‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 7

பகுதி மூன்று: 1. பெயரறிதல்

பெயரிடப்படாத ஆயிரம் மைந்தர்கள் அதிகாலைச்சூரியனின் செம்பொன்னொளியில் தும்பிகளாகவும் வண்டுகளாகவும் வண்ணத்துப்பூச்சிகளாகவும் தேன்சிட்டுகளாகவும் ஒளிரும் சிறகுகள் கொண்டெழுந்தனர். ஒளிப்பெருக்கில் நீந்தித் திளைத்து, இளங்காற்றிலேறி பறந்து, பசுந்தளிர்களின் குளிரிலாடி, மலர்ப்பொடிகள் சூடி கோகுலத்தை நோக்கிச் சென்றனர். நீலக்கடம்பின் மலர்க்கொத்துகளிலும் இணைமருதத்தின் இளந்தளிர்களிலும் குடியேறி இசைத்து காற்றில்நிறைந்தனர். வண்ணச்சிறகடித்து ஒளி துழாவினர். முதற்காலை ஒளியில் முற்றத்தில் வந்து நின்ற யசோதை “எந்தையே! எழில்வெளியே” என்று தன் கைகளைக் கூப்பி கண்நெகிழ்ந்தாள்.

தட்சிணவனத்தில் இருந்து அவள் அன்னை படாலைதேவி வெண்தயிர் நுரைக் கூந்தலில் நீராட்டின் நீர்த்துளிகள் சொட்ட பழுத்த இலைபோல் செம்மஞ்சள் பூத்த முதுமுகத்தில் நிறைந்தெழுந்த சிரிப்புடன் இருள்விலகா சிறுபாதையில் ஓடிவந்தாள். “இன்று விடிந்தது ஈரேழுலகும். என் கண்ணே! உன் தெய்வத்துக்கு இன்று பெயர் அமைகிறது!” என்று கூவியபடி மலரும் கனியும் நிறைந்த கூடையை கொண்டுவந்து அவள் சிற்றில்திண்ணையில் வைத்தாள். “அவன் பெயர்சொல்லி எழும் முதற்குரல் என்னுடையதென்று நான் நேற்று கனவுகண்டேன். வான்நிறைந்த வள்ளல் பெயர்களைச் சொல்லிச் சொல்லி கரிச்சானைத் துயிலெழுப்பி காலையை அறிவிக்க வைத்தேன்” என்று மூச்சிரைத்தாள்.

வெண்பளிங்குக் கொண்டை காதோரம் சரிய மறுபக்கச் சாலையில் ஓடிவந்தாள் நந்தனின் அன்னை வரியாசி தேவி. “என் நிறைமூச்சில் ஒலித்தடங்கும் ஒருபெயரென்ன என்றறியும் பெருநாள் இது! கண்துயிலாது காத்திருந்தேன். கருமை கனிந்து இந்நாள் நிகழ்ந்ததை அறிந்திலேன்!” என்று கூவியபடி பொரிமலரும் தேனுருளையும் நறுநெய்யும் கனிச்சாறும் கொண்ட கூடையுடன் ஓடிவந்து திண்ணையிலமர்ந்தாள். “இன்று என ஒருநாள் இனி நிகழாதென்கிறது என் கைதொட்ட நூல்களெல்லாம். நன்று நிகழ்ந்தது என்று தெய்வங்கள் புள்வடிவாகக் கூவுவதைக் கேட்டு ஓடிவந்தேன்” என்றாள்.

மாந்தளிர் தோரணமும் மலர்க்குவைத் தொங்கல்களும் ஆடிய முற்றத்தில் ஆறுவண்ண மணற்கோலமிட்டு அணிசெய்திருந்தான் நந்தன். இரவெல்லாம் துயிலாது அவனும் அவன் தம்பியர் உபநந்தனும் அபிநந்தனும் சனந்தனும் நந்தனனும் கோகுலத்தின் அத்தனை பாதைகளிலும் யமுனைமணலை கொண்டுவந்து நிறைத்தனர். அத்தனை மரக்கிளைகளிலும் மலர்த்தோரணம் அமைத்தனர். அத்தனை ஆநிரைகளின் கொம்புகளையும் வண்ணக்கிளைகளாக்கினர். அத்தனை பசுக்களும் மணிமாலை சூடின. அத்தனை காளைகளும் சங்குமாலை அணிந்தன. நெற்றிச்சுட்டியும் நெட்டிமாலையும் கால்மணியும் கழுத்தணியும் அணிந்த கன்றுகள் துள்ளிக்குதித்து வால் சுழற்றிச் சுழன்றன.

பட்டுச்சால்வை போர்த்தி தலைகொள்ளா பாகையணிந்து குண்டலம் ஒளிவீச ‘இன்றுநான் இவ்வுலகாள்வோன்!’ என்று வந்தார் யசோதையின் தந்தை சுமுகர். ‘இவ்வுலகில் நிகரற்றோன் இனியெவன்?’ என்று நரைமீசை கோதி நரைகூந்தலில் மலர்சூடி கைக்கோல் கொண்டு பல்லக்கிலேறிவந்தார் நந்தனைப்பெற்ற பர்ஜன்யர். அவர் முன் மலர்க்கோலேந்தி “வழிவிடுங்கள்! வழிவிடுங்கள்! குலமூத்தார் குடிவாழ்த்தி வணங்குங்கள்!” என்று கூவி வந்தனர் ஆயர்கள் எழுவர்.

முதற்சங்கு ஒலித்ததும் கோல்தொட்ட முரசென்றாயிற்று கோகுலம். அன்னையர் எழுந்து மைந்தரை எழுப்பினர். பிள்ளைகள் எழுந்து யமுனைக்கு ஓடி நீர்ப்பெருக்கில் மீன்களெனத் துள்ளி விழுந்தனர். நறுங்கூந்தல் எண்ணையும் உடல்பூச மலர்ப்பொடியுமாக கோகுலத்து இளமங்கையர் நீலக்காலை விரிந்த பாதையில் நீராடச்சென்றனர். அவர்கள் சிரித்து பேசிச்சென்ற சொற்கள் சோலைகளில் எழுந்த கிள்ளைமொழிகளுடன் கலந்தன. யமுனையின் வெண்மணற்பரப்பில் பதிந்த பாதங்கள்மேல் உதிர்ந்தன பொற்புன்னைமலர்த்துகள்கள். ‘இன்று! ஆம் இன்று!’ என அலையடித்து அலையடித்து கரைதழுவிக் குமிழியிட்டோடியது காளிந்தி.

விண்சாமரங்கள் விரிந்தெழுந்தன. வெண்குளிர்மலர்கள் செம்மைகொண்டெரிந்தன. நீலத்தடாகங்கள் விழிமலர பச்சைவனத் தோகைவிரித்து எழுந்தது கோகுலம். ஆயிரம் மலரிதழ்களில் பல்லாயிரம் மணிச்சிறகுகளில் ஒளிவிட்டெழுந்தனர் ஆதித்யர்கள். கோடிச்சிறகுகள் கொண்ட பெரும்பறவை ஒன்று கிழக்கிலெழுந்து விரிந்து நின்றது. ஒளியின் இசையைக் கேட்டன தும்பிகள். ஒளியின் இனிமையை சுவைத்தன முட்டைக்குஞ்சுகள். ஒளியின் வாசத்தில் எழுந்தன கூட்டுப்புழுக்கள். ஒளியின் தண்மையில் சுருண்டன வளைநாகங்கள்.

விரஜபூமியின் ஆயர்குடிகள் தேன் சொட்டு நோக்கிச்செல்லும் எறும்புக்கூட்டங்கள் என மலர்க்கூடைகளும் மதுரக்கலங்களும் ஏந்தி அணிகளும் ஆடைகளும் மணிகளும் மாலைகளும் அணிந்து நந்தனின் இல்லத்தை நோக்கிச் சென்றனர். காற்றிலாடிச் சூழ்ந்த வண்ணங்களில் மூழ்கிச்சுழன்றது சிற்றில். பெண்களின் சிரிப்பொளியால் உள்ளறையின் இருள் விலகியது. அவர்களின் வளைகுலுங்கி சுண்ணச்சுவர் அதிர்ந்தது. “எங்கே எங்கள் குலமுத்து? எங்கே ஆயர் குடிவிளக்கு? எங்கே எம் கனவுகளை ஆளவந்த கள்வன்?”என்றெழுந்தன இளங்குரல்கள்.

மண்ணளந்து விண்ணளந்து மாவெளியளந்து தன்னளந்து தனித்தோன் கையளவு உடல்கொண்டு வந்தமைந்த சிறுதொட்டிலைச்சுற்றிச் சூழ்ந்து நின்று களிவெறியெழுந்து கூவினர் பெண்கள். செம்பஞ்சுக் கைகளின் பொன்னிற அலைகளில் ஆடியாடி உலைந்தது நீலமலர்மொட்டு. வானிலெழுந்தது. வளைந்து அமிழ்ந்து கொதிக்கும் செவ்வுதடுகளால் எற்றி அலைப்புண்டது. நீலவிழிக்கூட்டம் நடுவே ஒரு கருநீலப்பெருவிழியென ஒளி மின்னி நின்றது. களிவெறிகொண்டு சிவந்த வெண்விழிகள் ஒற்றி ஒற்றிச் சிவந்தன சிறு செம்மலர்ப்பாதங்கள். தொட்டகைகள் சிலிர்க்க தொடாத கைகள் தவிக்க கோடித்தவிப்புகளின் பாலாழி நடுவே பைந்நாகப்பாய் மேல் என பட்டுச்சுருள்மேல் கை விரித்து கண்மலர்ந்து கிடந்தது கனிநீலம்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

“பெண்களே, கைவிலக்குங்கள். கண்மைச் சிமிழென என் கைம்மகவை தொட்டுத்தொட்டுக் கரைத்துவிடாதீர்” என்று கைவீசி குரல்கொடுத்தாள் படாலைதேவி. கண்ணேறுகழிக்க கரிகுழைத்துவந்த மூதன்னை வரியாசி கை திகைத்து நிற்க கூவிச்சிரித்து “உன் கருமேக வண்ணனுக்கு சந்தனமும் குங்குமமும் கரைத்து கண்ணேற்றுக் குறியிடுக” என்றார்கள் ஆயர்குலப்பெண்கள். ”அவனுக்குப் பசிக்கும் நேரம் இது பெண்களே, சற்று விலகுங்கள்” என்றாள் யசோதை. ”வந்த நாள்முதல் அவன் அருந்தியது உன் முலையல்லவா? இங்கு ஆயர்குடியில் அவனுக்காக ஊறும் முலைகளில் அவன் அருவியாடலாமே” என்றாள் ஆயர்முதுமகள் அனசூயை.

திண்ணையில் அமர்ந்திருந்த நந்தன் “ஒருகணமும் ஓயாமல் சிரிப்பதற்கு என் சிறுமைந்தன் அங்கே என்னதான் செய்கிறான்?” என்றான். ஆயர்குலப்பாடகன் மந்தன் அவனருகே குனிந்து “அன்னை அமுதுண்டு அறிதுயிலில் இருக்கிறான் அனைத்தையும் ஆட்டுவிக்கும் சிறுக்கன். அவனைச் சூழ்ந்து நின்று கடல்மொண்டு நீராடிக் களிக்கின்றனர் பெண்கள்” என்று சொல்லி நகைத்தான். நகைமுகங்கள் சூழ்ந்து மகிழ்வென்று மட்டுமே பொருளாகும் சொற்களை கூவிக்கொண்டிருந்த கோகுலத்தின் மீது இளவெயிலில் சிறகடித்து துள்ளிச்சுழன்றனர் பெயரிலாத பிள்ளைகள் ஆயிரம்பேர். அவர்களை நோக்கி விழிமலர்ந்து கை விரித்து உதடுநீண்டு புன்னகைத்து எழ முயன்று தன் உடலுணர்ந்து அழுதது ஆயர்ச்சிறு மகவு.

மைந்தனின் அழுகை ஒலிகேட்டு “என்ன? ஏன் அழுகிறான் என் தலைவன்?” என்று பதறி உள்ளறைக்குள் சென்றான் நந்தன். முலை தவித்து முந்திவந்த அன்னையர் ஐவர் அவனை அள்ளி அணைத்து மார்போடு சேர்த்து “என்ன வேண்டும்? மன்னனுக்கில்லாத ஏதுண்டு இவ்வுலகில்? என் செல்வனுக்கு என்ன வேண்டும்?” என்றனர். முட்டி பிடித்த சிறுகைகளை விரைத்து கால்களை உதைத்து காற்றில் உடல் வளைத்து எம்பி எம்பி அழுதான் ஆயர்குலத்து மைந்தன். “என்னிடம் கொடுங்கள்” என்று ஓடிவந்து அவனை வாங்கி முலைசேர்த்தாள் யசோதை. முகம் திருப்பி தலையசைத்து கால்களை உதைத்து அழும் குழந்தையை சூழ்ந்து கொண்டது ஆய்ச்சியர்கூட்டம்.

“விலகுங்கள்… என் மைந்தன் மேல் காற்றும் ஒளியும் படட்டும்” என்று கூவினாள் படாலை. மயிற்பீலி விசிறி கொண்டு வந்து வீசினாள் வரியாசி. அழுகை வலுத்து வலுத்துச்சென்றபோது கோகுலமே தவித்துச் சூழ்ந்து நின்றது. சிற்றெறும்பு கடித்ததோ? சிறுக்கியரின் நகம்தான் பட்டதோ? சிறுவயிறு வலித்ததோ? சீறும் விழிக்கோள் கொண்டதோ என்று ஒவ்வொரு வாயும் ஒவ்வொன்றைச் சொல்லின. “அன்னை அணைத்தும் அடங்காத அழுகை உண்டோடி? அவனுக்கென்ன வேண்டும் என்று அவனே அறிவான். கண்ணீர் விட்டு காத்திருப்பதன்றி நான் செய்வதேது?” என்று தவித்துச் சொன்னாள் யசோதை.

சோலைக் கிளிக்கூட்டம் மணிவிளைந்த வயலில் இறங்கியது போல யமுனைக்கரை பாதையினூடாக வந்தது இளமங்கைக்குழாம் ஒன்று. “யார் அவர்கள், இத்தனை பேர்?” என்றாள் முதுஆய்ச்சி ஒருத்தி. “பர்சானபுரியின் இளமங்கையர். மைந்தனைப்பார்க்க அவர்களில் ஒருத்தி அன்று வந்திருந்தாள்” என்றாள் இளஆய்ச்சி. “மலர்க்கூட்டம் மிதந்துவரும் மலைப்புதுவெள்ளம் போலிருக்கிறார்கள்” என்றான் ஆயர்க்குடிப்பாவலன் மந்தன். “இல்லை விண்மீன் கூட்டம் விழுந்த நதிப்பெருக்கோ?” என்றான் அவன் இணைப்பாடகன் உபமந்தன்.

லலிதையும் விசாகையும் சுசித்ரையும் சம்பகலதையும் ரங்கதேவியும் சுதேவியும் இந்துலேகையும் சிரித்தபடி மூச்சிரைக்க முதலில் ஓடிவந்தனர். பின்னால் மண்டலியும் மணிகுண்டலையும் மாதலியும் சந்திரலலிதையும் மாதவியும் மதனாலசையும் மஞ்சுமேதையும் சசிகலையும் சுமாத்யையும் மதுரசேனையும் கமலையும் கமலலதிகையும் மாதுரியும் சந்திரிகையும் பிரேமமஞ்சரியும் மஞ்சுகேசியும் வண்ணப்பட்டாடைகள் காற்றில் சுழன்று பறக்க காற்றிலேறி வரும் வண்ணத்துப்பூச்சிக்கூட்டம் போல ஓடி வந்தனர்.

லசிகையும் காதம்பரியும் சசிமுகியும் சந்திரலேகையும் பிரியம்வதையும் மதோன்மதையும் சூழ கனவிலெழுந்தவள் போல வந்தவள் பெயர் ராதை என்றான் நந்தன். பர்சானபுரியின் ரிஷபானுவின் செல்வி. “காணுமெதையும் காணாத கண்கள். காணாதவற்றை எல்லாம் கண்டறியும் கண்கள். அவள் கண்களறிபவை கண்களுக்குரியவை அல்ல” என்றான் மந்தன். “யாழ்தேரும் விரலுடன் பிறந்தமையால் நான் வாழ்த்தப்பட்டேன். சொல்தேரும் நாவு கொண்டிருப்பதனால் நான் முழுமை பெற்றேன். கண்ணே, என் சொல்லே, கருத்தே, நான் கற்ற கவியே, இக்கணத்தை இப்புவியின் அழியாக் காலத்தில் நிறுத்து!” என்று கூவினான்.

மதுமாவதியும் வாசந்தியும் ரத்னாவலியும் மணிமதியும் கஸ்தூரியும் சிந்தூரியும் சந்திரநவதியும் மாதிரையும் பின்னால் வந்தனர். மலரொழுகும் நீர்ப்பெருக்கில் பின் தொடரும் வண்ணநிழல்கள். “அவள் கால்படா மண் தவிக்கிறது. அவள் கைபடாத மலர்க்கிளைகள் தவிக்கின்றன. அவள் விழிபடாத முகங்கள் ஏங்குகின்றன. விழியறியா வனவெளியில் பூத்த தனிமலரோ அவள் புன்னகை?” என்றான் மந்தன். “தானன்றி பிறரில்லா பாலைவெறும் விரிவில் நடக்கிறாள். ஒற்றைத் தனிப்பறவை கீழ்வானில் கூடணையச்செல்வதுபோலச் செல்கிறாள். பிரேமையெனும் ஒரு சொல்லை மானுட உருவம் கொள்ளச்செய்தான் மதனன். தன் தொழிலில் முழுமை கொண்டு எரிந்தணைந்து உருவழிந்தான்.”

“என்னவென்று தெரியவில்லை பெண்களே. இத்தனை நேரம் அறிந்தறிந்து விழிவளர்ந்தான். இப்போது ஓயாது கலுழ்கின்றான். அவன் தேடுவதெதை என்று தெரியாமல் தவிக்கின்றோம்” என்றாள் வரியாசி. லலிதை “இவள் கைதொட்டால் அவன் குளிர்வான் அன்னையே” என்றாள். திகைத்து நோக்கிய வரியாசியை நோக்கி “நேற்றுமுதல் இவள் தன் பெயர் தேவகி என்கிறாள். விழிநோக்கி பேசாமல் நிலம் நோக்கி அமர்ந்திருக்கிறாள்” என்றாள். “நேற்று அந்தி மயங்கியதை இன்று காலை விடிந்தது என்று சொல்லி மலர்சூடிக் கிளம்பினாள். நாங்கள் தோழியர் அவளை அணைத்துத் தடுத்து இப்போது கொண்டுவந்து சேர்த்திருக்கிறோம்” என்றாள் சுசித்ரை.

ஒரு சொல்லும் கேளாதவளாய் ஒரு முகமும் அறியாதவளாய் ராதை உள்ளே சென்று யசோதை அருகே அமர்ந்து கைநீட்டி மைந்தனை வாங்கிக்கொண்டாள். விக்கியணைந்த அழுகையுடன் மைந்தன் புரண்டு அவள் மேலாடையை தன் கைகளால் பற்றிக்கொண்டான். “அய்யோடி! இதென்ன நகைப்பு? இவளுக்காகத்தான் இவ்வழுகையா?” என்றாள் ஆய்ச்சியரில் ஒருத்தி.

“பிள்ளையைக் கொடு பெண்ணே” என்று படாலைதேவி அவனை வாங்க அவள் நெற்றிக்கூந்தல் முடியைப்பற்றிக்கொண்டு அவளிடம் வந்தான். அவள் சிரித்து தலைகுனிய “கூந்தலிழை பற்ற கற்றுக்கொடுக்கவேண்டியதில்லை கள்வனுக்கு” என்றாள் இன்னொரு ஆய்ச்சி. முகம்சிணுங்கி கால்நெளித்த மைந்தனை “அய்யய்யோ… இல்லை… இல்லை என் செல்லமே. நீ உன் அரசியிடமே இரு என் அரசே” என ராதையிடமே திருப்பியளித்து சிரித்தாள் மூதன்னை.

விழிகளாலேயே முத்தமிட்டு முத்தமிட்டு முத்தங்களே கணங்களாகி காலமாகி முடிவிலியாகி முன் சென்றொடுங்கிய முள்முனையில் அமர்ந்திருந்தாள் ராதை. அவளைச்சுற்றி பெயர்சூட்டு விழாமங்கலம் நிகழ்ந்துகொண்டிருந்தது. “ஆயர்குடிப்பிறந்த இவன் பெயர் நந்தகுமாரன்” என்றார் பர்ஜன்யர். “என்பெயரை இதோ அடைந்தேன்” என்று சொல்லி சிறகதிரச் சுழன்று சென்றான் பெயரிலியாக வந்த மைந்தர்களில் ஒருவன். “இல்லை, என் மைந்தனுக்கு நான் அபிஜித் என்று பெயரிடுவேன்” என்றாள் வரியாசி கைதூக்கி. “ஆம் அப்பெயர் எனக்கு! அப்பெயர் எனக்கு” என்று கூவி அதைச் சூடிச்சென்றான் காற்றுவெளியில் வந்த இன்னொரு மைந்தன்.

அனிஷனை, வனவிகாரியை, வங்கனை, வங்க விகாரியை, வனவாரியை, விரஜனை, தாமோதரனை, தர்சனை, துருபதனை, கனசியாமனை, கிரிதரனை, கோபாலனை, கோபேஸ்வரனை, கோவிந்தனை, ஹரியை, ஹரிஹரனை, ஜகமோகனனை, ஜஸ்பாலனை, கேசவனை, கிசோரகனை, மாதவனை, மதுசூதனனை, முரளிதரனை, முகுந்தனை, மனமோகனனை, மகேசனை, மனோகரனை, முரஹரியை, நந்தனனை, ரசவிஹாரியை, ரசேஸ்வரனை, சாகேதனை, ஸ்ரீகாந்தனை, சித்தாந்தனை, சியாமசுந்தரனை, வனமாலியை, வனஸ்ரீதரனை, வசுபதியை, வாசுதேவனை, விரஜலாலனை, விரஜமோகனனை, ஜயனை, யதுநாதனை, யதுநந்தனனை, யதுராஜனை, யதுவீரனை என ஆயிரம் பெயர்களை அள்ளி அள்ளிச் சூடிச்சென்றனர் விண்ணில் வந்த மைந்தர்.

மழைவிழும் மலைப்பாறை போல ஒளிர்ந்து பொழியும் பெயர்களால் மூழ்கடிக்கப்பட்டு பெயர்களுக்கு அப்பால் இருந்துகொண்டிருந்தான் கரியோன். “எத்தனை பெயர்களடி? இத்தனை பெயரிட்டழைத்தால் அவன் எவரை நோக்கி எதை ஏற்பான்?” என்றாள் மூதன்னை ஒருத்தி. “கன்னங்கரியோன் என்பதைக் காட்டிலும் இவனுக்குப் பெயர் உண்டோடி? இவனை கிருஷ்ணன் என்கிறேன்” என்று சொல்லி யசோதை அவனை அள்ளி தன் நெஞ்சோடணைத்துக்கொண்டாள். இருகைகளையும் கால்களையும் அசைத்து அள்ளத்துடிப்பவன் போல எம்பிய மைந்தனின் நீலமலர்முகத்தின் சிறுசெவ்விதழ்கள் நீண்டு எழுந்தது சிரிப்பு. “சிரிக்கிறான்! தெய்வங்களே, மூதாதையரே, அவன் பெயரென்ன என்று அவனே சொல்லிவிட்டான்” என்று யசோதை கூவினாள்.

“மைந்தர்கள் எவருக்கும் பெயரில்லை மாதரசியே. அவை அன்னையரும் தந்தையரும் தங்கள் பேரன்புக்குச் சூட்டிக்கொள்ளும் பெயர்கள் மட்டுமே” என்றான் யாழ் மீட்டிய மந்தன். மைந்தனை தந்தை வழி மூதாதை பர்ஜன்யரின் மடியில் அமர்த்தி தாய்வழி மூதாதை சுமுகர் தளிர்வெற்றிலை மூன்றை ஒன்றுமேல் ஒன்றடுக்கி அவன் இளங்காதில் அமைத்து உவகையில் நெளிந்த வாய்குவித்து “கிருஷ்ணா! கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று அழைத்தார். விரிந்த மணிவிழிகள் அவ்வொலி கேட்டு சரிந்து குவிய ஆயர்குடிகளனைவரும் கைகள் கொட்டி “கரியோய்! கருமணியே! கருவெளியின் உந்திப்பெருஞ்சுழியே!” என்று கூவி ஆர்த்தனர்.

மூதன்னையர் வரியாசியும் படாலையும் மைந்தனை அள்ளி முகம்சேர்த்து “கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று சொல்லி மூச்சிழுத்து மைந்தனின் மெல்லுடலில் தவழ்ந்த கருவறை வாசத்தை கனவுகளில் நிறைத்துக்கொண்டனர். நடுங்கும் கைகளில் மைந்தனை வாங்கிய பர்ஜன்யர் அழிவின்மை என்பதோர் அலைவந்து தன்னை அறைவதை உணர்ந்து உடல்நடுங்கினார். “எனக்கு… என் கைகளுக்கு” என்று ஒவ்வொருவரும் முட்டி கைநீட்டி வாங்கி முகம் சேர்த்து வானளந்தனர்.

பித்தெழுந்த பெருமௌனத்துடன் அமர்ந்திருந்த ராதையின் மடியில் லலிதை மைந்தனை வைத்தாள். “உன் மைந்தனடி தேவகி” என்றாள். குனிந்து தன் மடியில் விரிந்து கிடந்த மணியொளியை நோக்கினாள் ராதை. கண்நீலப்புள்ளிகள் மட்டுமே ஒன்றாகி ஒரு கண்ணாகிக் கிடந்தது என்றுணர்ந்து அள்ளி தன் முகம் சேர்த்து ஆவி உருகிக் குளிர்ந்து சொட்டும் அகக்குரலில் “கண்ணா!” என்றழைத்தாள். “ஆம் அதுவே நான்” என்று அசைவிழந்து அவள் கூந்தலிழை பற்றியது அது.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 8