‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45

பகுதி 10 : சொற்களம் – 3

உணவுக்குப்பின் அனைவரும் மறுபக்கமிருந்த பெரிய இடைநாழி வழியாக நடந்துவந்து நான்குபக்கமும் பெரிய சாளரங்களில் வெண்ணிறமான பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிந்தாடிய இசைமன்றில் கூடினர். பெரிய வட்டவடிவக் கூடத்தில் மரவுரிமெத்தைமேல் பட்டு விரிக்கப்பட்டு அமர்விடம் அமைக்கப்பட்டிருந்தது. சாய்ந்துகொள்ள செம்பட்டு உறையிடப்பட்ட உருளைப்பஞ்சணைகளும் சுற்றணைகளும் போடப்பட்டிருக்க மேலே பட்டுத்திரைச்சீலை பறக்கும் தொங்குவிசிறிகளும் பாவட்டாக்களும் வெளியே சென்ற சரடுகளால் இழுக்கப்பட்டு அசைந்தன.

நடுவே இருந்த அணிச்சேக்கையில் துருபதன் அமர்ந்துகொள்ள வலப்பக்கம் கிருஷ்ணனும் சாத்யகியும் அமர்ந்தனர். இளவரசர்கள் பின்னால் அமர அமைச்சர்கள் இடப்பக்கம் அமர உண்டாட்டகத்தில் இருந்த அதே முறைமைப்படி அனைவரும் அமைந்தனர். எதிர்ப்பக்கம் தனியாக அமைந்த சேக்கையில் இரு அரசியரும் திரௌபதியும் அமர அவர்களுக்குப்பின்னால் அரண்மனை மகளிர் அமர்ந்தனர். பெண்கள் உட்பட அனைவருமே மதுமயக்கில் மெல்லிய ஆட்டத்துடன் இருந்தாலும் எவரும் உரக்கப்பேசவில்லை. உடைகளின் அசைவுகளும் மெல்லிய குரல்கள் இணைந்த முழக்கமும் மட்டுமே கேட்டன.

மறுபக்கம் இடைநாழியில் சங்கொலி எழுந்தது. அங்கிருந்த பட்டுத்திரை இரண்டாக விலக நீலவண்ணத்தலைப்பாகையும் கரிய பெருமார்பில் மகரகண்டியும் மணிக்குண்டலங்களும் அணிந்த இசைச்சூதன் கையில் குறியாழுடன் வந்தான். அவனைத்தொடர்ந்து நந்துனியுடன் விறலியும் குறுமுழவும் கைத்துடியும் பயிற்றும் இரு இணைச்சூதரும் வந்தனர். சூதன் வந்து முப்புறமும் திரும்பி அவையை வணங்கியபின் அவனுக்கெனப் போடப்பட்டிருந்த சிறிய மரமேடையில் மான்தோலிருக்கைமேல் அமர்ந்தான். அவனுக்கு இடப்பக்கம் விறலியும் வலப்பக்கம் முழவுப்பாணரும் அமர துடியர் பின்னால் அமர்ந்தார்.

அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை முன்னரே மீட்டி இறுக்கியிருந்தனர். சூதன் திரும்பி விழிகளாலேயே முழவரிடம் பேசிவிட்டு விறலியிடம் ஓரிரு சொல் பேசினான். அவள் தலையில் தொங்கிய மலர்ச்சரம் அசைந்து அழகிய கழுத்தை வருடி அசைய தன் நீண்ட கருவிழிகளை சற்றே சாய்த்து ஆமென்பதுபோல் தலையசைத்து தன் நந்துனியை விரல்களால் மீட்டிக்கொண்டாள். யாழ் முனகியது. முழவும் ஆம் ஆம் ஆம் என்றது. சூதன் மமகாரத்தில் வண்டு இமிழ்வதுபோல இசையின் மண்டலத்தை பாடிக் காட்டினான்.

துருபதன் வேறேதோ எண்ணத்தில் திரும்புவதுபோல கருணரை நோக்கி சற்றே சாய்ந்தார். கிருஷ்ணன் “மருதப் பெரும்பண்ணில் செய்திறம் என்ற தென்னக வடிவம். அவர்களின் இசைநூலில் நான்காம் திறத்தின் எண்பத்திரண்டாவது புறநிலையின் சிறுதிறம்” என்றான். “ஆம், இரவுக்குரியது” என்று துருபதன் சொல்லி தலையசைத்தார். கருணர் கிருஷ்ணனை நோக்கி புன்னகைசெய்தார். “இங்கே இந்தப்பண் இல்லை” என்றார் துருபதன். கிருஷ்ணன் எதையும் சொல்லாமல் புன்னகைசெய்தான். கருணர் ஏதோ சொல்ல துருபதர் “ஆம், இருக்கிறது. ஆனால் அதன் அளவுகள் வேறு” என்றார்.

சூதன் பாடத்தொடங்கினான். வாக்தேவி வாழ்த்துக்குப்பின் பாஞ்சாலத்தின் குலமரபை கிளத்தி ஐந்தன்னையரை வணங்கினான். யாதவகுலமரபை பாடி வாழ்த்தியபின் கிருஷ்ணனை புகழ்பாராட்டி முடித்து தலைவணங்கினான். யாழ்மட்டும் சற்றுநேரம் முனகிக்கொண்டிருந்தது. பின்னர் கைகூப்பி கண்மூடி தைத்ரிய பிராமணத்தின் முதல்செய்யுட்களை சந்தத்துடன் சொல்லி கதையை தொடங்கினான்.

“தேவர் வணங்கும் சொற்கள் கொண்ட தேவபாகசிரௌதார்சரை வணங்குவோம். சிருஞ்சயர்களும் குருக்களும் சென்னியில் சூடும் அவரது பாதங்கள் வாழ்க! தாக்‌ஷாயண யாகத்தில் கனிந்த அவரது எண்ணங்கள் வெல்க! ஐதரேயபிராமணத்தின் அழகிய சொற்களால் சொல்லப்பட்ட இக்கதையை எளியவனின் இசைச்சொற்களும் அணிசெய்வதாக! ஓம், அவ்வாறே ஆகுக!”

தைத்ரிய குருமுறையின் தொல்முனிவர் நாநூற்றுவர் வழிவந்தவரும் நால்வேத முறையறிந்தவருமான சுருதமுனிவரின் ஒரே மைந்தராகிய தேவபாகசிரௌதார்சர் மொழியறியும் முன்னரே வேதமறிந்தவர். எழுதாச் சொல்பயின்று தேர்ந்தமையால் மூச்சிலேயே வேத சந்தங்கள் ஒலிப்பவர். அவரது கால்தொட்ட மண்ணில் மலர்கள் எழுந்தன. நிழல் தொட்ட காற்றில் பறந்த பறவைகள் இசை வடிவாயின. வேதவடிவர் என்று அவர் வாழ்த்தப்பட்டார். அவரது நாவுதிர்க்கும் எச்சொல்லும் வேதமென்றே அமையும் என்றனர் வைதிகர். பல்லாயிரமாண்டுகளுக்கு முன் அவரது குலமூதாதையரின் சொல்லில் எழுந்தது சவிதாவை போற்றும் காயத்ரி என்றனர் வேதமரபறிந்த அறிஞர்.

வேதச் சொற்களைக் கடைந்து வெறும் சித்தமெனும் சமித்தில் சவித்ராக்னியை எழுப்பி தழலாடிப்பெருகச்செய்யும் பெருந்திறன் கொண்டிருந்த சுருதரின் காலத்தில் மண்ணில் வாழ்ந்த பல்லாயிரம் பறவைகளும் வேதங்களை அறிந்திருந்தன. பசுக்கள் அறிந்திருந்தன. ஞானியர் சொல்லில் முளைத்து வேரூன்றி விழுதுபரப்பி பாரதவர்ஷமெங்கும் பரவியது வேதம். நூற்றெட்டு வைதிகர் குலங்களும் நாற்பத்தொரு ஆசிரியமுறைகளும் உருவாயின. ஆண்டுக்கு நான்குமுறை வேதம் பிறந்த ஐதரேயம், கைகௌஷிதகம், தளவகரம், சௌனகம், தைத்ரியம் என்னும் ஐந்து தூய காடுகளில் வைதிகர் கூடி வேதத்தை முற்றோதும் வழக்கம் உருவாகியது. மரங்களில் உறங்கும் மலைச்சீவிடுகள் என பல்லாயிரம் தொண்டைகள் ஒற்றைக்குரலில் பாடியபோது வேதம் உருகி இணைந்து ஒன்றாகியது. எம்மானுடர்க்கும் உரியதாகியது.

தூயகாடுகளில் வேள்விகளைச் செய்யும்போது இறுதிநாள் ஆகுதியை எட்டுவகை அணியியல்புகள் கொண்ட இளம்பசுவை பலிகொடுத்து அதன் குருதியை எரியளித்து முழுமையாக்கும் தொல்மரபு இருந்தது. வேள்விப்பசுவின் உடல் நூற்றெட்டு தேவர்கள் வந்து குடியேறியமையால் அவர்களின் உடலேயாகும் என்றது வேதமுறைமை. அதன் கருநிறக் கால்களில் வாயுவும் வெண்ணிற வயிற்றில் வருணனும் அதன் செந்நிற நாவில் அனலோனும் கொம்புகளில் யமனும் அமுதூறும் மடியில் சோமனும் ஒளிவிடும் விழியில் இந்திரனும் நெற்றியில் சூரியனும் வாழ்கிறார்கள். அதன் முகம் பிரம்மன். இதயம் சிவன். பின்பக்கம் விஷ்ணு. அதன் யோனியில் திரு வாழ்கிறாள். அப்பசுவை உண்பவர்கள் இப்புடவியை உண்கிறார்கள்.

அத்தனை வைதிகரவைகளுக்கும் பொதுவாக வேள்விப்பசுவை பங்கிடுவதென்பது மேலும் மேலும் கடினமாகிக்கொண்டே சென்றது. குளம்புகள் முதல் கொம்புவரை பசுவைப்பங்கிடுவதன் கணக்கு தொல்குடிவைதிகரான சுருதருக்கே தெரிந்திருந்தது. வேள்விக்குடியினர் பெருகியபோது ஒன்று நூறாகப் பெருக அவிபங்கிடும் கணக்கு ஒன்றை நூற்றுப்பதினெட்டு வரிகளும் அறுநூறு சொற்களும் கொண்ட செய்யுளாக யாத்து தன் மைந்தனாகிய சிரௌதார்சனுக்கு கற்பித்தார். அந்தக்கணக்கு அவனிடமன்றி பிறரிடம் செல்லக்கூடாதென்று ஆணையிட்டார். அக்கணக்கை அறிந்தவன் வைதிகத்தலைமையை ஆள்கிறான், அதை இழந்தால் வைதிகம் தலைமையின்றி சிதறும் என்றார்.

அகவை முதிர்ந்து அவர் தேவபாகசிரௌதார்சர் என அழைக்கப்பட்டபின்னரும் வேள்விப்பசுவை பங்கிடும் கலையை பிறர் அறியவில்லை. வேதகுலங்கள் பெருகி ஒரு பசு பன்னிரண்டாயிரம் துண்டுகளாக பங்கிடப்பட்டபின்னரும் கூட அவரே தலைமை அவிபாகராக இருந்தார். வலக்கழுத்தின் பெருங்குழாய் வெட்டப்பட்டு பசுங்குருதி எரிகுளத்தில் அவியாக்கப்பட்டு விழி நெருப்பை நோக்கி ஒளிவிட்டுக்கிடக்கும் வெண்பசுவை நோக்கியதுமே அதை பன்னிரண்டாயிரம் துண்டுகளாக அவர் தன் நெஞ்சுக்குள் பார்த்துவிடுவார் என்றனர். ஒவ்வொரு வேதகுலத்திற்கும் உரிய தேவர்களும் துணைத்தேவர்களும் எவரென அவர் அறிந்திருந்தார். கபிலமரபு கால்களுக்கு உரியதாக இருந்தது. அவர்களுக்கு பசுவின் கண்ணிலும் உரிமை இருந்தது. கௌண்டின்ய மரபு பசுவின் கொம்புக்கு உரிமை கொண்டது. பசுவின் அகிடில் ஒரு துளியிலும் அதற்கு உரிமை இருந்தது. சாண்டில்ய மரபு பசுவின் கண்களையும் நெஞ்சையும் உரிமைகொண்டிருந்தது. பிருகு மரபுக்கு மட்டுமே உரியது எரிவடிவான நாக்கு. அதை பிருகுமரபில் இணைந்த பன்னிரு மரபுகள் பங்கிட்டுக்கொண்டன.

தேவபாகசிரௌதார்சர் தொட்டு பங்கிட்டால் ஒருதுளியும் குன்றாமல் கூடாமல் ஒவ்வொருவரும் பசுவைப்பெறுவர் என்று அனைவரும் நம்பினர். ஆனால் அவர் முதிர்ந்து விழிமங்கி சொல்தளர்ந்தபோதும் தந்தை தனக்களித்த அச்சொல்லை கைவிடவில்லை. காட்டெரி என வேதம் பாரதவர்ஷத்தில் படர்ந்தது. தண்டகாரண்யத்திலும் வேசரத்தின் அடர்காடுகளிலும் தெற்கே திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் அது வேரூன்றியது. காந்தாரமும் காமரூபமும் வேதம் கொண்டன. அங்கெல்லாம் வேள்விக்குப்பின் அவிபாகம் கொள்வதில் பூசல்கள் எழுந்தன. எனவே தேவபாகரிடம் இருந்து பசுவைப்பங்கிடும் செய்யுளைக் கற்க பன்னிரு மாணவர்களை வைதிகரவை தேர்ந்தெடுத்து அனுப்பியது. அவர்கள் தேவபாகரிடம் மாணாக்கர்களாகச் சேர்ந்து பன்னிரு ஆண்டுகாலம் பயின்றனர். ஆனால் ஒரு சொல்லையேனும் அவர்களுக்குச் சொல்ல தேவபாகர் உளம் கனியவில்லை.

தேவபாகர் அகவை முதிர்ந்து வருவதை வைதிகரவை அறிந்து அஞ்சியது. அவர் அச்செய்யுளை மறப்பாரென்றால் பின்னர் வைதிகர்களை ஒருங்கிணைக்க முடியாமலாகும், தூயகாடுகளில் வேதம் எழாமலாகும் என்று அஞ்சினர். அந்நிலையில் ஒருநாள் முதுவைதிகரான பிரஹஸ்பதி தண்டகக் காட்டுக்குள் செல்கையில் மலைச்சிறுவன் ஒருவன் புதருக்குள் ஓசையின்றி ஒளிந்திருக்கும் பூனையை அம்பெய்து வெல்வதை கண்டார். பூனை தெரியாமல் கேளாமல் எவ்வண்ணம் அதை அவன் செய்தான் என்று கேட்டார். அதன் மூச்சிலாடும் இலைகளைக்கொண்டு அதன் இடத்தை அறிந்ததாக அவன் சொன்னான். அவன் காட்டின்சரிவில் கன்று மேய்த்த மலைமகள் ஒருத்திக்கு பெருவைதிகரான பத்ருவில் பிறந்தவன் என அறிந்தார். அவனுக்கு கிரிஜன் என்று பெயரிட்டு தன்னுடன் அழைத்துக்கொண்டார். அவனுக்கு வேதம் அளித்து வைதிகனாக்கி தேவபாகரிடம் அனுப்பினார்.

முதியவரான தேவபாகர் தன் தந்தை சொன்ன நுண்மொழி மறவாமலிருப்பதற்காக ஒவ்வொரு நாளும் காட்டில் அசிக்னி ஆற்றின் விரிந்த மணற்கரையில் தன்னந்தனியாக அமர்ந்து ஓசையின்றி அச்செய்யுளை ஏழு முறை சொல்லிக்கொள்வது வழக்கம். அதைக் கேட்கும் தொலைவில் அவர் எவரையும் நிற்கவைப்பதில்லை. தன் இதழசைவை எவரும் காணலாகாதென நீர்வெளி நோக்கி திரும்பி அமர்ந்திருப்பார். அவருக்குப்பின்னால் புதருக்குள் அமர்ந்திருந்த கிரிஜன் ஒரு மென்பஞ்சுத்துகளை காற்றில் விட்டு அது அவர் முன் வாயருகே பறக்கச்செய்தான். அவரது உதட்டசைவில் மென்பஞ்சுப்பிசிறு கொண்ட அசைவைக் கண்டு அச்சொற்களை உய்த்தறிந்தான். நுண்மொழியைக் கற்ற மறுநாளே ஆசிரியரின் அடிபட்ட மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டபின் திரும்பி தண்டகாரண்யம் சென்றான்.

தானில்லாமல் பெருவேள்விகள் நிகழ்வதையும் பிழையில்லாமல் வேள்விப்பசு பங்கிடப்படுவதையும் அறிந்த தேவபாகர் சினம்கொண்டு சடைமுடியை அள்ளிச்சுழற்றிக் கட்டி கிளம்பி தண்டகத்திற்கு சென்றார். அங்கே அவர் சென்றுசேரும்போது வேள்விமுடிந்து அவிபாகம் நிகழ்ந்துகொண்டிருந்தது. தன் இளம் கைகளால் கிரிஜன் பசுவை குளம்பில் கூரிய கத்தியால் தொட்டு ஓவியத்தூரிகை எனச் சுழற்றி நெஞ்சு வளைவுக்குக் கொண்டு சென்று கழுத்தை வளைத்து வயிற்றை வகுந்து அகிடைப் பகுந்து யோனியைச் சுற்றி வால் நோக்கி சென்று வளைத்து இணைத்து மென்மலரிதழைப் பிரிப்பதைப்போல வெண்தோலை அகற்றி செவ்வூன் அடுக்குகளை இனிய நூலின் ஏடுகளைப் புரட்டுவதுபோல மறித்து உள்ளே அப்போதும் அதிர்ந்துகொண்டிருந்த இதயமுகிழை கையில் எடுப்பதைக் கண்டார். தீச்சொல்லிட கையில் எடுத்த நீர் ஒழுகி மறைய நோக்கி நின்றார். துளிசிந்தாமல் பசுவைப் பங்கிட்டு விழிதூக்கிய கிரிஜனைக் கண்டு கனிந்து புன்னகைத்து “ஓ கிரிஜனே, உன்னால் அனைத்தும் பங்கிடப்படட்டும். சிறந்த பங்குகளால் வாழ்கிறது அன்பு. அன்பில் தழைப்பது வேதச்சொல். ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என வாழ்த்தினார்.

“வேதம் தழைக்கவந்த மலைமகன் அமைத்தவையே ஆரண்யகங்கள் என்றறிக! அவை வேதங்களை வினைகளாக்குகின்றன. வினைகள் பழுதறப் பங்கிடச்செய்கின்றன. வாழும் சொல்லென வேதங்களை மண்ணில் நிறுத்துகின்றன. கிரிஜனை வாழ்த்துக! அவன் சொல்லில் வாழும் தேவபாகசிரௌதார்சரை வாழ்த்துக! அவர்கள் நெஞ்சில் வாழும் சுருதரை வாழ்த்துக! அவர்களிடம் ஞானமாக வந்த சவிதாவை வாழ்த்துக! சவிதா குடிகொண்ட காயத்ரி என்றும் இவ்வுலகை ஒளிபெறச்செய்க! ஓம் ஓம் ஓம்!” சூதன் பாடி முடித்து தன் யாழ்தொட்டு வணங்கி எழுந்தான். அவை கைதூக்கி வாழ்க! என்று அவனையும் அவன் அழியாச்சொல்லையும் வாழ்த்தியது.

அவையில் பெரும்பாலானவர்கள் கண்ணயரத் தொடங்கிவிட்டிருந்தனர். துருபதனின் மோவாய் மார்பில் அழுத்தமாகப் படிந்திருக்க அவர் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார். வாழ்த்தொலி கேட்டு விழித்தெழுந்து கைதூக்கி வாழ்த்தியபின் திரும்பி கருணரை நோக்கினார். கருணர் திரும்பி நோக்க ஏவலன் பெரிய தாலத்தில் மங்கலப்பொருட்களுடன் பொன்முடிப்பை வைத்து கொண்டுவந்து அவரிடம் அளித்தான். அவர் கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்து அதை வாங்கி சூதனுக்கு அளித்து “இனிய சொல். உள்ளனல் எழுந்த சொல். வாழ்க!” என்றார். அவன் எந்த முகமாற்றமும் இல்லாமல் முறைமைச்சொல் சொல்லி அதை பெற்றுக்கொண்டான்.

திரௌபதி எழுந்து “சூதரே, எங்கு எழவேண்டுமோ அங்கு மட்டும் எழுவதே தேவர்களுக்குரிய அனல் என்பார்கள் முன்னோர். இங்கு ஒலித்தவை உம்மில் விளைந்த தேவர்களின் சொற்கள் என அறிகிறேன். உம்மையும் உம் குலத்து மூதாதையரையும் தலைவணங்கி வாழ்த்துகிறேன்” என்று சொல்லி தன் கழுத்தில் அணிந்திருந்த மணிமாலையைக் கழற்றி விறலியை நோக்கி நீட்டினாள். “தேவி, இப்பரிசை என் ஆன்மாவும் ஏற்றுக்கொள்கிறது. என் விறலியின் கழுத்தில் அந்நகை அணிசெய்யட்டும், என் சொற்கள் இந்த அவையை என” என்று சொல்லி சூதன் தலைவணங்கினான். அவன் விறலி வந்து மணியாரத்தைப் பெற்றுக்கொண்டு திரௌபதியை வாழ்த்தினாள். பிற சூதரும் பரிசில்கள் பெற்று வணங்கியபின் திரௌபதி அமர்ந்தாள்.

நிமித்திகன் எழுந்து தன் கைக்கோலை சுழற்றித்தூக்கி “இனிய இரவு. ஞானமும் உவகையும் உறவும் நிறைந்த இரவு. ராத்ரிதேவியால் சுமக்கப்பட்ட நித்ராதேவி நம் இல்லங்களை அணிசெய்க!” என்றான். ஓம் ஓம் ஓம் என அவை முழங்கியது. அனைவரும் ஆடைகள் ஒலிக்க மெல்லிய முனகல்கள் போல குரல்கள் சேர்ந்து முழங்க முழங்கால்களில் கையூன்றியும் துணைவரால் கைகொடுக்கப்பட்டும் எழுந்தனர். கிருஷ்ணன் எழுந்து துருபதனுக்கு தலைவணங்கி முகமன் சொல்லி விடைபெற்றான். சத்யஜித்திடமும் சித்ரகேதுவிடமும் பிற இளவரசர்களிடமும் விடைபெற்றான். முதலில் துருபதன் தன் தேவியருடன் கூடம் விட்டு சென்றார். அதன்பின் கிருஷ்ணன் பாஞ்சாலத்தின் அரண்மனைச் செயலனால் வழிநடத்தப்பட்டு வெளியே சென்றான். அனைவரும் கலைந்து செல்லும் ஒலி பின்னால் கேட்டது.

சாத்யகி சூதன் பாடிய வாழ்த்துச்செய்யுளுக்கு அப்பால் எதையுமே கேட்கவில்லை. அவன் இமைகள் நனைந்த சிறகுகள் போல எடைகொண்டு தாழ்ந்து வந்தன. சிந்தை தொலைதூரத்து அங்காடியின் ஓசை போல பொருளில்லாத சொற்களின் மங்கலான கலவையாக ஆகியது. அனைவரும் சேர்ந்து எழுப்பிய வாழ்த்துரைகளைக் கேட்டே அவனும் விழித்துக்கொண்டான். கிருஷ்ணனின் பின்னால் நடக்கையில் அவன் கால்கள் துவண்டன. சுவர் அசைந்தாடி அருகே வந்தது. படகில் செல்கிறோம் என்ற உணர்வை சிலமுறை அடைந்தான். ஏப்பம் விட்டபோது அவன் சற்று மிகுதியாக அருந்திய துர்வாசத்தின் இழிமணம் தொண்டையைக் கடந்து எழுந்தது.

கிருஷ்ணனின் அறையை அடைந்ததும் செயலன் தலை வணங்கி கை காட்டினான். கிருஷ்ணன் உள்ளே நுழைந்ததும் திரும்பி சாத்யகியை நோக்கினான். அதை புரிந்துகொண்ட சாத்யகி உள்ளே சென்று சுவரோரமாக நின்றான். கிருஷ்ணன் பீடத்தில் அமர்ந்து தன் சால்வையை மடிமேல் போட்டுக்கொண்டு திரும்பி அருகே இருந்த ஒரு தாலத்தில் இருந்து சுக்குத்துண்டுகளை எடுத்து சாத்யகியிடம் நீட்டினான். அதை கைநீட்டி வாங்க சாத்யகி தயங்கி பின் கிருஷ்ணனின் புன்னகையால் துணிவடைந்து வாங்கி வாயில்போட்டான். சுக்கின் இனிய மணம் உகந்ததாக இருந்தது. துர்வாசத்திற்கு மறுமருந்தே சுக்குதானா என எண்ணிக்கொண்டான். அதையும் மிதமிஞ்சிக் குடித்துநோக்கி கற்றிருக்கக்கூடும் அவர் என்று எண்ணியபோது புன்னகை வந்தது. விருந்தில் மிகுதியாகக் குடித்தவன் கிருஷ்ணன்தான். சாத்யகி ஒரு கட்டத்தில் கிருஷ்ணனை கையில்தூக்கிக்கொண்டு செல்லவேண்டுமென்றே எண்ணினான். ஆனால் அப்போதுதான் நீராடி வந்து அமர்ந்திருப்பவன் போல அவன் தெரிந்தான்.

வாயிலில் காலடியோசை கேட்டதும் சாத்யகி வியப்புடன் நோக்கினான். தருமனும் பீமனும் பின்னால் வந்தனர். தொடர்ந்து அர்ஜுனன் வந்தான். நகுலனும் சகதேவனும் வாயிலில் நின்றனர். கிருஷ்ணன் எழுந்து முறைப்படி தலைவணங்கி முகமன் சொல்லி தருமனை வரவேற்று பீடத்தை சுட்டிக்காட்டி அமரும்படி கோரினான். பீமனையும் முறைமைப்படி வரவேற்று அமரச்செய்தான். அர்ஜுனன் எதிரில் பீடத்தின் பின்னால் நிற்க கிருஷ்ணனுக்குப் பின்னால் சாத்யகியின் அருகே நகுலனும் சகதேவனும் வந்து நின்றனர். கிருஷ்ணன் அவர்களை நோக்கி புன்னகை செய்து ”சற்று தடித்துவிட்டனர்” என்றான். சகதேவன் நாணத்துடன் புன்னகைசெய்து ”ஆம், இங்கே நான் படைக்கலப்பயிற்சி செய்வது சற்று குறைவே” என்றான்.

தருமன் பெருமூச்சுடன் “நீயே அறிவாய் கிருஷ்ணா, நாங்கள் இங்கு இனிமேல் நெடுநாள் தங்க முடியாது” என்றான். “இன்று திரைக்குள் இருந்த அன்னையின் முகம் எப்படி இருந்திருக்குமென கணிக்கமுடிகிறது. நாளை அன்னையை சந்திக்கவேண்டியிருப்பதை எண்ணி நான் அஞ்சுகிறேன்.” கிருஷ்ணன் புன்னகையுடன் “ஆம், துருபதர் அனைத்து செய்திகளையும் மிகத்தெளிவாகவே தெரிவித்துவிட்டார்” என்றான். தருமன் “துருபதர் என்னிடம் கூட எதையும் சொன்னதில்லை. ஆனால்…” என்றபின் “கிருஷ்ணா, இது அவளுடைய திட்டம் அல்லவா?” என்றான். கிருஷ்ணன் “ஆம், மிகச்சிறந்த முறையில் மந்தணத்தைச் சொல்ல அவையே உகந்த இடம். சொல்லியும் சொல்லாமலும் சொல்லத் தெரிந்தால் போதும்” என்றான்.

”என்ன சொன்னாள்?” என்றான் பீமன். “மூத்தவரே, இதைக்கூட உணரமுடியாதவரா நீங்கள்? நாம் இங்கு விருந்தினர், நாடற்றவர் என்றாள்” என்றான் அர்ஜுனன் சினத்துடன். “ஆம், அப்படியென்றால் அவளும் நாடற்றவள் அல்லவா?” என்று பீமன் சினத்துடன் கேட்டான். “இல்லை, அவளுக்கு இந்த நாடு இருக்கிறது. நாம் மட்டுமே நாடற்றவர்கள்” என்று சொன்ன தருமன் “கிருஷ்ணா, ஷத்ரியர்களுடன் போர்முனையில் நிற்கவைக்கிறாள் உன்னை” என்றான். “எங்கனம்?” என்று பீமன் கேட்டான். ”மந்தா, இன்று பிரதீபரின் மணிமுடியை இளைய யாதவனின் தலையில் வைத்தது எளிய செயல் அல்ல. இந்நேரம் ஷத்ரியர் அனைவருக்கும் செய்தி சென்றிருக்கும். ஒருபோதும் அதை அவர்கள் எளிதாகக் கொள்ளமாட்டார்கள்” என்று தருமன் திரும்பி நோக்காமலேயே சொன்னான்.

பீமன் பெருமூச்சுவிட்டு தன் திரண்ட தோள்களை தளர்த்தி “என்னால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை. பாஞ்சாலியின் அகமென்ன என என்னால் அறிய முடிந்ததில்லை. நானறிந்த பாஞ்சாலி எளிய விளையாட்டுப்பெண் மட்டுமே” என்றான். “நாம் ஐவரும் ஐந்து பாஞ்சாலிகளை அறிந்திருக்கிறோம். ஆறாவது பாஞ்சாலி எங்கோ தன் தனிமையில் அமர்ந்திருப்பதையும் உணர்கிறோம்” என்றான் அர்ஜுனன். “கிருஷ்ணா, வடக்குப்போர்முனையில் அஸ்வத்தாமனை எதிர்கொண்டவன் திருஷ்டத்யும்னன். போரில் அஸ்வத்தாமனின் சதசரங்களால் புண்பட்டு அவன் இறப்புமுனையில் கிடந்து இப்போதுதான் மீண்டிருக்கிறான். அவன் அருகேதான் திரௌபதி சென்ற ஒருமாதமாக அமர்ந்திருக்கிறாள். ஒவ்வொரு நாளும் அவளுக்குள் ஊறித்தேங்கிய வஞ்சம் என்ன என்று நாமறியோம். அந்த நஞ்சைத்தான் இன்று அவையில் கண்டேன்.”

கிருஷ்ணன் சிரித்து “ஒருதுளி நஞ்சில்லாமல் பாற்கடல் நிறைவடைவதில்லை” என்றான். “என்னசெய்வதென்று தெரியவில்லை” என்றான் தருமன். “அதைத்தானே கதையினூடாக கிருஷ்ணனுக்கு ஆணையிட்டிருக்கிறாள்” என்று அர்ஜுனன் முணுமுணுத்தான். தருமன் திகைப்புடன் திரும்பிப்பார்த்தான். “நான் அஸ்தினபுரிக்குச் சென்று திருதராஷ்டிரரிடம் பேசவிருக்கிறேன்” என்றான் கிருஷ்ணன். “அதை நான் இப்போதே உங்களிடம் கேட்டு முடிவெடுக்கவேண்டியிருக்கிறது.” தருமன் மெல்ல “எதைப்பற்றி?” என்றான். “நிலமில்லாமல் நீங்கள் இனிமேல் வாழமுடியாது” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆனால்…” என்று தருமன் சொல்லத் தொடங்க “வெற்று அறச்சொற்களுக்கு இனிமேல் இடமில்லை யுதிஷ்டிரரே. அஸ்தினபுரியின் மணிமுடியை நாம் கோரிப்பெற்றே ஆகவேண்டும்” என்று கிருஷ்ணன் இடைமறித்தான்.

தருமன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “நான் அத்தையிடம் பேசுகிறேன். இப்போது நமக்குத்தேவை அஸ்தினபுரியின் மணிமுடி” என்று கிருஷ்ணன் சொல்ல “இல்லை, அதை துரியோதனனுக்கு அளிக்கவே தந்தையின் நெஞ்சம் விழையும். அதை முறைமை பேசி பிடுங்கினால் அவரது உள்ளத்தின் வஞ்சம் எங்கோ ஓர் ஆழத்தில் என்னை நோக்கி திரும்பும். நான் ஒருபோதும் அதற்கு ஒப்பேன்” என்றான். அர்ஜுனன் சினத்துடன் ஏதோ பேச முன்வர கைகாட்டி நிறுத்திய கிருஷ்ணன் “சரி, முழு மணிமுடியும் தேவையில்லை. பாதிநாட்டை கேட்டுப்பெறுகிறேன். மணிமுடியை நீங்களிருவரும் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்றான். “கிருஷ்ணா, தன் செல்வத்தை மைந்தர்கள் பகிர்ந்துகொள்வதை எந்த தந்தையும் உண்மையில் விழைவதில்லை” என்று தருமன் சொன்னான்.

“ஆம், உண்மை. ஆனால் கண்முன் தன் மைந்தர் செல்வத்தின்பொருட்டு போரிட்டு அழிவதைக்கண்டால் தந்தையர் நெஞ்சில் வாழும் மூதாதையர் கண்ணீர் வடிப்பார்கள்” என்று கிருஷ்ணன் சொன்னான். “நான் தந்தையின் நிலத்தை விழையவில்லை” என்றான் தருமன். “அப்படியென்றால் என்ன செய்யலாம்?” என்று கிருஷ்ணன் கேட்டான். “அஸ்வத்தாமனை வெல்லலாம். உத்தரபாஞ்சாலம் நம் நிலமாக அமையட்டும்” என்றான் தருமன். “அது என் ஆசிரியரின் ஆணைக்கு மாறானது. நான் வில்லேந்த மாட்டேன்” என்று அர்ஜுனன் சொல்லி எழுந்துகொண்டான். “மகதத்தை வெல்லமுடியாது. அதற்கான படை நம்மிடம் இல்லை. உசிநாரர்களை வெல்லலாம். ஆனால் அவர்கள் மகதத்தின் துணைநாடு” என்றான் பீமன். தருமன் இருவரையும் மாறி மாறி நோக்கியபின் “எனக்கு ஒன்றும் தோன்றவில்லை” என்றான்.

”யுதிஷ்டிரரே, உங்கள் பெரியதந்தைக்கு சற்றும் அகக்குறை எழாமல் பாதி நாட்டை நான் கோரிப்பெறுகிறேன். தங்கள் ஒப்புதல் மட்டும் போதும்” என்றான் கிருஷ்ணன். “அது இயல்வதல்ல…” என்றான் தருமன். “பங்கிடத்தெரிந்தவனே ஒருங்கிணைக்கத்தெரிந்தவன் என்று ஆரண்யகம் சொன்னதை  கேட்டீர்கள். நான் அதை செய்கிறேன்” என்றான் கிருஷ்ணன். “நாடு பிரியவேண்டியதில்லை. நீங்கள் இருவரும் மணிமுடி சூடி ஆளலாம். இருவருமே மாமன்னர் திருதராஷ்டிரரின் கீழே அமைவீர்கள். அஸ்தினபுரி அவர் கோல் கீழ் நின்றிருக்கும்.” தருமன் தலையை அசைத்தான். “மூத்தவரே, இன்று இதைவிட மிகச்சிறந்த வழி என ஏதும் இல்லை” என்றான் கிருஷ்ணன்.

அர்ஜுனன் “இவ்வழியைத்தான் அவளும் உணர்த்தியிருக்கிறாள் மூத்தவரே. நாம் தெய்வத்தை அதன் இருப்பிடம் விட்டு இறக்கி விட்டோம். ஆலயமின்றி அது அமையாது” என்றான். தருமன் தத்தளிப்புடன் கண்மூடி அமர்ந்திருந்தான். விழிகள் இமைக்குள் ஓடுவது தெரிந்தது. “என்ன செய்வேன்?” என அவன் மெல்ல முனகினான். “ஒன்றும் தெரியவில்லை. கிருஷ்ணா, நான் எப்போதும் என்னைச்சூழ்ந்தவர்களின் விருப்புகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்.” கிருஷ்ணன் “அதுவே அறமறிந்தோனின் ஊழ் யுதிஷ்டிரரே. அதை வெல்ல வழி ஒன்றே. பிறர் விருப்புகளை நாமே வகுத்தல். நான் செய்வது அதையே” என்று சிரித்தான்.

“கிருஷ்ணா, இதுவே என் இறுதிச்சொல். துரியோதனன் தன் தம்பியருடன் வந்து என்னைக் கண்டு பாதி நாட்டை எனக்கு உவந்தளிக்கவேண்டும். அவனே தன் கைகளால் மணிமுடி தொட்டு எனக்கு சூட்டவேண்டும். அவ்வாறெனில் அதை கொள்வேன். இல்லையேல் மாட்டேன்” என்று தருமன் சொன்னான். ”உறுதி சொல்கிறேன். அவ்வண்ணமே நிகழும்” என்றான் கிருஷ்ணன். அர்ஜுனனும் பீமனும் உடலிறுக்கம் தளர்ந்து புன்னகைசெய்தனர்.

முந்தைய கட்டுரைஉப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை
அடுத்த கட்டுரைஇன்பத்துப்பாலின் காமச்சுவை(விஷ்ணுபுரம் கடிதம் நான்கு)