ஞாநி எழுதியவை…

ஜெ,

நீங்கள் ஞாநி பற்றி எழுதிய குறிப்புக்கு பின்பு ஃபேஸ்புக்கில் ஞாநி என்று தேடி வாசித்தபோது திருமலை என்பவர் எழுதிய இந்த நீண்ட பதிவு கண்ணில் பட்டது .

++++++++++++++++++++++++

ஜெயமோகன் மீது காவி பயங்கரவாதி, மலையாளி, மன நோயாளி என்றெல்லாம் தமிழ் நாட்டின் மூத்த தமிழினத் தலைவர் முதல் அவரது கவிதாயினி மகள் உட்பட பலரும் வசை பாடியுள்ளார்கள். தனி மனிதத் தாக்குதல்கள் அவருக்குப் புதிது கிடையாது. கடுமையான வசைபாடுகளை தினமும் எதிர் கொண்டு அதையே நகைச்சுவையாக மாற்றி அங்கதக் கட்டுரைகள் எழுதி விடுபவர். இப்பொழுது லேட்டஸ்ட்டாக அது போன்ற ஒரு அவதூறை ஞாநி சொல்லியுள்ளார் போலிருக்கிறது. அதாவது பணக்காரர்களின் காலை நக்கிப் பிழைப்பவர் என்று.

ஜெயமோகனை முதலில் அவரது எழுத்துக்கள் மூலமாகவும் பின்னால் நேரிலும் நன்கு அறிந்தவன் என்ற முறையில் ஞாநி வழக்கமாகச் சொல்லும் அபாண்டங்களின் உச்சம் இந்த அவதூறு என்பதைச் சொல்ல முடியும்.
ஜெயமோகன் சினிமாவுக்குச் செல்வதற்கு முன்பில் இருந்தே அறிவேன். அவர் பி எஸ் என் எல்லில் அஸிஸ்டெண்ட்டாக இருந்த பொழுதில் இருந்தே சொத்து சேர்ப்பதிலும் பெரும் பணம் தேடியும் அலைந்தவர் கிடையாது. இப்பொழுது சினிமா மூலமாக பணம் வரும் நிலையில் அவருக்கு எவரையும் அண்டிப் பிழைக்க வேண்டிய தேவையும் கிடையாது.

அமெரிக்காவில் உள்ள ஒரு இணைய நண்பர் ஒரு குறிப்பிட்ட அளவு நிதியைத் திரட்டி அதை ஜெயமோகனுக்கு அளிக்க வேண்டும் என்றும் அதனால் அவர் வேலைக்குச் செல்லாமல் முழு கவனத்தையும் எழுத்தில் மட்டுமே செலுத்த உதவ ஏதாவது தன்னால் இயன்ற வரை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்பினார். அவர் ஜெயமோகனைத் தொடர்பு கொண்டு அவரது விருப்பத்தைத் தெரிவித்தார். அந்தக் காலத்தில்அவர் திரட்ட விரும்பியது அமெரிக்க டாலர்களில் ஒரு கணிசமான தொகையும் கூட. ஜெயமோகன் அப்பொழுது சினிமாவுக்கு எல்லாம் போகாத நேரம். அவர் புத்தகங்களும் அப்படி ஏதும் பெரிதாக விற்று பணம் வந்திராத நேரம். இருந்தாலும் ஜெயமோகன் பெருந்தன்மையாக அதை மறுத்து அப்பொழுது சற்று சிரமத்தில் இருந்த ஒரு கவிஞருக்கு அளிக்குமாறு சிபாரிசு செய்து, நண்பரும் அந்தக் கவிஞருக்கு அளித்தார். ஆனால் இன்று வரை அந்தக் கவிஞர் ஜெயமோகனை ஆபாசமாக வசை பாடிக் கொண்டிருக்கிறார்.

எனக்குத் தெரிந்து காசு அவரைத் தேடி வருகிறது அவராக காசைத் தேடிப் போவதில்லை. சமீபத்தில் கூட ஒரு இலக்கியவாதியின் சிரமம் அறிந்து அவருக்கு உதவி செய்திருந்தார். இத்தனைக்கும் அந்த கவிஞர் ஜெயமோகனை ஏற்றுக் கொண்டவர் கிடையாது.

ஜேடி குரூஸையும் அது போலவே ஹிந்துத்துவவாதி என்று எழுதியிருக்கிறார். இதே குற்றசாட்டுக்களை ஞாநி மீது வைக்க அதிக நேரம் ஆகி விடாது. ஆனால் இது வரை எவரும் ஞாநியின் காழ்ப்பு நிறைந்த குரோதம் நிறைந்த எழுத்துக்களை விமர்சித்திருக்கிறார்களே ஒழிய எவரும் அவர் அதை காசு வாங்கிக் கொண்டு செய்கிறார் என்று சொன்னதில்லை. ஜெயமோகன் ஞாநியைக் கடுமையாக விமர்சித்த பொழுதும் எந்த நேரத்திலும் அவரது நேர்மையைக் சந்தேகித்ததில்லை அப்படி எவராவது சொன்னாலும் கூட ஞாநி அப்படிப்பட்டவர் கிடையாது என்பதை அழுத்தமாகச் சொல்பவர். ஞாநி வாய் கை கூசாமல் அவதூறு எழுதியுள்ளார்.
https://www.facebook.com/thirumalairajan.sadagopan/posts/10200320994545799
——————————-

என் கேள்விகள் இரண்டு

1. ஞாநி உண்மையில் உங்களை பணக்காரர்களை அண்டிப்பிழைப்பவர், சினிமா சான்ஸுக்காக அலைபவர் என்றாரா?

2. நீங்கள் செய்த உதவிகளை இக்குறிப்பில் வாசித்து நெகிழ்ந்துபோனேன். அக்கவிஞர் நீங்கள் செய்த உதவி என்று தெரிந்துதான் வசைபாடுகிறாரா?

ஆனந்த்.கே

அன்புள்ள ஆனந்த்

ஞாநி அப்படி எழுதியதற்கு நான் ஏற்கனவே பதில் எழுதிவிட்டேன். ஞாநி மார்க்ஸிய மனநிலை கொண்டவர். அவர்களுக்கு எதிர்த்தரப்பு என்பது எதிரித்தரப்பே. அதை ‘எப்படியும்’ ஒழித்துக்கட்டலாம். அது போர் தர்மம்தான். என் வழிவேறு

அந்தக்கவிஞரின் கசப்பு அதனால்தான். அது மானுட இயல்பு. அக்கசப்பு வழியாக அவர் பல விஷயங்களைத் தாண்டிச்சென்று தன் அகங்காரத்தைக் காத்துக்கொள்கிறார். படைப்பாளிகள் பெரும்பாலும் அகங்காரத்தால் ஆனவர்கள். நேரில் பார்த்துக்கொண்டால் நட்பாகத்தான் இருக்கிறோம்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 32
அடுத்த கட்டுரைவண்ணக்கடல் கனவும் படங்களும்