நம்மாழ்வார்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

பலகாலமாக கவிதைகளை வாசித்துவந்தாலும் இதுவரை பாடநூலுக்கு வெளியே நம்மாழ்வாரின் ஒருவரியைக்கூட வாசித்ததில்லை. அவற்றை கவிதையென சொல்லியறிந்ததும் இல்லை.உங்கள் அஞ்சலியில் வந்த வரிகளே என்னை பிரமிக்கச் செய்தன. நீங்கள் அவற்றை எடுத்துச் சொல்லி கோடிகாட்டித்தான் சென்றிருக்கிறீர்கள்.உதாரணம் ‘துளிக்கின்ற வான் இந்நிலம்’ என்ற வரி. பூமியை ஒரு துளியாக உருவகித்திருக்கிறார் என்பதல்ல, துளித்துக் கொண்டிருக்கும் ஒரு துளியாக உருவகிக்கிறார் என்பதே முக்கியமானது. புல்நுனியில் மெல்ல திரளும் ஒரு துளி போல. அதேபோல ‘நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை’ என்ற வரி. தன்னை இலக்குமிக்கு ஒருபடி மேலாகவே வைக்கிறார். அதிலும் இன்பன் என்ற சொல். வேறு எங்கும் அச்சொல்லைக் கேட்டதில்லை. தமிழில் உள்ள மிக அழகான சொற்களில் ஒன்று அது என்று படுகிறது

நம்மாழ்வாரைப் படிக்கவெண்டும். இக்கட்டுரை அளித்த தற்செயலான அறிமுகத்துக்கு நன்றி. எந்த நூலை குறிப்பிடுவீர்கள்? நம்மாழ்வார் குறித்து நீங்கள் விரிவாக எழுதவேண்டும்

சிவகுமார் நடராஜன்

அன்புள்ள சிவகுமார்

தங்கள் கடிதம் சொற்களின் வழியாக தூய கவிதையை நோக்கிச் செல்லும் ஒரு பயணத்தைக் காட்டியது. நான் வைத்திருப்பது வித்வான் கி வெங்கடசாமி ரெட்டியார் பதிப்பித்த நூல்.திருவேங்கடத்தான் திருமன்றம் சென்னை வெளியிட்டது. பழைய புத்தகக் அக்டையில் வாங்கிய நூல். நல்ல நூல்கள் வந்துள்ளன. திரு ஜெகத்ரட்சகன் அவர்கள் எளிய உரையுடன் வெளியிட்டுள்ள நாலாயிர திவ்ய பிரபந்தம் முக்கியமானது. பொதுவாக அதிமன விளக்க உரை இல்லாத நூல்களை வாங்கி அகராதி உதவியுடன் சீர் பிரித்து நாமே வாசிப்பதே நல்லது. வைணவ பக்திமரபால் வெளியிடப்படும் நூல்களில் கவிதையை வழிபாட்டுப்பக்தியால் மூடும் போக்கு அதிகம். பத்துவருடம் முன்பு சுஜாதாவுக்கு நம்மாழ்வாரை ஒரு கவிஞராக மட்டும் அணுகும் நூலை எழுதுவேன் என்று வாக்களித்தேன். ஒரு தொடக்கம் அமையவேண்டும். நன்றி

பி.கு நீங்கள் எழுதியுள்ள எழுத்துருவை படிக்கக் கஷ்டப்பட்டேன். எனக்கு யூனிகோட் அல்லது முரசு எழுத்துருக்கள் மட்டுமே கைவசம் உள்ளன

முந்தைய கட்டுரைசுஜாதாவுக்காக ஓர் இரவு
அடுத்த கட்டுரைமீன்காரத்தெரு