சூரியதிசைப் பயணம் – 4

அதிகாலையில் ஐந்தரை மணிக்கே கிளம்பிவிடவேண்டும் என்று திட்டம். எங்கள் பயணங்களில் எல்லாமே இது ஒரு நிபந்தனை. அதிகாலையில்தான் நிலக்காட்சியின் அழகு முழுமையாக வெளிப்படும். அதிகாலையில்தான் நாம் காணும் மானுட வாழ்க்கையை நுணுக்கமாக கவனிக்கிறோம், ரசிக்கிறோம். அதிகாலையை ஒருபோதும் தவறவிடக்கூடாது.

1

ஆனால் மனாஸிலிருந்து கிளம்புபோது ஏழுமணி ஆகிவிட்டது. ஏனென்றால் எங்கள் உடலுக்கு அப்போதுதான் ஐந்தரை. வெளியே இருட்டு அதற்குள் விலகிவிட்டிருந்தது. பறவைகளின் குரல்களால் விடுதியறை சூழ்ந்திருந்தது. பெட்டிகளைக் கட்டி வைத்து டீ சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். 15 ஆம் தேதி முழுக்க பயணம் செய்து தெஸ்பூர் என்ற ஊரைச் சென்றடைந்து இரு புராதனமான ஆலயங்களைப் பார்த்துவிட்டு இரவுக்குள் காசிரங்கா சென்று சேர்வது திட்டம்.

2

இத்தகைய நீண்ட கார்ப்பயணங்கள் உண்மையில் பயணத்தின் மிக முக்கியமான அம்சம். மேல்மனம் எதையும் கவனிக்காமல் மெல்லிய சலிப்புடன் அல்லது அயர்வுடன் இருக்கும். ஆனால் உள்ளுக்குள் பிம்பங்கள் வந்து நிறைந்தபடியே செல்லும். ஒரு நீண்ட ஆவணப்படம் என பக்கவாட்டில் ஓடிச்செல்லும் காட்சிகளை சொல்லமுடியும்.

அஸ்ஸாமிய வாழ்க்கையைப்பற்றி என்றேனும் ஒரு கதை எழுதுவேனென்றால் பெரும்பாலான நுண்சித்திரங்களை இந்த கார்ப்பயணமே அளித்திருக்கும். வெண்முரசு எழுதும்போது இதை அவதானித்திருக்கிறேன். பெரும்பாலான நிலக்காட்சிகள், வாழ்க்கைச்சித்திரங்கள் கார்ப்பயணத்தில் இன்னதென்றிலாமல் கவனித்துச்சென்ற கண்கள் வழியாக ஆழ்மனத்தில் சென்று தேங்கியவை.

7

பிரம்மபுத்திராவின் படுகையான இந்தமண் கங்கைப்படுகை போலவே மென்மையான வண்டலால் ஆனது. நனைந்தால் சேற்றுக்களியாக ஆகும். உலர்ந்தால் மணலாக உலர்ந்துவிடும். காய்கறிகளுக்கு மிக ஏற்றது. நெல்லும் நிறைய பயிரிடப்படுகிறது. இந்தp பருவத்தில் வயல்களில் நெல் அறுவடைசெய்யப்பட்டு காய்கறிகள் போடப்பட்டிருந்தன. நூல்கோல், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு. எல்லாமே வாளிப்பான பெரிய காய்கள்.

8

இங்கே வீட்டுக்கான கட்டுமானப்பொருட்களில் மூங்கிலும் இப்பகுதிக்காடுகளில் அடர்ந்துள்ள உயரமான யானைப்புல்லும் முக்கியமானவை. மூங்கில்களைக்கொண்டு தட்டி அமைத்து அதன்மேல் இந்த வண்டல்மண்ணை சாணியுடன் சேர்த்துக்குழைத்துப் பூசி சுவர்களை அமைத்திருக்கிறார்கள். கூரைகள் புல்லாலோ தகரத்தாலோ ஆனவை. புல்லால் ஆன தட்டிகளும் நிறைய உண்டு. மெல்லிய பெட்டிபோன்ற அழகிய வீடுகள் அஸ்ஸாமின் கிராமப்புறங்களுக்கு வினோதமான அழகை அளிக்கின்றன.

இங்கே கூலி மிகக்குறைவு, ஒருநாளைக்கு நூறு ரூபாய்தான். ஆகவே வேளாண்மை இன்னும் லாபகரமானது. உணவுப்பொருட்களும் மலிவே. காய்கறியும் மீனும்தான் முக்கியமான உணவு. பிரம்மபுத்திராவின் மீன் மிக மலிவான உணவு. இங்கே அனேகமாக அனைவருமே அசைவம் உண்பவர்கள்தான். பிராமணர்கள் கூட சாக்தர்கள் போல் ஊனுணவு உண்பவர்கள்தான்.

4

கிளம்பியது முதல் இணையநிலையம் ஏதும் கண்ணுக்குப்படவில்லை. நெடுஞ்சாலையில் பார்த்த முதல் சிறுநகரில் இருந்த இணையநிலையத்தில் இருந்து முதல் கட்டுரையை வலையேற்றம் செய்தேன். படங்களை ஏற்றிமுடிக்க ஒருமணிநேரம் ஆகிவிட்டது. மீண்டும் கிளம்பி தெஸ்பூர் நோக்கி சென்றோம்.

அஸ்ஸாமில் மிகச்சமீபமாகத்தான் நாற்கர நெடுஞ்சாலைகள் போடப்படுகின்றன. ஆகவே நாற்கர நெடுஞ்சாலையிலும் மிக வேகமாக எதிரில் பைக்கிலும் கார்களிலும் டிராக்டர்களிலும் வந்துகொண்டிருக்கிறார்கள். விபத்துக்கள் மிக அதிகம். ஒருநாள் பயணத்திலேயே இரண்டு விபத்துக்களை பார்த்தோம். நாய்கள் செத்துக்கிடப்பதை அடிக்கடி கண்டோம்.

வழியோர உணவகங்களில் சாப்பிட்டபடி மாலை மூன்றுமணிக்கு தெஸ்பூரை வந்தடைந்தோம். இந்த உணவகங்கள் ஒவ்வொன்றும் நினைவுகளை கிளர்த்துபவை. இப்படி இந்தியாவின் எந்தெந்த சிற்றூர்களிலெல்லாம் உணவகங்களில் அமர்ந்திருக்கிறோம் என நினைவுகூர்ந்து பேசிக்கொள்வது எங்களுடைய இன்பங்களில் ஒன்று. சம்பந்தமே இல்லாத ஒரு ஊரில் டீக்கடையில் அமர்ந்திருக்கும் அந்த விதியை அப்போது பிரமிப்புடன்தான் எண்ணிக்கொள்ளமுடியும்.

தெஸ்பூரில் தொல்லியல்துறை அதிகாரியின் அலுவலகத்தை கண்டடைய அரைமணிநேரம் வழிகேட்டு அலையவேண்டியிருந்தது. பாமுனி ஆலய இடிபாடுகளை பார்த்தோம். பாமுனி பாணாசுரனால் ஆளப்பட்டது என்பது தொன்மம். பிரம்மபுத்திராவின் அற்புதமான வளைவில் உள்ளது இந்த சிறிய குன்று. இதன் உச்சியில் எட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த மாபெரும் விஷ்ணுகோயில் ஒன்று இருந்திருக்கிறது. அதைச்சுற்றி விஷ்ணுவின் ஏழு அவதார வடிவங்களுக்கான கோயில்கள் இருந்தன. அஸ்ஸாமை ஆண்ட மிலேச்சஹ அரசவம்சத்தால் கட்டப்பட்ட பேராலய வளாகம் இது.

9

கிபி 1572-இல் சுல்தான் சுலைமான் ஹிர்ரானியின் தளபதி கலாபஹார் என்பவனால் இந்த ஆலயம் இடித்து அழிக்கப்பட்டது. எஞ்சிய கட்டுமானங்கள் தொடர்ச்சியான இரு பூகம்பங்களால் கற்குவியல்களாக மாற்றப்பட்டன. இப்போது முற்றிலும் கற்குவியல் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஒரே ஒரு கல்சட்டகம் மட்டுமே அழகிய சிற்பங்களுடன் காணக்கிடைத்தது. எஞ்சியவை முழுக்க வெறும் கற்கள். ஒரு நரசிம்மர் சிற்பம் ஓரமாக தூக்கி வைக்கப்பட்டிருந்தது. அதுவும் முழுமையாக இருந்தது.

தா பார்பாதியா என்ற இன்னொரு ஆலயம் சிவனுக்கும் விஷ்ணுவுக்குமானது. இதுவும் கலாபஹாரால் அழிக்கப்பட்டது இன்று இதில் எஞ்சியிருப்பது கல்லால் ஆன ஒரு வாயில்நிலை. அழகிய சிற்பங்கள் கொண்ட இந்த நிலையே இக்கோயில்வளாகம் எத்தகையதாக இருந்தது என்பதற்கான ஆதாரம். இருபக்கமும் கங்கையும் யமுனையும் அழகிய சிற்பங்களாக உள்ளனர். மேலே கருடன் நிலையை தாங்கிப்பறக்கும் கோலத்தில் இருக்க தட்சிணாமூர்த்தியும் சூரியனும் யோகேஸ்வரரும் நுணுக்கமாக செதுக்கப்பட்டிருந்தனர்.

காஷ்மீரில் அவந்திபூரின் இடிபாடுகளில் நிற்கும் உணர்வை அடைந்தேன். அதேபோல இருண்டுவந்த நேரம். முற்றிலும் கற்குவியல்களாக ஆகிப்போன மாபெரும் கலைப்பொக்கிஷம். இந்தியர்களுக்கு வரலாறு அளித்துச்சென்றது பிரம்மாண்டமான இடிபாடுகளைத்தான் என்ற எண்ணம் வந்தது.

10

காசிரங்காவுக்கு கிளம்பினோம். இருளில் இருபக்கமும் சிறிய கிராமங்களும் காடுகளும் மாறி மாறி வந்துகொண்டிருந்தன. வழியில் ஒரு சிறிய மிளா சாலைக்கு வந்து எங்களைப் பார்த்து பெரிய காதுகளை முன்கோட்டி திகைத்து விழியொளிர நின்றபின் காட்டுக்குள் ஓடிச்சென்றது. காசிரங்கா காட்டுக்கு வெளியே எக்கோரா என்னும் தனியார் விடுதியில் அறை. இப்பகுதியின் பயணத்தில் எப்படி வந்தாலும் தூசியில் நீந்தாமலிருக்க முடியாது. நல்லவேளையாக வெந்நீர் இருந்தது. குளித்துவிட்டு இக்கட்டுரையை எழுதத் தொடங்கினேன். மணிஎட்டுதான். ஆனால் நள்ளிரவின் ஒலி. நடுக்கும் குளிர்.

முந்தைய கட்டுரைசூரியதிசைப் பயணம் – 3
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 19