‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 31

பகுதி ஆறு : மணிமருள் மலர் – 4

திருஷ்டத்யும்னன் விருந்தினர் அரண்மனையை அடைந்து தன் அறைக்குச்செல்ல இடைநாழியில் நுழைந்தபோது எதிரே சாத்யகி வருவதைக் கண்டான். புன்னகையுடன் “எனக்காகக் காத்திருந்தீரோ?” என்றான். சாத்யகி “ஆம், சந்திப்பு இவ்வளவு நீளுமென நான் எண்ணவில்லை” என்றான். “நெடுநேரம் பேசவில்லை என்றே உணர்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “யாதவ அரசி எவருடனும் மிகச் சுருக்கமாகவே பேசும் இயல்புடையவர்” என்றான் சாத்யகி. “ஆணைகளை பிறப்பிப்பது மட்டுமே அவரது இயல்பு. மீறமுடியாத ஆணைகள் எப்போதுமே மிகச்சுருக்கமானவை.”

திருஷ்டத்யும்னன் “என்னிடமும் ஆணைகளைத்தான் பிறப்பித்தார். அதற்கு முன் என்னைப் புரிந்துகொள்ளவும் தன்னைப் பற்றி நான் புரிந்துகொள்ளச் செய்யவும் சற்றே முயன்றார்” என்றான். சாத்யகி சற்று முகம் மாறுபட்டு “வியப்பாக உள்ளது. அவர் எவரிடமும் தன்னை முன்வைப்பதில்லை” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம், அப்படிப்பட்ட பெண்மணி அவர் என்று எனக்கும் தோன்றியது. ஆகவே சற்று வியப்படைந்தேன்” என்றான். “ஆனால் அவர் ஒரு உருக்குப்பாவை அல்ல. மூதன்னையர் பலர் குடிகொண்டிருக்கும் கோயில்சிலை என்று தோன்றியது. இன்று இத்தனை சிறிய நேரத்தில் நான் ஓருடலில் எழுந்த பலரைப் பார்த்து மீண்டிருக்கிறேன்.” சாத்யகி “அறைக்குத் திரும்பவேண்டுமா என்ன? நாம் இரவில் துவாரகையை மீண்டும் ஒருமுறை சுற்றி வருவோமே?” என்றான். “நானும் அவ்வாறே எண்ணினேன். பகலில் நன்கு துயின்றுவிட்டேன்” என்று சொன்ன திருஷ்டத்யும்னன் “கிளம்புவோம்” என்றான்.

தன் அணிகளை மட்டும் கழற்றி ஏவலனிடம் கொடுத்துவிட்டு “இரவில் நேரம் கடந்தே திரும்புவேன். இரவுணவை வெளியே உண்பேன்” என்றான். இருவரும் இளம் சிறுவர்கள் போல சிரித்தபடி படிகளில் துள்ளி இறங்கி பெருங்கூடத்தை அடைந்து முகப்பு மண்டபத்தைக் கடந்து பெருமுற்றத்திற்குச் சென்றனர். அங்கே சாத்யகியின் புரவியின் அருகே திருஷ்டத்யும்னனின் புரவியும் கடிவாளமும் சேணமுமாக நின்றது. “சித்தமாக வந்துள்ளீர்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், நான் இரவில் அறையில் துயில்வதில்லை. துவாரகை இரவில் விரியும் மலர் என்று யவனர்கள் பாடுவதுண்டு” என்று சொன்ன சாத்யகி தன் புரவியை அணுகி அதன் கடிவாளத்தைப் பற்றி கால் சுழற்றி ஏறிக்கொண்டான். அது அவன் ஆணைக்காக காத்திருக்காமலேயே கற்பாளங்களில் குளம்புகள் தடதடக்க விரைந்தோடியது. திருஷ்டத்யும்னன் தன் புரவி மேல் ஏறும்போது இடையில் உடலுக்குள் புண்பட்டிருந்த தசை இழுபடும் வலியை மீண்டும் உணர்ந்தான். இது எப்போது விலகும் என்ற சலிப்பும் வலி ஒப்பு நோக்க மிகக்குறைந்திருக்கிறது என்ற ஆறுதலும் தொடர்ந்து வந்தன.

வால் சுழற்றி பாய்ந்து சென்ற சாத்யகியின் புரவிக்குப் பின்னால் திருஷ்டத்யும்னன் புரவியும் விரைந்தது. அரண்மனை உட்கோட்டை வாயிலையும் தொடர்ந்த மூன்று காவல் கோட்டங்களையும் கடந்து துவாரகையின் அரசப் பெரு வீதியை அடைந்தனர். காலையில் இருந்த திரள் முற்றிலும் வடிந்து அங்கு பிறிதொரு மக்கள் கூட்டம் திரண்டிருப்பதை அவன் கண்டான். பெரும்பாலும் மாலுமிகளும் அவர்களின் கலங்களின் சிற்றூழியர்களும் அடங்கிய அத்திரள் ஒருகணம் சத்யபாமையின் அரண்மனை முகப்பின் வெண்கலக்கதவின் பரப்பு என திருஷ்டத்யும்னனுக்கு தோன்றியது. உடல்களும் முகங்களும் ஒன்றின் உடல் வளைவை இன்னொன்று நிரப்பும்படியாக அடுக்கப்பட்ட படலமென அவன் முன் நெளிந்தன. தலைப்பாகைகளில், குண்டலங்களில், மேலாடைகளில், கீழாடைகளில், கச்சைகளில் ஒவ்வொன்றிலும் இருக்கும் முடிவற்ற வகைமைகளை நோக்கி விழிவியந்தபடி அவன் சென்று கொண்டிருந்தான். பீதர்கள் மொழி குயிலின் அகவல் போல் இருந்தது. யவனர் மொழி நாகணவாய்ப்புள்ளின் குழறல் போலிருந்தது. சோனகர்களின் மொழி குறுமுழவை விரலால் நீவியது போல. காப்பிரிகளின் மொழி துடிதாளம்.

அனைத்து மொழிகளையும் இணைத்து எழுந்த துவாரகையின் மொழி என ஒன்று அவனைச் சூழ்ந்து அலையோசை என இடைவிடாது ஒன்றையே சொல்லிக்கொண்டிருந்தது. மிக நன்கறிந்த ஒன்று, சிந்தையால் தொட முடியாதது. ஒருவேளை அப்பெருவீதி கனவில் எழுமென்றால் அச்சொல்லை புரிந்துகொள்ள முடியும். அவன் புரவி எதிரே ஆடி வந்த மஞ்சல்களையும், அலையிலென உலைந்த பல்லக்குகளையும், பொற்பூச்சு மின்னிய தேர்களையும், கடிவாளம் இழுபட பிடரி சிலிர்த்த புரவிகளையும், நிழல்மேல் கருநிழல் என அசைந்து வந்த வேழங்களையும் பாம்புபோல நெளிந்து வளைந்து கடந்து சென்று கொண்டிருந்தது. வண்ணங்கள் கலந்த நதிமலர்ப்படலமென மக்கள் திரள் அலை அடித்தது. அதில் தத்தும் நெற்று என புரவி செல்வதாக உணர்ந்தான். இருமருங்கிலும் பந்தத்தழல்களும் கொடிகளும் படபடத்தன.

செண்டுவெளிக்கு அப்பால் கொற்றவையின் ஆலய முகப்பில் கூடி நின்றவர்கள் கைதூக்கி “அன்னையே, மூவரில் முதல்வியே, மூவிழி கொண்டவளே, முப்புரம் எரித்தவளே, குலம்காத்து எங்கள் பலிகொண்டு அமைக!” என்று கூவி வணங்கினர். சாத்யகி தன் புரவியை இழுத்து சற்று ஒசித்து நிறுத்தி கருவறை நோக்கி தலை குனித்து வணங்கினான். அருகே வந்து நின்ற திருஷ்டத்யும்னனும் தலை வணங்கினான். உள்ளே ஏழு வாயில்களுக்கப்பால் எழுந்த கருவறையில் கொற்றவை கடைவாயில் எழுந்த வளைஎயிறுகளும் உறுத்த பெருவிழிகளும் எட்டு தடக்கைகளில் கொலைப்படைக் கருவிகளுமென அமர்ந்திருந்தாள். காலடியில் சிம்மம் தழல் பிடரி சிலிர்க்க, செங்குருதி வாய் திறந்து விழிக்கனல் சுடர்ந்து நின்றிருந்தது. சுடராட்டு முடிவது வரை இருவரும் அங்கே நின்றனர். இறுதியில் நறும்புகையாட்டு நிகழ்ந்தது. கூடி நின்றவர்கள் வணங்கியபடி முன்னால் சென்றனர். சாத்யகி புரவியை இழுத்து சாலையில் செல்ல அவனுக்கு இணையாக திருஷ்டத்யும்னன் தன் புரவியை நடத்தினான்.

சாத்யகி “நான் வணங்கும் இறைத் தோற்றம் என்றும் அன்னையே” என்றான். “கொலைப்படைக் கருவி ஏந்தி விழி விரித்து நிற்கும் கரிய அன்னை. அருள் எழுந்த கண்களுடன் முலை சுரந்து நிற்கும் அன்னைக்கு நிகரான உள எழுச்சியை அவள் அளிக்கிறாள்” என்றான். திருஷ்டத்யும்னன் “பாஞ்சாலத்திலும் ஐந்து அன்னையரின் மைந்தராகவே குலங்கள் தங்களை உணர்கின்றனர். எங்கள் அன்னையரும் குருதி விடாய் கொண்ட கொலைத்தெய்வங்களே” என்றான். “அன்னை வீற்றிருக்கும் இல்லம் என்றும் மங்கலம் பொலிவது” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் இயல்பாக “பேரரசி இங்குள்ள யாதவர் எவரையும் முழுக்க நம்பவில்லை என்று உணர்கிறேன்” என்றான். சாத்யகியின் நட்பார்ந்த சிரிப்பு அதை சொல்லவைத்தது என்றும் சொல்லியிருக்கலாகாது என்றும் உணர்ந்து “என் உளப்பதிவுதான் அது” என தொடர்ந்தான்.

அவ்விரு கூற்றுக்களுக்கும் நடுவே தன் உள்ளத்தில் உருவான இணைப்பை சாத்யகி உணராமலிருக்கும்பொருட்டு திருஷ்டத்யும்னன் “அவர் அத்தனை யாதவரையும் கண்காணிக்கிறார்” என்றான். “அக்ரூரரைக் கூட அவர் ஐயுறுகிறார். உம்மையும் ஐயுறுகிறார்.” சாத்யகி சிரித்தபடி “உம்மைப் பற்றி அன்புள்ள ஒரு சொல்லேனும் இளைய யாதவர் நாவில் இருந்து எழும் என்றால் நீரும் கண்காணிக்கப்படுவீர்” என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்தபடி “ஆம், நானும் அவ்வாறே உணர்ந்தேன்” என்றான். சாத்யகி “எட்டு தடக்கைகளால் இளைய யாதவரை தன் மடியில் அமர்த்தியிருக்கிறார் அரசி. அவரும் தன் பல்லாயிரம் உருத்தோற்றங்களில் ஒன்றை மகவென அடிமையென அரசிக்கு அளித்து அப்பால் நின்று சிரிக்கிறார்” என்றான்.

திருஷ்டத்யும்னன் சிரித்தபடி “நானும் அதையே உணர்ந்தேன். அரசியின் ஆடியில் இளைய யாதவர் அவ்வண்ணம் தோன்றுகிறார் போலும்” என்றான். சாத்யகி “சியமந்தகமணியை கன்யாசுல்கமாகக் கொடுத்து இளைய யாதவர் அரசியை மணந்த கதையை அரங்க நாடகமாக கண்டிருப்பீர். அவர்கள் இருவரும் கொண்ட பெரும்காதலை விறலியும் பாணனும் அழகுற நடிப்பார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம் முகில் மேல் கால் வைத்து அவர்கள் விண்ணேகுவதைக் கண்டு விழிநிறைந்தேன்” என்றான். சாத்யகி “அது சலபர் என்னும் கவிஞர் இயற்றிய இசைநாடகம்” என்றான். “ஆனால் சூதர் பாடும் பாடலில் வரும் கதை பிறிதொன்று.” திருஷ்டத்யும்னன் புரவியை இழுத்து நிறுத்தி “சொல்லும்” என்றான்.

சாத்யகி அவனருகே புரவியை நிறுத்தி “நான் கதைசொல்பவன் அல்ல வீரரே. அதைச்சொல்லும் ஒரு நாடோடிச் சூதரை தேர்வோம்” என்றான். புரவியைத்திருப்பி மெல்ல சாலையில் சென்றபடி இருபக்கமும் விழிதுழாவினான். கையில் குறியாழுடன் கள்மயக்கில் எதிர்காற்றுக்கென மார்பை உந்தியபடி சென்ற சூதனைக் கண்டதும் கைதூக்கி “சூதரே, நில்லும்” என்றான். அவன் திரும்பி “எனக்கு ஏழு பொன் அளிப்பவர் மட்டுமே என்னிடம் பாடச்சொல்லவேண்டும். பிறர் முனிவரென்றால் அவருக்கு என் வணக்கம். குடிகளென்றால் என் வசை… இரண்டாக இருந்தாலும் பெற்றுக்கொண்டு விலகும்” என்றான்.

“பதினான்கு பொன் பெற்றுக்கொள்ளும்” என்றான் சாத்யகி. அவன் முகம் மலர்ந்து “அது குடிப்பிறந்த யாதவர் கூறும் சொல். நற்குடிப்பிறந்தவர்களுக்கு ஒன்றெல்லாம் இரண்டு” என்றான். “இருபத்தெட்டு பொன் அளித்தீரென்றால் உம் குலம் கார்த்தவீரியனுக்கு ஒரு படி மேல் என்று சொல்லி ஒரு காவியம் பாடுவேன்.” சாத்யகி “தேவையில்லை. பாமாபரிணயம் தெரியுமா உமக்கு?” என்றான். “பாமாபரிணயத்தில் முதல்நிலவு கண்ட படலத்தைப் பாடுவதில் நான் சிறந்தவன்” என்றான் சூதன். “முதல்கதிர்கண்ட படலத்தைப் பாடுவீரா?” அவன் கவலையுடன் “அடடா, அதற்கு இருபத்துநான்கு பொன் ஆகுமே, என்ன செய்வது?” என்றான். சாத்யகி சிரித்து “பெற்றுக்கொள்ளும்” என்றான். “நீர் யாதவரல்ல, அரசர்” என அவன் யாழை எடுத்தான்.

அங்கிருந்த மூடிய கடைமுகப்பை அடைந்து “அமருங்கள் வீரரே. மூடியகடை புனிதமானது. மலர்மகள் நீங்கிய இடத்தில் கலைமகள் விரும்பி உறைகிறாள்” என அவன் அங்கிருந்த உமிமூட்டைமேல் அமர்ந்தான். புரவிகளை நிறுத்தி இறங்கி இருவரும் அங்கிருந்த மூட்டைகளில் அமர்ந்தனர். “பாடுவதற்கான உயிர்நீர் வரவில்லையே” என்றான் சூதன். சாலையில் சென்ற கள்வணிகனை திரும்பிப்பார்த்த சாத்யகி “உமது விழி கூரியது” என்றபின் மதுகொண்டுவரச்சொல்லி கையசைத்தான். “இவன் சிறந்த மதுவணிகன். அங்கிருந்தே என் பின்னால் வருகிறான். என் முன்னால் பாடல்கேட்க விழைபவர் வருவார் என அறிந்தவன்” என்றான் சூதன்.

குடுக்கையில் மதுவைப்பெற்று முழுமிடறுகளாக அருந்தி மேலாடையில் வாய்துடைத்தபின் சூதன் யாழை மீட்டி விழிகளை பாதிமூடி சற்றுநேரம் இருந்தான். பின்பு அதுவரை இருந்த குழறல் முழுதாக மறைந்து அறியாத்தேவன் ஒருவன் வந்து பாடுவதுபோன்ற ஆழ்ந்த குரலில் பாடலானான். “அவன் உடல் கொண்ட நீலமென இளமழை. மண்மயில் விரித்த தோகை. காலை எழுந்து கூந்தல் சுழற்றி முடிந்து வெளிவந்து அம்மழையை நோக்கி நின்றாள். அவள் உடல் சிலிர்த்து தாழைப் பூமுட்கள் உடலெழுந்தன. கைகளால் தன் முலைகளைச் சேர்த்தணைத்து கன்னத்தில் விரல் பரப்பி நோக்கி நின்றாள்.”

மூதாய்ச்சி ஒருத்தி அவளை தொலைவிலிருந்து கண்டு பொற்கலத்தில் காய்ச்சிய பாலமுதுடன் அருகணைந்து அதை அவளிடம் கொடுத்து “இளையவரை எழுப்பி இதை அளியுங்கள் இளவரசி” என்றாள். பாமா அதை வாங்கிக்கொண்டதும் இயல்பாக “இன்று பகலும் அவருடன் இருங்கள். மாலையே அவர் ஜாம்பவான்களின் காளநீலக் காட்டுக்கு திரும்ப வேண்டுமல்லவா?” என்றாள். பாமா திகைத்து “இன்றா, ஏன்?” என்றாள் . “நாளை மறுநாள் வளர்பிறை மூன்றாம் நாள் அல்லவா?” என்றாள் மூதாய்ச்சி. “அதற்கென்ன?” என்று அவள் கேட்டாள். “அன்றுதானே ஜாம்பவர் குல இளவரசி கலிகையை யாதவ இளவரசர் கடிமணம் கொள்ளப்போகிறார்?” என்றாள் மூதாய்ச்சி.

பாமா ஒருகணம் பொருள்கொள்ளாமல் நோக்கி உடனே சினம் பற்றிக்கொண்டு கைகளை ஓங்கியபடி இருபடிகள் இறங்கி வந்து உரக்கக் கூவினாள் “என்ன சொல்கிறாய்? எங்கு கேட்ட சொற்களை இங்கு உமிழ்கிறாய்? முதியவளே, எவர் முன் நின்று பேசுகிறாய்?” அஞ்சி பின்னடைந்த ஆய்ச்சி “யான் ஒன்றும் அறியேன் இளவரசி… நேற்று மாலை யமுனையில் நீராடுகையில் இளம் ஆய்ச்சியர் பேசுவதைக் கேட்டேன்” என்றாள். “என்ன கேட்டாய்? சொல்! என்ன கேட்டாய்?” என்றாள். “காளநீலக் காட்டின் இளவரசி ஜாம்பவதியை இளைய யாதவர் கடிமணம் கொள்ளவிருப்பதாக சொன்னார்கள் இளவரசி.”

பாமை இறங்கி இளமழையில் நனைந்தபடி ஓடி ஊர்மன்றில் முந்தையநாள் மதுமயக்கில் மரவுரி போர்த்திச் சுருண்டு உறங்கிய சியாமனை உலுக்கி எழுப்பி “சொல், என்ன நடந்தது அங்கே?” என்றாள். “நானறியேன் இளவரசி. நான் முன்னரே வந்துவிட்டேன்” என்றான் சியாமன். “இல்லை, நீ அறிவாய். நீ அவர் தூதன். சொல், இல்லையேல் இப்போதே உன் தலையை கொய்தெறிவேன்” என்றாள். அவன் நடுங்கியபடி எழுந்து மரவுரி போர்த்தி நின்று சொன்னான் “இளவரசி, அன்று காட்டுக்குள் இளைய யாதவர் ஜாம்பவானை நிலம் சேர்த்து வென்று நின்றபோது ஜாம்பவான் தங்கள் குல வழக்கப்படி இளைய யாதவரின் முன் தன் தலையணியை வைத்து பணிந்தார். இளையவனே, நீ என்னைக் கொல்ல உரிமைகொண்டவன் என்றார் ஜாம்பவான். அவர் குலமும் அமைதியாக அதை ஏற்றது.”

“அவர் முன் தலைவணங்கி உங்களை வெல்ல இங்கு வரவில்லை கரடிகுலத்தரசே. நீர் கொண்டிருக்கும் சியமந்தகமணியை பெறவே வந்தேன் என்று இளைய யாதவர் சொன்னார். இளையோனே, ஜாம்பவர்கள் கொண்ட பொருளை திருப்பி அளிப்பதில்லை. என்னைக் கொன்று அதை கொண்டு செல்க என்றார் ஜாம்பவான். மூத்தவரே, தொல்புகழ் ராமன் தந்தையென நின்ற குடியைச் சார்ந்தவர் நீர். நான் எப்படி உங்களை கொல்வேன்? அப்பெரும்பழியை யாதவர்குலம் மீது எப்படி சுமத்துவேன் என்றார் இளைய யாதவர். நான் கொணர்ந்து குலம் சேர்ந்த பொருளை என் உயிர் இருக்கையில் எவரும் கொள்ளலாகாது. அதற்கு என் மூதாதையர் எந்நிலையிலும் ஒப்பார். குலமுறை பிழைத்து நான் உயிர் வாழேன் என்று ஜாம்பவான் உறுதிச்சொல் வைத்தார்.”

“சொல்சோர்ந்து என்ன செய்வதென்று அறியாமல் நின்ற இளைய யாதவரை நோக்கி முதிய ஜாம்பவான் ஒருவர் ஒருவழி உள்ளது அரசே, எங்கள் அரசர் ஜாம்பவானின் மகள் ஜாம்பவதியை மணம் கொள்ளுங்கள். பெண் செல்வமாக அந்த மணியை பெற்றுக்கொள்ளுங்கள். அது எங்கள் மூதாதையருக்கு உகந்ததே என்றார்” என்று சியாமன் சொன்னான். “இளவரசி, அவள் பெயர் கலிகை. கருங்கல்லில் தேவசிற்பி நூறாண்டுகள் செதுக்கிய சிற்பம் போன்று பேரழகு கொண்டவள். அருகே விழிமலர்ந்து நின்றிருந்த அவளை திரும்பி நோக்கிய பின் இளைய யாதவர் அவ்வண்ணமே ஆகுக என்றார். வளர்பிறை மூன்றாம் நாளில் மணம் நிகழுமென முடிவு செய்யப்பட்டது. மகட்செல்வமாக அந்த மணியை ஜாம்பவான் இளைய யாதவருக்கு அளித்தார்.”

சினம்கொண்டு உடல் நடுங்க நின்ற பாமா திரும்பி மழையிலிறங்கி ஓடி தன் மணிக்குடிலை அடைந்து அதன் மரப்பட்டைக் கதவை இருகைகளாலும் விரியத் திறந்து உள்ளே சென்று மஞ்சத்து அருகிருந்த குறுங்கால் பீடத்தில் இருந்த குறுவாளை எடுத்து அங்கே மலர்ச்சேக்கையில் துயின்று கொண்டிருந்த இளையவனின் நெஞ்சில் பாய்ச்ச ஓங்கினாள். அவள் பின்னால் ஓடிச்சென்ற மூதாய்ச்சி அலறி “அன்னையே, ஏது செய்கிறாய்?” என்று கூவினாள். ஓங்கிய கை காற்றில் நின்று நடுங்க அரசி தளர்ந்து விம்மலுடன் விழிநீர் உகுத்தாள்.

ஓசை கேட்டு விழித்து இளஞ்சிறுவனின் புன்னகையுடன் அக்குறுவாளையும் அவள் விழிநீரையும் நோக்கி இளைய யாதவன் அசையாது படுத்திருந்தான். “வஞ்சகன்! நெறியற்ற வீணன்! உன்னைக் கொன்று என் கலி தீர்ப்பேன்” என்று அரசி கூவ “உன்னால் முடியுமென்றால் அவ்விறப்பே என் வீடுபேறெனக் கொள்வேன்” என்றான் இளையவன். மீண்டும் குறுவாளை ஓங்கி நடுங்கும் குரலில் “என்னால் முடியும். இக்குருதியால் என் அழல் அவிப்பேன்” என்று இளைய அரசி சொன்னாள். “அவ்வண்ணமே ஆகுக!” என்று இமையும் அசைக்காமல் அவன் கிடந்தான். மீண்டும் குறுவாள் சரியும் விழியென தாழ்ந்தது. எஞ்சிய சினத்துடன் ஓங்கி மெத்தையில் அக்குறுவாளால் குத்தினாள். வெறி கொண்டவள் போல அதை குத்தி பிசிறுகளாக பறக்க விட்டாள். நோக்கி நின்ற மூதாய்ச்சி நெஞ்சை பற்றிக்கொண்டு “என்ன செய்கிறாய் அன்னையே, என்ன செய்கிறாய்?” என்று கூவினாள்.

தொய்ந்து கால்மடித்து தரையில் அமர்ந்து படுக்கையில் முகம்புதைத்து விழுந்து குலுங்கி அவள் அழ இளைய யாதவன் எழுந்து “பாமா, நீ இந்த மலர்ச்சேக்கையில் நூறு முறை குத்தியிருக்கிறாய். உன் முன் நூறு முறை இறந்து இப்பிறவி கொண்டு இங்கு நின்றிருக்கிறேன்” என்றான். “விலகிச் செல்! என்னிடம் சொல்லெடுக்காதே. இக்கணமே உன்னை விட்டு நீங்குகிறேன். நீ என்னவன் அல்ல. பிற பெண்ணிற்கு சொல்லளித்தவன் என் கணவன் அல்ல” என்று பாமா கூவினாள். “நான் உனக்கு முன் எவருக்கும் சொல்லளிக்கவில்லையே” என்றான். “எனக்கு நிகர் வைத்த ஒருவனை நான் ஏற்கமாட்டேன்” என்றாள் பாமா. “என் சொல் இங்கு நிற்கட்டும். இப்புவியில் உனக்கு நிகரென எவரையும் நான் வைக்கவில்லை” என்று அவன் சொன்னான்.

ஒருகணம் திகைத்தபின் சினம் திரட்டி “உன் சொற்கள் அமுதில் முக்கிய நஞ்சு போன்றவை. என்னை இழிநரகில் ஆழ்த்தும் கருநாகங்கள் அவை. விலகிச் செல்! இனி ஒருபோதும் உன்னை நோக்கி விழி எடுக்கேன்” என்றாள். “அதை நீ சொல்லும்போதும் உன்விழிகள் என் கால் நகங்களை பார்க்கவில்லையா?” என்றான் அவன். “இல்லை, பார்க்கவில்லை. பார்த்தன என்றால் என் விழிகளை இக்கணமே கிழித்துப் போடுகிறேன்” என்று மெத்தையில் கிடந்த குறுவாளை அவள் எடுத்தாள். “சரி, என் கோலத்தை இனிமேல் ஒருபோதும் பார்க்க விழையவில்லை என்றால் சுழற்றி எறி உன் விழிகளை” என்று அவன் சொன்னான். கை தளர குறுவாள் வீழ ஏங்கி அழுதபடி “என்ன உரைப்பேன்! எவ்வண்ணம் வந்து இவனிடம் சிக்கிக்கொண்டேன்!” என்று சொல்லி பாமை அழுதாள்.

ஆய்ச்சியை நோக்கி “முதியவளே, நீ சொல்! இவ்விளையவள் அன்றி என் நெஞ்சில் எவருக்கேனும் இடம் உண்டா?” என்றான். “எங்ஙனம் இருக்க முடியும்?” என்றாள் முதியவள். “பிறகென்ன?” என்றான் அவன். பாமா “அப்படியென்றால் எப்படி கரடிகுலத்திற்கு வாக்களித்தீர்? “என்றாள். “இளையவளே, இங்கு நீ உயிர் துளிர்த்து சொட்டும் கடன் கொண்டு நின்றிருக்கையில் நான் எதை சிந்திக்கமுடியும்? அந்த அருமணியைக் கொள்ள பிறிதொரு வழியை நான் அறிந்திலேன்” என்றான். “இது பொய். மாயனே, நீ அறியாத வழியென்று இப்புவியில் எதுவுமில்லை. அப்பெண்ணை நோக்கியபோது உன் உள்ளம் விழையவில்லையா? உண்மையை சொல்!” என்றாள். “ஆம், விழைந்தது. உண்மையை கேட்கிறாய், ஆகவே சொல்கிறேன். உலகிலுள்ள அத்தனை பெண்களையும் என் உள்ளம் விழைகிறது” என்றான் யாதவன்.

“சீ! என் முகம் நோக்கி இதைச் சொல்ல உனக்கு நாணமில்லையா?” என்றாள். “திருமகளே, உன் கூந்தல் கரும்பெருக்கு மட்டும் தனித்தொரு பேரழகாய் என் முன் அணையும் என்றால் எத்தனை நன்று அது என நினைத்தேன். அவ்வழகே அவளாக அங்கு நிற்கக் கண்டேன் அதை எங்ஙனம் துறப்பேன்?” என்றான். ஒரு கணம் முகம் மலர்ந்து பின்பு மேலும் சினம் கொண்டு எழுந்து அருகிருந்த நீர்க்குடுவை ஒன்றை எடுத்து அவரை நோக்கி எறிந்து “இழிமகனே, என்னை என்ன கல்லா கலிமகள் என்று நினைத்தாயா? இச்சொல்லில் உள்ள இழிபொருளை அறியாத பேதையா நான்? என் குழல் அழகை அவளிடம் கண்டாய் என்றால் என் பிற அழகுகளை எங்கு காண்பாய்?” என்றாள். “ஏழழகு கொண்டவள் நீ. அவ்வேழையும் தனியாக அடைய விழைகிறேன்” என்றான்.

அணங்கு எழுந்தவளாக “போ வெளியே! இக்கணமே வெளியே போ!” என்று கூச்சலிட்டு அருகிருந்த ஒவ்வொரு பொருளாக எடுத்து அவன் மேல் எறியத் தொடங்கினாள். ஆய்ச்சி அஞ்சி வெளியே ஓட அவர் அங்கேயே சிரித்தபடி நின்றார். நாகம் போலவும் எரிதழல் போலவும் அவள் வீசிய ஒவ்வொன்றையும் வளைந்து உடல் தவிர்த்தார். எதைக் கொண்டும் அவரை எறிய முடியாது என்றறிந்து தளர்ந்து மஞ்சத்தில் அமர்ந்து இரு கைகளையும் கிழிந்த சேக்கை மேல் மாறி மாறி அறைந்து “நான் சாக விரும்புகிறேன். இனி ஒருகணமும் உயிர் தரிக்கேன். என் கற்பும் பொறையும் இக்கள்வனால் அழிக்கப்பட்டன. கன்னியெனக் காத்திருந்தபோது எத்தனை தூயவளாக இருந்தேன்! இவன் முன் காமத்தால் களங்கமுற்றேன். துயர் மட்டுமே இவனிடமிருந்து இனி பெறுவேன் போலும்” என்றாள்.

“இச்சொற்களை நீ நம்பினாய் என்றால் ஒன்று செய். நேற்று நான் அணிவித்த அப்பாரிஜாதத்தை எடுத்துப் பார். குழலணிந்த பாரிஜாதம் ஓர் இரவெல்லாம் எப்படி புதுமலர் போல் வாடாதிருக்கிறது என்று அறிவாய்” என்றான். திரும்பி தன் கருங்குழலைச் சுற்றிய மலரை எடுத்து நோக்கி வியந்து முகர்ந்து பின் விழி தூக்கி அவனை நோக்கி “எங்ஙனம் இது இவ்வாறுள்ளது?” என்றாள். “நான் கொண்ட பெரும்காதலை பாரிஜாதம் அறியும்” என்றான். “இது உன் உளமயக்குத்திறன்” என்றாள். “தேவி, உன் அகத்தே மலர்ந்த பாரிஜாதங்களை கேள். பெரும் காதலுக்கப்பால் நீ அடைந்தது பிறிதென்ன? உன் அகம் விழைவது அக்காதலையன்றி பிறிதில்லை” என்றான்.

“இல்லை, உன் காதல் எனக்குத் தேவையில்லை. இனியொரு சொல்லும் சொல்லாதே. நீ விழையும் இடத்திற்கு செல்!” என்று சொல்லி அவள் தன் மேலாடையை அள்ளி இட்டு படியிறங்கி முற்றத்திற்கு வந்தாள். குடில் வாயிலில் நின்று “இன்று மாலை நான் கிளம்புவேன்” என்றான். “கிளம்பு. ஆனால் திரும்பி வராதே. அவளை அழைத்துக்கொண்டு துவாரகைக்கு செல். இங்கு இப்பாரிஜாத மலரும் நானும் இருப்போம். ஒருபோதும் வாடாத இதன் நறுமணமே எனக்குப் போதும்” என்றாள். அவன் பின்னால் வந்து “நான் வேண்டாமா உனக்கு?” என்றான். திரும்பி கண்கள் நிறைந்து வழிய “கரியவனே, என் இளமையில் நீ என எண்ணி நானெடுத்து வைத்த மயிற்பீலி விழியொன்று என் அறை பட்டு மடிப்பிற்குள் உள்ளது. எக்கணமும் அதைத் திறந்து உன் விழி நோக்கி அகம் மலர என்னால் முடியும். பிற பெண்டிர் உடல் தொட்ட உடலெனக்கு தேவையில்லை. என் உளம் தொட்ட அப்பீலியே போதும். செல்க!” என்று சொல்லி விரைந்து நடந்தாள்.

அவள் செல்லும் அழகை அவன் நோக்கி நின்றான். இளமழை நனைந்து அவள் ஆடை கொப்புளங்களாக எழுந்து மடிந்து உடலில் ஒட்டி விசும்பல் ஒலியெழுப்பியது. அவள் ஆயரில்ல முற்றத்தை அடைந்து செம்மண் சேற்றில் பதிந்து சென்ற பாதச்சுவடுகளை எஞ்சவிட்டு திண்ணையில் ஏறி சொட்டும் கூரைவிளிம்பு அமைத்த மணித்தோரணத்தைக் கடந்து உள்ளே சென்று மறைந்தாள். காலடிச்சுவடு செம்மலர்மாலை போல கிடந்தது. அதில் நீர் நிறைந்து ஒளி தேங்கியது. அவன் திரும்பி பொக்கை வாய் பொத்தி விழிநிறைந்த சிரிப்புடன் நின்ற முதிய ஆய்ச்சியை நோக்கி “ஆய்ச்சியே, காதலுக்கு அப்பால் பெண்கள் நாடுவது எதை?” என்றான். “மேலும் காதலைத்தான்” என்று சொல்லி நகைத்தாள் அவள்.

முந்தைய கட்டுரைடொரெண்டோ உரைகள்
அடுத்த கட்டுரைஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)