சிறுகதைகளின் நிலவெளி -முத்துக்குமார்

[நரேந்திரன் மொழியாக்கம் செய்த சிறுகதைத் தொகுதியான ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’ நூலுக்கான மதிப்புரை] 

மிகத் தெளிவான முன்னுரையுடன் இம் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு தொடங்குகிறது. இத்தொகுப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் பத்து ஆங்கிலச் சிறுகதைகளை மொழி பெயர்த்து தந்திருக்கிறார் அறிமுக எழுத்தாளரான நரேன். பெரும்பாலும் இந்த எழுத்தாளர்கள் அனைவருமே புலம்பெயர்ந்தவர்களின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பல தலைமுறைகளாக அங்கு தொடர்ந்து வாழ்ந்த பிறகே தீரும் அடையாளச் சிக்கலில் ( Identity Crisis) மாட்டிக் கொண்டவர்கள் மற்றும் அச்சிக்கலை தங்களின் நுண்ணுணர்வு கொண்டு அவதானிக்க முற்படுபவர்கள். இது இயல்பாகவே அவர்களை எழுத வைக்கிறது என்று எண்ணுகிறேன். இக்கதைகள் அனைத்தும், இவ்வடையாளச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாதவர்களையும் சேர்த்தே உலுக்கி விடுகின்றன.

பரந்த வாசிப்பும், அதைத் தொடர்ந்து செம்மைப் படுத்திக் கொள்ள உதவும் ஒரு நட்பு வட்டமும் அமையும் ஒருவரால் மட்டுமே இதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க முடியும். நரேனை செம்மைபடுத்தியதில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் பங்கு மிகமுக்கியமானது.

அடையாளச் சிக்கலின் காரணங்கள்

இக்கதைகளில் வரும் முக்கியமான கதைமாந்தர்கள் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள். பொருளாதார மேம்பாட்டிற்காக புலம்பெயர்ந்தவர்களுக்கும் , அரசியல் சூழல்களால் புலம்பெயர்ந்த கதை மாந்தர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை அவர்களுக்கு ஏற்படும் அடையாளச் சிக்கல் தான் என்றாலும்,  அதற்கான காரணம் எங்கு பொதிந்திருக்கிறது என்பதுதான் இவ்விரு தரப்பட்டவர்களுக்கும் இடையே உள்ள சுவாரஸ்யமான வேற்றுமையாக உள்ளது. ஆயிரமாண்டு பிரார்த்தனைகள் என்ற கதையில் வரும் அமெரிக்காவில் வாழும் பொருளாதார சுதந்திரமும், தன்னிறைவும் கொண்ட சீனப் பெண்ணிற்கு அடையாளச்சிக்கல்களை ஏற்படுத்துவது சீனக் குடும்ப கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் அவளுடைய 75வயது தந்தை என்றால், ‘நேர்மையான வெளியேற்றம்’ கதையில் வரும் சூடான் நாட்டு அகதியின் மகனான ஆங்கிலப் பேராசியருக்கு அவருக்கான அங்கீகாரத்தை அளிக்க மறுக்கும் வெள்ளைச் சமூகத்தால் அடையாளச் சிக்கல் ஏற்படுகிறது. முதல் வகையினருக்கு தாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கிட்டிய அங்கீகாரம், இரண்டாம் வகையினருக்கு கிட்டாதது தான் இவர்களுடைய அடையாளச் சிக்கலின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக  உள்ளது.

பெண்களின் அடையாளச் சிக்கல்

ஆனால், இக்கதைகளில் வரும் பெரும்பாலான பெண்கள் எந்தவிதமான அடையாளச் சிக்கல்களிலும் மாட்டிக் கொள்வதை தங்களுடைய கனிவாலும், சாதுர்யத்தாலும் தவிர்த்து விடுவது ஆச்சர்யமளிக்கிறது. ஆயிரமாண்டு பிரார்த்தனைகள்‘ கதையில் வரும் அமெரிக்காவில் வாழும் சீனப் பெண் ஒவ்வொரு உறவுக்கு பின்பும் பல நூறாண்டு பிரார்த்தனைகள் உண்டு என்ற வலுவான சீனக் கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் தன் தந்தையின் போதாமையைச் சுட்டிக் காட்டி தன்னுடைய ஏழு வருட மணவாழ்வை முறித்துக் கொண்டதை நியாயப்படுத்துகிறார்.

தன்னுடைய வீட்டின் குளியலறையில் இருக்கும்போதும் கூட தன்னை மற்றவர்கள் கண்கானிக்கிறார்கள்  என்ற உணர்வோடு கண்ணாடிச் சுவருக்குள் வாழவேண்டியிருந்த உகாண்டாவைச் சேர்ந்த ந்னாம் என்ற பெண் மான்செஸ்டரில் உள்ள தன் வீட்டினுள் முழு நிர்வாணமாக சுற்றிவரும் சுதந்திரத்தை அடையாளச் சிக்கல் என்ற பெயரில் பறிகொடுக்க விரும்பவில்லை என்பதை இந்தக் கதையைச் சரியாகச் சொல்வோம்‘ என்ற கதையில் காண முடிகிறது. தங்களுக்கு திடீரென முளைத்த சுதந்திரச் சிறகுகளை கத்தரித்துக் கொள்ள விரும்பாத புத்திசாலிகளாகவே இக்கதைகள் முழுவதும் பெண்கள் சித்தரிக்கப் படுகிறார்கள்.

விதிவிலக்காக, காகித மிருக சாலை என்ற கதையில் வரும் வரும் சீனப்பெண் இந்தச் சுதந்திரச் சிறகுகளை வெற்றுக் காகிதங்களாகப் பாவித்து, தனக்குத் தேவையற்ற ஒன்றென தவிர்த்து விடுகிறாள். தன்னுடைய சீனப் பண்பாட்டின் வழியாகவே தனக்கு நேரும் அடையாளச் சிக்கல்களை உறுதியான அமைதியோடு கடந்து போகிறாள். இப்படி இந்தத் கதைகளில் வரும் பெண்கள் அனைவரும் அடையாளச் சிக்கல்களை எதிர்கொண்டு வெல்லும் விதம் அவர்களுடைய Clarity of Toughtக்கு ஒரு சான்று.

மொழிபெயர்ப்பும் உணர்வுகளின் வெளிப்பாடும்

இந்த அடையாளச் சிக்கல்களை ஒட்டி இக்கதை மாந்தர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்களில் மனித உணர்வுகளின் நுட்பங்கள் மிகக் கூர்மையாக வெளிப்படுகின்றன. ஆயிரமாண்டு பிரார்த்தனைகள்‘ கதையில் வரும் சீனத் தந்தை அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்திருக்கும் தன் மகளின் மணமுறிவிற்கு அவள்தான் காரணம் என்பதை, அவள் தன் காதலனுடன் இரவில் தொலைபேசியில்மேற்கொள்ளும் அடாவடியான மற்றும் கட்டற்ற ஆங்கில உரையாடல்கள் வழியாக அறிந்து கொள்கிறார். ஆங்கிலம் அவ்வளவாக அறியாத அவருக்கு அவள் தன் காதலனுடன் என்ன பேசியிருக்க முடியும் என்பதை அவளுடைய பேச்சுத் தொனியை வைத்தே ஊகிப்பதை ‘அவளின் நிர்வாணத்தை கண்டுவிட்டதைப் போல உணர்ந்தார்’ என்ற வார்த்தைகள் நமக்கு நுட்பமாக கடத்துகின்றன. மிகச் சம்பிராதயமான உரையாடல்களைத் தவிர வேறு எந்த விதமான உரையாடலுக்கும் வாய்ப்பற்ற ஒரு சீனக் குடும்பப் பிண்ணணியால் தான் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி ஆங்கிலத்தில் மட்டுமே என்னால் எளிதாக உரையாட முடிகிறது என்று அவள் தன் தந்தையின் போதாமைகளைச் சுட்டிக் காட்டுவது, கெட்ட வார்த்தைகளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் உடலுறவு, அதிலடையும் உச்சக்கட்டம் போன்ற வார்த்தைகளை நம்மால்  ‘ I felt Orgasmic during sex…’ என ஆங்கிலத்தில் எளிமையாக கடக்க முடிவதை உணர்த்துகிறது. இது நம்முடைய தாய்மொழியின் போதாமையா அல்லது அதை சிறைப்படுத்தியிருக்கும் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றின் போதாமைகளா என்பது விவாதத்திற்குரிய விஷயம்தான்.

இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்‘ என்ற கதையில் வரும் உகாண்டாவைச் சேர்ந்த ந்னாம் என்ற பெண், மான்செஸ்டரில் இருக்கும் தன் நாட்டைச் சேர்ந்த சக ஆண் புலம்பெயரியால் ஏமாற்றப்பட்டதை அவனின் மரணத்திற்குப் பிறகு தெரிந்து கொண்டு அவனின் நினைவுகளை அகற்றுவதை, தன் வீட்டிலுள்ள அவனுடைய உடமைகளை ( உள்ளாடைகள் முதற்கொண்டு) அகற்றுவதோடு ஒப்பிட்டு சித்தரிக்கும் விதம் மிகவும் வித்தியாசமாகவும் தத்ரூபமாகவும் உள்ளது. ஒவ்வொரு பத்திக்கும் கதை உகாண்டாவிற்கும், மான்செஸ்டருக்கும் இடையே ஊஞ்சலாடுகிறது. உகாண்டாவில் நடக்கும் இறுதிச் சடங்கில், கணவன் இறந்த பிறகு, மாதவிடாய்த் துணியை அணிந்து கொள்ள வலியுறுத்தப்படும் மனைவி, பின் அதைக் கணவன் பிணத்தின் குறிமேல் போர்த்த வேண்டும்.  இச்சடங்கை வெறுத்து மறுதலிக்கும் ந்னாம், மான்செஸ்டரில் உள்ள தன்னுடைய வீட்டில் அவனது உள்ளாடைகளுடன் கூடிய உடைமை பெட்டியை முற்றிலுமாக அகற்றிவிட்டு தன் ஆடைகளை களைந்து முழு நிர்வாணமாய் தன் வீட்டின் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறாள்.

ந்னாமின் கணவனாக இருந்தாலும் சரி, ‘ஆயிரமாண்டு பிரார்த்தனைகள்’ கதையில் வரும் சீனத்தந்தையாக இருந்தாலும் சரி அவர்களுடைய பண்பாடு சார்ந்த தரப்பையும் நியாயப்படுத்தும் சித்தரிப்புகள் இக்கதை ஆசிரியர்களின் நடுநிலைப் பார்வைக்கு ஒரு சான்று.

இக்கதைகளை வாசிக்கும்போது எழுந்த ஆச்சரியங்களில் முக்கியமான ஒன்று, ஒரு அறிமுக எழுத்தாளரால் எப்படி இவ்வளவு நுட்பமாக உணர்வுகளை சித்தரிக்க முடிகிறது என்பதுதான். ஆனால், சற்று நேரத்தில் இவை மொழிபெயர்ப்புக் கதைகள் என்றுணர்ந்ததும் இந்த ஆச்சரியம் குறைந்தாலும், மூலக் கதையோடு தன்னை ஆத்மார்த்தமாக பிணைத்துக் கொண்ட படைப்பூக்கம் கொண்ட படைப்பாளியால் மட்டுமே இவ்வளவு சிறப்பான மொழிபெயர்ப்பைத் தரமுடியும் என்ற நிதர்சனம் புரிகிறது. நரேனின் படைப்பூக்கத்திற்கு வாழ்த்துக்கள்.

***

பத்து நூல்கள் வெளியீட்டுவிழா உரை

பத்துநூல் வெளியீடு உரைகள்.

========================================================================================

பத்துநூலாசிரியர்கள்

Bala
 பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்

பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

விஜயராகவன் தேரையின் வாய்

பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்

தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

நாகப்பிரகாஷ் எரி

பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்

நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை

ஸ்ரீனிவாசன் கூண்டுக்குள் பெண்கள்

பத்து  ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்

நரேந்திரன் இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்

பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

சா.ராம்குமார் அகதி

பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்

’அகதி’ ராம்குமார் முன்னுரை

சுசித்ரா ஒளி

பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

காளிப்ரசாத்  தம்மம் தந்தவன்

பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்

கிரிதரன் ராஜகோபாலன் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

ராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்

பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

=====================================================================================================

தொடர்புக்கு ராஜகோபால் – 9940235558 சௌந்தர் 9952965505

=====================================================================================================

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60
அடுத்த கட்டுரைஇரண்டு குறுங்கடிதங்கள்