‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 42

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 8

கைகளை மார்பின்மேல் கட்டியபடி தலைதூக்கி புகைத்திரைக்குள் நீர்ப்பாவை போல ஆடிக்கொண்டிருந்த கிருஷ்ணவபுஸை நோக்கி நின்ற இளைய யாதவரை திருஷ்டத்யும்னன் நோக்கினான். அவர் சுருள்குழலில் அந்தப்பீலி கைக்குழந்தை விழிபோல திறந்திருந்தது. அங்கு நிகழ்ந்த எதையும் அறிந்திராததுபோல. வானிலிருந்து குனிந்து நோக்கும் அன்னையை நோக்கி அக்குழந்தை கைகளை உதைத்துக்கொண்டு நகைசிந்தி எழமுயல்வதுபோல.

இளைய யாதவர் திரும்பி தன் பின்னால் நின்ற முதல் படைத்தலைவனிடம் “இப்பெண்களை கலங்களுக்கு கொண்டு செல்லுங்கள். இங்கிருந்து நம் கலங்களுக்குள் புகுந்த அக்கணமே இவர்கள் துவாரகையின் குடிகள் ஆகின்றனர். அரசகுடியினர் முறைமையனைத்தையும் தக்கவைத்துக்கொள்கின்றனர்” என்றார். “ஆணை” என்று அவன் தலை வணங்கினான். “அவர்களில் துவாரகைக்கு வரவிழையாதவர்களை அவர்களின் குடிமூதாதையரின் ஊர்களுக்கு அனுப்புங்கள். படகில் ஏறியதுமே அதற்கேற்ப தனித்தனியாக பிரித்துவிடுங்கள்.”

பலராமர் உரக்க “நாம் வந்த வேலை அவ்வண்ணமே உள்ளது இளையோனே. சியமந்தகம் இன்னும் நம்மிடம் வரவில்லை. சததன்வா சென்ற வழி அறியக்கூடுவதாகவும் இல்லை” என்றார். இளைய யாதவர் புன்னகைத்து “மீன்போல நீரில் வாழ்பவனல்ல மானுடன். மண்ணில் காலூன்றி நடக்கையில் முற்றிலும் தடயமின்றி செல்ல மானுடனால் இயலாது” என்றபின் காவலர்தலைவனிடம் “சததன்வாவின் குதிரைநிலையை நான் காணவிழைகிறேன்” என்றார். “குதிரைநிலை என பெரிதாக ஏதுமில்லை அரசே. ஒருசில குதிரைகள் நிற்கும் மரக்கொட்டகைதான் இருந்தது” என்றான் காவலர்தலைவன்.

திருஷ்டத்யும்னன் “நமது எரிபரந்தெடுத்தலில் மாளிகையுடன் சேர்த்து குதிரைக்கொட்டிலும் சாம்பலாகி விட்டிருக்கிறது” என்றான். இளைய யாதவர் “இங்கு புரவிகளை அவிழ்த்து வெளியே கட்டுமிடமும் அவற்றிற்கு காலை தசைப்பயிற்சி கொடுக்குமிடமும் இருக்கும்” என்றார். திருஷ்டத்யும்னன் “அதை நான் காட்டுகிறேன்” என்றான். “வருக!” என்று இளைய யாதவர் அவனுடன் வந்தார்.

சததன்வாவின் சிறிய அரண்மனை இருபக்கங்களிலும் ஓங்கிய மூங்கில்முகப்புகளுடன் கூம்புவடிவக் கூரையுடன் மலைக்குடிகளின் இல்லங்களின் அமைப்பில் கட்டப்பட்டிருந்தது. அதன் பின்பக்கம் மையக்கட்டடத்துடன் இணைக்கப்பட்டதாக இருந்தது எரிந்தணைந்த குதிரைநிலை. அங்கிருந்து பிரிந்து சென்ற ஒற்றையடிப்பாதையின் மறுபக்கம் சாலமரங்கள் ஒன்றுடன் ஒன்று கிளை பின்னி நின்ற சிறிய மேட்டிற்கு அப்பால் சற்றே சரிந்த புற்பரப்பாக புரவிப் பயிற்றிடம் தெரிந்தது. பசும்நிலம் மறுமுனையில் சற்று வளைந்து மேலேறி முள்மரங்களால் ஆன உயிர்க்கோட்டை விளிம்பை அடைந்தது. புரவிகள் தொடர்ந்து ஓடிய கால் தடங்கள் பட்ட இடம் புற்பரப்பில் கரிய சேற்றுத்தடம் போல தெரிந்தது.

முதன்மை சாலமரத்தடியில் சென்று நின்று நோக்கியபின் இளைய யாதவர் அந்த நிலத்தை கூர்ந்து நோக்கியபடி நடந்தார். மூன்று மரங்களால் சூழப்பட்ட சிறிய மண்மேட்டின் அருகே வந்ததும் நின்று தரையை நோக்கி “இங்குதான் சததன்வாவின் புரவி நின்றிருக்கிறது” என்றார். திருஷ்டத்யும்னன் “ஆம். இவ்விடத்தின் அமைப்பு அதையே காட்டுகிறது” என்றான். இளைய யாதவர் “அவன் புரவியின் பெயர் சுக்ரீதம். சோனக நாட்டைச் சேர்ந்த நான்கு வயதான இளைய பெண்புரவி அது. இந்தப் பெரிய குளம்படிகள் அதற்குரியவை” என்றார்.

திருஷ்டத்யும்னன் குனிந்து நிலத்தில் படிந்திருந்த குளம்புச் சுவடுகளை நோக்கினான். மற்றபுரவிகளின் குளம்புகளைவிட அவற்றின் முகப்புவளைவு பெரியது. மென்தோலில் நகவடுக்கள் போல அவை தெரிந்தன. இளைய யாதவர் “பாஞ்சாலரே, அது ஐந்து நற்சுழிகள் கொண்ட புரவி. இருபக்கமும் முற்றிலும் நிகர்நிலை உடல் கொண்டது. இக்குளம்புகள் அதன் உடலின் துலாநிலையை காட்டுகின்றன” என்று கைசுட்டி “நான்கு சுவடுகளும் மிகச்சரியாக ஒரே திசை நோக்கி அமைந்துள்ளன. நின்றிருக்கையில் கால்கள் ஒரேயளவில் மண்ணில் அழுந்தியிருக்கிறது” என்றார்.

மூன்று காலை ஊன்றி வலது முன் காலை சற்றே தூக்கி அப்புரவி நின்றிருப்பதை திருஷ்டத்யும்னன் முழுமையாக கண்டு விட்டான். “ஒற்றர் செய்திகளின்படி அது தூய வெண்ணிறம் கொண்டது. நீள்முகமும் செவ்விழிகளும் சிறியசெவிகளும் உடையது. அஞ்சுவது, ஆனால் விரைவுமிக்கது” என்ற இளைய யாதவர் “அத்தகைய புரவியின் குறை என்னவென்றால் அதன் குளம்புச்சுவடுகளை மிக எளிதே இந்தக் காட்டில் எவரும் கண்டுவிட முடியும்” என்ற பின் திரும்பி ஏவலனிடம் “எனக்கொரு புரவி கொண்டு வாருங்கள்” என்று ஆணையிட்டார்.

ஏவலர் விரைந்தோடி புரவிகளுடன் வந்தனர். கரிய யவனப் புரவியொன்றில் ஏறிக்கொண்டு இன்னொன்றை சுட்டிக்காட்டி “ஏறுங்கள் பாஞ்சாலரே” என்றார் இளைய யாதவர். திருஷ்டத்யும்னன் தனக்கு அளிக்கப்பட்ட யவனப் புரவியின் மேல் ஏறிக்கொண்டான். பலராமரும் இன்னொரு கொழுத்த புரவியில் ஏறிக்கொண்டார். “பன்னிருவர் என்னை தொடர்க!” என்றார் இளைய யாதவர். “சததன்வா பெரிய படையுடன் சென்றிருக்க வாய்ப்பில்லை. அது அவன் செல்லும் வழியை அறியச்செய்யும் என அவன் நினைத்திருப்பான். காசிக்குள் படையுடன் நுழைய அவன் ஒப்புதலும் பெற்றிருக்கமுடியாது. நாமும் காசியின் எல்லைக்குள் படையுடன் செல்ல முடியாது” என்ற இளைய யாதவர் “வருக!” என்றபடி புரவியை செலுத்தினார்.

இளைய யாதவர் தரையை கூர்ந்து நோக்கியபடி தன் புரவியில் சீரான விரைவில் முன்னே சென்றார். அவர் நோக்குவதை திருஷ்டத்யும்னன் கண்டு கொண்டான். சற்று நேரத்திற்குப் பிறகு அந்த வெண்புரவியின் கால் தடமன்றி வேறெதுவும் நிலத்தில் இல்லை எனத் தோன்றுமளவு பாதை துலங்கியது. தெளிவாக எழுத்துக்களால் ஆன குறிப்பு போல அப்புரவி சென்ற வழி கிருஷ்ணவபுஸின் வட எல்லையில் இருந்த சிறு மூங்கில் வாயில் வழியாக எழுந்து மறுபக்கம் கங்கைக்கு இணையாக விரவிக் கிடந்த குறும்புதர்க்காடுகளின் நடுவே ஊடாடிச் சென்றது.

“நெடுந்தொலைவு அவன் சென்றிருக்க வாய்ப்பில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், நாம் வருவதற்கு சற்று முன்னர்தான் அவன் கிளம்பி இருக்கிறான். இத்தனை விரைவில் நமது படைகள் இங்கு வந்து சேருமென அவன் எண்ணவில்லை. செய்தி கிடைத்து மதுராவிலிருந்து என் படைகள் இங்கு வந்து சேர ஒரு நாளாவது ஆகும் என அவன் எண்ணியிருக்கலாம்” என்ற இளைய யாதவர் “இப்போது மூன்று நாழிகை தொலைவுக்கு அப்பால் அவன் தன் புரவியில் இருபது படைத்துணைவருடனும் சென்று கொண்டிருக்கிறான். காசியின் எல்லைக்குள் செல்வதற்குள்ளாகவே நாம் அவனை பிடித்து விட முடியும்” என்றார்.

புரவியின் தடங்கள் தெளிவாக திசைகாட்டத் தொடங்கியபின் அவர்களின் விரைவு மேலும் மேலும் கூடியது. எடைமிக்க யவனப்புரவிகளை ஏன் இளைய யாதவர் தெரிவுசெய்தார் என்று திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். அவை சோனகப்புரவிகள் அளவுக்கு விரைவுகொள்ளமுடியாது. ஆனால் அவை எத்தனை ஓடியும் மூச்சிரைக்கவில்லை. அவற்றின் உடலில் இருந்து வியர்வை ஆவியென எழுந்தபோதிலும் நுரைதள்ளவில்லை. சததன்வா சோனகப்புரவியில் நெடுந்தொலைவு செல்லமுடியாது. அவனை அவர்கள் இரவுக்குள் பிடித்துவிடமுடியும்.

முட்செடிகளும் படர்கொடிகளும் கலந்த புதர்குவைகளுக்கு நடுவே வளைந்து சென்ற பாதையில் அவர்களின் புரவிகள் துடிமேல் ஆடும் கைவிரல்களைப்போல குளம்புகளை நிலத்தில் அறைந்து அறைந்து விரைவு கொண்டன. அவ்வோசை உள்ளே இலைத்தழைப்புக்குள் மறைந்திருந்த பாறைகளிலும் மரத்தொகைகளிலும் முட்டி எதிரொலித்தது. காட்டுக்குள் பல நூறு குறுமுழவுகள் உயிர்கொண்டதென தோன்றியது. அஞ்சிய சிறுவிலங்குகள் இலையலைத்து சருகளாவி ஓடும் ஒலியில் காடு வெருண்டது.

திருஷ்டத்யும்னன் ஒவ்வொரு கணமும் மேலும் அகவிரைவு கொண்டான். இதோ இதோ என எண்ணி இன்னும் எத்தனை கணமென கணிக்கத் தலைப்பட்டான். அசைவின்றி காலத்தில் உறைந்த மரங்கள் நடுவே சற்றே அசைவு கொண்டதுபோல் அவன் ஊர்ந்த புரவி நின்றிருப்பதாக சித்தம் மயக்கு கொண்டது. அவன் எப்போதோ சததன்வாவை எட்டிவிட்டு திரும்பி தன் உடல் வந்து சேர்வதற்காக அங்கே நின்று தவிப்பதாக எண்ணினான். எதிரே வீசப்பட்டவை போல பாய்ந்து வந்து இலைகளும் தழைகளும் என மாறி உடலை அறைந்து வளைந்து பின்னகர்ந்து கொண்டிருந்த புதர்களின் நடுவே செம்மண் பாதை தழல் போல அலையடித்தது. உளம் கொண்ட விரைவை அடையாது உடல் நின்று தவித்தது.

பின்பு களைப்புடன் தன்னை உணர்ந்து மூச்சிழுத்து புரவி மேல் உடல் இளக்கி அமைந்தான். முன்னால் பறந்து சென்ற தவித்த உள்ளம் வளைந்து திரும்பி வந்து உடலின் கிளையில் அமர்ந்து சிறகமைத்தது. திரும்பி இளைய யாதவரை நோக்கினான். சிட்டுச்சிறகெனச் சுழலும் கால்களால் ஆன புரவியின் மேல் முகில் மேல் அமர்ந்து ஊழ்கத்தில் ஆழ்ந்த தேவன் போல அவர் தெரிந்தார். நீள்விழிகள் பாதி மூட இதழ்களில் இளம்புன்னகை ஒன்று ஒளி கொண்டிருக்க ஏதோ இனிய காதல் நினைவை தான் உள்மீட்டிக்கொண்டிருப்பவன் போல. உருகி வழியும் இசையொன்றைக் கேட்டு கனவிலென படுத்திருப்பவன் போல .

அந்தி இறங்கிக்கொண்டிருக்கையில் அவர்கள் காசியின் எல்லையை அடைந்தனர். பலராமர் “தொலைவில் தெரிவது காசியின் காவல்மாடம் இளையோனே” என்றார். “அங்கு உள்ள காவலர் நம்மை பார்க்கக் கூடும்.” திருஷ்டத்யும்னன் “அவர்கள் சற்றுமுன் சததன்வா சென்றதையும் பார்த்திருப்பார்கள்” என்றான். “சததன்வா காசி மன்னரையே காணச் செல்கிறான். சியமந்தகத்தை அவரிடம் அளித்து தன்னை காக்கும்படி கோர இருக்கிறான்” என்றார் பலராமர். திருஷ்டத்யும்னன் “நம்மையும் அவனுடைய படைகளைச் சார்ந்தவர் என்றே அவர்கள் எண்ணுவர். கொடி அடையாளங்களோ குலக்குறிகளோ இப்போது நம்மிடமில்லை” என்றான்.

பலராமர் “சததன்வாவின் குறியொலியையே நாமும் எழுப்பியபடி கடந்து செல்வோம்” என்றார். திருஷ்டத்யும்னன் “ஆம். அதையே நானும் எண்ணினேன்” என்றான். அச்சொற்கள் கேட்காத தொலைவில் என இளைய யாதவர் புரவி மேல் அமர்ந்திருந்தார். காட்டுப்பாதை புதர்களில் இருந்து சிறிய மேடு ஒன்றில் ஏறி மறுபக்கம் சரிந்து சென்ற புல்வெளியை அடைந்தபோது பக்கவாட்டில் இருந்த இன்னொரு சிறிய மேட்டில் அமைந்திருந்த மரக்கோபுரத்தின் உச்சியிலிருந்து காசியின் காவல் வீரன் “எவர் அது?” என்று உரக்கக்கூவினான்.

திருஷ்டத்யும்னன் வாயெடுப்பதற்குள் இளைய யாதவர் “சிட்டுக்குருவி ஏந்திய சிறுபுல்” என்று உரக்கக் கூவி தன் இருகைகளையும் பறவையின் சிறகுகளைப் போல தூக்கிக் காட்டினார். கிருஷ்ணவபுஸின் குறிச்சொற்கள் அவை என்றறிந்த காவலன் தன் கைகளை அம்பு போல காட்டி “செல்க” என்று ஆணையிட்டான். விரைவு சற்றே குறைந்து அவன் சொற்களை எதிர்நோக்கி நின்ற மதுராவின் படை மீண்டும் விரைவு கொண்டது. பன்னிரு புரவிகளும் வால்களைச் சுழற்றியபடி சரிந்து சென்ற பசும்புல்வெளியில் பசும்கறையென விழுந்து தொடர்ந்த தங்கள் நிழல்களுடன் பாய்ந்து சென்றன.

அங்கு மேய்ந்துகொண்டிருந்த மான் கூட்டம் ஒன்று மண் வளைவு வில்லாகி தொடுத்த அம்புக்கூட்டம் போல காற்றில் துடித்தெழுந்து வளைந்து மழைத்துளிகள் போல குளம்புகள் ஒலிக்க மண்ணைத்தொட்டு மீண்டும் துள்ளி புதர்களுக்குள் மறைந்தது. புல்வெளியின் மறுபக்கம் எழுந்த சிறுகுன்றின் சரிவில் அவர்கள் ஏறிக்கொண்டிருக்கும்போது வானில் அந்திச் செம்மை அணைந்துகொண்டிருந்தது. காடு முற்றிலும் இருண்டு சீவிடுகளின் ரீங்காரத்தால் கட்டப்பட்ட ஓசைகளின் மாலையாக மாறியது. மேலைவானில் எழுந்த பல்லாயிரம் வௌவால்கள் கங்கையின் பெருஞ்சுழி ஒன்றில் வட்டமிடும் சருகுகளைப் போல சுற்றிப் பறந்தன. மிக அருகே காதுகள் மீது சிறகின் காற்று படும்படியாக ஒரு வௌவால் கடந்து சென்றது.

கூச்சலிடும் பறவை ஒலிகளால் பெருமுழக்கமாக மாறி விட்டிருந்த அந்திக்காட்டிலிருந்து கருமந்திக்குழுவின் தலைவன் குறுமுழவொலி எழுப்ப யானை ஒன்று உறுமி தன் குலத்திற்கு அவர்களை சொன்னது. மேட்டின் உச்சியில் ஏறும்போது இளைய யாதவர் நிற்கும்படி கைகாட்டினார். அவர்கள் அசைவற்று நிற்க அவர் திரும்பி “மறுபக்கம் கீழே அவனது படைகள் செல்கின்றன” என்றார். திருஷ்டத்யும்னன் “அரசே” என்றான். “குளம்பொலிகளை கேட்க முடிகிறது என்னால்” என்றார் இளைய யாதவர். “குளம்பொலிகளா?” என்றபின் கண்களை மூடி செவிப் புலனை மட்டும் உளம் கூர்ந்து அவற்றில் பிற ஓலிகள் அனைத்தையும் விலக்கி விலக்கி கடந்து சென்றபோது குதிரைகளின் காலடியை அவனும் கேட்டான். விழி திறந்தபோது தரையிலிருந்த தளிர்ப்புல்கள் ஒவ்வொன்றும் அவ்வொலிக்கு மெல்ல நடுங்குவதென உளமயக்கு ஏற்பட்டது. “ஆம், நானும் கேட்கிறேன்” என்றான்.

“நம்மைப் பார்த்ததும் அவன் விரையக்கூடும்” என்றார் இளைய யாதவர். “நமது குளம்பொலிகளை அவன் கேட்டிருக்க வாய்ப்பில்லை. காற்று அங்கிருந்து வீசுகிறது. அவன் உள்ளம் அச்சம்கொண்டும் இருக்கிறது…” அவர் கைசுட்டி “இம்மேட்டை நாம் ஏறியதும் முழுவிரைவில் பிறையென விரிந்து உருக்கொண்டு அவனை சூழ்வோம். செல்லும்போதே நமது அம்புகளால் அவன் துணைவர் வீழட்டும். உடனிருப்பவர் எவராயினும் அக்கணமே அவர்கள் இறக்கலாம்” என்றார். திருஷ்டத்யும்னன் “ஆணை” என்றபடி தன் தோளில் இருந்த வில்லை எடுத்து நாணேற்றி அம்பு தொடுத்துக்கொண்டான்.

படைவீரர்களும் தங்கள் விற்களை நாணேற்றி தொடுத்துக் கொள்ள பலராமர் கைகளை உரசி பின்பு நீட்டி உடலைத் திருப்பி ஒடியும் சுள்ளிகள் போல எலும்புகள் ஓசையிட சோம்பல் முறித்தார். இளைய யாதவர் வில்லையோ தன் படையாழியையோ எடுக்கவில்லை. இரு கைகளாலும் தன் புரவியின் கழுத்தைத் தொட்டு மெல்ல வருடி மேலிழுத்து குஞ்சி ரோமத்தை அளைந்தார். அது தலை குழைத்து செவிகளை மெல்லத் திருப்பி உலைத்து காற்று வெளியேறுவதைப் போல மூச்சிழுத்து மூக்கை விடைத்தது. கண்களை உருட்டி பற்களை நகைப்பெனத் திறந்து மெல்ல கனைத்தது.

ஒருகணத்தில் “செல்க!” என்றபடி இளைய யாதவர் தன் புரவி மேலேறி சென்றார். அவரைத் தொடர்ந்து பன்னிரு புரவிகளும் எழுந்தன. குன்றின் வளைவை அடைந்த கணம் வீசப்பட்ட வேல்கள் போல அவை பிரிந்து புல்மண்டிய சரிவில் பாய்ந்திறங்க அவற்றுடன் மலைச்சரிவில் காலத்துயிலில் அமைந்திருந்த உருளைக் கற்களும் விழித்துத் தொடர்ந்தன. அவ்வோசை கேட்டு தொலைவில் சென்று கொண்டிருந்த சததன்வாவின் புரவிகளில் ஒன்று செவிதிருப்பி விழிமிரண்டு கால்தூக்கித்திரும்பி அச்சக்குரல் எழுப்பியது. ஒரு வீரன் திரும்பி நோக்க தங்களை நோக்கி வரும் பன்னிரெண்டு புரவி முகங்களைக் கண்டான். வானில் பறந்து செல்லும் வடபுலத்து வலசைப் பறவைகள் போல அவை அணுகின. “அரசே” என்று அவன் கூவுவதற்குள் கழுத்தைத் தைத்த அம்பு அவனை புரவியிலிருந்து கீழே வீழ்த்தியது.

திரும்பி நோக்கிய சததன்வா “விரைந்தோடுங்கள்! காடுகளுக்குள் புகுந்து கொள்ளுங்கள்!” என்றபடி தன் புரவியை காலால் அணைத்தான். அது கல்விழுந்த குளமெனச் சிலிர்த்து விரைவு கொண்டு முன்னங்கால் தூக்கித் தாவி பாய்ந்து செல்ல அவனுக்குப் பின்னால் வந்த புரவி அம்பு பட்டு நிலத்தில் விழ அதிலிருந்த வீரன் தெறித்து அவன் புரவியின் நான்கு கால்களுக்கு இடையிலேயே விழுந்தான். அவனை மிதித்துச் சென்ற புரவியைத் தொடர்ந்து சததன்வாவின் பிற வீரர்கள் முழுவிரைவில் வந்து அதனுடன் மோதினர். அவர்கள் ஒவ்வொருவராக மேலிருந்து அள்ளிக்கொட்டிச் சிதறி விழுபவர்கள் போல நிலத்தை அறைந்து கைகால் துடிக்க அலறி அமைவதையும் தொடரும் புரவிகள் பெரிய குளம்புகளால் அவர்களை மிதித்து முன்னகர்வதையும் அவையும் அவர்கள் அம்பு பட்டு புல்லில் தெறித்து சரிந்து உருண்டு எழுந்து விசை தீராமல் மீண்டும் விழுந்து உருண்டு செல்வதையும் சததன்வா காதுகளாலேயே கண்டான்.

அவன் விழி தொலைவிலிருந்த காட்டை, அங்கே இரு மரங்கள் போல நடுவே குகைஇருள் போல தெரிந்த பாதையை மட்டுமே நோக்கியது. அதனருகே செல்வதும் வெல்வதும் மட்டுமே தன் வாழ்வின் எஞ்சிய இலக்கு என்று அவன் அக்கணத்தில் வாழ்ந்தான். அக்குகைப்பாதை மிக அண்மையில் என ஒரு கணமும் மிக அகலே என மறுகணமும் தெரிந்தது . ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவன் புரவி அதை நோக்கி சென்று கொண்டிருந்தது. நீரில் துழாவுவது போல அதன் கால்கள் எடையுடன் எழுந்து விழுவதாக அவன் எண்ணினான். தொடக்கூடும் என்பதைப் போல அத்தனை பருவுருவாக காலத்தை அவன் உணர்ந்ததில்லை.

அலறியபடி இறுதி வீரனும் விழுந்து சரிவில் உருள, அவன் புரவி மல்லாந்து நான்கு கால்களையும் வானில் உதைத்து பின் எழுந்து மீண்டும் விழுந்து வால் குலைய உருண்டு அவன் மேலேயே புரண்டு மறுபக்கம் சென்றது. வீரன் உடைந்த கழுத்துடன் புல்லில் துடித்து கால்களை நீரில் மூழ்குபவனின் இறுதி நீச்சலென அடித்து அமைந்தான். அணுகி வரும் புரவிக் கூட்டத்தின் காலடிகள் மட்டும் அவனை சூழ்ந்திருந்தன. சததன்வா திரும்பி நோக்கவில்லை. அவ்வொலிகள் ஒவ்வொரு கணமும் வலுப்பதை அவன் செவிகள் உணர்ந்தன. அப்புரவிகளின் விழிமின்னல்களை, குஞ்சிநிரையின் தழல் நெளிவை, கால்கள் வீசும் அலைநுரைச் சுழல்களை அவன் முதுகு நோக்கிக்கொண்டிருந்தது.

அவன் சென்றாக வேண்டிய குகைப்பாதை மேலும் அண்மையில் எழுந்தது. அங்கு இருளுக்குள் எவரோ வந்து கொண்டிருப்பதுபோல. அவனுக்காக நெடுங்காலம் காத்திருந்த ஒருவர். விரித்த கரங்களுடனும் ஒளிரும் விழிகளுடனும் புன்னகையுடனும் அவனை எதிர்கொள்ள எழுபவர். அந்தக் கணம் இது என அவன் அறியாமல் அவன் ஆழத்தில் வாழும் பிறிதொன்று அழைத்தது போல அவன் திரும்பி நோக்கினான். நீலப் பீலி சூடிய குழல் காற்றில் அலைகொண்டு பறக்க வைரம் மின்னும் இரு விழிகள் மிதந்து அண்மிக்கக் கண்டான்.

“யாதவரே, சியமந்தகம் என்னிடம் இல்லை. அதை அக்ரூரரிடம் அளித்து விட்டுத்தான் நான் காசிக்குச் செல்கிறேன். இது உண்மை!” என்று அவன் உரக்கக் கூவினான். அந்த நீலவிழிகள் மேலும் மேலும் அண்மித்தன. அவை விழிகள் அல்ல. இரு வைரங்கள். வைரம் கருணையற்றது என்று அவன் அறிந்தான். அது மனிதர்களை நோக்குவதில்லை. மனித விழிகளும் மனித உள்ளங்களும் கொண்ட விழைவை, துயரத்தை, வஞ்சத்தை அது அறிவதே இல்லை. வைரம் தன் அழுத்தத்தாலேயே நிகரற்ற நஞ்சாக மாறிய ஒன்று. தன் ஒளியாலே படைக்கலமானது.

சியமந்தகத்தை முதலில் கண்ட கணம் முதல் அதன் ஒவ்வொரு காட்சியும் அவனுள் பெருகிச்சென்றது. அது என்ன? வெறும் கல். இல்லை, வைரம். மண்ணின் மேல் அமைந்திருக்கும் பல கோடி கற்களின் ஆழத்தின் அழுத்தத்தை அறிந்த கல். அந்த அறிதலே அதன் ஒளி. இதோ அருகே இரு வைரங்கள். அவற்றை மிக அருகே கண்டு அறியாது கைகளை மேலே கூப்பி நின்றான். வெள்ளி மலரென ஒன்று சுழன்று தன்னை அணுகுவதை இடவிழி ஓரத்தால் கண்டான். அந்த மின்னல் துண்டு அவன் கழுத்தைத் தொட்ட கணமே அவன் விழிகள் உடலில் இருந்து எழுந்து பறந்தன. தலையற்ற தன் உடல் புரவி மேல் கூப்பிய கைகளுடன் தள்ளாடி சரிந்து மறுபக்கம் விழ புரவி தலைகுனிந்து திகைத்து வால் சுழற்றி கனைத்தபடி கால்களைத் தூக்கி வைத்து பக்கவாட்டில் நகர்ந்து திரும்புதை கண்டான்.

முந்தைய கட்டுரைபரிந்து இட்டோர் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைதெய்வங்கள் பேய்கள் தேவர்கள் : 2 – பேய் சொன்ன பேருண்மை