்தால் அரசன் போலிருக்கிறதா?” என்றார். நான் “ஆம், மெய்யாகவே அரசன் போலிருக்கிறீர்கள், மூத்தவரே” என்றேன். சிரித்தபடி கைகளைத் தட்டி “அரசன்! அரசன்!” என்று கூவினேன். ஆனால் எண்ணியிராக் கணத்தில் அன்னை சினந்து மூத்தவரை அறைந்து அருமணியைப் பிடுங்கி உள்ளே வைத்து பூட்டினார். என்னையும் மூத்தவரையும் சீற்றத்துடன் பிடித்துத் தள்ளி “செல்க!” என்றார்.

நான் அவரை நோக்கி கண்ணீருடன் “நாங்கள் என்ன பிழை செய்தோம்?” என்றேன். “செல்க!” என அன்னை நரம்புகள் இறுகித்தெரிய கூச்சலிட்டார். “போகிறோம். ஆனால் நீங்கள் அழைத்தாலும் இனி நாங்கள் இந்த மணியை பார்க்கவே மாட்டோம்” என்று சொல்லி மூத்தவரை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டேன். அன்று மாலை எங்கள் அருகே வந்து அமர்ந்த அன்னை சொன்னார், அந்த மணி அஸ்தினபுரி என்னும் நாட்டுக்கு நிகர்விலையென அளிக்கப்பட்டது என்று. அந்தத் தருணத்தை விளக்கி “அதை வைத்திருப்பதனால் நீங்களும் அரசரே” என்றார். “நீ அரசரின் முதல் மைந்தன், முடிசூடி ஆளவேண்டியவன்” என்று சொல்லி மூத்தவரின் தலையை வருடினார்.

“அதெப்படி ஒரு மணி அரசு என ஆக முடியும்?” என நான் கேட்டேன். “ஒரு சிறுவிதை பெரிய ஆலமரமாக ஆவதுபோல” என்றார் அன்னை. மூத்தவர் “அந்த அருமணியை நட்டால் அது முளைக்குமா, அன்னையே?” என்றார். அன்னை “வெறுமனே முளைக்காது. அதற்குரிய தவம் செய்யப்படவேண்டும்” என்றார். “முளைத்து அஸ்தினபுரியைப்போன்ற நாடாகிவிடுமா?” என்று நான் கேட்டேன். “அதைவிடப் பெரிய நாடாகக்கூட ஆகலாம். எவரறிவார்?” என்று அன்னை சொன்னார். நானும் மூத்தவரும் அன்னையின் உடலுடன் ஒட்டிக்கொண்டு நெடுநேரம் அமர்ந்திருந்தோம்.

தந்தையே, மூத்தவரின் உள்ளத்தில் அச்சொற்கள் ஆழப் பதிந்துவிட்டன. அவர் யாதவபுரிக்குச் சென்றது அங்கே அமைச்சராகவேண்டும் என்பதற்காக அல்ல. யாதவபுரி வளர்ந்து பெருகும் நாடு. அவர்களின் விரிநிலத்திற்குள் ஒரு கைப்பிடி நிலமேனும் தனக்கு எனக் கிடைக்கும் என அவர் கருதினார். ஒருநாளேனும் ஒரு நிலத்திற்கு அரசன் என முடிசூடி அமரவேண்டும் என்று விழைந்தார். “அன்று என் முடியில் இந்த அருமணி அமையும். என் மைந்தர்கள் என்றோ ஒருநாள் அஸ்தினபுரிக்கு இணையான முடி ஒன்றுக்கு உரிமைகொள்வார்கள். அஸ்வதந்தம் என்னை தெரிவுசெய்திருப்பது அதனால்தான்” என்றார்.

“இன்று இளைய யாதவர் அரசுதுறந்த பின்னரும் மூத்தவர் யாதவர்களுடன் இருப்பது அக்கனவால்தான்” என்றான் சுசரிதன். விதுரர் பெருமூச்சுவிட்டு “அந்த அருமணி இப்போது எங்கிருக்கிறது?” என்றார். விழிகளில் திகைப்புடன் “இங்குதான், அதை எவரும் எடுக்கவில்லை” என்றான் சுசரிதன். விதுரர் உதடுகளை இறுக்கியபடி நீர்மைபடர்ந்த விழிகளால் நோக்கி தாழ்ந்த குரலில் “அறிவிலி, அது அங்கு இல்லை. இத்தனைபொழுது நான் அதைத்தான் தேடினேன்” என்றார்.

சுசரிதன் “அல்ல, தந்தையே. என்னால் உறுதியாக சொல்லமுடியும். மூத்தவர் அந்த அருமணியை தொடவில்லை. அவர் அதை அஞ்சவும் செய்தார். இது நஞ்சுத்துளி. இப்பேழைக்கு வெளியே வந்தால் நம் குடியை எரித்தழிக்கும் என்று அவர் என்னிடம் சொன்னார். இத்தகைய மணி நம்மிடமிருப்பது தெரிந்தால் அக்கணமே நாம் அனைத்து அரசர்களுக்கும் எதிரிகளாகிவிடுவோம் என்றார். நமக்குரிய நிலமும் செங்கோலும் இன்றி இதை இப்பேழைவிட்டு வெளியே எடுக்கலாகாதென்றார்” என்றான்.

விதுரர் “அதைச் சொன்ன கோழை எளிய சூதன்மகன். அரசுக்கு விழைவுகொண்டவன் யாதவக்குருதியினன். அருமணியை எடுத்துச்சென்றது இரண்டாமவனே. ஆம், ஐயமே இல்லை” என்றார். “தந்தையே, நீங்கள் இத்தருணத்தில் அவரை வெறுக்க விழைகிறீர்கள்” என்று சுசரிதன் சொன்னான். அச்சொல்லால் சினம் பற்றிக்கொள்ள உரத்த குரலில் “அவ்வாறெனில் அந்த அருமணி எங்கே?” என்றபடி விதுரர் கையூன்றி எழுந்தார். “அந்த அறைக்குள் இருந்து அது எங்கே சென்றது?”

சுசரிதன் “அது அங்குதான் இருக்கும்… எங்கேனும் விழுந்திருக்கும். நான் தேடிப்பார்க்கிறேன்” என்றான். “அது அருமணி என்பதனாலேயே ஒருபோதும் கைதவறி எங்கும் விழாது. விழி அதை அறியாமல் போகாது. அந்த அறைக்குள்ளோ பேழையிலோ அது இல்லை” என்றபோது விதுரரின் குரல் மேலும் உயர்ந்து நடுங்கியது. “அது எப்போதும் எவரேனும் ஒருவரின் கையில்தான் இருக்கும். அருமணிகள் எவரையேனும் ஆளாமல் ஒருகணமும் அமைவதில்லை.”

“தந்தையே…” என சுசரிதன் கைநீட்டி சொல்லெடுக்க அதைத் தடுத்து “அதை அவன் எடுத்துச்சென்றான். இன்றுள்ள அரசியல்கலங்கலில் அதை தூண்டிலாக்க எண்ணுகிறான்… அவன் அதைக்கொண்டு என்ன செய்வான் என நான் அறிவேன்” என்றார் விதுரர். சுசரிதன் “கசப்பைக் கொட்ட விழைகிறீர்கள், தந்தையே… நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அருள்கூர்ந்து சற்றே பொறுங்கள். நான் தேடிப்பார்க்கிறேன். நிருத்யையிடமும் சொல்கிறேன்… இன்றே அந்த மணியைத் தேடி எடுத்து உங்கள் கைகளில் அளிக்கிறேன்” என்றான்.

“அவனிடம் நான் உடனே அவனை சந்திக்கவேண்டும் என்று சொல். இப்போதே செய்தி செல்லவேண்டும்” என்றார் விதுரர். எழுந்து நின்று தன் தலைப்பாகைக்காக கைநீட்டியபடி “அவன் அதை எடுத்துச்சென்றிருந்தால் அவனை அஸ்தினபுரியின் கழுவிலேற்ற ஆணையிடுவேன். அவனுக்கு அதற்கு உரிமையில்லை. அவனுக்கு அதை நான் அளிக்கவில்லை. என் மூத்தவரால் எனக்களிக்கப்பட்ட கொடை அது” என்றார். “அதை முளைக்க வைத்தால் நாடு எழாது என நானும் அறிவேன்” என சிவந்த முகத்துடன் சுசரிதன் சொன்னான்.

“என்ன சொல்கிறாய்?” என்று திகைப்புடன் விதுரர் கேட்டார். “அதன் பொருளென்ன என்று அறிவேன். என் அன்னை அதை எடுத்து நோக்கி ஏன் ஏங்கினாள் என்றும்” என்று அவன் அவர் விழிகளை நோக்கி சொன்னான். பதறி விழிவிலக்கிய விதுரர் “நான் உன்னிடம் எதையும் பேச விழையவில்லை. அந்த அருமணி என் கைகளுக்கு வந்தாகவேண்டும்…” என்றார். “தந்தையே, மூத்தவருக்கு செய்தி அனுப்புகிறேன். நானும் நிருத்யையும் இந்த இல்லத்தை முழுக்க தேடிப்பார்க்கிறோம். தாங்கள் அமைதியாக இருங்கள்” என்றபின் சுசரிதன் நிருத்யையிடம் “செல்க… நான் அறையில் தேடிப்பார்க்கிறேன். நீ இல்லம் முழுக்க நோக்கு” என்றான்.

“எங்கும் நோக்கவேண்டியதில்லை. அது இப்போது அரசியல்பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும்…” என்று விதுரர் கூவினார். “அவனை நான் கழுவேற்றுவேன்… இது திருட்டு… இதற்கான தண்டனை அதுதான்!” தலைப்பாகையை வைத்துக்கொண்டு இடைநாழி நோக்கி சென்றார். “இப்போதே அந்த மணியை நான் அஸ்தினபுரியின் அரசருக்கு அளிக்கிறேன். அதை தேடிக் கண்டடைந்து திருடிச்சென்றவனை கழுவிலேற்ற அதன்பின் துரியோதனன் கடமைப்பட்டவன்… ஆம், அது என் மணி. நான் அளிப்பவருக்கு மட்டுமே உரியது.”

மறுமொழி சொல்லாமல் சுசரிதனும் நிருத்யையும் விலகிச்சென்றனர். விதுரர் நிலைகொள்ளாமல் கைகள் பதறி அலைய சுற்றிவந்தார். சிற்றறைக்கு வெளியே நின்று உள்ளே விளக்குகள் பொருத்திவைத்து தேடிக்கொண்டிருந்த சுசரிதனிடம் “திருடியது எவர் குருதி என அறிவேன். அவனில் எழுபவள் அவள். என்றும் அவள் என்னிடம் நிறைவற்றிருந்தாள். உத்தரமதுராவின் தேவகனின் மகள். முடியுரிமைகொண்ட இளவரசி. நான் சூதன், அடுமனைப்பெண் சிவைபெற்ற மைந்தன்” என்றார். அவன் அவரை வெறுமனே நோக்கிவிட்டு திரும்பினான். “உங்கள் உள்ளங்களில் அவள் நிறைத்துவிட்டுப்போன நஞ்சு என்ன என்று அறிவேன்… நான் அறிவிலி அல்ல” என்றார் விதுரர்.

சினத்துடன் சாளரத்தருகே சென்று அமர்ந்து உடனே எழுந்து திரும்பி வந்து மூச்சிரைக்க கைவீசி “ஆம், நான் அறிவேன். அனைவரையும் அறிவேன். உன் உள்ளமென்ன என்று அறிவேன். உங்களுக்கு இது ஒரு முளைக்காத விதை. எனக்கு என் மூத்தவரின் இனிய புன்னகை. அதை நீங்கள் உணரமுடியாது” என்றார். பற்கள் கிட்டிக்க கைகளை இறுக்கி “எனது பொருள் அது. அதை நான் உயிருடன் இருக்கும்வரை எவரும் உரிமைகொள்ளப்போவதில்லை. இக்கணமே அது என்னிடம் வந்தாகவேண்டும்… ஆம், இப்போதே” என்று கூவினார். “இல்லை. இதை திருடியவள் அவள். உங்கள் அன்னை. என் பொருளை நானறியாமல் திருடினாள். அவளை எரித்த குழிமேட்டில் சென்று இதை சொல்வேன்… என் பொருளை திருடியவள் அவள்.”

சுசரிதன் கதவை ஓசையுடன் திறந்து வெளியே எட்டிப்பார்த்து சினத்தால் சிவந்த, வியர்த்து ஈரமான முகத்துடன் “போதும், உங்கள் சொல் எல்லைமீறிச் செல்கிறது” என்றான். “இது எதன்பொருட்டு அளிக்கப்பட்டது என்று எவர் அறியமாட்டார்கள்? இது ஆணையிட்டு மஞ்சத்திற்கு இழுத்துக்கொண்டு செல்லப்பட்ட சிவைக்கு அளிக்கப்பட்ட ஊதியம்… அவள் கருவறையிலிருந்து சொட்டிய குருதி” என்றான். “அடேய்…” என கையை ஓங்கியபடி விதுரர் முன்னால் செல்ல அவன் வெளியே வந்து “அடிக்க விழைகிறீர்களா? அடியுங்கள்” என்றான்.

அவர் கைதளர்ந்து மூச்சிரைக்க “நான் செல்கிறேன். இங்கிருந்து செல்கிறேன்… எவருக்காகவும் நான் இல்லை” என்றார். உடைந்த குரலில் “ஒவ்வொருவராலும் தோற்கடிக்கப்படுகிறேன். ஆம், என் அன்னை என்னை சிதறச்செய்தாள். என் துணைவி என்னைக் கடந்து உளம் சென்றிருந்தாள் என இப்போது அறிகிறேன். வேண்டாம், தேடவேண்டாம். அது தொலைந்ததாகவே இருக்கட்டும். அது கிடைத்தால்கூட நான் தொடமாட்டேன். அது குருதி… என் குருதி” என்றார்.

“தந்தையே…” என சுசரிதன் குரல் கனிந்தான். கைவீசி அவனை விலக்கி “வேண்டியதில்லை. எனக்கு இனி அது தேவையில்லை” என்றபடி விதுரர் மேலாடையை அள்ளிச்சுழற்றியிட்டபடி இடைநாழியில் நடந்து படிகளில் இறங்கினார். மூச்சிரைக்க ஓடினார். எதிர்பட்ட அனைத்துச் சேடியர் முகங்களிலும் அங்கு நிகழ்ந்தவை அவர்களுக்குத் தெரியும் என்று தெரிந்தது. முற்றத்தில் நின்ற தேரில் ஏறிக்கொண்டார். பாகன் அவர் ஆணைக்காக காத்திருந்தான். பொறுமையிழந்த புரவி அசைந்ததும் விழித்துக்கொண்டு “அரண்மனைக்கு…” என்றார்.

அவருக்கு ஓலைகள் தேவைப்பட்டன. நாடெங்கிலுமிருந்து இடர்களுடன், சிக்கல்களுடன், புதிர்களுடன் வந்துசேரும் ஓலைகள். செத்த விலங்கின் உடலை கழுகுகள் என அவரை குத்திக்கிழித்து உண்டு வெள்ளெலும்பென அந்தியில் எஞ்சவிடுபவை. “விரைக… விரைக!” என்று அவர் கூவினார். பாகனின் சவுக்கோசையில் புரவிகள் விரைவுத்தாளம் கொண்டன.

முந்தைய கட்டுரைஎம்.ஏ.சுசீலா விழா :இந்திரா பார்த்தசாரதி உரை
அடுத்த கட்டுரைஎம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள் 2