‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 30

பகுதி நான்கு : அன்னையெழுகை – 2

யுதிஷ்டிரன் களைத்திருந்தார். யுயுத்ஸு அவர் முன் அமர்ந்தபோது அவர் அவனிடம் ஏதோ சொல்ல நாவெடுத்தார். திரைச்சீலை நெளிய அதை நோக்கி பார்வையைத் திருப்பி அவ்வண்ணமே நினைவுகளில் ஆழ்ந்து எங்கோ சென்று அலைந்து நெடும்பொழுது கழித்தே மீண்டார். அவனிடம் “நான் உன்னை வரச்சொன்னது இந்திரப்பிரஸ்தத்திற்கு நீ செல்லவேண்டும் என்பதற்காகவே” என்றார். அதை அவனிடம் அவர் முன்னரே சொல்லியிருந்தார். மேலும் அவர் பேசுவதற்காக அவன் காத்திருந்தான். ஆனால் அவர் மீண்டும் தன் எண்ணங்களில் ஆழ்ந்தார்.

மீண்டும் தன்னிலை உணர்ந்தபோது அவனை எவர் என்பதுபோல பார்த்தார். அவன் “இந்திரப்பிரஸ்தத்திற்கு உடனடியாகக் கிளம்புகிறேன், மூத்தவரே” என்றான். “ஆம், நீ உடனடியாகக் கிளம்பியாகவேண்டும்” என்று அவர் சொன்னார். “வேள்விப்பரிகள் மீண்டு வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை வரவேற்க அரசனும் அரசியும் கோட்டைவாயிலுக்குச் செல்லவேண்டும். வேள்வியில் அவர்கள் அமரவேண்டும். அதன்பின் ராஜசூயத்தில் அவள் அமர்ந்தாகவேண்டும்” என்றார். யுயுத்ஸு “ஆம்” என்றான்.

“ஆனால் அவள் வராமல் போகலாம்… அவள் வரும் உளநிலையில் இல்லை. அதை நான் நன்கறிவேன்” என்று அவர் சொன்னார். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “ஆகவேதான் உன்னிடம் இந்திரப்பிரஸ்தத்திற்குச் செல்லும்படி சொன்னேன்.” அவன் அவர் அதை இருமுறை முன்னரே ஆணையிட்டுவிட்டார் என்பதை சொல்ல விழைந்தான். ஆனால் அவர் கேட்கும் நிலையில் இல்லை. அவரிடம் ஓர் ஆழ்ந்த தத்தளிப்பு இருந்தது. அவன் உள்ளூர வியந்துகொண்டான். பாரதவர்ஷம் கண்ட மாபெரும் போரில் வென்றவர். அஸ்வமேதம் நிறைவுசெய்யவிருப்பவர், ராஜசூயம் இயற்றவிருப்பவர், மும்முடி சூடி அமரப்போகிறவர். ஆனால் அவர் எதையோ இழந்தவர் போலிருந்தார். கெடுதல் ஒன்றை எதிர்பார்ப்பவர் போலிருந்தார்.

யுதிஷ்டிரன் அவனிடம் “துவாரகையிலிருந்து செய்தி வந்துள்ளது” என்றார். அவன் அவர் எண்ணியிராமல் அப்பேச்சை எடுத்தமையால் திகைத்தான். அவர் “சாரிகர் அங்கிருக்கிறார். அவர் செய்தி எதையும் அனுப்பவில்லை. அங்கே உடன்சென்ற வீரர்களில் நால்வர் நம் ஒற்றர்கள். அவர்கள் அனுப்பும் செய்திகள் நமக்கு உகந்தவையாகவே உள்ளன. மைந்தன் தேறிக்கொண்டிருக்கிறான். இன்னும் சில நாட்களில் அவன் அந்தச் சிப்பியிலிருந்து வெளிவருவான். துரியோதனனின் மகள் அவனுக்கு அன்னையென கனிந்து சூழ்ந்திருக்கிறாள்” என்றார்.

“அவள் இயல்பு அது” என்று யுயுத்ஸு முகம் மலர்ந்து சொன்னான். “ஆம், அவளிடம் நான் பிறிதொன்று எண்ணவே இல்லை. இங்கிருந்து கான்வாழ்வுக்குச் சென்றபோதுகூட என் மைந்தரை நம்பி விட்டுச்செல்ல துரியோதனன் அன்றி பிறர் உண்டு என்னும் எண்ணமே என்னிடம் எழவில்லை. அவனால் வளர்க்கப்பட்ட என் மைந்தரைப்பற்றி நான் எப்போதும் கவலைகொண்டதில்லை” என்றார் யுதிஷ்டிரன். யுயுத்ஸு அப்பேச்சை விரும்பவில்லை. துரியோதனனின் பெயர் அவன் அகத்தில் ஓர் அறை போலவே எப்போதும் விழுந்தது. அவன் உடலில் மெய்ப்பு எழுந்தது. கைவிரல்கள் நடுங்கத் தொடங்கின. அவன் உள்ளத்தின் சொற்களெல்லாம் அடுக்கு குலைந்து சிதறிப்பரவி அதிர்ந்தன.

யுதிஷ்டிரனும் அப்பேச்சை நீட்டிக்க விழையவில்லை. அவரும் துரியோதனன் பெயரைச் சொல்வதை தவிர்க்க முனைகிறார் என அவன் கண்டிருந்தான். ஆனால் ஒருநாளில் ஓரிருமுறை அவர் துரியோதனன் பெயரை சொன்னார். இயல்பாக அப்பெயர் நாவிலெழுந்ததும் அவர் தன்னை உந்திக்கொண்டு விலகினார். ஆனால் அப்பெயரைச் சொல்லும்போது அவர் எப்போதுமே உளம்குழைந்தார். விரும்பிய பெயர்களை எப்போதுமே மனிதர்கள் தங்களுக்குரிய முறையில் அழுத்தம் அளித்தே சொல்கிறார்கள். துரியோதனன் என்ற பெயரைச் சொல்கையில் யுதிஷ்டிரன் த என்னும் ஒலியை மிக அழுத்தினார். அது நாவில் நின்று எழும்படி சொன்னார்.

யுதிஷ்டிரன் அந்தத் தருணத்தை முடித்துக்கொள்ள விழைந்தார். ஆகவே அவர் உடலில் எழுவது போன்ற அசைவுகள் உருவாயின. “சாரிகர் நாம் எண்ணுவது போன்றவர் அல்ல. அன்று அவர் இங்கிருந்து சென்றபோதே அதை உணர்ந்தேன். அவர் வேறேதோ செய்யக்கூடும் என எண்ணினேன். ஆனால் அவர் நம் எண்ணத்தையே செய்கிறார். அவருடைய அக்காவியத்தின் செய்யுட்களை நம் ஒற்றன் படித்திருக்கிறான். அவை நாம் விழைவனவற்றையே சொல்கின்றன” என்று யுதிஷ்டிரன் சொன்னார். அப்பேச்சையும் அவர் விரும்பவில்லை என்று அவருடைய தயக்கம் காட்டியது.

யுயுத்ஸு “அவர் தன் போக்கு கொண்டவர்” என்றான். அச்சொற்களுக்கு எப்பொருளும் இல்லை என சொன்ன பின்னரே உணர்ந்தான். யுதிஷ்டிரன் “ஆம், அவர் அதை உத்தரைக்காகவே எழுதுகிறார். அவளை அருந்ததி என ஒப்புமை செய்கிறார். தனித்தூய்மை கொண்டவள் என்கிறார். அவளை வரலாற்றில் அவ்வண்ணமே நிலைநிறுத்தவேண்டும் என்று கருதுகிறார். அது நன்று, நம் கொடிவழிகளுக்குத் தேவை அந்தக் கதையே. வரலாறென்பது அவ்வண்ணம் அழுத்தமான காவியச்சொற்களில் அமைந்தால் அதை மாற்றியமைக்க எவராலும் இயலாது” என்றார்.

“இந்தச் சிறு சிக்கலும் தீர்க்கப்பட்டால் நான் நிறைவடைவேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இங்கே திரௌபதி வந்தாகவேண்டும். அவள் உள்ளம் இந்நகரை வெறுக்கிறது. இந்நகரில் அவள் எண்ண விழையாத ஒன்று நிகழ்ந்தது. அவ்வஞ்சத்தை அவள் இன்று கடந்துவிட்டாள். ஆனால் அவ்வெண்ணம் அவளை துன்புறுத்துகிறது.” யுயுத்ஸு “அது இயல்பே” என்றான். “அவள் விரும்பிக் கட்டிய நகரம் இந்திரப்பிரஸ்தம். அங்கும் அவள் விழையாதது ஒன்று நிகழ்ந்தது. அதுவே இப்போரை கொண்டுவந்தது. அங்கும் அவள் நிறைவடைந்து அமைய முடியாது” என்றார் யுதிஷ்டிரன். “அதை அவள் அங்கே கிளம்பிச் செல்லும்போதே சொன்னேன். அவள் என் சொற்களை செவிகொள்ளவில்லை.”

யுயுத்ஸு ”அவரிடம் இன்னமும்கூட அதைப் பற்றி சொல்லலாம். அப்போதிருந்த உளநிலையில் அவர் அம்முடிவை எடுத்திருக்கலாம்” என்றான். “ஆம், அன்று அரசியர் அனைவருமே விந்தையான உளக்கொந்தளிப்புடன் இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் அவரவர் கணவர்களே முதன்மை எதிரிகளெனத் தெரிந்தனர். சுபத்திரை துவாரகைக்குச் சென்றதே தொடக்கம். அன்னை விதுரருடன் சென்றது மேலும் ஒரு உந்துதல். அரசியர் அனைவருமே தங்கள் பிறந்த நாடுகளுக்குச் செல்ல முடிவெடுத்தனர். அவர்களை தடுக்க முடியவில்லை.”

அவள் இந்திரப்பிரஸ்தத்திற்குச் செல்ல முடிவெடுத்ததை நான் அங்கிருந்து கிளம்பிய பின்னரே அறிந்தேன். உண்மையில் என் படகில் நான் ஏறி அமர்வதுவரை அவளும் உடன்வருகிறாள் என்றே எண்ணினேன். ஏற்பாடுகள் செய்யும்பொருட்டு நீ அஸ்தினபுரிக்கு வந்திருந்தாய். படகு கிளம்பும்போதுதான் திரௌபதியின் படகு யமுனை வழியாக இந்திரப்பிரஸ்தத்திற்குச் செல்லவிருக்கிறது என்று அறிந்தேன். அதை எவ்வண்ணமோ நான் உணர்ந்திருந்தேன் என்பதனால் என் உள்ளம் அதிரவில்லை. ஆனால் ஏமாற்றமும் கசப்பும் ஏற்பட்டது.

அங்கிருந்து கிளம்பும்போது நானிருந்த உணர்வை என்னாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. மைந்தர்களுக்கு நீர்க்கடன் கழித்ததும் அனைத்து வலிகளிலிருந்தும் மீண்டு ஒரு நிறைவை அடைந்தேன். அது ஒரு சிறு விடுதலை, மெல்லிய களிப்பு. அது அன்னையும் பேரன்னையும் கிளம்பிச்சென்ற செய்தியால் அழிந்தது. மறுநாள் புலரிவரை அதன் எரிச்சலும் தவிப்பும். அகிபீனா உண்டு மிகப் பிந்தியே துயின்றேன். ஆனால் புலரியில் விழிப்பு வந்தபோது முதலில் வந்த எண்ணம் அங்கிருந்து கிளம்பவிருக்கிறேன் என்பது. மீண்டும் அந்த விடுதலையுணர்வும் உவகையும் ஏற்பட்டது. இருளிலேயே எழுந்து வந்து சாரல்மழையில் நனைந்தபடி நின்றேன்.

முக்தவனத்தில் ஒருநாளும் நான் ஆழ்ந்து துயின்றதில்லை. என்னைச் சூழ்ந்து என் மைந்தரின் நுண்ணுருவங்கள் நின்றிருப்பதையே எப்போதும் உணர்ந்துகொண்டிருந்தேன். சில தருணங்களில் கௌரவரை. ஓரிருமுறை கர்ணனை. ஒருமுறை துரோணரைக்கூட அருகே அறிந்தேன். அது கனவல்ல, உளமயக்கல்ல. உள்ளம் அறியும் ஓர் அருகமைவுணர்வு அது. இதோ உன்னை என் உடலும் அறிந்துகொண்டிருக்கிறது, நான் விழிமூடினால் உன் இருப்பை உடலே காட்டும், அதைப்போல. நாகத்தை உணர்ந்த புரவி மெய்ப்புகொண்டு செவி புடைப்பதுபோல எந்நேரமும் நான் இருந்தேன். ஒருகணம்கூட அவ்வுணர்வு அகன்றதில்லை.

ஆனால் அன்று காலை உணர்ந்தேன், நான் ஆழ்ந்துறங்கிவிட்டிருந்ததை. என் உடலும் உள்ளமும் கழுவப்பட்டவைபோல தெளிந்திருந்தன. வெள்ளி முளைத்ததுமே கிளம்பிவிட்டோம். காலை முழுக்க என் முகத்தில் புன்னகை இருந்துகொண்டே இருந்தது. அவள் விலகிச்செல்கிறாள் என்று தெரிந்ததும்தான் அவளை துரத்திச்செல்லும்படி ஆணையிட்டேன். முழுப் பாயை விரித்து அவளை துரத்திச் சென்றேன். அவள் படகை மறித்து அதில் ஏறிச்சென்றேன். அது அனைவர் நோக்கிலும் விழும் என்றும், என் மாண்புக்கு இழுக்கு என்றும் அறிந்திருந்தேன். அதை அப்போது எண்ணவில்லை.

அவள் நான் அப்படகில் ஏறியதை அறிந்தும் வெளியே வரவில்லை. அவள் சேடிப்பெண்ணை விலக்கிவிட்டு சினத்துடன் அவள் அறைக்குள் நுழைந்தேன். என்னைக் கண்டும் அவள் எழவில்லை. நான் மேலும் மேலும் சீற்றம் கொண்டிருந்தேன். சீற்றம் கொள்கையில் அக்காட்சியை நாம் முன்னரே நமக்குள் நடித்துக்கொள்கிறோம். நடிக்க நடிக்க விசையேற்றுகிறோம். சீற்றத்துடன் நாம் செல்லும் விரைவு சீற்றத்தை விசைமிகச் செய்கிறது. அன்று நடந்துசென்றிருந்தால் அத்தனை சினமெழுந்திருக்காது.

அவள் முன் சென்று நின்று அவள் முகம் நோக்கி கைநீட்டி “என்ன நினைக்கிறாய்? என்னை இழிவுசெய்ய திட்டமிட்டிருக்கிறாயா? என் குடிகள் முன் என்னை இழிவுபடுத்துவதா உன் எண்ணம்?” என்று கூவினேன். “அரசி என உன்னை எண்ணினேன். அடுமனைப்பெண்டிரைவிட கீழ்மகள்போல் நடந்துகொள்கிறாய். உன்னை நீயே இழிவுசெய்துகொள்கிறாய். இழிவுசெய்துகொள், அது உன் விருப்பம். நீ இழிந்தால் செல்லும் ஆழம் அடியில்லாதது. என்னையும் என் குடியையும் உன் கீழ்மை வந்து தொட நான் ஒப்பமாட்டேன்” என்று கூச்சலிட்டேன்.

அவள் இமைகொட்டாமல் நோக்கியபடி அசையாமல் அமர்ந்திருந்தாள். “உனக்கென்ன உள்ளம் கலங்கிவிட்டதா? சொல், எனில் உன்னை இருட்டறையில் அடைத்துவிட்டு முடிசூடுகிறேன்” என்றேன். “எனக்கு நீ ஒரு பொருட்டல்ல. இப்புவியில் எவரும் ஒரு பொருட்டல்ல. நான் வரலாற்றில் எவ்வண்ணம் வாழ்கிறேன் என்பதன்றி எதுவும் என் எண்ணத்தில் இல்லை. நான் என் புகழ்மிக்க முன்னோருடன் வைக்கப்படுவதைத் தவிர எதையும் கருத்தில் கொள்ளப்போவதில்லை.” அவள் எவ்வண்ணமும் அச்சொற்களால் சீண்டப்படவில்லை என்று கண்டேன். மேலும் விசைகொண்ட சொற்களுக்காக என் அகம் தேடியது. அக்கணமே கண்டுகொண்டது.

“உன் மைந்தர்களுக்காக நீ துயர்காக்கிறாயா? நீ இவ்வண்ணம் ஒழிந்து சென்றால் உன் மைந்தரை கொன்றவள் நீ என்னும் பழியிலிருந்து உன்னால் ஒழிய முடியுமா என்ன?” அவளை மேலும் புண்படுத்த விழைந்தேன். மேலும் கீழிறங்க, மேலும் சிறுமைகொள்ள அதன் வழியாக அவளை ஊடுருவ முயன்றேன். இளையோனே, பெண்ணுடன் உறவுகொண்ட எந்த ஆண்மகனும் அறிந்திருப்பதுதான் இது. அவளை எங்கோ ஓரிடத்தில் தன்னால் வெல்லமுடியாதென்று அவன் அறிகிறான். தன் ஆழத்தில் அவள் இறுக்கிக்கொண்டிருக்கும் ஒரு இடத்தை கண்டடைந்தபின் அவனுக்கு ஒருகணமும் அமைதியில்லை. அதை தாக்கி உடைக்க அவன் எந்த எல்லைக்கும் செல்வான். தன் மனைவிமுன் கீழ்மகனாகத் தெரியாத ஆண் எவருமில்லை.

அவள் முகம் நோக்கி குனிந்து கூவினேன். “நீ அடைந்த இழிவனைத்தும் நீயே ஈட்டிக்கொண்டவை. அஸ்தினபுரியின் அவையில் நீ ஏன் சிறுமைகொண்டாய்? நீ கர்ணன்மேல் கொண்ட கரவுக்காமத்தால். நீ அறிந்திருந்தாய் அவர் என் தமையன் என்று. அவரையும் வென்றெடுக்க முயன்றாய். அவரை வென்றால் அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் உன்னுடையதே என்று திட்டமிட்டாய். அந்தத் திட்டத்தை அறிந்து உன்னை அதிலிருந்து தடுக்கும்பொருட்டே சுயோதனன் உன்னை அவைச்சிறுமை செய்தான். உன்மேல் அவன் கொண்ட வெற்றி அது.”

அவள் கல்லென மாறிவிட்டவள் போலிருந்தாள். நான் அழுகையும் கொந்தளிப்புமாக கூவினேன். ”ஆனால் உன் கீழ்மையின் எல்லை என்ன என்று கர்ணன் அறிந்திருந்தார். ஆகவேதான் நீ அவைச்சிறுமை செய்யப்படுகையில் வாளாவிருந்தார். உன் எல்லையென்ன என்று அறிந்தவன் நான் மட்டுமே. ஆம், நான் மட்டுமே. நீ அடைந்த சிறுமையை கண்டு சினம்கொண்டு நான் போருக்கெழவில்லை. எங்கள் குடிக்கு சிறுமை வந்துவிடலாகாதே என்றுதான் களம்கண்டோம். நாங்கள் சொல்லில் நிமிர்ந்து நிலைகொள்ளவேண்டும் என்பதற்காக.”

அதற்குப் பின் என்னால் பேச இயலவில்லை. என் குரல் உடைந்து உடல் தளர்ந்தது. நான் அருகிருந்த பீடத்தில் அமர்ந்துகொண்டேன். அவள் என்னை நோக்கி “நான் அங்கே வரப்போவதில்லை” என்று தணிந்த குரலில் சொன்னாள். நான் சொன்னவற்றை அவள் செவிகொண்டாளா என்றே ஐயமாக இருந்தது. என்னை நானே அருவருத்தேன். நம் உடலுக்குள் இருந்து வெளிவந்து கிடக்கும் மலத்தைக் கண்டு நாமே குமட்டல் கொள்ளும் ஒரு தருணம் உண்டல்லவா? அந்தக் கீழ்மை என்னுடையது அல்ல. அந்தச் சொற்களில் எழுந்த எந்த எண்ணத்தையும் அதற்கு முன் நான் கொண்டிருக்கவில்லை. அந்தத் தருணம் என் நாவில் அவற்றை எழுப்பியது. அச்சொற்கள் வெறும் நச்சு அம்புகள். ஆனால் அவற்றை நான் சொல்லிவிட்டேன்.

அவள் “என்னால் அந்நகருக்குள் நுழைய இயலாது” என்றாள். “அந்நகரில் நான் நுழைந்தால் அதன் பொருட்டே என நானே ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். என்னால் அதை எண்ணிநோக்கவே இயலவில்லை. இன்று காலை நான் கிளம்புவது வரைக்கும்கூட அறுதி முடிவு எடுக்கவில்லை. படகில் ஏறி அமர்ந்த பின்னரே என்னால் அங்கே வரமுடியாதென்று உணர்ந்தேன்.” ஒரு கணத்தில் என் சரடுகள் எல்லாம் அறுந்தன. நான் என்னால் முழுமையாக கைவிடப்பட்டேன். கீழே அமர்ந்து அவள் கால்களை பற்றிக்கொண்டேன்.

“என் மேல் இரக்கம் காட்டு. நான் சொன்னவை எல்லாம் வெறும் நஞ்சு என நீயே அறிவாய். அவை என் இயலாமையின் வெளிப்பாடுகள். என்னை கைவிட்டுவிடாதே. என்றும் உன்னை என் அன்னையென எண்ணிக்கொள்பவன் நான். உன்னை அடைக்கலம் அடைந்தவன்” என்றபோது நான் விழிநீர் பெருக்கத் தொடங்கிவிட்டிருந்தேன். “என்னை என் அன்னை உதறிவிட்டார். என் இளையோர் கைவிட்டுவிட்டனர். நீ அனைத்தையும் அறிவாய். அவர்கள் என்னுடன் இருப்பார்கள். ஆனால் நான் சென்று தொடமுடியாத நெடுந்தொலைவில். என்னுடன் எவருமில்லை. நீ என்னை முனிந்தபோதுகூட என்னிடமிருந்து அகலவில்லை என்றே எண்ணியிருந்தேன். நீ என்னை விட்டுச்செல்கிறாய் என்று தோன்றியது இப்போதுதான்” என்றேன்.

அவளைப் பிடித்து உலுக்கியபடி “நீ இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்லக்கூடாது. நீ நகர்நுழைவை தவிர்த்தால் நீ என்னை கைவிட்டுவிட்டாய் என்று மட்டுமே பொருள். வேறேதும் பொருள் இல்லை. நீ அந்நகருக்குச் சென்றால் மீள மாட்டாய்…” என்றேன். அவள் என் தலைமேல் கைவைத்து கனிந்த குரலில் “நான் சொல்வதை புரிந்துகொள்க, நான் அந்நகரில் மட்டுமே இருக்கமுடியும்” என்றாள். “நீ என்னை கைவிடுகிறாய்… என்னை வெறுக்கிறாய்” என்றேன். ”உங்களை நான் இறுதிவரை கைவிடமாட்டேன் என நீங்கள் அறிவீர்கள். நான் அங்கே வரமுடியாது, அவ்வளவுதான்” என்றாள்.

நான் சீற்றம் கொண்டேன். “எனில் என்ன செய்யவேண்டும் என்கிறாய்? நகர்நுழைவை இந்திரப்பிரஸ்தத்தில் நிகழ்த்துவதா? அஸ்தினபுரி என் மூதாதையரின் நகரம். அதுவே என் குடிக்குரியது. அங்கே முடிசூட்டிக்கொண்டால்தான் நான் என் தந்தையரின் குருதிக்குரியவனாகிறேன்…” என்று கூவினேன். “நான் சூட்டிக்கொள்ள விழைவது குருவின், ஹஸ்தியின், பிரதீபரின் மணிமுடியை… அதற்காகத்தான் உயிர்வாழ்கிறேன். நீ வந்தாகவேண்டும். நீ என் மனைவி என்றால் என் சொல்லுக்குக் கட்டுப்பட்டாகவேண்டும்.”

“எனில் மனைவி என்பதை துறப்பதைத் தவிர நான் செய்யக்கூடுவது வேறில்லை” என்று அவள் அழுத்தமான குரலில் சொன்னாள். நான் திகைத்தேன். அவள் முகம் அதே இறுக்கத்துடன், ஆனால் கனிந்த விழிகளுடன் இருந்தது. கைகூப்பி உடல் தழைத்து “என்னை பொறுத்தருள். என் சொற்களை மறந்துவிடு. அவை கீழ்மகனாக நடித்து நான் சொன்னவை. என் மேல் சினம்கொள்ளாதே… உன்னுடன் நகர்நுழைவதை நான் நூறாயிரம் முறை நடித்துவிட்டேன். கான்வாழ்வில் ஒவ்வொருநாளும் நான் கனவுகண்டது இது. தன்னந்தனியாக நான் நகர்நுழைந்தால் அது என் சாவுக்கு நிகர். என் வாழ்க்கையின் எல்லா செயல்களுமே பொருளிழந்துவிட்டன என்று பொருள். அன்னையும் நீயும் இல்லையென்றால் நான் நகர்நுழைவது எவருக்காக? நான் அடைந்ததுதான் என்ன?” என்றேன்.

அவள் “நான் உங்கள்மேல் சினம் கொள்ளவில்லை. உங்கள் கீழ்மைச்சொற்கள் நீங்கள் என் முன் வீழ்ந்துவிட்டதையே காட்டின. உங்கள் உள்ளத் துயரை எண்ணி நான் வருந்தவே செய்தேன். ஆனால் அந்நகர் என்னுடையதல்ல. அங்கே நான் வாழமுடியாது. நான் செல்லவேண்டிய இடம் என்ன என்று எனக்கு உறுதியில்லை. ஆனால் இந்திரப்பிரஸ்தம் நான் அமைத்தது. ஆகவே வேறுவழியே இல்லை” என்றாள். என் முகம் நோக்கி மெல்ல புன்னகைத்து “செல்க, என்னால் இயலாது அது!” என்றாள். அக்கனிவை நான் நன்கறிவேன். அனைத்து மானுடரையும் குழவி என எண்ணும் அன்னையின் விழிகளின், இதழ்களின் குழைவு அது.

என்னால் மேலும் பேசமுடியவில்லை. அவள் உள்ளத்தை நான் நன்கறிவேன். அது எங்கே கனியும் எங்கே உறுதிகொள்ளும் என்று எனக்கு ஐயமே இருந்ததில்லை. “நீ என் நெஞ்சில் வாளை பாய்ச்சிவிட்டாய். எனக்கு இழைக்கப்பட்ட பெரும் தீங்கு அன்னை இழைத்தது. இது அதைவிடக் கொடிது. நான் முற்றிலும் தனியனாக, முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டவனாக அந்நகர்முன் சென்று நின்றிருக்கப்போகிறேன். அதுவே நீ விழைவதென்றால் அவ்வண்னமே ஆகுக!” என்று திரும்பிவிட்டேன்.

“ஆனால் அஸ்தினபுரியை அணுகும்போது என் எண்ணம் வேறாக இருந்தது” என்றார் யுதிஷ்டிரன். “நான் வரும் காலமும் வழியும் மிகமிக நீண்டது. இங்கே நகர் எனக்காக ஒருங்கவில்லை. பல ஊர்களில் தங்கி காத்திருந்து பொறுமையிழந்து சீற்றம்கொண்டு துயரடைந்து சலித்து நகர்நுழைவுக்காக வந்தபோது அவள் இந்திரப்பிரஸ்தத்திற்குச் சென்றதே நன்று என்னும் எண்ணத்தையே அடைந்தேன். நகர்நுழைவு முடிந்து என் அறைக்குச் சென்றபோது உளமுருகி அழுதேன். தனிமையில் அமர்ந்து இரவெல்லாம் இருளை நோக்கிக்கொண்டிருந்தேன். அவள் வராமலானதே நன்று. இச்சிறுமைக்கு நான் தகுந்தவன், அதை அவள் அடையவேண்டியதில்லை என எனக்கே சொல்லிக்கொண்டேன்.”

“அன்று இந்நகர் என்னை சிறுமை செய்தது. நான் கொலைத்தெய்வத்தின் வாள்முன் நிற்பதுபோல இதன் இரக்கத்திற்காக காத்திருந்தேன். இதை அணுகிக்கொண்டிருந்தபோது கைகூப்பி இதனிடம் மன்றாடிக்கொண்டிருந்தேன். இந்தக் கோட்டைவாயிலுக்குள் நுழைந்தவன் ஓர் இரவலன். தன்னை புழுவினும் கீழ் என எண்ணிக்கொண்ட ஒரு சிறுமகன்” என்று அவர் தொடர்ந்தார். “ஆனால் பின்னர் எண்ணினேன். இங்கே திரௌபதியின் ஒரு துளி எஞ்சியிருக்கிறது. அன்னைவடிவென என்னைக் காப்பவள் எனக்கென தன் ஒரு பகுதியை இங்கே விட்டுச்சென்றிருந்தாள். அந்தப் பெண், கோட்டைக்காவல் பெண், அவள் எனக்காகச் செய்தவை திரௌபதியால் இயற்றப்பட்டவை போல. என்னை அவள் தன் சிறகுகளால் காத்தாள். என்னை அவள் மென்மையாக சூழ்ந்துகொண்டாள். நான் நல்லூழ் கொண்டவன். என்றும் பெண்டிரால் கனிவுடன் பேணப்படுபவன்.”

அவர் குரல் இடறியது. தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு மேலும் தொடர்ந்தார் “இந்நகரின் அத்தனை மாளிகைகளும் நான் நன்கறிந்தவை. அவை என்னை நோக்கி புன்னகைத்து முகமன் உரைப்பவை, உரையாடுபவை. தெருக்களில் செல்லும்போது மாளிகைகளுடன் பேசியபடியே செல்வது என் வழக்கம். ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு கணம் வாழ்ந்து வாழ்ந்து மீள்வேன். இந்நகரை ஒழிந்து இந்திரப்பிரஸ்தத்தில் வாழ்ந்த போதும் சரி, கானகத்தில் அலைந்த போதும் சரி, இந்நகரிலேயே நான் உளம்வாழ்ந்தேன். இம்மாளிகைகளை அகத்தே பார்த்துக்கொண்டிருந்தேன். அவை என் கனவிலெழுந்து கண்டு நீணாளாயிற்றே என்றன. என்று மீள்வாய் என்றன. என் முன்னோர்களின் கைபட்டு எழுந்தவை. அவர்கள் வாழ்ந்த தடம் பதிந்தவை.”

“அவை அன்று நான் நகர்நுழைந்தபோது கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தன. அவை ஊமைகளாகிவிட்டிருந்தன. அன்றிரவு நான் இந்த அரண்மனை முகப்பில் நின்று அவற்றை நோக்கிக்கொண்டிருந்தேன். அவற்றில் எவருமில்லை. அவை வெறும்கூடுகள். நான் அன்று புலரியில் எவருமறியாது வெளியே சென்றேன். கரும்போர்வையை போர்த்திக்கொண்டு நகரினூடாக அலைந்தேன். அத்தனை மாளிகைகளும் குருடாகிவிட்டிருப்பதைக் கண்டேன். ஒவ்வொன்றின் முன்னாலும் நின்று ஏங்கி நெஞ்சுருகி மீண்டேன்.”

“இந்நகரின் கரிய கோட்டைக்குள் நான் என்றுமே பாதுகாப்பாக உணர்ந்திருக்கிறேன். கடுங்குளிரில் கரும்போர்வையை போர்த்திக்கொண்டது போலிருக்கும். களிற்றுநிரைகளால் காவல்காக்கப்படுவது போலிருக்கும். ஆனால் அன்று இந்தக் கோட்டைச்சுவர்களை அஞ்சினேன். அவை உருகிச்சூழ்ந்த இருள் எனத் தோன்றின. இந்நகரை மாபெரும் நாகம் என அவை சுற்றி இறுக்கிக்கொண்டிருப்பதாக எண்ணினேன். கோட்டையை என்னால் கண் எடுத்து நோக்கமுடியவில்லை. இரவில் நகரில் செல்கையில் அக்கோட்டை செறிந்தெழுந்து மடிந்த காரிருள் வெளி என்று பட்டது. அதற்குள் இருந்து வெளியே தப்பியோடிவிடவேண்டும் என்று விழைந்தேன்.”

யுதிஷ்டிரன் மெல்ல தன்னிலை அடைந்தார். நீள்மூச்சுகளினூடாக இயல்படைந்தார். “இதோ அவளை எண்ணிக்கொண்டே இங்கே அமர்ந்திருக்கிறேன். நான் எவர் இருந்தாலும் அவள் உடனில்லையேல் முழுத் தனியன் என அறிகிறேன். அவள் முன் நான் நூலாய்ந்தவன் அல்ல. அறத்தான் அல்ல. அரசகுடியினன் கூட அல்ல. பேதைச்சிறுமைந்தன் மட்டுமே. அவள் முன் எப்போதும் அனைத்துக் கீழ்மைகளுடனும் அச்சங்களுடனும் மட்டுமே நின்றிருக்கிறேன். அவளும் என்னை மைந்தன் என்று அன்றி நடத்தியதில்லை.”

புன்னகைத்தபோது அவர் முகம் மேலும் துயர்கொண்டதாக ஆகியது. “மனைவியென அன்னையை அடைந்தவன் தெய்வங்களுக்கு இனியவன். அன்னையைவிட ஒரு படி மேலானவள் அத்தகைய மனைவி. அனைத்துக்கும் அப்பால் அவளிடம் சென்று நின்றிருக்க முடியும். அன்னை அருவருக்கும் செயலுக்குப் பின்னரும்கூட அவள் கைவிடமாட்டாள் என நம்ப முடியும்.” அவர் சிரித்து “தனிமை என எண்ணியதுமே நான் இந்திரப்பிரஸ்தத்திற்கே சென்றுவிடுகிறேன். அன்னையே அன்னையே என இங்கிருந்து ஏங்கி குரல்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். அவளுக்கு என் குரல் கேட்கும். அவளால் அங்கே என்னைத் தவிர்த்து அமைய முடியாது” என்றார். அவர் முகம் மாறியது. “ஆனால் அவ்வண்ணமும் சொல்ல முடியாது. அவள் முற்றிலும் நிறைந்தவள். அவளுக்கு எவரும் தேவையில்லை. நான் மட்டுமல்ல, மானுடர் எவரும் அவளுக்கு ஒரு பொருட்டல்ல…”

“இன்று வெல்லத் தொடங்கியிருக்கிறேன். இந்நகர் எழும் என்னும் நம்பிக்கையை அடைந்திருக்கிறேன். இன்று மீண்டும் என் கனவுகள் எழுந்துவிட்டிருக்கின்றன. இந்நகரில் நான் முடிசூடுகையில் அவள் உடனிருக்கவேண்டும். அவள் அருகிருக்க மும்முடிசூடி இந்த அரியணையில் அமரமுடிந்தால் இவ்வுலகில் நான் வென்றெடுக்க ஏதும் எஞ்சியிருக்காது” என்றார் யுதிஷ்டிரன். “ஆனால் அவளுடன் எனக்கு எத்தொடர்பும் இல்லை. எந்த ஓலைக்கும் அவளிடமிருந்து மறுமொழி இல்லை. அங்கே அவள் தன் தனிமையின் இருளுக்குள் சென்றுவிட்டிருக்கிறாள். அவளை அதிலிருந்து மீட்க இன்னொருவரால் இயலாது. அவளே அவ்வாயிலைத் திறந்து வெளிவந்தாகவேண்டும்.”

“ஆகவேதான் உன்னை அனுப்புகிறேன். நானே செல்லவேண்டும். சென்று அவள் காலடியில் என் தலையை வைக்கவேண்டும். அன்னையென்று ஆகி எனக்கு அருள்க என்று மன்றாடவேண்டும். அவள் எனக்களிக்கும் இறுதிக் கொடை இது என்று சொல்லவேண்டும். என்னையும் என் மூதாதையரையும் வாழ்த்துக, என் கொடிவழிகள் நிறைவுகொள்ளச் செய்க என்று இரக்கவேண்டும். என் பொருட்டு நீ செல்க! வேறொன்றும் நான் சொல்வதற்கில்லை” என்றார் யுதிஷ்டிரன்.

யுயுத்ஸு அவரை நோக்கியபடி அமர்ந்திருந்தான். அவர் சொற்கொந்தளிப்புக்குப் பிந்தைய வெறுமையை சென்றடைந்துவிட்டிருந்தார். அவன் எழுந்து தலைவணங்கினான். அவன் வெளியேறப்போகும்போது ஏவலன் உள்ளே வந்து சுரேசர் உள்ளே வர விழைவதை அறிவித்தான். யுதிஷ்டிரன் கைகாட்டினார். சுரேசர் உள்ளே வந்தார். தலைவணங்கி “ஆணைகளை எதிர்பார்க்கிறேன்” என்றார். “யுயுத்ஸு இந்திரப்பிரஸ்தம் செல்லவேண்டும். அவனிடம் திரௌபதியை அழைத்துவரும்படி ஆணையிட்டிருக்கிறேன். ஆவன செய்க!” என்றார். சுரேசர் “ஆணை” என்றார்.

யுதிஷ்டிரன் பெருமூச்சுடன் எழுந்துகொண்டதும் சுரேசர் “அஸ்தினபுரியின் படை ஒன்பது அங்கமாக பிரிந்து வளர்ந்துள்ளது. ஒன்பதற்கும் இணைந்து ஒற்றைத்தலைமை இருப்பின் ஆட்சி சிறக்கும்” என்றார். “ஆம்” என்றார் யுதிஷ்டிரன். “அதற்குத் தகுதியானவர்கள் தேவை. நம் படைகளை நன்கறிந்தவர்கள். சொல்லப்போனால் இப்படைப்பெருக்கின் உருவாக்கத்தில் பங்குள்ளவர்கள். அத்துடன் இத்தொல்நகரின் தொல்குடிகளை சேர்ந்தவர்கள்.” யுதிஷ்டிரன் அவர் சொல்வதென்ன என்று கூர்ந்து நோக்க “கோட்டைக்காவல்தலைவி சம்வகையை தலைமைப் படைப்பொறுப்புக்கு அமர்த்தலாம் என்பது என் துணிபு” என்றார்.

யுதிஷ்டிரன் சற்றே சீற்றத்துடன் ஏதோ சொல்ல முயல சுரேசர் ஊடே புகுந்து “அஸ்தினபுரியின் தலைமைப்படைப்பொறுப்பில் ஒரு பெண் இருப்பது பேரரசி திரௌபதிக்கு உவப்பானது. அவர்கள் நகர்நுழைகையில் படைமுகப்பில் நின்று வாள்தாழ்த்தி வணங்குபவள் சம்வகை என்றால் அதைவிட பெரிய வரவேற்பு பிறிதில்லை” என்றார். யுதிஷ்டிரன் ஒருகணம் தத்தளித்து “ஆகுக!” என்றார். சுரேசர் “ஆணை” என்றபின் யுயுத்ஸுவை நோக்கி புன்னகைத்து வருக என உதடசைவால் கூறி திரும்பினார். யுயுத்ஸுவும் உடன் சென்றான்.

முந்தைய கட்டுரைஒரு கனவு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா 2019 – இரண்டாம்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி