‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-46

ele1பார்பாரிகன் சொன்னான்: இடும்பர்களே கேளுங்கள்! அன்று புலரி எழும் பொழுதில் கௌரவ அரசன் துரியோதனனின் தனிக்குடிலுக்குள் துரோணர், கிருபர், சல்யர், கர்ணன், அஸ்வத்தாமன், பூரிசிரவஸ், கிருதவர்மன் என ஏழு வில்லவர்களும் கூடி அமர்ந்திருந்தனர். துயிலுக்குப் பின் துரியோதனன் உளம் தேறி வந்திருந்தான். முந்தைய நாள் இரவெல்லாம் அவனை அலைக்கழித்த அனைத்தையும் கடந்து அன்று காலை தன் மைத்துனனின் உயிர்காப்பதொன்றே கடமை என்று எண்ணி பிறிதொருவனாக மாறியிருந்தான். கர்ணன் மட்டும் இரவெலாம் உழன்று உளம் தேறாதவனாக அக்குடிலின் ஓரத்தில் கைகளை கட்டிக்கொண்டு சிறிய பீடத்தின்மீது தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

“இப்படைசூழ்கையை எந்நிலையிலும் அவர்களால் எதிர்கொள்ள இயலாது. நமது சகடச்சூழ்கையின் நான்கு எல்லையிலும் வில்லவர்களை நிறுத்தியிருக்கிறோம். பின்நிரையில் தம்பியர் உள்ளனர். முன்நிரையில் வில்லவர் எழுவர். இம்முறை நம்முடைய இலக்கு அர்ஜுனன் மட்டுமே. பால்ஹிகர் பீமனை எதிர்கொள்ளட்டும். அவரைக் கடந்து அவன் நமது படைகளை அணுக இயலாது. எட்டு திசைகளிலும் அர்ஜுனனை சூழ்ந்துகொள்வோம். நாம் எண்ணிய திசையில் மட்டுமே அவன் நகர வேண்டும். பகலெழுந்து அந்தி சரிவது வரை நம் அம்புகளுக்கு மாற்றம்பு எய்தே அவன் கை சலிக்கவேண்டும். அந்தியில் நாம் வெல்வோம்” என்றான் துரியோதனன்.

அதை அவர்கள் முன்னரும் நூறுமுறை சொல்லியிருந்தனர். சொல்லிச் சொல்லி அதை தங்களுக்கே நிறுவிக்கொண்டனர். அது நிகழ்ந்தாகவேண்டும் என்று அவர்கள் தெய்வங்களுக்கு அதனூடாக அறிவுறுத்தினர். ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளே மெல்லிய வருடல்போல் ஓர் ஐயம் இருந்துகொண்டிருந்தது. “இது இன்று நாம் வகுத்துக்கொண்டிருக்கும் சூழ்கை. இதில் பிழையென என்னென்ன நிகழக்கூடும் என்பதை ஒவ்வொருவராக கூறுக!” என்றான் அஸ்வத்தாமன். “பிழையற்ற சூழ்கையென்றே இது வகுக்கப்பட்டுள்ளது. ஆயினும் அறியாப் பிழை ஏதேனும் இருந்தால் இப்போதே அப்பழுதையும் அடைத்துக்கொள்வோம்.”

துரியோதனன் “நம்மில் ஒவ்வொருவரும் அர்ஜுனனாக இருந்தால் இச்சூழ்கையை எவ்வாறு வெல்வோம் என்பதை கூறுக!” என்றான். அவர்கள் படைசூழ்கை வகுக்கப்பட்ட தோல்சுருளை கையில் வாங்கி கூர்ந்து நோக்கினர். சல்யர் “நான் அனைவரையும் எதிர்க்க மாட்டேன். ஒருவரை மட்டுமே எதிர்ப்பேன். பிற அனைவரையும் என் மைந்தரையும் உடன்பிறந்தாரையும் கொண்டு எதிர்க்க வைப்பேன். என்னை தடுத்து நிறுத்துவதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் எதிரிகளில் ஒருவரை களத்தில் கொன்று வீழ்த்துவேன். தங்களில் ஒரு பெருவீரர் வீழ்ந்ததை உணர்ந்ததுமே கௌரவப் படை நிலையழிந்து கூச்சலிடத் தொடங்கும். அந்தக் குலைவை பயன்படுத்திக்கொண்டு ஊடுருவி உட்சென்று ஜயத்ரதனை கொல்வேன்” என்றார்.

“ஜயத்ரதனை கண்டுபிடிப்பதொன்றும் அத்தனை கடினமானது அல்ல. அவனை சூழ்ந்திருக்கும் அத்தனை படைவீரரும் அந்த இடத்தை அறிந்திருப்பார்கள். படைக்கொந்தளிப்பில் அவன் இருக்குமிடம் மட்டும் அசையாமலிருக்கும். ஏனெனில் அவன் அசைவதில்லை. ஆகவே அவன் காவல்வீரர்களும் நிலைமாறுவதில்லை. படைகள் அணிகுலைந்து விரியும்போது ஓர் இடம்நோக்கி படைகள் குவிந்து செறிவடையும். ஏனென்றால் நிலைகுலைவின்போது அவனை காக்கவேண்டும் என்னும் எண்ணமே மேலெழும்” என்றார் சல்யர். “அனலம்பைத் தொடுத்து அவன் இருக்கும் இடத்தை முற்றாகவே எரிய வைப்பேன். வைக்கோலில் மறைந்திருக்கும் சிற்றுயிரை மொத்தமாகவே கொளுத்திவிடுவதே உகந்தது.”

“ஆம், அது நல்ல திட்டம்தான்” என்று துரியோதனன் சொன்னான். அஸ்வத்தாமன் “அதை குறித்துக்கொள்கிறேன், மத்ரரே. சைந்தவர் நிலையாக ஓர் இடத்தில் இருக்கமாட்டார். நம் படைகளுக்குள்ளேயே அவரும் அலைவுகொண்டிருப்பார்” என்றான். “எந்நிலையிலும் நம் படைகளில் ஒரு சிறு திறப்புகூட உருவாகக் கூடாது. எங்கு எவர் புகுந்தாலும் உடனே அவரை சூழ்ந்துகொள்ளவே நாம் முயல்வோம். இன்று அவரை வெளியே நிறுத்தி நாம் பின்னடைந்து இணைந்து மீண்டும் தடைச்சுவரென்று ஆகிவிடவேண்டும்” என்றான். “ஆம்” என்று துரியோதனன் சொன்னான்.

பூரிசிரவஸ் “நான் அர்ஜுனன் என்றால் போரை நெடுநேரம் ஒரே விசையில் நடத்துவேன். எங்கோ ஓர் இடத்தில் கௌரவப் படைகள் தாங்கள் வெல்லப்பட முடியாதவர் என்று எண்ணச் செய்வேன். அஞ்சிப் பின்னடைவதுபோல் நடிப்பேன். அத்தருணத்தில் முழு விசையும் கூட்டி போரிடத் தொடங்குவேன். ஐந்திரம் என்னும் ஆற்றல்மிக்க அம்பு அர்ஜுனனாகிய என்னிடம் உள்ளது. என் தந்தை இந்திரனால் எனக்கு அளிக்கப்பட்டது. இடிமின்னலை எழுப்பி மண்ணை நடுங்கச்செய்வது அது. அது கௌரவப் படையில் பெரும் சந்தடியை உருவாக்கும். மையத்திலிருந்தவர்கள் கலைந்து அங்குமிங்கும் ஓடுகையில் அவர்களில் ஒரு சாரார் ஜயத்ரதனை காக்கும்பொருட்டு சூழ்வார்கள். அச்சூழ்கையின் மையத்தில் அவனிருப்பான் என்பதை எளிதுணர்ந்ததும் வஜ்ராஸ்திரத்தால் அந்த இடத்தை அறைந்து முற்றாக அழிப்பேன். சென்று விழுந்த இடத்தை வெடித்துச் சிதறவைத்து ஆழ்ந்த குழியாக ஆக்கும் ஆற்றல் அதற்குண்டு. ஜயத்ரதன் அழிவான்” என்றான்.

துரோணர் “இதுநாள்வரை போர்நெறிகளின் பொருட்டு நான் எடுக்காது வைத்த சம்மோஹனாஸ்திரம் என்னும் பேரம்பை எடுப்பேன். அது விழிகளை அதிரச்செய்து உளம்கலங்கச் செய்வது. அது கௌரவப் படைகளை மயங்கச் செய்யும். அத்தருணத்தில் ஊடுருவி உள்ளே செல்வேன். மையத்தை சில கணங்களுக்குள் நான் சென்றடைந்துவிடமுடியும். பிரக்ஞாஸ்திரத்தை தொடுத்து படைகளை நினைவுமீளச் செய்வேன். தன்னினைவு மீண்ட கணமே ஜயத்ரதன் எழுந்து பின்னோக்கி தப்பி ஓடுவான். அவனையும் சூழ்ந்த படைவீரர்களையும் சக்திஅஸ்திரத்தால் அறைவேன். நரம்புநிலைகள் தாக்கப்பட்டு அவர்கள் செயலிழந்து நின்றிருக்கையில் அவன் தலைகொய்வேன்” என்றார்.

அஸ்வத்தாமன் “அவருடைய ஆற்றல்மிக்க அம்புகளைப் பற்றி நான் அறிவேன். அவை ஒவ்வொன்றுக்கும் நம்மிடம் மாற்று அம்புகள் உள்ளன” என்றான். பூரிசிரவஸ் “இத்தருணத்தில் நாம் நம் போர்முறையை இத்தனை கூர்மையுடன் வகுத்துக்கொள்வதற்கான தேவை ஒன்றே. பொறியில் சிக்கிய வேங்கை மதயானையின் ஆற்றல் கொள்கிறது என்பார்கள். இது அவர்கள் சிக்கிக்கொண்ட பொறி. முழு உயிர்விசையுடன் அவர்கள் போராடுவார்கள்” என்றான். “இங்கே சொல்லப்பட்ட ஒவ்வொரு வழியையும் நம்மால் முன்னரே அடைத்துவிட முடியும். இதற்கப்பால் ஒன்றை அவர்கள் எண்ணவியலாது.”

துரியோதனன் கர்ணனிடம் “தாங்கள் எண்ணுவதென்ன, அங்கரே?” என்றான். “நாம் வகுத்த திட்டம் அதற்கு எதிராக அவர்கள் ஆற்றக்கூடும் என்று நாம் எண்ணும் திட்டம் இரண்டுமே வெறும் சொற்கள்தான். களத்தில் என்ன நிகழுமென்று முன்னரே நாம் வகுத்துவிட இயலாது. எது வரினும் களத்தில் நிற்போம் என்று மட்டுமே இத்தருணத்தில் நம்மால் கொள்ள முடியும்” என்றான் கர்ணன். அச்சொற்கள் அவர்கள் அனைவரையும் உளம் தளரச்செய்தன. துரியோதனன் “அவ்வண்ணமெனில் இத்தனை படைசூழ்கையும் கடந்து ஜயத்ரதனை அவர்கள் கொன்றுவிடமுடியுமென்று எண்ணுகிறீர்களா?” என்றான். “ஜயத்ரதனை கொல்வதற்கான ஒரு மீச்சிறு பாதையை நாம் திறந்து வைத்திருக்கிறோம். ஊசி மட்டுமே நுழையுமளவு சிறிய பாதை. ஆனால் பெரும்பிளவொன்றை உருவாக்க அதுவே போதும். மலைப்பாறைகளுக்குள் ஆறுகள் நுழைவது ஊசித்துளை விரிசலினூடாகவே என்பார்கள்” என்றான்.

துரியோதனன் கூர்ந்து நோக்க “அரசே, நேற்றிரவு நாம் அடைந்தது ஒரு வெற்றி. நம் எதிர்ப்படையின் பெருவீரனொருவனை களத்தில் கொன்றிட்டிருக்கிறோம். நாம் ஏன் நேற்று வெற்றிகொண்டாடவில்லை? நேற்று தாங்கள் எங்கிருந்தீர்கள்? நான் எங்கிருந்தேன்?” என்றான் கர்ணன். துரியோதனன் “அது ஏன் என்று உங்களுக்கே தெரியும், அங்கரே” என்றான். கர்ணன் “அவன் எனக்கும் மைந்தனுக்கு நிகர். நீங்கள் தோளிலும் நெஞ்சிலுமிட்டு வளர்த்த மைந்தன். அந்த உணர்வையே இரவெல்லாம் அடைந்தோம். எண்ணி நோக்குக! அப்பிழைக்கு நிகராக நம்மில் ஒருவர் மறைந்தால் நன்று என்று நாம் எங்கோ எண்ணுகிறோமா?” என்றான்.

“இது என்ன பேச்சு? அரசரும் நானும் மைந்தர்களை இழந்தவர்களே” என்றான் பூரிசிரவஸ். கர்ணன் “நம்மில் நாம் இன்று களம்பட்டால் நன்றே என்ற எண்ணம் எழாத எவரேனும் உளரா?” என்றான். கிருதவர்மன் “நான் அவ்வாறு எண்ணவில்லை” என்றான். அஸ்வத்தாமன் “எனக்கும் அவ்வெண்ணம் எழவில்லை” என்றான். பூரிசிரவஸ் “களம்பட்டால் நன்று என்ற எண்ணம் எப்போதும் எனக்குள்ளது. என் மைந்தர் இறப்புக்குப் பிறகு” என்றான். துரியோதனன் கைகளைக் கட்டி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “சொல்க அரசே, தாங்கள் அவ்வாறு எண்ணினீர்களா?” என்றான் கர்ணன். “ஆம், ஒருமுறை அவ்வெண்ணமும் எழுந்தது. இன்று அர்ஜுனன் கையால் கொல்லப்பட்டேன் என்றால் நேற்று அபிமன்யு கொல்லப்பட்டதற்கு ஈடுசெய்ததாகும் என்று. ஆனால் என் மைந்தனின் இறப்பைப்பற்றிய எண்ணத்தைப் பெருக்கி வஞ்சமாக்கி அதை செறுத்து எழுந்தேன்.”

“அது ஓர் உளச்சோர்வின் வெளிப்பாடே” என்றான் பூரிசிரவஸ். “ஆம், வெறும் உளச்சோர்வுதான். அதில் ஐயமில்லை” என்று கர்ணன் சொன்னான். “ஆனால் அந்த ஒருதுளி எண்ணம் பாறைகளைப் பிளக்கும் நீர்த்துளி. இன்று அவன் களம்பட்டால் ஏதோ ஒருவகையில் நிறைவடைவோம்.” பூரிசிரவஸ் “என்ன சொல்கிறீர்கள்?” என்றபடி எழுந்தான். அஸ்வத்தாமன் “இது சிறுமைசெய்தல்… ஆம். சிறுமைசெய்தல் அன்றி வேறொன்றுமில்லை” என்றான். “இல்லை, நான் என் அகம் சொல்வதை கூறுகிறேன். இன்று நாம் அவனை களத்தில் இழப்போம். எவ்வண்ணம் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவனை இழந்த பின்னர் எண்ணிப்பார்க்கையில் நம்மீது எந்தப் பிழையும் இல்லை என்பதை நமக்கு நாமே நிறுவிக்கொள்ளும்பொருட்டே இத்தனை விரிவாக படைசூழ்கையை வகுக்கிறோம். இன்று களத்தில் இதனினும் வெறிகொண்டு நாம் எதிர்ப்போம். உயிர் கொடுக்க துணிந்து நிற்போம்” என்றான் கர்ணன்.

அஸ்வத்தாமன் “அதைத்தானே நாம் செய்ய முடியும்? அதற்கு அப்பால் நமக்கு  இயல்வதென்ன?” என்றான். “அதற்கப்பால் நாம் ஏதேனும் செய்ய முடியும் என்று நான் கூறவில்லை. நம்மால் இயற்றக்கூடிய அனைத்தையும் நாம் இன்று செய்வோம். அதற்கப்பால் பிறிதொன்று அவனை களப்பலியாக்கும்போது நம்மால் இயன்றதை செய்துவிட்டோம் என்று எண்ணி நிறைவு கொள்வோம்” என்றபின் கசப்புடன் நகைத்து “போர்க்களம் எத்தனை இரக்கமற்றது! மாபெரும் ஆடிபோல் நாம் அனைவரையும் நமக்கே காட்டுகிறது” என்றான் கர்ணன்.

“அங்கரே, களத்தில் நாம் வீண்கசப்புகளையும் நம்பிக்கையின்மைகளையும் பெருக்கிக்கொள்வதில் என்ன பொருள்?” என்று கிருபர் கேட்டார். “நான் நம்பிக்கையின்மைகளை உருவாக்கவில்லை, அவற்றை பெருக்கவுமில்லை. அவை உள்ளன என்று அடையாளம் காட்டுகிறேன். முன்னரே சற்று அறிந்திருந்தால் போர்க்களத்தில் அது நம்முள்ளிருந்து எழும்போது நாம் அதிர்ச்சியடையாமல் இருப்போம்” என்றான் கர்ணன். “ஆசிரியரே, போர்க்களம் ஒரு யோகவெளி. அங்கு தாளமே அனைத்தையும் ஆள்கிறது. எங்கு தாளம் இருக்கிறதோ அங்கெல்லாம் யோகம் கைகூடுகிறது. நமது கைகள் அம்புத்தூளியிலிருந்து நாணுக்கும் இலக்குக்கும் என சுழல, விழிகளும் செவிகளும் ஒன்றென இணைந்து கூர்கொள்கையில் ஐம்புலன்களையும் ஒன்றாக ஆளும் சித்தம் முற்றாக அணைந்துவிடுகிறது. யோகம் கூடி ஆழம் எழுந்து வருகிறது. இப்போது சொற்களால் சித்தப்பெருக்கால் எவற்றையெல்லாம் மறைத்து வைத்திருக்கிறோமா அவையனைத்தும் அப்போது வெளிவரும். அப்போது நாம் கைதளரலாகாது. அது நம்மை அதிரச்செய்யும் புதிய மெய்யென அப்போது தோன்றலாகாது. நம்மால் இயல்வதனைத்தையும் செய்கிறோம் என்றும், செய்வதை முழுமையுற இயற்றுவதே நமது கடன் என்றும் அப்போது நமக்கு தோன்றவேண்டும்.”

அவன் சொற்களைக் கேட்டு அனைவரும் சலித்து சோர்ந்து அமர்ந்திருக்க கர்ணன் புன்னகைத்து “இச்சோர்வு நன்று. இவ்வுணர்வுடன் நாம் களம் சென்றால் நமது விசை மேலும் மேலுமென பெருகி உச்சமடையும். எழுச்சிகொண்டு சென்று படிப்படியாக களத்தில் அதை இழப்பதைவிட இது மேலானது” என்றபின் “நான் சென்று ஆடையும் கவசங்களும் அணிந்து ஒருங்குகிறேன்” என்று தலைவணங்கி வெளியே சென்றான்.

அஸ்வத்தாமன் “அவர் உளம் கசந்திருக்கிறார். அன்றி அச்சொற்களுக்கு எப்பொருளுமில்லை” என்றான். துரோணர் “நானும் அவ்வாறே எண்ணினேன். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவற்றை இணைத்து இப்படி சிக்கலான உணர்வுநிலைகளை கற்பனை செய்துகொள்வதில் எந்தப் பொருளுமில்லை. நுண்மையாகச் செல்கிறோம், எல்லைகளைக் கடந்து விரிகிறோம் என்னும் தன்னாணவம் மட்டுமே இதன் பெறுபொருள். செயற்களத்தில் நுண்மைதேர்பவன் அறிவிலி. போர்க்களம் இத்தனை ஊடுபாவுகள் நிறைந்த எண்ண ஓட்டங்களுக்குரியதல்ல. இது மனிதன் தன்னை விலங்கென ஆக்கி நின்று பொருதியாகவேண்டிய தளம். இங்கு இலக்குகள், அவற்றை நோக்கும் அம்புகள், அவற்றை ஆளும் கைகள், கைகளை ஆளும் புலன்கள், புலன்களை ஆளும் சித்தம் ஆகிய ஐந்து பருநிலைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

“ஏனென்றால் போர்க்களம் வெறும் பருப்பொருள்விரிவுதான். எண்ணங்கள் சுழன்றலையும் நுண்வெளி அல்ல. பருப்பொருட்கள் தங்களுக்கு பிரம்மம் வகுத்த நெறிகள் கொண்டவை. பருநெறிகளின்படி எந்நிலையிலும் அர்ஜுனன் ஜயத்ரதனை சென்றடைய இயலாது” என்றார் துரோணர். “அதையே நானும் சொல்கிறேன், அவர் ஒருபோதும் சென்றடைய இயலாது” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அவர்களின் படைசூழ்கை என்ன?” என்றார் துரோணர். “இக்கணம் வரை அதை அவர்கள் வகுக்கவேயில்லை. வகுத்தால் எப்படியும் நாமறிவோம் என எண்ணுகிறார்கள் போலும்” என்றான் அஸ்வத்தாமன். பூரிசிரவஸ் “அவர்கள் கூரியமுனைகொண்டு தாக்கும் சூழ்கைகளையே அமைக்கக்கூடும். சூசிமுகி என்னும் சூழ்கை இதற்கு உகந்தது…” என்றான். “எதுவாக இருந்தாலும் நம்மை அவர்களால் ஊடுருவ இயலாது” என்றான் அஸ்வத்தாமன்.

ஆனால் துரியோதனன் எழுந்து பெருமூச்சுடன் “எண்ணிநோக்குகையில் நீங்கள் சொல்வதே மெய். ஆனால் எண்ணம் சென்றடையா ஆழத்தில் அங்கர் சொன்னதே மெய் என எனக்கும் தோன்றுகிறது. நம்மை மீறிய விசைகள் நம்முள் எண்ணங்களாகவும் அச்சங்களாகவும் விழைவுகளாகவும் ஆளும்போது நம்மால் இயல்வதை ஆற்றமுயல்வது மட்டுமே நம் கடன். அதை செய்வோம்” என்றான்.

ele1அரவான் சொன்னான். மீண்டும் குருக்ஷேத்ரம் ஒருங்கியிருக்கிறது. அன்றைய புலரிக்காக அவர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். பாண்டவப் படைகளின் முகப்பில் யுதிஷ்டிரர் தன் தேரில் வந்து நின்றார். அவருக்கு இருபுறமும் நகுலனும் சகதேவனும் நின்றனர். சாத்யகியும் துருபதனும் வந்தனர். பீமன் வந்தபோது வாழ்த்தொலிகள் எழுந்தன. பின்னர் சங்குகளும் பேரிகைகளும் முழங்க தொலைவில் குரங்குக்கொடி ஒற்றைப்பறவை என சிறகடித்து வந்தது. இளைய யாதவர் தன் மாறாத புன்னகையுடன் தேர்தெளிக்க காண்டீபத்தை ஊன்றி இடையில் கையூன்றி தேர்த்தட்டில் அர்ஜுனன் நின்றிருந்தான். அவனைக் கண்டதும் பாண்டவப் படையினர் வாழ்த்து முழக்கமிட்டனர்.

கௌரவப் படைகளின் பின் நிரையில் கொடியோ அடையாளமோ இல்லாத குடிலுக்குள் பந்தங்கள் அணைக்கப்பட்ட இருளுக்குள் அமர்ந்திருந்த ஜயத்ரதனிடம் கழி மேலிருந்து இறங்கிய கழையன் சொன்னான் “அவர் களைத்திருக்கிறார். கண்களின் கீழே வளையங்கள். உதடுகள் வெளுத்திருக்கின்றன. கைகளில் மெல்லிய நடுக்கும் உள்ளது. ஆனால் காண்டீபம் உறுதியுடன் ஊன்றியிருக்கிறது.” ஜயத்ரதன் “அவர்?” என்றான். “அவருடைய தலைமேல் நீலப்பீலி விழிதிறந்து நோக்கிக்கொண்டிருக்கிறது அனைத்தையும்!” என்றான் கழையன். ஜயத்ரதன் அவன் செல்லலாம் என கையசைத்தான். அவன் தலைவணங்கி சென்றபின் கண்களை மூடியவனாக காத்திருந்தான். தொலைவில் கேட்டுக்கொண்டிருந்த ஓசைகள் மெல்ல காட்சிகளாக மாறத்தொடங்கின. குளிர்காற்றில் மெல்ல அசையும் கொடிகள். செருக்கடிக்கும் புரவிகள். காத்திருக்கும் முரசுத்தோல் வட்டங்களின் மெல்லிய ஒளி.

மெல்லிய ஓசை கேட்டு அவன் கண்விழித்தான். அவன் எதிரே ஒருவன் அமர்ந்திருந்தான். “யார்?” என்று அவன் கேட்டான். கை உடைவாளை நோக்கி சென்றது. “அஞ்சற்க, நான் உன் காவலன். என் பெயர் அகம்பனன்… நான் பாதாளநாகன். உன்னை பாதுகாக்கும்பொருட்டு உன் தந்தையால் அனுப்பப்பட்டேன்” என்றான். அவன் விழிகள் இமைகொள்ளவில்லை என்பதை ஜயத்ரதன் கண்டான். அவன் உடல் இடைக்குக் கீழே இருளுக்குள் நிழலோடை என நெளிந்தது. “உன் தந்தை அங்கே எங்களை எண்ணி தவமிருக்கிறார். அவருடைய அழைப்பு பாதாளங்களில் இடியோசை என வந்து எங்களை எழுப்புகிறது” என்று அகம்பனன் சொன்னான். “அவர் அஞ்சியிருக்கிறார். மண்ணில் அச்சம்போல் பேருருக்கொண்டு எழுபவை பிறிதில்லை.” அவன் புன்னகைத்தான். “ஆழத்தில் அதனினும் மும்மடங்கு விரைவில் பெருகுபவர்கள் நாங்கள்.”

“அவர் அர்ஜுனனின் அம்புகளை எண்ணி அச்சம் கொள்கிறார். ஒவ்வொரு அம்புமுனையையும் ஓராயிரம் முறை உளம்தொட்டு ஊழ்கநுண்சொல்லாக ஆக்கிக்கொள்கிறார். ஓர் அம்பிலிருந்து உன்னைக் காக்க நூறு நாகங்களை மேலெழுப்புகிறார்” என்று கூறியபடி இன்னொருவன் தோன்றினான். “என் பெயர் நிகும்பன். அர்ஜுனனின் தேவாஸ்திரத்திலிருந்து உன்னை காக்கும்பொருட்டு எழுந்த நூறு நாகங்களின் தலைவன். தண்டில்லாமல் கூர் மட்டுமே ஆன அம்பு அது என்று அறிக!” அவனுக்குப் பின்னால் எழுந்த ஒருவன் “என்னை முற்றிலும் நிகர்நிலையில் அமைந்த நியானாஸ்திரத்திலிருந்து காக்கும்பொருட்டு எழுப்பினார் உன் தந்தை” என்றான். பிறிதொருவன் “பன்றிபோல் உறுமி மண்துளைத்துச் செல்லும் அசுராஸ்திரத்திலிருந்து காக்கும்பொருட்டு எழுந்த என் பெயர் சாகரன்” என்றான். “சிவாஸ்திரத்திலிருந்து உன்னை காக்கும்பொருட்டு எழுந்த என் பெயர் நந்தி” என்றான் வெண்ணிறமான ஒருவன். “சக்தியஸ்திரம் விழியறியா அதிர்வின் வடிவை கொண்டது. சாந்தன் என்னும் பெயர்கொண்ட என்னால் மட்டுமே உன்னை காக்க இயலும்” என்றான் பிறிதொருவன்.

“பேரெடை கொண்ட பர்வத அஸ்திரம், செவிநிறைத்து மயக்கம் அளிக்கும் கந்தர்வ அஸ்திரம், மண்ணைத் துளைக்கும் மனு அஸ்திரம் என்னும் அம்புகளிலிருந்து காப்பவர்கள் இவர்கள்” என அகம்பனன் சுட்டிக்காட்டினான். அந்நாகர்கள் அரவுப்படம் எழுந்து மணிவிழிகள் மின்ன சீறலோசை எழுப்பி நிழல்களென அசைந்தனர். வைஷ்ணவம், வாருணம், நாராயணம், ருத்ரம், பிரம்மம், ஆக்னேயம், ஐந்திரம், மோகனம், பார்கவம் கருடம், சௌரம், வாயவம் என்னும் அம்புகளிலிருந்து காக்கும் நாகர்கள் எழுந்தனர். “இவை ஒவ்வொன்றும் இங்குள்ள வேதங்கள் என்று உணர்க! ஒவ்வொரு வேதத்திற்கும் நிகரான நாகவேதக் கிளை ஒன்றுண்டு…” என்று அகம்பனன் சொன்னான். “லிங்கம், கிருஷ்ணம், யமம், மாகேஸ்வரம், சுதர்சனம், விக்னேஸ்வரம், வராகம், நரசிம்மம், குமாரம், பரசுராமம், வாமனம், மச்சம் என்னும் அம்புகள் ஒவ்வொன்றும் இங்குள்ள மெய்நிலைகள் ஒவ்வொன்றையும் குறிக்கின்றன. அறிக, அவன் தான் கற்றுக்கடந்த ஒவ்வொன்றையும் ஓர் அம்பெனக் கொண்டவன்! அவனை அஸ்த்ரயோகி என்கின்றனர் முனிவர்” என்றான் அகம்பனன்.

“அவன் அம்புகளாக அமைந்துள்ளன இங்கே முனிவர் அறிந்தவையும் யோகிகள் உணர்ந்தவையும் கவிஞர் பாடியவையுமான மெய்மைகள் அனைத்தும். புயலெழுப்பும் வாசவிசக்தி, மின்னல் சமைக்கும் வஜ்ரம், அனலெழுப்பும் தேஜஸ்வரம், ஏழன்னையரின் சப்ததேவாஸ்திரம், பேரழகுகளைக் காட்டும் மாயாஸ்திரம், கோரத்தோற்றம் காட்டும் ராட்சச அஸ்திரம், காற்றில் விளையாடும் யக்‌ஷாஸ்திரம். சைந்தவனே, அவன் அம்புகள் எண்ண எண்ணப் பெருகுபவை. ஹயக்ரீவன், ஹனுமான், பலராமன், கலி, கல்கி என்னும் தெய்வங்களே அம்புகள் என அவனிடம் உள்ளன. ஹரி, ஹரம்,  ராகவம், ராமம், கார்த்திகேயம், வீரபத்ரம், பைரவம் என இங்கு வணங்கப்படுவன அனைத்தும் அம்புகளாகியிருக்கின்றன. சரஸ்வதியும் லட்சுமியும் துர்க்கையும் அம்புகளென அவனுக்கு கனிந்துள்ளனர். பிருஹஸ்பதி, மார்க்கண்டேயன், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் என முனிவர்களின் உருக்கொண்ட அம்புகள். தர்மம், சியாமம், கர்மம் என பேருருக்கொண்ட அம்புகள். அவை நாம் அவனை அறியுந்தோறும் வளர்பவை. அவன் தன்னை அறியுந்தோறும் மறைபவை. அனைத்து மெய்யறிவுகளையும் அம்புத்தூளியில் அடக்கிய அவனை பாரதன் என்கின்றனர் கவிஞர்” என்றான் அகம்பனன்.

“அவனை அஞ்சும் உன் தந்தையின் சொற்களில் இருந்து அவை மேலும் மேலும் எழுந்துகொண்டே இருக்கின்றன” என்று நிகும்பன் சொன்னான். “உன்னை அவற்றிலிருந்து நாங்கள் காக்கவிருக்கிறோம். உன்பொருட்டு ஆழத்திலிருந்து எழுந்து வந்துகொண்டே இருக்கிறோம்.” ஜயத்ரதன் தன்னைச் சூழ்ந்திருந்த கரிய இருள்பரப்பு நாகங்களால் நிறைந்திருப்பதை பார்த்தான். ஒன்றுடனொன்று இணைந்த நெளிவுகளாலான திசைவளைவு. “அவை அனைத்திலும் ஆற்றல்மிக்கது பாசுபதம்” என்றபடி அவன் முன் எழுந்தது மாநாகம் ஒன்று. “என் பெயர் பன்னகன். உன் தந்தையின் நுண்சொல்லால் அழைத்து இங்கே கொண்டுவரப்பட்டவன். நீ என்னால் பாசுபதத்திலிருந்து காக்கப்படுவாய்.”

ஜயத்ரதன் தன் கைகளை நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு உடல்குறுக்கி அமர்ந்திருந்தான். மிகத் தொலைவில் புலரிமுரசொலி எழுவதை கேட்டான். முதல் முரசுக்கழியின் ஓசையை எழுகடல் என வந்து மூடிக்கொண்டது போரின் முழக்கம்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைசோ.தர்மனுக்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது
அடுத்த கட்டுரைமோகன் வாறே !