கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?

9

அன்புள்ள ஜெ,

இன்று கிருஷ்ண ஜெயந்தி இதை ஒட்டி முகநூலில் எங்களுக்குள் ஒரு உரையாடல் நடந்தது. கிருஷ்ணன் எந்த வகையில் ஒரு தெய்வம் என்று ஒருவர் கேட்டார். கிருஷ்ணனின் குணாதிசயங்களாக சொல்லப்படுபவை திருட்டுத்தனம், பெண்பித்து, சூது ஆகியவை மட்டுமே. அத்தகைய ஒரு மனிதரை எப்படி தெய்வமாக வழிபட முடியும்? அவனை அணுகித் துதிப்பவர்களுக்கு அவன் பல நன்மைகளை செய்வதாகவும் மாயமந்திரங்களைச் செய்ததாகவும் கதைகள் உள்ளன. அத்தனை குணக்கேடுகள் உள்ள ஒருவன், தன்னை வணங்குபவர்களுக்கு நன்மை செய்தால் மட்டும் அவன் தெய்வமாகிவிடுவானா என்ன? இதற்கு உங்கள் விளக்கம் என்ன?

சத்யா

***

 

அன்புள்ள சத்யா,

மிக எளிமையான இந்தக் கடிதத்தை கூட ஆங்கிலத்திலேயே நீங்கள் எழுதியிருப்பதிலிருந்து உங்கள் வாசிப்பின் இடம் என்ன என்று தெரிகிறது. மூடபக்தி என்று ஒன்று உண்டு. மறுபக்கமாக மூடநாத்திகம் என்று ஒன்றும் உண்டு. எந்த வகையிலும் வரலாற்று உணர்வோ பண்பாட்டுப் புரிதலோ தத்துவ அறிவோ இல்லாத ஒரு மூர்க்கமாக அது எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதைப்பேசுகிறவர்கள் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு இருந்த அறிவுஜீவி பட்டத்தை  இன்று பெறுவதில்லை என்பதை அவர்கள் அறிவதில்லை

ஒரு வாரம் ஒரு நாளுக்கு இரண்டு மணிநேரம் வீதம் படிக்க முடியுமென்றால் மிக விரிவான வரலாற்று சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளும் அளவுக்கு இன்றைக்கு நல்ல நூல்கள் உள்ளன. கிருஷ்ணனை, புத்தரை, யேசுவை பல கோணங்களில் இன்று அறிய முடியும். அவ்வாறு வரலாற்று ரீதியாக பண்பாட்டு ரீதியாக தத்துவார்த்த ரீதியாக அறிந்த பின் ஏற்பதும் மறுப்பதும் ஓர் அறிவு நிலைபாடு.

கிருஷ்ணன் இந்தியா உருவாக்கிய மாபெரும் ரகசியம் என்று நடராஜ குரு சொல்கிறார். ஒருவகையில் வெண்முரசு அந்த ரகசியத்தின் வரலாற்று பண்பாட்டு தத்துவ விரிவுகளை நோக்கித் திறக்கும் ஒரு படைப்பு. அது தன்னை அனைத்து வகையிலும் தயார் செய்து கொண்டு தொடர்ச்சியான கவனத்தையும் உழைப்பையும் அளிக்கும் கூர்ந்த வாசகர்களுக்கு உரியது. அதற்கப்பால் இருக்கும் எளிய பொது வாசகர்களுக்காக ஒரு சித்திரத்தை அளிக்கிறேன். ஆம் இது பொது சித்திரம் மட்டுமே.

தெய்வ உருவகங்கள் எதுவும் ஒரு நோக்கத்துடன் திட்டமிட்டு சிலரால் உருவாக்கப்படுபவையோ, நிலைநிறுத்தப்படுபவையோ அல்ல. ஏனென்றால் அது சாத்தியம் அல்ல. அவற்றை  ஏற்பவர்களும் அறிவும் சிந்தனையும் உடைய மக்களே. அவை ஏற்கப்படுவதன் கூட்டுஉளவியல், பண்பாட்டு உள்ளடக்கம் ஆகியவை கூர்ந்து பார்க்கவேண்டியவை, குறைந்தபட்சம் அறிவார்ந்த விவாதத்திற்குவரும் ஒருவரால்.

தெய்வ உருவங்கள் பயன்பாட்டுக்கு என வடிவமைக்கப்படும் கருவிகள் அல்ல அவை. மாறாக கண் போல கை போல பரிணாமத்தில் படிப்படியாக உருவாகி வருபவை. ஒன்றிலிருந்து பிறிதொன்று முளைப்பதாக. ஒன்றை உண்டு பிறிதொன்று எழுவதாக. முந்தைய ஒன்றை நினைவுறுத்தும் புதிய ஒன்றாக. ஆகவே மிகச் சிக்கலான உள்ளோட்டங்கள் கொண்டவை. மிக நுட்பமான பல்லாயிரம் காரணிகள் கொண்டவை. எந்த தெய்வ உருவகத்துக்கும் இது பொருந்தும், கிருஷ்ணனுக்கும்.

கிருஷ்ணன் என்று இன்று நமக்குக் கிடைக்கும் தெய்வஉருவகத்தின் வேர்த்தொடக்கத்தை தேடிச்சென்றால் வேதங்களில் உள்ள இந்திரனைச் சென்றடைவோம். இந்திரன் மூன்று முகங்கள் கொண்டவனாக வேதங்களில் தென்படுகிறான். ஒன்று அவன் வேந்தன். ஆகவே எதிரிகளை அழித்து குடிகளைக் காப்பவன். இரண்டு, அவன் தன் குடிகளிடம் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பவன். அவர்களை வைத்து விளையாடுகிறான். அவர்களுக்குள் ஊடாடி விளையாட்டுக் காட்டுகிறான். அவர்களை ஏமாற்றுகிறான். அவர்களிடம் பலிபெற்றுக்கொள்கிறான்.   மூன்று, அவன் பெரும் காதலன். தீராத வீரியம் கொண்ட ஆண்மகன்.

மானுடப்பண்பாடு தொடங்கிய காலகட்டத்தில் உருவான தெய்வ உருவகம் இது. வேந்தனும் தெய்வமும் ஏறத்தாழ ஒரேகாலகட்டத்தில் உருவான உருவகங்களாக இருக்கலாம். அவை ஒன்றெனவே பல பண்பாடுகளில் உள்ளன. உலகம் முழுக்க தொன்மையான மதங்களிலும் பண்பாட்டிலும் இதே வகையான தெய்வ – அரச உருவகம் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஆப்பிரிக்க பழங்குடிப் பண்பாடுகளில் இன்றும் கூட அரசன் அல்லது தலைவன் என்பவன் இப்படிப்பட்டவன்தான். கிறிஸ்தவத்துக்கு முந்தைய பேகன் வழிபாடுகளில் தெய்வங்கள் இப்படித்தான் உள்ளன. கிரேக்கத் தொன்மங்களில் அரசனும், வீரனும், காதலனும், விளையாட்டுத் தோழனுமாகிய தெய்வங்களை நாம் காணலாம். பைபிளில் வரும் ஞானியும் அரசனுமாகிய சாலமோனும்கூட இதே ஆளுமையுடன் காட்டப்படுகிறார்.

ஏன், இன்றும் கூட நம்முடைய நாட்டார் மரபில் இருக்கும் பெரும்பாலான தெய்வங்களின் குணாதிசயங்கள் மேலே சொன்ன  மூன்று முகங்களைக் கொண்டவை. ஐயனார் அல்லது கருப்பசாமி அல்லது மாயாண்டிசாமி அல்லது சங்கிலிக்கருப்பன் அல்லது மாடசாமி கதைகளைப் பாருங்கள். அவர்கள் இன்றைய அறவியலுக்கு நன்றா தீதா என்று சொல்ல முடியாத ஆளுமை கொண்டவர்கள். கொடூரமும் கருணையும் கலந்தவர்கள். பார்க்கும் பெண்களை எல்லாம் மயக்கி கவர்ந்து சென்று உடலுறவு கொள்ளக்கூடியவர்களாகத்தான் சங்கிலிக் கருப்பசாமியும், மாடசாமியும், மாயாண்டிசாமியும் நாட்டார் பாடல்களில் காணப்படுகிறார்கள். இன்றைய பாணியில் சொல்லப்போனால் அவர்கள் செய்வதெல்லாம் நேரடிக் கற்பழிப்புகள் மட்டுமே.

மனித வாழ்க்கையுடன் நம் குடித்தெய்வங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அண்டுபவர்களை ஆதரித்து காத்து அருள் புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். சாதாரணமாக நம் அப்பா தாத்தாக்கள் சொல்வார்கள், “மாடசாமிக்கு கெடா குடுத்து மூணுவருசமாச்சு. போட்டு படுத்துதான் தாயளி. ஒரு கெடாவுக்க வெல என்னன்னு அவனுக்குத்தெரியுமா? செரி, கடன வாங்கி குடுக்கவேண்டியதுதான்”. படுத்தி எடுத்து ஆடோ கோழியோ பலி வாங்கிக்கொள்கின்றன நம் தெய்வங்கள். வேதங்களில் வரும் வருணனும் இந்திரனும் இதேகுணங்கள் கொண்டவர்கள். ஒரு மாற்றமும் இல்லை

இந்த முப்பட்டைக் குணத்தை புரிந்து கொள்வதற்கு ஒட்டுமொத்த மனிதவாழ்க்கையை ,மனித பண்பாட்டுப் பரிணாமத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு விவாதிக்கும் ஒரு பெரிய பண்பாட்டு நோக்கு தேவை. அசட்டு நாத்திகம் அதற்கு எந்த வகையிலும் உதவாது.

எது இந்திரனை பெண்களைக் கவர்பவனாக்குகிறது? எது அப்பல்லோவை அப்படி ஆக்குகிறது? எது மாயாண்டி சாமியை அப்படி ஆக்குகிறது? அதற்கான பண்பாட்டு வேர்களைத் தேடி ஜோசப் கேம்பல் போன்றவர்கள் விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். ஆண்மை, வளம், மக்கட்செல்வம் ஆகிய மூன்றும் ஒன்றாக கருதப்பட்ட ஏதோ ஒரு தொல்பழங்காலம் இருந்திருக்கிறது. அரசனின் கருணையும், வீரமும், அவன் காமத்திறனும் ஒன்றே என்று அவர்கள் எண்ணியிருந்தார்கள்.

ஐரோப்பாவில் தொன்மையான பாகன் சடங்குகளில், விளைச்சலுக்கு செய்யும் வளச்சடங்குகளில், அரசனின் விறைத்த ஆண்குறிக்கு மலர்மாலை அணிந்து பூசை செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. அரசன் விறைத்த குறியுடன் நிர்வாணமாக வயல்களில் நடந்து செல்லும் வழக்கம் சில இடங்களில் இருந்திருக்கிறது. ஆண்குறியை வயல்களில் கல்வடிவில் நாட்டி பூசைசெய்திருக்கிறார்கள். அவை இன்றும் காணக்கிடைக்கின்றன.

ஓர் அரசன் அக்குடியின் தகுதி வாய்ந்த அனைத்துப் பெண்களையும் தன் மனைவியாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் பல்வேறு தொல்குடிகளில் சமீப காலம் வரைக்கும் கூட தொடர்ந்திருக்கிறது. வீரியம் மிக்க கணவனாகவும் ,அக்குடிகளில் பெரும்பாலானவர்களுக்கு பெருந்தந்தையாகவும் அவன் ஆகிறான். கடவுள் பல மதங்களில் தந்தையாக உருவகிக்கப்படுகிறார்.அதைப் புரிந்து கொள்வதற்கான இடம் இது. அப்பா என கடவுளை அழைப்பதன் உட்பொருள் இந்தப் பண்பாட்டுப் பின்புலமே. தொன்மையான பழங்குடிகளில் அரசனே கடவுள். உண்மையிலேயே அவன்தான் அக்குடிகளில் பெரும்பாலானவர்களுக்குத் தந்தை. அந்தப்பிதா வடிவம் தான் பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாக உருவக வளர்ச்சி அடைந்தது.

இதை இன்னும் பின்னால் சென்று பார்ப்போம் என்றால், குரங்குகளில் தாட்டான் குரங்கு எனப்படும் Alpha Male அக்குடியை தன் கட்டுக்குள் வைத்திருப்பதைச் சென்றடைவோம். தன் உடல் ஆற்றலால், மதிநுட்பத்தால் அக்குடியை அது அடக்கி ஆள்கிறது. அக்குடியில் அத்தனை பெண்களுடனும் அது உறவு வைத்து தன் குழந்தைகளை உற்பத்தி செய்கிறது. அது ஒரு பெருந்தந்தை. அரசன் என்னும் தொல்வடிவம் இதிலிருந்து உருவாகி வந்ததாக இருக்கலாம். அது உயிரியல் சார்ந்த ஒண்றாக இருக்கலாம். அதிலிருந்து இந்திரன் போன்ற விண்ணாளும் அரச தெய்வங்கள் உருவாகி வந்திருக்கலாம். வேதங்களில் பெருங்காமத்தின் வடிவமான தீர்க்கதமஸ் போன்ற பெருந்தந்தைகள் பலவடிவில் வந்துகொண்டே இருக்கிறார்கள். வெண்முரசில் அத்தகைய பலகதைகள் உள்ளன.

வேதங்களிலும் சரி ,தொல்தமிழ் நூல்களிலும் சரி ,இந்திரன் ’வேந்தன்’ எனும் வார்த்தையாலேயே சுட்டப்படுகிறான். அரசன் இந்திரனேதான். பழைய குடிகளில் அரசனுக்கு இருந்த இடம் அது. கண்கூடான தெய்வமாகத்தெரியும் அரசனிலிருந்து ஓர் உருவக அரசனை நோக்கி சென்றபோது அவர்கள் இந்திரனை உருவாக்கிக் கொண்டார்கள். அரசனைப்போன்றே அவன் காக்கும் தெய்வமாகவும் விளையாடும் தெய்வமாகவும் காதலனாகவும் ஆகவே தந்தையாகவும் அவன் விளங்கினான். தொல்தமிழகத்தில் இந்திரன் காமத்தின் களமகிய மருதநிலத்தின் தெய்வம். இந்திரனை நன்னீராட்டும்விழா அன்றைய காதல்பெருவிழா.

நெடுங்காலத்துக்கு பிறகுதான் கிருஷ்ணன் என்னும் யாதவன் வரலாற்றில் எழுந்து வருகிறான். அவன் இளவயதுச் சாதனைகளில் ஒன்றாக பாகவதம் குறிப்பிடுவது வருடம்தோறும் இந்திரனுக்கு அளிக்கப்பட்டு வந்த பசு பலியிடும் வேள்வியை அவன் தடுத்ததுதான். முகிலின் மேய்ப்பன், புல்வெளிகளின் காவலன் ஆகையால் இந்திரன் யாதவர்களின் தொல்தெய்வம். கிருஷ்ணன் யாதவர்களின் இந்திர வழிபாட்டை நிறுத்தினான். இந்திரனை வழிபடுவதற்குப் பதிலாக மந்தர மலையை வழிபடலாம் என்று அவன் சொன்னான். ஆகவே சினந்து இந்திரன் மழை பொழிந்து யாதவ குடிகளை அழிக்க முயன்றபோது மந்தரமலையைத் தன் கைகளில் தூக்கி தன் குடிகளைக் காத்தான் என்கிறது பாகவதம்.

குறியீட்டு ரீதியான ஒரு விளக்கம் இது. இந்திரனுக்குப் பதிலாக அவனே காவலன் ஆனான். இந்திரன் என்னும் தொன்மையான தெய்வம் மெல்ல வழக்கொழிந்து அந்த இடத்தில் கிருஷ்ணன் என்னும் புதிய தெய்வம் உருவாகி வருவதை மகாபாரதத்தில் இருந்து பாகவதம் வரைக்குமான காலகட்டத்தில் நாம் பார்க்க முடியும்.

கிருஷ்ணன் என்ற ஆளுமை இரண்டு அம்சங்கள் கொண்டதாகத்தான் மகாபாரதத்தில் உள்ளது. அன்றைய ஷத்ரிய மேலாதிக்கத்திற்கு எதிராக அடித்தள மக்களாகிய யாதவர்களிடமிருந்து எழுந்து வந்த ஒரு பெருந்தலைவன் அவன். பழைய அமைப்பை கட்டிக் காத்து வந்த ஷத்ரிய அரசர்களின் ஆதிக்கத்தை உடைத்து புதியதோர் அரசை உருவாக்கியவன். அத்துடன் பழைய அமைப்பின் தத்துவக் கட்டுமானமாக விளங்கிய அனைத்தையும் உடைத்து அவை அனைத்திலிருந்தும் சாரத்தை எடுத்து தொகுத்து புதிய தத்துவ தரிசனம் ஒன்றை உருவாக்கினான். அதுவே பகவத் கீதை எனப்படுகிறது.

கிருஷ்ணனின் வெற்றி மகாபாரதப்போரால் அறுதியாக நிறுவப்பட்டது. பதினாறு ஜனபதங்களாகவும், பின்னர் ஐம்பத்தாறு நாடுகளாகவும் வகுக்கப்பட்டு பாரத வர்ஷத்தை அடக்கி ஆண்டிருந்த ஷத்ரியர்கள் தளர்வுற்றனர். பின்னர் குறைந்தது ஐநூறு ஆண்டுகாலம் பாரதவர்ஷத்தில் யாதவர்களின் கொடி பறந்தது. அந்தக் காலத்தில் தான் கிருஷ்ணன் என்ற தத்துவ ஞானியாகிய அரசன் தெய்வ வடிவமாக ஆக்கப்பட்டான். விடுதலைக்கு வழி வகுத்த ஒரு மாவீரன், பெரும் ஞானி மெல்ல தெய்வம் என்று ஆன பரிணாமம் அது.

அப்படி ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்ததனால் தான் மூரா என்ற பழங்குடிகளிலிருந்து மௌரியர் உருவாகி வர முடிந்தது. பாரதத்தின் மாபெரும் பேரரசொன்றை அமைக்க அவர்களால் இயன்றது. இந்திய வரலாறே புதிய ஒரு திசைக்கு நகர்ந்தது. அதன் பின் பல யாதவப்பேரரசுகள் .இறுதியாக நாயக்கப்பேரரசு வரை இந்தியா அடித்தள மக்களிலிருந்து எழுந்துவந்த அரசகுடிகளாலேயே விரிவும் வீச்சும் பெற்றது. அந்த திருப்புமுனைப் புள்ளி கிருஷ்ணன்.

கிருஷ்ணன் தெய்வமாக்கப்பட்டபோது இந்திரனுக்குரிய அனைத்து குணங்களும் கிருஷ்ணன் மேல் ஏற்றப்பட்டதை நாம் பார்க்கலாம். அவ்வாறு தான் இந்திரனுக்குரிய காத்தருளும் அரசன், மனிதருடன் விளையாடும் திருடன், பெண்களுடன் ஆடும் பெருங்காதலன் என்ற பிம்பங்கள் கிருஷ்ணனுக்கும் அளிக்கப்பட்டன. மகாபாரதத்தின் கிருஷ்ணன் தத்துவ ஞானியாகிய பேரரசன். தன் அரசியல்நோக்குக்காக வெவ்வேறு குடிகளைச் சேர்ந்த எட்டு அரசியரை மணந்தவன். காதலனோ கள்வனோ ஒன்றும் அல்ல. இந்திரனுக்குரிய அந்த குணங்களை எல்லாம் கிருஷ்ணனுக்கு அளிக்கும் பலநூறு கதைகள் தன்னிச்சையாக உருவாகி நிலைநின்றபின் அவற்றைத் தொகுத்து உருவானதே பாகவதம்

அதன் பின் கிருஷ்ணன் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு தெய்வங்களின் பண்பாட்டு அடையாளங்களை தான் ஏற்றுக் கொண்டு வளர்ந்து இன்று நம் பெருந்தெய்வமாக நின்றிருக்கிறான். பாகவதத்தில் ராதை இல்லை. அதன்பின் மேலும் சிலநூறாண்டுகளுக்குப்பின்னரே ராதாகிருஷ்ணன் என்னும் உருவகம் பிறந்துவந்தது. அரசனும் காதலனும் தந்தையும் ஆன தெய்வம் கைக்குழந்தையாகவும் ஆகி மண்ணைத்தின்றது. ஓர் உருவகத்தின் வளர்ச்சி அது. அது குறிக்கும் தத்துவத்தின் பரிணாமம்.

ஆக, எந்தக் காரணத்துக்காக கிருஷ்ணனை நீங்கள் முத்திரை குத்துகிறீர்களோ அதே காரணத்துக்காக மாயாண்டிச் சாமியையும், முனியப்பனையும், ஐயனாரையும் நிராகரிக்க முடியும் அவர்களும் அதே குணாதிசயங்கள் கொண்டவர்கள் தாம். எந்த ஒரு தெய்வத்தை எடுத்துப் பார்த்தாலும் நினைப்பறியாத ஒரு பழங்காலத்திலிருந்து பல்வேறு பண்பாட்டு உருவகங்களை அது தன்மேல் ஏற்றிக் கொண்டு வளர்ந்து வந்திருப்பதைப் பார்க்க முடியும்.

அந்த வடிவத்தை ஏன் வழிபடவேண்டும்? ஒரு தெய்வவடிவம் நம்மை நாமறியாத தொல்பழங்காலத்துடன் இணைக்கிறது. நாம் வாழும் இந்தக் காலகட்டத்தால் நாம் சூழப்பட்டுள்ளோம். நமது அன்றாடக்காட்சி நம்மைத் துண்டித்து நிகழ்காலத்தில் வாழவைக்கிறது. நம்முடைய தனியாளுமை இந்த துண்டுபட்ட காலத்துடன் முழுமையாக கட்டப்பட்டுள்ளது. இன்றைக்குள்ள அரசியல், இன்றைக்குள்ள தொழில்நுட்பம் இன்றைய பண்பாட்டுச் சூழல் என நாம் சிறையுண்டிருக்கிறோம்.

இது நமது பிரக்ஞை வாழும் உலகம். ஆனால் நமது ஆழ்மனம் இங்கு இப்போது இதில் முழுமையாக சிக்கிக் கொண்டது அல்ல. அது நமது மூதாதையிடமிருந்து நமக்கு வந்தது. நம்முடைய பாரம்பரியத்திலிருந்து நாம் பெற்றுக் கொண்டது. அதற்கு ஆயிரம் பல்லாயிரம் ஆண்டு வரலாறு இருக்கிறது. அதற்கு பற்பல அடுக்குகள். இன்று இந்தக் கணிப்பொறி யுகத்தில் வாழும் ஒருவன் தன்னுடைய ஆழ்மனத்தில் வேதகாலத்தில் வாழ்ந்த ஒருவனோடு இணைக்கப்படுகிறான். ஆதிச்சநல்லூரில் புதையுண்ட பெருங்கலங்களுக்குள் வாழ்ந்த மனிதனுடன் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளான். அந்த இணைப்பு தான் உண்மையில் ஆன்மீகம் எனப்படுகிறது.

தெய்வ உருவங்கள் அவ்வகையில் காலமற்றவை. அவை நின்றிருக்கும் அகாலத்தில் சமகாலத்தின் ஒழுக்க நெறிகளையோ அறநெறிகளையோ முழுமையாக அவற்றின் மேல் போட முடியாது. இதுவும் எந்த தெய்வத்துக்கும் பொருந்தும். கிருஷ்ணனை அல்லது கருப்பனை அல்லது முனியனை ஏன் வழிபடுகிறோம் என்றால் அந்த தொன்மையான வடிவம் சுமந்து நின்றிருக்கும் அத்தனை பண்பாட்டுக் கூறுகளையும் அந்த வடிவம் வழியாகவே நம் ஆழ்மனம் சென்றடைய முடியும் என்பதனால்தான்.

கிருஷ்ணனை தியானிக்கும் ஒருவன் இந்திரனை, வேதங்களை, வேதமுடிவாகிய வேதாந்தத்தை அனைத்தையும் சென்று அடைய முடியும். தன் ஆழ்மனதால் கிருஷ்ணனை அணுகுபவனால் மேலே நான் சொன்ன வரலாற்றுத் தர்க்கங்கள் எதுவுமே தேவையில்லாமலேயே இவற்றை நன்கு புரிந்து கொள்ள முடியும். ஆகவேதான் அவர்களுக்கு இந்தச் சிக்கல்கள் எதுவுமே இல்லை. முற்றிலும் ஒழுக்கவாதியான ஒருவர் கிருஷ்ணனை தன் தெய்வமாக எப்படி ஏற்றுக் கொள்கிறார்  என்று கேட்டால் அதற்கான விடை இதுதான். இந்த ஒழுக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆன்மீக நிலையில், ஓர் ஆழ்மனத் தளத்தில், ஓர் காலமற்ற வெளியில் அவர் கிருஷ்ணனை அடைகிறார்.

ஆக, ஒருவருக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ஆன்மீகத்தின் பாதை. அதை தேர்ந்தெடுத்து கிருஷ்ணன்மேல் படிந்துள்ள அனைத்து வரலாற்று அடுக்குகளையும் ஊடுருவிச்சென்று ஒட்டுமொத்தமாக தன் ஆழ்உள்ளத்தால் அவனை அறியலாம். அப்படிமம் அளிக்கும் முழுமையறிவை அடையலாம்.  அதற்கு பக்தி என ஒருவழி. ஞானம் என இன்னொருவழி. அறிதலும் ஆதலும் ஒன்றே ஆகும் ஒருநிலை அது. முற்றிலும் தத்துவமே  அறியாமல், எவ்வகையிலும் ஆழுள்ளம் திறக்காமல் சுயநலத்துக்காக மட்டுமே  சடங்குகளில் ஈடுபடும், தெய்வங்களிடம் பேரம்பேசும் பக்தி ஒன்றுண்டு, அதுவே மூடபக்தி.

இன்னொன்று, அறிவார்ந்த வரலாற்றுநோக்கின் பாதை. இன்றைய காலத்தில் இருந்து பின்னால் சென்று வல்லபராலும் சைதன்ய மகாபிரபுவாலும் கட்டமைக்கப்பட்ட ராதாமாதவனாகிய பெருங்காதலன் என்னும் கிருஷ்ணனை சென்றடையலாம். மேலும் பின்னால் சென்று பாகவதத்தின் தெய்வவடிவமான கிருஷ்ணனை அறியலாம். இன்னும் பின்னால் சென்று கீதையின் கிருஷ்ணனை, யாதவர்களின் விடுதலைத் தலைவனை அறியலாம். மேலும் பின்னால் சென்று இந்திரனை அறியலாம். அதற்கும் பின்னால் சென்று தொல்பழங்குடிமரபிலுள்ள தந்தையும் காதலனும் வளம் கொழிக்கச் செய்பவனும் காவலனுமாகிய அரசனை சென்றடையலாம். அதற்கும் பின்னால் சென்று அந்த தொல்குரங்கின் தலைவனாகிய தாட்டானை சென்றடையலாம்.

அப்படி அறிந்தபின்னர் தன் விமர்சனங்களை முன்வைக்கலாம். இப்படி ஒரு தெய்வப்படிமம் உருவாகி வந்ததன் விளைவை மறுக்கலாம். அதன் தத்துவங்களை எதிர்த்து வாதிடலாம். அதுதான் உண்மையான நாத்திகத்தின் பாதை. நானறிந்த பெரும்நாத்திகர்களான மார்க்சிய ஆசான்களின் நோக்கு.

இவ்விரு பயணங்களுக்கும் உரிய அறிவோ நுண்ணுணர்வோ இல்லாமல் தட்டையாக ஓங்கிப் பேசும் குரல்களைத்தான் தமிழகத்தில் இருபக்கங்களிலும் கேட்கிறோம். ஏனென்றால் இரு தரப்பிலுமே இன்று தத்துவநோக்கு அருகிவிட்டிருக்கிறது. பக்தியின் தரப்பில் இன்று வேதாந்தத்தைப் பேச ஆளில்லை. ஆகவே மூடபக்தி. நாத்திகத்தின் தரப்பில் வரலாற்றை தத்துவநோக்குடன் அணுகும் மார்க்சிய மெய்யியல் மறைந்து திராவிட இயக்கத்தின் மூடக்குரலே எங்கும் ஒலிக்கிறது. மார்க்ஸியம் பேசுபவர்களிடமும் கூட.

 

ஜெ

 

மறுபிரசுரம்- முதற்பிரசுரம்   Aug 29, 2016

முந்தைய கட்டுரைஆனைவாரி ஆனந்தன்
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை, 69