கமல்- முடிவிலா முகங்கள்

kamal-60

கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் ஆடிக்கொண்டிருந்தார். உண்ணாயி வாரியர் எழுதிய கதகளி நாடகம், நளதமயந்தி. நளன் தமயந்திக்கு அன்னப்பறவையை தூதனுப்பும் காட்சி. அன்னத்தை மென்மையாக, மிகமிக மென்மையாக தொட்டு எடுக்கிறான். வருடுகிறான். இதயத்தோடு சேர்த்து வைக்கிறான். உருகுகிறான், சிலிர்க்கிறான்,கொஞ்சுகிறான், அழுகிறான். பறவை திரும்பத்திரும்ப அவனிடமே வருகிறது. மூச்சுத்திணற ஓடிப்போய் எடுக்கிறான். ஏன் போகவில்லை என்ற பதற்றம், நல்லவேளை போகவில்லை என்ற ஆறுதல்

விழித்துக்கொண்டேன். பதினெட்டு வயதில் நான் திருவட்டாறு ஆலயத்தின் களியரங்கில் பார்த்த கதகளி துல்லியமாக நினைவுக்கு வந்தது. அதை எண்ணியபடி இருளில் கிடந்தேன்.இன்னொருநினைவு. நான் என் என் பிற்கால மனைவியான அருண்மொழிக்கு காதலைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். முதற் காதல்கடிதம். அதை எழுத நாலைந்துநாட்கள் ஆயிற்று. எழுதிக்கிழித்தவை பெரியநாவல் அளவுக்கு வரும். அதை முடித்து ஒட்டுவதற்கே ஒருநாள் ஆகியது. இன்னொருநாள் முழுக்க அதை தபாலில் சேர்ப்பதா வேண்டாமா என்று தயங்கி தெருக்களில் அலைந்தேன். துணிந்து பெட்டியில் போட்டபின் அதை திரும்ப எடுக்கமுடியுமா என்று தபால் அலுவலகம் தோறும் சென்று கெஞ்சினேன். அது போய்விட்டது என்று சொல்லப்பட்டதும் ஆறுதல். கூடவே படபடப்பு.

கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர்
கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர்

வியப்பாக இருந்தது. அதைத்தானே கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் நளனாக வந்து நடித்தார்? எவ்வளவு பழைய கதகளிப்பாடல் அது. எத்தனையோ நடிகர்கள் அந்த அன்னப்பறவைக் காட்சியை நடித்திருகிறார்கள். தலைமுறை தலைமுறையாக மலையாளியின் காதலுணர்ச்சியை அந்த வடிவில் மேடையில் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

அப்போது தோன்றியது மகாநடிகர்கள் அவர்களின் காலகட்டத்தின் பொதுவான உணர்ச்சியை தங்கள் உடல்களில் பிரதிபலிக்கிறார்கள் என்று. அவர்கள் நடிக்கவில்லை, நாமெல்லாம் சேர்ந்து அவர்களை நடிக்கவைக்கிறோம். அதில் நம்மை பார்த்துக்கொள்கிறோம்.

அவர்கள் தனிமனிதர்கள் அல்ல. அவர்களின் உடல் அவர்களுடையதே அல்ல. அவர்கள் வழியாக அச்சமூகம் , அந்தப் பண்பாடு தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.காற்றுமானியில் இருக்கும் சேவல்போன்றவர்கள் பெரியநடிகர்கள். அவர்கள் திரும்புவது அவர்களின் சொந்த விருப்பப்படி அல்ல. பெருக்கெடுத்தோடும் காற்றுதான் அவர்களைத் திருப்புகிறது.அந்தக்காற்றை வானமும் கடலும் சூரியனும் சேர்ந்து தீர்மானிக்கின்றன.

சலீல் சௌதுரியின் பழைய பாடல்களை யூடியூபில் கேட்கப்போய் எழுபதுகளில் கமலஹாசன் நடித்த பழைய மலையாளப்பாடல்களைப் பார்க்க ஆரம்பித்தேன். பதினெட்டு பத்தொன்பது வயது இருக்கும். ஒல்லியான நீளமுகம். உணர்ச்சி நிறைந்த பெரிய கண்கள். ததும்பிக்கொண்டே இருக்கிறார். நடனத்தில், நடையில், ஏன் அமர்ந்திருக்கும்போதுகூட ஒரு துள்ளல். அது கமலஹாசனின் சொந்த இயல்பு மட்டும் அல்ல. அந்தக்காலகட்டத்தின் இயல்பு அது. ஜான் டிரவோல்ட்டா அப்படித்தான் இருந்தார். ரிஷிகபூர் அப்படித்தான் இருந்தார்.

எழுபதுகளின் இறுதியில் இந்திய இளைஞன் அடைந்த ஒருவகைச் சுதந்திரம் அவர்களின் அசைவில் இருந்தது. அதை பொறுப்பின்மையின் விளைவான கொண்டாட்டம் என்று சொல்வேன். முந்தையதலைமுறைகளுக்கு அரசியல்கனவுகள் இருந்தன. காந்தியும் பகத்சிங்கும் ஸ்டாலினும் மாவோவும் முதல் தலைமுறைக்கு ஆதர்சங்கள். சே குவேராவும் பாப்மார்லியும் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டிகள். பீட் தலைமுறை அது எனலாம்

எல்விஸ் பிரெஸ்லி
எல்விஸ் பிரெஸ்லி

அதற்குப்பின் ஒரு தலைமுறை உருவாகி வந்துகொண்டிருந்தது. அரசியல்கனவுகளின் சுமைகள் இல்லாமல் வாழ்க்கையை உற்சாகமாக கொண்டாடத் துடித்த தலைமுறை. அதை நான் டிஸ்கோ தலைமுறை என்பேன். உயரமான செருப்பு. காதைமறைக்கும் நீளமான முடி. ப வடிவ மீசை.ஆட்டுக்காது காலர்கொண்ட இறுக்கமான சட்டை. பெல்பாட்டம் பாண்ட். சட்டையில் முதல் மூன்று பித்தான்களை திறந்துவிட்டு எதைப்பற்றியும் கவலையில்லை என்றபாவனையில் நடை. அதுதான் அந்தக்கமல்.

எழுபதுகளில் கமலஹாசன் நடித்த பாடல்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். பெண்களைக் காணும்போது கண்களில் என்ன ஒரு ஒளி. வெட்கப்படும் ஷீலாவை ஓரக்கண்ணால் பார்க்கையில் முகமே பரபரக்கிறது. கண்களில் வேட்கை வழிகிறது. [ஐ.வி.சசி இயக்கத்தில் 1978ல் வெளிவந்த ஈற்றா ] பாண்ட் போட்ட ஸரீனா வகாபை நெருங்கும்போது கால்கள் பின்னுகின்றன. [என்.சங்கரன் நாயர் இயக்கத்தில் 1978ல் வெளிவந்த மதனோத்ஸ்வம்].

அந்தத் தலைமுறையின் பிரச்சினை- ஆண்பெண் உறவுதான். பழைய வகை ஆண்பெண் உறவுகள் காலாவதியாகிவிட்டிருந்தன. புதியவகை உறவுகள் உருவாகி வரவுமில்லை. அடக்கமான, நாணமான பெண் சலிப்பூட்டினாள். துடிப்பான,சுதந்திரமான பெண் பயமூட்டினாள். இரண்டுக்கும் நடுவே ஊசலாடும் கதாபாத்திரங்களை பல வண்ணங்களில் கமலஹாசன் நடித்தார். நினைவில் சினிமாக்களாக எழுகின்றன.

ஜான் டிரவோல்ட்டா
ஜான் டிரவோல்ட்டா

ஆனால் ஏறக்குறைய அதை பலர் நடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே அந்த பத்தாண்டுகளுக்குள் காலாவதியானார்கள். ரிஷிகபூரை மும்பையின் நட்சத்திர விடுதி ஒன்றில் எடைமிகுந்த களைத்த முதியவராகப் பார்த்தேன். ஜான் டிரவோல்டா அப்படியே காணாமலாகி நீண்ட இடைவேளைக்குப்பின் வேறு ஒருவராகத் திரும்பி வந்தார். ஆனால் கமல் மிக இயல்பாக உருமாறி அடுத்த காலகட்டத்துக்கு வந்தார். அறிவிலும் ஆற்றலிலும் பலவீனனாக இருந்தும் வாழ்க்கையைத் திடமாக எதிர்கொள்ளும் பதினாறு வயதினிலே சப்பாணி அவரில் நிகழ்ந்தான்.

அதன்பின் கமலஹாசன் தென்னிந்தியாவின் ரசனைக்கு இயைய தன்னை உருமாற்றிக்கொண்டே வந்திருக்கிறார். சப்பாணி ஓர் எல்லை என்றால் சமூகப்புறக்கணிப்பின் சீற்றம் நிறைந்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் கதாநாயகன் ஓர் எல்லை. சிகப்பு ரோஜாக்களின் வன்மம் கொண்ட கொலைகாரன் இன்னொரு எல்லை. ஆனால் அந்த முகங்களெல்லாம் துடிப்பான இளங்காதலன் என்ற அவரது மையப்படிமம் மீதுதான் அமைந்தன.

அந்த பிம்பம் உருவாக்கப்பட்டது என்பதை விட உருவாகி வந்தது என்பதே பொருத்தம். நகைச்சுவை உணர்வு, இளமைத்துடிப்பு போன்ற கமலஹாசனின் தனிப்பட்ட குணாதிசயங்களும் அவரது நடனத்திறன், அழகிய நாகரீகத் தோற்றம் போன்றவையும் அந்த பிம்ப உருவாக்கத்தில் முக்கியமான பங்கு வகித்தன. ஆனால் தொடர்ந்து ரசிகர்களின் எதிர்வினைகளுக்கேற்ப அவரது அந்தக்கதாபாத்திரம் மாற்றியமைக்கப்பட்டு மேலும் மேலும் கூராக்கப்பட்டது.

madanolsavam [மதனோத்ஸ்வம்]
இப்படிச் சொல்லலாம். காமிரா நம் கையில் இருந்து நம்மால் இயக்கப்பட்டாலும் அதை எந்தக் காட்சியை நோக்கி குறிவைக்கிறோமோ அக்காட்சியின் தொலைவும் இயல்பும்தான் காமிராவின் ஃபோகஸை தீர்மானிக்கின்றன என்பதுபோலத்தான். கமலஹாசன் என்னும் நடிகரின் அனைத்து இயல்புகளும் விரிவான நோக்கில் தென்னிந்தியச் சமூகத்தால்தான் தீர்மானிக்கப்பட்டன. எது மக்களால் ஏற்கப்பட்டதோ அது மேலும் சேர்க்கப்பட்டது. அவர் உருவாகிக்கொண்டே இருந்தார்.

கமலஹாசன் நடித்த காதலர் கதாபாத்திரங்களைப் பார்க்கையில் நம் மரபில் உள்ள குறும்புக்காரனாகிய கிருஷ்ணன் அதில் உள்ளதைக் காணலாம். அதேயளவுக்கு எல்விஸ் பிரெஸ்லியையும் காணமுடியும். பல பிம்பங்களைக் கலந்து கலந்து அதை உருவாக்கிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.ரசனை மாற மாற அதை மாற்றிக்கொண்டே இருந்தார்கள்.

மெதுவாக கமலஹாசன் ஒரு நட்சத்திரமாக உருவானார். அவரை நட்சத்திரமும் நடிகரும் கலந்த கலவை என்று சொல்லலாம். நட்சத்திரத்துக்குரிய இயல்பு என்பது பெருந்திரளான மக்களின் விருப்பத்துக்குரியவராக இருப்பதும் அவர்களின் ரசனைக்கு முற்றிலும் உகந்த முறையில் மாறிக்கொள்வதும்தான். கமல்ஹாசன் என்னும் நட்சத்திரம் தமிழின் ஒரு நட்சத்திரத்திற்கு அவசியமான முகங்களை எல்லாம் அணிந்துகொண்டது. சாகசக்காரன், நீதிக்காகப் போராடுபவன், காதலன், குடும்பத்தின்மேல் பற்றுள்ளவன் ஆகிய குணங்களின் கலவை.

16-vayathinile
எந்த சூழலிலும் எந்த நட்சத்திரபிம்பமும் சுயம்புவாக உருவாவதில்லை. ஏற்கனவே இருந்த ஒரு நட்சத்திரத்தின் பிம்பத்துடன் புதியவை சேர்க்கப்பட்டுதான் புதியநட்சத்திரம் உருவாகிறது. கமலஹாசனில் சிவாஜியின் அம்சம் இருந்தது. சிவாஜியை கிருஷ்ணனையும் எல்விஸ் பிரெஸ்லியையும் ஜான் டிரவோல்டாவையும் நோக்கிக் கொண்டுசென்றபோது உருவான வடிவம் போலிருக்கிறது. அதில் கமலஹாசனின் தனிப்பட்ட ஆளுமையும் அவர் நடித்த காலகட்டத்தின் அரசியலும் எல்லாம் கலந்துள்ளன..

அந்த நட்சத்திர உருவகத்திற்குள் அவரது நடிகன் வெளிப்படத் துடித்துக்கொண்டே இருந்திருக்கிறான். ராஜபார்வை,மூன்றாம்பிறை, மகாநதி என அவன் விதவிதமாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறான். அந்த நடிகனின் பிம்பம் நட்சத்திர பிம்பத்தின் மறுபக்கமாக தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. அவை இரண்டும் கலந்து இன்றைய கமலஹாசனை உருவாக்கியிருக்கின்றன

kamal_haasan

எந்தப் பெரிய நடிகரையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் ஒரு துணுக்குறல் ஏற்படும். அவர் ஒரு தனிமனிதரல்ல என்று தோன்றும். அவர் நடித்த அத்தனைகதாபாத்திரங்களும் அவரில் எஞ்சியிருக்கும். கமலஹாசனை நேரில் சந்திக்கையிலேயே ஒரு மனிதரை அல்ல ஒரு மனிதத் திரளை சந்தித்த அதிர்ச்சி ஏற்படும். எத்தனை முகங்கள். காதல், ஏக்கம், துயரம், வன்மம், உறுதி என எத்தனை உணர்ச்சிகள். திபெத்திய அவலோகிதேஸ்வர புத்தரைப்போல பல்லாயிரம் கரங்கள்,பல்லாயிரம் முகங்கள்.

இந்த அத்தனை முகங்களும் ஒரு நடிகருடையவை அல்ல என்றுதான் தொகுத்துக்கொள்கிறேன். அவை சென்ற நாற்பதாண்டுக்கால தென்னிந்தியச் சமூகம் உருவாக்கி எடுத்த முகங்கள். தென்னிந்தியச் சமூகத்தின் உணர்ச்சிகள் விதவிதமாகத் திரண்டு உருவானவை . ‘மதனோத்ஸ்வ’த்தில் மாடப்புறாவே வா என பாடிய மெலிந்த இளைஞன் முதல் ‘விஸ்வரூபத்தி’ல் தீவிரவாதத்தின் முன் திகைத்து நிற்கும் நாயகன் வரை அவை வெவ்வேறு காலகட்டங்களை பிரதிபலிக்கின்றன.

இப்படிச் சொல்வேன். தென்னிந்தியச் சமூகத்தை நோக்கி வைக்கப்பட்ட ஒரு பெரிய கண்ணாடி. அதில் ஆயிரக்கணக்கான முகங்கள் பிரதிபலித்துச் சென்றிருக்கின்றன. அந்த முகங்களை தொகுத்து தென்னகத்தின் அரைநூற்றாண்டுக்கால பண்பாட்டுவரலாற்றையே எழுதிவிடமுடியும்.

[கமல்ஹாசனுக்கு 7-11-2014 அன்று 60 வயதானதை ஒட்டி குமுதம் வெளியிட்ட கமல் 60 இதழில் வெளிவந்த கட்டுரை ]

முந்தைய கட்டுரைவெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26