‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51

[ 14 ]

யாதவக் குலமகளை அவள் விழைவிற்கு மாறாகக் கவர்ந்து கருகுமணித்தாலியை அறுத்தெறிந்து கவர்ந்துசென்ற சிசுபாலனின் செயல் யாதவக்குடிகளை நடுங்கச்செய்தது. அதுவரைக்கும் அவ்வாறு ஒன்று நிகழ்ந்ததில்லை. துவாரகைக்கு யாதவர்களின் குடித்தலைவர்கள் நான்கு திசைகளிலிருந்தும் வந்துசேர்ந்தனர். பிரக்ஜ்யோதிஷ நாட்டுக்கு கரவுருவாடலுக்குச் சென்றிருந்த இளைய யாதவருக்காக அவர்கள் காத்திருந்தனர்.

பலராமர் “அவனுக்காக காத்திருக்கவேண்டியதில்லை. யாதவரே, என் தோள்களுக்கு அவ்விழிமகன் நிகரல்ல. அவன் தலையை நான் உடைக்கிறேன்” என்று சூளுரைத்தார். அக்ரூரர் “எளிய முடிவல்ல இது. எதையெண்ணி அவன் இதைச்செய்தான் என்று அறிந்தாகவேண்டும். அசுரரோ நாகரோ அரக்கரோ அவனை துணைக்கிறார்கள், ஐயமில்லை” என்றார். சாத்யகி “ஷத்ரியர்களின் துணை தனக்கிருப்பதாக எண்ணுகிறான்” என்றான். “ஷத்ரியர்கள் ஒருபோதும் இவ்விழிசெயலுக்கு ஒப்பமாட்டார்கள்” என்றார் அக்ரூரர்.

கடும்சினத்துடன் தொடைதட்டி “சொல்லெண்ணிச் சொல்லெண்ணி காத்திருக்கிறீர்கள், மூடர்களே. அங்கே நம் குலமகள் சிறைகொண்டிருக்கிறாள்” என்று கூவினார் பலராமர். அக்ரூரர் “ஆம், அவளை மீட்பது நம் கடன். அதற்கு முன் அவள் நம்முடன் மீண்டுவர விழைகிறாளா என்று அறியவேண்டும்” என்றார். “என்ன சொல்கிறீர்?” என்று கூவியபடி அக்ரூரரை நோக்கி வந்தான் பஃப்ரு. “பெண்களின் உள்ளம் நாமறிவதல்ல. அவள் இன்று சேதிநாட்டரசனால் விரும்பப்படுகிறாள். அவளை அவன் அரசியாக்கவும் கூடும்” என்றார் அக்ரூரர். “அவளை கொல்வேன்… ஒற்றர்களை அனுப்பி நஞ்சூட்டுவேன். அவன் அரண்மனைமுற்றத்தில் நெஞ்சில் வாள்பாய்ச்சி செத்துவிழுவேன்” என்று பஃப்ரு அழுகையும் வெறியுமாக கூச்சலிட்டான்.

“இவ்வுள்ள எழுச்சிகளை நான் புரிந்துகொள்கிறேன்” என்றார் அக்ரூரர். “ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே நின்றாடும் தெய்வங்களை நாம் அறிந்துமுடிப்பதே இல்லை… இளையவர் வரட்டும்.” பஃப்ரு கால்கள் தளர பீடத்திலமர்ந்தான். “அவளை நான் விரும்பியிருந்தேன். என் நெஞ்சில் மணியெனச் சூடியிருந்தேன்” என்றபின் கைகளால் முகம்பொத்தி அழத்தொடங்கினான்.

மறுநாளே சேதிநாட்டிலிருந்து ஒற்றர்களின் செய்தி வந்தது. சிசுபாலன் விசிரையை பட்டத்து யானைமேல் ஏற்றிக்கொண்டு நகருலா சென்றான் என்றனர். அவள் உடல்மின்னும் நகைகளும் பொன்னூல்பட்டாடையும் மணிமுடியும் அணிந்து யானைமேல் புன்னகைத்தும் நாணியும் அவனுடன் அமர்ந்திருந்தாள். “இனி நாம் செய்வதற்கென்ன?” என்றார் அக்ரூரர். “அவள் தலைகொய்து மீள்வோம்… யாதவர்களின் மானமென்ன என்று அவ்விழிமகனுக்கு காட்டுவோம்” என்று யாதவர்தலைவர்கள் கொந்தளித்தனர். “இளைய யாதவர் வந்தும் ஒன்றும் நிகழப்போவதில்லை. பெண்ணின் விழைவுக்கு எதிராக அவர் நிற்கப்போவதில்லை” என்றார் அக்ரூரர்.

கவர்ந்து வரப்பட்ட அன்று சேதிநாட்டு அரண்மனையின் மகளிர்கோட்டத்தின் உள்ளறையில் விசிரை தன் ஆடைக்குள் கரந்து கொண்டுவந்த வாளால் கழுத்தை அறுத்து உயிரிழக்க முயன்றாள். அவளை விழிகொட்டாது காத்துநின்றிருந்த சேடிகளில் ஒருத்தி தன் கையிலிருந்த தாலத்தை வீசி அந்த வாளை சிதறடித்தாள். சேடியர் பாய்ந்து அவளை பற்றிக்கொண்டனர். அவளை இழுத்துச்சென்று தனியறைக்குள் அடைத்தனர். வெறிகொண்டு திமிறி கதவிலும் மரச்சுவர்களிலும் கைகளால் மாறி மாறி அறைந்து அவள் வீரிட்டாள். தன் தலையிலும் நெஞ்சிலும் அறைந்துகொண்டாள்.

சிசுபாலன் அவள் இடைசுழற்றித் தூக்கி கருகுமணித்தாலியை அறுத்து வீசி தூக்கிவந்தபோது என்ன நிகழ்கிறதென்றே அவள் உள்ளம் அறியவில்லை. அது அவள் எண்ணத்தைவிட பெரிதென்பதனால் கனவென மயங்கி அதைத் தவிர்த்து செயலற்றிருந்தது. பின்னர் விழிப்புகொண்டு அவன் கைகளை அறைந்தும் இறுகிய தசைத்திரளைக் கடித்தும் கூச்சலிட்டாள். கால்களை உதைத்து திமிறி பாய்ந்துவிட முயன்றாள். அவன் பிடிக்கு அவள் எளிய குழவிபோல் இருந்தாள்.

புரவியின் விரைவைக் குறைக்காமலேயே அணுகி வந்த சோலை ஒன்றுக்குள் புகுந்து நீரோடை ஒன்றை தாவிக் கடந்து பசுந்தழை அடர்வுக்குள் புதைந்து சென்றான். அவன் எண்ணத்தைப் புரிந்துகொண்ட கீர்மீரர் பிறரை கைகாட்டி நிறுத்தி ஓடைக்கு அப்பால் காவலரண் அமைத்தார். புரவியை நிறுத்தி பாய்ந்திறங்கி புரவியின் மேல் தளர்ந்து விழுந்து கிடந்த அவளை கூந்தலைப்பற்றி இழுத்து நிலத்தில் இட்டான். கதறியபடி திமிறி ஓட முயன்ற அவளைப் பற்றி இருகைகளாலும் மாறி மாறி அறைந்து வீழ்த்தினான்.

திகைத்தவள் போல கைகளால் கன்னத்தை பொத்தியபடி நிலத்தில் விழுந்து கிடந்த அவளை ஆடைகளைந்து விலங்கெனப் புணர்ந்தான். அவள் தனக்கு நிகழ்வதை வேறெங்கோ இருந்து நோக்கிக்கொண்டிருந்தாள். அக்கனவிலிருந்து எக்கணமும் விழித்துக்கொள்ளலாமென எண்ணினாள். அவன் எழுந்து தன் ஆடைகளை அணிந்து கொண்டிருந்தபோது அவள் ஒரே கணத்தில் அனைத்தையும் உணர்ந்து அலறியபடி தன் தலைமேல் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டாள்.

குனிந்து அவளை கைபற்றித்தூக்கி ஆடையை உடல் மேல் சுற்றி மீண்டும் புரவி மேல் அமர்த்திக் கொண்டான். புரவியின் கடிவாளத்தைப்பற்றியபடி அவன் சோலையை விட்டு வெளியே வந்தபோது வீரர்கள் அனைவரும் விழிகளை விலக்கிக் கொண்டனர். “இவள் உயிருடன் சேதி நாட்டுக்கு வந்து சேரவேண்டும். அருகிருக்கும் ஊரிலிருந்து பெண்களை அழைத்து இவளுக்கு உரிய ஆடை அணிவித்து கூட்டி வாருங்கள்” என்று காவலர் தலைவனிடம் ஆணையிட்டுவிட்டு புரவியிலேறி விரைந்தான்.

தன் உடலெங்கும் பரவியிருந்த மதர்ப்பை அவன் அறிந்தான். நாட்கணக்காக அவனை தளர்வுறச்செய்தவை அனைத்தும் தொலைநினைவென அகன்றிருந்தன. தோள்கள் அகன்று நெஞ்சு விரிந்ததுபோல் உணர்ந்தான். புரவியின் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் புத்துயிர் பெற்றுக்கொண்டே இருந்தான். அப்போதுதான் முதன்முறையாக அவன் “இவ்வழி” என்னும் அக்குரலை கேட்டான். அது உண்மையில் கேட்டது என உணர்ந்து திரும்பிப்பார்த்து உளமயக்கென உணர்ந்து புன்னகைத்தான். மீண்டும் அக்குரல் கேட்கிறதா என்று கண்களை மூடி காத்திருந்தான். அது வேறேதோ ஒலியின் செவிக்குழப்பம் என எண்ணி விழிதிறந்தபோது அருகே ஒரு காகத்தின் குரலில் “இவ்வழியே” என்னும் சொல் எழுந்தது.

சூக்திமதியை சென்றடைந்தபோது அவன் முகம் பொலிவுற்றிருந்தது. மாலை ஒளிபரவிய நகர்வெளியை புன்னகையுடன் நோக்கியபடி, வாழ்த்தொலி எழுப்பிய கோட்டைக் காவலர்களை நோக்கி கைவீசிக் கொண்டு, நகர்த்தெருக்களின் வழியாக புரவியில் பெருநடையிட்டு அரண்மனை நோக்கி சென்றான். ஒவ்வொன்றும் புதிதெனத் தெரிந்தன. ஒவ்வொருவர் விழிகளையும் தனித்தனியாக நோக்கமுடியும் என்று தோன்றியது.

அவன் அரண்மனைக்குச் செல்வதற்குள் செய்தி அங்கு சென்றடைந்திருந்தது. அவன் தன் அறைக்குச் சென்றதுமே நிஸ்ஸீமர் வந்து சற்று அப்பால் நின்று தலை வணங்கினார். அவர் முகத்தின் கசப்பில் அச்செய்தி இருந்ததைக் கண்டு அவன் புன்னகையுடன் பீடத்தில் காலை நீட்டி சாய்ந்தமர்ந்து அவரை நோக்கி “என்ன செய்தி அமைச்சரே?” என்றான். அவர் விழிகொடுக்காமல் “யாதவர்கள் இந்நேரம் அனைத்தையும் அறிந்திருப்பார்கள்” என்றார். “ஆம் அறிந்திருக்கவேண்டுமல்லவா?” என்றான் சிசுபாலன் உரக்க நகைத்தபடி.

“இதுபோன்று பிறிதொருமுறை முன்பு நடந்ததில்லை” என்றார் நிஸ்ஸீமர். “முறைப்படி பஃப்ரு படைகொண்டு வந்து அவளை மீட்டுச் செல்ல வேண்டும். அது முடியாதபோது அவன் தன் குலத்திடம் சென்று முறையிடவேண்டும். அவளை மீட்பது அவர்களின் கடன். அவளை மீட்காவிட்டால் என்றென்றைக்கும் அது கறையென வரலாற்றில் எஞ்சும்” என்றார் அமைச்சர். “ஆம், அந்தக் கறை எப்போதும் எஞ்சும். யாதவர்களில், அந்தகக்குலத்தில், துவாரகையின் அரசனில்… பார்ப்போம்” என்றான் சிசுபாலன்.

“இப்போது துவாரகை நகர் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களைச்சூழ்ந்து எதிரிகள் உள்ளனர். எனவே யாதவப் படைகள் கூர்ஜர எல்லைக்கும், சிந்துவின் கரைகளுக்கும், மாளவ எல்லைக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. கடலோரக்காவலுக்கும் யாதவப்படைகள் நின்றுள்ளன. சததன்வா கொல்லப்பட்டமையால் யாதவர்களிடையே ஒற்றுமையும் இல்லை” என்றார் நிஸ்ஸீமர். “ஆயினும் இது யாதவ குலத்திற்கு மிகப்பெரிய இழுக்கு. இவ்வொரு செயலாலேயே அவர்கள் ஒருங்கிணையக்கூடும். அவர்கள் நம்மீது படைகொண்டு வந்தால் ஒருவேளை ஷத்ரியர்களும் நமக்குத் துணைவராது போகக்கூடும்” என்றார் அமைச்சர். “பார்ப்போம்… இத்தருணத்தில் எவர் நம்முடனிருக்கிறார்கள் என்று” என்றான் சிசுபாலன். நிஸ்ஸீமர் தலைவணங்கி அவன் மறுமொழிக்கு காத்திராமல் வெளியே சென்றார்.

அன்று தன்னை அணுகிய சிசுபாலனை விசிரை வெறிகொண்ட பூனை போல கைநகங்களாலும் பற்களாலும் தாக்கினாள். அவன் அவளை ஆட்கொண்டபோது அழுதபடி உடல் அடங்கி ஒசையின்றி அழுதுகொண்டிருந்தாள். அவளைத் தழுவி அருகே படுத்தபடி அவன் அவளிடம் இனிய மென்சொற்களை சொல்லிக்கொண்டிருந்தான். வாக்குகுறுதிகளை அளித்தான். அவளுக்கு மூத்தவர்களான அத்தனை சிறுகுடி ஷத்ரிய அரசிகளையும்  கடந்து சேதிநாட்டின் அரசியாக அவள் அமரலாம் என்றான். அவள் வயிற்று மைந்தர் ஷத்ரியர்களாக அரசாள்வர் என்றான்.

பின்பு கண்டுகொண்டான், அவை அனைத்துக்கும் மேலாக அவள்மேல் அவன் கொண்ட காமத்தைப்பற்றி பேசுவதே அவளை கவர்கிறது என. அவள் உடல்மேல் கொண்ட விழைவைப்பற்றி சொல்லச் சொல்ல அவள் ஆன்மா அதை வாங்கி சூடிக்கொண்டு தருக்குவதை அறிந்தான். அவ்வழியாகச் சென்று அவளுக்குள் சொல்நிறைத்தான். மெல்ல அவள் அவனுடன் உரையாடலானாள். அவனுடைய வன்போக்கைப் பழித்து வசையுமிழ்ந்தாள். பின்பு தன்னிரக்கம் கொண்டு அழுதாள். அவ்வழுகையை அவன் ஆறுதல்படுத்தியபோது முதலில் தட்டினாள். பின்பு இடம் கொடுத்தாள். மெல்ல அத்துயருக்குள் அவனும் உள்ளே நுழைய ஒப்பினாள். அதனூடாக அவனுடன் அவள் ஒட்டிக்கொண்டாள். துயருற்ற, தனித்த, ஏதிலியான பெண்ணென தன்னை காட்டினாள். அவளுக்கு அடைக்கலம் அளித்துக் காக்கும் ஆண்மகனென அவன் தன்னை முன்வைத்தான். அந்த உளநாடகத்தில் ஒருவர் பூணவேண்டிய உருவை பிறிதொருவர் நுண்மையாக அறிந்துகொண்டனர். அவற்றை மாறி மாறி அணிந்து நடித்தனர். அறியா ஒரு கணத்தில் அவர்கள் உடல்தழுவினர். உளமிணைந்து துய்த்தனர். அக்காமத்தின் ஊடலும் உவத்தலுமாக ஆகின அனைத்தும். அத்தனை நடிப்புகளுக்கும் அடியில் அவளுள் விழிமின்னிக் காத்திருந்தது காமமே என அவன் தன் காமத்தால் அறிந்திருந்தான். அவள் அவ்விழிகளை ஒருமுறையேனும் நோக்காமல் இருக்கும் கலையை அறிந்திருந்தாள்.

யானைமேல் அவளுடன் நகருலா சென்ற மறுநாளே அவன் தூதன் செய்தியுடன் சென்று ஜராசந்தனை சந்தித்தான். மகதத்திற்கு சேதிநாடு என்றும் தோளிணைவுடன் இருக்கும் என்று வாக்குறுதி அளித்தான். சிசுபாலன் விரும்பி கொண்டுவந்த யாதவப்பெண்ணை மீட்டு கவர்ந்துசெல்ல யாதவக்குடிகள் படைதிரள்வதாகச் சொன்னபோது ஜராசந்தன் மகதத்தின் முழுப்படைவல்லமையும் சிசுபாலனுடன் நின்றிருக்குமென வாக்களித்தான். பிரக்ஜ்யோதிஷத்திற்குச் சென்றிருக்கும் இளைய யாதவன் வருவதற்குள் மதுராவைப் பிடித்து மகதத்திடம் ஒப்படைப்பதாக சிசுபாலன் வாக்களித்தான். மகதத்தின் பதினெட்டு படைப்பிரிவுகள் அவனுக்காக அனுப்பப்பட்டன.

தன் தோள்துணைவனாகிய கரூஷநாட்டு தந்தவக்த்ரனுடன் இணைந்து அப்படைப்பிரிவுகளை நடத்திக்கொண்டு மதுராவை தாக்கினான் சிசுபாலன். மதுராவுக்கு அருகே கதாவசானத்தை வந்தடைந்த சிசுபாலனின் படையை வசுதேவரின் தலைமையில் அந்தகர்களும் விருஷ்ணிகளும் குங்குரர்களும் கூடி எதிர்த்தனர். மகதத்தின் பெரும்படையை எதிர்கொள்ளமுடியாமல் வசுதேவர் படைகளை பின்னிழுத்து மதுராவுக்குச் சென்றார். சிசுபாலன் யாதவப்படைகளை களத்தில் சிதறடித்தான். மதுராவின் கோட்டையை அடைந்து சூழ்ந்துகொண்டான். மந்தணப்பாதை வழியாக வசுதேவர் யமுனைக்குள் சென்று படகில் தப்பி மதுவனத்திற்கு ஓடினார்.

சிசுபாலன் கோட்டையை உடைத்து மதுராவை கைப்பற்றி அரண்மனைக்குள் நுழைந்தான். கருவூலத்தை கொள்ளையிட்டபின் வசுதேவரின் அரியணையில் அமர்ந்து முடிசூட்டிக்கொண்டான். மதுராவின் கருவூலச்செல்வத்துடன் திரும்பி வந்து அதை முழுமையாகவே மகதத்திற்கு கப்பமாக அனுப்பினான். அசுரர்களுக்குரிய வளைந்த பெரிய பற்கள் கொண்டிருந்தமையால் யாதவர்களால் முழுமையாகவே விலக்கப்பட்டிருந்த தந்தவக்த்ரன் அந்தகர்குலத்திலிருந்து சௌமித்ரை சௌரப்யை என்னும் இரு பெண்களையும் குங்குரர்குலத்திலிருந்து அமிதை, அனசூயை என்னும் இரு பெண்களையும் கவர்ந்து கரூஷநாட்டுக்கு கொண்டுசென்றான்

கதாவசானத்தில் நடந்த முதற்பெரும்போரில் அவன் படைகளை அந்தகக்குலத்து பஃப்ரு எதிர்த்து நின்றான். அவன் வில்லேந்தி வந்து நின்றிருந்ததே அவன் போர்க்கலை தேராத எளிய யாதவன் என்று காட்டியது. அப்பாலிருந்து “நில்! நில்! பிறன்மனை கவர்ந்த இழிமகனே! நில்! இன்றோடு உன் வாழ்வு அழிந்தது!” என்று கூவியபடி அவன் புரவியில் பாய்ந்து வந்தான். அவனைச்சூழ்ந்திருந்த யாதவர்களே அதைக்கண்டு புன்னகைத்தனர். “எந்த சூதர்பாடலில் இவ்வரிகளைக் கற்றாய் மூடா” என்றான் சிசுபாலன். முதல் அம்பை பஃப்ரு தொடுப்பதற்குள்ளாகவே அவன் வில்லை ஒடித்தான். இன்னொரு அம்பை எடுக்கையில் அவன் தலைப்பாகையை தெறிக்கவைத்தான்.

சினத்தால் அனைத்தையும் மறந்து “கொல்! கொல் என்னை!” என்று கூவியபடி பஃப்ரு முன்னால் வந்தான். அவன் இடைக்கச்சையை அம்பால் கிழித்து ஆடையை கால்நழுவச்செய்தான். அவன் அதை குனிந்து பிடிப்பதற்குள் படையாழி அவன் தலையை கொய்தெறிந்தது. அது திரும்பி வந்தபோது அதிலிருந்த குருதியை தன் சுட்டுவிரலால் தொட்டு நெற்றியிலணிந்துகொண்டான். மகதப்படைகள் போர்க்கூச்சலெழுப்பின.

பஃப்ருவின் குருதிபடிந்த இடைக்கச்சையை எடுத்துவரச்சொன்னான் சிசுபாலன். சேதிநாட்டுக்கு மீண்டபோது அதைக்கொண்டுசென்று விசிரையிடம் காட்டினான். இரவில் அவர்களின் மந்தண அறைக்குள் மஞ்சத்தில் அவள் அவன் தோள்தழுவி சாய்ந்திருந்தாள். “உனக்கு ஒரு பரிசு…” என்று சொல்லி அவன் அந்தத் துணிச்சுருளை எடுத்து விரித்தான். அவள் அதன் முத்திரையை உடனே அடையாளம் கண்டுகொண்டாள். குருதியையும் அக்கணமே அவள் விழிகள் கண்டன. முகம் மரப்பாவையென ஆயிற்று.

“என் எதிர்நின்று நான்கு அம்புகளை தொடுக்க முயன்றான் எளிய யாதவன்…” என்று சிசுபாலன் நகைத்தான். “அந்த அளவுக்கு அவனுக்கு துணிவிருக்குமென நான் எண்ணவில்லை.” அவள் பெருமூச்சு விட்டு மெல்ல எளிதானாள். சற்றே கொழுத்த வெண்தோள்கள் தளர்ந்தன. கைநீட்டி அந்தக் கச்சையை வாங்கி முகத்தருகே தூக்கிப்பார்த்தாள். அதன் குருதிக்கறை உலர்ந்திருந்தது. மெல்லிய சுட்டுவிரலால் அதைத் தொட்டு சுரண்டுவதுபோல நகம் அசைத்தாள். விழிதூக்கி அவனை நோக்கினாள்.

“துயரா?” என்று அவன் கேட்டான். இல்லை என்று தலையசைத்தபோது குழைகள் ஆடின. காதில் குழல்கற்றையை அள்ளிச்செருகியபடி அதை அப்பால் வைத்தாள். “பின்?” என்று அவன் கேட்டான். அவளிடம் எதை எதிர்பார்க்கிறோம் என வியந்துகொண்டான். “உன்னை நுகர்ந்த ஒருவன் இருக்கிறான் என்னும் முள் என்னுள் இருந்துகொண்டே இருந்தது” என்றான். “அவன் இல்லை என்றானதும் ஆறுதல்கொண்டேன்.” அவள் புன்னகைசெய்தாள்.

[ 15 ]

விசிரையை சேதிநாட்டின் அரசியாக்க தமகோஷர் மறுத்துவிட்டார். அவன் அவளை கவர்ந்து வந்ததை அவர் விரும்பவில்லை என்று நிஸ்ஸீமர் சிசுபாலனிடம் தெரிவித்தார். சேதிநாட்டின் இரண்டாவது தலைநகரமான கராளமதியின் கோட்டையில் தமகோஷர் அப்போது தங்கியிருந்தார். அங்கிருந்து சூக்திமதிக்கு வரவோ, சிசுபாலனை கராளமதிக்கு அழைக்கவோ செய்யவில்லை. அவரது சினத்தை அறிந்திருந்தாலும் சிசுபாலன் அதை பொருட்படுத்தவில்லை. “வெற்றிகளால் அவருக்கு மறுமொழி உரைக்கிறேன்” என்று சுருதகீர்த்தியிடம் சொன்னான்.

ஆனால் அவன் விசிரையை அரசியாக்கக் கூடும் என்ற செய்தியை அறிந்ததும் அங்கிருந்து திட்டவட்டமான ஓலை வந்தது. பிறிதொருவனின் துணையாக இருந்தவளும், சிறுகுடி யாதவப்பெண்ணுமாகிய விசிரையை சேதிநாட்டின் அரசியாக்க அவருடைய ஒப்புதல் இல்லை என. முன்னரே அவன் சேதியின் குடித்தலைவர்களின் மகள்களான சிறுகுடிஷத்ரியப்பெண்கள் அறுவரை மணந்திருந்தான். அவர்களில் ஒருவர் அரசியாகக்கூடுமென்றே நாடு எண்ணிக்கொண்டிருந்தது. யாதவப்பெண் அரசியாக ஒருபோதும் குடித்தலைமை ஒப்பாது என்றார் தமகோஷர். அவன் கராளமதிக்கு நேரில் சென்றான். அவர் அவனைப் பார்க்க ஒப்பவில்லை. அவரது அமைச்சர் சூக்திகர் “பேரரரசர் தன் ஆணை தெளிவானது என்று அறிவித்துவிட்டார் அரசே” என்றார்.

நான்குநாட்கள் கராளமதியிலேயே சிசுபாலன் காத்திருந்தான். இறுதியில் அவனை தன் மந்தண அறைக்கு தமகோஷர் அழைத்தார். அவன் உள்ளே நுழைந்து முகமனும் வாழ்த்தும் உரைத்ததுமே நேரடியாக “உன் கோரிக்கையை நான் ஏற்கப்போவதில்லை. அதை என் வாயிலிருந்தே கேட்பதுதான் உன் நோக்கமென்றால் அவ்வாறே ஆகுக!” என்றார். “நான் வாக்களித்துவிட்டேன் தந்தையே” என்றான் சிசுபாலன். “பெண்களுக்கு அளிக்கும் வாக்குகள் அரசியல்நிகழ்வுகளை கட்டுப்படுத்தாது. தசரதன் செய்த பிழையை பிற மன்னர்கள் செய்யவேண்டியதில்லை” என்றார் தமகோஷர்.

“நான் அவளை கைவிடமுடியாது…. “ என்று சொல்லத் தொடங்கிய சிசுபாலனைத் தடுத்து “கைவிடும்படி நான் சொல்லவில்லை. அவள் அரசியாக இருக்கட்டும், பட்டத்தரசி என ஷத்ரியப்பெண் வரவேண்டும்” என்றார். “நான் மகதத்திடம்கூட இவளைப்பற்றி பேசிவிட்டேன்” என்றான் சிசுபாலன். “மூடா, மகதனே அரக்ககுலத்தவன். அவன் ஒப்புதலுக்கென்ன இடம்? நம் குடிகள் என்ன சொல்வார்?ஷத்ரியர் அவையில் நீ எங்கே அமர்வாய்? அதை மட்டும் பார்” என்று தமகோஷர் உரக்க சொன்னார்.

பின்னர் தணிந்து “மைந்தா, உன் குருதியே தூயதல்ல என்று இங்கே ஷத்ரியர் நினைக்கிறார்கள் என்பதை அறிந்திருப்பாய். உபரிசிரவசுவின் குருதியில் பிறந்த நான் உன் அன்னையை மணந்ததே ஒரு கட்டாயத்தால்தான். என் தந்தை சுசேனர் மறைந்தபின் என் அரசை நிஷாதர்களின் துணையுடன் வங்கமன்னன் கைப்பற்றி எந்தையின் முறைசாரா மைந்தனாகிய பிரமோதனை அரசனாக்கியிருந்தான். என்னுடன் நின்ற உதிரிப்படைகளுடன் நான் அன்று சிற்றூராக இருந்த இக்கராளமதியில் ஒளிந்திருந்தேன். செல்வமில்லை, வரியளிக்க குடிகளும் இல்லை. எப்போது வேண்டுமென்றாலும் வங்கன் என்மேல் படைகொண்டெழக்கூடுமென்ற நிலை இருந்தது. நான் முந்திக்கொண்டாகவேண்டும். ஒவ்வொருநாளும் என்னை நோக்கி அழிவு வந்துகொண்டிருந்தது.”

“அன்று யாதவர் படையெழுச்சி அடைந்து கொண்டிருந்தனர். மதுவனத்தை ஆண்ட ஹ்ருதீகரின் மைந்தர் கிருதபர்வரின் மகள் சுருதகீர்த்திக்கு மணம்நாடுவதாக அறிந்தேன். ஹ்ருதீகரின் மைந்தர்களான தேவவாகர், கதாதன்வர், கிருதபர்வர் மூவருக்கும் வலுவான படைகள் இருந்தன. அவர்கள் விழைந்தது ஓரு ஷத்ரிய அரசனின் உறவை. மதுராவின் கம்சன் சுருதகீர்த்தியை அடைய விழைந்திருந்தான் என்றும் அவனுக்குத்தெரியாமல் கிருதபர்வர் சிறுகுடி ஷத்ரியர்களுக்கெல்லாம் மணஓலை அனுப்பிக்கொண்டிருந்தார் என்றும் அறிந்தேன். என் தூதனை அனுப்பி பெண்கேட்டதுமே கிருதபர்வர் கைகூப்பியபடி அரியணையிலிருந்து எழுந்துவிட்டார். ‘உபரிசிரவசுவின் குருதி என்குடியில் கலக்குமென்றால் அது என் மூதாதையர் தவப்பயன்’ என்றார்.”

“ஆனால் சூழிருந்தவர் என்னை எதிர்த்தனர். யாதவர் உறவு என் குடித்தூய்மையை அழிக்குமென்றார்கள் அமைச்சர்கள். என்னுடனிருந்த நான்கு குடித்தலைவர்களில் இருவர் யாதவப்பெண்ணை நான் மணந்தால் என்னை அரசனென ஏற்கவியலாதென்று சினந்தனர். அவர்கள் ஏற்றாலும் என் குருதியில் பிறந்த மைந்தனை அரசனென ஷத்ரியர் ஏற்கமறுப்பர் என்றார்கள் அமைச்சர்கள். யாதவக் குடியவை ஒற்றைச் சொல்லையே எனக்கு முன் நிறுத்தியது, சுருதகீர்த்தியை நான் பட்டத்தரசியாக்கவேண்டும். அவள் வயிற்றில் பிறந்த மைந்தன் அரசாளவேண்டும். எனக்கு வேறுவழியில்லை, என் வாள்தொட்டு அவ்வாக்கை அளித்து உன் அன்னையை மணந்தேன்.”

“மணப்பந்தலிலிருந்தே படையுடன் சூக்திமதியை நோக்கி சென்றேன். வங்கனை வென்று என் இளையோனைச் சிறையிட்டு அரசை கைக்கொண்டேன். என்னை விலக்கிய குடித்தலைவர்களை ஒறுத்து முடிசூடி அரியணை அமர்ந்தேன்” தமகோஷர் சொன்னார். “ஆனால் ஷத்ரியர்கள் உன்னை ஏற்கவில்லை. நீ முடிசூடிய நாளில் இங்கே யாதவரும் சிறுகுடி ஷத்ரியர்களும் மட்டுமே வந்தனர் என்பதை நீயே அறிவாய்.  ஷத்ரியர் ஆதரவில்லை என்பதனால்தான் அனைத்துக்குடித்தலைமையிலிருந்தும் நீ பெண்கொள்ளச்செய்தேன். நீ யாதவப்பெண்ணை மணந்தால் உனக்குப்பிறக்கும் மைந்தன் ஒருபோதும் ஷத்ரியனாக அரசாள முடியாது.”

தளர்ந்து சிசுபாலன் சூக்திமதிக்கு திரும்பிவந்தான். அவனால் விசிரையை எதிர்கொள்ள முடியவில்லை. முதல்நோக்கு முதல் அவன் அவளை உள்ளூர ஒரு பொருட்டென்றே எண்ணியிருக்கவில்லை. பஃப்ருவின் குருதிபடிந்த கச்சையைக் கண்டு அவளில் விரிந்த புன்னகையின் தருணத்தில் நெஞ்சு நடுங்க ஒன்றை உணர்ந்தான், அவள் அவன் எண்ணியதுபோல எளியவள் அல்ல. அன்று அவளுடனான காமத்தில் அவளை கொற்றவை என்றே அறிந்தான். அன்று எழுந்த அச்சம் அவனுள் குளிர்ந்த துளியென எப்போதுமிருந்தது. அவ்வச்சம் அவளை ஈர்ப்புமிக்கவளாக்கியது. அவளையன்றி பிறரை எண்ணாதொழியச் செய்தது. அவளுடனான காமத்தை எரிபுகுந்து எழுதல்போல் மாற்றியது.

பன்னிருநாட்களுக்குப்பின் அவன் அவளிடம் தமகோஷரின் எண்ணத்தை சொன்னான். “மதுராவை நான் தாக்கியபின்னரும்கூட இளைய யாதவனும் யாதவகுலங்களும் இன்று என்னை அஞ்சி வாளாவிருக்கின்றன. மகதத்தின் படைகள் என்னுடன் இருக்கையில் அவர்கள் பொறுத்திருப்பார்கள். ஆனால் நான் மகதத்தை முழுதும் நம்பமுடியாது. எனக்கு ஷத்ரியர்களின் உறவு தேவை. உரிய மணவுறவு வழியாகவே அதை அமைக்க முடியும். சொல்லெண்ணச் சொல்லெண்ண வேறு வழி ஏதும் என் முன் தெரியவில்லை” என்றான்.

அவள் அதை முன்னரே அறிந்திருந்தாள். அவன் எப்படி சொல்வான் என்று மட்டுமே காத்திருந்தாள். இயல்பான முகத்துடன் “ஆம், அறிந்தேன்” என்றாள். “நான் உனக்களித்த சொல்லே என்னை கட்டுப்படுத்துகிறது” என்றான். “அச்சொல்லை எனக்களித்த பரிசென்றே கொண்டேன். அதை திருப்பியளிக்கிறேன்” என்றாள். அவன் தன் அச்சங்களும் தயக்கங்களும் விலகிய அத்தருணத்தில் ஏன் அகம் ஏமாற்றம் கொள்கிறது என வியந்தான். அவள் எளிதாக அதை புறந்தள்ளியதை ஓர் சிறுமையென்று அவன் ஆழம் எடுத்துக்கொண்டது.

“ஷத்ரியப்பெண் என்றால் உன்னை நிகரென எண்ண மாட்டாள்” என்றான். “ஆம், அவர்களின் இயல்பு அது” என்றாள் அவள். சிசுபாலன் மேலும் சீற்றம் கொண்டு “மேலும் அவள் உன்மேல் காழ்ப்புகொள்ளலுமாகும். உன் மைந்தருக்கு இங்கு இடமிருக்காது” என்றான். அவள் புன்னகைத்து “ஆம், ஆனால் மைந்தரின் இடம் நீங்கள் அளிப்பதல்லவா?” என்றாள். மெல்ல அவன் தணிந்தான். அவளை வெல்லமுடியாதென்று தோன்றியது. அவள் பல அடுக்குகளாக சுவர்களமைத்து அப்பால் தன்னை வைத்துக்கொண்டிருக்கிறாள். அவன் ஒருபோதும் அங்கு சென்று சேரமுடியாது.

அன்று அவளிடம் இணைந்திருக்கையில் தன் உடலெங்கும் சினமிருப்பதை அவன் உணர்ந்தான். “உனக்கு நான் ஒரு பொருட்டு இல்லையா?” என்றான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “சொல்!” என்றான். “நீங்கள் எதை எண்ணிக்கொள்ள விரும்புகிறீர்கள்?” என்றாள். “உண்மையை” என்றான். “எனக்கு தெரியவில்லை. நான் இத்தருணங்களில் முடிந்தவரை உகந்தமுறையில் இருக்க விழைகிறேன்” என்றாள். “இதுவல்ல என் வினாவுக்கான விடை. நீ எனக்காக போரிடுவாயா? எனக்காக அழுவாயா? எனக்காக இறப்பாயா?” என்றான். அவள் “இறப்பேன்” என்றாள். “எப்போது?” என்றான். “மூத்தவளாதலால் நான் உடன்கட்டை ஏறவேண்டும் அல்லவா?”

அவன் சினம்பெருகிய உடலை மெல்ல தளர்த்தி “அதுகூட முறைமை என்பதனால்தான் இல்லையா?” என்றான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல், மறுமொழி சொல்!” என்று அவன் குரலெழுப்பினான். “நான் உகந்த முறையில் இருக்க விழைகிறேன்” என்றாள். “சீ” என சீறியபடி அவன் எழுந்தான். “நீ ஒரு இழிமகள். உடலளிக்கும் பரத்தைக்கு நிகரானவள்…” அவள் அசையாமல் அவனை நோக்கியபடி படுத்திருந்தாள். அவன் அவள் ஏதேனும் சொல்வாள் என எண்ணினான். சொல்லாமலிருப்பதன் வல்லமையை அவள் அறிந்திருந்தாள்.

கைநீட்டி “உன் குலத்தின் இழிவை இப்போது காண்கிறேன். யாதவப்பெண்கள் எவருடனும் உடல்பகிர்வார்கள் என்று ஷத்ரியர் சொல்வதுண்டு” என்றான். மேலும் வெறியெழ “உடலை பகடைக்களமாக்கி உலகை வெல்லத்துடிப்பவர்கள். உன்குலத்துப்பெண் அங்கே அஸ்தினபுரிக்கு அரசியாக இருக்கிறாள். கருவறையை பகிர்ந்தளித்து மைந்தரைப்பெற்ற இழிமகள்.”

அதைச்சொன்னதுமே அவள் எண்ணுவதென்ன என்று அவனுக்குத்தெரிந்தது. மேலும் வெறிகொண்டு உரத்தகுரலில் “ஆம், என் அன்னையையும் சேர்த்தே சொல்கிறேன். இழிகுலம். இழிந்த இயல்பு… பரத்தையர்…” என்று சொல்லி ஒரு கணம் நின்றபின் கதவை உதைத்துத் திறந்து அறையைவிட்டு வெளியேறினான்.

முந்தைய கட்டுரைகலைக்கணம்
அடுத்த கட்டுரைபோதி – சிறுகதை குறித்து..