‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 10

பகுதி 3 : பிடியின் காலடிகள் – 4

ஆற்றிடைக்குறை புழுதிக்கு நிகரான மென்மையான மணலால் ஆனதாக இருந்தது. கோரையின் செறிவுக்கு நடுவே காற்று மணலை வீசி உருவாக்கிய மென்கதுப்புப்பாதை வெண்தடமாக தெரிந்தது. அவள் அதில் நடந்தபின் நின்று மீண்டும் அண்ணாந்து நோக்கி “விண்மீன்கள்… இரவில் தனித்திருக்கையில் அவை மிக அருகே வந்துவிடுகின்றன” என்றாள். பீமன் புன்னகையுடன் “ஆம்… அவை ஏதோ சொல்லவருபவை போலிருக்கும்” என்றான்.

திரௌபதி ”பசிக்கிறது” என்றாள். “இங்கே என்ன இருக்கப்போகிறது?” என்றான் பீமன். திரௌபதி உதட்டைச் சுழித்து “ஏதாவது இருக்கும்… நான் அதை எப்படி கண்டுபிடிப்பது? எனக்கு பசிக்கிறது, அவ்வளவுதான்” என்றாள். ”இரு” என்றபடி பீமன் கோரைநடுவே இடையில் கைவைத்துநின்று நாற்புறமும் நோக்கினான். அருவி விழும் குழியின் நீர்க்கொந்தளிப்பு போல அவனைச்சுற்றி கோரை காற்றில் முறிக்கொப்பளித்தது. “பாம்பின் வாசம் இருக்கிறது” என்றான். “பாம்பா, இங்கா? எப்படி வந்திருக்கும்?” என்று அவள் அச்சமில்லாமல் சுற்றி நோக்கியபடி கேட்டாள். “பாம்பின் முட்டைகள் வந்திருக்கலாம். பறவைகள் சிலசமயம் கொண்டு வந்து போடும்…” என்ற பீமன் “அதோ” என்றான்.

அப்பால் கோரைப்புல் நடுவே இருந்த வெண்ணிறமான மணல்பரப்பு வழியாக ஒரு பாம்பு ஒளிவிட்டு வளைந்து மறைந்தது. “ஒரு முறை நாக்கை சொடுக்கியதுபோல” என்றாள். அந்த உவமை அவனை புன்னகைசெய்ய வைத்தது. “இங்கே என்னென்ன செடிகள் இருக்கின்றன என்று தெரியவில்லை” என்றபடி பீமன் அந்த மணல்மேட்டில் சுற்றிவந்தான். “செடியோ கிழங்கோ ஏதுமில்லை. பறவைகள் கூட இல்லை. ஆனால் மீன் பிடிக்கமுடியும்.”

“மீன் எனக்கு விருப்பமானது” என்றபடி திரௌபதி மணலில் அமர்ந்துகொண்டாள். “உறுதியான தரையை இன்னமும் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. அது நெளிந்துகொண்டே இருக்க விழைகிறது” என்றபடி மல்லாந்து படுத்துக்கொண்டாள். “உடலுக்குள் திரவங்கள் இன்னமும் அடங்கவில்லை என்று தோன்றுகிறது.” கைகளை தலைக்குமேல் மடித்து வைத்துக்கொண்டு கால்களை ஆட்டினாள். “விண்மீன்களை மல்லாந்து படுத்தபடிதான் பார்க்கவேண்டும். அதை இன்றுதான் கற்றேன்” என்றாள். சிலகணங்களுக்குப்பின் பெருமூச்சுடன் “இன்று நான் உணர்ந்த விடுதலையை என்றுமே உணர்ந்ததில்லை” என்றாள்.

பீமன் கோரைத்தாள்களை பிடுங்கிக்கொண்டிருந்தான். அவள் சற்றே புரண்டு இடமுலை மணலில் அழுந்த இடை குவிந்து எழ மலைவிளிம்பென தெரிந்த உடலின் வளைவுடன் “நான் சென்ற மூன்று நாட்களும் முழுக்க இன்னொரு உலகில் இருந்தேன். அது முழுமையான சிறைப்படல். சொற்களில், சிந்தனைகளில், முறைமைகளில், வரலாற்றில்… உடல் முழுக்க வேர்கள் எழுந்து பரவி இறுக்கி மண்ணுடன் அசையாமல் கட்டிவிட்டது போன்ற உணர்வு” என்றாள்.

பீமன் புன்னகையுடன் கோரைகளை சேர்த்து நுனியில் முடிச்சிட்டான். அவற்றின் தடித்த அடிப்பகுதிகளை வட்டமாக ஆக்கி விளிம்புகளை வேறு கோரைகளைக்கொண்டு இணைத்துக்கட்டினான். நீண்ட கூம்பு வடிவில் அமைந்த அந்த வலைக்கூடையின் நீட்டுக்கோரைகளை குறுக்காக வேறு கோரைகளை நெருக்கமாக வைத்துக் கட்டி முடைந்தான். அவனுடைய விரல்களின் விரைவை நோக்கியபடி ”ஆனால் அதுவும் எனக்கு பிடித்திருந்தது. ஏனென்றால் அந்த நாட்களில் அவருடன் அத்தனை விவாதிக்க இன்னொரு பெண்ணால் முடியாதென்று அறிந்தேன்” என்றவள் புன்னகையுடன் காலை ஆட்டி “இன்று இத்தனை தொலைவுக்கு உங்களுடன் வருவதும் இன்னொரு பெண்ணால் ஆவதல்ல” என்றாள்.

பீமன் அந்த வலைக்கூடையை எடுத்து தூக்கிப் பார்த்தான். அவள் எழுந்து அமர்ந்து ”காட்டுங்கள்… இதை வைத்து மீன்பிடிக்கமுடியுமா?” என்றாள். அவன் அதை அவளிடம் நீட்டினான். அவள் அதை தூக்கி நோக்கியபோது உடலில் விழுந்த நிழல்கோடுகளின் ஆடை மட்டும் அணிந்திருந்தாள்.

பீமன் மேலும் கோரைகளைப் பிடுங்கி சேர்த்து முறுக்கி வடம்போல ஆக்கினான். இரு வடங்களில் அந்தக்கூடையை பிணைத்தான். அவள் எழுந்து வந்து அதை நோக்கியபடி இடையில் கையூன்றி நின்று “இதைக்கொண்டு எப்படி மீன் பிடிப்பது?” என்றாள். “இங்கே நீர் சுழிப்பதனால் மீன்கள் தேடிவரும். மணல்கரை என்பதனால் அவற்றுக்கு உணவும் இருக்கும்” என்றான். அந்தக் கூடையின் இரு பக்கமும் வடத்தைக் கட்டி இரு கைகளிலும் ஏந்தியபடி ஆற்றிடைக்குறையின் விளிம்பில் சென்று நின்றான்.

நீர் சுழித்துச்சென்ற இடத்தை நோக்கி அதை வீசி ஒரே சுழற்றில் மேலிழுத்தான். அதில் இரண்டு சிறியமீன்கள் துள்ளின. அவற்றை கையால் பிடித்து கிழித்து துண்டுகளாக்கி அத்துண்டுகளை கோரையில் குத்திக்கோர்த்து கூடைக்குள் போட்டு சேர்த்துக்கட்டியபின் மீண்டும் வீசினான். நீர்க்கொப்பளிப்பில் கூடை எழுந்து எழுந்து அமைந்தது. சற்றுநேரம் கூர்ந்தபின் வீசித்தூக்கியபோது உள்ளே பெரிய மீன்கள் இரண்டு வால் குழைத்துத் துள்ளின. அவற்றின் வெள்ளிவெளிச்சத்தை இருளில் நன்றாக காணமுடிந்தது.

சிறுமியென கையை வீசி குதித்து சிரித்தபடி “இவைபோதும்… இவைபோதும்” என்றாள். “எனக்குப்போதாது” என்றபடி அவன் மீண்டும் வீசினான். “அத்தனை மீன்களும் அகப்படுமா?” என்றாள். பீமன் “மீன்களுக்கு தனிச்சிந்தனை இல்லை. இங்கே மீன்கள் வரும் என்பது தெரிந்துவிட்டது. அவை வந்துகொண்டேதான் இருக்கும்” என்றான். அவள் குனிந்து தரையில் துள்ளிய மீன்களை நோக்கி “தனிச்சிந்தனை எவருக்குத்தான் உள்ளது?” என்றாள்.

மீன்களை எடுத்து மணலில் வீசிக்கொண்டே இருந்தான் பீமன். “இத்தனை மீன்களா? இவ்வளவு மீனையும் உண்ண நீங்கள் என்ன நீர்நாயா?” என்றாள். பீமன் புன்னகைத்தான். எழுந்து கைகளைத் தூக்கி சோம்பல்முறித்த பின் இரு உலர்ந்த கோரைத்தாள்களை எடுத்து அவற்றின் நுனி அரத்தை ஒன்றுடன் ஒன்று உரசினான். பலமுறை உரசியபின் அவை தீப்பற்றிக்கொண்டன. குவித்து வைத்த உலர்ந்த கோரைமேல் வைத்தான். கோரை மெல்லப்பற்றிக்கொண்டு புகை மணம் எழுப்பியது. சிறிய இரு செவ்விதழ்களாக தீ எழுந்தது. நன்றாக பற்றிக்கொண்டதும் தீயில் மீனைக்காட்டி சுடத்தொடங்கினான்.

“சுட்டு உண்பதைப்பற்றி கதைகளில் கேட்டிருக்கிறேன்” என்று திரௌபதி அருகே அமர்ந்து நோக்கினாள். ”சுவையாக இருக்குமா?” பீமன் புன்னகைத்து “இத்தனை தொலைவுக்கு நீந்திவந்தபின் சுவையாகத்தானே இருக்கவேண்டும்?” என்றான். முதல் மீனை அவள் கையில் எடுத்து “நன்றாக கருகிவிட்டதே” என்றாள். “செதில் கருகினால் மட்டுமே உள்ளே வெந்திருக்கும்” என்றான். அதை தன் கைகளால் இரண்டாகப்பிய்த்து “உள்ளிருந்து ஊனை எடுத்து உண்ணவேண்டும்” என்றான். பின்னர் சிரித்து “நான் அப்படி உண்பதில்லை” என்றான்.

அவள் மீனை எடுத்து உண்டபின் கைகளை நக்கியபடி “சுவையாகவே இருக்கிறது” என்றாள். ”கங்கையின் மீன்… கொழுப்பு நிறைந்தது” என்றான் பீமன். திரௌபதி “நீங்கள் பாதாளத்தில் அருந்திய நஞ்சு என்ன சுவை?” என்றாள். “கசப்பு” என்றான் பீமன். ”நினைக்க நினைக்க ஊறிப்பெருகும் கசப்பு.” திரௌபதி சிரித்தபடி “ஆனால் நஞ்சு என்பது அமுதத்தின் தங்கை என்கிறார்கள். அது இனியது என்று சொல்லப்படுவதுண்டு” என்றாள். “அதை நாடிச்செல்பவர்களுக்கு இனிக்கக்கூடும்” என்றான் பீமன்.

“நஞ்சுக்கு மிகச்சிறந்த மருந்து ஒன்று உண்டு என்பார்கள்” என்றாள் திரௌபதி. அவனருகே அவள் கண்கள் மின்னின. “புதிய மானுடக்குருதி. அதில் எஞ்சியிருக்கும் உயிர் சிறிய கொப்புளங்களாக வெடிக்கும். குடிக்கும்போது வாய்க்குள் குமிழிகள் வெடிக்கும் என்பார்கள். எங்கள் பூசகர்கள் அரசகுலத்தார் எவருக்கேனும் நஞ்சூட்டப்பட்டால் அம்மருந்தை அளிப்பதுண்டு.”  சிரித்துக்கொண்டு “குடித்திருக்கிறீர்களா?” என்றாள். “இல்லை” என்றான் பீமன்.

திரௌபதி “ஆனால் அத்தனைபேரும் தங்கள் குருதியின் சுவையை அறிந்திருப்பார்களல்லவா?” என்றாள். “அதை மானுட உயிர் விரும்பும் என்கிறார்கள் மருத்துவர்கள்.” பீமன் ”குருதியா?” என்றான். “அதைக்குடிப்பதற்கும் மானுடனின் சிறுநீரைக் குடிப்பதற்கும் என்ன வேறுபாடு?” என்றான். அவள் “கழிவுநீருக்கும் நன்னீருக்குமான வேறுபாடுதான்” என்று சிரித்தாள். பின்னர் “குருதி வெறும் நீரா என்ன? அது உடலுக்குள் ஓடும் அனல் அல்லவா?” என்றாள்.

பீமன் அவளை நோக்கினான். அவள் இன்னொருத்தியாக ஆனதுபோல தோன்றியது. “மானுடனின் காமம் கனவு சினம் வஞ்சம் அனைத்தும் குருதியில் உள்ளன. குருதியைப்போல தெய்வங்களுக்குப் பிடித்தது பிறிதில்லை” என்றாள். “நீ அருந்துவாயா மானுடக்குருதியை?” என்றான் பீமன். “எங்கள் குலங்களில் குருதிதொட்டு கூந்தல்முடியும் ஒரு சடங்கே உண்டு” என்றாள் திரௌபதி.

பீமன் மீன்களை எடுத்து தின்னத்தொடங்கினான். “முள்ளுடனா?” என்று அவள் வியந்தாள். “ஆம், அதுகூட எனக்கு போதாது” என்றான் அவன் சிரித்துக்கொண்டு. “நீங்கள் நீர்நாய் அல்ல. நீர்நாய் பெரிய முட்களை உண்ணுவதில்லை” என்றாள் திரௌபதி. காற்று வீசி கனல் பறந்தது. பீமன் காலால் மணலை அள்ளி அனல்மேல் போட்டு அணைத்தான். “இங்கு அக்காளப்புல் இருக்கிறது. பற்றிக்கொண்டால் கோரைக்காடு பற்றி அனலாகிவிடும்.”

திரௌபதி அவன் உண்ணுவதையே நோக்கியிருந்தபின் “நேற்று என்ன கதை கேட்டீர்கள்?” என்றாள். “இந்திரத்யும்னன் என்ற யானையின் கதை” என்றான் பீமன். திரௌபதி சிரித்துக்கொண்டு “முதலையை சந்தித்துவிட்டீர்களா?” என்றாள். பீமன் அவளை சிலகணங்கள் நோக்கிவிட்டு “ஆம்” என்றான். அவள் எழுந்துசென்று நீரில் கைகளைக் கழுவினாள். அவள் உடல் குனிந்த நிலையில் ஒளிவிடும் அகிவில் போலிருந்தது. கைகள் நாண்கள் போல ஆடின.

”இந்திரத்யும்னனின் கதையை பராசரரின் புராணமாலிகை மேலும் கொண்டுசெல்கிறது தெரியுமா?” என்றாள். அவன் “என்ன” என்றான். மீன்கள் தீர்ந்துவிட்டிருந்தன. “விண்ணுலகில் இந்திரனின் அவையில் இந்திரத்யும்னன் அமர்ந்திருந்தார். அவையில் ஊர்வசியின் நடனம் நிகழ்ந்தது. ஆடலில் அவள் ஆடை நெகிழ்ந்ததைக் கண்டு இந்திரத்யும்னன் காமம் கொண்டார். அவர் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. இந்த அமரர் வாழ்க்கையை விட ஓர் இளைஞனாக காமம் நுகரும் வாழ்க்கையை அல்லவா தன் உள்ளம் தேர்ந்தெடுக்கும் என்று.”

பீமன் நகைத்து “இயல்புதானே?” என்றான். “அக்கணமே இந்திரத்யும்னன் இளமைந்தனாக மாறி விண்ணுலகிலிருந்து தலைகீழாக கீழே விழுந்தார். விழுந்த இடம் அவரது சொந்த நாடான தென்பாண்டியம். ஆனால் அங்கே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்து சென்றுவிட்டிருந்தன. அங்கிருந்தவர்களெல்லாம் அவருடைய குருதிவழி வந்த இளமைந்தரும் மகளிரும். எந்தப்பெண்ணையும் அவரால் அணுகமுடியவில்லை. அனைவரும் அவருக்கு தன் குருதிவழி பெயர்த்திகளாகவே தெரிந்தனர்” அவள் சொல்லத்தொடங்கினாள்.

இளமைந்தனின் உடலுடன் மூதாதையின் உள்ளத்துடன் அவர் மண்ணுலகில் அலைந்தார். விண்ணுக்குத் திரும்ப விழைந்தார். விண்ணுலகுக்குச் செல்வதற்காக மகேந்திர மலையின் உச்சியில் ஏறிச்சென்றார். அங்கே அவர் தவம் செய்தபோது வியோமயான விமானம் வந்து நின்றது. அதிலிருந்த இந்திரனின் அகம்படியன் அவர் எவரென்று கேட்டான்.

தன்னை முழுதும் மறந்திருந்த இந்திரத்யும்னன் “நான் யாரென்று அறியேன், இளையோன், இங்கு இடமில்லாதோன், விண்ணகம் புக விழைவோன்” என்றார். “ நீர் எவரென்று சொல்லும். அதை மண்ணில் எவரேனும் சான்றளிக்கவேண்டும். எவர் உள்ளனர்? உமது மைந்தர்கள், பெயரர்கள், கொடிவழிவந்தவர் எவருளர்?” என்று அகம்படியன் கேட்டான். ”அறிந்த ஒருவர் உமது பெயர்சொல்லி தென்கடல்முனையில் ஒரு கைப்பிடி நீரள்ளி விடட்டும். உம்மை விண்ணுலகு ஏற்கும்” என்றபின் திரும்பிச்சென்றான்.

தன்னை அறிந்தவர்களை நாடி பாண்டிய நாடெங்கும் அலைந்தார் இந்திரத்யும்னன். அவரை அங்குள்ள எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. அவர் ஆண்ட நகரம் மாறிவிட்டிருந்தது. அவரது கொடிவழியினர் அவரது பெயரையும் அறிந்திருக்கவில்லை. மாமதுரை நகர்களில் இரவலனாக “என்னை அறிவாருளரோ?” என்று கேட்டு அலைந்தவன் பித்தன் என்றே அங்குள்ள மக்கள் எண்ணினர்.

முக்கண் இறைவன் அருளால் மூவா இளமை பெற்ற மார்க்கண்ட முனிவர் அறிந்திருக்கலாமென்று அவரை தேடிச்சென்றார். பஃறுளி ஆற்றங்கரையின் குமரிக்காட்டில் தவம்செய்த இளமுனிவரை அணுகி “என்னை அறிவீரோ இளமையழியாதவரே?” என்று கேட்டார்.

இறப்பின்மையை அடைந்திருந்தமையால் முனிவர் காலத்தை அறியும் திறனை இழந்திருந்தார். தீப்பொறியை செவ்வரியாகப் பார்ப்பது போல பிறந்திறந்து மாளும் மானுடரெல்லாம் உடலெனும் ஒற்றைப் பெருஞ்சரடாகவே அவர் விழிகளுக்குத் தெரிந்திருந்தனர். ”நான் என்றும் அழியாத இந்திரத்யும்னனின் உடலை மட்டுமே அறிவேன். அது நீ அல்ல” என்று அவர் சொன்னார்.

தன் துயரை இந்திரத்யும்னன் அவரிடம் சொன்னார். மார்க்கண்டேயர் இரங்கி, ”நான் பிராவீரகர்ணன் என்னும் ஆந்தையை அறிவேன். அசைவற்ற பெரிய விழிகளால் அவன் இப்புடவியை நோக்கத் தொடங்கினான். தானிழந்து தன் நோக்கு மட்டுமேயான அவன் தவத்திற்குக் கனிந்து அவன் முன் பிரம்மன் தோன்றி நீ விழைவதென்ன என்றார். ‘நோக்கல்’ என அவன் மறுமொழி சொன்னான். முடிவிலி வரை நீ நோக்குக என்று சொற்கொடை அளித்து பிரம்மன் மீண்டார். அன்று முதல் இன்றுவரை விழி அசைக்காது அவன் இப்புவியை நோக்கி வருகிறான். அவனிடம் கேட்போம்” என்றார்.

அவர்கள் மகேந்திரமலை உச்சியில் கரும்பாறைப் பொந்து ஒன்றிலிருந்த பிராவீரகர்ணனை அணுகினர். ஆனால் அவனும் அரசனை அறியவில்லை. “நானறிந்தது இந்திரத்யும்னனின் விழிதிகழ்ந்த குன்றாப் பெருங்காமத்தை மட்டுமே. அவ்விழிகள் தவித்துத் தவித்து அள்ளிக்கொண்ட ஆயிரம்கோடி பெண்ணுடல்களின் கணங்களை மட்டுமே. அவன் அகத்தை நான் அறியேன்” என்றான்.

“ஆனால் நாடீஜங்கன் என்னும் கொக்கு ஒன்றை நான் அறிவேன். தன்னை தான் நோக்கி விழிமூடாதிருந்த அவனுடைய அகமுனைப்பைக் கண்டு தோன்றிய பிரம்மன் அவன் விழையும் சொற்கொடை ஏது என வினவினான். நாடீஜங்கன் ‘அறிதல்’ என்றான். அன்று அவன் தன்னை நோக்கத் தொடங்கி இன்னமும் முடிக்கவில்லை. யுகங்களும் மன்வந்தரங்களும் கடந்துசென்றன. அவனிடம் கேளுங்கள்” என்றான் பிராவீரகர்ணன்.

அவர்கள் மூவரும் நாடீஜங்கனை தேடிச்சென்றனர். அவர்களை நாடீஜங்கனும் அறியவில்லை. “அரசே, உங்கள் அகம் நிறைந்து கொப்பளித்த பெருங்காமத்தின் ஊற்றுமுகத்தை மட்டுமே நானறிவேன். ஊசிமுனை செல்லும் சிறியதோர் ஊற்று அது. அதற்கப்பால் இருந்து உங்களை திகைத்து நோக்கிய உங்கள் முகத்தையும் நான் கண்டிருக்கிறேன். ஆனால் அது நீங்களல்ல” என்றான்.

நாடீஜங்கன் அவர்கள் இருவரையும் அகூபாரன் என்னும் ஆமையை பார்க்க அழைத்துச்சென்றான். “தன்னை முழுதாக உள்ளிழுத்துக்கொண்டு பாறையென ஆகிவிடும் கலைகற்றவன் அகூபாரன். முழுமையாக தன்னுள் தான் ஒடுங்கிய அவனுடைய கலையைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன் அவனிடம் சொற்கொடை அளிக்கவந்து என்னவேண்டும் என்றான். ‘இருத்தல்’ என்றான் அகூபாரன். “இன்று வரை அவன் இருந்துகொண்டிருக்கிறான்.”

அகூபாரனிடம் என்றுமிருப்பவரே என்னை அறிவீரா என்றார் இந்திரத்யும்னன். “ஆம், அறிவேன் நீ இந்திரத்யும்னன். அனைத்தையும் உன்னுள் இழுத்துக்கொண்டபின் உன்னில் எஞ்சுவதை நான் காண்கிறேன். அதை நான் இந்திரத்யும்னன் என அழைக்கிறேன்” என்றான். மார்க்கண்டேயர் “அதை தென்கடல் நீர்முனையில் நான் கரைக்கிறேன்” என்றார். மார்க்கண்டேயர் நீர்க்கடன் அளிக்க இந்திரத்யும்னன் மீண்டும் விண்புகுந்தான்.

அவள் விழிகளை நோக்கியபடி கதைகேட்டிருந்தான் பீமன். அவள் எழுந்து அமர்ந்து “என்ன பார்வை?” என்றாள். “கதை சொல்லும்போது மீண்டும் சிறுமியாகிறாய்.” அவள் மென்மணலை அள்ளி தன் தொடையில் மெதுவாக உதிர்த்தபடி “கதை என்றாலே இளையோருக்குரியதுதானே?” என்றாள். விழிதூக்கியபோது வானொளிகள் இரு புள்ளிகளாக உள்ளே தெரிந்தன. “ஆமையை நீரில் மிதக்கும் நிலம் என்று சொல்வார்கள் தெரியுமா?” என்றாள்.

“அப்படியா?” என்றான் பீமன் அவள் என்ன சொல்கிறாள் என்று அவனுக்குப்புரியவில்லை. “மண்ணில் யானையென இருப்பதே நீரில் ஆமை” என்றாள். அவன் மெல்ல அவள் சொல்ல வருவதை புரிந்துகொண்டு “அனைத்தையும் நோக்குபவனும் ஆடியையே நோக்குபவனும்” என்றபின் உரக்கச் சிரித்து “ஆம், மூதாதையர் எழுதி வைக்காத ஏதுமில்லை” என்றான்.

திரௌபதி நின்று தலைதூக்கி நிலைவிண்மீனை நோக்கியபின் திரும்பி “காற்று முழுமையாகவே நின்றுவிட்டது” என்றாள். மல்லாந்து மணலில் படுத்து கைகளை தலைமேல் கோர்த்தபடி “கங்கையில் சிலசமயம் அப்படி ஆகும்” என்றான் பீமன். “திரும்பிச்செல்லத் தோன்றுகிறது” என்றாள் திரௌபதி. “ஏன்?” என்றான். “வெறுமனே” என்றாள். “ஏன்?” என்று அவன் தணிந்த குரலில் கேட்க அவள் சூள் கொட்டினாள்.

“இதுவல்ல அந்த இடம் என எண்ணுகிறாயா?” என்றான் பீமன். அவள் மறுமொழி சொல்லாமல் விண்ணை நோக்கினாள். அவள் நெற்றியிலிருந்து வளைந்து இறங்கிய கோடு மூக்காகி எழுந்து வளைந்து உதடுகளாகி முகவாயின் வளைவாகி கழுத்தாகக் குழைந்து முலையாகி வயிறாகி இடையாகி சென்றது. நீண்ட ஒற்றைத்தலைமுடி ஈரப்பளிங்கில் வளைந்து விழுந்தது போல என்று எண்ணிக்கொண்டான்.

அவள் செல்வோம் என்பது போல கையசைத்தாள். அவன் எழுந்து அமர்ந்து தன் கைகளை மணல்போக தட்டியபோது அப்பால் ஒளியென வழிந்து வந்த நாகத்தை நோக்கினான். மெல்லிய குரலில் “உன் வலப்பக்கம் நாகம்” என்றான். அவள் சற்றும் அதிராமல் திரும்பி அதை நோக்க அந்த கூந்தலிழைக்கோடு வளைந்து உருமாறியது. பக்கவாட்டில் கண்களின் வெண்மையும் பற்களும் வெண்ணிறமாக மின்னின.

“இது நச்சுப்பாம்பா?” என்றாள். “ஆம்” என்றான் பீமன். அவன் கிழித்துப்போட்ட மீன்தலைகளை நாடி அது வந்திருக்கிறது என்று தோன்றியது. எச்சரிக்கையுடன் தலையை தரையில் வைத்து உடலை பின்பக்கம் வளைத்து சுழற்றிக்கொண்டது. வால் புதருக்குள் அசைந்தது. அவள் குனிந்து அதை நோக்கினாள்.

நாகம் சிலகணங்கள் அசைவை கூர்ந்தபின் மெல்ல தலையை முன்னோக்கி நீட்டியது. அவள் அசையாமல் நின்றிருக்க பீமன் “அப்படியே பின்னோக்கி காலெடுத்து வைத்து விலகு” என்றான். “வேண்டாம்” என்றாள் அவள். மூச்சின் ஒலியில் “அதற்கு என்னைத்தெரியும்” என்றாள். “மூடத்தனம். இது சிறுவர்களின் கதைநிகழ்வு அல்ல. அது ஊன்மணம் தேடி வந்திருக்கிறது.” அவள் தலையை அசைத்தாள்.

நாகம் தலையைத் தூக்கி இருபக்கமும் நோக்கியபின் நீண்டு அவள் உள்ளங்காலில் ஏறியது. அவள் கணுக்காலில் வழுக்கியபடி வளைந்து வலக்காலை சுற்றிக்கொண்டு ஒழுகிச்சென்றது. அதன் வால்நுனி அவள் வலது கணுக்காலை விட்டுச்சென்றதும் அவள் உடலில் ஓர் அசைவு நிகழ்ந்தது. கனி உதிர்ந்த கிளை என.

நாகம் மணலில் கிடந்த மீன்தலை ஒன்றை கவ்விக்கொண்டதும் அதன் உடல் முறுகிச் சுழன்றது. பீமன் எழுந்து சென்று குனிந்து பருந்தின் விரைவுடன் அதன் கழுத்தைப் பற்றினான். அதன் உடல் அவன் கையை சுற்றிக்கொள்ள மறுகையால் அதை பிடித்தான். அவன் கைகளில் அது நெளிவதை அவள் விழிகள் மின்ன சிறிய உதடுகள் சற்றே விரிந்திருக்க நோக்கினாள். அதை அவன் தூக்கி அப்பால் கோரைக்குள் வீசினான்.

அவன் திரும்பியபோது அவள் கைகளை நீட்டினாள். ஓடிவரும் சிறுகுழந்தையை நோக்கி அன்னை போல. அவன் அவளை ஏறிட்டு நோக்கினான். அவள் விழிகளின் மிகமெல்லிய அசைவால் மீண்டும் அழைத்தாள். அவன் அருகே சென்று அவள் இடையை வளைத்துக்கொண்டான். ஒண்டிக்கொள்ளும் நாய்க்குட்டி போன்ற மெல்லிய முனகல் ஒலியுடன் அவனை அவள் அணைத்து இறுக்கி கைகளாலும் இடக்காலாலும் பின்னிக்கொண்டு இதழ்சேர்த்துக்கொண்டாள். அவள் கைகளை அவன் நாகம் என தன் தோளில் உணர்ந்தான்.

அவள் இதழ்களில் புனுகின் நறுமணம் இருந்தது. குருதியும் அனலும் கலந்ததுபோல. அவள் மூச்சுக்காற்று அவன் கன்னத்தில் பட்டது. அவள் அவனை பற்றி மென்மணலில் சரிந்து ஏந்திக்கொண்டாள். அவள் அவன் தோள்களில் முத்தமிட்டாள். “கதாயுதத்தால் ஒரே ஒரு நரம்பை மட்டும் அடிப்பீர்கள் என்றார்களே?” என்றாள். “ஆம், கீழே கிடக்கும் ஒரு தலைமயிரை அதனால் எடுக்கமுடியும் என்னால்.” அவள் அவன் இரு தோள்களிலும் முத்தமிட்டு “ம்ம்” என்றாள். “என்ன?” என்றான். “ஆற்றல்… ஆற்றல் மட்டும்” என்றாள்.

தலையை அண்ணாந்து “ம்ம்” என்றாள். அவள் கழுத்தில் முகம் அமைத்து “என்ன?” என்றான். “நான்காம் நிலா” என்றாள். “எங்கே?” என அவன் அசைய அவனைப்பற்றி தன் தோளுடன் இறுக்கி “நான் மட்டுமே பார்ப்பேன்” என்றாள். “ம்” என்றான். புரவியின் உடல் வீரனின் உடலுக்கு அளிக்கும் தாளம். புரவி தன் பாதையைத் தேர்ந்தெடுத்தது. புல்வெளியில் பெருநடையிட்டு மலைச்சரிவில் குளம்போசை எதிரொலிக்க இறங்கி மலைவிளிம்பிலிருந்து அடியற்ற ஆழம் நோக்கி பாய்ந்தது. அதன் குளம்புகள் காற்றில் ஓசையின்றி பதிந்து பதிந்து சென்றன.

அவன் மல்லாந்து விண்ணை நோக்கி “அதுவா?” என்றான். திரைச்சீலை மூடிய சிற்றகல்சுடர் என தெரிந்தது நான்காம் நிலா. “ஆம்” என்றாள் அவள். ஒருக்களித்து அவன் தோள் தழுவி காதில் “சற்றுமுன் அது நடனமிட்டது. உடைந்து பலவாக ஆகி சுழன்றது” என்றாள். “ஏன்” என்றான். அவள் அவன் தோளை இறுகக் கடித்தாள். அவன் சிரித்தான்.

அவள் எழுந்து கூந்தல் நெளிய மீன் என பாய்ந்து நீரில் விழுந்து நீந்தத் தொடங்கினாள். அவன் நீந்திச்சென்று அவளை பிடித்தான். அவன் தோளை மிதித்து எழுந்து பாய்ந்து அப்பால் விழுந்தாள். சிரித்துக்கொண்டே அவன் அவளை துரத்திச்சென்றான். காற்று மீண்டும் வீசத்தொடங்கியது. கங்கையின் நீரலைகள் பெரிதாக வளைந்தன. அவளும் ஓர் இருண்ட ஒளிவளைவென தெரிந்தாள்.

அலைவளைவுகளில் செவ்வொளி தெரிய பீமன் திரும்பி நோக்கினான். ஆற்றிடைக்குறை செந்தழலாக எரிந்துகொண்டிருந்தது. அதன் நீர்ப்படிமம் ஆழத்தை நோக்கி அலையடித்தது. திரௌபதி அவன் மேல் தொற்றிக்கொண்டு ”நான் நெருப்பை கிளறிவிட்டேன்… எரியட்டும் என்று” என்றாள். “ஏன்?” என்றான். சிரித்தபடி அவள் அவன் தொடையில் உதைத்து எம்பி நீரில் விழுந்தாள்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் அமைப்பு – இனியவை
அடுத்த கட்டுரைகாடு- கே.ஜே.அசோக் குமார்