‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 32

பகுதி 8 : நச்சு முள் – 1

கங்கைக்குள் நீட்டியதுபோல நின்றிருந்த உயரமில்லாத குன்றின்மேல் அமைந்திருந்தது தசசக்கரம். அதைச்சுற்றி கட்டப்பட்டிருந்த செங்கல்லால் ஆன கோட்டையின் தென்கிழக்கு வாயில் மரத்தாலான பெரிய படகுத்துறையை நோக்கி திறந்தது. கோட்டைக்கும் படகுத்துறைக்கும் நடுவே இருந்த வெளியில் தாழ்வான மரப்பட்டைகூரையிடப்பட்ட துறைக்காவலர் குடியிருப்புகளும் ஆட்சியர் பணியகங்களும் அமைந்திருந்தன. வணிகச்செயல்பாடுகளேதும் இல்லாததனால் துறையில் ஓசையோ நெரிசலோ இருக்கவில்லை.

இரண்டு பெரிய போர்ப்படகுகள் மட்டும் துறைமுகப்பில் அசைந்தாடியபடி நின்றன. அப்பால் கங்கைக்குள் பாயிறக்கி ஒன்றுடன் ஒன்று பிணைத்துக்கட்டப்பட்டு நங்கூரம் இறக்கப்பட்ட இருபது போர்ப்படகுகள் நின்றிருந்தன. அனைத்திலும் துரியோதனனின் அரவக்கொடி பறந்துகொண்டிருந்தது. கோட்டைமுகப்பில் நடுவில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியும் வலப்பக்கம் இணையான உயரத்தில் துரியோதனனின் அரவக்கொடியும் இடப்பக்கம் சகுனியின் ஈச்ச இலைக் கொடியும் கர்ணனின் யானைச்சங்கிலிக் கொடியும் பறந்தன.

பாய்மரம் தாழ்த்தி எரியம்பு ஒன்றை மேலே செலுத்தியபடி பூரிசிரவஸ்ஸின் படகு துறையை நெருங்கியது. படகுத்துறையின் எரியம்புகள் எழுந்து அடையாளம் காட்டும்படி கோரின. படகிலிருந்தவர்கள் பால்ஹிகநாட்டின் கொடியை விரித்துக்காட்டினார்கள். தசசக்கரத்தின் படகுத்துறையின் காவல்மேடையில் மஞ்சள்நிறமான கொடி அசைந்து படகு துறையணையலாமென ஆணையிட்டது.

படகைச்செலுத்திய குகர்கள் துடுப்புகளை நீரோட்டத்திற்கு எதிராகத் துழாவியபடி நங்கூரத்தை நீரிலிட்டனர். கல்லால் ஆன நங்கூரம் ஆழத்திற்குச் சென்று உலைந்தாடி படகைப்பற்றிக்கொண்டதும் மெல்ல ஓடும் நீரிலேயே அது அசைவின்றி நின்றது.

படகிலிருந்தவர்கள் மெல்ல துடுப்பால் துழாவ படகு பக்கவாட்டில் திரும்பி துறைமேடைநோக்கி சென்று அங்கே அமைக்கப்பட்டிருந்த மூங்கில்சுருள்களில் முட்டி நின்றது. படகுத்துறையின் பலகை இணைப்புகள் முனகி அமைந்தன. படகின் பெருவடங்கள் கரை நோக்கி வீசப்பட்டன. அவற்றைப் பற்றி தறிகளில் கட்டியதும் படகின் அசைவு நின்றது.

பாலம் இணைக்கப்பட்டதும் கொம்பூதி முதலில் இறங்கி ”பெரும்புகழ் கொண்ட பால்ஹிகத் தொல்நாட்டின் இளவரசர் பூரிசிரவஸ் வருகை” என அறிவித்தான். பால்ஹிகநாட்டின் மறிமான் கொடியுடன் கொடிச்சேவகன் இறங்கியதும் காவல்மாடத்தின்மேல் முரசும் கொம்புகளும் முழங்கின. பால்ஹிகநாட்டின் கொடி கோட்டைக்குமேல் ஏறியது.

படகிலிலேயே நீராடி முழுதணிக்கோலத்தில் இருந்த பூரிசிரவஸ் நடைப்பாலம் வழியாக கைகூப்பியபடி இறங்கி துறைமேடைக்கு வந்தான். துறைமுகக் காப்பாளரான சிவதர் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியுடனும் மங்கலத்தாலமேந்திய மூன்று சேவகர்களுடனும் வந்து அவனை எதிர்கொண்டு “அஸ்தினபுரியின் மண்ணுக்கு பால்ஹிக இளவரசரின் வருகையால் அனைத்து நலன்களும் சூழ்வதாக!” என்று முகமன் சொல்லி வரவேற்றார். தாம்பூலமும் நறுமணச்சுண்ணமும் அளித்து “தங்களுக்கு அணித்தேர் ஒருக்கப்பட்டுள்ளது இளவரசே” என்றார்.

கோட்டை முகப்பில் பால்ஹிகக்கொடி பறக்கும் தேர் நின்றிருந்தது. எடையற்ற மரத்தால் பெரிய சக்கரங்களுடன் கட்டப்பட்ட சிறிய தேருக்கு மூன்று குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. அதற்கு மூன்று பின்கட்டைகள் இருப்பதை அவன் நோக்கினான்.

பூரிசிரவஸ் ஏறிக்கொண்டதும் பாகன் திரும்பி நோக்க அவன் கையசைத்தான். தேர் கோட்டைவாயிலைக் கடந்து ஊருக்குள் நுழைந்தது. தேரின் பின்கட்டைகள் சகடங்களில் சடசடவென ஒலித்தன. கோட்டைவாயிலுக்கு அப்பால் இருபக்கமும் சிறிய காவல்குடில்கள் நிறைந்திருந்தன. கோட்டைக்குள் சிறிய படை ஒன்று இருப்பதன் முழக்கம் கேட்டுக்கொண்டிருந்தது.

மையச்சாலை இருபக்கமும் பிரிந்து வட்டமாக உள்ளே அமைந்திருந்த உயரமில்லாத வண்டல்குன்றை கோட்டையை ஒட்டியபடி சுற்றிச்சென்றது. குன்றின்மேல் வளைந்து நெளிந்து ஏறிச்சென்ற அகலமற்ற மண்சாலையின் இருபக்கமும் சிறிய கட்டடங்கள் இருந்தன. தேன்மெழுகுடனும் அரக்குடனும் சேர்த்து அரைக்கப்பட்ட களிமண் பூசப்பட்ட மரப்பட்டைக்கூரையிடப்பட்ட இல்லங்கள் ஒன்றுடன் ஒன்று செறிந்து உச்சியில் மூன்று குவைமுகடுகள் கொண்ட அரண்மனையில் சென்று முடிந்தன. தலைகீழாக தேன்கூடு ஒன்றைப்பார்க்கும் சித்திரத்தை அளித்தது அந்தக் குன்று.

சுருள்சாலையில் தேரை ஏற்ற புரவிகள் மூச்சிரைத்தன. சாலையோரமாகச் சென்றுகொண்டிருந்த மூன்று யானைகள் விலகி வழிவிட்டன. பாகன்களின் அதட்டல் ஓசை தலைக்குமேல் கேட்டது. காலையிலேயே எழுந்துவிட்ட இளவெயில் கண்களை கூசச்செய்தது. உடல் வியர்த்து வழிய பூரிசிரவஸ் திரும்பி கீழே தெரிந்த கங்கையின் ஒளிவிடும் நீல நீரலைகளை பார்த்தான். அவற்றிலிருந்து வெம்மையான நீராவி எழுந்து வந்து குன்றைச்சூழ்வதாகத் தோன்றியது.

அந்த மிகச்சிறிய குன்று மலைமகனாகிய தன்னை களைப்படையச்செய்வதைப்பற்றி அவன் புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். ஆனால் பால்ஹிகமலைகள் குளிர்ந்தவை. அமைதியானவை. அந்தக்குன்று ஒரு பெரும் குப்பைக்குவியல். மட்கி ஆவியெழுவது.

கீழே குன்றைச்சுற்றிச் சென்ற சாலையை ஒட்டி கோட்டையை ஒருபக்கச் சுவராகக் கொண்டு ஈச்சையோலைத் தட்டிகளால் சுவர்களும் மரப்பட்டைகளால் கூரையும் இடப்பட்ட தற்காலிகப் பாடிவீடுகளில் ஈக்கூட்டங்கள் போல வீரர்கள் செறிந்து ரீங்கரித்து அசைந்துகொண்டிருந்தனர். யானைகளும் புரவிகளும் வண்டுகள் போல அவற்றின் நடுவே சென்றன. ரதங்கள் செல்லும் தூசுப்படலம் செந்நிறமான பஞ்சுத்திவலை என எழுந்து சுருண்டு மீண்டும் மண்ணில் படிந்தது. காவல்மாடங்களின் மேல் வைக்கப்பட்டிருந்த பெருமுரசங்களின் வட்ட வடிவ தோல்பரப்பு சிறிய அப்பங்களாகத் தெரிந்தது.

குன்றின்மேலிருந்த சிற்றில்லங்கள் எதிலும் மக்களோசை இருக்கவில்லை. அவை உணவும் படைக்கலமும் படகுகளுக்கான பொருட்களும் சேமிக்கப்படும் பண்டகசாலைகளாக இருக்கவேண்டும். தசசக்கரம் ஒரு வணிக நகரல்ல. பாஞ்சாலத்தின் எல்லையில் அக்குன்று இருப்பதனால் அது ஒரு முதன்மையான காவல்மையம் என அடையாளம் கண்டு அதை அமைத்திருக்கிறார்கள். அங்குள்ளவர்கள் அஸ்தினபுரியின் படைகளும் அவர்களின் குடும்பமும் மட்டுமே என பூரிசிரவஸ் மதிப்பிட்டான்.

ஒரு படைகொண்டுவந்து அந்தக் கோட்டையைப்பிடிப்பது கடினம். கோட்டையைக் கடந்தால்கூட குன்றின்மேல் ஏறிவந்து அரண்மனையை கைப்பற்றமுடியாது. கோட்டைக்குள் இருக்கும் படைகள் குன்றில் ஏறிக்கொண்டால் உள்ளே வருபவர்கள் கோட்டைக்கும் குன்றுக்கும் நடுவே இருக்கும் இடைவெளியில் அகப்பட்டுக்கொள்வார்கள்.

அரண்மனை முற்றம் சிறியதாக பிறை வடிவில் இருந்தது. ஒரு சிறிய தேர் நின்றிருக்க அவிழ்க்கப்பட்ட குதிரைகள் அப்பால் கண்மூடி அசைவற்று நின்றன. உள்ளிருந்து அரண்மனை செயலகர் வந்து அவனை வணங்கி வரவேற்றார். “பால்ஹிகநாட்டு இளவரசை வாழ்த்துகிறேன். நான் அரண்மனை ஸ்தானகர் சுருதசன்மன்” என்றார். “தாங்கள் சற்று ஓய்வெடுத்து உணவுண்டபின் இளவரசை சந்திக்கலாம்.”

பூரிசிரவஸ் “இல்லை, நான் படகில் முழு ஓய்வுடன் வந்தேன். நீராடியும் விட்டேன்” என்றான். “நேராகவே இளவரசை சந்திப்பதையே விழைகிறேன்.” சுருதசன்மர் “அவ்வண்ணமெனில் காத்திருங்கள். இளவரசரும் காந்தாரரும் அங்கரும் சிற்றவையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்…” என்றபின் திரும்பிச் சென்றார்.

கூடத்தில் பூரிசிரவஸ் காத்திருந்தபோது சுருதசன்மர் வந்து அவனை சிற்றவைக்கூடத்திற்கே வரும்படி துரியோதனன் கோரியதாக சொன்னார். பூரிசிரவஸ் எழுந்து தன் மேலாடையை சீரமைத்தபடி இடைநாழி வழியாகச் சென்று மரப்படிகளில் மேலேறி இன்னொரு இடைநாழி வழியாக சிற்றவைக்குள் நுழைந்தான்.

செவ்வக வடிவமான பெரிய அறைக்குள் காற்று சுழன்றடித்துக்கொண்டிருந்தது. சாளரக்கதவுகளெல்லாமே அசையாமல் தாழ்களில் மாட்டப்பட்டிருந்தன. எந்தச் சாளரத்திற்கும் திரைச்சீலைகள் இருக்கவில்லை. அரக்கு பூசப்பட்டு மெருகூட்டப்பட்ட மரச்சுவர்களில் சாளரங்களின் ஒளிப்பாவை தெரிந்தது.

அவையில் நடுவே போடப்பட்டிருந்த பெரிய பீடத்தில் துரியோதனன் அமர்ந்திருந்தான். அவனுக்கு இடப்பக்கமாக துச்சாதனன் அமர்ந்திருக்க வலப்பக்கம் கர்ணன் அமர்ந்திருந்தான். சுவர் சாய்ந்து துச்சலன் நின்றிருந்தான். முன்னால் தாழ்வான இருக்கையில் சகுனி கால்களை இன்னொரு பீடத்தில் போடப்பட்ட பஞ்சுத்திண்டின்மேல் நீட்டி அமர்ந்திருந்தார். மிகவும் அப்பால் அறைமூலையில் போடப்பட்ட உயரமற்ற பஞ்சுத்திண்டில் உடைந்து மடிந்த உடலுடன் கணிகர் அமர்ந்திருந்தார்.

பூரிசிரவஸ் உள்ளே நுழைந்ததுமே இயல்பாக தலைவணங்கினான். நிமிர்ந்ததும் ஒருகணம் அவன் நோக்கு கணிகரின் மின்னும் எலிக்கண்களை சென்று தொட்டு மீண்டது. அவரை அத்தனை அருகில் பார்ப்பது முதல்முறை. அவரை முன்னரே நன்கறிந்திருப்பதுபோன்ற ஓர் உணர்வு எழுந்தது. எந்தெந்த முகத்திலோ விழிகளிலோ அவர் தெரிந்திருக்கிறார் என எண்ணிக்கொண்டான். எங்கே எங்கே என சித்தம் அலைந்தது.

துரியோதனன் “அமருங்கள் பால்ஹிகரே” என்றான். பூரிசிரவஸ் அமர்ந்து உடலை எளிதாக்கிக்கொண்டான். உடலை எளிதாக்குவது உள்ளத்தையும் அவ்வண்ணம் மாற்றுவதை அவன் கண்டு பயின்றிருந்தான். சகுனி “தாங்கள் எங்களை சந்திக்கவந்தது குறித்து மகிழ்ச்சி” என்றார். “காந்தாரரே, நான் பத்து பால்ஹிககுலங்களின் குரலாகப்பேசும்படி பணிக்கப்பட்டிருக்கிறேன்” என்றபின் “குறிப்பாக பீமசேனரின் அடியால் எலும்பு உடைந்து நோயுற்றிருக்கும் சல்லியரின் குரல் இது” என்றான்.

சகுனி புன்னகைத்தார். கணிகரின் கண்களில் அதே பொருளில்லாத வெறிப்புதான் இருந்தது. ”அஸ்தினபுரியின் ஆட்சியாளர்கள் எங்கள் நோக்கில் தாங்களே. தங்களுடன் நேரடியாகப்பேசவே பால்ஹிகநாடுகள் விழைகின்றன. அத்துடன் சௌவீர நாடு அண்மையில்தான் பாண்டவர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சௌவீர மணிமுடியும் அவர்களிடமில்லை. தங்களுடனான நல்லுறவின் வழியாக அவர்கள் விழைவது தங்கள் மணிமுடியை மீட்கவே. நான் அதன்பொருட்டும் இங்கே வந்திருக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ்.

“பால்ஹிகர் என்னுடன்  ஒரு வெளிப்படையான படைக்கூட்டுக்கு சித்தமாக உள்ளனரா?” என்று துரியோதனன் கேட்டான். “ஆம்” என்றான் பூரிசிரவஸ். “ஆனால் தற்போது அப்படி ஒரு படைக்கூட்டுக்கு கைச்சாத்திட்டாலும் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஏனென்றால் இன்றும் அஸ்தினபுரியின் அரசர் திருதராஷ்டிரரே.”

துரியோதனன் கண்களில் மெல்லிய சிரிப்பு வந்து சென்றது. “சரி, அவ்வண்ணமென்றால் ஓலைப்பதிவு தேவையில்லை. வாள்தொட்டு ஆணையிட்டால் போதும்.” பூரிசிரவஸ் பணிந்து “அதை எனக்களிக்கப்பட்ட நன்மதிப்புச் சான்றாகவே கொள்வேன். ஆனால் நான் அப்படி செய்ய முடியாது. நாங்கள் பத்துகுலம். பத்துகுலத்தையும் ஓலை ஒன்றே கட்டுப்படுத்தும்” என்றான்.

துரியோதனன் சிரித்துவிட்டான். “எண்ணித்துணிந்தே உம்மை அனுப்பியிருக்கிறார்கள்” என்றான். ”எண்ணையில் நெளியும் மண்புழு என ஒரு சொல்நிகரி உண்டு. அதைத்தான் நினைவுகூர்ந்தேன்.” பூரிசிரவஸ் “அதையும் ஒரு நற்சொல்லாகவே கொள்கிறேன் கௌரவரே. நாங்கள் மிகச்சிறிய மலையரசுகள். ஓடுமிடத்தில் தவழக்கடமைப்பட்டவர்கள்” என்றான்.

துரியோதனன் ”சொல்லும், நீர் இப்போது வந்ததன் நோக்கம் என்ன?” என்றான். கர்ணன் உரத்த குரலில் “வேறு என்ன நோக்கம்? இங்கே என்ன நிகழ்கிறதென்பதை கண்டுசெல்வது…” என்றான். பூரிசிரவஸ் “அப்படி அல்ல என்று மறுத்தால் நான் பொய் சொன்னவன் ஆவேன். நான் வந்தது பால்ஹிககுலங்களின் நலன்கள் அஸ்தினபுரியின் அரசுரிமைப்போரால் எவ்வண்ணம் பாதிக்கப்படும் என அறியும்பொருட்டே. யாதவகிருஷ்ணனின் படைபலம் கண்டு அஞ்சியே தங்களை காணவந்தேன். அதையும் மறுக்கவில்லை” என்றான்.

கர்ணன் கூரிய விழிகளுடன் மீசையை நீவியபடி பேசாமலிருந்தான். துரியோதனன் “பால்ஹிகரே, நாங்கள் இங்கே தங்கியிருப்பது என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாததனால்தான். அஸ்தினபுரிக்கு திரும்பிச்சென்றால் நாங்கள் மீண்டும் என் தந்தையின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்களாவோம். அவர் தருமனுக்கே மணிமுடி என்பதில் உறுதியாக இருக்கிறார். அவரது மறைவுவரை காத்திருப்பது மட்டுமே எனக்கும் தருமனுக்கும் இன்றிருக்கும் வழி. நான் அதை விரும்பவில்லை. ஆகவேதான் வழியிலேயே இந்தக் கோட்டையில் தங்கினேன். இந்த இக்கட்டை இங்கேயே முடித்துவிட்டு திரும்ப விழைகிறேன்” என்றான்.

துரியோதனனின் அந்த அப்பட்டமான பேச்சு பூரிசிரவஸ்ஸை திகைக்கச்செய்தது. ஆனால் சகுனியின் கண்களிலோ கர்ணனின் கண்களிலோ திகைப்பு இல்லை. அது மூத்த கௌரவனின் இயல்பு எனத்தெரிந்தது. உடனே அவனைப்பற்றிய தன் மதிப்பு உயர்ந்துவிட்டதை அவன் உணர்ந்தான். ஆனால் விழிகளை எந்த உணர்ச்சியும் காட்டாதனவாக வைத்துக்கொண்டான்.

”நாங்கள் ஒரு படைநகர்வை திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம் இளைய பால்ஹிகரே” என்றான் துரியோதனன். கர்ணன் ஏதோ சொல்ல வர கைநீட்டி “இளைய பால்ஹிகரை ஒற்றர்கள் வழியாக நான் நன்கறிவேன். அவரது சொற்களும் இங்கே ஒலிக்கட்டும். நாம் இணைந்துசெய்யவேண்டிய பணி இது” என்றான். பூரிசிரவஸ் தலைவணங்கினான்.

“முன்பு துருபதநாட்டை நாங்கள் தாக்கியதுபோல ஒரு சிறிய போர். அதைத்தான் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். பாண்டவர்கள் இப்போது காம்பில்யத்தில் தனித்திருக்கிறார்கள். தங்களுக்கென ஒரு படையை அவர்கள் உருவாக்கிக்கொள்ளவில்லை. இதுதான் சிறந்த தருணம்” என்று துரியோதனன் சொன்னான். “நாம் நமது எல்லையை பாஞ்சாலப்படைகள் மீறி வந்து கொள்ளையடித்தன என ஒரு நாடகத்தை நடத்துவோம். எதிரடியாக நமது படை ஒன்று பாஞ்சாலத்தை தாக்கவேண்டும். பாண்டவர்கள் துருபதன் படையை தலைமைதாங்கி நடத்துவார்கள்…”

துரியோதனன் தொடர்ந்தான். ”அப்போரில் தருமனைக் கொல்வது நெறிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதே. ஏனென்றால் அவன் படைக்கலம் எடுத்து நமக்கு எதிராக போருக்கு வந்தவன். அஸ்தினபுரியின் இளவரசனாக நமது எல்லைகளைக் காக்கும் பொறுப்பு எனக்குண்டு. போர் முடிந்தபின் அவற்றை குடியவையில் பேசிக்கொள்ளலாம். இப்போது ஒரு சிறிய கூரிய தாக்குதல். இந்தக்கணக்கை இப்போதே முடித்துவிடலாம்.”

துரியோதனனின் விழிகள் தத்தளித்து சற்று விலகின. மீசையை நீவியபடி சற்று குரலைத் தாழ்த்தி “நீரும் நிகழ்ந்தனவற்றை அறிந்திருப்பீர். மிதியுண்ட நாகம்போலிருக்கிறாள் யாதவ அரசி. அவளை இன்னும் விட்டுவைக்கக் கூடாது. மிதித்தவர்கள் நாம் என்பதனால்” என்றான்.

சகுனியும் கணிகரும் என்ன சொல்கிறார்கள் என்று அறிய பூரிசிரவஸ் விரும்பினான். ஆனால் பார்வையை திருப்பாமல் அமர்ந்திருந்தான். சகுனி மீசையை நீவியபடி அமைதியாக இருந்தார். பேசாதபோது எப்படி இல்லாதவராகவே ஆகிவிடுகிறார் கணிகர் என அவன் வியந்துகொண்டான்.

“பால்ஹிகரே, நீர் உமது எண்ணங்களை சொல்லலாம்” என்றான் துரியோதனன். பூரிசிரவஸ் தலைவணங்கி “நான் இளையவன். களம் காணாதவனும்கூட. ஆயினும் அரசாணைக்காக என் சொற்களை முன்வைக்கிறேன்” என்று முகமன் சொன்னான்.

பின்பு “இளவரசே, அரசசுற்றம், அமைச்சர், நண்பர்கள், கருவூலம், மக்கள், கோட்டை, படை என எழுவகை படைக்கலங்கள் கொண்டவன் அரசன் என நூல்கள் சொல்கின்றன. இந்த எழுவகை ஆற்றல்களும் இன்று பாண்டவர்களிடமிருக்கின்றன என்பதே என் எண்ணம். ஐவரும் ஓர் எண்ணம் கொண்டவர்கள். விதுரரும் துருபதனும் அவர்களுடனிருக்கிறார்கள். அவர்களை வெல்வது எளிதல்ல” என சொல்லத் தொடங்கினான்.

கர்ணன் ஏதோ சொல்ல வர துரியோதனன் கையசைத்து “அவர் பேசட்டும்” என்றான். பூரிசிரவஸ் “அத்துடன் அவர்களுக்கு மக்களின் நல்லெண்ணம் உள்ளது. அது மிகப்பெரிய படைக்கலம்” என்றான். கர்ணன் ஏளனத்துடன் சிரித்து “போர்கள் நல்லெண்ணங்களால் நிகழ்வதில்லை இளையவரே” என்றான் “நல்லெண்ணங்களால்தான் நிகழ்கின்றன” என்றான் பூரிசிரவஸ் திடமான குரலில். “மக்கள் எனும் பாலில் கடைந்தெடுக்கப்படும் வெண்ணையே படை என்பது. போரை நிகழ்த்துவது படைதான்.”

கர்ணனின் உடல் பொறுமையற்று அசைந்ததை பூரிசிரவஸ் வியப்புடன் கண்டான். ஒரு கூரிய எண்ணம் அவனில் குடியேறியது. “தனிநபர் போர்களிலேயேகூட கூடியிருப்பவர்களின் கூட்டு எண்ணம் பெரிய படைக்கலமாக ஆவதைக் காணலாம் அங்கரே. அன்று மணஅவையில் தங்கள் வில்பிழைத்ததும் அதனாலேயே“ என்றான்.

கர்ணன் கடும்சினத்துடன் தன் இருக்கையின் கைகளை அடித்தபடி எழுந்து “எவரிடம் பேசுகிறீர் என்று எண்ணிப்பேசும்…” என்று கூவினான். துரியோதனன் “கர்ணா, அவர் சொல்லட்டும். அமர்க!” என்றான். கர்ணன் திரும்ப அமர்ந்துகொண்டு முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டான். துரியோதனன் “சொல்லும் பால்ஹிகரே” என்றான்.

”நான் காம்பில்யத்தை நன்கு பார்த்தேன்” என்றான் பூரிசிரவஸ். “நீங்கள் முன்னர் படைகொண்டு வென்ற காம்பில்யம் அல்ல அது. மூன்று சுற்றுக் கோட்டையும் ஏழு அடுக்குகளாக சுற்றிச்செல்லும் தெருக்களும் கொண்டது அது. தெருக்களின் கட்டடவரிசைகளும் கூட போரின்போது அரண்களாக ஆகும். அதன் கோட்டைமுகப்புகளில் எல்லாம் எரியம்புகளைத் தொடுக்கும் சக்கரப்பொறிகள் உள்ளன. ஒவ்வொரு கோட்டை வாயிலிலும் கந்தகமேந்திய பன்னிரு சதக்னிகள் காவல்காக்கின்றன. கோட்டையை ஒரு பெரும்படைகூட எளிதில் தீண்டிவிடமுடியாது.”

“ஆகவே என்ன செய்யலாமென எண்ணுகிறீர்?” என்று துரியோதனன் கேட்டான். “நான் சொல்வது ஒன்றே. இத்தருணத்தில் போர் என்பது உகந்தது அல்ல. இப்போரில் வெற்றி அடையப்படலாம். ஆனால் தோல்வி நிகழ்ந்தால் அது தங்கள் வாழ்க்கைக்கே முடிவாக அமையக்கூடும்” என்றான் பூரிசிரவஸ். துரியோதனன் தலையசைத்து “சொல்லும்“ என்றான்.

“நான் தங்கள் சார்பில் பாண்டவர்களிடம் தூது செல்ல சித்தமாக இருக்கிறேன். இதுவரை நிகழ்ந்தவற்றை அவர்கள் முழுமையாக மறந்துவிடவேண்டும் என்று கோரலாம். இந்நிலையில் அவர்களுக்கு வேறு வழி இல்லை. இன்னொரு தருணத்திற்காக காத்திருக்கலாம். அதுவே ஒரே வழி” என்றான் பூரிசிரவஸ். “இது தருணமல்ல. அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.”

“முடித்துவிட்டீரா?” என்றான் கர்ணன். பூரிசிரவஸ் தலையசைத்தான். “பால்ஹிகரே, இளையவர் என்றாலும் உமது நோக்கின் கூர்மை வியப்புக்குரியதே. ஆனால் உம்முடையது களம் காணாத அமைச்சனின் சொற்கள். அமைச்சர்கள் தோல்விக்கான வாய்ப்புகளை மட்டுமே தேடுவார்கள். அவர்களுக்கு அவை மட்டுமே கண்ணிலும் படும். வீரர்கள் வெற்றிக்கான வழிகளை தேடுவார்கள். அவர்கள் அதை கண்டடைவார்கள்” என்றான் கர்ணன்.

“நீர் நமது வல்லமைகளை கருத்தில்கொள்ளவில்லை. அஸ்வத்தாமனின் யானைப்படை நம்முடன் இருக்கிறது. படகில் அவற்றை ஏற்றிக்கொண்டுசென்று காம்பில்யத்தின் முன் இறக்கினால் நான்கு நாழிகையில் நாம் கோட்டைச்சுவரை உடைத்து உட்புக முடியும். சிந்து நாட்டு இளவரசன் ஜயத்ரதன் இன்னமும் ஊர் திரும்பவில்லை. நம் ஓலைக்காகக் காத்து காம்பில்யத்திற்கு மேற்கே கங்கைக்கரைக்காட்டுக்குள் படைகளுடன் காத்திருக்கிறான். கௌரவப்படைகளுக்கு இது ஒருநாள் போர். அவ்வளவுதான்.”

துரியோதனன் இயல்பாக சகுனியை நோக்கி திரும்ப அவர் மெல்ல “நான் இளையபால்ஹிகர் சொன்னதையே ஆதரிக்கிறேன் துரியோதனா” என்றார். “இப்போரில் நாம் வெல்வோம். ஆனால் வெல்லமுடியாமலாகிவிட்டால் நாம் இழப்பது மிகப்பெரிது. அஸ்தினபுரிக்குள் அதன்பின் நாம் நுழைய முடியாது. உன் தந்தைக்கு நீத்தார்கடன் கூட செய்யமுடியாது.”

கர்ணன் உரக்க “அப்படியென்றால் நீங்கள் என் வில்லையும் சொல்லையும் நம்பவில்லை அல்லவா? அதைச்சொல்லவா இத்தனை சொற்சுழல்கள்?” என்றான். அதிராத குரலில் “நம்புகிறேன். ஆனால் எதையும் நான் முழுமையாக நம்புவதுமில்லை” என்றார் சகுனி.

சகுனியின் அமைதியால் சீண்டப்பட்ட கர்ணன் “இது போர், பகடையாட்டம் அல்ல” என்றான். கண்களில் மட்டும் புன்னகையுடன் “கர்ணா, போர் மட்டுமல்ல வாழ்க்கையேகூட பகடையாடல்தான்” என்றார் சகுனி. “பகடைகளில் ஏறியமர்கின்றன நம்மை ஆளும் பேராற்றல்கள்.”

“ஊழா? தெய்வங்களா?” என்றான் கர்ணன் இகழ்ச்சியுடன். “காந்தாரத்து மாவீரர் நிமித்தநூல் கற்கலாயிற்றா?” சகுனி “அங்கரே, ஊழ்தான். தெய்வங்கள்தான். ஆனால் அவை குடியிருப்பது நம் அகத்தில்தான். அதைத்தான் சற்று முன் பால்ஹிகரும் சொன்னார். நாமறியாதவை. வெளிப்படுகையில் மட்டுமே அறியப்படுபவை. அவற்றையும் கருத்தில்கொண்டே நான் சிந்திப்பேன்…” என்றார்.

“என்ன வீண்பேச்சு இது? நான் கோருவது ஒன்றே. அஸ்தினபுரியின் இளவரசின் ஆணை. அதுமட்டும் போதும். நான் பாண்டவர்களை வென்று அவர் காலடியில் கிடத்துகிறேன். இது என் வில் மேல் ஆணை” என்றான் கர்ணன். திரும்பி “கௌரவரே, என்னை நம்புங்கள். நான் வென்று மீள்வேன்.” என்றான்.

கணிகர் மெல்ல அசைந்து “அங்கரே, இதில் தங்கள் தனிப்பட்ட சினமேதும் உள்ளதா?” என்றார். கர்ணன் திரும்பி “சினமா?” என்றான். அவன் குரலில் இருந்த மெல்லிய நடுக்கத்தை பூரிசிரவஸ் கண்டு சற்று வியப்படைந்தான். கர்ணன் தன்னை திரட்டிக்கொண்டு “ஆம், என்னுள் சினம் உள்ளது. அவையில் சிறுமைப்படுத்தப்பட்டவர்கள் நாம்” என்றான்.

கணிகர் மெல்லிய நடுக்கமோடிய குரலில் “அது உண்மை. ஆனால் தாங்கள் சற்று கூடுதலாக சிறுமைகொண்டீர்களோ?” என்றார். அந்தச்சொற்கள் கர்ணன் மேல் அடி போல விழுவதன் உடலசைவையே பூரிசிரவஸ் கண்டான்.

கர்ணன் பேசுவதற்குள் துரியோதனன் “ஆம், அதுவும் உண்மை. அங்கே களத்தில் வென்று திரௌபதியை அடையவேண்டியவன் இவன். அனைத்தும் அமைந்தும் ஏதோ ஒன்றால் இவன் வீழ்த்தப்பட்டான். ஆண்மகன் என்றால் அதற்கு நிகரீடு செய்யாமல் இங்கிருந்து செல்லமுடியாது” என்றான். “கணிகரே, என் நண்பனின் சிறுமை எனக்கும்தான். அவன் செய்யும் பழிநிறைவை நானும் காணவிழைகிறேன்.”

கணிகர் கைகளை விரித்து “அவ்வாறென்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். சகுனி “நமது போர் எவரிடம் மருகனே? பாண்டவர்களிடமா இல்லை பாஞ்சாலியிடமா?” என்றார்.

ஓங்கி தொடையில் அறைந்தபடி எழுந்த துரியோதனன் உரத்த குரலில் “ஆம், திரௌபதியிடம்தான். அவளிடம் மட்டும்தான். மாதுலரே, இனி என் வாழ்நாள் முழுக்க நான் போரிடப்போவது அவளிடம் மட்டுமே. இதில் இனி எந்த ஐயமும் எவருக்கும் தேவையில்லை” என்றான்.

”ஆகவே இனி இது மணிமுடிப்போர் அல்ல. காமப்போர்” என்றார் கணிகர். துரியோதனன் கடும் சினத்துடன் கையை ஓங்கியபடி அவரை நோக்கித் திரும்பி உடனே தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு மந்தணமென அடைத்த குரலில் “என்ன சொல்கிறீர்?” என்றான்.

மூச்சு வாங்க நின்ற அவனை நோக்கி பற்கள் தெரிய புன்னகை செய்தபடி “எளிய சொற்கள்…” என்றார் கணிகர். அவரது விழிகளில் புன்னகை இருக்கவில்லை என்பதை பூரிசிரவஸ் கண்டான். ஒருமுகத்தில் கண்ணுக்கும் உதடுகளுக்குமிடையே அத்தனை தொலைவு எப்படி நிகழமுடியும் என அவன் அகம் வியந்தது.

“சர்ப்பதம்சம் என்று ஒரு முள் இருக்கிறது. மிகமிகச்சிறியது. பூமுள்போல. அது யானையின் கால்களில் குத்தினால் கண்டுபிடிக்கவோ அகற்றவோ முடியாது. ஆனால் யானையின் கால்கள் மெல்லமெல்ல புண்ணாகி சீழ்கட்டும். யானை மரத்தில் சாய்ந்து நின்று காடதிர சின்னம் விளித்து வலியில் கூவிக்கூவி இறக்கும்” என்றார் கணிகர்.

அவரது பற்கள் மேலும் வெளியே வந்தன. “மிகமிகச் சிறிய முள் அது. மிகச்சிறியவை வல்லமை கொண்டவை. அவை மிகச்சிறியவை என்பதனாலேயே பெரியவற்றால் தீண்டப்படமுடியாதவை. ஆகவே அழியாது வாழ்பவை.”

பூரிசிரவஸ் கர்ணனின் முகத்தை நோக்கினான். அது திகைப்பு கொண்டது போல கணிகரை நோக்கி சிலைத்திருந்தது. துரியோதனனின் தலை நடுங்கியது. தோளில் இருந்து பரவிய துடிப்பு ஒன்று அவனுடைய பெரிய கைகளை அதிரச்செய்ததை அவன் கண்டான்.

தன் இரு கைகளையும் வெடிப்போசையுடன் கூட்டி அறைந்தபடி துரியோதனன் கூவினான் “இனி இதைப்பற்றி எவரும் பேசவேண்டியதில்லை. நமது படைகள் நாளை காலையிலேயே பாஞ்சால எல்லைக்குள் செல்கின்றன. அஸ்தினபுரியின் இளவரசனின் ஆணை இது.”

துரியோதனனின் உணர்வெழுச்சியை முன்னரே அறிந்திருந்தவர் போல எதிர்கொண்ட கணிகர் “அவ்வண்ணமே ஆகுக!” என தலைவணங்கினார். துரியோதனன் தன் இருக்கையில் அமர்ந்துகொண்டு “என் ஆணை… கர்ணா, நமது படைகள் எழுக!” என்றான்.

அனைத்து வெண்முரசு விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைகேஜரிவால்
அடுத்த கட்டுரைசூரியதிசைப் பயணம் – 17