‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-9

bowசுஜயன் இரண்டாம்நாள் போரின் முதல் தருணமே பீஷ்மரும் அர்ஜுனனும் அம்புகோத்துக்கொள்வதாக அமையுமென்று எண்ணியிருந்தான். நாரையின் அலகை பருந்தின் அலகு கூர் கூரால் என சந்திக்கும் தருணம். புலரியிலேயே அத்தருணத்தை உளம்கண்டுகொண்டுதான் அவன் எழுந்தான். கவசங்களணிந்து தேரிலேறுகையில் பலமுறை அவன் உள்ளத்தில் அது நடந்துவிட்டிருந்தது. ஆனால் முரசொலித்து படைமுகப்புகள் சந்தித்துக்கொண்டபோது நாரையின் நீள்கழுத்து சவுக்குபோல வளைந்து சுழன்றது. அதன் அலகுமுனை மிக அப்பால் பருந்தின் இடச்சிறகில் இருந்த கிருபரை நோக்கி சென்றதை அவன் கண்டான். பீஷ்மரை திருஷ்டத்யும்னனின் ஏழு படைப்பிரிவுகள் அலையென எழுந்து வந்து எதிர்கொண்டன. நாரையின் கழுத்தை ஓங்கிக் கொத்தியது பருந்து. சிறகுகள் சிதறிப்பரக்க உருவான பள்ளத்தினூடாக பருந்தின் அலகு நுழைந்தேறியது. நாரைக்கழுத்து வளைந்து வளைந்து சூழ்ந்துகொண்டு அம்புகளால் தாக்கத்தொடங்கியது.

மிகச் சில கணங்களுக்குள்ளேயே உச்சகட்டப் போர் நிகழலாயிற்று. அம்புகளால் நிறைந்த காற்றுவெளியினூடாக சுஜயன் பீஷ்மரின் கைகள் சுழன்று அம்புகளை எடுத்து நாணிலமைத்து நீட்டித்தொடுத்து, விம்மி விழிதெரியாமலாகி, இலக்கடைந்து நின்று நடுங்கிய அம்புக்கு மேல் அடுத்த அம்பை எய்ததை கண்டான். அவர் விழிதிருப்பி களத்தை நோக்க விழித்தொடுகையே அம்பென்றாகியது. எண்ணமே அம்பென்ற பருவடிவெடுத்து எழுந்து தைத்தது, உடைத்தெறிந்தது. பீஷ்மரைச் சூழ்ந்து நின்றிருந்த அணுக்கத்தேர் வீரர்கள் அனைவரும் தாங்கள் விற்தொழிலின் உச்சத்தில் உடல் நெளிந்தாடி கைபறந்து விழிசுழன்று கொண்டிருக்கையிலும்கூட பீஷ்மரின் போர்க்கலையை மூன்றாவது விழியொன்றால் நோக்கிக்கொண்டுமிருந்தனர். நோக்கற்கரிய நடனம் போலிருந்தது அது. விழியறியாக் கையொன்று ஏந்திச்சுழற்றிய சாட்டை.

முதல்நாள் போருக்குப் பின் கௌரவப் படையினரில் பீஷ்மரின் போர்க்கலையைப்பற்றிய பேச்சுக்களே ஓங்கியிருந்தன. அவருடைய போர்ப்பயிற்சியை அத்தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் பார்த்திருக்கவில்லை. முந்தைய இரவில் பரிவில்லவனாகிய ஊர்த்துவன் “முப்புரம் எரித்த ஆடல்வல்லான் மட்டுமே இங்ஙனம் போரிட்டிருக்க இயலும். வில்லுடன் தேரில் நிற்பதற்கன்றி பிறிதெதற்காகவும் வடிவமைக்கப்படாத உடல் என்று எண்ணினேன்” என்றான். “உள்ளம் அலைவுறாது நிலைகொள்பவரின் உடலில் மட்டுமே அத்தகைய முழுமை அமையும்” என்றான் தேர்வில்லவனாகிய கூகன். “ஏனென்றால் அவருடைய ஆழம் இப்போரில் ஈடுபடவில்லை. அது ஊழ்கத்திலமர்ந்த தவத்தோன் என தன்னைத் தானே சுவைத்து களிப்பில் செயலற்று நிலைத்துள்ளது” என்றார் முதிய வில்லவராகிய சாமர்.

பீஷ்மருக்கு முன்பாக முதன்முதலில் காண்டீபம் எழுந்து வந்த தருணத்தை சுஜயன் தன் உள்ளத்தில் மீள மீள நிகழ்த்தியிருந்தான். கொந்தளிக்கும் கடலலைகள் மேல் தோணி எழுந்து வருவதுபோல் படைகளின் முகப்பில் யாதவர் ஓட்டிய தேர் வந்தது. குரங்குக்கொடி பாறிய அமரமுனையில் பீலி விழி மலர்ந்து அமர்ந்திருந்த இளைய யாதவர். ஏழு புரவிகளும் நீர் உலையாமல் அலையிலெழுந்தமைந்து அணுகும் ஏழு அன்னப்பறவைகளின் நிரை என்று எண்ணினான். அவற்றின் கால்கள் நடனமங்கையர் என ஒத்திசைந்தன. புரவிகளின் கால்கள் நிலம் தொடவில்லை என தோன்றியது. தேர்ச்சகடம் காற்றில் உருண்டு வருவது போலிருந்தது. போர்க்களத்தில் பீடமுலையாது குவடு அசையாது ஒரு தேர்வரமுடியுமென்று அன்றுதான் கண்டான். ஒருமுறைகூட இளைய யாதவரின் சவுக்கு புரவிகளின் மேல் படவில்லை. ஏழு புரவிகளின் கடிவாளங்களின்மேல் ஏழ்நரம்பு யாழ் மேலென அவர் கைகள் அசைந்தன. அச்சரடுகளினூடாக அவர் உள்ளத்தை அவை அறிந்தன. எண்ணத்தை உடலுறுப்புகள் அறிவதுபோல அவரை அவை நடத்தின.

அர்ஜுனனுடனான அந்தப் போரில்தான் பிதாமகர் தன் முழுப் பேருருவுடன் வெளிப்பட்டார். அவருடைய அணுக்கர்களாகச் சென்ற எவரும் அவருக்கு மெய்த்துணையாக இருக்க வேண்டியிருக்கவில்லை. இளைய பாண்டவரைச் சூழ்ந்துவந்த வில்லவர்களை மட்டுமே அவர்கள் எதிர்கொண்டனர். முதல் அம்பை வணங்கி எடுத்து பீஷ்மரின் காலடி நோக்கி எய்தபின் நாணொலி எழுப்பி நிமிர்ந்த அர்ஜுனன் உதடுகளை இறுகக் கடித்து விழிகூர்ந்து நோக்கால் அம்பு செலுத்துபவன்போல தேர்த்தட்டில் நின்று போரிட்டான். குறைந்த நேரமே அப்போர் நிகழ்ந்தது. கேடயப்படையால் வளைக்கப்பட்டு அர்ஜுனன் அகற்றிக்கொண்டு செல்லும் வரை அவன் தன் இரு கைகளாலும் அம்புகளை செலுத்திக்கொண்டிருக்கும்போதும் விழிமலைத்து அவரை நோக்கிக்கொண்டிருந்தான். முகிலிலிருந்து எழுந்து ஒளியுடன் தோன்றி மீண்டும் மறைந்த இளங்கதிரவன் என்று எண்ணிக்கொண்டான்.

அதை சொன்னபோது “சூதர் பாடலின் வரிபோல” என்று சம்பன் நகைத்தான். சுஜயன் “அவர்களின் சொற்களால்தான் நாம் பேசிக்கொள்ள முடியும்” என்றான். இருவரும் சொல்லடங்கி படுத்திருந்தனர். அச்சிரிப்பால் அந்நிகழ்விலிருந்து நெடுந்தூரம் சென்றுவிட்டிருந்தான். “நாளை மெய்யாகவே போர் நிகழும். இருவரும் களமெதிர்கொள்கிறார்கள். நாமும் உடனிருப்போம்” என்றான் சம்பன். “எனது காண்டீபத்துடன் அவர் முன் நின்றிருக்கையில் ஒரு வட்டம் முழுமையடைகிறது” என்று சுஜயன் சொன்னான். சம்பன் சற்றுநேரம் கழித்து “அல்லது ஒரு கடன் தீர்க்கப்படுகிறது” என்றான்.

பீஷ்மரின் அம்புகள் பட்டு வீரர்கள் அலறி தேரிலிருந்தும் புரவிகளிலிருந்தும் உதிர்ந்துகொண்டிருந்தனர். விழுந்தவர்களுக்கு மேல் தலையறுபட்ட புரவிகள் விழுந்தன. திசைஇழுபட்டு சகடம் சிதறி தேர்கள் சரிந்தன. அவருடைய தேர் விழுந்தவர்களின் மேல், உடல்களின் மேல், தேர்களின் உடைசல்களின் மேல் பறந்து செல்வதுபோல் சென்றது. அலைகளிலாடும் படகென தேர்த்தட்டு உலைந்தபோதும்கூட அதற்குமேல் மெல்லிய புகைப்படலம்போல இன்மையும் இருப்புமாக நின்றிருந்தார். நெளிவுடன் கலைந்து நிலைகொள்கையில் திரண்டு உடல்காட்டினார். பறக்கும் தேன்சிட்டின் சிறகுகள் போன்றிருந்தன கைகள்.

மச்சர் நாட்டு சலஃபனின் மைந்தர் இருவர் தலையறுந்து விழுந்தனர். நிஷாத குலத்து கோமுகனின் ஏழு மைந்தர்களும் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டனர். பாணாசுரரின் அமைச்சரான சுபூதர் தேர்த்தட்டிலிருந்து தலையற்றவராக விழுந்து புரவிக்கால்களால் உதைத்தெறியப்பட்டார். பாஞ்சால படைத்தலைவர் உக்ரபாகுவும் வஜ்ரசிருங்கனும் நெஞ்சக் கவசமுடைந்து தேரில் விழுந்தனர். அவர்களை பீஷ்மரின் அம்புகள் மொய்த்து கொத்திப்புரட்டின. முட்பன்றிபோல அம்புகள் சூடி அவர்கள் விழுந்து நெளிந்தனர். தேர்த்தட்டில் விழுந்தவர்களை அம்புகளால் தாக்க இயலாதென்பது சுஜயன் கற்றிருந்தது. காற்றிலெழுந்த அம்பு இரைதேடும் பருந்தென வளைந்திறங்கி விழுந்தவன் நெஞ்சில் பாய்ந்து நிற்கும் என்பதை அப்போது கண்டான். பீஷ்மர் எவரையும் புண்பட்டு களத்தில் விழவிடவில்லை என்பதை அவன் முந்தைய நாளே அறிந்திருந்தான். ஒரே அம்பிலேயே கொன்று வீழ்த்தவே அவர் எண்ணினார். உயிர்பிரியாதென அவர் உணர்ந்தால் மேலும் மேலுமென அம்புகள் தேடிச்சென்றன. உத்தர மல்லநாட்டு தீர்க்கபிரக்யர் கழுத்தில் அம்புபட்டு சரிய அவருடைய விலாக் கவசத்தை உடைத்து உட்புகுந்து தைத்து நின்ற நீளம்பு “ஆம்” என தலையசைத்தது.

“இன்றும் கொலைத்தாண்டவத்தின் உச்சத்திலிருக்கிறார் பிதாமகர்!” என்று சம்பன் கூவினான். “பாண்டவப் படையின் பெரும்பகுதியை இன்று அழித்துவிடுவார்” என்று கூகன் சொன்னான். பீஷ்மரை நோக்கி வந்துகொண்டிருந்த எதிரியம்புகளை அவருக்குப் பின்னாலிருந்து அம்பு பெய்து வலையொன்றை காற்றில் நிறுத்தி தடுத்துக்கொண்டிருந்தனர் நூற்றெண்மரும். திருஷ்டத்யும்னனின் அம்பு நெஞ்சிலறைய சம்பன் தேர்த்தட்டில் இருந்து தெறித்தான். அவன் மேல் கூகனின் தேர் ஏறியது. நிலைகுலைந்து கூகன் விழிதிருப்ப அவன் தலையை அறுத்தெறிந்தது திருஷ்டத்யும்னனின் அடுத்த அம்பு. கூகனின் தேர் விசையழியாமல் சம்பனின் தேரை முட்டி சரிய அவர்களுக்குப் பின்னாலிருந்த வக்ராக்‌ஷனின் பாகன் தேரை வளைத்து சுற்றிவந்து அவ்விடத்தை நிரப்பினான். திருஷ்டத்யும்னனைச் சூழ்ந்து வந்த அவன் மைந்தர்கள் திருஷ்டகேதுவும் க்ஷத்ரதர்மனும் க்ஷத்ரஞ்சயனும் தந்தையை சூழ முயன்ற கௌரவத் தேர்வீரர்களை எதிர்த்து தடுத்தனர். சுஜயன் தன் சலியா அம்புகளால் அவர்களை அறைந்து நிரை பிளந்தான். தந்தையைச் சூழ்ந்து அவர்கள் உருவாக்கிய பிறைசூழ்கையை உடைத்தான். க்ஷத்ரதர்மனின் கவசம் பிளந்தது. அவன் பின்னடைவதற்குள் அவனை அம்பால் அடித்து வீழ்த்தினான். வெறியுடன் கூவியபடி அவனைத் தாக்கிய க்ஷத்ரஞ்சயனை தோளில் அம்பு தொடுத்து தேர்த்தட்டில் மடிந்தமரச் செய்தான். திருஷ்டகேது சுஜயனின் அம்புகளால் பின்னடைய அவனை கேடயப்படை காத்தது.

காவல்சூழ்கை விலக்கப்பட்ட திருஷ்டத்யும்னன் பீஷ்மரிடம் போரிடுவதன் உளக்கூரால் அறியாது முன்னகர்ந்து கௌரவப் படைகளின் முன் வந்துவிட்டிருந்தான். சுஜயன் அவனை அம்புகளால் அறைந்தபடி முன்னால் சென்றான். தன் அம்புகள் எவையும் அவன் இரும்புக்கவசங்களை உடைக்க ஆற்றல் கொண்டதல்ல என்று உணர்ந்தான். அவை தட்டையான தகட்டுக் கவசங்கள் அல்ல. சிறு குமிழிகளால் ஆன பரப்பு கொண்டவை. எடைகுறைந்தவை, ஆனால் அறைகளின் விசையை வளைவுப்பரப்பால் வாங்கிக்கொள்பவை. ஆனாலும் இடைவிடாத அம்புகள் அவன் விசையை தடுத்தன. பீஷ்மரின் முன் வெற்று நெஞ்சுடன் நிற்பதுபோல அவனை ஆக்கின. ஆயினும் அவன் வெறிமிகுந்து கூச்சலிட்டபடி பீஷ்மரிடம் போரிட்டான்.

பீஷ்மர் அவனுக்குப் பின்னால் வந்தவர்களை ஒவ்வொருவராக கொன்றார். கிராத குலத்து கூர்மரை பீஷ்மரின் அம்பு கொன்று வீழ்த்தியது. அலறியபடி தந்தையை காக்க வந்த மைந்தர்கள் மூவரையும் கொன்றார். இலை நுனி நீர்க்குமிழிகளைத் தொட்டு உடைத்து விளையாடும் சிறுமைந்தர் போலிருந்தார். தேரை வளைத்து பின்னகர்ந்த இறுதி மைந்தன் குத்ஸிதனின் தலையும் பிறையம்பால் வெட்டப்பட்டு உடல் சிதறடிக்கப்பட்டது. அப்பகுதியில் நின்றிருந்த கிராத வீரர்கள் அலறியபடி விலகிச் சிதற ஒவ்வொருவரையாக தேடிச்சென்று வீழ்த்தியது பீஷ்மரின் அம்பு. இலைகளின் மேல் விழும் மழைத்துளி என அவர்களை அதிரச் செய்து மெல்ல விடுபட வைத்தது. விழிகளில் இறப்பின் திகைப்பை கணம் கணமென சுஜயன் கண்டான்.

திருஷ்டத்யும்னன் வெறியுடன் கூவியபடி தேர்ப்பாகனை தலையில் வில்லால் அடித்து “செலுத்துக! முன்செலுத்துக!” என்று கூச்சலிட்டான். தேர்ப்பாகன் அவன் முன் பரல்மீன் திரளென வந்து கடந்துசென்ற அம்புகளை தலைகுனிந்து கடந்து பீஷ்மருக்கு முன் சென்று நின்றான். பீஷ்மரின் அம்பு அவன் தேர்த்தூணை உடைத்தது. பீஷ்மர் “விலகிச் செல் பாஞ்சாலனே, இது உன் போர் அல்ல. உன் தந்தை எனக்கு அணுக்கன், உன்னைக் கொல்ல நான் விழையவில்லை” என்றார். “இது போர் முதியவரே, இங்கு வில் ஒன்றே பேசவேண்டும்” என்றபடி திருஷ்டத்யும்னன் பீஷ்மரை நோக்கி அம்புகளை தொடுத்தான். கவசங்களில் பட்டு அனற்பொறிகள் தெறிக்க அம்புகள் பீஷ்மரை மின்மினிகளெனச் சூழ்ந்தன. அவருடைய தோள்கவசத்தை அவன் உடைத்தான். மறுகணமே முழந்தாளிட்டு அமர்ந்து பிறிதொரு கவசத்தை அணிந்துகொண்டு புரண்டெழுந்து அவ்விசையிலேயே அடுத்த அம்பால் அவன் தோள்கவசத்தை உடைத்தார். அவன் நிலைதடுமாறுவதற்குள் நெஞ்சக்கவசம் உடைந்தது. அம்பு அவன் நெஞ்சில் பாய்ந்தது. திருஷ்டத்யும்னன் தேரில் மல்லாந்து விழ அவன் அணுக்கப்படையினர் கேடயங்களுடன் முன் வந்து அவனை மறைத்தனர்.

துணைவில்லவர் இடைவெளியில்லாத அம்புகளுடன் வேலியொன்றை அமைக்க அவனை பாஞ்சாலப் படை பின்னாலெடுத்துச் சென்றது. அவன் உயிர் பிரிந்திருக்கக்கூடுமென்று சுஜயன் எண்ணினான். ஆனால் பாஞ்சாலத்தரப்பிலிருந்து சங்கொலி எழவில்லை. “பிழைத்துக்கொண்டார்!” என்று அருகிருந்த உர்வன் சொன்னான். சுஜயன் பீஷ்மரை நோக்கிவந்த வேலொன்றை தன் அம்பினால் உடைத்தான். அதை எய்த கிராத நாட்டு மன்னன் காலகேயனை கழுத்தில் அம்பை அறைந்து தேர்த்தூணுடன் நிறுத்தினான். அவனுக்குப் பின் வந்த உத்ஃபுத நாட்டு சுப்ரதீபனை அம்பால் அறைந்து சரித்தான். பீஷ்மர் “முன்னேறுக! நாரையின் கழுத்தை உடைத்து அதன் முனையை நம் படைகளுக்குள் எடுத்துக்கொள்ளவேண்டும்” என்று கூவியபடி மேலும் முன்னகர்ந்தார். அவருடைய அணுக்கவில்லவரில் பாதிப்பங்கினர் விழுந்துவிட்டிருந்தனர். எஞ்சியவர்கள் ஒருங்கிணைந்து மேலும் சிறிய அரைவட்டமொன்றை அமைத்து அவரைத் தொடர நாண்முழங்க அம்புவிட்டபடி அவர் முன்னால் சென்றார்.

சுஜயன் பக்கவாட்டில் அலறல்களையும் விலங்குகளின் ஓசைகளையும் கேட்டான். பின்னிருந்து “பின்நகர்க! பிதாமகர் பின்நகர்க! பருந்தின் உடலுடன் தலை பொருந்திக்கொள்க! நாரை நம் கழுத்தை ஊடுருவுகிறது! அது நம்மை துண்டிக்கலாகாது… பின்னகர்க!” என்று முரசு ஒலித்தது. என்ன நிகழ்கிறதென்று தேர்த்தூணில் உடல் மறைத்து நின்று நுனிக்காலேந்தி நோக்கி சுஜயன் புரிந்துகொண்டான். பீமனின் படை பெருகி கூர்கொண்டு சரிவிறங்கும் ஆறென விசை பெற்று பருந்தின் தலையை முற்றாக அறுத்து அப்பால் சென்று அங்கிருந்த துருபதரின் படைகளுடன் இணைந்துகொள்ள முயன்றது. “சூழ்ந்துகொள்ளப்பட்டுவிட்டோம், பிதாமகரே!” என்று சுஜயன் கூவினான். பீஷ்மர் திரும்பி நோக்கியபோது பீமனின் படைகள் முழுமையாகவே மறுபுறம் சென்று அங்கிருந்த பாஞ்சாலப் படைகளுடன் இணைந்துகொண்டதை கண்டார். “நாற்புறமும் பாண்டவப் படைகளால் சூழப்பட்டுவிட்டோம்… இச்சூழ்கையை உடைத்தாகவேண்டும்” என்று சுஜயன் சொன்னான். “யானைத்தடையை உடைத்துவிட்டோம். சூழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்னும் சிறுபொழுதில் பீமனை நேர்நின்று தாக்குவோம். பிதாமகர் அவனை பின்னிருந்து தாக்கி அழிக்க வேண்டும்” என சிறுமுரசுகள் பேசின. “பின்னிருந்து தாக்குக! பின்னிருந்து தாக்குக!” என்று பெருமுரசுகள் முழங்கின.

ஆனால் பீஷ்மர் திரும்பி நோக்காமல் “முன்செல்க! முன்செல்க!” என்று ஆணையிட்டார். சுஜயன் தன்னுடன் வந்த வில்லவர்களிடம் “அறுபதின்மர் பிதாமகருக்கு பின்காப்பாகுக… எஞ்சியவர்கள் என்னுடன் எழுக!” என ஆணையிட்டான். அவனுடைய முழவறிவிப்பாளன் அதை ஒலியாக்கியதும் கௌரவப் படை இரண்டாகப் பிரிந்தது. தனக்குப் பின் இரு சிறகுகள் என எழுந்த படையுடன் அவன் பின்னால் திரும்பி பீமனை நோக்கி சென்றான். நடுவே சிதறிக்கிடந்த கௌரவர்களின் உடல்கள் திருஷ்டத்யும்னன் உருவாக்கிய அழிவு என்ன என்று காட்டின. அப்போதுதான் ஒரு திடுக்கிடலாக சுஜயன் இன்னமும் அர்ஜுனன் பீஷ்மரை எதிர்கொள்ளவில்லை என்று உணர்ந்தான். இதுவே அவர்கள் வகுத்த தருணம். அவன் திகைத்து நெஞ்சழிந்து இருபக்கமும் மாறிமாறி நோக்கினான். “பீமனை தாக்குக… பின்னிருந்து தாக்குக!” என சகுனியின் முழவு அறைகூவியது. “செல்க!” என்று அவன் ஆணையிட துணைவில்லவன் அக்ரன் “இளவரசே, பிதாமகர் தனித்துச் செல்கிறார்” என்றான். “முதலில் இந்தப் பின்சுவரை உடைப்போம். அப்பாலிருக்கும் நம் படைகள் நம்முடன் இணைந்துகொண்டால் பிதாமகரை நாம் முழுப் படையாலும் ஏந்திக்கொள்வோம். அதுவரை அவர் களம்நின்றிருப்பார். எளிதில் அவரை வெல்லமுடியாது!” என்றான் சுஜயன்.

பீமனின் படைகள் பாஞ்சாலப் படைகளுடன் இணைய அவர்களின் படை பெருத்து அகன்று பெருஞ்சுவரென்றாகியது. யானைக்கோட்டை உடைந்து பெருகிவந்த சலனின் படை முதலில் பீமனின் படைகளை எதிர்கொண்டது. சகுனியின் படைப்பிரிவுகள் உடன்வந்து சேர்ந்துகொண்டன. பருந்தின் உடலில் இருந்து ஏழு படைப்பிரிவுகள் எழுந்துவந்தன. துரியோதனன் துச்சாதனனும் துச்சகனும் துர்முகனும் சுபாகுவும் துணைவர மையத்தில் வந்தான். அவனுக்கு வலப்பக்கம் சலனும் அவன் மைந்தர்களும் இடப்பக்கம் சகுனியும் சுபலரும் அவர் மைந்தர்களும் இணைந்தனர். பூரிசிரவஸின் படையும் கௌரவப் பருந்தின் சிறகிலிருந்து வளைந்து பீமனை நோக்கி வந்தது. “பின்னிருந்து தாக்குக! இச்சூழ்கையை உடைப்போம். பின்னிருந்து தாக்குக!” என்று மீண்டும் மீண்டும் சகுனியின் முரசுகள் அழைத்தன. அது பீமனின் படைப்பிரிவுகளை குழப்புவதற்கான அறிவிப்பும்கூட என சுஜயன் புரிந்துகொண்டான்.

ஆனால் சாத்யகியும் துருபதரும் பீமனுடன் இணைந்துகொண்டார்கள். எளிதில் பீமனின் படைகளை உடைத்து பருந்தின் கழுத்தை இணைக்கமுடியாதென்று சுஜயன் அறிந்தான். “பிதாமகரே, பின்னிருந்து தாக்கி பீமசேனரின் படைகளை உடைப்போம். அன்றேல் பாண்டவப் படைக்குள் நாம் கொண்டுசெல்லப்படுவோம்” என்று அவன் கூவினான். திரும்பி நோக்கிய பீஷ்மர் புன்னகையுடன் கைவீசி அவனை அகற்றிவிட்டு தன் வில்லை ஓங்கி தேர்த்தட்டில் அறைந்து முன்னால் செல்லும்படி விஸ்வசேனரிடம் சொன்னார். அவர் தேர் முன்னால் சென்றதை திரும்பி நோக்கிய சுஜயன் விழிநிலைத்தான். பாண்டவப் படை முகப்பில் கேடயப் படைவீரர்கள் பிளந்து வழிவிட ஒளிரும் கவசங்களுடனும் காண்டீபத்துடனும் அர்ஜுனன் தோன்றினான்.

bowசுஜயன் எண்ணியதுபோல் இருக்கவில்லை அத்தருணம். வஞ்சினங்கள் கூறப்படவில்லை. படைவீரர் வாழ்த்தொலி எழுப்பவில்லை. வணக்கமுறைமைகள் நிகழவில்லை. பறக்கும் அம்பென முழு விசையில் அர்ஜுனனின் தேர் பீஷ்மரை நோக்கி வந்தது. அதே விரைவில் பீஷ்மர் அர்ஜுனனை நோக்கி சென்றார். இருதரப்பின் அணுக்க வில்லவர்களும் விசைகொண்ட படகின் பின்னால் நீளலை தொடர்வதுபோல் அத்தேர்களை தொடர்ந்து சென்றனர். இருவரும் சந்தித்துக்கொண்ட தருணத்தை அவர்கள் இருவரன்றி வேறெவரும் அறியவில்லை. பீஷ்மரின் முதல் அம்பை அர்ஜுனன் தன் மறுஅம்பால் உடைத்தான். தொடர்ந்தெழுந்த பன்னிரு அம்புகளை பன்னிரு அம்புகள் அறைந்து வீழ்த்தின. அம்புகள் வெள்ளிமின்னல்கள் என வானை நிறைத்தன. இருவர் தேர்களும் ஒளிர்மழைத்துளிகளால் என கூரம்புகளால் முழுக்காட்டப்பட்டன.

துரியோதனனும் சகுனியும் சலனும் பீமனின் படைகளை சந்தித்தனர். அங்கே வெறியெழுந்த போர் மூண்டுவிட்டிருந்தது. சாத்யகியின் அணுக்கர்களை சுஜயன் வீழ்த்தினான். பீஷ்மரின் வில்துணைவர் எழுவர் சருகுகள் என உதிர்வதைக் கண்டு திரும்பி “திரும்புக… பிதாமகரை காப்போம்!” என்று தன் படைகளுக்கு ஆணையிட்டான். முழுவிசையில் பீஷ்மரை நோக்கி சென்றபடியே அர்ஜுனனின் அணுக்கவீரனை தன் அம்பினால் அறைந்து வீழ்த்தினான். அவன் தேர் நிலைதயங்கி சரிய பின்னாலிருந்து வந்த தேர் அவ்விடத்தை நிரப்பியது. அர்ஜுனனின் நோக்கு ஒருகணம் வந்து சுஜயனை தொட்டுச்சென்றது. மெய்ப்புகொண்டு உடல் உலுக்கிக்கொள்ள பற்களை கிட்டித்து மூச்சை இழுத்து மேலும் மேலுமென அம்பு தொடுத்தபடி சுஜயன் பீஷ்மரின் அருகே சென்றான்.

அப்போர் மிகத் தொன்மையான ஒரு பலிச்சடங்குபோல் அவனுக்குத் தோன்றியது. ஒவ்வொரு அம்பும் பிறிதொரு அம்பால் நிகர் செய்யப்பட்டது. ஒவ்வொரு அசைவும் இணையான அசைவால் சுழிநிரப்பப்பட்டது. முற்றிலும் நிகர்நிலை கொண்ட இருவர் நடுவே போரென்பது எத்தனை பெரிய வீண்செயல் என்று தெரிந்தது. ஓரவிழியால் அப்போரை பார்த்தபடியே இருதரப்பிலும் அணுக்கர்கள் போரிட்டனர். பீஷ்மரின் விழிகள் அர்ஜுனனின் விழிகளை மட்டுமே நோக்கின. விழியசைவுகளிலிருந்தே அவர்களின் கைகள் ஆற்றப்போவதை உணர்ந்து தம் கைகளால் எதிர்வினையாற்றினர். இரு தேர்களும் இருவரின் பேருடல்கள் என்றாயின. தேர்கள் சீறின, தயங்கின, கூர்ந்தன, பாய்ந்தன, சினந்து பின்னடைந்து மீண்டும் விசைகொண்டன. ஒருகணம் அது தேர்களின் போரென்று தோன்றியது.

தேர்த்தட்டில் பீஷ்மரின் மறுவடிவென்றே அமர்ந்திருந்தார் விஸ்வசேனர். இளைய யாதவரின் மறுவடிவென்று தேர்த்தட்டில் நின்றிருந்தான் அர்ஜுனன். மீண்டும் மீண்டும் ஒன்றே நிகழ்வது போலிருந்தது. காலம் தோன்றியது முதல் அது நிகழ்ந்து வருவதுபோல, இனி எப்போதும் இத்தருணம் இங்ஙனமே நீளும் என்பதுபோல, நிகழ்ந்து கொண்டிருந்தது. இருவர் அம்புகளும் பிறர் உடலில் தொட்டுத் தொட்டு துழாவித் தேடின. ஒரு சிறு உளப்பிழைக்காக, அசைவுப்பிறழ்வுக்காக, அது உருவாக்கும் சின்னஞ்சிறு இடைவெளிக்காக. சுஜயன் அப்போரின் முழுமையான ஒத்திசைவு மிக விரைவிலேயே சலிப்பூட்டுவதென உணர்ந்தான். அப்போர் முடிவடைவதற்கு ஒன்றே வழி. முழுமை மானுடரில் உருவாக்கும் சலிப்பை இருவரில் ஒருவர் உணரவேண்டும். அடுக்கியவற்றை கலைக்கும் குழந்தை அவரில் எழவேண்டும். ஒரு துளி, துளியின் துளி, கணப்பிசிறு, அணுக்காலம். அவர்கள் அதை உணரும் வரை அதுவே நிகழும். அக்கணம் நிகழ்ந்தால் ஒருவரில் மற்றவர் மட்டுமே அறியும் விரிசல் ஒன்று திறக்க அம்பு அங்கே தைக்கும்.

ஓர் அம்பு ஒருவரை தைத்துவிட்டால்கூட அங்கு உருவாகி நின்றிருந்த பழுதற்ற முழுமை பின்னர் கைகூடாது. நிலைகுலைவே போர். பிறழ்வே வாழ்வு. அசைவின்மை வானின் அமைதி கொண்டது. அங்கு தேவர்கள் சூழ்ந்திருக்கக்கூடும். பாதாள தெய்வங்களும் மண்ணெங்கும் விழியெனப் பரவி நோக்கிக்கொண்டிருக்கக்கூடும். அவர்கள் பொறுமையிழப்பார்களா? முடிவிலி என்பது மானுடருக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே இருவரில் ஒருவர் இடைவெளிவிட்டாக வேண்டும். இருவரில் ஒருவர் ஒருகணமேனும் தலைதாழ்த்தியாக வேண்டும். ஆனால் மேலும் மேலுமென விசைகொண்டு அவ்விசையின் நிகர்த்தன்மையால் மேலும் மேலுமென அசைவிழந்து இருவரும் அம்புகளால் ஆன சரடொன்றின் இரு முனைகளில் கட்டப்பட்டு சுழன்று வந்தனர்.

இரு தரப்பிலும் அணுக்க வீரர்கள் அம்பால் அறைபட்டு கீழே விழுந்தனர். அர்ஜுனனின் அணுக்க வீரர்களை பீஷ்மர் அம்பெய்து வீழ்த்திக்கொண்டிருந்தார். அத்தேர்கள் ஏதேனும் ஒன்று நிலையழிந்து அர்ஜுனனின் தேரை முட்டுகையில் அவ்வசைவின் சிறு வாயிலினூடாக நுழைவதற்கு அடுத்த கணமே அவர் அம்பு கிளம்பியது. ஆனால் அணுக்க வீரனொருவன் அறைபட்டு விழுந்ததுமே அர்ஜுனனின் தேர் நீர் என இயல்பாக அவன் தேரிலிருந்து ஒசிந்து விலகி தன்னை காத்துக்கொண்டது. நூற்றெட்டு அணுக்கத்தேர்களாலும் ஆயிரத்தெட்டு அணுக்கப்புரவிகளாலும் சூழ்ந்திருந்த அப்படை அவனுடைய உருவற்ற நிழல் என தோன்றியது. பீஷ்மரின் வலப்பக்கம் சென்று கொண்டிருந்த திரிதன் விழுந்தான். அந்த இடத்தில் வந்தமர்ந்த சாமனும் அக்கணமே விழுந்தான். சுஜயனின் நெஞ்சுக்கு வந்து அவன் ஒழிய தேரின் தூணை அறைந்து சிம்புகளாக தெறிக்க வைத்தது ஓர் அம்பு. அவன் பாகன் தலைக்கவசம் உடைந்து தெறித்தது. அவன் திரும்பி மாற்றுக்கவசத்தை எடுப்பதற்குள் தலை கொய்யப்பட்டது.

தேர்க்கூண்டு சரிய சுஜயன் தன் வேல் முனையால் அதை ஓங்கி அறைந்து திறந்து அப்பால் உடைத்து வீழ்த்தினான். நாற்புறமிருந்தும் சுழன்று வீசிய காற்று அவன் கவசங்களுக்குள் புகுந்து சீழ்க்கை ஒலி எழுப்பியது. கீழிருந்து புரவி வீழ்ந்த வீரனொருவன் பாய்ந்து அவன் தேரிலேறி அமரத்திலமர்ந்து கடிவாளங்களை பற்றிக்கொண்டான். “செல்க! செல்க!” என சுஜயன் கூவினான். அர்ஜுனனின் இரு அணுக்கர்களை அவன் அறைந்து வீழ்த்தினான். அங்கிருந்து அர்ஜுனனின் விழிகளை நோக்க இயலுமா என அவன் விழிகள் தவித்தன. இரு அசைவிலா வேல்நுனிகளென அர்ஜுனனின் கண்கள் பீஷ்மரில் நிலைகொண்டிருந்தன.

விழுந்துதுடிக்கும் அக்குதிரையுடலில் ஏறி சகடம் நொடிக்கலாம். தெறிக்கும் அம்பொன்று சகடத்தின் ஆரக்கால்களில் சிக்கலாம். ஊடே புகும் அம்பால் புரவி அஞ்சி நிலையழியலாம். எத்தருணத்திலும் ஒன்று நிகழலாம். பெருந்திறல் வீரர்களாக இருந்தாலும் அவர்கள் காலமென ஒழுகும் செயல்பெருக்கில் தூசுத்துகள்களே. ஒன்று பிறிதொன்றென கோக்கப்பட்ட இம்முடிவின்மைமேல் ஆட்சி கொண்டவை தெய்வங்கள் மட்டுமே. எங்கோ ஒரு கண்ணியை ஒரு தெய்வம் அறுக்கும். ஒரு புரவியின் குளம்பு பிறிதொன்றுடன் முட்டக்கூடும். ஓர் அம்பு அதன் வால் சூடிய சிறகொன்றின் திரும்பலால் அணுவிடை திசை பெயரக்கூடும். அணுவில் ஆயிரத்திலொன்று, கணத்துளியில் கோடியிலொன்று எக்கணமும் நிகழக்கூடும்.

ஒரு கட்டத்தில் அவன் உணர்ந்தான், இருபுறமும் அணுக்கவீரர்கள் போரிடுவதை நிறுத்திவிட்டிருந்தனர். சூழ்ந்திருந்த படைகள் பெரும்பாலானவர்கள் வில்தாழ்த்தி அந்தப் போரை நோக்கிக்கொண்டிருந்தனர். என்ன நிகழுமென்று சுஜயன் எண்ணினான். முதியவர் நீள்வாழ்வினூடாக எண்ணத்தின், உளச்சோர்வின் அலைகளினூடாக கடந்து வந்தவர். நெஞ்சின் ஏதோ ஒரு சிறு துளி பொருளின்மையை சென்று தொட்டால் அவர் சலிப்புறக்கூடும். ஆனால் முதியவர்களைவிட எப்போதும் இளையவர்களே பொறுமையிழக்கிறார்கள். காலத்தை நிலைக்க வைக்க முதியவர்கள் விழைகையில் அது ஆயிரம் குளம்புகள் தாளமிட விரைந்து செல்லவேண்டுமென்று இளையோர் விழைகிறார்கள். அர்ஜுனன் சலிப்புறுவதற்கே வாய்ப்பு மிகுதி.

அந்த நிகர்நிலை மீது கற்றறிந்த அனைத்துச் சொற்களும் முட்டி பொருளிழந்து உதிர்வதை அவனுள் எங்கோ இருந்து அது பார்த்துக்கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு அம்புடனும் ஒரு சொல் எழுந்தகல்கிறது. ஒரு சொல்லை எஞ்சவைக்க அர்ஜுனன் விரும்பக்கூடும். கோபுரமுகட்டுக் கலசத்தின் விதைநெல்போல ஒரு விதை அவ்வொரு சொல். இந்த அம்புகள் பறக்கும் வெளியில் அவ்வொரு சொல்லின் இன்மை நடுவில் வந்து நின்றால் போதும். இப்போர் முடியும் தருணம். எப்போது முடிவது? இனி எப்போது? மேலும் மேலுமென சென்று கொண்டிருக்கும் இந்நிகர்நிலையில் சூழ்ந்திருக்கும் போர்க்கொந்தளிப்பு முற்றிலும் பொருளிழந்து வெறும் பித்தென்றாகும். இது முடியப்போவதில்லை. இது கனவு. வெறும் பித்து. இது முடிவிலாதொழுகும் வீண்பெருக்கு. என்ன நிகழ்ந்ததென்று அவன் உணர்வதற்குள் அர்ஜுனனின் நெஞ்சக்கவசத்தை உடைத்தது பீஷ்மரின் அம்பு. அர்ஜுனன் அசைவதற்குள் அவன் உடலில் பீஷ்மரின் அம்பு பாய்ந்தது. நிலை தடுமாறி தேர்த்தூணில் அவன் சாய இளைய யாதவர் புரவிகளை தன் உளத்தாலேயே திருப்பி தேரை தன் அணுக்கப்படைகளுக்கப்பால் கொண்டு சென்றார்.

அர்ஜுனனின் தேர் மறைந்த பின்னரே என்ன நிகழ்ந்ததென்று உணர்ந்து பீஷ்மரின் படைவீரர்கள் ஓங்கி வெற்றிக் குரலெழுப்பினர். சுஜயன் தன்னை மறந்து வில்லையும் அம்பையும் தூக்கி தலைக்குமேல் அசைத்து “வெற்றிவேல்! வீரவேல்! பிதாமகருக்கு வெற்றி! கௌரவப் படையினருக்கு வெற்றி!” என்று கூவினான். ஆனால் அவன் குரல் எழவில்லை. தனக்குள் ஏன் அந்த ஏமாற்றம் நிலைகொள்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை. பாண்டவப் படையின் இருபுறத்திலிருந்தும் அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் வந்து பீஷ்மரை சூழ்ந்துகொண்டனர். உரக்க நகைத்தபடி அவர் இருவரையும் எதிர்கொண்டார். சுஜயன் அபிமன்யூவை நோக்கி அம்பெடுத்தபோதுதான் தன் வலக்கை செயலற்றிருப்பதை உணர்ந்தான். திரும்பி நோக்கியபோது அவன் தோளில் அம்பு பாய்ந்திருந்தது. அதை இடக்கையால் பற்றி அசைத்தபோது மூச்சு சிடுக்கு கொள்வதை உணர்ந்தான். கவசங்களுக்குள் கொழுங்குருதியின் வெம்மை நிறைந்திருந்தது. அவன் தசைகள் உடலெங்கும் அறுபட்டவைபோல் துடித்துக்கொண்டிருந்தன. நெஞ்சுக்கவசத்தின் சிறிய இடைவெளிக்குள் புகுந்து வாலிறகு வரை புதைந்திருந்த அம்பை அதன் பின்னரே அவன் கண்டான்.

மெல்ல தேர்த்தட்டில் அமர்ந்தான். இருமுறை இருமியபோது குருதித்துண்டுகள் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் தெறித்தன. பாகன் தேரை திருப்பி பின்னால் கொண்டுசென்றான். அவனுடைய இடத்தை அணுக்கப்போர் வில்லவன் ஒருவன் எடுத்துக்கொண்டான். தேர்த்தட்டில் சரிந்து படுத்த சுஜயன் அந்த அம்பை குனிந்து நோக்கினான். அதில் அர்ஜுனனின் குரங்குமுத்திரை இருப்பதை பார்த்தபின் நீள்மூச்செறிய விழிமூடினான்.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைஎழுத்தாளரின் பிம்பங்கள்
அடுத்த கட்டுரைஈர்ப்பு- விவாதம்