‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 22

பகுதி 7 : மலைகளின் மடி – 3

சைப்யபுரியில் இருந்து கிளம்பி மூலத்தானநகரி வரை தேர்களில் வந்து அங்கிருந்து சிந்துவில் படகுகளில் ஏறிக்கொண்டு அசிக்னி ஆறு வழியாக சகலபுரி வரை வந்து அங்கிருந்து மீண்டும் குதிரைகளில் பால்ஹிகபுரி நோக்கி சென்றது பூரிசிரவஸ்ஸின் சிறிய படை. படையின் நடுவே வந்த பெரிய கூண்டுவண்டியில் தடித்த இறகுச்சேக்கையில் முதியவரான பால்ஹிகர் படுத்திருந்தார். அவர் பெரும்பாலும் கண்கள் மேல் கரிய மரவுரியை போட்டுக்கொண்டு படுத்த நிலையில்தான் இருந்தார். நன்றாக ஒளி மங்கியபின்னர்தான் எப்போதாவது எழுந்து அமர்ந்து கடந்துசெல்லும் வறண்ட நிலத்தை எந்த இடமென்றறியாதவர் போல பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரது உடலில் தசைகள் சுருங்கித் தளர்ந்து மிகப்பெரிய எலும்புச்சட்டகத்தில் தொங்கிக்கிடப்பதுபோலிருந்தன. பாலைவனத்து முள்மரம் ஒன்றில் செந்நிற மரவுரிகள் தொங்கிக்கிடப்பதுபோல என்று முதல்முறை நோக்கியபோது பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். கழுத்தில் பெரிய தசைத்தூளி தொங்கியது. உடலில் முடியே இல்லாமல் செந்நிறமான பாலைமண்ணை குழைத்துச்செய்து வெயிலில் காயவைத்த சிற்பம் போலிருந்தார். முகத்தில் சுருக்கங்கள் ஆழ்ந்த வெடிப்புகள்போல. நடுவே வெண்பச்சைநிறமான சிறிய விழிகள். உதடுகள் முழுமையாகவே உள்ளே சென்று வாய் ஒரு தோல்மடிப்பு போலிருந்தது. வாயில் பற்களே இருக்கவில்லை.

அவர் கிளம்பியதிலிருந்து பெரும்பாலும் துயிலில்தான் இருந்தார். பயணங்களில் துயின்றார். இரவில் தங்குமிடங்களில் மட்டும் எழுந்து சென்று சோலைமரம் ஒன்றின் அடியில் அமர்ந்து வெறுமனே இருண்ட பாலையை நோக்கிக்கொண்டிருந்தார். நோக்க நோக்க ஒளிகொள்வது பாலைநிலம் என பூரிசிரவஸ் அறிந்திருந்தான். விழிதொடும் தொலைவு கூடிக்கொண்டே சென்று ஒருகட்டத்தில் வான்விளிம்பில் அசையும் முள்மரத்தின் இலைகளைக்கூட நோக்கமுடியும். மலைப்பாறைகளின் விரிசல்களை காணமுடியும்.

அவர் பெரும்பாலும் எவரிடமும் எதுவும் பேசுவதில்லை. பூரிசிரவஸ் ஒவ்வொருநாளும் அருகே சென்று “பிதாமகரே” என்று அழைப்பான். அவரது விழிகள் அவனை நோக்கும். மானுடனை அறியாத தெய்வ விழிகள். “தங்களுக்கு என்னவேண்டும்?” என்பான். ஒன்றுமில்லை என்று கையசைப்பார். “ஏதாவது நலக்குறைகள் உள்ளனவா?” அதற்கும் கையசைப்பார். சிலகணங்கள் நின்றுவிட்டு அவன் திரும்பிவிடுவான்.

மெதுவாகத்தான் அவர்கள் பயணம்செய்தனர். சைப்யபுரியில் இருந்து மூலத்தானநகரிக்கு வரவே பன்னிரண்டு நாட்களாயின. மாலைவெயில் அடங்கியபின்னர்தான் தேர்கள் கிளம்பமுடிந்தது. இருள் அடர்வதற்குள் பாலைவனச்சோலையை சென்றடைந்து புரவிகளை அவிழ்த்து நீர்காட்டி நிழல்களில் கட்டிவிட்டு கூடாரங்களைக் கட்டி துயில்கொள்ள ஆரம்பித்தார்கள். மறுநாள் மென்வெளிச்சம் எழுந்த விடியலிலேயே கிளம்பி வெயில் வெளுக்கும் வரை மீண்டும் பயணம்.

இரவுகளில் கூடாரங்களின்மேல் மழையென மணல் பெய்துகொண்டே இருந்த ஒலியை கேட்டுக்கொண்டு நெடுநேரம் துயிலாதிருந்தான் பூரிசிரவஸ். சிபிநாட்டின் வெறுமைமூடிய பாழ்நிலம் அவன் கனவுகளை குலைத்துவிட்டிருந்தது. பகலில் எதுவும் தெரிவதில்லை. வழிகாட்டியை நம்பி சென்றபோதிலும்கூட வழித்தடத்தையும் குறிகளையும் அவனும் குறித்துக்கொண்டான். அடுத்த தங்குமிடத்தை மட்டுமே நினைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு பயணமும் நிகழ்ந்தது. நெஞ்சில் வேறெந்த நினைப்பும் இல்லை. சூழ்ந்திருக்கும் விரிநிலத்தை விழிகள் நோக்கவேயில்லை என்றுதான் அவன் எண்ணினான். ஆனால் இரவில் கண்மூடியதும் அன்று முழுக்க அவன் பார்த்த நிலங்கள் எழுந்தெழுந்து வந்தன. ஒன்றிலிருந்து ஒன்றாக சுருள் விரிந்து பரவி அவனை சூழ்ந்தன.

வெறுமை தாளாமல் அவன் ஒவ்வொருநாளும் தோல் இழுத்துக்கட்டிய தூளிமஞ்சத்தில் புரண்டுபுரண்டு படுத்து நீள்மூச்செறிந்தான். அவன் அறிந்த பால்ஹிக நாடும் பசுமையற்ற வெறும் மலையடுக்குகளால் ஆனதுதான். ஆனால் அங்கே நிலம் கண்முன் எழுந்து செந்நிறத்திரைச்சீலை என மடிந்து மடிந்து திசைகளை மூடியிருந்தது. மலைமுடிகளின் மேல் எப்போதுமே வெண்மேகங்கள் கவிந்திருந்தன. மலையிடுக்குகளில் இருந்து குளிர்ந்த காற்று இறங்கிவந்து தழுவிச்சுழன்று சென்றது.

மலைகளின் மூச்சு அது என்பார்கள் முதியதாதிகள். மாபெரும் முதுகுச்செதில்கள் கொண்ட உடும்பு அந்த மலைத்தொடர் என்று ஒருமுறை அவனுடைய தாதி சலபை சொன்னாள். அது இட்ட முட்டையில் இருந்து வந்தவர்கள் அவர்கள். அன்னை அதை குனிந்து நோக்கி குளிர்மூச்சு விடுகிறாள். அவளுடைய முலைப்பால் ஆறாக மாறி ஓடிவந்து அமுதூட்டுகிறது.மலைகளை அன்னையென்றே மலைமக்கள் சொன்னார்கள். கங்காவர்த்தத்தில் இமயத்தை ஆணாகச் சொல்கிறார்கள் என்பதை பூரிசிரவஸ் அறிவான். ஹிமவான் என்பது அவனுக்கு ஒருமலையென்றே பொருள்படுவதில்லை.

எப்போதாவது மலைகளுக்கு அப்பாலிருந்து மெல்லிய மழைச்சாரல் கிளம்பிவந்து மாபெரும் பட்டுத்திரைச்சீலை போல மலைகளை மறைத்து நின்று ஆடும். அது சுழன்று நெருங்கி வருவதை காணமுடியும். முகில்களில் ஒரு பகுதி இடிந்து சரிந்தது போல. வானுக்கு ஒரு பெரிய பாதைபோடப்பட்டது போல. அது வருவதை குளிர்ந்த உடல் குறுக்கி நின்று நோக்கும் உவகையை அவன் ஒருபோதும் தவறவிடுவதில்லை. குளிர்காற்று வந்து கடந்துசெல்லும். அதிலிருந்த ஈரத்துளிகளால் அரண்மனையின் மரவுரித்திரைச்சீலைகளில் நீர்ப்பொடிகள் படிந்து மின்னும். மரப்பலகைகளில் வியர்வைத்துளிகள் எழுந்து திரண்டு மண்புழுபோல நெளிந்து வளையும்.

பள்ளத்தாக்கின்மேல் மழை பேரொலியுடன் கவியும். மழையுடன் நகரமக்கள் எழுப்பும் கூச்சல்களின் ஒலியும் கலந்துகொள்ளும். பால்ஹிகநாட்டில் மழை ஒரு பெரும் விழா. அனைவரும் இல்லத்துத் திண்ணைகளில் நின்று மழைநோக்குவார்கள். வானம் மண்ணை பீலித்துடைப்பத்தால் வருடிச்செல்வதுபோலிருக்கும். மாளிகைமுகடுகளும் பெரும்பாறைவளைவுகளும் ஒருபக்கம் மட்டும் நனைந்து ஒளிவழியும். சற்றுநேரத்திலேயே மழை நின்றுவிடும். பூசகரின் ஊழ்கச்சொல் போல மழைத்துளிகள் கூரைவிளிம்பிலிருந்து சொட்டும் ஒலியே கேட்டுக்கொண்டிருக்கும்.

பெருங்கூச்சலுடன் மக்கள் தெருக்களில் இறங்குவார்கள். சாரல் எஞ்சிய மழைக்காற்றில் கைகளைத் தூக்கியபடி நடனமிடுவார்கள். முதியவர்களும் பெண்களும் குழந்தைகளுடன் கலந்துவிடும் நாள் அது. சேறுமிதித்தல் மிக மங்கலமான நிகழ்வாக கருதப்பட்டது. நகரின் தெருக்களெல்லாமே அடர்ந்த புழுதி நிறைந்தவை. அவை குருதியெழும் நிணச்சேறாக மிதிபடும். நகர்முழுக்க கால்கள் பட்டுவிடவேண்டும் என்பது நெறியாகையால் செந்நிறக் கால்களுடன் இளையோர் கூச்சலிட்டுச் சிரித்தபடி ஓடி அலைவார்கள்.

மழைச்சேறு தூயது என்றார்கள் மலைக்குடிகளின் தொல்பூசகர்கள். செஞ்சேற்றை அள்ளி ஒருவர் மேல் ஒருவர் வீசிச்சிரிப்பார்கள். உடைகள் சேற்றில் மூழ்கிச் சொட்டும். செந்நிறச்சேற்றை அள்ளி வீட்டுச் சுவர்களின் மேலும் கூரைகளின் மேலும் வீசி நகரையே மூடிவிடுவார்கள். குருதிசொட்ட கருவிலிருந்து எழுந்து வந்த குழந்தைகள் போலிருப்பார்கள் நகர்மக்கள். நகரமே அக்கணம் பிறந்து கருக்குருதியுடன் கிடக்கும் குட்டிபோலிருக்கும். மலையடுக்குகள் குனிந்து நோக்கி பெருமூச்சுவிடும்போது முதுகுச்செதில்கள் அசைவதுபோலவே தெரியும்.

இரவில் அவர்கள் அந்தச் சேற்றுடனே துயிலச் செல்வார்கள். மிக விரைவில் சேறு உலர்ந்து செம்புழுதியாக மாறி உதிர்ந்துவிடும். வீட்டுக்குள் பதிந்த செந்நிற கால்தடங்களை அழிக்கலாகாதென்பது நெறி. அவை மறுநாள்கூட எஞ்சியிருக்கும். பல்லாயிரம் காலடிகளுடன் நகரத்தெருக்கள் காற்றில் உலரும். மறுநாள் வெயிலெழுகையில் அவை கலைந்து மீண்டும் செம்புழுதியாக பறக்கத் தொடங்கிவிடும்.

மூன்றாம்நாள் மலைச்சரிவுகள் பசுமைகொண்டு சிலிர்த்துக்கொண்டிருக்கும். ஆடுகளை ஓட்டிக்கொண்டு இளம்மேய்ப்பர்கள் ஊசலாடுவதுபோல மலைச்சரிவில் ஏறி ஏறிச்செல்வார்கள். மலைகளின் மேல் பேன்கள் போல ஆடுகள் ஒட்டி அசைவதை அரண்மனைச் சாளரம் வழியாக காணமுடியும். அசைவற்றதுபோலவும் அசைந்தபடியும் இருக்க மலையில் மேயும் ஆடுகளால் மட்டுமே முடியும். சிந்தனையை அசைவற்றதாக ஆக்க அவற்றை நோக்குவதைவிட வேறு சிறந்த வழி இல்லை.

மேலுமிரு மழைபெய்தால் மலைகளின் காலடிகளில் குத்துச்செடிகள் பசுமைகொண்டு எழும். தண்டிலும் இலைகளிலும் கூட முட்கள் கொண்டவை. அவற்றின் முட்செறிவுக்குள் இருந்து மலர்கள் விரிந்து பெருகும். உடலெல்லாம் முள்கொண்ட செடிகளே உடலே மலராக ஆகும் திறன்கொண்டவை என்பது பால்ஹிகநாட்டுப் பழமொழி. பள்ளத்தாக்குமுழுக்க செம்மை, நீலச்செம்மை, மஞ்சள் நிறங்களில் மலர்கள் பூத்து விரிந்திருக்கும். எக்கணமும் அந்த மலர்விரிப்பின் மேல் மலை தன் கால்களை எடுத்து வைத்துவிடும் என்று தோன்றும்.

வறண்டதென்றாலும் கோவாசனர் நாடு மலைகளால் வாழ்த்தப்பட்டது என்று பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். சூழ்ந்து நின்று குனிந்து நோக்கி நிற்கும் மலைகளின் கனிவை தலைக்குமேல் எப்போதும் உணரமுடியும். மலைகளில்லாமல் திசைகள் திறந்துகிடக்கும் சிபிநாட்டின் பாழ்வெளியைக் கண்டு அவன் அகம் பதைபதைத்தது. கால்கீழ் அடியிலி திறந்துகிடக்கும் தவிப்பு அது. சிபிநாட்டின் வெயில் நின்றெரியும் மணல்வெளியில் சுட்டுக்கனன்று நிற்கும் செம்மண் மலைகளையும் காற்றில் உருகிவழிந்து உருவழிந்து நின்ற மணல்பாறைக்குன்றுகளையும் நோக்கும்போதெல்லாம் அவன் தன் எண்ணங்களை எல்லாம் உலரச்செய்யும் அனலைத்தான் உணர்ந்தான்.

பாலைநிலத்திற்குள் நுழைந்த சிலநாட்களுக்குள்ளாகவே அவன் உதடுகளும் கன்னங்களும் மூக்கும் வெந்து தோலுரிந்துவிட்டன. கண்களைச் சுருக்கி நோக்கி நோக்கி முகமே கண்களை நோக்கிச் சுருங்கி இழுபட்டுவிட்டதுபோலிருந்தது. அச்சுருக்கங்கள் முகத்தில் ஆழ்ந்த வரிகளாகப் படிந்து பின் சிவந்த புண்கோடுகளாக மாறின. முதல்நாள் தண்ணீர்குடித்துக்கொண்டே இருந்தான். வழிகாட்டியாக வந்த சைப்யன் “நீர் அருந்தலாகாது இளவரசே. குறைந்த நீருக்கு உடலை பழக்குங்கள்” என்று சொல்லிக்கொண்டே இருந்தான். சிலநாட்களிலேயே விடாய் என்பது உடலின் ஓர் எரிதலாக நிகழ்ந்துகொண்டிருந்தபோதும் நீரின் நினைவே எழாதாயிற்று.

ஒவ்வொருநாளும் இரவின் இருளில் கண்களைமூடிக்கொண்டு அவன் தன் பால்ஹிகநாட்டின் மலையடுக்குகளை எண்ணிக்கொள்வான். நாளடைவில் அவன் அதற்கான வழிகளை கண்டுகொண்டான். மலையின் கீழே விரிந்துகிடக்கும் மஞ்சள்பச்சை நிறமான புல்வெளியை அசிக்னியின் கிளையாறான தேவாசியின் இருமருங்கும் செறிந்திருக்கும் பச்சையாக எண்ணிக்கொள்வான். மெல்லமெல்ல மேலே சென்று உருண்டு நிற்கும் பெரும்பாறைகளை அவற்றுக்குமேல் அணுகமுடியாத சரிவில் நின்றிருக்கும் தனித்த தேவதாருகக்ளை பார்ப்பான். மெல்ல உச்சியின் வான்வளைவை அங்கே தேங்கி நின்றிருக்கும் ஒளிமிக்க பேரமைதியை பார்ப்பான்.

அந்த அமைதிக்குமேல் வெண்குடைகளாக நின்றிருக்கும் முகில்கள். முகில்களால் ஆன மங்கலான வானம். வானம் அவனை அமைதிப்படுத்தும். துயில முடியும். அப்போது கூடாரத்தின்மேல் பெய்யும் மணல்காற்று மலையிறங்கி வரும் பனிக்குளிர்காற்றாக அவனுக்குள் வீசி உடலை சிலிர்க்கச்செய்யும்.

சிபிநாட்டின் வானில் முகில்களே இல்லை. நீலநிறமான வெறுமை. நீலநிறமான இன்மை. எங்கும் எப்போதும் ஒரே வானம்., அந்த மாற்றமின்மைதான் அந்நிலத்தை அச்சமூட்டுவதாக ஆக்குகிறது என்று தோன்றும். அதில் விடிகாலையிலேயே மலைகளுக்கப்பாலிருந்து ஒளி விழத்தொடங்கிவிடும். முட்கள் செறிந்த குத்துச்செடிகளின் புழுதிபடிந்த இலைகளின்மேல் கனிந்த பனித்துளிகள் ஒளிவிடும். வானொளி மாறிவருவதை அந்த முத்தொளியிலேயே காணமுடியும்.

அந்நீர்த்துளிகளை உண்ணும் சிறிய ஓணான்கள் வால்விடைக்க முட்கள் மேல் அமர்ந்து காலடியோசைகளை செவிகூர்ந்து கேட்டு சிலிர்த்து சிவக்கும். சினம் கொள்பவை போல. அவற்றின் செவிள்கள் விடைக்கும். சைப்யர்கள் அனைத்து உயிர்களையும் உண்டார்கள். ஓணான்களை கல்லால் எறிந்து அவை விழுந்து மல்லாந்து எழுந்து ஓடி தள்ளாடிச் சரியும்போது ஓடிச்சென்று எடுத்து தங்கள் தோல்பைக்குள் போட்டுக்கொண்டார்கள். வெயிலெழுந்த பகலில் தங்கும்போது அவற்றை கனலில் இட்டு சுட்டு தோலுரித்து கிழங்குகள் போல தின்றார்கள். உடும்புகளையோ பாம்புகளையோ கண்டால் அனைத்துப்பொதிகளையும் விட்டுவிட்டு ஓடிச்சென்றார்கள்.

அத்தனை பேருடைய முகங்களும் ஒன்றுபோலிருந்தன. அவர்களின் உடல்களும் அங்குள்ள பாறைகளைப்போலவே வெந்து அனல்நிறமாகியிருந்தன. வரிவரியாக வெடித்த தோல். வற்றிய சுனைக்குள் நீர் போல சுருக்கம் நிறைந்த கண்களுக்குள் ஆடும் இளம்பச்சை விழிகள். எட்டுநாட்களில் அவன் சைப்யபுரிக்கு சென்றுசேர்ந்தபோது அவன் பிறந்து வாழ்ந்த நிலம் மண்ணின்மேலிருந்தே அகன்று எங்கோ சென்றுவிட்டதுபோலிருந்தது. கயிறு அறுந்த பட்டம் போல அவன் எங்கோ சென்று இறங்கிவிட்டதுபோல.

சைப்யபுரியின் பாறைக்குடைவு மாளிகைகளைப்பற்றி அவன் கேட்டிருந்தான். அவன் கற்பனையில் அவை பேருருக்கொண்டவையாக இருந்தன. உடலெங்கும் விழிதிறந்த அரக்கர்களைப்போல. மலைக்குடைவு வழியினூடாக ஏறி சைப்யபுரிக்குள் சென்றதும் அவன் முதலில் அடைந்தது ஏமாற்றம்தான்.

அது முன்மாலைநேரம். வெயில் வெம்மை குறையாமலிருந்தமையால் தெருக்களில் மிகச்சிலரே இருந்தனர். வறண்ட தோல்கொண்ட வைக்கோல்நிறக் குதிரைகளும் பாலைமண்ணாலேயே ஆனவை போன்ற கழுதைகளும் தோலிழுத்துக் கட்டப்பட்ட கூரைகளுக்குக் கீழே நிழலில் தலைகுனிந்து நின்றிருந்தன. தெருக்கள் அலையலையாக புழுதிநிறைந்து செந்நிற ஓடைகள் போல தெரிந்தன.

கடைகளில் ஓரிரு வணிகர்களே இருந்தனர். மிகஅகலமான மரச்சகடங்கள் கொண்ட பாலைவனப் பொதிவண்டிகள் ஆங்காங்கே நின்றிருக்க அவற்றிலிருந்து உலரவைக்கப்பட்ட ஊன்நாடாக்களை எடுத்து உள்ளே கொண்டுசென்றுகொண்டிருந்த தலைப்பாகையணிந்த சேவகர்கள் அவர்களின் குதிரைப்படையை வியப்புடன் நோக்கினர். அவன் அதன்பின்னர்தான் பாறைக்குடைவு மாளிகைகளை பார்த்தான். அவை பெரிய கரையான்புற்றுகள் போன்றே தோன்றின.

காற்று வீசி வீசி அக்கட்டடங்களின் சாளரங்களும் வாயில்களுமெல்லாம் அரிக்கப்பட்டு மழுங்கி நீள்வட்டவடிவம் கொண்டிருக்க அகழ்ந்தெடுத்த விழிகள் போலவோ திறந்த பல்லில்லாத வாய்கள்போலவோ தோன்றின. சிலகணங்களில் அவை பெரிய பாலைவன விலங்குகள் போல தோற்றம் தரத்தொடங்கின. உடும்புகள் போல அசைவற்று வெயிலில் நின்றிருப்பவை. வாய்திறந்தவை. அவை மூச்சுவிடுவதைக்கூட காணமுடியுமென்று தோன்றியது.

அவனை நோக்கி வந்த சைப்யபுரியின் காவலன் சலிப்புகலந்த குரலில் “யார் நீங்கள்?” என்றான். எந்தவிதமான எச்சரிக்கைகளும் இல்லாத காவலர்கள் என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். பெரும்பாலான பாலைநகரங்களுக்கு எதிரிகளே இல்லை. அவன் தன் முத்திரைமோதிரத்தைக் காட்டியதும் காவலன் தலைவணங்கி அவனை அழைத்துச்சென்றான்.

அந்தப்பாறைக்குடைவுக்குள் வெம்மையில்லை என்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான். தண்மைக்கு அப்பால் இன்னொன்று அங்கே இருந்தது. அதுவே அக்குகைகளை அவர்கள் செய்வதற்கான அடிப்படை. பின் அதை உணர்ந்தான். நிலைத்த தன்மை. அவர்களின் இல்லங்களெல்லாமே மழைக்கோ காற்றுக்கோ தாளாதவை. கூடாரங்கள் அலையடிப்பவை. இங்கே கூரை உறுதியுடன் ஆயிரமாண்டுகாலம் நிற்கும் என்பதுபோல நின்றிருந்தது.

சேவகர்கள் அவனை அழைத்துச்சென்று தங்கும் அறையை காட்டினர். மிகச்சிறிய அறையும் நீள்வட்டமாகவே இருந்தது. அவன் நீராட விரும்பினான். ஆனால் சிபிநாட்டில் அவ்வழக்கம் இல்லை போலும். அவனை அணுகிய இரண்டு இருபால் சேவகர்கள் ஆடைகளை கழற்றச்சொல்லிவிட்டு மெல்லிய இறகுக்குவையால் அவன் உடலை நன்றாக வீசித்துடைத்தனர். அதன்பின் ஈரமான மரவுரியால் அவன் உடலை துடைத்தனர். அதிலிருந்த வாசனைப்புல்தைலம் அவன் உடலின் நூற்றுக்கணக்கான விரிசல்களை எரியச்செய்தது. ஏன் அவர்கள் நீராடுவதில்லை என அப்போது புரிந்தது. நீர்பட்டால் அத்தனை புண்களும் சீழ்கட்டிவிடும்.

தலைக்குழலை நான்குவகைப் பீலிகளால் நன்றாகத் துடைத்து ஏழுவகைச் சீப்புகளால் சீவி சுருட்டிக் கட்டினார்கள். அவன் அணிவதற்காக புதிய ஆடைகளை கொடுத்தார்கள். சுட்ட ஊனுலர்வும் அப்பங்களும் பருப்புக்கூழும் அவனுக்கு உணவாக வந்தது. தேனில் ஊறவைத்த அத்திப்பழங்களை இறுதியாக உண்டு நிறைவடைந்தபின் தாழ்வான மரமஞ்சத்தில் மரவுரிப்படுக்கையில் படுத்து உடனே ஆழ்ந்து துயின்றுவிட்டான்.

விழித்தபோதுதான் அப்படி ஆழ்ந்து துயின்றது எதனாலென்று அவனுக்குத்தெரிந்தது. அந்தக் குகையின் உறுதிதான். பாலைநிலத்தில் வெறுமையில் விடப்பட்ட உணர்வு தலைக்குமேல் இருந்தபடியே இருந்தது. அக்குகைக்குள் அது இல்லை. அகவேதான் பாலையுயிர்கள் எல்லாமே வளைகளுக்குள் வாழ்கின்றனபோலும் என எண்ணிக்கொண்டான். மீண்டும் உடைமாற்றிவிட்டு தன் சேவகர்களுடன் அரசனை காணச்சென்றான்.

சிபிநாட்டை ஆண்ட கஜபாகுவின் மகன் கோவாசனரைப்பற்றி எதையுமே பூரிசிரவஸ் கேட்டிருக்கவில்லை. அவரது பெயரைக்கூட சைப்யபுரிக்குள் நுழைந்தபின்னர்தான் அறிந்துகொண்டான். ஓர் எளிய புகழ்மொழிகூட இல்லாத அரசர் என நினைத்து அப்போது புன்னகைத்துக்கொண்டான். ஆனால் பாரதவர்ஷத்தில் ஒரு சூதனின் ஒரு பாடலையாவது சூடிக்கொள்ளாத மன்னர்களே கூடுதல் என அடுத்த எண்ணம் வந்தது. சூதர்களின் பட்டியலில் பெயர் கொள்வதென்பதற்காகவே வாழும் மன்னர்கள் எத்தனை நூறுபேர்.

கோவாசனரின் அரசவையும் ஐம்பதுபேர்கூட அமரமுடியாதபடி சிறியதாக இருந்தது. சேவகனால் அழைத்துச்செல்லப்பட்டு அவன் அதற்குள் நுழைந்தபோது அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நிமித்திகர்களும் அரசனைக் காணவந்த அயல்நாட்டு வணிகர்களுமாக பன்னிருவர் உள்ளே காத்திருந்தனர். அவனைக் கண்டதும் அவர்களின் விழிகளில் வியப்பு தெரிந்தது. கோவாசனரைக்காண எந்த அயல்நாட்டு அரசர்களும் வருவதில்லைபோலும்.

அமைச்சர் ஒருவர் அருகே வந்து வணங்கி “வணங்குகிறேன் இளவரசே. நான் திரிவிக்ரமன். இங்கே அமைச்சராக பணிசெய்கிறேன். தாங்கள் வந்த செய்தியை அறிந்தேன். அரசர் வந்துகொண்டிருக்கிறார்” என்றார். அவர் தனக்கு வரவேற்போ முகமனோ சொல்லவில்லை என்பதை எண்ணி பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். அவர்களுக்கு அந்த முறைமைகள் எவையும் இன்னும் வந்துசேரவில்லை. ஸென்யாத்ரி, போம்போனம், துங்கானம் என்னும் மூன்று வறண்ட மலைகளால் சூழப்பட்ட சிபிநாட்டைத்தேடி சில பாலைவணிகர்கள் வந்தால்தான் உண்டு.

பூரிசிரவஸ் “தங்களை சந்தித்தமை பெருமகிழ்ச்சி அளிக்கிறது திரிவிக்ரமரே. தங்கள் இன்சொற்களால் மதிப்புக்குரியவனானேன்” என்றான். அந்த முறைமைச்சொற்களைக் கேட்டு குழம்பிய திரிவிக்ரமர் “ஆம் அதில் எனக்கும் நிறைவே” என்றபின் அச்சொற்கள் முறையானவையா என சிந்தித்து மேலும் குழம்பி “ஆம், தாங்கள் எங்கள் சிறப்பு விருந்தினர்” என்றபின் அச்சொற்களும் பொருந்தாதவை என உணர்ந்து முகம் சிவந்தார். பிறர் அவனை வணங்கினர். அவன் பீடத்தில் அமர்ந்துகொண்டான்.

அரியணை கல்லால் ஆனதாக இருந்தது. தொன்மையானது என்று தெரிந்தது. அதன் பல பகுதிகள் மழுங்கி பளபளப்பாக இருந்தன. அறைக்குள் காற்று வருவதற்கான மெல்லிய குகைவழிகளும் ஒளி வருவதற்கான உயர்சாளரங்களும் இருந்தன. கண்களுக்கு மென்மையான ஒளியும் இளங்குளிர் இருக்கும்படி காற்றும் அமைக்கப்பட்டிருப்பதை அதன்பின் உணர்ந்தான். சற்றுநேரத்தில் அவன் சென்ற அரசவைகளிலேயே அதுதான் உகந்தது என்ற எண்ணம் வந்தது.

அப்பால் மணியோசை கேட்டது. ஒரு சங்கொலி எழுந்தது. முழவோ முரசோ ஒலிக்கவில்லை. பெரிய செங்கழுகின் இறகைச் சூடிய தலைப்பாகையுடன் ஒரு சேவகன் வெள்ளிக்கோல் ஒன்றைக் கொண்டு முன்னால் வர வெண்குடை பிடித்து ஒருவன் பின்னால் வர தாலமேந்திய அடைப்பக்காரன் இடப்பக்கம் வர கோவாசனர் இயல்பாக நடந்து வந்தார். அவருடன் இளம்பெண் ஒருத்தியும் பேசிச்சிரித்துக்கொண்டே வந்தாள். அவளுடைய பட்டாடையும் அணிகலன்களும் அவள் இளவரசி என்று காட்டின. ஆனால் அணிகள் எதிலும் மணிகள் இல்லை. எளிய பொன்னணிகள்.

கோவாசனர் பூரிசிரவஸ்ஸைதான் முதலில் பார்த்தார். விழிகளில் சிறு வியப்பு எழுந்து மறைந்தது. கோல்காரன் உள்ளே நுழைந்து அரசனுக்கு கட்டியம் கூவினான். அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துகூவினர். அனைத்துமே மிக எளிமையாக நிகழ்ந்தன. கோவாசனர் அரியணையில் அமர்ந்ததும் அமைச்சர் வாழ்த்துக்களோ முகமனோ ஏதுமில்லாமல் “நான்கு யவன வணிகர்கள் வந்துள்ளார்கள். ஒரு சோனக வணிகர். ஒருவர் மலையடுக்குகளில் இருந்து வந்தவர். பால்ஹிகநாட்டு இளவரசர்” என்றார்.

கோவாசனர் அவனை நோக்கிவிட்டு “வணிகர்கள் முதலில் பேசட்டும்” என்றார். அந்த இளம்பெண் தந்தைக்கு அருகே ஒரு பீடத்தில் அமர்ந்து தன் கைகள் மேல் முகவாயை வைத்தபடி மிக இயல்பாக அங்கே நிகழ்வனவற்றை நோக்கிக்கொண்டிருந்தாள். யவனர்களுக்குரிய பால்வெண்மை நிறம். நீண்ட கரியகூந்தலை பின்னலாக மடியில் இட்டிருந்தாள். சற்றே ஒடுங்கிய கன்னங்களுடன் நீண்ட முகம்.

அவளுடைய மூக்கைப்போல் ஒன்றை பூரிசிரவஸ் எங்குமே கண்டதில்லை. அலகு போல நீண்டு கூரியதாக இருந்தது. குருதி என சிவந்த சிறிய உதடுகள். அவள் கண்கள் பச்சைநிறமாக இருந்தன. அவனை ஒரே ஒருமுறை வந்து தொட்டுச்சென்றபின் திரும்பவேயில்லை. அவளுக்கு கட்டியம் கூறப்படவில்லை. அவள் அரசரின் மகள் என்பதில் ஐயமில்லை என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான்.

வணிகர்கள் ஒவ்வொருவராக எழுந்து முகமன் சொல்லி அவர்கள் கொண்டுவந்த பரிசுகளை அரசருக்கு அளித்தனர். புலித்தோல், யானைத்தந்தத்தால் பிடியிடப்பட்ட குத்துவாள், பொன்னாலான கணையாழி, சந்தனத்தால் ஆன பேழை, ஆமையோட்டுமூடிகொண்ட பெட்டி என எளிமையான சிறிய பொருட்கள். அவற்றை கருவூலநாயகம் பெற்றுக்கொண்டார். வணிகர்கள் சென்றதும் கோவாசனர் திரும்பி பூரிசிரவஸ்ஸிடம் “பால்ஹிகநாட்டைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். என் மூதாதை பால்ஹிகரால் உருவாக்கப்பட்டது என்று சொல்வார்கள்” என்றார்.

நேரடியாக உரையாடலைத் தொடங்கும் பயிற்சி இல்லாத பூரிசிரவஸ் சற்று திகைத்து “ஆம், அரசே. பால்ஹிகநாட்டில் இருந்து வந்து தங்களை சந்திப்பது என் நல்லூழ். தங்களைப் பார்த்தமையால் என் வழியாக பால்ஹிகநாடும் பெருமை அடைந்தது. தங்கள் குலச்சிறப்பையும் பெருங்கொடைத்திறனையும் குன்றா வீரத்தையும் பால்ஹிகநாட்டு மக்களைப்போலவே நானும் அறிந்திருக்கிறேன்” என்றான்.

அந்தப்பெண் அவனை நோக்கி புன்னகைசெய்தாள். அவள் பற்கள் வெண்மை சற்றுக்குறைவாக யானைத்தந்தத்தில் செய்யப்பட்டவை போலிருந்தன. கோவாசனர் திகைத்து அமைச்சரை நோக்கிவிட்டு “ஆம், அது இயல்புதான்” என்றபின் மேற்கொண்டு என்னசொல்வது என தன் மகளை நோக்கியபின் முகம் மலர்ந்து “இவள் என் மகள். தேவிகை என்று இவளுக்குப் பெயர்” என்றார்.

“இளவரசியை சந்தித்ததில் என் அரசகுலம் பெருமகிழ்வடைகிறது. நிகரற்ற அழகி என்று சூதர்பாடல்கள் கேட்டு அறிந்துள்ளேன். இன்று நேரில் பார்க்கிறேன். சூதர்களுக்கு சொல்குறைவு என்றே உணர்கிறேன்” என்றான். தேவிகை சிரித்து “என்னை எந்தச் சூதரும் பாடியதில்லை இளவரசே” என்றாள். “ஏனென்றால் சூதர்களை நான் கண்டதே இல்லை.”

பூரிசிரவஸ் புன்னகைசெய்து “ஆனால் சூதர்கள் அறிவிழி கொண்டவர்கள். தங்கள் அழகைப்பற்றி தங்கள் குடிகள் பேசும்பேச்சுக்களே அவர்கள் தங்களைப் பார்ப்பதற்குப் போதுமானவை” என்றான். அவள் சிரிப்பை அடக்குவதைக் கண்டு அவளை மேலே பேசவிடக்கூடாது என்று தொடர்ந்தான். “அரசரும் இளவரசியும் எனக்கு ஒருவகையில் மிக நெருக்கமான குருதித்தொடர்புடையவர்கள். நான் தங்கள் மூதாதையான பால்ஹிகருக்கு பால்ஹிகநாட்டிலே பிறந்த மைந்தர்களில் முதல்வரான உக்ரபால்ஹிகரின் கொடிவழி வந்தவன். பத்து பால்ஹிக குலங்களில் முதன்மையானது எங்கள் குலம்” என்றான்.

கோவாசனர் “ஆம், அதை நான் கேட்டறிந்துள்ளேன். ஆனால் ஒரு பால்ஹிகரை இப்போதுதான் முதலில் காண்கிறேன்” என்றான். “அரசே, நான் வந்தது முதுமூதாதையான பால்ஹிகரை மீண்டும் எங்கள் நாட்டுக்கு கொண்டுசெல்லவேண்டும் என்பதற்காகத்தான். அவர் எங்கள் மண்ணுக்கு வந்து நூறாண்டுகளாகின்றன. அவரைக் காணாத நான்கு தலைமுறையினர் பிறந்துவந்துவிட்டார்கள். அவர் வந்தால் அது எங்கள் குலங்களெல்லாம் கூடிக்களிக்கும் பெரும் திருவிழாவாக இருக்கும்.”

கோவாசனர் குழம்பி “அவரையா?” என்றார். “அவர் நோயுற்றிருக்கிறார். இருளைவிட்டு வெளியே அவரால் செல்லமுடியாது” என்றார். பூரிசிரவஸ் “நான் உரிய ஏற்பாடுகளுடன் வந்துள்ளேன். அவரை இருளிலேயே கொண்டுசெல்கிறேன்” என்றான். “ஆனால் அவர்…” என்று ஏதோ சொல்ல வந்த கோவாசனர் திரும்பி தேவிகையை பார்த்தார். “இளவரசே, முதியவரின் உளநிலையும் நோயில் உள்ளது. அவர் அவ்வப்போது அனைத்துக் கட்டுகளையும் மீறக்கூடும்” என்றாள் தேவிகை.

“நாங்கள் அதற்கும் சித்தமாகவே வந்தோம் இளவரசி” என்றான் பூரிசிரவஸ். “அவர் கட்டுகளை மீறும்போது அவரை எவரும் அடக்கமுடியாது. முதியவர் இன்றும் நிகரற்ற உடல்வல்லமைகொண்டவர்” என்றார் கோவாசனர். பூரிசிரவஸ் “அவரை நான் கொண்டுசெல்ல முடியும் அரசே. அதன்பொருட்டே இத்தனைதொலைவுக்கு வந்தேன்” என்றான். கோவாசனர் மகளை நோக்கிவிட்டு “தாங்கள் அவரை கொண்டுசெல்வதில் எங்களுக்குத் தடையில்லை இளவரசே. அதற்குமுன் முதியவரை பாருங்கள். அவர் வர ஒப்புக்கொண்டால், அவரை கொண்டு செல்ல தங்களால் இயலுமென்றால் அவ்வண்ணமே ஆகுக!” என்றார்.

அத்தனை எளிதாக அது முடியுமென பூரிசிரவஸ் எண்ணவில்லை. தலைவணங்கி “சிபிநாட்டின் அரசருக்காக நான் கொண்டுவந்த பரிசுகளை என் சேவகர்கள் கொண்டுவர ஒப்ப வேண்டும்” என்றான். முகம் மலர்ந்து “கொண்டுவாருங்கள்” என்றார் கோவாசனர். பூரிசிரவஸ்ஸின் சேவகர்கள் மூன்று பெரிய மரப்பெட்டிகளை கொண்டு வந்து வைத்தனர். ஒவ்வொன்றையும் அவர்கள் திறந்து காட்டினர். ஒன்றில் பட்டாடைகளும் இன்னொன்றில் தந்தத்தால் ஆன சிறிய சிற்பங்களும், செம்புக்கலங்களும் இன்னொன்றில் வெள்ளியாலும் பொன்னாலுமான பலவகையான பொருட்களும் இருந்தன.

கோவாசனரின் முகம் மலர்ந்து பற்கள் ஒளியுடன் தெரிந்தன. “பால்ஹிகர்கள் இத்தனை செல்வந்தர்கள் என நான் அறிந்திருக்கவில்லை” என்றார். “சிபிநாடு மிகச்சிறியது. எங்கள் கருவூலமே இப்பரிசுப்பொருட்களை விட சிறியது.” பூரிசிரவஸ் புன்னகையுடன் “நம் நட்பு வளருமென்றால் இந்தக் கருவூலமும் வளரும் அரசே” என்றான். “ஆம், ஆம், வளரவேண்டும்” என்றார் கோவாசனர்.

பின்னர் திரும்பி தன் மகளை நோக்கிவிட்டு “என் மகளுக்கு கங்காவர்த்தத்தின் ஓர் அரசனை மணமகனாகப் பெறவேண்டும் என்பதே என் கனவு. ஆனால் என் கருவூலமும் படைகளும் சிறியவை. மலைகளுக்கு இப்பால் இப்படி ஒரு நாடு உண்டென்பதையே எவரும் அறிந்திருக்கவில்லை” என்றார். “அஸ்தினபுரிக்கு எங்கள் இளவரசி சுனந்தை அரசியாகச் சென்றாள் என்ற ஒற்றை வரியால் நினைவுகூரப்படுபவர்கள் நாங்கள்.”

பூரிசிரவஸ் “அந்நிலை மாறும் அரசே. அத்தனை அரசுகளும் இப்படி இருந்தவை அல்லவா? சிறியவிதைகளில் இருந்தே பெருமரங்கள் முளைக்கின்றன” என்றான். கோவாசனர் “தேவிகையும் திரிவிக்ரமரும் உங்களுக்கு பிதாமகரை காட்டுவார்கள். அவளுக்கு அவரை நன்குதெரியும்” என்றார். தேவிகை புன்னகையுடன் எழுந்து “வாருங்கள்” என்றாள். திரிவிக்ரமரும் தலைவணங்கியபடி உடன் வந்தார்.

அனைத்து வெண்முரசு விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைஉச்சவழு- கடிதம்
அடுத்த கட்டுரைசூரியதிசைப் பயணம் – 7