‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-49

bowதெற்கு எல்லைக்காவலரணில் நின்றிருந்த புரவிவீரர்களில் இருவர் படைத்தலைவர்களுக்கான கொடியுடன் இருப்பதை தொலைவிலேயே யுயுத்ஸு பார்த்தான். ஐயத்துடன் தன்னைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த படைத்தலைவர்களிடம் விரைவு கூட்டும்படி கைகாட்டிவிட்டு பாய்ந்து அதை நோக்கி சென்றான். படைத்தலைவர்கள் எல்லைக்காவல் அரணுக்கு வருவது அரிது. அரசரோ நிகரானவரோ வந்திருக்கவேண்டும். அன்றி ஏதேனும் ஒவ்வாப் பெருநிகழ்வு அமைந்திருக்கவேண்டும்.

ஒவ்வொரு நாளும் போர் முடிந்ததும் படையிலிருந்து கிளம்பி அருகிலிருக்கும் சிற்றூரான மிருண்மயத்திற்குச் சென்று அங்கு காவலர்மாளிகையில் தங்கியிருந்த திரௌபதிக்கும் குந்திக்கும் போர்நிகழ்வை சுருக்கி சொல்லி அவர்களின் வினாக்களுக்கு விளக்கமளித்து மீளும் பொறுப்பு அவனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. அப்போரின் துயர்மிகுந்த நிகழ்வாக அவன் உணர்ந்தது அதைத்தான். மாளிகையின் முகப்பிலேயே அவனை எதிர்கொண்டு உள்ளே அழைத்துச்செல்ல திரௌபதியின் சேடி நின்றிருப்பாள். அவளுக்கு சற்று அப்பால் தொடர்பற்று தனியாக நிற்பதுபோல் குந்தியின் சேடி நின்றிருப்பது தெரியும். அவர்கள் அவனிடம் ஒருசொல்லும் உரைப்பதில்லை. தலைவணங்கி உள்ளே அழைத்துச் செல்வர். சொற்களை உள்ளத்தில் அடுக்கியபடி அவன் உடன்செல்வான்.

காவலர்தலைவனின் சிறிய இல்லத்தில் மரத்தாலான கூடத்தில் இரு பீடங்களில் குந்தியும் திரௌபதியும் அமர்ந்திருப்பார்கள். முதல் நாளிலிருந்தே அவர்கள் செய்தி கேட்பதற்காக முழு அரசஉடையுடன்தான் வந்து அமர்ந்திருந்தனர். அவர்களுக்குப் பின்னால் வாய்மணம் பரப்பிய தாலம் ஏந்திய சேடியர் நின்றனர். அறைக்குள் நுழைவாயிலை காத்தபடி இரு ஆணிலிகள் நின்றனர். யுயுத்ஸுவுக்கு பீடம் அளிக்கப்படுகையிலும் வாய்மணமும் இன்னீரும் அளிக்கப்படுகையிலும் அவர்கள் ஒரு சொல்லும் உரைப்பதில்லை. சேடியரும் ஆணிலிகளும் அகன்றதும் குந்தி சொல்க என கையசைத்து ஆணையிடுவாள். அவன் அவர்களின் விழிகளை நோக்காமல் நோக்கு சரித்து நிலத்தையோ அப்பால் அசையும் திரைச்சீலைகளையோ பார்த்தபடி நிகழ்வுகளை சொல்வான்.

யுயுத்ஸு முதல்நாள் அவ்வமர்வில் அவர்கள் அணிந்திருந்த அரசஉடையைக் கண்டதுமே அங்கு நடந்துகொள்ள வேண்டிய முறையை உய்த்துணர்ந்துகொண்டான். ஆகவே முறைப்படி குந்திக்கும் பின்னர் திரௌபதிக்கும் அவைமுறைமைச் சொற்களை உரைத்து தலைவணங்கி அமர்ந்தான். போர்நிகழ்வுகளை எந்த நாடகமும் இன்றி வெறுமனே செய்திகளாக எளிய சொற்களில் அவர்களிடம் சொன்னான். வெற்றியும் தோல்வியும் படைநகர்வும் சூழ்கையும் ஒரே அளவு சொற்களில் அமையவேண்டுமென்பதை உளம் கொண்டான். குரலில் உணர்வோ ஏற்ற இறக்கமோ இல்லாது பார்த்துக்கொண்டான். அவர்கள் தங்கள் முகங்களில் எந்த உணர்வும் அசைவுமின்றி நிலைத்த விழிகளுடன் கேட்டிருந்தனர்.

கொலைகள், குருதிப்பெருக்குகள் வழியாக அவனது சொற்கள் சென்று நின்றதும் மறுசொல் உரைக்காமல் கையசைத்து செல்க என்று காட்டி குந்தி எழுந்தாள். அருகே நின்றிருந்த சேடி அவள் வெண்பட்டு ஆடையின் மடிப்புகளை சீர்படுத்த கைகூப்பி அவையை என அக்கூடத்தை வணங்கி வலம் திரும்பி வெளியேறினாள். அவள் வெளியேறிய பின்னர் திரௌபதியும் எழுந்து சேடியர் ஆடை சீரமைக்க இடைகொடுத்து பின் அவை வணங்கி அத்திசையிலேயே தானும் சென்று அகன்றாள். அதன் பின் யுயுத்ஸு எழுந்து இரு பீடங்களுக்கும் தலைவணங்கி இடந்திரும்பி கூடத்திலிருந்து வெளியே வந்தான்.

ஒவ்வொரு முறை அந்த அவையிலிருந்து வெளியே வரும்போதும் பெரும் விடுதலை ஒன்றை உணர்ந்தவன்போல் அவன் நீள்மூச்செறிவான். ஒவ்வொரு முறையும் சொல்லத்தொடங்குகையில் “இன்றைய போர் நமக்கு வெற்றிமுகம் அளிப்பதாக முடிந்தது. இன்று நம் படைத்தலைவர்கள் வகுத்த சூழ்கை அதன் இலக்கை அடைந்தது. களத்தில் நம் அரசர்களும் வீரர்களும் தங்கள் குல மாண்புக்குரிய வீரத்தை வெளிப்படுத்தினர். விண்ணவரும் தெய்வங்களும் குனிந்து நோக்கி வாழ்த்தும் செயல்கள் அவை” என்று சொல்கையில் அச்சொற்களின் பொருளில்லாமை அவனை பின்னிருந்து எவரோ வேல்முனையால் தொடுவதுபோல் உறுத்தியது.

ஆனால் முதல்நாள் அப்பொருளிலாச் சொற்றொடர்கள் தொடங்கியபோது அந்த அயன்மையே அவனை இயல்பாக பேசவைத்தது. எஞ்சிய பேச்சின் ஒழுங்கையும் வடிவையும் அதுவே முடிவு செய்தது. எவ்வகையிலும் சொல்பவருக்கோ கேட்பவருக்கோ தொடர்பற்றது என்றும் எப்போதுமே சொல்லப்பட்டு வருவது என்றும் எவராலும் மாற்றிவிட முடியாத தொல்கதை என்றும் அந்நிகழ்வை அது எண்ணிக்கொள்ள வைத்தது. அவ்விலக்கத்தால் அவனால் கூரிய சொற்களை தயக்கமில்லாது சொல்லமுடிந்தது.

ஆனால் தொடர்ந்த நாட்களில் அவ்வாறு சொல்வது அவனை நெருடத்தொடங்கியது. முதலில் உள்ளே எழும் சிறு அசைவின்மை ஒன்றால் பின்னர் சொல்லிக்கொண்டிருக்கும் சொற்களின் அனைத்து ஒழுங்குகளையும் குலைக்கும்படி உள்ளிருந்து எழும் இன்னொரு குரலாக அந்த உறுத்தல் உருமாறியது. ஒவ்வொரு சொல்லையும் அதன் கவ்வுதல்களிலிருந்து பிடுங்கி உள்ளிருந்து எடுக்க வேண்டிய நிலை வந்தது. பின்னர் அவ்வுளப் போராட்டத்தின் வெம்மையால் உடல் மெல்ல நடுங்க குரல் தழுதழுக்க அவன் போர்நிகழ்வுகளை சொல்லலானான். சொல்லி முடித்ததும் தொடுத்த அம்புகளென அந்நிகழ்வுகளனைத்தும் அவனிடமிருந்து செல்ல நாண் தளர்ந்ததுபோல் அவன் உள்ளம் நிலை மீண்டது. எழுந்து வெளிவருகையில் உள்ளிருந்து அக்கதையை எதிர்கொண்ட எதிர்க்குரலே அவன் அகமென இருந்தது.

ஒவ்வொருநாளும் மிருண்மயத்தின் முற்றத்தில் வந்து இருண்ட வானை அண்ணாந்து பார்த்து விண்மீன்களை நோக்கியபடி இடையில் கைவைத்து அவன் நின்றான். வேறு எவரிடமோ தன்னுள் எஞ்சும் கதையை சொல்ல விழைபவனாக. அன்று விண்மீன்கள் தெரியாமல் முகில் மறைத்திருந்தது. இருளுக்குள் மின்னல்கள் கிழிபட்டு துடித்துக்கொண்டிருந்தன. முரசொலிகள்போல தென்மேற்குச்சரிவில் இடியோசை மெல்ல ஒலித்து எதிரொலிகளென நீண்டு தேய்ந்து மறைந்தது.

புரவியிலேறிக்கொண்டு ‘செல்வோம்’ என்று சொல்லிக் கிளம்பியபோது யுயுத்ஸு எப்போதும்போலவே அன்றும் நாளை இங்கு நான் வரப்போவதில்லை, இப்பணியை அன்றி வேறு எந்தப் பணியையும் இங்கு நான் இயற்ற இயலும், இதையே நான் ஆற்றவேண்டுமெனில் களம் சென்று நெஞ்சு கொடுத்து குருதியுடன் வீழ்வதன்றி எனக்கு வேறு வழியில்லை என்று யுதிஷ்டிரரிடம் சொல்லவேண்டுமென்று எண்ணிக்கொண்டான். புரவி மையச்சாலைக்கு வந்து மிகத் தொலைவில் வானில் செவ்வொளிக் கசிவென எழுந்திருந்த பாண்டவப் படையை நோக்கி செல்லத்தொடங்கியபோது ஒருபோதும் தான் அதை சொல்லப்போவதில்லை என்று உணர்ந்து நீள்மூச்செறிந்தான்.

காவலரணை நெருங்கியதும் யுயுத்ஸு புரவியிலிருந்து இறங்கினான். அங்கு நின்றிருந்த வீரன் அவனை நோக்கி தலைவணங்கி அருகணைந்தான். “காவலர்தலைவர்கள் இங்கு என்ன செய்கிறார்கள்?” என்று யுயுத்ஸு கேட்டான். அதற்குள் காவலரணுக்குள் இருந்து வெளிவந்த படைத்தலைவன் அவனை நோக்கி தலைவணங்கி “இளவரசே, விதர்ப்ப நாட்டு அரசர் ருக்மி வந்துள்ளார். இளைய பாண்டவர் அர்ஜுனரை பார்க்க வேண்டுமென்று விழைகிறார்” என்றான். யுயுத்ஸு நிகழ்ந்த அனைத்தையும் ஒருகணத்தில் புரிந்துகொண்டு “எங்கிருக்கிறார்?” என்றான். “அவருக்கு என்ன முறைமை செய்யவேண்டுமென்று எங்களுக்கு தெரியவில்லை. அரசர்கள் இவ்வாறு நேரடியாக தனித்து வரும் வழக்கமில்லை” என்றான் படைத்தலைவன்.

“தனித்தா வந்திருக்கிறார்?” என்றான் யுயுத்ஸு. படைத்தலைவன் “தன்னந்தனியாக வந்திருக்கிறார். படைக்கலங்கள் எதுவும் இல்லை. அரசர் என்பதற்கான கணையாழி மட்டுமே உள்ளது. அவர் அருகணைந்து ஒளிக்குள் நுழைந்தபோது யாரோ முனிவர் என்று காவலர்தலைவர் எண்ணினார். அவர் இவரெனத் தெரிந்ததும் முழவொலி எழுந்தது. நாங்கள் இங்கு வந்தோம். முடிவெடுப்பதற்குள் தாங்கள் வந்துவிட்டீர்கள்” என்றான். “அரசர்கள் முன்னரே அறிவிப்பின்றி படைக்குள் நுழையலாகாது. படை என்பது ஒரு நகரம். நகர்நுழைவுக்கான எல்லா முறைமைகளையும் அவர்கள் பேணியாகவேண்டும்” என்றான் காவலர்தலைவன்.

யுயுத்ஸு காவலரணுக்குள் நுழைந்தபோது சிறுபீடத்தில் கால்மேல் கால் போட்டு கைகளை மார்பில் கட்டியபடி சாய்ந்தமர்ந்திருந்த ருக்மியை கண்டான். அருகே சென்று தலைவணங்கி “நான் தார்த்தராஷ்டிரனான யுயுத்ஸு. பாண்டவப் படைகளின் சொல்லாயும் பொறுப்பிலிருக்கிறேன். தங்கள் பணிக்கென தலைகொண்டவன்” என்றான். ருக்மி வலக்கையால் அவனை வாழ்த்தி “இங்கு வந்ததை நான் அறியவில்லை” என்றான். யுயுத்ஸு “போர் தொடங்குவதற்கு முன்னரே வந்துவிட்டேன்” என்றான். ருக்மி “நான் முதலில் அங்குதான் சென்றேன். அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்து திரும்பி என் நாட்டிற்கு செல்லவேண்டும் என்றே கிளம்பினேன். எனது படைத்தலைவர்கள் அதை விரும்பவில்லை. கௌரவர்களால் திருப்பியனுப்பப்பட்டால் நாம் படைக்கூட்டுக்கு தகுதியானவர்கள் அல்ல என்பதையே வரலாற்றில் நிலைநிறுத்துகிறோம் என்று என் முதன்மை படைத்தலைவன் சக்ரரதன் சொன்னான்” என்றான்.

யுயுத்ஸு அவன் அப்படி நேரடியாக பேசத்தொடங்கியதை எண்ணி வியப்புகொண்டான். ஆனால் அவனறிந்த ருக்மி எப்போதுமே முறைமைகளறியாத நேர்ப்பேச்சு கொண்டவன். “நான் தூதுச்செய்தியுடன் வந்துள்ளேன்… நானே தூதனானேன். ஏனென்றால் இச்செய்தியை என்னால்தான் சொல்லமுடியும்…” என்றான். யுயுத்ஸு மெல்ல இடைமறித்து “நான் தங்களை அழைத்துச்செல்கிறேன்…” என்றான். ஆனால் ருக்மி பேசவிழைந்தான் என தெரிந்தது. அவன் மிகக் குறைவாகவே பேசுபவன். அது சொல்லடங்கியதால் அல்ல, சொல் திரளாமையால். அத்தகையோர் பேசத்தொடங்கினால் அதிலேறி ஒழுகிச்செல்வார்கள்.

ருக்மி “என் படைத்தலைவர்கள் சொல்வது உண்மை என தோன்றியது. துரியோதனரால் திருப்பி அனுப்பப்பட்டேன் என்ற செய்தியே என் குடிக்கு நஞ்சுபோன்றது. சூதர்கள் எங்களை கோழைகள் என்றும் பயிலாதோர் என்றும் நம்பத்தகாதோர் என்றும் சொல்லிச் சொல்லி நிறுத்திவிடுவார்கள்” என்றான். யுயுத்ஸு “எதன் பொருட்டு அவர்கள் உங்களை திருப்பி அனுப்பினார்கள் என்பதை சொல்லில் நிலைநிறுத்தலாமே?” என்றான். “ஆம், ஆனால் அது சூதர் பாடலில் நிலைகொள்ளாது. ஏனெனில் சூதர்கள் சொல்லிச் சொல்லி தார்த்தராஷ்டிரராகிய துரியோதனருக்கு ஓர் இயல்பை அளித்துள்ளார்கள். அதை அவர்கள் எப்போதும் மாற்றப்போவதில்லை. சூதர்பாடல்கள் ஊற்றிலிருந்து கிளம்பிய நதி போன்றவை. அவை மீண்டும் ஊற்றுக்கு ஒருபோதும் செல்வதில்லை என்பார்கள்” என்றான் ருக்மி.

“தன் இயல்புக்கு மாறான ஒன்றை அவர் கூறினார் போலும்!” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், நான் என் குலத்தாருடன் போரிடவேண்டாம் என்றார். எந்நிலையிலும் உடன்பிறந்தார் ஒருவரோடொருவர் போரிட்டு குருதி சிந்தலாகாது என்றார்” என்றான் ருக்மி. “மண்ணுக்காகவும் புகழுக்காகவும் நிகழ்த்தப்படும் அனைத்துப் போர்களும் பொருளற்றவையே என்றும் சொன்னார்.” யுயுத்ஸு “இந்தப் போரிலிருந்து நிறையவே கற்றுக்கொண்டிருக்கிறார்!” என்றான். ருக்மியின் உதடுகள் இகழ்ச்சியுடன் வளைந்தன. “அங்கிருப்பவர் யுதிஷ்டிரரா என்ற ஐயத்தை நான் அடைந்தேன். போர் தொடங்கியபின் துரியோதனர் யுதிஷ்டிரர் ஆகிவிட்டார் என்றால் இங்கு யுதிஷ்டிரர் துரியோதனராக இருப்பாரோ என்று எண்ணிக்கொண்டேன்” என்றான். யுயுத்ஸு “அவர்கள் இருவரும் ஒருவரே” என்றான்.

ருக்மி அதை புரிந்துகொள்ளாமல் கூர்ந்து நோக்க “விதர்ப்பரே, உங்களிடம் பேசியவையும் என் மூத்தாரின் இயல்புக்குரிய சொற்களே. அவரை இருபுறமும் இருவகையான தெய்வங்கள் நின்றாள்கின்றன. நீங்கள் சென்ற தருணம் நன்று இயற்றும் தெய்வங்களுக்குரியது” என்றான். ருக்மி “ஆம், அவர் நன்னிலையில் இல்லை என்பதை நானும் உணர்ந்தேன். ஆனால் என் படைகள் அவரால் திருப்பி அனுப்பப்பட்டன என்பதை எங்கும் என்னால் விளக்க இயலாது. நான் இயற்றவேண்டியதென்ன என்று படைத்தலைவர்களிடம் கேட்டேன். பாண்டவப் படைகளுடன் வந்து சேர்வதொன்றுதான் செய்வதற்குள்ளது என்றார்கள்” என்றான்.

யுயுத்ஸு புன்னகைத்து “உங்கள் வஞ்சினம் என்ன ஆவது?” என்றான். ருக்மி “ஆம், அது பொருளற்றுப் போகிறது. அதை என்ன செய்வதென்று தெரியாமல் வைத்திருக்கிறேன். என்னால் அசைக்க முடியாத மாபெரும் படைக்கலம் ஒன்று என் இல்லத்தில் கிடப்பது போலிருக்கிறது” என்றான். “மெய்யாகவே எனக்கு எதுவும் தெரியவில்லை” என ருக்மி எழுந்தான். மேலாடையை எடுத்து அணிந்தபடி பதற்றத்தால் சற்று நடுங்கிய குரலில் “நான் இளைய பாண்டவர் அர்ஜுனரை பார்க்கவேண்டும், அவரிடம் பேசவேண்டும்” என்றான். அவனுடைய தாடி செந்நிறமாக தழல்போல் அசைந்தது. அவர்களின் குடிக்கே ஹிரண்யரோமர்கள் என்று பெயர் என யுயுத்ஸு நினைத்துக்கொண்டான்.

“உன்னை கண்டால் யுதிஷ்டிரரைப்போல் தோன்றுகிறது. நீ எனக்கு உரிய வழிகாட்டமுடியும்” என்று ருக்மி சொன்னான். “நான் உடனே இளைய பாண்டவரை காணவேண்டும்…” யுயுத்ஸு “நீங்கள் பேச வேண்டியது மூத்தவர் யுதிஷ்டிரரிடமல்லவா?” என்றான். “அல்ல. அதற்கு முன் இளைய யாதவரிடம். அதற்கு முன்பு இளைய பாண்டவரிடம்” என்றான் ருக்மி. “இளைய பாண்டவரிடம் எனக்கு எஞ்சும் சொல் உள்ளது. முன்பு நான் துருமன் என்னும் கிம்புருடநாட்டு ஆசிரியரிடம் வில்பயின்றேன். அவர் எனக்கு அளித்த விஜயம் என்னும் வில்லுடன் நான் அஸ்தினபுரிக்குச் சென்று இளைய பாண்டவர் அர்ஜுனரை நிகர்ப்போருக்கு அழைத்தேன். அன்று இதே குருக்ஷேத்ரத்தில் நிகழ்ந்த போரில் நாங்கள் இருவரும் ஒருநாள் முழுக்க இணைநின்று போரிட்டோம். என் வீரத்தில் மகிழ்ந்த இளைய பாண்டவர் தேவையேற்படுகையில் நான் அவரை சென்று காணவேண்டும் என்றும் அவருடைய வில் எனக்கு உதவும் என்றும் சொல்லளித்தார்.”

யுயுத்ஸுவின் தோளில் கைவைத்து “இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளவேண்டிய தருணம் இது” என்று ருக்மி சொன்னான். “தாங்கள் நாடும் உதவி எது?” என்றான் யுயுத்ஸு. ருக்மி தத்தளிப்புடன் தலையை அசைத்து நீள் தாடியை கையால் பற்றி உருவி பின்னர் “என் படைகள் இங்கு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். ஒருநாளேனும் இங்கு கௌரவரை எதிர்த்து நாங்கள் போரிடவேண்டும்” என்றான். “தங்கள் உடன்பிறந்தோர் முன்னரே இங்குதான் இருக்கிறார்கள்” என்றான் யுயுத்ஸு. “ஆம், அவர்கள் என்னை இரு கை விரித்து ஏற்றுக்கொள்வார்கள். இதுகாறும் நான் இழைத்த அனைத்துப் பிழைகளையும் அவர்கள் எப்போதோ பொறுத்திருப்பார்கள். இத்தருணத்திற்காக காத்திருப்பார்கள் என்றே நான் எண்ணுகின்றேன். அந்தத் தோளிணைவு யுதிஷ்டிரர் அவையில் நிகழ்வதென்றால் நன்று. ஆனால் அதற்கு முன்…”

சொல்லின்மையால் தத்தளித்த ருக்மி கைகளை காற்றில் அசைத்து “அதற்கு முன் எனக்கொரு சொல் தேவை. நான் அதைத்தான் இளைய பாண்டவரிடம் எதிர்பார்க்கிறேன்” என்றான். “என்ன சொல்?” என்று யுயுத்ஸு கேட்டான். “நான் இளைய யாதவர் மேல் கொண்டுள்ள வஞ்சம். நான் இதுகாறும் வாழ்ந்தது அதன்பொருட்டே. அதை நான் கைவிடவேண்டுமென்றால்… எங்கும் இளிவரல் எழாது நான் அதை கடந்துசெல்லவேண்டுமென்றால்…” என ருக்மி தடுமாறினான். “அது இளைய யாதவரால் மட்டுமே இயலும். அவர் உளம்கொள்ளவேண்டும். அதற்கு அவரிடம் இளைய பாண்டவர் சொல்லவேண்டும்.”

யுயுத்ஸு தன்னுள் எழுந்த வெறுப்பை முகத்தில் காட்டாமல் மறைத்தபடி “அவர் ஆற்றவெண்டியதென்ன?” என்றான். “வெறுமனே என்னிடம் ஒரு அடியறைவு சொல்லுதல். வெறும் சொல்தான். தன் பிழையை பொறுக்கவேண்டுமென்று ஒரு கோரிக்கை. பொறுத்தேன் என்ற ஒரு சொல்லால் அத்தருணத்தை நானும் கடந்து செல்வேன். இதுவரை அள்ளிக்கொண்டுவந்த அனைத்தையும் அங்கு உதறிவிட விரும்புகிறேன்” என்றான் ருக்மி. தலையை அசைத்து “ஆம், அதற்கு பொருளேதுமில்லை. அது வெறும் நடிப்பு. ஆனால் அத்தகைய ஒரு நாடகத்தருணம் இல்லையென்றால் இந்த நீண்ட தவத்தை என்னால் முடித்துக்கொள்ள இயலாது. என் வாழ்வே பொருளற்றதாகிவிடும்” என்றான்.

யுயுத்ஸு “விதர்ப்பரே, இக்களத்தில் இங்குள்ள அனைவருடைய வாழ்வும் பொருளற்றதாகவே உள்ளது” என்றான். யுயுத்ஸுவின் சொல்லை ருக்மியால் புரிந்துகொள்ள இயலவில்லை. “நான் கூறவருவதை இளைய பாண்டவரால் புரிந்துகொள்ள முடியும். இது அரசுசூழ்பவரின் உணர்வல்ல. வஞ்சத்தாலும் சினத்தாலும் விழைவாலும் ஆட்டுவிக்கப்படும் ஷத்ரியர்களின் தடுமாற்றம். கூற்றைவிட அவர்கள் அஞ்சுவது சூதர் சொல்லைத்தான். ஆகவேதான் அவரை பார்க்கவேண்டுமென்று கேட்டேன்” என்றான். “தங்களை அவரிடம் கூட்டிச்செல்வது என் பணி” என்று யுயுத்ஸு சொன்னான்.

அர்ஜுனனின் படைபிரிவை நோக்கி கிளம்புவதற்குள்ளாகவே அருகிலிருந்த காவல்நிலையிலிருந்து அர்ஜுனனுக்கு ஒரு புறாச்செய்தியை அனுப்ப யுயுத்ஸு ஒருங்கு செய்தான். அதில் சுருக்கமாக ருக்மியின் வருகையின் நோக்கத்தை தெரிவித்திருந்தான். அவன் செய்தியை அனுப்பிவிட்டு வந்து புரவியிலேறிக் கொண்டபோது “முழுச் செய்தியையும் நீ அனுப்பியிருக்க வேண்டியதில்லை” என்றான் ருக்மி. யுயுத்ஸு “செய்தியை அனுப்பாமல் தங்களை நான் அழைத்துச்செல்ல இயலாது. எதன் பொருட்டு தாங்கள் அவரை பார்க்கவேண்டுமென்பதை அவர் அறிந்த பிறகே முடிவெடுப்பார். ஏனெனில் இப்போர் தொடங்கியபின் படைசூழ்கைக்கான அவையில் அவர் அமர்வதில்லை. போர் குறித்த எந்தச் சொல்லாடல்களுக்கும் வந்ததில்லை. போரும் அந்திப்பொழுதின் விற்பயிற்சியும் அவ்வப்போது இளைய யாதவரை சந்தித்து ஓரிரு சொற்கள் உரையாடுவதுமன்றி இங்குள்ள எவருடனும் அவருக்கு எத்தொடர்பும் இல்லை. காட்டில் யோகிகள் வாழ்வதுபோல் இங்கு வாழ்கிறார், காட்டுடன் எத்தொடர்புமின்றி” என்றான்.

ருக்மி “அவர் அவ்வாறுதான் இருக்க இயலும்” என்றான். அவர்களின் புரவி தாளமிட்டு மரப்பாதையில் விரைந்தது. புண்பட்டோரும் மாய்ந்தோரும் அகற்றப்பட்டு களம் ஒழிந்துவிட்டிருந்ததனால் குருக்ஷேத்ரத்தில் ஓசைகள் முற்றாக அடங்கிவிட்டிருந்தன. படைப்பிரிவுகளில் இரவு விளக்குகளன்றி பிற பந்தங்கள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன. விண்மீன் பரவிய வானத்தின் அமைதி தெரிந்தது. மிகத் தொலைவில் படைக்குப் பின்புறம் மருத்துவநிலையிலும் அதற்கும் அப்பால் உலைக்கூடங்களிலும் மட்டுமே வெளிச்சம் இருந்தது. குளிர்ந்த காற்று கந்தக மணத்துடன் வீசியது. சுழன்றுவந்தபோது அடுமனை மணம் அதிலிருந்தது.

ருக்மி கை சுட்டி “காட்டுக்குள் அது என்ன ஒளி?” என்றான். “சிதைகள்!” என்று சுருக்கமாக யுயுத்ஸு சொன்னான். ருக்மி ஒன்றும் சொல்லாமல் இடக்கையால் தாடியை நீவியபடி சிதைச் செம்மையை விழிநிலைத்து நோக்கிக்கொண்டு புரவியில் அமர்ந்திருந்தான். அவன் என்ன எண்ணுகிறான் என்று யுயுத்ஸுவுக்கு புரியவில்லை. அவர் ஏதும் எண்ணுவதே இல்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டது. என்றேனும் தன்னைக்கடந்து ஒரு சொல் எண்ணியிருப்பாரா இவர்? தங்கள் புகழுக்கும் செல்வத்திற்குமென களம் காண்கிறார்கள். பல்லாயிரம் உயிர்களை வைத்து விளையாடுகிறார்கள்.

அர்ஜுனன் பதினெட்டாவது படைப்பிரிவில் இருப்பதாக புறா செய்தி கொண்டுவந்தது. பதினெட்டாவது படைப்பிரிவை நோக்கி சென்று முதல் காவலரணில் தன் புரவியை நிறுத்தி இறங்கிய யுயுத்ஸு தன் வருகையை அறிவித்தான். அங்கு காவலுக்கு நின்றிருந்த காவலன் “தங்களுக்காக காத்திருக்கிறார்கள்” என்றான். “யார்?” என்று யுயுத்ஸு கேட்டான். “இளைய யாதவரும் இங்கு வந்திருக்கிறார். தங்களுக்காக காத்திருக்கிறார்” என்றான் காவலன். யுயுத்ஸு அதை எப்படி எதிர்பார்க்காமல் இருந்தேன் என்று எண்ணிக்கொண்டான். காவலன் அவர்களின் வரவை அறிவிக்கும்பொருட்டு சென்றான்.

அவனுடன் நடந்து வந்த ருக்மி காவலர்தலைவன் குறிமொழியில் சொன்னதை புரிந்துகொள்ளவில்லை. “நான் இளைய பாண்டவரிடம் சொல்வதற்கொன்றே உள்ளது. என் நோக்கை அவர் இளைய யாதவரிடம் சொல்ல வேண்டும். இன்று தெளிவாக உணர்கிறேன் எனது வஞ்சத்தின் ஊற்றுமுகம் என்ன என்பதை. அது வீரனென்றும் அரசனென்றும் நான் கொண்ட ஆணவம். ஷத்ரியன் என்று அவைகளில் தருக்கி நிற்க விழைந்தேன். யாதவன் என் தங்கையை மணம்கொண்டு சென்றான். அதை தடுக்கச் சென்ற என் தாடியை மழித்து சிறுமை செய்தான். செல்லுமிடமெங்கும் சூதர் சொல்லில் அச்சிறுமை வாழ்வதை கண்டேன். அதைக் கடந்து சூதர்சொல்லில் பெருமை நிலைநாட்டி மண்நீங்கிச் செல்ல வேண்டுமென்பதற்கப்பால் நான் எதைப்பற்றியும் எண்ணவில்லை.”

“அதன் பொருட்டே இதுநாள் வரைக்கும் வாழ்ந்தேன். அவ்வஞ்சத்தை ஒவ்வொரு நாளும் நிகழ்வுகள் பெருக்கின. வெவ்வேறு அவைகளில் நானும் எந்தையும் கொண்ட சிறுமைகள். என் உடன்பிறந்தானுக்கு நிகரான சிசுபாலனை தலைவெட்டிச் சரித்து அவர் கொன்ற முறை…” என்றான் ருக்மி. யுயுத்ஸு “அவரும் இத்தகைய ஆணவத்தால் ஆட்டுவிக்கப்பட்டவரே” என்றான். “ஆம், ஆணவமே ஷத்ரியர்களை ஆக்குகிறது. ஆணவமில்லாத ஷத்ரியன் வேலேந்தி படைப்பெருக்கில் ஒரு துளியென நின்று பொருதி இறக்கும் ஊழ் கொண்டவன்” என்றான் ருக்மி. யுயுத்ஸு ஏதோ சொல்ல வந்து அச்சொல்லை தவிர்த்தான்.

“அதைவிட ஜராசந்தரின் இறப்பு!” என்றான் ருக்மி. “உடல்கிழித்து வீசப்பட்டார்! என்னளவில் அவை எளிய போர்விளைவுகள் அல்ல. அவர்கள் ஒவ்வொருவராகவும் நின்று நான் நடித்திருக்கிறேன். ஆகவே அவர்கள் ஒவ்வொருவருடனும் இறந்தேன். ஒவ்வொரு இறப்புக்குப் பின்னும் ஏழு மடங்கு வஞ்சத்துடன் எழுந்தேன். ஆனால் இதுவரை எனக்கிருந்த இழிவைவிட நூறு மடங்கு இழிவை கௌரவர்களால் போர்முனையிலிருந்து விலக்கப்பட்டமை எனக்கு அளிக்குமெனும்போது அனைத்தும் குழம்பி சரிந்து கிடக்கின்றன கண்முன்.” ருக்மி “அங்கே இளைய பாண்டவர் தனித்திருக்கிறாரா? எங்களுடன் எவரும் இருப்பதை நான் விரும்பவில்லை” என்றான். யுயுத்ஸு அதற்கு மறுமொழி உரைக்கவில்லை.

“எனக்கு ஒரு தெளிவு வேண்டும்… அதை இளைய பாண்டவர் அளிக்கமுடியும்” என்று ருக்மி சொன்னான். “நான் பாண்டவப் படைகளில் சேர்வதற்கான அழைப்பை இளைய யாதவரே எனக்கு அளிக்க வேண்டும். அவர் எனக்கிழைத்த பிழைக்கு ஒரு சொல்லளித்து என்னை அழைத்தார் என்றும் என்னால் இடர்ச்சூழலை கடந்துசெல்ல இயலும்.” யுயுத்ஸு “அதை அவரே எத்தடையுமின்றி இயற்றுவார். சூதர்சொல்லில் வாழும் பொருட்டு அவர் எதையும் இங்கு செய்யவில்லை” என்றான். “விதர்ப்பரே, ஷத்ரியர்கள் இருவகை. சூதர்களுக்கு பின் செல்பவர், சூதர்களால் தொடரப்படுபவர்.”

ருக்மி அவன் சொற்களை புரிந்துகொள்ளவில்லை. கைவீசி “வீண்சொற்களில் எனக்கு ஆர்வமில்லை” என்றான். “ஆனால் நீங்கள் சொல்வதை இளைய பாண்டவர் ஏற்றுக்கொள்வார் என்று எனக்கு தோன்றவில்லை. உங்களை அவர் ஏற்றுக்கொண்டாரெனில் அது அவருக்கே இழிவு. நான்குநாள் போரில் கௌரவருடன் எதிர்நிற்க இயலாமையால் உங்களை படைத்துணைக்கு அழைத்தார் எனும் பொருள் வரும். அவருடைய வில்வல்லமைக்கும் தோள்திறனுக்கும் அது இழுக்கு” என்றான் யுயுத்ஸு. “இளைய பாண்டவர் பீமன் இங்கிருந்தால் சினந்து இழிசொல்லுரைத்து உங்களை திரும்பிச்செல்ல ஆணையிடுவார்.”

ருக்மியின் கண்கள் இடுங்கின. “ஆம்” என்றான். “அதை என் படைத்தலைவர்கள் கூறினார்கள். ஆகவேதான் பீமனை அவையில் சந்திப்பதற்கு முன்னரே அச்சொல்லை அர்ஜுனனிடமிருந்து பெற்றுவிடவேண்டுமென்று எண்ணினேன்” என்றான். “அதை நீங்கள் இளைய யாதவரிடமிருந்தே பெறலாமே?” என்றான் யுயுத்ஸு. “அவர்முன் சென்று நின்றால் அக்கணமே இயல்பாக என் ஆணவம் வடிந்து தோள்கள் குறுகிவிடக்கூடும். என்னையறியாமலே நான் பணிந்துவிடக்கூடும்” என்றான் ருக்மி.

யுயுத்ஸு திரும்பிப்பார்த்தான். முதன்முறையாக அவனிடம் வியப்புணர்ச்சி எழுந்தது. ருக்மி “பகைமையுடன் என்றாலும் இத்தனை ஆண்டுகள் ஒவ்வொரு கணமும் என இளைய யாதவரை எண்ணியிருந்தவன் நான் என்று தார்த்தராஷ்டிரர் சொன்னார். அது மெய். இப்புவியில் அவர் மணந்த மங்கையரைவிட அவரை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் சிசுபாலனும் நானுமே. கொன்று அவரை விண்புகச் செய்தார். வென்று என்னை அவர் விண்புகச் செய்யக்கூடும். அத்தருணத்தை நான் அறிவேன். ஆம், ஐயமே இல்லை. அவரை எதிர்கொண்டு அருகில் கண்டால் சென்று கால் பணிந்து வணங்குவதன்றி வேறு எதையும் என்னால் செய்ய இயலாது. அதற்கு முன்னரே அவரிடமிருந்து ஒரு சொல்லில் ஓர் அழைப்பு எனக்கு இளைய பாண்டவரினூடாக கிடைக்குமெனில் என் குலத்தார் முன் நிமிர்ந்து நின்று சொல்ல ஏதுவாகும். அது ஒன்றையே இத்தருணத்தில் எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.

“இப்போர் சென்றுகொண்டிருக்கும் திசையை நானறிவேன். ஒவ்வொரு நாளும் பேரழிவின் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. நானும் என் படையும் இப்போரில் அழிவோம் என்பது ஒரு வாய்ப்பே. அதற்கு நான் தயங்கவில்லை. இவை இயல்பாக உரிய முறையில் முடியவேண்டும் என்பதற்கு அப்பால் நான் எண்ணுவது பிறிதில்லை” என்றான் ருக்மி. யுயுத்ஸு “ஒவ்வொன்றும் உரிய முறையில் முடிவதற்கான வழி ஒன்றே. அவை நிகழ்வொழுக்கில் சென்று தங்கள் முடிவை தாங்களே அடைவதற்கு விடுதல். அன்றாட வாழ்க்கையில் அனைத்தையும் பற்றிக்கொள்வதே வாழ்திறன். பிறிதோர் எல்லையில் அனைத்துப் பிடிகளையும் விட்டுவிடுவதே உலகியல் முதிர்வு” என்றான்.

ருக்மி “ஆம். உன் பேச்சும் யுதிஷ்டிரரைப் போலவே” என்றான். அவர்கள் குடிலை அணுகுவதற்குள் கதவு திறந்து உள்ளிருந்து இரு கைகளையும் விரித்தபடி வெளியே வந்த இளைய யாதவர் “விதர்ப்பரே, தாங்கள் வருகிறீர்கள் என்ற செய்தி கேட்டு வந்தேன். முன்பு போரில் உங்களுக்கு பெரும்பிழையொன்றை இழைத்துளேன். அதன் பொருட்டு என்னையும் என் குடியையும் தாங்கள் பொறுத்தருளவேண்டும். தங்கள் வில்லும் தோளும் எங்கள் படைகளுக்கு துணையென அமைய வேண்டும். பெருங்குடி ஷத்ரியர்கள் பிற குலத்தோரின் பிழை பொறுத்தலினூடாகவே மாண்பு கொள்கிறார்கள்” என்றபடி வந்து ருக்மியின் கால்களை தொடுவதற்காக குனிந்தார்.

உடல் நடுநடுங்க ருக்மி இரண்டடி பின்வைத்து யுயுத்ஸுவை பற்றிக்கொண்டான். அவன் பிடித்துக்கொண்ட யுயுத்ஸுவின் கையும் நடுங்கியது. கால்தளர்ந்து நிலத்தில் அமர்ந்த ருக்மி தன் முன் நிலத்தை தொட்டு தலை தாழ்த்தி “எந்தையே! என்னிறையே! இவ்வாடலில் நான் எங்கு அமைய வேண்டுமோ அதை இயற்றுக!” என்றான். இளைய யாதவர் அவன் இரு தோள்களையும் பற்றித் தூக்கி தன் நெஞ்சோடணைத்துக்கொண்டு “நன்று திகழ்க! புகழ் பெருகுக!” என்றார்.

முந்தைய கட்டுரைதோற்கடிக்கப்பட்ட அறிவுத்தரப்பு
அடுத்த கட்டுரைசர்க்கார் அரசியல்