’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 4

[ 3 ]

ஒவ்வொருநாளும் என மடிந்துகொண்டிருந்த ரம்பனையும் கரம்பனையும் கண்டு சபரர் ஆழ்துயரில் அமைந்தார்.  சூரர் “நாம் செய்வதற்கொன்றில்லை என்றே எண்ணுகிறேன் ஆசிரியரே. அவர்களின் உள்நிறைந்து மண்வந்த ஒன்று தன்னை விடுவித்துக்கொள்ள விழைந்தால் நாம் என்ன செய்ய முடியும்?” என்றார். சபரர் எண்ணச்சுமையுடன் தலையை அசைத்து “அவ்வாறல்ல, இது விழிப்புள்ளமும் கனவுள்ளமும் நுண்ணுள்ளமும் கொள்ளும் ஒத்திசைவின்மை மட்டுமே. ஒரு நோயே இது. இதற்கு மருத்துவமென ஒன்று இருந்தாகவேண்டும்” என்றார்.

“உள்ளம் என்பது இங்கு மண்ணுடன் ஒரு நுனியைப் பொருத்தி, துரியப்பெருவிரிவுக்கு அப்பால் நின்றிருக்கும் நுண்மையில் மறுநுனியைப் பொருத்தி நின்றிருக்கும் அலகிலி. பருவும் அருவும் முயங்கும் களம். அது இதுவாக ஆகவும் இது அதுவென்றறியவும் உள்ளமென்பதே ஊடகம். அதை இங்குள எதைக்கொண்டும் முற்றறியவியலாது” என்றார் சபரர். “ஆனால் அது தன் நோயை நமக்குக் காட்டுவது வரை நாம் நம்பிக்கை கொள்ள இடமுள்ளது. நோயை காட்டுகையில் என்னை சீரமை என்று நம்மிடம் அது கோருகிறது. நோய் என்பதே மருந்துக்கான கோரிக்கை மட்டும்தான். எங்கோ மருந்து உள்ளது.”

“எழுக நம் ஒற்றர்படை! பாரதவர்ஷத்தின் பெருமருத்துவர் அனைவரும் இங்கு அணைக!” என ஆணையிட்டார் சபரர். ஒவ்வொருநாளும் மருத்துவர் வந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒருநோய் காட்டி நின்றிருந்தனர் இருவரும். ஒவ்வொரு மருத்துவரும் ஒரு மருந்தை அளிக்க அம்மருந்துக்கு அப்பால் நின்றிருந்தது நோய். “உளநோய் என்பது ஆடி. மருத்துவன் தன்னை அதில் காண்கிறான்” என்றார் சபரர்.  “முற்றிலும் தன்னை மறைத்து உளநோயை நோக்கும் மருத்துவர் ஒருவர் தேவை நமக்கு. நாம் அவருக்காக காத்திருப்போம்.”

தென்னகத்திலிருந்து இறுதியாக வந்த முதுமருத்துவர்  சாத்தன் அகத்தியர்வழித்தோன்றல் என்று தன்னை அறிவித்துக்கொண்டார். நீள்தாடி நிலம்தொடும் குற்றுருவத்தினர். ஒளிக்கண்களும் மணிக்குரலும் கொண்டவர். அரசர் இருவரையும் அணுகி நோக்கி, நாடிதேர்ந்தபின் திரும்பி “நோயென ஏதுமில்லை” என்றார். சூரர் புருவம் சுருக்கி நோக்கினார். சபரர் புன்னகை செய்து சூரரிடம் மெல்லியகுரலில் “ஏனென்றால் மருத்துவன் நோயற்றவன்” என்று சொன்னார். “அவர் எதை காண்கிறார்?” என்றார் சூரர். “ஒவ்வொரு மருத்துவனிடமும் ஒவ்வொருவகையில் நடிக்கும் உள்ளத்தை எங்கு சென்று தொடுவார் இவர்?”  சபரர் “நோயில் மருந்துக்கு விழையுமிடம் எதுவோ அதைமட்டும் அறிபவனே மருத்துவன்” என்றார்.

சாத்தன் ரம்பனை தொட்டும் அழுத்தியும் விழியுள் நோக்கியும் ஆராய்ந்தபின் திரும்பி “சபரரே, உடலென்பது செயலுக்கென இயற்றப்பட்டது. அசுரர் உடலோ அருஞ்செயலுக்கென யாக்கப்பட்டது என்று அறிக! இவர்கள் இணைந்து செயல்படவே இதுவரை கற்றிருந்தனர். பிரிந்தபின் செயல்படத்தெரியாதவர்களாக ஆகிவிட்டனர். செயலின்மையால் உடல்சூம்பும். உள்ளம் சிதறும்” என்றார்.

“விழிப்புளமும் கனவுளமும் நுண்ணுளமும் மூன்றும் ஒன்றேயாயினும் வெவ்வேறென்றே செயல்கொள்ளும். அவற்றின் அறிதல்களும் ஆதல்களும் வேறு. அவற்றிடையே உள்ள பொதுமை அவைமூன்றும் அமைந்திருக்கும் உடலென்பது ஒன்று என்பது மட்டுமே.  எனவே உடல் தொழிற்படுகையிலேயே அவை தங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொள்கின்றன. இவ்விரு உடல்களையும்  செயல்கொள்ளச் செய்வோம். உடலுக்குள் வாழும் மூவுளமும் இணைந்து ஓருருவாகும். அரசர் அகம் திரண்டு மீள்வர்” என்றார். சபரர் ஒன்றும் சொல்வதற்கின்றி நீள்மூச்செறிய சூரர் “நாங்கள் என்ன செய்யலாகும்?” என்றார். “அரசரிடம் விழைவை மூட்டுக! செயலுக்கு அனல் விழைவே. அதன்பின் அருஞ்செயல் ஒன்றை அவருள் கூட்டுக! அதில் தன்னைச் செலுத்துகையில் அவர்கள் ஆற்றலுறுவர்.”

சூரர் “ஆவன ஆணையிடுங்கள் மருத்துவரே” என்றார். “இங்கு விழைவின் தெய்வம் எழுக! நகர்நடுவே பெருவேள்வி ஒன்று கூட்டி இந்திரனை வரச்செய்வோம்” என்றார் சாத்தன். “நாங்கள் அசுரர்கள். இந்திரனுக்கு எதிரிகள். எங்கள் மூதாதையர் எவரும் இன்றுவரை இந்திரனுக்கு அவியிட்டதில்லை” என்றார் சூரர். “ஆம், அவர்களெல்லாம் இந்திரனே அஞ்சும் பெருவிழைவு கொண்டிருந்தனர். அருந்தவம் இயற்றி அரியநற்சொல் பெற்றனர். விண்வென்றனர். தெய்வங்களுடன் சமர்புரிந்தனர். விழைவு அணைந்த அசுரர் இவர்கள் மட்டுமே” என்றார் மருத்துவர்.

எண்ணித்தயங்கிய சூரர் சபரரை நோக்க அவர் “இந்திரன் அருளால் இவர்கள் உயிர்மீள்வதென்றால் அது நடக்கட்டும்” என்றார். சூரர் மேலும் சொல்லெடுக்க முயல “எதிரியை வாழவிடுபவனே வீரன் எனப்படுவான். இந்திரன் அருளியாகவேண்டும்” என்றார் மருத்துவர். சூரர் நீள்மூச்செறிந்தார். சபரர் “பிறிதொரு வழியில்லை சூரரே. மைந்தரில்லாமல் இவ்விருவரும் இறப்பார்களென்றால் நூறு யுகங்களாக இங்கு அழியாது வாழ்ந்த அசுரர்குடிக்கு அரசக்கொடிவழி இல்லாமலாகும்” என்றார்.

சாத்தன் முகம் மலர்ந்து “அவ்விழைவையே முன்வைப்போம். விழைவுகளில் தலையாயது மைந்தர்பேறு அல்லவா? இருவரிலும் அதை எழுப்புவோம்” என்றார். “ஆம், அதுவே நன்று” என்றார் சபரர். “தெய்வங்கள் துணைநிலைகொள்க!” சூரர் நிலையழிந்த உள்ளத்துடன் அமைச்சர்களை நோக்கி “நிமித்த நூலும் சென்றடையாதவை தெய்வங்களின் ஆடல்களங்கள். ஆவன செய்க!” என ஆணையிட்டார். அமைச்சர் ஒருவரையொருவர் நோக்கினர். தலைமையமைச்சர் “ஆணை!” என தலைவணங்கினார்.

மறுநாள் அடுமனையில் மணையிட்டு, இலைவிரித்து  கரம்பனுக்கான உணவை குவித்துவிட்டு ஏவலர் பணிந்து விலகிநின்றனர். உணவுக்கு இருவர் கரம்பனை மெல்ல தூக்கிக்கொண்டுவந்து அமர்த்தினர். உணவைக் கண்டபின்னரும் எந்த மெய்ப்பாடுமில்லாமல் எங்கோ நோக்கும் விழிகளுடன் இருப்பது அவன் வழக்கம். அமரச்செய்தபின் அவன் கைகளை உணவின்மேல் எடுத்து வைப்பார்கள் ஏவலர். அவன் அக்கை அசையாமல் உணவின்மேல் விழுந்துகிடக்க செயலிழந்து அமர்ந்திருப்பான். உணவுகுறித்த விழைவு உடலில் தெரியத்தொடங்கியபின்னரும் அவன் கை செயலாற்றத் தொடங்காது. ஏதோ ஒருகணத்தில் அது மெல்ல அசைந்து உணவை அள்ளி மெல்ல வாய்க்குள் கொண்டுசெல்லத்தொடங்கும்.

அன்று வாயருகே சென்ற உணவு அசையாமல் நின்றது. கரம்பனின் மூக்கு சுளித்தது. இருமுறை குமட்டிவிட்டு உணவை இலையில் போட்டான். விழிதிருப்பி ஏவலரை நோக்கிவிட்டு மீண்டும் உணவை அள்ளினான். அதை மூக்கருகே கொண்டு செல்வதற்குள்ளாகவே குமட்டலுடன் போட்டுவிட்டான். மேலும் சற்றுநேரம் அவன் உள்ளம் சேற்றுவிழுக்கில் சிக்கி வழுக்கிக்கிடந்தது. பின்பு பெரிய ஒலியுடன் குமட்டியபடி  கையூன்றிச் சரிந்தான். ஏவலர் ஓடிவந்து குனிந்து “அரசே!” என்றனர். “என்ன ஆயிற்று?” என்று தலைமை ஏவலர் அவனிடம் கேட்டார். “உணவு! உணவில் நாற்றம்!” என்றான் கரம்பன். “அதில் மலம்…” அவர்கள் அதை அள்ளி முகர்ந்தனர். “இல்லை அரசே… உணவில் நறுமணமே வீசுகிறது. தங்கள் உளமயக்கு அது” என்றார் தலைமை ஏவலர். “இல்லை… அது மலநாற்றம்… மலம்” என்றான் கரம்பன்.

தலைமை அடுமனையாளர் வந்து உணவை அள்ளி முகர்ந்துநோக்கிவிட்டு வாயிலிட்டு மென்று உண்டார். “நல்லுணவு அரசே… தாங்கள் உளம்குழம்பியிருக்கிறீர்கள்” என்றார். “வேறு உணவு… வேறு உணவு கொண்டுவருக!” என்றான் கரம்பன். அடுமனையாளர் ஓடிச்சென்று வேறு உணவைக்கொண்டு வந்து அவன் முன் பரப்பினர். அதில் ஒரு கவளம் அள்ளுவதற்குள்ளாகவே அவன் குமட்டி வாயுமிழ்ந்தான். “மலம்! மலம் நாறுகிறதே!” என்று கூவினான். அவனை கொண்டுசென்று வேறு அறையில் அமரச்செய்தனர். வேறு அடுமனையிலிருந்து வேறு உணவு கொண்டுவரப்பட்டது. அவ்வுணவைக் கண்டதுமே அவன் குமட்டி அதிர்ந்தான்.  அவனுக்குக் கொண்டுவரப்பட்ட அத்தனை உணவும் மலம்நாறின. உணவின்றி படுக்கையில் படுத்துக்கொண்டு பசியுடன் புரண்டான். “உணவு! உணவு வருக!” என்று கூவினான். மெல்ல அவன் குரல் மேலெழுந்தது. கைகளால் சேக்கைப்பரப்பை அறைந்தான். பற்களைக் கடித்து “உணவு! உணவு வேண்டும்!” என்று அலறினான். எவ்வுணவையும் அவனால் ஏறிட்டு நோக்கமுடியவில்லை.

மறுநாள் ரம்பனின் படுக்கையறையில் மேலிருந்து குருதித்துளிகள் சொட்டத் தொடங்கின. அவன் அறைச்சுவர்களில் குருதி வழிந்தது. முதலில் அதை மழைத்துளி என எண்ணி அவன் தொட்டுப்பார்த்தான். முகர்ந்து நோக்கி குருதி என அறிந்ததும் கூச்சலிட்டு ஏவலரை அழைத்தான். “குருதி சொட்டுகிறது என் மேல்! இதோ குருதி!” என்று கூவினான். ஏவலர் அதை ஒற்றி எடுத்து “அரசே, குருதியல்ல இவை. உங்கள் வியர்வைத்துளிகள்தான்” என்றனர். “மூடா, அறைந்தே கொல்வேன்… அவை குருதிச்சொட்டுக்கள். என் மூக்கு அறிகிறது” என்றான் ரம்பன். “எங்கள் விழிகள் வண்ணம் காட்டவில்லை. எங்கள் மூக்குக்கும் ஏதும் தெரியவில்லை அரசே” என்றார் தலைமை ஏவலர்.

“குருதி! எவர் குருதி அது?” என்று ரம்பன் அரற்றினான். “எவர் குருதியில் நான் கிடக்கிறேன்?” அவனை இடம் மாற்றி அமரச்செய்தனர். அங்கும் குருதித்துளிகள் அவன் மேல் சொட்டின. அவை ஏவலருக்கு வியர்வையென்றே தெரிந்தன. எழமுயன்ற ரம்பன் குருதிவழுக்கி விழுந்தான். குருதி அவன் கண்களில் வழிந்தது. இதழ்களில் உப்பென சுவைத்தது. அவன் உடல் நனைந்து விலாவில் கைகள் வழுக்கின. “எங்கும் குருதி! இவ்வரண்மனை எங்கும் குருதி பெய்கிறது!” என்று அவன் கதறினான்.

நான்குநாட்கள் கரம்பன்  ஒருவாய் நீரும் இன்றி பசித்திருந்தான். ரம்பன்  குருதிபெருகிய அறையில் புழுவென தவழ்ந்துகொண்டிருந்தான். “என்ன நடக்கிறது? அமைச்சர்களே! ஆசிரியரே!” என அவர்கள் கூவினர். ஐந்தாம்நாள் அவர்கள் முன் அமர்ந்த நிமித்திகர் சூரர் “அரசே, உங்கள் உலகவாழ்க்கை முடிவடையவிருக்கிறது. இன்னும் சிலநாட்களே எஞ்சியுள்ளன. நீங்கள் செல்லவிருக்கும் புத் என்னும் பெருநரகக்குழியின் வாழ்க்கை இப்போதே தொடங்கிவிட்டது” என்றார். “அங்கே மலம்நாறும் உணவே அளிக்கப்படும். குருதிமழை பொழியும்.”

“அரசே, மைந்தரைப்பெற்று விண்வாழும் மூதாதையருக்கு மண்ணிலிருந்து நீரும் உணவும் அளிக்கும்படி அமைத்துச்செல்வதென்பது அனைவருக்கும் கடனே. நீங்கள் மைந்தரின்றி இறக்கிறீர்கள். மூதாதையரின் கண்ணீரும் பழிச்சொல்லும் உங்களை குருதியென்றும் இழிமணமென்றும் சூழ்ந்திருக்கும்” என்றார் சூரர். ரம்பன் சோர்ந்த குரலில் “விழியிழந்த நான் செய்வதற்கென்ன உள்ளது? என் ஊழ் இது” என்றான். கரம்பன் கண்ணீருடன் “என் உடல் செயலற்றிருக்கிறது நிமித்திகரே” என்றான். “அரசே, உடலில் உயிர் எஞ்சியிருக்கும் வரை செயல்கொள்ள வாய்ப்பும் உள்ளது. விழைவு எஞ்சியிருந்தால் போதும். விழைவுக்கிறைவனை அவியளித்து எரியில் எழுப்புவோம்… நீங்கள் இருவரும் வந்து வேள்விக்காவலர்களாக அமர்க!” என்றார் சூரர்.

தானவத்தின் பெருமுற்றத்தில் இந்திரனுக்குரிய அக்னிசூடாமணி வேள்வி தொடங்கியது. நூற்றெட்டு வைதிகர் கூடி ஏழுநாட்கள் அவ்வேள்வியை நிகழ்த்தினர். அவியுண்ட எரி எழுந்து விண்ணை வருடியது. அவ்வழைப்பை இந்திரன் கேட்டான். விண்ணெங்கும் முகில்கள் கூடிச்செறிந்தன. இடியோசையும் மின்னல்துடிப்பும் எழுந்தன. கீழ்ச்சரிவில் இந்திரவில் வளைந்தது. கோட்டைக்காவல் நின்ற வீரன் ஒருவன் அங்கே வாயிலில் பதித்த மணியில் இந்திரவில் தெரிவதைக் கண்டு கூர்ந்து நோக்கினான். நண்பனை “இதோ!” என்று அழைப்பதற்குள் நாதளர்ந்து விழுந்தான்.

அந்த அருமணி ஒரு கனல்துளியாக எரிந்தது. எரிவண்டென மாறி எழுந்து சிறகொளிரப் பறந்து வேள்விக்கூடம் மேல் சென்று விழுந்தது.  வேள்விக்கூடம் பற்றிக்கொள்ள வேள்விமரமென நின்றிருந்த கல்லாலமரத்தின் கிளையில் அனல்வடிவமாக இந்திரன் எழுந்தான். “தேவர்க்கரசே, இங்கு விழைவென எழுக! இந்த அவியை உண்டு எங்களுக்கு அருள்க!” என்றார் வேள்வித்தலைவர்.  “ஆம், மகிழ்ந்தேன். என் அருள் இங்கு நிறையும். இவ்வரசர் இருவரும் விழைவுகொள்வர். செயல்விரைவு அடைவர்” என்றான் இந்திரன்.

வேள்விக்குப்பின் இருவரும் பெருங்காமம் கொள்ளலாயினர். உடலென்பது காமத்திற்கான கருவி மட்டுமே என்பதுபோல. உள்ளமென்பது காமம் நிகழும் நுண்களம் மட்டுமே என்பதுபோல. “அது நீர்பட்டு உயிர்கொண்ட விதையின் விரைவு. நன்று!” என்றார் மருத்துவர். “நோயுற்றவர்களுக்கு மணமகள் தேர்வது இப்போது இயல்வதல்ல. எங்கு எவர் வயிற்றிலாயினும் மைந்தர் எழுக!” என்றார் சபரர். நாளென்றும் பொழுதென்றுமில்லாமல் இருவரும் காமமாடினர்.

காமம் அவர்கள்  ஐம்புலன்களையும் விழித்தெழச் செய்தது. ஏழுசக்கரங்களையும் உயிர்கொள்ளச்செய்தது. உண்டு பயின்று உடல்தேறினர். அணிசூடினர். கலையும் இசையும் கவியும் தேர்ந்தனர். மணமும் சுவையும் நாடினர். அவர்களின் மூச்சு வலுப்பெற்றது. சொல் கூர்மைகொண்டது. விழிகளில் நகைப்பு நின்றது. அவர்களின் மஞ்சங்களுக்கு தானவத்தின் அழகியபெண்கள் சென்றபடியே இருந்தனர். காமம் என்பது தனிமையின் கொண்டாட்டம். அவர்கள் இருவருமே பிறனை மறந்தனர்.

ஓராண்டாகியும் அவர்களைக்கூடிய பெண்கள் எவரும் கருவுறவில்லை என்று கண்டனர் அமைச்சர். ஒவ்வொருநாளும் காலையில்  ரம்பனும் கரம்பனும் “என்ன செய்தி? எவரேனும் கருசூடியிருக்கின்றனரா?” என்றனர். முகம் குனித்து “இல்லை அரசே. செய்தியேதும் இல்லை” என்ற மறுமொழியையே ஏவலரும் அமைச்சரும் சொல்ல நேர்ந்தது. நாட்கள் அடுக்கடுக்காக விழும்தோறும் சலிப்பும் சினமும் கொண்டு அவர்கள் கூச்சலிட்டனர். “என்ன நிகழ்கிறது? நாங்கள் முளைக்கா விதைகளா? அழையுங்கள் நிமித்திகர்களை” என்று ரம்பன் கூவினான். “இப்போதே அறிந்தாகவேண்டும். எங்கள் மைந்தர்கள் எவ்வுலகில் இருக்கிறார்கள்? எந்தத்தெய்வங்களால் காக்கப்படுகிறார்கள்? மும்மூர்த்திகளென்றாலும் அவர்களை வென்று எங்கள் மைந்தரை அடைவோம்” என்றான் கரம்பன்.

நிமித்திகர் களம் அமைத்து கருவுருட்டி “அரசே, உங்கள் மைந்தர்கள் நுண்ணுலகில் சித்தமாகி நின்றிருக்கிறார்கள். அவர்கள் மண்நிகழ பிரம்மனின் ஒப்புதல் கிடைக்கவில்லை” என்றார். “இதோ, பிரம்மனை வரவழைத்து அவன் சொல்லை பெறுகிறேன். எண்ணுவது எய்தாது அமையேன்” என்று ரம்பன் எழுந்தான். “ஆம், மைந்தரைப் பெற்றே மறுஎண்ணம் கொள்வேன்” என்று கரம்பன் வஞ்சினம் உரைத்தான். இருவரும் தோள்தட்டி எழ அமைச்சர்கள் அசுரகுடியின் ஆற்றல் எழுந்தது என உளம் மகிழ்ந்தனர்.

சூரர் களம்தேர்ந்து அவர்களுக்குரிய தவமுறைகளை கண்டடைந்தார். “அசுரர் தலைவர்களே, நீங்கள் இருவரும் ஒற்றையுடலும் ஓருள்ளமும் கொண்டு எழுகையிலேயே முழுமைகொள்வீர்கள். முழுமையின் கணத்திலேயே தெய்வங்கள் எழுகின்றன என்றறிக!” ரம்பன் சினத்துடன் தன் கையை நெஞ்சில் அறைந்து “அதற்குரிய வழி என்ன என்று சொல்லுங்கள்!” என்றான். “அரசர்களே, இருவரும் பிரிந்து சென்றுவிட்ட தொலைவனைத்தையும் திரும்ப வந்தாகவேண்டும். உங்கள் உடல் முன்பென பிறிதிலாது ஒன்றாகவேண்டும். உள்ளம் ஒன்றென்றே ஆகவேண்டும். ஒற்றைஎண்ணம் உங்கள் சித்தத்தில் எழுந்து ஒற்றைச்சொல்லாகி உங்கள் உதடுகளில் எழும்போது தெய்வங்கள் அருளும்” என்றார் சபரர். “அனல்கொண்டு விலகியவர் கரம்பன். அவர் நீருள் அமர்ந்து தவமியற்றட்டும். நீர்கொண்டு அகன்ற ரம்பன் அனலில் அமர்ந்து தவமியற்றட்டும். தவமென்பது இழப்பதனூடாக அடைவதே. அது நிகழ்க!” ரம்பனும் கரம்பனும் வணங்கி “ஆணை ஆசிரியரே!” என்றனர்.

ரம்பனும் கரம்பனும் தங்கள் ஆசிரியரை வணங்கி கங்கைக்குச் சென்று தவமியற்றத் தொடங்கினர். நிலைமூச்சுக்கலை பயின்ற கரம்பன் கங்கையின் நீலநீருக்குள் மூழ்கி அடித்தட்டு தொட்டு அமர்ந்து ஒற்றைச்சொல்லில் உளம்குவித்து தவத்தில் ஆழ்ந்தான். வைரவுடல் பெற்றிருந்த ரம்பன் ஐந்து தீ வளர்த்து அதன்நடுவே உருகாத பீடத்தில் அமர்ந்து சொல்குவித்து ஊழ்கம் கொண்டான்.  கரம்பன் குளிர்ந்து குளிர்ந்து அமிழ்ந்தான். ரம்பன் எரிந்து எரிந்து எழுந்தான்.  இன்மை என கரம்பன் சென்றான். இனி இனி என ரம்பன் விம்மினான். ஒவ்வொன்றும் எடைகொண்டன கரம்பனுக்கு. ஒவ்வொன்றும் ஆவியென்றாயின ரம்பனுக்கு. பின்பொரு மாயகணத்தில் ரம்பன் நீரின் தண்மையை நெருப்பில் அறிந்தான். அக்கணமே கரம்பன் நெருப்பென நீருள் எரிந்தான்.

விண்ணில் சென்ற கருமுகில் குவை ஒன்று யானையென்றாகி துதிக்கை நீட்டி ரம்பனை பற்றியது. அவன் உதறித் திமிற அவன் கைசுற்றி இறுக்கி மேலே இழுத்தது. நீருள் மூழ்கி வந்த முதலை ஒன்று கரம்பனை கால்பற்றி ஆழம்நோக்கி இழுத்தது. மூச்சுக்குமிழியை நெஞ்சில் நிறுத்தி அவன் நீந்தி மேலெழ உன்ன மேலும் கவ்விப்பற்றி அவனை  உள்ளே கொண்டுசென்றது. தங்கள் உடல் இரண்டாகப் பிளப்பதை இருவருமே உணர்ந்தனர்.  உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் சவ்வென அரக்கென இழுபட்டுக் கிழிந்தன.  வலி பெருகிப்பெருகி வந்து உச்சத்தில் இனியதோர் விதிர்ப்பென்றாகியது. அக்கணத்தின் முடிவிலியில் இருவரும் நின்று திளைத்தனர்.

பின்னர் ரம்பன் தன் உடலில் அதுவரை இருந்துவந்த மாறாஎடை ஒன்று உதிர்வதை உணர்ந்தான். உயிர்த்துளி சீறிப்பிரிவதைப்போல, உடல்நீர்கள் வழிந்து ஒழிவதுபோல, விழிசொக்கும் இனிமையில் அவன் “நான் நான் நான்” என சொல்லிக்கொண்டான். நீண்டு இழுபட்டு இறுதிச்சரடும் அறுந்ததை ஓர் உலுக்கலுடன் உணர்ந்தான். பெருமூச்சுடன் உடல் தளர்ந்து நெருப்பின் நடுவே தவபீடத்தில் தொய்ந்தான். எண்ணங்களில்லாமல் காலமில்லாமல் அங்கிருந்தான். உடலின் ஒரு தசையையேனும் அசைக்கமுடியாதென்று தோன்றியது. இமைகள் எடைதாளாது விழிகள் மேல் கிடந்தன. இதழ்கள் நீரிலாது சொல்லிலாது அசைவழிந்தன. எங்கோ சென்று சென்று எங்கென்றில்லாது மறைந்தான்.

தன்னை கட்டிவைத்திருந்த ஒன்றிலிருந்து விடுபட்டு உதிர்ந்தான் கரம்பன். இறுதித்தசைநாரும் அறுந்து விடுபட்டதும் விசைகொண்ட ஆழ்நீர் ஒழுக்கில் கொண்டுசெல்லப்பட்டான். செதில்வால்சுழல அவனை கவ்விக்கொண்டுசென்ற முதலையின் அலையுடலை ஒன்றும் செய்வதற்கில்லாது நோக்கிக்கொண்டிருந்தான். “நீ! நீ!” என ஒலித்துக்கொண்டிருந்தது உள்ளம். ஒவ்வொரு உள்ளுறுப்பும் ஒன்றுடன் ஒன்றெனக் கோத்து உடலென்றாக்கிய விசையிலிருந்து விடுபட்டன. ஒவ்வொன்றும் ஒரு மீனாயின. விழிகள் துள்ளும் கெண்டைகள். செவிகள் அகன்ற பொத்தைகள். மீசையுடன் மூக்குகள் கெளுத்தியாக மாறின. விரல்கள் துள்ளின. தோள்களும் கால்களும் திளைத்தன. மார்பு ஓங்கிலென்றாகி புரண்டது. அவற்றின் வாய் உமிழ்ந்த குமிழிகள் மேலெழுந்து ஒளியாக வெடித்தன.

விழிதிறந்த ரம்பன் மேலே எழுந்த யானையை நோக்கி என்ன நிகழ்ந்தது என்றறியாது திகைத்தான்.  “உன்னைப் பிளந்தேன்” என்றான் யானைமேலிருந்த இந்திரன். “நூறு யுகங்களுக்கு முன்பொரு நிலத்து யானையை நீர்முதலை கவ்வியது. ஆழம் இருப்புடன் போரிட்டது. அப்போர் முடிவதற்குள் ஆழியுடன் இறைவன் எழுந்தான். இன்று நான் ஆழமென வந்து முழுமையாக உன்னை வென்றுள்ளேன்.” மயக்கம் சொக்கும் விழிகளுடன் ரம்பன் “நான் நிறைந்துள்ளேன். நான் முழுமைகொண்டுள்ளேன்” என்றான். “மூடா, அது உன்னுள். வெளியே நீ குறைந்துள்ளாய். சிறுத்துள்ளாய்” என்றான் இந்திரன். திடுக்கிட்டு விழித்துக்கொண்ட ரம்பன் எழமுயன்றபோது வலப்பக்க உடல் இரும்பாலானதுபோல் எடையிழுக்க சரிந்து விழுந்தான். மீண்டும் மீண்டும் எழமுயன்று நிலையழிந்தான். அவன் இடப்பக்க மெல்லுடல் தீயில் வெந்துருகத் தொடங்கியது.

ஒருகணத்தில் முடிவெடுத்து தன் வலப்பக்க வைரங்கொண்ட உடலை உதிர்த்தான். “என்ன செய்கிறாய்? மூடா!” என்று இந்திரன் வியந்து கூவ அவன் இடப்பக்கம் மென்மைகொண்டு தீயில் வெந்துருகத்தொடங்கியது. அலறிச் சிதைந்துகொண்டிருந்த விரைவின் ஒருகணத்தில் அவன் உடலின் இருபகுதிகளும் முற்றிலும் நிகர்நிலைகொண்டன.  எரிதழல்கள் செந்தாமரையிதழ்களென்றாயின. அதன் நடுவே எழுந்த நீலச்சுடர்மேல் வெண்பனிநிறக் குழலும் தாடியும் சூடி நான்கு திசையையும் ஆளும் முகங்களுடன் பிரம்மன் எழுந்தருளினார்.  வலது மேற்கையில் மின்படைக்கலம் துடித்தது. இடக்கையில் அமுதகலம் ததும்பியது. அஞ்சலும் அருளலும் காட்டிய கீழ்க்கரங்கள் தளிர்மை கொண்டிருந்தன. “நில் மைந்தா! கனிந்தது உன் தவம்” என்றார் பிரம்மன். “முற்றும் துறப்பதன் முழுமைக்கணம் உனக்கு வாய்த்தது. நீ வென்றாய்!”

பிரம்மனை வணங்கிய ரம்பன் “எந்தையே, என் சொற்களை கேட்டருள்க!” என்றான். “சொல், அருள்கிறேன்” என்றார் பிரம்மன். “இருமையழிந்து நான் ஒருமைகொள்ளவேண்டும்” என்றான் ரம்பன். “மைந்தா, உன் அகம் என்பது ஆழிருள். அகமனைத்தும் இருளென்றறிக! ஒளிநாட்டமே உன்னைப் பிளந்து இருவராக்கியது” என்றார் பிரம்மன். “ஒளிநாடமாட்டேன். இருளே எனக்கு ஒப்புதல். பிளவிலாத ஒருமைநிலையை மட்டும் அருள்க!” என்றான் ரம்பன். “அசுரேந்திரனே, முற்றிருள் பாதாளமூர்த்திகளுக்குரியது. முற்றொளியோ தெய்வங்களுக்குரியது. இருமையே இங்கு அனைவரையும் நிலைநிறுத்துகிறது என்று அறிக! அது நிலைகொள்ளாமை. அதுவே இருப்புப்பெருந்துயர். ஆயினும்  இருநிலையே இயல்பு” என்றார் பிரம்மன்.

“நான் விழைவது நிறைநிலை மட்டுமே”  என்றான் ரம்பன். “இருநிலையின் பெருவலியை இனி ஒரு துளியும் நான் தாளமாட்டேன்.” அவன் தலையைத் தொட்டு “இளையவனே, இருநிலையின் வாள்நுனியிலேயே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் அமைந்துள்ளன. இருநிலையறுக்கும் வீடு அம்மூன்றும் அடையும் நிறைவிலேயே கைகூடும். நீ துறப்பது அனைத்தையும் என்று அறிவாயா?” என்றார் பிரம்மன். “ஆம் அறிவேன்” என்றான் ரம்பன். “நான் விழைவது ஆற்றலை மட்டுமே.” பிரம்மன் “ஆற்றல் இன்பத்தை அளிக்கும் என்பதைப்போல் அறிவின்மை ஏதுமில்லை” என்றார். “எனக்கு ஆற்றலே வேண்டும். இன்பங்களையும் அதன்பொருட்டு துறக்கிறேன். வீடுபேற்றையும் புறக்கணிக்கிறேன்” என்றான் ரம்பன்.

திகைத்து நின்ற பிரம்மனை நோக்கி “எந்தையே, ஒன்று சொல்க! ஆற்றல்மிக்கது எது, இருநிலையா ஒருமையா?” என்றான் ரம்பன். “அதிலென்ன ஐயம்? ஒருமையே ஆற்றலின் உச்சம். இருளாயினும் ஒளியாயினும்” என்றார் பிரம்மன். “அந்நிலையை மட்டுமே நான் வேண்டுகிறேன். சிதறாத பேராற்றல். பிறிதொன்றிலாத குவிதல்” என்றான் ரம்பன். அப்போது விண்ணிலெங்கோ ஓர் அவலக்குரலின் மெல்லிய  அழைப்பை அவன் கேட்டான். அதை தவிர்த்து “ஆம், அதுவே நான் கோருவது” என்று மீண்டும் சொன்னான். “நீ விழைவதை அனலோன் அருள்க!” என்று சொல்லி பிரம்மன் மறைந்தார்.

அவனைச்சூழ்ந்து அலையடித்த அனலில் இருந்து உருவெடுத்து மேலெழுந்த எரியன் “வேண்டுவதென்ன?” என்றான். “உன் கரிநிழலை வெல்லும் ஆற்றல் கொண்ட ஒரு மைந்தன். உன் செங்கனலை வெல்லும் சினம் கொண்ட பிறிதொரு மைந்தன். அவனுக்குத்துணையாக உன் வெடிப்பொலியை வெல்லும் குரல் கொண்ட ஒரு மைந்தன்”  என்றான் ரம்பன். அவ்வண்ணமே ஆகுக என்று சொல்லி அனலவன் உருவழிய  ரம்பன் அனல்குவை நடுவே கன்னங்கரிய உருவுடன் குளிர்ந்து பெருகி எழுந்தான்.

ரம்பன் விழிப்படைந்ததும் தன்னைச்சூழ்ந்து பறந்துகொண்டிருந்த பொற்சிறைப் பூச்சிகளனைத்தும் யட்சர்கள் என்பதை உணர்ந்தான். அவர்களில் ஒருவரிடம் “யார் நீங்கள்?” என்றான். “இக்காட்டை ஆளும் மாலயட்சனின் கணங்கள் நாங்கள். இசையால் இவ்வெளியை நிறைக்கிறோம்” என்றார்கள். “முதலில் அவனை வெல்கிறேன். அவனளிக்கும் செல்வங்கள் அனைத்தையும் கொள்கிறேன்” என்று ரம்பன் எழுந்தான். “அவர் வெல்லற்கரியவர் அசுரனே” என்றான் யட்சன். “நீ கொண்டுள்ள அனைத்து ஆற்றலையும் வெல்லும் பேராற்றலை அவர் தன்னிடம் வைத்துள்ளார்.” நெஞ்சிலறைந்து “என்ன ஆற்றல் அது? சொல்க!” என்றான் ரம்பன். “இசை. இவ்வேழு உலகிலும் மெல்லியது அதுவே. ஆயின் உரிய முறையில் அமைகையில் இவ்வேழு உலகிலும் எடைமிக்கதும் அதுவே.”

ஏளனமாக நகைத்தபடி ரம்பன் எழுந்து மண்ணதிர காலடிகள் வைத்து நடந்தான். அவன் வைரப்பேருடலின் அழுத்தத்தில் மண் நீரென புதைந்தது. கரும்பாறை சேறெனக் குழைந்தது. மலர்ப்பொடிகளை காற்றில் கலந்து கட்டப்பட்ட  மாலயட்சனின் கோட்டையை நோக்கி அவன் போரொலி எழுப்பியபடி நடந்தான். அக்கோட்டைமுகப்பில் கொடியென எழுந்து இதழ்விரித்து நின்றிருந்த செந்நிறப்பெருமலரின் நறுமணம் அவனை வந்தடைந்தது. அம்மணத்தின் குரல் என இசை ஒலிக்கத் தொடங்கியது. மெல்லச் சூழ்ந்து தழுவி நெளிந்த இன்னிசையால் அவன் உடல் இனிதாகத் தளர்ந்தது. இமைகள் மெல்ல சரிந்தன. தலை எடைகொண்டு கழுத்தை வளையச்செய்தது. ஒவ்வொரு அசைவுக்கும் அவன் உடல் எடைகூடியபடியே வந்தது. ஒவ்வொரு காலடியையும் அவன் இழுத்துப்பிடுங்கிச் சுமந்து வைக்கவேண்டியிருந்தது.

பெருகி நிறைந்த எடைதாளாமல் உடல்  நீரில் என அமிழத்தொடங்கியது. பதறி இரு கைகளையும் விரித்து எதையேனும் பற்றிக்கொள்ள முயன்றான். அருகே நின்றிருந்த பனைமரம் ஒன்றை பிடித்துக்கொண்டான். அது வேருடன் பிடுங்கப்பட்டு அவனுடன் வந்தது. கைநீட்டி அங்கே நின்றிருந்த காட்டெருமை ஒன்றின் பின்னங்காலை பிடித்தான். அதையும் இழுத்துக்கொண்டு மண்ணில் மூழ்கி ஆழத்தில் புதைந்து மறைந்தான். மூதாதையரின் குரல்கள் மேலே அவனை நோக்கி பதறியழைத்து  தலைக்குமேலே மறைந்தன.

முந்தைய கட்டுரைதினமலர் – 9:ஊழலின் அடித்தளம்
அடுத்த கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும் கடிதங்கள்