மழைப்பாடலின் ஓவியங்கள்

அன்புள்ள  ஜெ,

மழைப்பாடலில் ஓவியங்கள் மேலும் மேலும் அழகும் நுட்பங்களும் கொண்டவையாக மாறி வருகின்றன. சமீபத்தில் எந்த ஒரு தொடருக்கும் இவ்வளவு அழகான ஓவியங்களை நான் கண்டதில்லை. பல ஆயிரம் ரூபாய் செலவில் வணிக இதழ்கள் வெளியிடும் ஓவியங்கள் கூட இதில் பாதிக்குக்கூட இல்லை. விரிவாக்கிப்பார்க்கும்போது படங்களில் உள்ள நுட்பமான தகவல்கள் பிரமிக்கச்செய்கின்றன. உங்கள் வார்த்தைகள் அஸ்தினாபுரியையும் மார்த்திகாவதியையும் கனவிலே நிலைநாட்டுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போலவே ஓவியங்களும் செய்கின்றன. சிலசமயம் ஓவியம் உங்களை தாண்டிச்சென்றுவிடுகிறது என்று சொன்னால் வருத்தப்படமாட்டீர்கள் அல்லவா )) உதாரணமாக இன்று வந்திருக்கும் மார்த்திகாவதியின் சபை ஓவியம் பெரிய ஒரு கனவு போல தெரிகிறது அற்புதமான ஒரு சினிமாவின் காட்சி மாதிரி தெரிகிறது. ஓவியர் சண்முகம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவியுங்கள்

சண்முகம் மதுரை

அன்புள்ளஜெ

மழைப்பாடலில் ஓவியங்கள் அற்புதமாக அமைந்துள்ளன. பொதுவாக நாள்செல்லச்செல்ல ஓவியங்களில் தரமும் கவனமும் குறையவேண்டும். கதையும் உத்வேகமிழந்து கதையோட்டமாக நீளவேண்டும். அது இயல்பானதுதான். அந்த வேகம் நீடித்தாலே சாதனை என நினைத்திருந்தேன். ஆனால் ஒவ்வொருநாளும் புனைவு அளிக்கும் ஆச்சரியம் கூடிக்கொண்டே செல்கிறது. காந்தாரமும் யாதவ குலங்களும் உருவாகி வந்த விதம் பெரும் காவியம் போல இருந்தது. அதேசமயம் அதிலுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் துல்லியமான மன ஓட்டங்களுடன் சொல்லப்பட்டிருந்தன. பல இடங்களை கண்ணீர் பனித்தபடித்தான் வாசித்தேன். ஏராளமான இடங்களை அசைபோட்டு அசைபோட்டு நாள்முழுக்க நினைத்து புரிந்துகொன்டேன். ஓவியங்கள் ஒவ்வொரு நாளும் அற்புதம். விதுரன் யமுனைக்கரை ஓரமாக நடக்கும்போது மழைமூட்டமான வானமும் மங்கிய ஒளியில் தெரியும் கரையும் அற்புதமானவை. மார்த்திகாவதியின் அரண்மனை ஒரு சாதனை. ஷண்முகவேலுக்கு என் வணக்கம்

சாமிநாதன்

ஜெ,

சண்முகவேலின் ஓவியங்கள் அற்புதமாக உள்ளன. கடிதம் எழுதி தொந்தரவு செய்யவேன்டாமென நினைத்தேன். ஆனாலும் வேறு வழி இல்லை. கங்கைக்கரையில் மழையில் தெரியும் படித்துறை பலமுறை கனவிலே வந்துவிட்டது. எல்லா ஊரும் சென்று வந்த ஊர் மாதிரி நினைவில் நிற்கிறது. சண்முகவேலை கட்டிப்பிடித்து முத்தமிடத்தோன்றுகிறது

குமரன் கே.என்

முந்தைய கட்டுரைமழைப்பாடலின் மௌனம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 50