வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-46

wild-west-clipart-rodeo-31இளைய யாதவர் உள்ளுணர்வால் அழைக்கப்பட்டு கதவைத் திறந்து வெளியே வந்தபோது அங்கே சுகர் நின்றுகொண்டிருப்பதை கண்டார். மண்படிந்த மெலிந்த ஆடையற்ற சிற்றுடல் புதிதாக அகழ்ந்தெடுக்கப்பட்ட கிழங்குபோல் நறுமணம் கொண்டிருந்தது. சடைத்திரிகள் தோளில் பரவியிருந்தன. இரு கைகளும் தொடைதொட்டு தொங்கின. இளங்குழவிகளுக்குரிய தெளிந்த கண்களுடன் அவர் நின்றார். சில கணங்கள் அவரை நோக்கியபடி நின்ற இளைய யாதவர் கைகூப்பியபடி இறங்கிச் சென்று அவர் கால்களில் தலைவைத்து வணங்கினார்.

அவர் வணங்குவதை சுகர் அறியவில்லை எனத் தோன்றியது. வாழ்த்தோ தலைதொடுகையோ நிகழவில்லை. ஆனால் பாற்பல்குழவி என அழகிய புன்னகை ஒன்று அவர் முகத்தில் விரிந்தது. “தங்கள் வருகையால் நிறைவுற்றேன், முனிவரே” என்றார் இளைய யாதவர். “சற்று முன்னர்தான் தங்களை எண்ணிக்கொண்டிருந்தேன். தங்களிடமன்றி பிறரிடம் சொல்லமுடியாத சொற்கள் கொண்டிருக்கிறேன். என் விழைவே தங்களை இங்கே வரச்செய்தது என்று உணர்கிறேன்.”

என்றுமுள மானுட விழைவென்பது இறுதிநிலை எய்துவது. அந்நிலைக்குப் பின் வினாக்கள் இல்லை. விடைகளில் முதன்மையானது ஆழிச்சுழல் என வினாக்களை முற்றாக விழுங்குவதே. அதை சென்றடையாமல் எச்சொல்லுசாவலும் நிறைவடைவதில்லை. சொல்லிச் சொல்லிச் சென்றடைந்த முனையில் இறுதிச் சொல்லின்மையுடன் நின்றுள்ளேன். அதை நீங்களே கேட்கமுடியும்.

அறிந்தறிந்து செல்லும் அறிவின் எல்லை எது? அறிவு ஆதலென்றாகி நிறையும் இடம் எது? அது ஒவ்வொரு அறிவிலும் ஒரு துளியேனும் இருக்கும். அது விடுதலை என்றால் ஒவ்வொரு அறிவும் விடுதலை. அது இன்மை என்றால் ஒவ்வொரு அறிவும் இன்மை. அது பிறிதொன்றிலாமை என்றால் ஒவ்வொரு அறிவும் அதுவே.

அறிவாடல் ஒவ்வொன்றும் அங்கு சென்றுசேரும் பயணத்தின் நிலைகளே. அறிவிப்போர் அறிந்துகொண்டிருப்போர் அறிந்தமைவோர் அனைவரும் அம்முழுமையை அடைந்தவரின் பிறிதுருக்களே. அத்தகையோர் யார்? எவ்வண்ணமிருப்பர்? முனிவரே, அத்தனை அறிதல்களும் அவரால்தான் பொருள்கொள்கின்றன. அறிவென்று இங்கே நிகழ்வன அனைத்துக்கும் அவரே அடிப்படையென அமைகிறார்.

அத்தகைய ஒருவர் முன் என் சொற்களுடன் நின்றிருக்க விழைந்தேன். என் ஒவ்வொரு சொல்லும் இறுதியில் எப்படி எஞ்சுமென்று அறிய. சொல்லுதிர்ந்து நான் எப்படி எஞ்சுவேன் என்று உணர. முனிவரே, நான் கொண்டவை மெய்யா என நானே காண. என் சொற்களனைத்துக்கும் விழிக்கூடென ஒரு சான்று.

சுகர் மறுமொழி சொல்லாமல் நின்றார். “அமர்க, முனிவரே!” என்றார் இளைய யாதவர். எவரிடமென்றில்லாமல் “ஓர் அடி எஞ்சியிருக்கிறது” என்றார் சுகர். “ஆம், ஒரே அடி தொலைவு. ஓர் இமைக்கணம். அந்தத் துளியில் மட்டுமே சொல்லப்படவேண்டியவை இவை. இன்று புவியில் நீங்கள் மட்டுமே அங்கே நின்றிருக்கிறீர்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். சுகர் அச்சொற்களை கேட்கவில்லை. இனிய கனவு நீர்த்துளியில் வெயிலலை என ஒளிவிடும் விழிகளுடன் நின்றார்.

இளைய யாதவர் அவரை நோக்கி சிற்றசைவின் துளியொன்றை காட்டினார். அக்கணத்தில் வெளி சுழன்று திரும்ப விண்மேவிய பேருருக்கொண்டு நின்றார். அவர் தலையைச் சூழ்ந்து கோள்கள் பறந்தன. விரிந்த கருங்குழல் பெருக்குகளில் கோடிகோடி விண்மீன்கள் சுடரிமைத்தன. ஒளிபெற்ற முகில்களென அவர் ஆடைகள் விரிந்திருந்தன. அவர் அணிகலன்கள் மின் என்றும் மலர் என்றும் ஒளிவிட்டன.

அத்ரிமலைமுடி நோக்கிய பாதையில் சென்றுகொண்டிருந்த சுகரின் முன்னால் எழுந்த விண்ணுரு நூறாயிரம்கோடி இடிகளென எழுந்த பெருங்குரலில் சொன்னது “நானே நீ!” திசைகள் அச்சொற்களை கோடிகோடிகோடி என எதிரொலி செய்தன. குன்றாது சென்ற அந்த ஓசை முன்பு கோடிகோடிகோடி முறை அவ்வாறு எழுந்து குறையாது பெருகாது திசைகளின் எல்லையின்மையில் சென்றுகொண்டிருந்த ஓசைகளை தொடர்ந்தது. அவ்வொலியலைகளாக விரிந்தது முடிவிலா மாமலர்.

“நானே மாபெரும் அரசமரம். வானில் வேர்விரித்து மண்ணில் கிளையும் விழுதும் இலையும் தளிரும் மலரும் மகரந்தமும் பரப்பி நின்றிருக்கிறேன்” என்று வியனொலி முழங்கியது. “அழகிய மரம், அழிவிலாப் பெருமரம். இங்கு நான் தழைத்ததன் பேரருளுக்கு கணம் கோடி வேள்விகளால் உயிர்க்குலங்கள் நன்றி கூறுகின்றன. ஆனால் இதை வேருடன் வெட்டி வீழ்த்தாதவன் மறுகாலடி வைப்பதில்லை. அறிக, இறுதி நிழலையும் இழந்தவன் மீதே வான் எழுகிறது!”

விந்தையால் விரிந்த குழந்தைவிழிகளுடன் சுகர் முன்னால் நடந்தார். அச்சுறுத்தும் படைக்கலங்கள் ஏந்திய பலகோடி கைகள் விரிந்து தடுக்க விண்ணளந்த பேருரு கூறியது “இவ்வெல்லையை மானுடரென அமைந்து எவரும் கடக்கவியலாது. கருவிலேயே மெய்மை அறிந்தீர். காமமும் வஞ்சமும் விழைவும் உருவாகாமலேயே கனியலானீர். ஆயினும் நீங்கள் மானுடரே. அடைதலும் இன்மையென்றாகும் நிலையொன்றை அடைதலை எண்ணுக! அடிவைப்பதற்கு முன் மாற்று எண்ணுக!” இடிகளும் மின்னல்களும் அதிர்ந்தன. விண்டலங்கள் வெடிபட்டுச் சிதறின. வெறுவெளிகள் நடுங்கி அதிர்ந்தன.

ஆனால் சுகர் ஒரு கணமும் நடை தளரவில்லை. உள்ளத்தின் சித்தம்தொடாத ஆழத்தால்கூட அச்சமும் ஐயமும் தயக்கமும் கொள்ளவில்லை. மகிழ்வுகொண்ட முகத்துடன் களிப்பாவையை நாடும் சிறுகுழவி என அத்ரிமுடி நோக்கி அடிவைத்து முன்சென்றார்.

இளைய யாதவர் மின்கொடிகள் சுற்றிய மணிமுடியும், இரு விண்சுடர்கள் என ஒளிர்ந்த விழிகளும், ஆழியும் சங்கும் மின்படையும் மலரும் கதையும் மழுவும் ஏந்தி அஞ்சலும் அருளலும் காட்டிய எட்டு கைகளும், மஞ்சள் ஆடையும், மார்பின் திருமணியும் கொண்டு விண்ணளந்தோனாகத் தோன்றினார். கடல்களை தழலாக்கும் காலை ஒளி என புன்னகைபுரிந்து சொன்னார்.

முனிவரே, நீர் வந்துகொண்டிருப்பது என்னை நோக்கி. செருக்கும் மயக்கமும் அற்றோர், சார்புக் குற்றங்களை எல்லாம் வென்றோர், ஆத்ம மெய்மையில் நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், இன்பதுன்பக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், மடமையற்றோர் மட்டுமே அந்த அழிவிலா நிலையை எய்துகின்றனர். எதை எய்தினோர் மீள்வதில்லையோ அதுவே மெய்ப்பெருநிலை.

அது ஒவ்வொரு மானுடருக்குள்ளும் பறவைக்குள் வானமென பொறிக்கப்பட்டுள்ளது. முனிவரே, ஒவ்வொரு பறவையையும் காடு நூறாயிரம்கோடி கைகளால் பற்றியிருக்கிறது. எழுவதெல்லாம் மீள்வதற்கே என்னும் இச்சுழலில் எந்தப் பறவையும் மெய்யாகவே பறப்பதில்லை. மீண்டும் உடலணையும் எச்சிறகும் வானத்தை முழுதறிவதில்லை. மண்மீளா பறவை ஒன்று உண்டு. வானாகி வானை அறிவது. அப்பறவை அறியும் வானமே பறவையென வந்தது.

அலகிலாதது, அதை சூரியனும், சந்திரனும், தீயும் சுடரச் செய்வதில்லை. அழிவிலா அனல் கதிரவனாகி இங்கே வாழ்வை சமைக்கிறது. சந்திரனாகி கனவை ஆக்குகிறது. தீயென்றாகி வேள்வி பெருக்குகிறது. மண்ணுக்குள் பெருகி கரியை வைரமாக்குகிறது. வேர்களில் விழைவாக மாறுகிறது. கிளைகளில் பெருகி விரிகிறது. உடல்களுக்குள் வைஸ்வாநரன் என்னும் பசிப்பேருருவனாகிறது. பிராணன், அபானன் என மூச்சுக்களாக மாறி உணவை ஆற்றலாக மாற்றுகிறது. நாவில் சொல்லாகிறது. நினைவும், ஞானமும், அவற்றைத் துறந்தெழும் தவமும் அதுவே. வேதங்களில் அது வேதமுடிபு என உறைகிறது.

இங்கு இரண்டு வகை இருப்போர் உளர். உயிர்க்குலமெனப் பெருகி உடல்கள் கொண்டு நீந்தியும் ஊர்ந்தும் நடந்தும் பறந்தும் சூழ்ந்திருக்கும் அசைவோன். அனைத்துமாகி அனைத்துக்குள்ளும் உறையும்,அசைவிலன் . இருவருமன்றி இருவருமாகி இருப்பவன் முழுதுருவன். மூவுலகுக்குள் உறைவோன், மூவுலகே ஆனவன், மூவுலகை ஆள்வோன், மூவுலகும் கடந்தோன், அழிவற்றோன். அவனே நான் என அறிக!

“என்னை வணங்குக! என்னிடம் நீர் விழைவதை கோருக! மேல்கீழென அமைந்த ஏழு உலகங்களிலும் நான் விழிநொடித்தால் நிகழாதது ஏதுமில்லை. நான் அளிக்கமுடியாததென்றும் எதுவுமில்லை.” திருவாழியின் அச்சொற்களை நடைபிசகாது சென்றுகொண்டிருந்த சுகர் அறியவில்லை.

ஒரு கணத்திரும்பலில் நீண்ட வெண்தாடியும் கனிந்த விழிகளுமாக அரசமுனிவர் ஜனகரின் தோற்றத்தில் இளைய யாதவர் அங்கு நின்றார். கைநீட்டி அவர் சுகரிடம் சொன்னார்.

மைந்தா, நீ செல்லும் பாதையை எண்ணுக! இங்கு மானுடர் இரண்டுவகையினர் உள்ளனர். வானை ஈட்டுவோர். மண்ணை ஈட்டுவோர். அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, கற்றல், தவம், நேர்மை, கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, இரக்கம், அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை, ஒளி, பொறை, உறுதி, தூய்மை, வஞ்சமின்மை ஆகிய இவை வானை ஈட்டியவரிடம் காணப்படுகின்றன.

மண்ணை ஈட்டியோர் விடுபடுதலை அறியார். அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் இங்கே இறை உறையவில்லை என்றும் சொல்கிறார்கள். இது தொடர்பின்றி பிறந்ததென்றும், வெறுமனே காமத்தை மூலமாக உடையது என்றும் சொல்கிறார்கள். இன்று இதை அடைந்தேன், இனி இவ்விழைவை அடைவேன், இதை கொண்டிருக்கிறேன், இதை வெல்வேன், இப்பகைவரை வென்றேன், இனி இவர்களை வெல்வேன், நான் ஆள்வோன், நான் நுகர்வோன், நான் சித்தன், நான் வலியன், இன்பன், நான் செல்வன், குடிமுதல்வன், எனக்கு நிகர் யாவருளர், வேட்கிறேன், கொடுப்பேன், களிப்பேன் என்று அறியாமையில் மகிழ்கிறார்கள்.

மூவியல்புகள் கொண்டவர்களால் இங்கே ஒவ்வொன்றும் ஆளப்படுகின்றன. நிறையியல்பு, வெல்லுமியல்பு, நில்லுமியல்பு என அவை அசைவன அசையாதன, வாழ்வன நிலைகொள்வன அனைத்திலும் உறைகின்றன. வேள்வி, தவம், கொடை இவற்றில் உறுதியே நிறை எனப்படுகிறது. பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் எச்செயலும் நிறைகொண்டதேயாகும்.

இங்குள்ள அனைத்தையும் துறந்துசெல்பவர்கள் எய்துவது முழுமை. ஆனால் வேள்வி, கொடை, தவம் என்ற செயல்களை எவரும் விடக்கூடாது. பற்றிலாமல் இயற்றும் வேள்வியும் கொடையும் தவமும் அறிவுடையோரை தூய்மைப்படுத்துகின்றன. செய்தற்கு உரியது என்று உணர்ந்து இயற்றி அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய துறவே நிறைநிலை எனப்படும்.

நிறைநிலை கொண்ட,  ஐயங்களை அறுத்த துறவி இன்பமற்ற செய்கையை பகைப்பதில்லை, இன்பமுடைய செய்கையில் நசையுறுவதுமில்லை. அவன் இவ்வுலகத்தாரை எல்லாம் கொன்ற போதிலும் கொலையாளி ஆகான்,  கொலையின் விளைவுகளுக்கும் கட்டுப்பட மாட்டான். ஒருதுளியும் எஞ்சாது உன்னை ஆற்றினாய் என்றால் முன் செல்க!

ஏதுமறியாது சென்ற சுகரின் முன் இளைய யாதவர் வேய்குழல் இடைசெருகி குழல்முடிச்சில் பீலி உலைய கருமணி மேனியும் விழியொளியும் மென்நகையொளியுமாக நின்றார். நட்புடன் நகைத்தபடி சொன்னார்.

அறிவு, அறியப்படுபொருள், அறிவோன் என இம்மூன்றும் இணைந்து இங்கு புடவியென்றாகின்றது. கருவி, செய்கை, செய்பவன் என செயலின் அமைப்பு மூன்று பகுதிப்பட்டது. பற்றுதலுடையோனாய் பயன்களை விரும்பி அறம்பொருளின்பங்களைப் பேணுவதில் செலுத்தும் உறுதியே வெல்லும் இயல்பு எனப்படுகிறது.

அது தொடக்கத்தில் இனிக்கிறது. கனியும்தோறும் கசப்பு கொள்கிறது. எது தொடக்கத்தில் நஞ்சை ஒத்ததாய், விளைவில் அமிர்தமொப்ப மாறுவதோ, அந்த இன்பமே நிறைநிலை கொண்டது. ஆணவம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை விட்டு தன்னிலையை முற்றழித்து அமைதி கொண்டவன் தானே பிரம்மம் எனத் தக்கவன்.

பிரம்ம நிலை பெற்றோன், பேருவகை உடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும் நிகராக நினைப்போன் உயர்ந்ததாகிய பற்றுறுதியை அடைகிறான். இளம்படிவரே, உங்களை அறிந்துகொள்க! ஒரு துளியேனும் துளியினும் துளியேனும் ஐயமோ விலக்கமோ கொண்டிருந்தால் இங்கு நீங்கள் நின்றுவிடலாம்.

சுகர் மேலும் முன்னகர அவர் முன் புழுதிமண்ணில் சிறுகுழவி என வலக்கால் கட்டைவிரலை வாயில் வைத்துச் சுவைத்தபடி புன்னகையில் வாய்நீர் வழிய கைகால்கள் அலைததும்ப கரியோன் கிடந்தார். அக்குழவியும் சுகர் விழிகளில் படவில்லை. அப்பால் அடி எடுத்து வைத்தபோது அப்பூழியில் ஒரு நீலச் சிறுமணிப்பரல் என விண்வடிவோன் கிடந்தார். நடந்த சுகரின் கால்களில் ஒட்டிக்கொண்டார்.

அத்ரிகிரியின் தாமரைப்பீடத்தில் ஏறுவதற்கு முன் சுகர் இயல்பாக ஒருகாலில் மறுகாலைத் தட்டி பாதப்பொடியை முற்றுதறியபோது பெருமாள் உதிர்ந்து விழுந்தார். சுகர் மலைமுடி மேல் ஏறிநின்று கைகளைக் கூப்பியபோது படைத்தோன் காப்போன் அழிப்போன் என மும்முகம் கொண்டெழுந்தது உரு. அக்கணமே அழிந்து வெளியென நின்றது அரு. “எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே அடைக்கலம் கொள்க!” என விண்பெருக்குகள் முழங்கின.

wild-west-clipart-rodeo-31இளைய யாதவர் முன் தன் மெய்யுருவில் எழுந்த யமன் “யாதவரே, நான் தென்றிசைத்தேவன். என் ஐயமொன்றை தீர்க்கும்பொருட்டு இவ்வண்ணம் வடிவுகள் கொண்டு இங்கு அணைந்தேன்” என்றார். இளைய யாதவர் “ஆம், நான் அறிவேன்” என்றார். யமன் “எப்போது அறிந்தீர்கள்? நான் முதலில் அங்கநாட்டரசனாக வந்தபோதிருந்தா?” என்றார். “இல்லை, சற்றுமுன் நிகழ்ந்த கனவில் நான் என் இவ்வெல்லைகளைக் கடந்து அதுவென்றிருந்தபோது” என்றார் இளைய யாதவர்.

“என் ஐயம் திரேதாயுகத்தில் ராகவராமன் விண்புகுந்தபோது எழுந்தது” என்று யமன் சொன்னார். “அவர் சரயுவில் மூழ்கி மறைந்த கதையை அறிந்திருப்பீர்கள்…” இளைய யாதவர் “ஆம்” என்றார். யமன் சொல்லிமுடித்து “நான் கேட்கவிருந்த வினா மிக எளிது. அதை ஏன் இக்கணம் வரை கேட்கவில்லை என என் உள்ளம் வியப்புகொள்கிறது” என்றார். “அதற்கான விடையும் மிக எளிதே. ஆனால் அவ்விடையைத் தாங்கும் தெளிவு இல்லாவிடில் அதனால் பயனில்லை. ஆகவேதான் இதுவரை சொல்லுசாவினீர்” என்று இளைய யாதவர் சொன்னார்.

யமன் “யாதவரே, மாயை தெய்வங்களும் கடத்தற்கரியதா?” என்றார். இளைய யாதவர் “ஆம், ஏனென்றால் அதுவும் தெய்வமே” என்றார். யமன் வியப்புடன் நோக்க “காலவடிவரே, மாயையால்தான் பிரம்மம் தன்னை நோக்கிக்கொள்ள முடியும். மாயை என தன்னைப் பகுத்து, மாயையைக் கொண்டு தன்னை அளவிட்டு, மாயையால் தனக்கு இயல்புகள் சமைத்து, அதுவே தானென்று ஆகி மாயையை அழித்து தான் மறைந்து, தானென்று உணர்ந்து மீண்டும் பிறந்தெழுந்து முடிவிலாது விளையாடுகிறது பிரம்மம். ஆடிப்பாவை கண்டு மகிழ்ந்தாடும் அறியாச் சிறுகுழவி அது” என்று இளைய யாதவர் சொன்னார்.

“மழையென்று பொழிகையில், நதியென்று பெருகுகையில், கடலென்று தன்னை அறிவதில்லை நீர். கடல்நாடும் விசையே தன் வழியனைத்தையும் வகுத்தது என்று கடலென்றான பின்னரே உணர்கிறது” என்று இளைய யாதவர் சொன்னார். “கடல்களெல்லாம் பெருங்கடலுள் சிறுதுளியே என உணர்கையிலேயே அலைகளை அறியத் தொடங்குகிறோம்.”

யமன் தன்னுள் எழுந்த இறுதி வினாவை சொல்லாக்குவதற்குள் இளைய யாதவர் அதை அறிந்தார். அவர் விழிகளிலிருந்து அவ்விடையை யமன் அறிந்தார்.  யமன் வெடித்துச் சிரிக்கத் தொடங்க இளைய யாதவரும் அச்சிரிப்பில் கலந்துகொண்டார். இருவரும் மேலும் மேலுமென சிரிப்பு பொங்கியெழ எண்ணி எண்ணி நகைத்தனர். நெஞ்சும் வயிறும் வலிக்க ஓய்ந்து மீண்டும் நகைக்கத் தொடங்கினர்.

மூச்சுவாங்க, விழிநீர் வழிய “போதும், யாதவரே” என்று யமன் கைகாட்டினார். “இனி என்னால் முடியாது. என் உள்ளம் முற்றாக சிதறிப்போய்விடக்கூடும். மீளவே முடியாமலாகிவிடும்.” இளைய யாதவர் புன்னகையாகத் தணிந்து “சென்றுவருக, மாகாலரே!” என்றார். யமன் கைகூப்பி எழுந்து விடைகொண்டார்.

wild-west-clipart-rodeo-31நைமிஷாரண்யத்தில் இருந்து கரிய ஒளியசைவென யமன் மீண்டு வந்தார். அவர் முகம் புன்னகையால் பொலிவுற்றிருந்தது. அவரைக் காத்து நின்றிருந்த யமி ஓடி அருகணைந்து “மூத்தவரே, நீங்கள் மூன்று முதன்மைத்தெய்வங்களுக்கு நிகராக ஒளிகொண்டிருக்கிறீர்கள்” என்றாள். “ஆம், அவர்கள் மட்டுமே அறிந்ததை நான் அறிந்தேன்” என்றார் யமன். அவரைச் சூழ்ந்துகொண்ட காலர்கள் ஆர்ப்பரித்து வாழ்த்தொலி எழுப்பினர்.

கீழ்விண்ணின் ஆழங்களிலிருந்து ஆழங்களுக்கெனச் சென்று தன் நகரை அடைந்த யமன் அதன் மையமென அமைந்த அரண்மனையை அடைந்தபோது அங்கே அவர் அரசியர் தூமோர்ணை, அப்பிராப்தி, சியாமளை, இரி ஆகியோர் மைந்தர்கள் கஜன், கவாக்ஷன், கவாயன், சரபன், கந்தமாதனன் ஆகியோர் சூழ காத்து நின்றிருந்தனர். அமைச்சர் காகபுசுண்டர் தலைமையில் நின்றிருந்த யமபுரியினர் வாழ்த்துரை எழுப்பினர். மைந்தர்கள் கால்தொட்டு வணங்கி வாழ்த்து கொண்டனர். துணைவியர் அருகணைய அவர்களை அணைத்து இன்சொல்லுரைத்தார்.

அன்று துணைவியரும் மைந்தரும் அமைச்சரும் சூழ அவையமர்ந்திருந்தபோது காகபுசுண்டர் “அரசே, தாங்கள் தேடிய வினாவுக்கு விடைகிடைத்ததா?” என்றார். “ஆம்” என்று மீசையை நீவியபடி புன்னகைத்த யமன் மஞ்சத்தில் சாய்ந்துகொண்டு எண்ணி நெஞ்சு உலைய சிரிக்கலானார். “என்ன நிகழ்ந்தது?” என்று தூமோர்ணை கேட்டாள். “அதை முழுமையாக உனக்கு சொல்லவியலாது” என்றார் யமன். காகபுசுண்டர் “இறுதியாக நீங்கள் கேட்டது எதைப் பற்றி? அதைமட்டும் சொல்க!” என்றார். யமன் சிரிப்பை நிறுத்தி மூச்சிழுத்தார். பின் “அவருடைய இறுதியைப் பற்றி” என்றார்.

முந்தைய கட்டுரைஅ.கா.பெருமாள்:குமரி
அடுத்த கட்டுரைஊட்டி,லக்ஷ்மி மணிவண்ணன்