‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36

பீமன் சுனையை அணுகி அதன் பாறைவிளிம்பில் கால் மடித்து அமர்ந்து கைகளால் அதன் கூர்மடிப்பை பற்றியபடி குனிந்து நீரில் நோக்கினான். அவனுடைய பாவை எழுந்து அலைகொண்டது. அவன் விழிகள் இரண்டு நான்கு பதினாறு எனப் பெருகி கரிய தீற்றலென்றாகி மீண்டும் இணைந்தன. உதடுகள் சிவந்த பட்டாம்பூச்சிகள் என்று சிறகசைத்து ஒன்றிலிருந்து ஒன்று எழுந்து பெருகிப் பரந்து மீண்டும் இணைந்து இழுபட்டு நீண்டு மீண்டும் கூடின. அவன் பாவை பறவையின் சிறகு என விரிந்து மீண்டும் அமைந்தது. நெளிந்து நீண்டு அகன்று குவிந்து ததும்பியது.

அதை நோக்கி அமர்ந்திருக்கையில் அவன் தன்னுள் திகழ்ந்த தன் உருவம் சிதைந்து உருவழிந்துவிடுவதை உணர்ந்தான். ஒவ்வொருவருக்குள்ளும் அவ்வண்ணம் அவரவர் உருவம் வாழ்கிறது என்பதை அவன் அப்போதுதான் அறிந்தான். அது எப்போதைக்குமென சிதைந்துவிட்டால் என்ன ஆகும்? தான் என அகம் உறைவது அழிந்துவிட்டால் எஞ்சுவது என்ன? உளம்பிறழ்ந்தவர்கள் இங்கு நோக்கினால் இப்பாவை நடனத்தை காண்பார்களா? அவர்களுக்குள் அமைந்து அதை நோக்கும் அவ்வுருவும் உருவழிந்து சிதைவுகொண்டிருக்கையில் அவர்கள் எதை வெளியே அறிவார்கள்?

சில கணங்களிலேயே அவன் உள்ளத்தின் எண்ணங்கள் முற்றிலும் பொருளிழந்து சொற்குவை என மாறின. அதை உணர்ந்ததுமே அவன் எச்சரிக்கை கொண்டான். காற்றில் துணி என நாற்புறமும் எழுந்து பறந்த தன்னை இழுத்து சுருட்டித் தொகுத்துக்கொண்டான். “நான் நான் நான் நான்” என தன் அகத்தை ஓடவிட்டான். அச்சொல்லில் முனைகொண்டான். அதை அலகாகக் கொண்ட பறவை என மாறி ஒவ்வொரு சொல்லையும் தொட்டுச் சேர்த்தான். அதை பீடமென ஆக்கி அதன்மேல் அமர்ந்தான். இதோ நான் நோக்கிக்கொண்டிருக்கிறேன். நான் இதை நோக்குகிறேன். இது நான் அல்ல. நோக்குவது அது அல்ல, நானே.

அவன் அந்த நீர்ப்பாவையின் நெளியும் விளிம்புகளைப் பற்றி இழுத்து உள்ளத்தால் தொகுத்து ஓருருவாக ஆக்கினான்.  முழுமை செய்யும் இறுதிக் கணத்தில் ஓர் உளச்சொட்டு சென்று விழுந்து கலைந்து மீண்டும் அலைகள் எழுந்தன. மீண்டும் தன்னைக் குவித்து அப்பாவைச் சிதறலின் அனைத்து ஓரங்களைத் தைத்து இணைத்து நழுவவிட்டு மீண்டும் பற்றி இழுத்து தொகுத்து நழுவவிட்டான். நூறு முறை மீண்டும் நூறுமுறை மீண்டும் நூறுமுறையென அந்தப் பாவைகளை இணைத்துக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் ஒன்று எஞ்சி நின்றது. ஒன்று அப்பாலிருந்து வந்து இணைந்துகொண்டது. ஒன்று பிறிதொன்றை விலக்கி தான் என்றது. ஒன்று எங்கிருந்தோ எழுந்து நின்று அப்பால் நோக்கி அனைத்தையும் கலைத்தது.

இறுதிமுறை அது கலைந்தபோது தலையில் ஓங்கி அறைந்து கூச்சலிட்டபடி பீமன் எழுந்தான். தரையை ஓங்கி மிதித்து “யாதவரே! யாதவரே!” என்றான். “இல்லை, என்னால் இயலவில்லை. என் ஆற்றல் அனைத்தையும் இழந்திருக்கிறேன். என் உடல் எடை கொண்டிருக்கிறது. உள்ளம் சிதறிக்கிடக்கிறது. என்னால் இயலவில்லை. இது என்னால் இயலாது” என்று கூவினான். நெஞ்சில் ஓங்கி அறைந்தபடி “நான் பித்தாகிவிடுவேன்… நான் பித்தாகிவிடுவேன்” என்றபடி அவரை நோக்கி ஓடினான்.

“இது உமது போர். நீங்கள்தான் இதை செய்யவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். பீமன் கைகளை விரித்து உடற்தசைகள் ததும்ப அங்குமிங்கும் அலைமோதினான். “என்னால் இயலாது. இது ஊசிமுனையால் ஊசிமுனையைத் தொடுவது… என்னால் இயலாது” என்றான். “அவரை வெல்லவேண்டியவர் நீங்கள். நீங்கள்தான் அவரை வெளியே எடுக்கவேண்டும்” என்றார் இளைய யாதவர். பீமன் தன் உடலில் மாறி மாறி அறைந்துகொண்டான். மற்போரில் தன் முன்னால் நிற்கும் எதிரியை எதிர்கொள்பவன்போல சுற்றிவந்தான். வெறிக்கூச்சலுடன் இடையில் அணிந்திருந்த தோலாடையைக் கிழித்து சுழற்றி அப்பால் வீசினான். வெற்றுடலுடன் சென்று நீர்விளிம்பில் நின்றான். இரு கைகளாலும் மார்பை அறைந்து தலையை அண்ணாந்து ஊளை ஓசையை எழுப்பினான். பாய்ந்து நீருள் மூழ்கி மறைந்தான்.

யுதிஷ்டிரன் “இளையோனே” என்று கூவியபடி முன்னகர கை நீட்டி அவரை தடுத்தார் இளைய யாதவர். “யாதவனே, அவன்…” என்று யுதிஷ்டிரன் தவித்தார். “பொறுங்கள்” என்று இளைய யாதவர் கைகாட்டினார். பீமன் நீருக்குள்ளிருந்து பிளந்தெழுந்து அப்பால் கரையேறி பாறைவிளிம்பில் கால் மடித்து குரங்குபோல் குந்தி அமர்ந்தான். பற்களை நெரித்தபடி இரு கைகளாலும் உடலை கீறினான். பின்னர் உறுமியபடி மீண்டும் நீருக்குள் பாய்ந்தான். மறுகரையில் எழுந்து அமர்ந்து வானை நோக்கி ஊளையிட்டான். மீண்டும் நீருக்குள் பாய்ந்து எழுந்தான். சுனைநீர் கொந்தளித்துக்கொண்டிருந்தது.

பன்னிரு முறை மூழ்கி எழுந்தபின் நீரிலிருந்து வெளிவந்தபோது அவன் களைத்திருந்தான். கைகளால் உந்தி கரைப்பாறையைப் பற்றி மேலெழுந்து புரண்டு மண்ணில் விழுந்து தசைநார்கள் தளர உடலை மண்ணில் பதியவைத்து மல்லாந்து கிடந்தான். அவன் அழுவதுபோல் தோன்றியது. “யாதவனே” என்று யுதிஷ்டிரன் அழைத்தார். “பேசவேண்டாம்” என இளைய யாதவர் உதடுகளை அசைத்தார். அதற்குள் சகதேவன் “மூத்தவரே!” என்று அழைத்தபடி பீமனை நோக்கி செல்ல பீமன் பிளிறியபடி எழுந்து இரு கைகளையும் விரித்து ஓங்கி ஒன்றோடொன்று அறைந்து பிளிறியபடி சகதேவனை தாக்க வந்தான்.

சகதேவன் திகைத்து பின்னடைந்து கால்கள் புல்லில் சிக்க மல்லாந்து விழுந்தான். விலங்குநோக்குடன் உரக்க ஓசையெழுப்பியபடி பீமன் அவனை நோக்கி செல்ல “இளையோனே! இளையோனே! மந்தா!” என்று யுதிஷ்டிரன் உரக்க கூவினார். “மந்தா, என்ன இது! மந்தா!” விழிப்புகொண்டு அவர்களை உணர்ந்து தளர்ந்து மீண்டும் தரையிலமர்ந்து இரு கைகளையும் நிலத்தில் ஓங்கி அறைந்துகொண்டு பீமன் அழுதான். அவன் உடல் குலுங்குவதை அவர்கள் திகைப்புடன் நோக்கி நின்றனர். யுதிஷ்டிரன் அவனை நோக்கி சென்று நின்று தயங்கி மீண்டும் திரும்பி யாதவரை நோக்கி வந்து தத்தளித்தார்.

பீமன் எழுந்து முகத்தில் வழிந்த நீரை கைகளால் வழித்து துடைத்து விலங்குபோல் உடலை உலுக்கி நீர்த்துளிகளை உதறிவிட்டு “இல்லை யாதவரே, இது என்னால் இயலாது. ஐயமில்லை, இது என்னால் இயலாது” என்றான். “என்னால் இயலாது…” என்று நரம்புகள் புடைத்த கைகளை இறுக்கி விரித்து “என்னால் இயலாது இது” என்றான். “ஆம், உங்களால் இயலாது” என்று இளைய யாதவர் சொன்னார். ஒருகணம் திகைத்தபின் வெறிகொண்டு முன்னால் வந்த பீமன் “பின் ஏன் இதற்கு எனக்கு ஆணையிட்டீர்கள்? இப்போரை நான் முடிக்க இயலாதெனில் இங்கு எதற்காக வந்தோம்?” என்றான்.

“இந்தப் போரை நீங்கள் முடிப்பீர்கள், அதில் ஐயமில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆனால் நீங்கள் யார் என்று அறிந்திருக்கவேண்டும். நீங்கள் வெல்லவிருப்பவன் எவனென்று தெளிந்தும் இருக்கவேண்டும். இல்லையேல் இவ்வெற்றிக்குப் பின் தீரா இருளுக்குச் சென்று சேர்வீர்கள்” என்றார். பீமன் அச்சொற்களை புரிந்துகொள்ளாதவனாக நோக்க “விலகுக, அவரை நானே அழைக்கிறேன்!” என்று இளைய யாதவர் சொன்னார். “இது நெறிமீறல். நன்று, இப்போரில் நான் மீறும் நெறியென்றும் ஒன்று எஞ்சட்டும்” என்று புன்னகைத்தார். யுதிஷ்டிரன் பார்வையை திருப்பிக்கொண்டார்.

சுனை அருகே சென்று அலையடங்காமல் சுழிப்புகொண்டிருந்த நீர்ப்பரப்பில் தன் சுட்டுவிரலால் தொட்டார். அக்கணமே அது பளிங்கென மாறி அசைவழிந்தது. இளைய யாதவரின் பாவை நீரில் தெளிந்தது. அதன் விழிகளை நோக்கி இளைய யாதவர் மெல்ல உதடுகள் அசைய ஏதோ சொன்னார். பின்னர் “எழுக! எழுக!” என்று அவர் சொல்வதை யுதிஷ்டிரன் கேட்டார். உரத்த குரலில் “தார்த்தராஷ்டிரரே, வெளியே வருக!” என்று இளைய யாதவர் அழைத்ததும் அந்தப் பாவையுரு நீரிலிருந்து பிரிந்து எழுந்து உருத்திரட்டி மேலே வருவதுபோல் துரியோதனன் நீரிலிருந்து எழுந்தான்.

துரியோதனனைக் கண்டதும் பீமன் மெல்ல உறுமினான். யுதிஷ்டிரன் ஓர் அடி பின்னடைந்து சகதேவனின் அருகே சென்று நின்றார். “இப்போர் இங்கு முடிகிறது. தார்த்தராஷ்டிரரே, நீங்கள் இதற்கப்பால் செல்வதற்கில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். துரியோதனன் தன் உடலை உதறி நீர்த்துளிகளை ஒழித்தான். இரு கைகளாலும் முகத்தில் விழுந்த குழல்கற்றைகளை அள்ளி நீவி தலைக்குப் பின்னாலிட்டு தோளில் சரித்தபின் புன்னகையுடன் அவரைப் பார்த்து “உங்கள் அழைப்பு அங்கே என் அகத்தில் ஒரு விழைவு என எழுந்தது. அனைத்தும் கலைந்த பின்னரே அது உங்கள் குரல் என உணர்ந்தேன்” என்றான்.

பீமன் அவனை நோக்கி ஓரடி எடுத்து வைக்க இளைய யாதவர் கையசைவால் அவனை தடுத்தார். “யாதவரே, நான் அந்த இறுதி வாயிலுக்கு முன் நின்றேன். ஒருகணம் காலெடுத்து வைத்து அதை கடந்திருப்பேன்” என்றான். “உங்கள் அகத்தில் ஓர் அணுவென விழைவு எஞ்சுவதுவரை அதை கடக்க இயலாது” என்று இளைய யாதவர் கூறினார். “ஆகவே இந்தப் பின்விளியை நீங்கள் கேட்டே ஆகவேண்டும். வாழ்நாள் எல்லாம் நீங்கள் வழிபட்ட அத்தெய்வம் அவ்வண்ணம் உங்களை விட்டுவிடுமா என்ன?” புன்னகையுடன் “அங்கே வந்து அழைத்துச்சென்றவள் குரலில் அச்சொல் எழுந்திருக்கும்” என்றார்.

பீமன் உறுமலோசை எழுப்ப துரியோதனன் திரும்பி அவனைப் பார்த்தபின் இளைய யாதவரிடம் “ஆம், இப்போது அதை தெளிவாக உணர்கிறேன்” என்றான். பின்னர் திரும்பி அந்த சுனைப்பரப்பை பார்த்து “அதன் ஆழம் முடிவிலி போன்றது. அப்பாலுள்ளன நாம் அறியாத எழுயுகங்கள். யாதவரே, அங்கு நான் கண்டவை…” என்று சொல்ல இளைய யாதவர் சலிப்புடன் “அவை யோகம் உருவாக்கும் கனவுநிலைகள். அவற்றைக் கடந்து இங்கு வருக! இக்கணமே மெய். இதோ உங்களைத் தொடர்ந்து வந்து நின்றிருக்கிறது இந்த யுகத்தின் வஞ்சம். இதை எதிர்கொள்க! வென்றால் உங்கள் செவியில் ஒலித்த அச்சொல்லை பெறுவீர்கள்” என்றார்.

துரியோதனனின் விழிகள் மாறுபட்டன. “அச்சொல்” என்றான். பெருமூச்சுடன் “நான் அந்த வாயிலைத் தொட கையெடுத்ததும் அதை அவள் சொன்னாள்…” என்றான். உடனே அவன் முகம் மலர்ந்தது. “ஆம், அதைப்போல் எனக்கு இனிதாவது பிறிதில்லை. அமரப்பேறும் அதற்கு ஈடல்ல… அஸ்தினபுரி. அதுவே ஒழியாமல் என் உள்ளத்தில் ஒலிக்கும் ஊழ்கச்சொல்” என்றான். “நான் நுண்ணுருக் கொள்வதற்கு முன்னரே அது எந்தை உள்ளத்தில் திகழ்ந்தது. அவருடைய விழைவும் ஏக்கமும் துயரும் வஞ்சமும் பெற்று கூரொளி கொண்டது. அச்சொல்லுருவிலேயே நான் என் அன்னையிடம் கருப்புகுந்தேன். அவளுக்குள் அப்பார்த்திவப் பரமாணுவைச் சென்று தொட்ட ஆணவம் அச்சொல் வடிவிலிருந்தது. அதிலிருந்து எனக்கு மீட்பில்லை.”

“இத்தனைக்கு அப்பாலும் அச்சொல் என் நாவிலும் நெஞ்சிலும் இனிக்கிறது” என்றபோது அவன் புன்னகை செய்துகொண்டிருந்தான். “எண்ணி எண்ணி எழுப்பினாலும் ஒரு கணம்கூட உள்ளம் சலிப்பும் கசப்பும் கொள்ளவில்லை. இழந்தவையும் சென்றவையும் எவ்வண்ணமும் பொருட்டெனத் தோன்றவில்லை. ஒரு சொல்லுக்குக்கூட என்னுள் பிழையுணர்வு எழவில்லை.” இளைய யாதவர் சொல்லெடுப்பதற்குள் யுதிஷ்டிரன் சீற்றத்துடன் முன்னால் வந்து “கீழ்மகனே, உன் வெறியால் நாங்கள் அழிந்தோம். பழி கொண்டோம். கீழ்மை சூடினோம். துயரும் சிறுமையும் கொண்டு நின்றிருக்கிறோம். சென்று பார், அங்கே குருக்ஷேத்ரக் களத்தில் எஞ்சியிருப்பது என்னவென்று” என்று கூவினார்.

“ஆம், நான் அறிவேன். திரும்பி அக்களத்தை நோக்கியபோது முழுமையாக அனைத்தையும் உணர்ந்தேன். அதன் பின்னரே இங்கே வந்தேன். இங்கிருந்து மீண்டும் எழும்பொருட்டு. இதே போரை இதைவிட ஆற்றலுடன் மீண்டும் நிகழ்த்தும் வல்லமையை பெறும்பொருட்டு. ஏனென்றால் நான் அதன்பொருட்டு எழுந்தவன்.” யுதிஷ்டிரன் திகைத்துப்போய் நோக்கினார். பின்னர் இளைய யாதவரை நோக்கி ஏதோ சொல்ல முயன்றார். துரியோதனன் அவர் கொண்ட தவிப்பை நோக்கி சிரித்தபடி “யுதிஷ்டிரரே, நான் இவ்வண்ணம் இனி மீளமீள எழுந்துகொண்டேதான் இருப்பேன். பல உருவங்களில் பல காலங்களில். அங்கே நான் என் முகங்களைத்தான் நோக்கிக்கொண்டிருந்தேன்” என்றான். அவன் மேலும் சொல்லுமுன் குறுக்கே புகுந்த இளைய யாதவர் “நாம் இங்கே இதை முடிப்பதெங்கனம் என்று பார்ப்போம், தார்த்தராஷ்டிரரே” என்றார்.

“நான் இப்போரை வெல்லவே விழைகிறேன். வெல்வதற்குரிய அனைத்து வழிகளையும் தேர்வதுதான் என் கடமை” என்று துரியோதனன் சொன்னான். “அரசன் என நான் தோற்றுவிட்டேன். எனில் அரசயோகியாக எழுவேன். அதன்பொருட்டு இச்சுனைக்குள் தவம் செய்யவே விழைகிறேன். முதல்முறை ஒரு வேடனால் பின்னிழுக்கப்பட்டேன். இம்முறை உங்களால். அறுதியாக வெல்வதுவரை அடங்கும் எண்ணம் எனக்கில்லை.” பீமன் “உன்னை யோகத்திற்கு அனுப்பும் எண்ணம் எங்களுக்கில்லை… கீழ்மகனே, உன் குருதியுடனன்றி இங்கிருந்து செல்லப்போவதில்லை” என்று கூவினான். அவனை புன்னகை மாறா முகத்துடன் திரும்பி நோக்கியபின் துரியோதனன் “யாதவரே, அவனுடைய அவ்வஞ்சம் என்னை வந்தடையவில்லை. அவ்வுணர்வுகளே அயலெனத் தெரிகின்றன. நான் அவற்றை கடந்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றான்.

“ஆனால் நான் கடக்கவில்லை. நான் இன்னும் இழிந்துவிட்டேன். குருதிமணம் மட்டுமே அறிந்த கீழ்விலங்கு நான். என்னுடன் போருக்கெழுக!” என்று பீமன் கூவினான். “நீ ஆண்மகன் என்றால், அரசன் என்றால் எழுக! என்ன சொன்னாய்? தவமியற்றுகிறாயா? கீழ்பிறப்பே, உனக்கு நாணமில்லையா அவ்வண்ணம் உரைக்க? உன்னால் பிதாமகர்களும் ஆசிரியர்களும் மடிந்தனர். அக்ஷௌகிணிகள் அக்ஷௌகிணிகளாக தந்தையரும் மைந்தரும் கொழுநரும் மண்பட்டனர். உன் உடன்பிறந்தாரும் மைந்தரும் தோழரும் கொல்லப்பட்டனர். இதன்பின் உயிருடன் எஞ்சுவதைப்போல் கீழ்மை பிறிதுண்டா? வெறும் உயிருக்கு நசை கொண்டா இப்படி பசப்புகிறாய்? உன்னை நிமிர்ந்தோன் என நினைத்தேன். வளையாதோன் என மயங்கினேன். இன்று அறிந்தேன், நீ ஒரு கீழுயிர். வளைந்தும் நெளிந்தும் சுருண்டும் ஒடுங்கியும் உயிர்தப்பும்பொருட்டு ஒடுங்கிக்கொள்ளும் புழு நீ.”

தொண்டை நரம்புகள் புடைக்க கைவிரல் சுட்டி கூச்சலிட்டபடி பீமன் நெருங்கி வந்தான். “உன்னுடன் பொருதுவது என் தோளுக்குப் பெருமை என எண்ணிய நாட்களுண்டு. உன்னை வென்று நின்றால் தெய்வங்கள் என்னை வாழ்த்தும் என்று கனவு கண்டிருந்தேன். உன் கையால் இறந்தாலும் வீரருக்குரிய விண்ணுலகில் ஒளிகொண்டு எழுவேன் என்று நினைத்திருந்தேன். இன்று உன்முன் நின்றிருப்பதற்காக கூசுகிறேன். ஆம், உன்னை கொல்வேன். அது இப்போது உறுதியாயிற்று. இச்சிறுமை உன்னில் கூடுவதே உன்னைக் கொன்று மண்ணில்வீழ்த்த விரும்பி என் தோளில் குடியேறியிருக்கும் தெய்வங்களின் ஆணையால்தான். இறுதிப் பெருமையையும் உன்னிடமிருந்து பறித்துவிடவேண்டும் என அவை விரும்புகின்றன. குலக்கொடியின் பழிகொண்ட நீ வெறும் புழுவாக செத்துக்கிடக்கவேண்டும் என்று அவை முடிவுசெய்துவிட்டன. எண்ணுக, உன்னைக் கொன்ற பின் நசுக்கிக்கொன்ற புழுவை நோக்குவதுபோல் உன்னை நோக்குவேன்! உன் உடல்மேல் காறி உமிழ்ந்தபின் கடந்துசெல்வேன்.”

அவனை நோக்கிய துரியோதனனின் விழிகள் மலர்ந்தே இருந்தன. அவை இளைய யாதவரின் விழிகள் போலிருப்பதாக எண்ணிய நகுலன் அறியாமல் சகதேவனை தொட்டான். “இவ்வுணர்ச்சிகளுடன் இனி விளையாட என்னால் இயலாது, யாதவரே. இது நான் எவ்வண்ணமும் தொடவியலாத பிறிதொன்று” என்றான். இளைய யாதவர் “ஆம், ஆனால் இவ்வஞ்சம் உங்களைத் தொடர்ந்து வந்துள்ளது. இவ்வுலகிலிருந்து உங்களை வந்து பற்றும் இறுதிக் கை அது. அதை கடக்காமல் நீங்கள் உள்ளே நுழையமுடியாது” என்றார். “எனில் ஐவரும் இணைந்து என்னை கொல்லட்டும். பீமன் கதையேந்தட்டும். இளையவன் காண்டீபம் ஏந்தட்டும்… நான் படைக்கலம் தொடப்போவதில்லை” என்று துரியோதனன் சொன்னான். “எனில் அவ்வண்ணமே நிகழட்டும். விலங்குகளிடம் போர்நெறி கொள்வதில் பொருளில்லை. இப்போதே உன் நெஞ்சுபிளந்து குருதிகொள்கிறேன்” என பீமன் முன்னால் வந்தான்.

அவனை இளைய யாதவர் கைநீட்டி தடுத்தார். “அகல்க!” என்று கூரிய குரலில் அவர் சொல்ல பீமன் உறுமியபடி பின்னடைந்தான். “தார்த்தராஷ்டிரரே, தனிமையில் படைக்கலமின்றி நின்றிருக்கும் உங்களை கொன்றுவிட்டுச் சென்று போர்முடிப்பது பாண்டவர்களுக்கு மிக எளிது. போர்நெறிகளின்படி அது பிழை என்றாலும் இன்று அதை பெரும்பிழை என எவரும் கொள்ளப்போவதில்லை. பெண்பழி கொண்ட உங்களுக்கு அது உகந்த முடிவு என்றே நூலோரும் சான்றோரும் அந்தணரும் உரைப்பார்கள்” என்றார். அதற்குள் யுதிஷ்டிரன் “இல்லை யாதவனே, அது நிகழலாகாது. அவன் அரசன். குருகுலத்தவன். களமுறைப்படி அவன் வெல்லப்படவேண்டும். இல்லையேல் நான் சூடவிருக்கும் யயாதியின் மணிமுடிக்கு அது இழிவு” என்றார்.

“எனில் அவர் படைக்கலம் ஏந்தவேண்டும். போருக்கு ஒப்புக்கொண்டு களம் நின்றிருக்கவேண்டும்” என்றார் இளைய யாதவர். “அதற்கான வழிமுறை என்ன? அதை கூறுக!” என்ற யுதிஷ்டிரன் திரும்பி சகதேவனிடம் “கூறுக இளையோனே, தொல்நெறிகளின்படி அதற்கான வழிமுறை என்ன?” என்றார். சகதேவன் அப்பால் நகர்ந்தான். யுதிஷ்டிரன் உடன் சென்றார். நகுலனும் அருகே சென்று நிற்க அவர்கள் மூவரும் தாழ்ந்த குரலில் சொல்லாடினர். அர்ஜுனன் அங்கு இலாதவன் போலிருந்தான். பீமன் கைகளைக் கட்டியபடி துரியோதனனை விழிகள் சுருங்க கூர்ந்து நோக்கியபடி நின்றான்.

“மூத்தவரே, அரசகுடியினரின் தொல்நெறிகள் விலங்குகளில் இருந்து உருவானவை. இதை வியாஹ்ரநியாயம் என்கின்றன நூல்கள். அதன்படி அரசனை ஆற்றல்கொண்ட எவரும் அறைகூவலாம். அரசன் தன்னைவிட ஆற்றல்கொண்ட எவரையும் அறைகூவலாம். ஆகவே அரசர் என நீங்கள் அவரை அறைகூவுவதற்கு முறை உண்டு” என்று யுதிஷ்டிரனிடம் சகதேவன் சொன்னான். “அரசர் என்றும் ஆண்மகன் என்றும் ஆற்றலோன் என்றும் அவர் அந்த அறைகூவலை தவிர்க்கமுடியாது. அரசன் தானே களம்நின்று போரிடவில்லை என்றால் தன்னைச் சார்ந்த பிறிதொருவரிடம் போரிடும்படி கூறலாம். அரசனின் தோள் என பிறிதொருவர் களமிறங்கலாம். அவர் அடையும் வெற்றியும் தோல்வியும் அரசருடையதேயாகும்.”

யுதிஷ்டிரன் “நான் அவனை அறைகூவுகிறேன். அவன் தவிர்க்க மாட்டான்… நம்மில் ஒருவன் அவனை களத்தில் வென்றாலொழிய நாம் முடிசூடும் மெய்யுரிமையை பெறுவதில்லை” என்றார். சகதேவன் “ஆனால் அறைகூவப்பட்டவருக்கு மூன்று உரிமைகள் உண்டு. போர் நிகழும் இடத்தை அவர் தெரிவுசெய்யலாம். போருக்குரிய படைக்கருவியை அவரே முடிவுசெய்யலாம். எவருடன் பொருதுவது என்பதை கூறும் உரிமையும் அவருக்கே” என்றான். நகுலன் “மூத்தவரே, நம்மில் இருவர் மட்டுமே அவருடன் சற்றேனும் களம்நிற்க முடியும். அவர் வில்லை தெரிவுசெய்யவில்லை என்றால் பார்த்தனும் அவரை எதிர்கொள்ள முடியாது. கதையை தெரிவுசெய்தால் மட்டுமே பீமசேனனும் எதிர்க்க முடியும். மற்போரில் பீமசேனனும் அவரை வெல்லமுடியாது. கதைப்போர் என்றாலும்கூட அனைத்துத் தெய்வங்களின் அருளும் தேவையாகும்” என்றான்.

யுதிஷ்டிரன் “ஆம், ஆனால் நாம் வெல்வோம். ஏனென்றால் இதுவரை வென்றிருக்கிறோம்” என்றார். “அவர் என்னையோ சகதேவனையோ தெரிவுசெய்தாரென்றால் நாம் அடைந்த அனைத்து வெற்றிகளும் இல்லாமலாகும்.” யுதிஷ்டிரன் சில கணங்கள் விழிதாழ்த்தி உளமோட்டியபின் “நமக்கு வேறு வழியில்லை. அதுவே நம் ஊழ் எனில் அவ்வாறே ஆகுக!” என்றார். “மூத்தவரே” என நகுலன் தவிப்புடன் அழைக்க “நான் அவனை நம்புகிறேன். அவன் குருகுலத்தோன் என்றும் திருதராஷ்டிரரின் மைந்தன் என்றும் எண்ணி அறைகூவுகிறேன்” என்றபின் மேலும் பேசமுனைந்த நகுலனை கையமர்த்திவிட்டு திரும்பிச்சென்று உரத்த குரலில் “தார்த்தராஷ்டிரரே, இங்கு இப்போரை முடித்துவைப்போம். நான் உங்களை போருக்கு அறைகூவுகிறேன். இங்கேயே இறுதிப் போர் நிகழட்டும். இங்கேயே இது முடிந்தாகவேண்டும். இங்கிருந்து எதுவும் எஞ்சலாகாது” என்றார்.

துரியோதனன் “இந்த அறைகூவலை ஆண் என நின்று ஏற்கிறேன்” என்று சொன்னான். யுதிஷ்டிரன் மேலும் முன்னகர்ந்து “இளையோனே, தொல்நெறிகளின்படியே இது நிகழ்க! என் சார்பில் எங்கள் ஐவரில் ஒருவரை நீ தெரிவுசெய்யலாம். படைக்கலத்தையும் போரிடும் களத்தையும் நீயே முடிவு செய்யலாம்” என்றார். “இது என் சொல். நீ வென்றால் அது இப்போரின் முழு வெற்றி என ஏற்கிறோம். அதன்பின் அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் உன்னுடையது. நாங்கள் எஞ்சியோர் எங்கள் துணைவியருடனும் மைந்தருடனும் இந்நிலத்தை துறந்து கானேகுகிறோம். இக்களத்தில் நீ வீழ்ந்தால் உன்னை என் குருதியினனென ஏற்று நானும் என் கொடிவழியினரும் நீர்க்கடன் இயற்றுவோம். எங்கள் குடிக்கு மூதாதை என நீ என்றும் இருப்பாய்” என்றார்.

துரியோதனன் அறைகூவலை ஏற்கும் முகமாக தலைவணங்கினான். பீமன் சீற்றத்துடன் கைகளை விரித்தபடி ஏதோ சொல்ல முன்னெழ மெல்லிய ஓசையால் அவனை இளைய யாதவர் அடக்கினார். நகுலன் சகதேவனின் தோள்களை பற்றிக்கொண்டான். துரியோதனன் புன்னகையுடன் “நான் எம்முடிவை எடுப்பேன் என்று நீங்கள் அறிவீர்கள், மூத்தவரே” என்று சொன்னான். “பீமசேனனிடமன்றி எவரிடமும் நான் பொருதப்போவதில்லை.” நகுலன் சகதேவனின் தோளிலிருந்து கையை விலக்கி நீள்மூச்செறிந்தான். “அவனைத் தழுவிப்போரிட என்னால் இயலாது. அவன் உடலைத் தொட்டால் இத்தருணத்தில் என் உடல் தன் குருதியை கண்டடையக்கூடும். ஆகவே கதைப்போரையே தெரிவுசெய்கிறேன். இவ்விடத்தில் இப்போதே போர் நிகழட்டும்” என்று துரியோதனன் சொன்னான்.

முந்தைய கட்டுரைஅன்றைய கூண்டுகள் அன்றைய சிறுவெளிகள்.
அடுத்த கட்டுரைஸ்ரீபதி -கடிதங்கள்