முதுநாவல்[சிறுகதை]

இது 1814 ல் திருவிதாங்கூர் திவான் தேவன் பத்மநாப மேனோன் சின்னம்மை நோயால் இறந்தார் என்ற செய்தி வந்து பெரும்பாலான ஊர்களில் இருண்ட மழைமூட்டம்போல துயரம் நிறைந்திருந்த ஒரு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாறசாலை ஊரின் அந்திச்சந்தையின் தெற்கு வாசலில் உச்சிகடந்த பொழுதில் ஓர் ஒற்றை மாட்டுவண்டி வந்து நின்றது. அதிலிருந்து இடும்பன் நாராயணன் என்ற பெயர்கொண்ட ஏட்டு இறங்கி நின்று உரத்த குரலில் “எங்கேடா அந்த தலைக்கெட்டு காதர்? அவன் தன் அம்மையிடம் குடித்தது பால் என்றால் என் எதிரே நிற்கச்சொல்… மூத்திரம் என்றால் இந்நேரம் அது அவன் உடலில் இருந்து தானாகவே வெளியேறத் தொடங்கியிருக்கும்” என்றான்.

அந்த அறைகூவல் தலைக்கெட்டு காதர் தவிர்க்கவே முடியாத பொறி. அதுவரை எந்த ஒரு நாயர்போலீஸும் அப்படி நேருக்குநேர் வந்து அறைகூவியதில்லை. அதை தலைக்கெட்டு காதர் எதிர்கொண்டே ஆகவேண்டும். அதை தவிர்த்துவிட்டுச் சென்றால் அதன்பின் சந்தையில் உயிர் வாழவே முடியாது. உண்மையில் தலைக்கெட்டு காதரை பிடிப்பதற்கு ஒரே வழி அதுதான், அதைச் செய்ய ஆளில்லாமல்தான் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு தோல்விகண்டன.

செய்தி காதருக்கு அதற்குள் சென்று சேர்ந்துவிட்டிருந்தது. அதைவிட விரைவாக சந்தையில் கூடியிருந்த அத்தனை பேருக்கும் சென்றது. சரசரவென்று கடைகள் ஏறக்கட்டப்பட்டன. சட்டிகள் பானைகள் மரச்சமான்கள் போன்ற உடையும் பொருட்கள் தூக்கி அகற்றப்பட்டன. பெண்களும் குழந்தைகளும் ஓடி ஆங்காங்கே ஒடுங்கிக் கொண்டார்கள். அத்தனைபேரின் உடலும் விரைப்பேற கண்கள் பிதுங்க முகம் வலிப்பு கொண்டது. அர்த்தமில்லாமல் கூச்சலிட்டுக் கொண்டும் கைகால்கள் உதற அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் இருந்தனர்.

பாம்பு நுழைந்த மரத்தில் பறவைகள் போல ஓலமிட்ட சந்தை பின்னர் அடங்கியது. அங்கே ஒருவர்கூட இல்லை என்று தோன்றும். இடும்பன் நாராயணன் கனமான தோல்பூட்சுகளை போட்டுக் கொண்டு சந்தைவழியாக நடந்தபோது அந்த ஓசை அனைவருக்கும் கேட்டு பற்களை கிட்டிக்க வைத்தது. பலர் அப்போதே ஓசையில்லாமல் அழத்தொடங்கிவிட்டிருந்தனர்.

தலைக்கெட்டு காதர் பாறசாலை வட்டாரத்தில் எத்தனை புகழ் பெற்றிருந்தானோ அப்படியே இடும்பன் நாராயணனும் திருவனந்தபுரம் ஆரியசாலை வட்டாரத்தில் புகழ் பெற்றிருந்தான். ஒருவர் போலீஸ் ஒருவர் ரவுடி என்பதற்கு அப்பால் அவர்களிடையே வேறுபாடு ஏதுமில்லை. இருவரையும் மக்கள் வெறுத்தனர். இருவரின் எவர் செத்தாலும் அது அசுரவதம் என்று கொண்டாட தயராக இருந்தனர்.

பார்க்கவும் அப்படித்தான். தலைக்கெட்டு காதர் ஏழரை அடி உயரமானவன். அவனை நேரில் பார்ப்பவர்கள் எவரும் அவன் ஒரு பூதமா என்ற திகைப்பை அடைவார்கள். அத்தனை உயரமான மனித உடல் சாத்தியம் என்பதையே அவர்கள் அதற்குமுன் அறிந்திருக்க மாட்டார்கள்.

காதரின் கைகள் மிகநீளமானவை, அவை அவன் முழங்கால் மூட்டை தொட்டு தொங்கிக்கொண்டிருக்கும். விரல்கள் ஒவ்வொன்றும் மூங்கில்கள் போல. அடர்த்தியான நீளமான தாடி, அடர்த்தியான புருவங்கள், புடைத்த பெரிய மூக்கு. தலையில் எப்போதும் இடதுகாதைச் சுற்றி பெரிய தலைப்பாகை இருக்கும். அதை அப்பகுதியில் எவருமே செய்யாதபடி முன்பக்கம் குச்சம் விட்டு பின்பக்கம் வால்நீட்டி கட்டியிருப்பான். அவன் முகத்திற்குமேல் ஒரு பெரிய துணிப்பறவை அமர்ந்திருப்பதுபோல தோன்றும். தலைப்பாகை இல்லாத காதரை எவரும் பார்த்ததில்லை.

முழங்கால்வரை நீண்டு கிடக்கும் மிகநீளமான அங்கிபோன்ற சட்டை. அதன் இருபக்கங்களிலும் பெரிய பைகள். கீழே கணுக்கால் தெரியுமளவுக்கு சராய். அவன் கனமான தோல்செருப்பை அணிவான். அதன் அடியில் இரும்பு லாடங்கள் பொருத்தப்பட்டிருக்கும். அவன் நடக்கும்போது எழும் ஓசை எந்த மனிதர் நடக்கும்போதும் எழுவதில்லை.

காதர் மிகக்குறைவாகவே பேசினான். அவனுக்கு மலையாளமோ தமிழோ சரியாக தெரியவில்லை. அவன் குரல் உறுமியை மீட்டியதுபோல ஆழமான கார்வை கொண்டிருந்தது. பெரும்பாலும் சிறிய மேடைகளிலோ திண்ணைகளிலோ ஒருகாலை மடித்துவைத்து தலையை ஓணான்போல சற்றே நீட்டி தாழ்த்திவைத்து கண்களைச் சுருக்கி மண்ணை பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனுடைய காதுகள்தான் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கும்.

அவன் கையில் எப்போதுமே சுருட்டு இருக்கும். அதை ஊரில் உலக்கைச் சுருட்டு என்றார்கள். ஒரு குழந்தையின் கையளவுக்கு தடிமனான அந்தச் சுருட்டை அவனேதான் சுருட்டுவான். புகையிலையை பலகையில் வைத்து கையால் அறைந்து கசக்கி பதமாக்கி இறுக்கமாகச் சுருட்டி நூலால் கட்டுவான். பற்ற வைக்கும்முன் அதைக் கைகளுக்குள் வைத்து உருட்டி உருட்டி நெகிழ்வாக்குவான். எப்போதும் பளிச்சிடும் மஞ்சள்நூலால்தான் அதைச் சுற்றிக்கட்டியிருப்பான். ஆகவே அது பித்தளைப் பூண்போட்ட இரும்புலக்கை போலத் தெரியும். அதிலிருந்து புகை சன்னமாகத்தான் எழும். அவன் புகையை ஆழமாக இழுத்து மூக்குவழியாக கீழ்நோக்கி ஊதிவிட்டுக் கொண்டிருப்பான்.

பாறசாலைச் சந்தையில் காதர் சுருட்டைப்பிடித்தபடி நடந்தால் ஒவ்வொரு வியாபாரியும் அரையணாவோ ஒரணாவோ எடுத்துவைத்தாகவேண்டும். விற்பனையாகவில்லை, பணம் வந்துசேரவில்லை என்ற எந்த பேச்சுக்கும் ஒரே பதில்தான். திரும்பி செவி அடக்கி ஓர் அறை. அந்த அடிக்குப்பின் எவருக்கும் செவி கேட்பதில்லை. பெரும்பாலானவர்களுக்கு கீழ்த்தாடை விலகி பிறகு ஒருபோதும் பேச்சும் எழுவதில்லை.

காதர் அவ்வப்போது காணாமலாகி பீமாப்பள்ளிப்பகுதியின் பெண்களிடம் அத்தனை பணத்தையும் இழந்து திரும்பி வருவான். அதைவிட வெறிகொண்டதுபோல சூதாடுவான். சூதாடுவதற்கென்றே தெற்கே நெய்யாற்றங்கரை முதல் வடக்கே பாலராமபுரம் வரை அவன் செல்வதுண்டு. உணவும் தூக்கமும் இல்லாமல் சூதாடுவான். கையிலிருக்கும் கடைசி பணம்வரை போனபிறகே எழுவான்.

காதர் சூதில் ஒருமுறைகூட வென்றதில்லை என்பார்கள். வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையையும் இழந்ததில்லை. தோற்கத்தோற்க வெறி ஏறி மீண்டும் ஆடினான். ஆகவே அவனுக்கு எத்தனை கிடைத்தாலும் பணம் போதவில்லை. அவன் சூதாடும்போது வன்முறையில் ஈடுபடுவதில்லை. தன் தோல்வியை முழுமையாக ஏற்றுக்கொண்டு பந்தயம் கட்டிய பணத்தை அளித்துவிட்டு தலைகுனிந்து நடந்து சென்றான்.ஆகவே காதர் அப்பகுதியில் அத்தனை சூதாடிகளுக்கும் கறவைப்பசுவாக இருந்தான்

நாளடைவில் சூதாடிகள் பாறசாலைக்கே தேடிவரத்தொடங்கினர். கூட்டம்கூட்டமாக வந்து காதர் சொன்ன இடத்தில் சொன்ன தொகையை பந்தயம் வைத்து ஆடினர். முதலில் காதரை வெல்ல அனுமதித்தனர். அவனை வெறிகொள்ளச் செய்து கையிலிருந்த கடைசிப்பணத்தையும் வென்று கொண்டாடியபடி திரும்பிச் சென்றனர்.ஒரு குழு ஆடிக்கொண்டிருக்க இன்னொரு குழு அடுத்த ஆட்டத்திற்காக காத்திருந்தது

பாறசாலை சந்தையிலேயே காதருக்கு வசூலும் இருந்தமையால் பணம் தீரத்தீர சந்தைக்குள் சென்று பிடுங்கி வந்தான்.அவனை எண்ணி எண்ணி வியாபாரிகள் எரிந்தனர். எளியமக்கள் கண்ணீர் வடித்தனர். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போலீஸால் அவனை பிடிக்க முடியவில்லை. ஊரில் அவனை எதிர்க்க எவருமில்லை.

வியாபாரிகள் சேர்ந்து பணம்போட்டு பெரிய கேடிகளை பணம் கொடுத்துக் கூட்டிவந்தனர். பாறசாலை சந்தையில் வைத்து அடித்து நொறுக்கி குப்பை போல தூக்கிப்போட்டான். கண்ணுமாமூடு அனந்தன் நாடார் அடிமுறைக் களரிக்கு ஆசான். அவரால் அவனை அறைய முடியவில்லை. அவன் நாபியில் எட்டி உதைக்க சுருண்டு விழுந்து வலிப்பெடுத்து அங்கேயே இறந்தார். பள்ளியாடி முகமது அலி மாமிச மலை. அவனை தூக்கி தரையில் அறைந்து மூக்கிலும் வாயிலும் ரத்தம் பீரிட உடல் வெடித்து சாகச்செய்தான். அதன்பின் அவனுடன் சண்டையிட எவருமே வராமலானார்கள்.

அவனை நஞ்சூட்டி கொல்லமுயன்றனர். அவர்களை காதரே கண்டுபிடித்து வீட்டோடு சேர்த்து அடித்து நொறுக்கினான். மந்திரவாதம் எதுவும் அவனிடம் பலிக்கவில்லை. அவனை எவராலும் கொல்லமுடியாது என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அவன் மனிதன் அல்ல மனிதவடிவம் கொண்ட ஜின் என்ற நம்பிக்கை உருவாகியது. அவனை வெறுத்தனர். கண்ணீருடன் சபித்தனர். அவனை நேரில் கண்டால் கைகூப்பி தலைகுனிந்து நடுங்கி நின்றனர்.

இடும்பன் நாராயணனும் ஏழடிக்குமேல் உயரம் கொண்ட பூத வடிவம்தான். அவன் அப்பாவுக்கு பூதன் பிள்ளை என்றுதான் பெயர். கைகால்கள், மூக்கு, வாய், குரல் எல்லாமே பெரிது அவனுக்கு. தலையில் மயிர் கிடையாது. ஆனால் உடலெங்கும் மயிர்.

விடியற்காலையில் சவரம் செய்துகொண்டு, கரமனை ஆற்றில் குளித்து, காந்தளூர் மகாதேவர் கோயிலில் கும்பிட்டு சந்தனக்குறி அணிந்ததுமே இடும்பன் நாராயணன் போலீஸுக்கான உடைகளை அணிந்துவிடுவான். பகலும் இரவும் முழுக்க அவன் போலீஸ் உடையிலேயே இருப்பான். தூங்கும்போது மட்டுமே அவற்றை கழற்றினான். ஆனால் அவன் எங்கே தூங்குகிறான் என்பதை எவருமே கண்டதில்லை.

அன்றெல்லாம் திருவிதாங்கூர் போலீஸின் ஆடை என்பது கீழே சுற்றிமுறுக்கி அணிந்த ஆழ்ந்த கருஞ்சிவப்புநிறமான வேட்டி. அதை முறுக்கிக்குத்து என்பார்கள். அதற்குமேல் குப்பாயம் என்னும் கையில்லாத சட்டை. அதற்குமே இருதோள்களிலுமாக கட்டப்பட்டு மார்பின்மேல் பெருக்கல்போல அமைந்திருக்கும் மஞ்சள்நிறமான பட்டைத்துணி. தலையில் வெண்ணிறத் துணியால் இறுக்கிச் சுற்றப்பட்ட உயரமில்லாத தலைப்பாகை, அதில் திருவிதாங்கூரின் பித்தளை இலச்சினை. கால்களில் மாட்டுத்தோலை மடித்து கயிறுகட்டி இறுக்கும் பழையவகை செருப்பு. காலுக்கும் தோலுக்கும் நடுவே மரக்கட்டையாலான மிதியடி வைக்கப்பட்டிருக்கும்.

கர்னல் மன்றோ திருவிதாங்கூர் திவானாக நேரடிப் பொறுப்பேற்றபின், 1812-ல் திருவிதாங்கூர் ராணுவத்தை நவீனப்படுத்தி உள்ளூர்க் காவலுக்கு தனியாக போலீஸ் துறையை உருவாக்கியபோது கீழே முறுக்கிக் குத்துக்கு பதிலாக மெட்ராஸ் ரெஜிமெண்டின் காக்கி கால்சட்டையை கொண்டுவந்தார். கையில்லாத சட்டைக்கு பதிலாக முழுக்கை சட்டையும் முழங்கையில் பட்டையும். சப்பையான தலைப்பாகைக்கு பதிலாக தலைப்பாகையின் வடிவிலேயே அமைந்த , முகப்பு உயர்ந்து நிற்கும், உயரமான சிவப்புக் கம்பிளித் தொப்பி.

காலில் இரும்பு ஆணிகள் வைத்த உயரமான பூட்ஸுகளும் முழங்கால் மூட்டு மறைய கம்பிளிப் பட்டைச்சுற்றும் கட்டாயமாக்கப்பட்டது. அது பிரிட்டிஷ் சோல்ஜர்களின் சீருடை, ஆகவே நாயர் படைவீரர்களால் பெரிய கௌரவமாக அது கருதப்பட்டது. நீண்ட கம்பிளிப் பட்டையை இழுத்து பலமுறை சுற்றி மூட்டு மடிப்புக்கு மேல் கொண்டுவந்து அங்கே இரும்பாலான ‘சிரட்டைக்கிண்ணம்’ வைத்து மேலும் இறுகச்சுற்றி முடிச்சிடவேண்டும். முழங்காலில் ஈட்டியால் அறைந்தாலும் முழங்கால் அடிபட குப்புற விழுந்தாலும் காயம் படாது. அதை கட்டி பூட்ஸ் அணிந்ததுமே நாயர்வீரர்கள் தங்களை பூதங்கள் போல உணர்ந்தனர்.

மற்ற மாறுதல்களை ஏற்றுக்கொண்ட இடும்பன் நாராயணன் கால்சட்டை போட மறுத்துவிட்டான். அணிவகுப்பின்போது காவல்துறைத் தலைவர் காப்டன் ஜான் மார்ட்டின் பேட்ஸ் வந்தால் மட்டும் கால்சட்டை அணிந்து உடனே கழற்றிவிடுவான். அப்போது மட்டும் நெற்றியில் சந்தனக்குறி இருக்காது. வாயில் வெற்றிலையும் இருக்காது. ஆனால் காப்டன் மார்ட்டினின் அணிவகுப்பு மாதம் ஒருமுறைதான். மற்றபடி வாரம் ஒருமுறை சென்று ஹூஸூர் கச்சேரியில் கைநாட்டு போட்டு சங்குமுத்திரை வரைந்து இருப்பை அறிவித்தால்போதும்.

படைவீரர்கள் நெற்றியில் மதக்குறிகளை அணிவது வெற்றிலை போட்டு குதப்பிக் கொண்டிருப்பது ஆகியவற்றைக் கண்டால் காப்டன் மார்ட்டின் அவர்களை கைகளை தூக்கிக்கொண்டு முழங்காலால் ‘கவாத்து’ முற்றத்தை பத்துமுறை சுற்றி வரச்சொல்வார். பூட்ஸுகளையும் முழங்காப் பட்டைகளையும் கழற்றிவிட்டு தவழ்ந்து ஓடவேண்டும். முழங்காலில் தோல் மீண்டும் வர மூன்றுமாதமாகும்.

இடும்பன் நாராயணன் எப்போதும் கையில் பித்தளைப் பூணிட்ட உலக்கை போன்ற பிரம்பை வைத்திருப்பான். நின்றால் அவனுடைய காதுவரை உயரமான கழி அது. அதைக்கொண்டு அவர் எவரை அடித்தாலும் அக்கணமே உடலைக்குறுக்கி “எஜமானே, மாப்பு எஜமானே” என்று சொல்ல வேண்டும். ஓடினால் துரத்திப் பிடித்து எலும்புகள் உடைய தோலும் சதையும் கிழிந்து பறக்க அடித்து துவைப்பான். சற்றேனும் எதிர்ப்பு உடலில் எழுந்துவிட்டால் அவனை உயிருடன் விடுவதில்லை.

பூட்ஸ்கால்கள் ஒலிக்க இடும்பன் ஆரியசாலைக்குள் நுழையும்போதே அனைவரும் எழுந்து நின்றுவிடுவார்கள். அவனுக்கு ‘குட்டிச்சட்டம்பி’ ஆக ஒருவன். குட்டையான உடலும் உறுதியான தோள்களும் பெரிய உதடுகளிலிருந்து எழுந்த மாட்டுப்பற்களும் கொண்டவன். அவன் பெயர் என்னவென்று எவருக்கும் தெரியாது. அவனை இருமாலி என்று அழைத்தனர். இருமாலி ஒவ்வொரு கடையாகச் சென்று காசு வசூல் செய்து வருவான். காசு கேட்பதில்லை, சென்றதுமே எழுந்து நின்று கொடுத்துவிடவேண்டும்.

இருமாலி இரவும்பகலும் இடும்பனுடனேயே இருந்தான். பழக்கப்படுத்தப்பட்ட விலங்குபோல அவனுக்குப் பணிவிடைகள் செய்தான். இடும்பன் அவனை கெட்டவார்த்தையால் திட்டுவான்.அவ்வப்போது ஓங்கி அறைவான். உதைப்பான். எதற்கும் இருமாலி எதிர்வினை ஆற்றுவதில்லை.அவன் மேலேயே இடும்பன் காறி துப்புவான். அந்த எச்சிலை துடைப்பதுகூட இல்லை.

காலைவசூல் என்பது ஒரு ரோந்து செல்லலும்கூட. அப்போதுதான் ஆரியசாலையின் பிரஜைகள் இடும்பனிடம் மனக்குறைகளைச் சொல்வதும் வேண்டுகோள்களை முன்வைப்பதும் நடக்கும். இடும்பனுக்கு என்று ஒரு நீதி இருந்தது, அதை புரிந்துகொண்டால் அவனை நன்றாகவே பயன்படுத்த முடியும் என்று ஆரியசாலைவாசிகளுக்கு தெரியும்.

பொதுவாக கூலிகொடுக்காமல் இருப்பது, கூலிக்காரர்களை முதலாளிகளோ அவர்களின் வேலைக்காரர்களோ அடிப்பது இடும்பனுக்கு பிடிக்காது. தெருவில் வாழும் பிச்சைக்காரர்கள் பொறுக்கிக் குழந்தைகள் ஆகியோரை அதட்டலாம், ஆனால் காயம் ஏற்படும்படி அடிக்கக்கூடாது. இடும்பன் அவனைக் கண்டால் புழுவாகப் பணிந்துவிடும் அடித்தளத்து மக்களிடம் கருணையுடன் இருந்தான். அவர்கள் பட்டினியும் பாடும் சொன்னால் ஏதாவது கொடுத்து உதவுவதும் வழக்கம்.

உலாவுக்குப்பின் நேராக சென்று ஒரு கடையில் ஏறி அமர்ந்து சாப்பிடத் தொடங்குவான். அவன் சாப்பிடும் விதத்தை கணித்து கூடவே பரிமாறிக்கொண்டிருக்கவேண்டும். மனதுக்குப் பிடித்த உணவுப்பொருள் கைநீட்டிய இடத்தில் ஏற்கனவே இல்லை என்றால் எழுந்து பரிமாறுபவனுக்கு செவிளில் ஓர் அறை விடுவான். அடிபட்டவன் இன்னொரு அடிவாங்க நின்ற வரலாறே கிடையாது. அப்படியே சுருண்டு விழுந்துவிடுவான். அவனிடம் அடிவாங்கி செவிப்பறை கிழிந்தவர்கள் நூறுபேருக்கும் மேல் என்பார்கள்.

ஆனாலும் ஆரியசாலைப் பகுதி மக்கள் இடும்பனை ஏற்றுக்கொண்டார்கள். அங்கே இன்னொரு ரவுடியோ திருடனோ தலையெடுக்க அவன் விடவில்லை. அவனுக்கு தேவையானது பெரிய தொகையும் அல்ல, ஒரு கடைக்குக் காலணாதான். பெண்களிடம் வம்பு வைத்துக் கொள்வதில்லை, தொடர்பு முழுக்க சந்தையில் தொழில்செய்யும் பெண்களிடம்தான். அதிலும் காக்கை நாராயணி ஒரு இடும்பி. அருகருகே நின்றால் இருவரும் சம உயரம் இருக்கும்.

காக்கை நாராயணி இடும்பனைவிட எடை கூடுதல். ஒரேகையால் மாட்டுவண்டியின் நுகத்தை தூக்கி மாடுகளை இன்னொரு கையால் கட்டு அவிழ்க்கும் ஆற்றல்கொண்டவள்.அவர்களுக்குள் இருந்த உறவு மிக ஆழமானது. இடும்பன் யாரிடமாவது பல்தெரிய சிரித்துப் பேசுவதென்றால் காக்கை நாராயணியிடம்தான். இரவுகளில் இருவரும் நாட்டுச்சாராயம் குடித்துவிட்டு தெருக்களில் அமர்ந்து விடியவிடிய பாடுவதும் உண்டு.

இடும்பனைப் பற்றிய கதைகள் வடக்கே சிறையின்கீழ் முதல் தெற்கே கோட்டாறுவரை பரவியிருந்தன. திருவனந்தபுரத்திற்கு வெளியே நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, ஆரியநாடு, காட்டாக்கடை சந்தைகளில் அவன் நிகழ்த்திய சண்டைகளை தெருப்பாடகர்கள் கொட்டாங்கச்சியில் தாளமிட்டு எல்லாச் சந்தைகளிலும் பாடினார்கள்.

ஆரியநாடு ‘மொஞ்சு’ மஸ்தானை ஒரே அடியில் இடும்பன் வீழ்த்திய கதையையும், நெய்யாற்றின்கரை எருமை ஆபிரகாமை எட்டி இடுப்பின்கீழ் உதைத்து அங்கேயே கொன்ற கதையையும் மக்கள் மயிர்க்கூச்செறிந்து கேட்டார்கள். காட்டாக்கடை ‘உறை’ கருணாகரன் நாயரை இடும்பன் அடித்து இழுத்து மாட்டுவண்டிச் சக்கரடத்தில் நெடுக்காகக் கட்டி திருவனந்தபுரம் வரை ஓட்டிச்சென்றான். சக்கரத்தில் சுழன்று சுழன்று திருவனந்தபுரம் சென்ற உறை அங்கே கட்டு அவிழ்த்தபோது ரத்தவாந்தி எடுத்து மயக்கம் போட்டிருந்தான். பின்னர் மூளை குழம்பி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் வட்டத்தில் பைத்தியமாக அலைந்து கொண்டிருந்தான்.

பாறசாலையின் மக்கள் இடும்பனைப் பற்றிய எல்லா கதைகளையும் அறிந்திருந்தாலும் பார்த்ததில்லை. அவன் தலைக்கட்டு காதரைப் பற்றி அறிந்திருப்பான் என்றும், எப்போது வேண்டுமென்றாலும் அவன் தலைக்கட்டுக் காதரை பிடிக்க வரக்கூடும் என்றும் எதிர்பார்த்தார்கள். அவ்வப்போது இடும்பன் கிளம்பிவிட்டான் என்றும் வந்துகொண்டிருக்கிறான் என்றும் சந்தையில் வதந்தி கிளம்பும். உயரமான எவராவது சந்தைக்குள் நுழைந்தால் “அய்யோ இடும்பன் வந்தாச்சே!” என்று எவரோ அலற சந்தையே அடங்கி அமைந்துவிடும்.

தலைக்கெட்டு காதரை பிடிக்க திருவிதாங்கூர் போலீஸ் பலவகையான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம் அது. அவனைப் பிடிப்பதற்காக ஏழுமுறை திருவிதாங்கூர் போலீஸ்படை வந்து சந்தையையைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருமுறை திருவிதாங்கூர் நாயர்பிரிகேட் மொத்தமாகவே வந்து சந்தையைச் சுற்றிய தெருக்களை வளைத்துக்கொண்டு ஒவ்வொரு முகமாக, ஒவ்வொரு சந்துபொந்தாக சோதனையிட்டு வலையை சுருக்கிக்கொண்டே வந்திருக்கிறது. காதர் தப்பிவிட்டான்.

சந்தைவட்டாரம் காதர் எப்போதுமிருக்கும் இடம். அவன் தங்குவதற்கு அங்கே நூறுக்குமேல் இடங்கள் இருந்தன. ஒருமுறை தங்குமிடத்தில் மறுநாள் தங்குவதில்லை. எங்கு தங்குவான் என்பதை தங்குவதற்கு ஐந்து நிமிடம் முன்புதான் முடிவுசெய்வான். அவன் எங்கே தங்கியிருக்கிறான் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது.

அவனுடன் ‘பல்லி’ ரஹ்மான் , ‘கூதற’ மம்மூஞ்ஞி என்கிற முகமது குஞ்ஞி ஆகிய இருவர் மட்டுமே இருப்பார்கள். ஒரு கண் இல்லாத குள்ளமான கூதற மம்மூஞ்ஞி காதருக்குரிய எல்லா பணிவிடைகளையும் செல்வான்.செருப்பு போட்டுவிடுவது அவிழ்ப்பது வரை அவன்தான். உணவை மம்மூஞ்ஞி தானே உண்டு சற்றுநேரம் கழித்தே காதருக்கு வழங்குவான். மம்மூஞ்ஞி கொடுக்காத எதையும் காதர் உண்பதில்லை.

பல்லி மிகமெல்லிய வெளிறிய மனிதன். பின்னாலிருந்து பார்த்தால் பன்னிரண்டு வயது பையன் என்றே தோன்றும். எந்த ஒட்டிலும் பொருத்திலும் ஊர்ந்து ஏறிச்செல்ல முடியும். வீட்டுக்குள் படுத்திருப்பவர்கள் அறியாமல் ஓட்டுக்கூரைமேல் மெல்ல தவழ்ந்து செல்வான். தேவை என்றால் ஒரு கூரையிலிருந்து இன்னொரு கூரைக்கு காற்றில் தாவிச்செல்வான்.

காதர் ஓர் இடத்தில் இருந்தால் அதைச்சுற்றி ஏதோ உயரமான இடத்தில் பல்லி இருப்பான். அவன் எதையாவது பார்த்தால் நாக்கைச் சுழற்றி கூரிய, மெல்லிய ஒலியை எழுப்புவான். அது காதருக்குக் கேட்கும். அதிலேயே அவன் நிறையச் செய்திகளைச் சொல்லிவிடுவான். எந்த தூக்கத்திலும் பல்லியின் ஓசையை காதர் கேட்டுவிடுவான்.

காதருக்கு சந்தைவட்டத்திலிருந்து வெளியேறும் வழிகளும் நூற்றுக்குமேல் தெரியும். சந்தையில் தோன்றியவன் அப்படியே மறைந்து அப்பால் மாலிக் தினார் பள்ளிக்கு முன்னால் தோன்றுவான். குளக்கரையிலோ கிருஷ்ணசாமி கோயில் முகப்பிலோ தெரிவான். பலர் அவனுக்கு அந்தர்த்தானவித்தை தெரியும் என்று நம்பினர்.

தலைக்கெட்டு காதர் உண்மையில் பாறசாலைக்காரன் அல்ல. அவன் அனைவரும் நினைவில் வைத்திருக்கும் அதே உருவத்தில் முப்பதாண்டுகளுக்கு முன்பு சந்தையில் தோன்றினான். ஒருநாள் காலையில் இடிச்சக்கை சரசம்மாவின் கடைக்கு முன் அவன் வந்து நின்றான். அவனை கண்டதுமே உள்ளே தரையில் அமர்ந்து கஞ்சி குடித்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் திகைத்து எழுந்து விட்டார்கள்.

காதர் கைவிரலை நொடித்து தனக்கு கஞ்சி கொண்டுவரும்படி ஆணையிட்டான். ஒரு சிறு தயக்கம் எழுகிறதோ என்ற சந்தேகம் வந்ததும் வெறுங்கையால் அருகே இருந்த பெஞ்சை அறைந்து சிம்புகளாக உடைத்து போட்டான். அங்கிருந்த பலர் சிறுநீர் கசிந்துவிட்டனர். சரசம்மா பெரிய கிண்ணம் நிறைய கஞ்சி கொண்டுவந்து வைத்தாள். ஒரே மூச்சில் அதை அவன் குடித்து இன்னும் என்று கைகாட்டினான். பதினேழு கிண்ணம் கஞ்சியையும் மயக்கிய பலாக்காய் அவியலையையும் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்

அதன்பின் அவன் அங்கேயே தங்கிவிட்டான். அன்றெல்லாம் பாறசாலைச் சந்தைவட்டாரத்தில் நாலைந்து கஞ்சிக்கடைகள் மட்டும்தான். காலை முதல் மாலைவரை சம்பா அரிசி கஞ்சியும் தேங்காய் துவையலும் மாங்காய் ஊறுகாயும் காலணாவுக்கு கிடைக்கும். மற்றபடி கடை என்ற ஏற்பாடெல்லாம் இல்லை. சந்தை மாலையில்கூடி இருட்டியதும் முடிந்துவிடும்.

சந்தை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருந்தது. பாலராமபுரம் துணிகள் விற்கும் வாணியர்கள், திருவனந்தபுரம் ஆரியசாலைக் கடைகளில் இருந்து புகையிலை கொண்டுவந்து விற்பவர்கள், இரும்புச் சாமான்கள் விற்கும் கொல்லர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் சந்தைக்கு வந்து மூங்கில் நட்டு அதில் மூங்கில்தட்டி கட்டி கடைபோடுவார்கள். சுற்றுவட்டத்தில் இருபது கிராமங்களில் இருந்து மக்கள் தலைப்பெட்டிகளுடன் சந்தைக்கு வந்து கூடுவார்கள். விற்றுவாங்கிச் செல்வது அன்றாடவாழ்க்கையின் ஒரு பகுதி.

முக்காலி கட்டி தராசு தொங்கவிட்டு கருங்கல் எடைக்கற்களுடன் கருப்பட்டி வாங்கும் வியாபாரிகளும் கருப்பட்டி விற்கவரும் பனையேறிகளும்தான் சந்தையில் பெரும்பகுதி. தன்னியல்பாக உருவான அது முன்பு கருப்பட்டிச் சந்தை என்றே அழைக்கப்பட்டது. பிறகு பனையேறிகளுக்கு தேவையான ஓலைப்பெட்டிகளையும் கூடைகளையும் குலுக்கைகளையும் செய்துவிற்கும் குறவர்கள் வந்து கடைபோட்டனர். கருப்பட்டி விற்றவர்களின் கையிலிருக்கும் பணத்தை இலக்காக்கி மற்ற வியாபாரிகள் வரத்தொடங்கியது பிறகுதான்.

அது மகாதேவர் கோயிலுக்குச் சொந்தமான உத்சவப்புரை மைதானமாக இருந்தது. அங்கே கருப்பட்டிவியாபாரிகள் அமரத்தொடங்கியபோது திவான் கிருஷ்ணன் தம்பியின் காலகட்டத்தில் பேஷ்கார் குஞ்ஞுகிருஷ்ணன் பிள்ளை வந்து நேரில் பார்வையிட்டு தீர்வை கணக்கு வகுத்தார். தீர்வையை வசூல் செய்து அளிக்கவேண்டிய செறிய காரியக்கார் பதவிக்கு உள்ளூரிலேயே உண்ணி செம்பகத்துப்பிள்ளையை நியமித்தார். சந்தை மேலும் வளர்ந்தபோது திவான் ராஜா கேசவதாஸின் ஆட்சிக்காலத்தில் அவரே நேரில் வந்து பார்த்து சந்தைக்கு மேலும் இடத்தை அளித்து விரிவுபடுத்தினா. தீர்வையும் கூட்டப்பட்டது.

திவான் வேலுத்தம்பி தளவாயின் காலகட்டத்தில் பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற நாயர்படை அங்கே தங்கியது. அவர்கள் பாறசாலை பத்மநாபன் தம்பியின் தலைமையில் தான் அரசரை சந்திக்க திருவனந்தபுரம் சென்றனர். ஆனால் பாறசாலை பத்மநாபன் தம்பி பின்னர் திவான் வேலுத்தம்பி தளவாய்க்கு எதிராக கலகம் செய்து அவரால் கொல்லப்பட்டார்.

மேலும் சில ஆண்டுகள் கழித்து திவான் வேலுத்தம்பிக்கு கர்னல் மன்றோவுக்கும் பூசல் வந்தபோது பாண்டிநாட்டிலிருந்து கர்னல் லெகர் தலைமையில் வந்த கம்பெனிப்படை வேலுத்தம்பியை ஆதரித்த நாயர்படையை அந்தச் சந்தையில் சுற்றிவளைத்து ஒருவர் மிஞ்சாமல் வெட்டிக்கொன்றனர். சந்தை மூன்றுமாதம் கூடவில்லை.

கர்னல் மன்றோ அவரே திவான் பதவியை ஏற்றுக்கொண்டு திருவிதாங்கூர் முழுக்க பயணம் செய்தார். எல்லா சந்தை மையங்களுக்கும் குதிரைப்படையுடன் கஸ்பா அலுவலகத்தை அமைத்து கொள்ளையர்களையும் அத்துமீறும் உதிரிப் படைநாயர்களையும் அடக்கினார்.பாறசாலைச் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்தது. தீர்வை வசூலிக்கும் பொறுப்பு மீண்டும் உண்ணி செம்பகத்துப்பிள்ளையின் காரக்கோணத்து வீட்டுக்கே அளிக்கப்பட்டது.

ராஜாகேசவதாசன் காலம் முதலே சந்தைக்கும் தனியாக காவல் இருந்தது. உண்ணி செம்பகத்துப்பிள்ளையின் காவலர்களும் சந்தை வளாகத்தில் ஈட்டியுடன் நின்றிருந்தனர். ஆனாலும் சந்தையில் எப்போதும் அடிதடியும் தலைவெட்டும் நடந்துகொண்டேதான் இருந்தது. சந்தையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு போக்கிரி தலையெடுத்து வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலித்து வாழ்வான். அதற்குச் ‘சந்தை விளைச்சல்’ என்று உள்ளூரில் பெயர். சில்லறைகளும் சந்தைவிளைச்சலுக்கு முயல்வதும் அடிவாங்குவதும் உண்டு.

சந்தையில் விளைபவனுக்கு கடுவன் என்றும் பெயர் உண்டு. ஆண்பூனை மென்மையான குரல் முற்றி அடிக்குரலில் உறுமத்தொடங்குகிறது. அதன் மீசைமுடி கம்பியாக நீண்டுவிடும். அதன்பின் அந்த மீசைமுடியில் படும் எவரும் அதன் எதிரிகள். ஒரு வட்டாரத்தை அது தன் ஆளுகைக்குள் கொண்டுவருகிறது.

ஆனால் கடுவன்களை அவ்வப்போது போலீஸ் பொறிவைத்துப் பிடிக்கும். பெரும்பாலான நேரங்களில் சந்தையிலேயே போட்டு அடித்து அடித்துக் கொன்று அங்கேயே கம்பத்தில் தொங்கவிடுவார்கள். கால்களையோ கைகளையோ வெட்டி பிச்சையெடுக்க விடுவதும் உண்டு. கர்னல் மன்றோ வந்தபின் எவரானாலும் பிடித்து இழுத்து கொண்டுசென்று நீதிமன்றத்தில் நிறுத்தி முறையாக விசாரித்து சிறையில் அடைக்கவேண்டும், கொலைகாரன் என்றால் தூக்கிலிடவேண்டும் என்று சட்டம் வகுக்கப்பட்டது.

உத்திரட்டாதி திருநாள் கௌரி லக்ஷ்மி பாய் தம்புராட்டியின் ஆட்சிக்காலத்தில் ,கர்னல் மன்றோவே திவானாக இருந்த குறுகிய பொழுதில், போலீஸ் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. நீதிமன்ற நெறிகள் வகுக்கப்பட்டன. போலீஸ்துறை நவீனப்படுத்தப்பட்டு சட்டதிட்டங்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டன. அவற்றை மீறும் போலீஸ்காரர்களுக்கும் தண்டனை வரும் என்ற நிலை உருவானது. ஆனால் இடும்பன் போன்ற போலீஸ்காரர்களை அதெல்லாம் கட்டுப்படுத்துவதில்லை. அன்று நாடெங்கும் முளைத்துக்கொண்டே இருந்த ரவுடிகளையும் போக்கிரிகளையும் களைய அவர்கள் தேவைப்பட்டார்கள்.

இடும்பன் பாறசாலைக்குக் செல்வதை ஆரியசாலையில் அறிவித்துவிட்டே கிளம்பினான். ஆரியசாலைச் சந்தையில் தன் கையிலிருந்த கழியை சுழற்றியபடி “டேய், யாரடா அவன் தலைக்கெட்டு காதர்? தலைக்கெட்டுகாதரை ஜெயிக்க இடும்பனால் முடியாது என்று சொன்னவன் யார்? எங்கே இருந்தாலும் வாடா!” என்று கூவினான். “அவன் தலைக்கெட்டை தலையோடு எடுத்துக்கொண்டு வருகிறேன்! பாருங்களடா நாய்களே!” என்று சபதம் போட்டான்

அங்கிருந்து ஒற்றைக்காளை வண்டியில் இடும்பன் கிளம்பியபோது சற்றே தொலைவுவிட்டு எட்டுபத்து வண்டிகளில் ஆரியசாலையின் அடிதடி ரசிகர்கள் வந்தனர். வரும்வழியிலேயே “வாருங்கள்… பாலிசுக்ரீவ யுத்தம் பார்க்கப்போகிறோம்” என்று சொல்லி மேலும் ஆளை திரட்டிக்கொண்டார்கள்.

இடும்பன் பாறசாலைக்கு காலையிலேயே வந்துவிட்டான். அங்கே ஒரு கஞ்சிக்கடைக்குள் சென்று சுட்டகோழியிறைச்சியுடன் கஞ்சிகுடித்துவிட்டு படுத்து தூங்கினான். அவனுடன் வண்டிக்கு அருகிலேயே நடந்து வந்த இருமாலி தலைமாட்டில் குந்தி அமர்ந்து காவல் காத்தான் .

உச்சிப்பொழுது கடந்ததும் இடும்பன் எழுந்து கைவிரித்து சோம்பல் முறித்தான். ஒரு முழுக்கருப்பட்டியை உடைத்து தூளாக்கி அதை மென்று தின்றான்.கூடவே பெரிய நூறுமுட்டன் மரவள்ளிக்கிழங்குகள் பத்து. பின்னர் ஏப்பம் விட்டபடி எழுந்து ஒற்றைமாட்டு வண்டியில் ஏறி சந்தைக்குச் சென்றான். இருமாலி கூடவே நடந்தான்

சந்தையைச் சூழ்ந்து உரிய இடங்களில் போர்க்கலை ரசிகர்கள் நிலைகொண்டிருந்தனர். இடும்பன் வருவதை கண்டதும் அவர்கள் “வாறான்!” என்று குரல்கொடுத்தனர்.

இடும்பன் சந்தைக்குள் பூட்சுகள் ஒலிக்க நடந்து வெற்றிலைக்கடை வரிசையை அடைந்தபோது தலைக்கெட்டு காதர் எதிரே வந்தான். இருமாலி பின்னடைந்து ஒரு சந்தில் நின்றான். பல்லியும் கூதறையும் காதரை தொடர்ந்து வந்தனர். அவர்களும் பின்னால் தனி இடங்களில் ஒதுங்கி நின்றனர்

இடும்பனும் காதரும் ஒருவரை ஒருவர் நேருக்குநேர் விழிக்கு விழி சந்தித்த கணத்தை சூழ்ந்திருந்தவர்கள் உணர்ந்து மெய்சிலிர்த்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அசைவில்லாமல் நின்றார்கள். இருவரில் எவர் முதலில் அசைவார்கள் என்று ஒவ்வொருவரும் துடித்து இறுகி வெடிக்கும்நிலையில் காத்திருந்தனர்

பின்னர் அது நிகழ்ந்தது. பல்வேறு சந்தைப்பாட்டுக்களில் அது வெவ்வேறுவகையாக பாடப்பட்டுள்ளது. ஓர் அறைவோசையைத்தான் அனைவரும் கேட்டார்கள். உடல் அதிர்ந்து பற்கள் கிட்டித்துக் கொண்டார்கள். நாலைந்துபேர் விழுந்து வலிப்பு கொண்டு துடித்தனர்.

வஞ்சினம் இல்லை. மிரட்டலோ மிஞ்சலோ இல்லை. ஒரு சொல் இல்லை. இரு ராட்சத உருவங்களும் முட்டி அறைந்து விலகி அறைந்து மீண்டும் விலகின. பாய்ந்து மீண்டும் முழுவிசையில் அறைந்துகொண்டன. கைகால்கள் பின்னி இறுக புழுதியில் கால்கள் மிதிபட்டு மிதிபட்டு சுழல தசைகள் இழுபட்டு அதிர அசைவிழந்தன. ஒன்றை ஒன்று தூக்கி அறைந்தன. தெறித்து விலகின.கையூன்றி ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன. மீண்டும் எழுந்து அறைந்தன.

கருங்கரடி பிடியல்லோ கடுவா அடியல்லோ

காட்டானை முட்டல்லோ! காட்டுபோத்தின் வெறியல்லோ!

ஒந்நாமடி ரண்டாமடி மூநாமடி நாலாமடி

நிந்நாலடி நெடும்பாலடி நீட்டிச் சாடியடி சவிட்டியடி!

செந்நாயடி சீறிச்சாடியடி சேந்நாலடி சூடோடடி!

கொந்நால் தீரா அடி கொலையடி கோளடி கொண்டோனடி!

அடியடியடியடியடியொ! அய்யோ! அடியடியடியடியடியொ!

தேற்றைப்பந்நி சீற்றமல்லோ ஈற்றைப்புலி நில்பல்லோ !

ஆற்றுப்பெரு வெள்ளமல்லோ! ஆளிக் கத்தும் தீயல்லோ!

அடியடியடியடியடியொ! அய்யோ! அடியடியடியடியடியொ!

நூறாண்டுகளுக்கு பிறகு இப்போதும்   ‘தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்’ என்ற அந்த சந்தைப்பாடல் அச்சிட்டு விற்கப்படுகிறது. பதினெட்டு பக்கமுள்ள நாட்டுப்பாடல். அந்தக் கவிஞன் தன் சிரட்டைத் தாளத்துடன் அங்கே நின்று அந்த சண்டையைப் பார்த்திருக்கலாம். அவன் பட்டினியால் மெலிந்த கரிய உருவம்கொண்டவன். பெரிய மின்னும் கண்களும் கார்வைகொண்ட குரலும் தாளம் தவறாத கைகளும் கொண்டவன். அவன் உடல் அங்கே நின்று அதிர்ந்திருக்கும். கண்ணால் கண்டதைவிட பலமடங்கு உக்கிரமான ஒரு சண்டையை அவன் தன் கற்பனையால் கண்டிருப்பான்.

அன்று கொண்டாடப்பட்ட எத்தனையோ நூல்கள் இன்று கிடைப்பதில்லை. ‘தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்’  இன்றும் வாழும் படைப்பாக இருப்பதற்குக் காரணம் அதன் மொழிவளமோ கற்பனைவளமோ தத்துவமோ ஒன்றும் அல்ல, அதை எழுதியவன் அதைப் பார்த்தபோது நடுங்கி சிறுநீர் கழித்தான் என்பதுதான்.

என் அப்பா சித்தமருத்துவரான சில்லுவிளை நாகமாணிக்கம் நாடார்  ‘தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்’ ஒரு பிரதி வைத்திருந்தார். அதை அவரே ஓரளவு பாடுவார். நான் இளமையிலேயே அப்பாவின் குரலில் அந்த சண்டைக்காட்சியை காதால் கேட்டு கனவுபோல கண்டிருக்கிறேன். அப்பா அந்தச் சணடையின் கதையை கிழவர்களிடமிருந்து விரிவாக நேரில் கேட்டிருந்தார். அவர் இளமையிலேயே கேட்டகதை. ஆகவே அவர் மனதில் அது வளர்ந்து வளர்ந்து அவரே நேரில் கண்டதைப்போல மாறிவிட்டிருந்தது.

அந்தச் சண்டை முழுப்பகலும் நீடித்தது. இருவரும் மணலளவுக்கு மயிரிழையளவுக்குக் கூட ஒருவருக்கொருவர் தாழவில்லை. இருவரின் ஆடைகளும் கிழிந்து தொங்கின. பின்னர் இருவரும் இறுக்கிக் கட்டிய கோவணம் மட்டுமே உடுத்தவர்களானார்கள்.மண்ணில் புரண்டு எழுந்து மண்ணால் ஆன உருவம்போலவே மாறினார்கள். ஒரு கட்டத்தில் இருவரையும் பிரித்தறியவே முடியவில்லை. எவர் எவரை அடிக்கிறார் என்றே தெரியவில்லை. எவர் விழுந்தார் என்று புரியவில்லை. எவருக்காக மகிழ்வது என்று அறியமுடியாமல் திகைத்து பார்த்து நின்றனர் மக்கள்.

பத்து முறைக்குமேல் இருவரும் விலகி அமர்ந்து மூச்சுவாங்கி ஓய்வெடுத்தனர். மீண்டும் எழுந்து சண்டையிட்டனர். அத்தனை வெறிகொண்ட போரிலும் இருவருமே அருகிலிருந்த கழிகளையோ கற்களையோ கையில் எடுக்கவில்லை. ஒருமுறை அவர்கள் சண்டையிட்டுச் சென்றவழியில் ஒரு கொடுவாள் கிடந்தது. அதை ஒருவர் எடுக்கக்கூடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதன்மேலேயே உருண்டு சென்றபோதும்கூட அவர்கள் அதை கையால் தொடவில்லை. இருவர் உடலில் இருந்தும் ஒரு சொட்டு ரத்தம்கூட விழவில்லை.

சாடி வலிஞ்சொடிச்சு சவிட்டி எழிச்செடுத்து

கூடி அமர்ந்தெழிச்சு குத்தி சுழந்நெழிச்சு

அடியடியோ! அடியடியோ! அய்யோ!

அடியடியோ! அடியடியோ!

வாரிச்சவிட்டி வலிஞ்சுகெட்டி வட்டமிட்டு வீசியடிச்சு

கோரியிட்டு குத்திமலத்தி கொடுங்குழியில் கூட்டிச்ச்சுருட்டி

அடியடியோ! அடியடியோ! அய்யோ!

அடியடியோ! அடியடியோ!

அடித்து அடித்து அவர்கள் சந்தையை விட்டு வெளியே சென்றார்கள். மாலிக்தீனார் பள்ளியின் தெருவுனூடக அடித்துச் சென்றார்கள். மக்களும் அவர்களைச் சூழ்ந்து ஒரு பெரிய வளையமாக முன்னால் சென்றார்கள். இடும்பன் காதரை தூக்கி மண்ணில் அறைந்து எழுவதற்குள் காதர் இடும்பனை தூக்கி மண்ணில் அறைந்தான்.

இருட்டிக்கொண்டே வந்தது. இரவிலும் அடிதொடருமா என்று சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது. அவர்கள் நன்றாகவே களைத்திருந்தனர். கைகால்களை தூக்க இருவராலும் முடியவில்லை. பலமுறை இருவரும் எழுந்தபின்னரும் களைத்து மீண்டும் அமர்ந்தனர். இறுதி விசையையும் செலுத்தி எழுந்து மீண்டும் அடித்தனர்.

இருவரும் இருபுறமாக தள்ளாடி விழுந்தனர். கையூன்றி எழுந்த இடும்பன் அங்கே ஒரு  முதுநாவல் மரத்தடியில் ஒரு பொந்தில் ஆந்தை போல பதுங்கி அமர்ந்திருந்த கிழட்டுப் பரதேசியைப் பார்த்து தண்ணீருக்காகக் கைநீட்டினான்.

அவர் அங்கே அன்றுகாலைதான் வந்து தங்கியிருந்தார்.மிகப்பெரிய பச்சை தலைப்பாகை அணிந்திருந்தார். நரைத்த தாடி இரண்டு புரிகளாக மார்பு வரை தொங்கியது. அந்த தலையை தாங்கமுடியுமா என்று சந்தேகம் வருமளவுக்கு மிகமெலிந்த உடல் வற்றி நெற்றாக ஆகி கூன்விழுந்து ஒடுங்கியிருந்தது. கைகள் கரிய சுள்ளிகள் போல மிகச்சிறிதாக இருந்தன.

அவரிடம் ஒரு துணிமூட்டையும் கழியும் இருந்தது. அதுவும் பச்சைநிறம்தான். ஒரு சுரைக்குடுவையில் தண்ணீர் வைத்திருந்தார்.பல்லே இல்லாத கரிய வாயை திறந்து, கண்கள் இடுங்க சிரித்தபோது குழந்தையைப் போலிருந்தார். உற்சாகத்துடன் அதை எடுத்து இடும்பனுக்கு நீட்டினார். அவன் அதை வாங்கி அண்ணாந்து பாதி குடித்து விட்டு மூச்சுவாங்கினான்.

கீழே கையூன்றி எழுந்து அமர்ந்த தலைக்கெட்டு காதர் அவனை பார்த்துக் கொண்டிருந்தான். இடும்பன் மிஞ்சிய நீரை காதருக்கு நீட்டினான். காதர் எழுந்து வந்து அதை வாங்கி குடித்துவிட்டு குடுவையை பரதேசியிடம் திரும்பக் கொடுத்தான்

மீண்டும் சற்று மூச்சுவாங்கியபின் கைகளை மண்ணில் தேய்த்துக்கொண்டு  மீண்டும் ஒருவரை ஒருவர் அறைந்து கொண்டனர். அறைந்து வீழ்த்தியும் தூக்கி அடித்தும் கோயில்முகப்பு வரை வந்தனர். அப்போது அந்தியாகிவிட்டிருந்தது. தலைக்கெட்டு காதரை அள்ளிப்பிடித்த இடும்பன் அப்படியே மல்லாந்துவிழ இருவரும் உருண்டு உருண்டு புழுதியில் நெளிந்து அசைவற்றனர்.

இரண்டுபேருமே செத்துவிட்டார்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது. சுற்றி நின்ற வட்டம் அணுகியது. சிலர் மெல்ல பேசவும் தொடங்கினர். அந்த ’கைகால்தலையுடல்’ தொகுதி அப்படியே ஒரு பிண்டமாக கிடந்தது. அவர்கள் மேலும் அணுகியபோது அது மெல்ல அதிர்ந்தது. அக்கூட்டம் அலறி பின்னடைந்தது.

மீண்டும் நெடுநேரம் அசைவின்மை. அவர்கள் அணுகிவந்தனர். அந்த பிண்டத்தில் தசைகள் இறுகி நெளிந்துகொண்டிருப்பதை கண்டனர். “உயிர் இருக்கு” என்று எவரோ சொன்னார்கள். நெடுநேரம் அவர்கள் ஏதேனும் நிகழும் என எதிர்பார்த்து அப்படியே நின்றார்கள்

பின்னர் அதில் ஒரு துடிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து ஒரு கால் தனியாக பிரிந்து அசைந்தது. கை தனியாக விலகி மண்ணில் ஊன்றியது. அது தன்னைத்தானே இருமுறை உருட்டிக்கொண்டது. அதிலிருந்து புழுதிவடிவாக ஒருவன் மேலே எழுந்தான். இன்னொருவனை மண்ணுடன் அழுத்திப் பிடித்துக்கொண்டு மேலேறி அமர்ந்தான்

அது இடும்பன். அவன் கீழே கிடந்த காதரின் இரு கைகளையும் பிடித்து பின்னால் சேர்த்துப் பிடித்துக் கொண்டான்.  “டேய்!” என்று கூவினான்.

இருமாலி கூட்டத்திலிருந்து ஓடிச்சென்று அவனருகே நின்றான்.

“இவனுக்க உருமாலை எடுத்தாடா!”

இருமாலி ஓடிச்சென்று அவர்கள் போரிடத் தொடங்கிய இடத்தில் மண்ணில் மிதிபட்டு சேறுபோலக் கிடந்த காதரின் முண்டாசுத் துணியை எடுத்து வந்தான். அதைக்கொண்டு காதரின் இருகைகளையும் நன்றாகச் சேர்த்து சுருக்கிட்டு கட்டியபின் பிடித்து தூக்கி நிறுத்தினான் இடும்பன்.

காதரின் தலையை அன்றுதான் அனைவரும் பார்த்தனர். அவன் இஸ்லாமிய முறைப்படி மொட்டை அடித்து தாடி வைத்திருந்தான். அவனுடைய தாடிமயிர் புழுதிபடிந்து தேங்காய்நார் போலிருந்தது. வாய்திறந்து மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். பெரிய இமைகள் சரிந்து கண்கள் மூடியிருந்தன.

“ஏலே கோளி மாதிரி வாயப்பொளக்கான்லே!”

அந்தக் குரல் எழுந்ததும் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். கூச்சல்களும் கெட்டவார்த்தைகளும் ஒலிக்கத் தொடங்கின.

“விளுந்தாம்லே துலுக்கன்!”

“என்னா நிப்பு…”

“அவனுக்க உருமாலுகெட்ட பாக்கணுமே!”

“தாயளி அவனை அடியுங்கலே! அவனுக்க முகத்திலே காறித்துப்புங்கலே!”

கெட்டவார்த்தைகளால் வசைபாடியபடி அந்தக்கூட்டம் அணுகியபோது இடும்பன் தன் காலை ஓங்கி தரையில் அறைந்தான். அலறியபடி அனைவரும் சிதறி ஓடினர். இடும்பன் கெட்டவார்த்தை சொன்ன ஒருவனை கைசுட்டி உறுமினான். இருமாலி தவளைபோல மண்ணிலிருந்து காற்றில் எழுந்து பறந்து அவனை அணுகி அவன் செவிட்டில் ஓர் அறைவிட்டான்.

அடிபட்டவன் ஓசையே இல்லாமல் அப்படியே புழுதியில் விழுந்து முகம்பதித்து கிடந்தான். அவன் இடதுகால் மட்டும் இழுத்துத் துடித்துக்கொண்டிருந்தது

பல்லியும் கூதறையும் கதறி அழுதபடி பின்னால் வந்தனர். இடும்பன் காதரை இழுத்துக்கொண்டு சென்று தன் ஒற்றை மாட்டுவண்டியில் தள்ளி தூக்கி ஏற்றினான். திரும்பி பல்லியிடமும் கூதறயிடமும் பின்னால் வரும்படி கைகாட்டிவிட்டு தானும் வண்டியில் ஏறிக்கொண்டான்.

இருமாலி பல்லியையும் கூதறையையும் ஒரு துணியால் கைகளைச் சேர்த்துக் கட்டி தன் கையில் பிடித்துக்கொண்டு வண்டிக்குப் பின்னால் சென்றான்.

வண்டிக்குப்பின்னால் பாறசாலை மக்கள் ஊர் எல்லை வரை வந்தனர். வண்டி கண்ணிலிருந்து மறைந்ததும் பலர் ஏதோ ஒருவகை மனச்சோர்வுக்கு ஆளாகி அழுதனர். தலையில் கைவைத்தபடி ஆங்காங்கே அமர்ந்து கண்ணீர்விட்டனர். அந்த மனச்சோர்வு படர்ந்து பரவ சந்தை வளாகமே அமர்ந்து விம்மியழத் தொடங்கியது

அந்த அழுகை ஏன் என்று எவருக்குமே தெரியவில்லை. அவர்கள் ஒன்றுமே பேசிக்கொள்ளவுமில்லை. அன்றிரவு பாறசாலை ஊரே தூங்கவில்லை. ஆனால் விளக்கேற்றவுமில்லை. கிராமங்களில் இருந்து வந்தவர்கள் சந்தையின் வெவ்வேறு இடங்களில் அப்படியே அமர்ந்துவிட்டிருந்தனர். சிலர் சுருண்டு படுத்தனர். எவரும் எதுவும் சாப்பிடவில்லை. எந்த ஓசையுமில்லாமல் இருட்டிம் விழித்திருந்தது ஊர்.

மறுநாள் விடிந்தபோது ஊர்முழுக்க மக்கள் நிறைந்திருந்த போதும் ஒரு சத்தமில்லை. பிணங்கள் போல எழுந்து ஓடையில் நீர் அள்ளி முகம்கழுவி தங்கள் பெட்டிகளும் கடவங்களுமாக ஊருக்குச் சென்றனர். வியாபாரிகள் பொருட்களுடன் அங்கேயே அமர்ந்துவிட்டனர். அன்றும் ஊரே சோர்ந்து வெளிறியிருந்தது

சந்தை அதற்கு அடுத்தநாள்தான் கூடியது. அப்போது மீண்டும் ஊர்களிலிருந்து வந்தவர்கள் சோர்ந்தவர்களாக எதையுமே பேசாதவர்களாகத்தான் இருந்தனர். ஓரிரு சொற்களில் உரையாடிக்கொண்டனர். ஆனால் ஒரு வார்த்தைகூட அந்த சண்டைபற்றிப் பேசிக்கொள்ளவில்லை.

அவர்கள் அனைவரும் உணர்ந்திருந்த, அனைவரும் மனதுக்குள் கேட்டுக்கொண்டிருந்த ஒன்றை கருப்பட்டி வியாபாரியான காபிரியேல் நாடார் மெல்லிய முனகலாக எழுப்பினார். “அவனுக ஒரு வார்த்தைகூட பேசிக்கிடல்லியே”

அவர்கள் அதைக்கேட்டு திடுக்கிட்டனர்.

காபிரியேல் நாடார் “அவனுக போறவளியிலயாவது என்னமாம் பேசுவானுகளா?”என்று மேலும் கேட்டார்

நெடுநேரம் கழித்து இபுராகீம் மரைக்காயர் சொன்னார் “இல்ல, பேசிக்கிடுகதுக்கு என்ன இருக்கு… யா ரஹ்மான்!”

அங்கிருந்து சென்ற இடும்பன் நாராயணன் அதற்குப்பின் பேசவே இல்லை. அந்த வண்டியில் ஒரு சொல்லும் எழவில்லை. தலைக்கெட்டு காதரை ஹூஸூர் கச்சேரியில் ஒப்படைத்தபோதும் பேசவில்லை. அனைத்தையும் இருமாலிதான் விளக்கிச் சொன்னான்.

இடும்பன் அங்கிருந்து தன் அச்சியான கவங்கில் மாதவி வீட்டுக்குச் சென்று அமர்ந்திருந்தான்.இரவெல்லாம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவள் பலவாறாகக் கேட்டும் வாய் திறக்கவில்லை. அவள் அளித்த கஞ்சியையும் குடிக்கவில்லை. மறுநாள் காலை அவன் காணாமலாகியிருந்தான்

பல ஆண்டுகளுக்குப்பின் அகஸ்தியர் கூடம் செல்லும் வழியில் வில்லுச்சாரி என்னும் இடத்தில் காட்டுக்குள் குடில்கட்டி வாழ்ந்த மௌனச்சாமியாராக இடும்பனை மக்கள் கண்டுகொண்டனர். இடும்பன் நாராயணன் என்றபெயர் வழக்கொழிந்து மௌனச்சாமி என்றே அவர் அறியப்பட்டார். அவரைச் சூழ்ந்து ஒரு ஆசிரமம் உருவாகியது. சீடர்கள் வந்தனர். திருவிதாங்கூர் மகாராஜா சுவாதித்திருநாளே அவரை மாதந்தோறும் வந்து வணங்கிச் சென்றார்.

இடும்பன் நாராயணனின் குட்டிச்சட்டம்பியான இருமாலி மாடசாமிப்பிள்ளை பின்னர் கடைவைத்து வியாபாரியாக ஆனார். அவர்தான் கோட்டைப்புறம் மாரியம்மன் கோயிலை சொந்தச் செலவில் கட்டியவர். பெரிய தர்மிஷ்டராக அறியப்பட்டார். சாவது வரை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சாயங்காலம் மட்டும் அவர் மௌனச்சாமி மடத்தில்தான் இருப்பார். மௌனச்சாமியை நெடுங்கிடையாக விழுந்து வணங்கிவிட்டு அவர் முன்னால் சற்று இடப்பக்கமாக விலகி  ஒரு மூலையில் கண்மூடி அமர்ந்திருப்பார். மறுநாள் காலை கிளம்பிச்செல்வார். வந்தது முதல் திரும்புவது வரை ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை.

மௌனச்சாமி ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. என் அப்பா மௌனசாமி மடத்துடன் நெருக்கமாக தொடர்பில் இருந்தார். மௌனசாமியின் வரலாற்றையும் அவரிடமிருந்து பெற்ற ஞானத்தையும் பற்றி பல நூல்களை அவருடைய சீடர்களும் இல்லற மாணவர்களும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவரிடமிருந்து புன்னகை மட்டுமே வெளிப்பட்டது என்று அப்பா சொன்னார்

தலைக்கெட்டு காதரும் அந்த நாளுக்குப்பின் பேசவில்லை.ஹூஸூர் கச்சேரியில் கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் அவன் பதில் சொல்லவில்லை. அவர்களே கேஸ் எழுதினர். விசாரித்து சிறையிலிட்டனர். சிறையிலும் அவன் பேசவில்லை. அவனை அடிக்கவோ மிரட்டவோ எவரும் துணியவில்லை

பதினேழு ஆண்டுகள் காதர் சிறையிலிருந்தான். அவனை எதற்காக தண்டித்தார்கள் என்பதையே எல்லாரும் மறந்துவிட்டிருந்தனர். அவனுடைய பெயரே கூட சிறைப்பதிவுகளில்தான் இருந்தது. மகாராஜா உத்தரம் திருநாள் ராமராஜா பதவிக்கு வந்ததை ஒட்டி அவனை விடுதலை செய்தனர்

மீண்டும் பாறசாலை சந்தைக்கு வந்த தலைக்கெட்டு காதர் அதேபோல தலையில் உருமால் கட்டியிருந்தார். ஆனால் பச்சைநிறம் அதற்கு. பச்சைநிறமான நீண்ட அங்கி. தாடி நரைத்து இருபிரிவாக மார்பில் விழுந்திருந்தது.அந்த முதுநாவல் மரத்தடியில் அவர் வந்து அமர்ந்தபோது அவர் எவரென்றே எவருக்கும் தெரியவில்லை. ஏதோ அயலூர் சூஃபி என்றே எண்ணினர்

மேலும் முப்பத்தாறு ஆண்டுகள் அந்த முதுநாவல் மரத்தடியில் காதர் தங்கியிருந்தார். காலைக்கடன்களுக்கு கருக்கிருட்டில் ஆற்றுக்குச் செல்வதை தவிர அங்கிருந்து அகலவே இல்லை. எவரிடமும் எதுவும் பேசவில்லை. எவர் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. எவரிடமும் எதுவும் கேட்கவில்லை. அருகிலிருந்த கடைக்காரர்கள் உணவும் நீரும் அளித்தனர்.

அவர் தன் விரல்களால் எண்ணியபடி உதடுகளால் ஓசையில்லாமல் “பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதை மட்டும். விழித்திருக்கும் நேரமெல்லாம். இரவில் மிகக்குறைவாகவே அவர் தூங்கினார். பெரும்பாலும் அமர்ந்தபடியே. ஆகவே அவர் இரவும் பகலும் அதைச் சொல்லிக்கொண்டிருந்தார் என்று நம்பினார்கள்

நாளடைவில் பக்தர்கள் தேடி வரத்தொடங்கினர். அவரை வணங்கியவர்களையும் அவர் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவர்களே அவருக்கு முன்னால் பச்சை சால்வைகளை படைத்து அவருடைய ஆசி என்று திரும்ப எடுத்துக்கொண்டனர்.அவர் முன் சுருட்டுக்களை படைத்தார்கள். அவை அதற்கென்றே தயாரிக்கப்படும் சுருட்டுக்கள், சாதாரண சுருட்டுக்களைவிட இருமடங்கு பெரியவை. அவற்றை படைத்தபின் எடுத்துச் சென்று பிரித்து சாதாரண சுருட்டுக்களாக ஆக்கி விற்றார்கள்.

அங்கே வந்து வழிபட்டால் நோய்கள் தீர்ந்தன, கடன்கள் அழிந்தன, கவலைகள் மறைந்தன. வருபவர்கள் பெருகிப்பெருகி அந்த இடமே ஒரு பெரிய மையமாக ஆகியது. அதன் அருகே இருந்த பள்ளிவாசல் மைதானத்தில் எப்போதும் வண்டிகள் நிறைந்திருந்தன

நூற்றியிருபது வயதுல் காதர்மறைந்தபோது அந்த நாவல்மரத்தின் அடியிலேயே அவரை நல்லடக்கம் செய்தனர். பச்சைச் சால்வை போர்த்தப்பட்ட அவருடைய சமாதியை உள்ளே வைத்து ஒரு தர்கா அமைக்கப்பட்டது. அங்கே தூபமிட்டு ஓதுவதற்கும் சால்வைபோர்த்தி கொடுப்பதற்கும் முசலியார்கள் அமைந்தனர். அவர்கள் இரண்டு குடும்பங்கள். இருவருமே அவருடைய அணுக்கர்களாக இருந்த பல்லேலி அப்துல் ரஹ்மான், மேட்டில் முகமது குஞ்ஞி ஆகியோரின் வாரிசுகள்.

ஹஸ்ரத் அப்துல் காதர் சாகிப் வலியுல்லா தர்கா பாறசாலையின் சந்தைக்கும் மசூதிக்கும் நடுவே உள்ள சாலைவளைவில் அமைந்திருக்கிறது. அங்கே அந்த மூத்த நாவல்மரம் இன்றும் தடித்த கிளைபரப்பி நிழல்விரித்திருக்கிறது. காய்க்கும் பருவத்தில் அந்த மரமே பறவைகளால் நிறைந்திருக்கும்.செவிமூடும் பறவைக்கூச்சல்களுக்கு நடுவேதான் தர்காவிலிருந்து பிஸ்மில்லாஹ் ஓசை கேட்கும். மழைபோல கொட்டி தரைஎங்கும் நிறைந்து கிடக்கும் நாவல்பழங்கள் வண்டிச்சக்கரங்களால் அரைக்கப்பட்டு சிவந்து கூழாகிப் பரவியிருக்கும். நாவலடி தம்புரான் என்று இஸ்லாமியர் அல்லாதவர்களாலும் ஔலியா வணங்கப்படுகிறார்

என் அப்பாவிடமிருந்து நான் கேட்டறிந்த இந்தக்கதைகளில் எஞ்சிய ஒரே கண்ணி அந்த நாவல்மரத்தடியில் அமர்ந்திருந்தவர் யார் என்பது. அவர் அளித்த அந்த குடுவையிலிருந்த நீர் எது?

நான் பதினெட்டு ஆண்டுகள் வெவ்வேறு தரப்பினரிடம் அவரைப்பற்றி கேட்டேன். மௌனசாமியின் வழிவந்தவர்களிடம், தர்காவை நடத்துபவர்களிடம். அவர்களுக்குச் சொல்ல நூற்றுக்கணக்கான செய்திகள் இருந்தன. அங்கே வந்து வழிபட்டுச் சென்றவர்களின் பட்டியல், அற்புதங்களின் கதைகள். ஆனால் எவரிடமும் ஒரு சொல்கூட அந்த முதிய பரதேசியைப் பற்றி இல்லை.அவருடைய தோற்றத்திலுள்ள எந்த சூஃபியும் அப்பகுதியில் எங்கும் வந்ததாகச் செய்தி இல்லை. பேசப்பட்ட அனைவருமே அரச ஆகிருதி கொண்டவர்கள்.

தேற்றக்கடுவாயும் ஈற்றப்புலியும்’  என்ற அந்த சிறிய நூலை மட்டும்தான் சான்றாகக் கொள்ளவேண்டும். உண்மையில் என் ஆய்வை தொடங்கியதே அந்த நூலில் இருந்துதான். அதில்தான் அந்த அடிதடி நிகழ்ச்சியின் விரிவான சித்திரம் அளிக்கப்பட்டிருந்தது. ஏழு வரிகளில் அந்த முதியவர் பற்றிய விவரிப்பு அதில் இருந்தது. அவருடைய தோற்றத்தில் இருந்து அவர் ஒரு சூஃபி என்று தெரிந்தது, அவ்வளவுதான் அவரைப்பற்றிய விளக்கம்.

பின்னர் அறிந்துகொண்டேன் அவரை தொடரவோ அறியவோ முடியாது என்று. சில பறவைகள் அப்படித்தான்

***

முந்தைய கட்டுரைகரு- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–67