குழந்தையின் கண்கள்

ilavenil_2251896f

ஒருமுறை சாதாரணமான உரையாடலில் புனைவெழுத்தாளர் ஒருவர் சொன்னார், ‘நான் உவமைகளே எழுதுவதில்லை. ஏனென்றால் உலகில் உவமைகள் முடிந்துவிட்டன’

கொஞ்சநேரம் மயான அமைதி. ஒருவர் ஈனஸ்வரத்தில் “எப்ப?’ என்றார்.

புனைவெழுத்தாளர் சீறி “மனுஷன் உண்டான நால்முதல் கவிதைன்னு என்னத்தையோ சொல்லிட்டோ எழுதிட்டோதான் இருக்கான். கவிதைன்னா உவமைதான். எல்லாத்தையும் சொல்லி முடிச்சாச்சு. இனிமே சொல்றதுக்கு ஒண்ணுமில்லை’

‘நமக்குத்தெரியாம எங்கியாவது புதுசா உவமைகள் உண்டாகி வரலாமில்லியா?’ என்றார் இலக்கியம் அறியாத நண்பர்

இலக்கியமறிந்தவரும் நக்கல் பேர்வழியுமான நண்பர் “ உலகத்திலே இதுவரை எங்கயாச்சும் உவமைகளை தடைபண்ணியிருக்காங்களா? இல்ல,தெரிஞ்சுக்க கேட்டேன்” என்றார்

“தடைபண்ணினா அப்றம் உவமைகள் பெருகிட்டே இருக்கும்” என்றார் ஒருவர்

வயதான மரபுக்கவிஞர் “இந்த உலகத்திலே மனுஷன் அதிகமா உற்பத்தி பண்ணிட்டிருக்கிற ஒண்ணுன்னா அது உவமைதான். நம்மைச்சுத்தி அது நடந்துகிட்டே இருக்கு. உவமை இல்லேன்னா நம்மால பேசவே முடியாது”

“ஏன் பேசமுடியாது? நான் எழுதறேனே?’

“நீங்க எழுதறீங்க பாஸ். பேசலை… அந்த சமயத்திலே சரியா ஒருவிஷயத்தச் சொலணுமானா சமயங்களிலே உவமைதான் கைகொடுக்கும். இப்ப வாரப்ப ஒரு பொம்புள ஆயிரம் செறகடிச்சாலும் தென்னை பறக்குமான்னு சொல்றா. அப்ப அவளுக்கு தோணின உவமை அது”

புனைவெழுத்தாளர் ஏதோ சொல்ல வருவதற்குள் “இப்ப நாம வெளியே போறம். திருவனந்தபுரத்தை ஒரு சுத்து சுத்திவாறோம். பத்து புது உவமையாவது காதில விழும். பந்தயம் வைப்பமா?’ என்றார் கவிஞர்

புனைவெழுத்தாளர் “நான் பொதுவா கவனிக்கிறதில்ல” என்றார்

உடனே ஆளாளுக்கு உவமைகளைச் சொல்லத் தொடங்கினர். ”காயப்போட்ட சட்டையிலே காற்று நுழைஞ்சமாதிரி இப்ப கணேஷ்குமாருக்கு மந்திரிபதவி கிடைச்சிருக்கு” என்ற வரியை ஒருவர் சொல்லி சிரித்தார்

’ஆண்டனா கம்பி மாதிரி விலா எலும்பு தெரிய’ ஏழைகள் மெலிவதைப்பற்றி ஒருவர் சொன்னார்.

நான் ஞானக்கூத்தனின் உவமைகளைப்பற்றிச் சொன்னேன். அவரது உவமைகள் பலகோணங்களில் விவாதிக்கப்பட்டவை. மரபான கோணங்களில் இருந்துவிலகி செல்லும் உவமைகள் அவை

மிகச்சரியாக ஒரு காட்சிச்சித்திரத்தை அளிப்பதற்கு, காட்சிரீதியாக ஓர் அதிர்ச்சியை அளித்து ஒன்றைக் கவனிக்கவைப்பதற்கு, வழக்கமில்லாத ஓர் உணர்ச்சியை ஒரு பொருள்மேல் ஏற்றுவதற்கு அவருக்கு புதிய உவமைகள் தேவைப்படுகின்றன

ஆனால் எப்போதும் அவருள் உள்ள குழந்தைதான் உவமைகளைக் கண்டுபிடிக்கிறது. அவரது உவமைகளை ஏழு எட்டு வயதான என் மகனிடம் சொல்லியிருக்கிறேன். அவன் முகம்மலர்வதை காண்பேன். குழந்தைகள் எளிதில் அவற்றை அடையாளம் கண்டுகொளும்

அணில் பதுங்கி வரும்போது அவற்றின் முதுகிலுள்ள கோடு மூன்று விரல்களாக மாறி அதை பிடித்து பின்னால் இழுப்பதையும் திருட்டுக்கொடுத்த வீட்டின் மாடிப்படி கால்சட்டைக்குள் விடப்பட்ட கைபோல உள்ளேயே இருப்பதையும் குழந்தைகள்தான் அதிகம் உணரமுடியும்

புது உவமைகள் உருவாகாமலிருக்க குழந்தைகள் பிறந்து வராமலிருக்கவேண்டும். அவை பார்ப்பது நாம் பார்க்கும் பழகிய உலகம் அல்ல. புத்தம் புதிய உலகம். குழந்தைகள் கவிஞர்கள் மனதில் என்றும் வாழ்கின்றன

468195506_c755ebbf28_squirrel

மிளகாய்ப் பழங்கள் மாடியில்

மிளகாய்ப் பழங்கள் மாடியில் உலர்ந்தன
ஆசை மிகுந்த அணிலொன்று வந்தது
பழங்களில் ஒன்றைப் பற்றி இழுத்து
கடித்துக் கடித்துப் பார்த்துத் திகைத்தது.
முதுகுக் கோடுகள் விரல்களாய் மாறித்
தடுத்திழுத்து நிறுத்திய போதும்

ஒவ்வொன்றாகக் கடித்துத் திகைக்க
உலவைப் பழங்கள் எங்கும் சிதறின
ஜன்னலை விட்டுத் திரும்பினேன்
எது நடந்தாலும் கதிருக்குக் கீழென்று.

**

திருட்டுக் கொடுத்த வீடு

கால் சட்டைப்பைக்குள்
நுழைத்துக் கொண்ட கை மாதிரி
மாடிப்படிக் கட்டுமானம்
தெரிய
நின்றிருந்தது
வயல்நடுவில்
அந்த வீடு
புதிது. பெரிது.

சேரிப்பக்கத்து நாய்கள்
குரைத்தடங்கிய பின்பு
முதல் நாள் இரவு
நடந்திருக்கக்
கூடும் திருட்டென்று
சொன்னார்கள் அந்தப்
பக்கம்வந் தறியாத
சிறுசேரி மக்கள்

இருந்த போதும் வேறு வேறு
மக்கள் எப்படியோ கேள்விப்பட்டு
திருட்டுக் கொடுத்த வீட்டைச் சுற்றிச்
சாரிசாரியாய்க் குழுமினார்கள்.

ஈழத்துக்காரன் ஒருவனின் கை
வண்ணமாய் இருக்கலாம் திருட்டென்றும்
தாய்நாட்டுத் தமிழன் இப்படிச்
செய்திரான் என்றும் சொல்லிக் கலைந்தார்கள்.

சுவரின் அருகே கந்தல் துணியால்
ஈக்கள் திரள மூடப்பட்டுக்
குப்புறக் கிடக்கும் சடலம் யாருது?

வெளியூர் சென்றுள்ள
வீட்டின் சொந்தக்காரன்
அத்தனைப் பெரிய பணக்காரனா என்று
வியப்பாய் இருந்தது ஒவ்வொருவருக்கு

திருட்டுக் கொடுத்த வீட்டுக்குள் தாமும்
நுழைந்து பார்த்ததில்
திருப்தியும் பலருக்கு உண்டென்று தெரிந்தது.

திருட்டுக் கொடுத்த வீட்டைச் சுற்றிப்
பார்த்துத் திரும்பிய நபர்கள் சொன்னதில்
புரியாமல் போனது ஒன்றுண்டு
இடுப்பளவு தெரியும் நிலைக்கண்ணாடியைத்
திருடர்கள் தெறித்து விட்டார்களாம்
ஏன்?

இத்தனைக்கும் கண்ணாடி தன்னிடம்
தோற்றிய பிம்பத்தைத் தானே
தேக்கிக் கொள்வது கிடையாதே

வயல் நடுவில்
நின்றிருந்தது
திருட்டுக் கொடுத்த வீடு
வயல்புறம் எங்கும்
தத்தின ஓசைப் படாமல் தவளைகள்.

முந்தைய கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள். . .
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 70